![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [187 Issues] [1839 Articles] |
|
Issue No. 187
இந்த இதழில்.. In this Issue..
|
தமிழ்நாட்டில் இன்று பார்வைக்குக் கிடைக்கும் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் அனைத்தும் குடைவரைக் கோயில்களிலேயே காணப்படுகின்றன. இக்குடைவரைக் கோயில்கள் பல்லவர்களாலும் பாண்டியர்களாலும் முத்தரையர்களாலும் உருவாக்கப்பட்டவை. கணக்கற்ற குடைவரைகளைப் பல்லவர்கள் அகழ்ந்திருந்தபோதும் பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் காணக்கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்களின் எண்ணிக்கையில் ஏழில் ஒரு பங்கையே வடதமிழ்நாட்டுக் குடைவரைக் களங்களில் சந்திக்கமுடிகிறது. பல்லவர் பூமியில் அருகிக் காணப்படும் பிள்ளையார், தென்தமிழ்நாட்டில் பாண்டியர், முத்தரையர் சீராட்டைப் பெற்றுச் செழித்தமை, அவர்தம் குடைவரைகளில் பரவலாகக் காணப்படும் சிற்பங்கள் உணர்த்தும் உண்மையாகும். பாண்டியர், முத்தரையர் சிற்பங்கள் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, செவல்பட்டி, கோகர்ணம், திருக்கோளக்குடி, மலையக்கோயில், தேவர்மலை, அரிட்டாபட்டி, திருமலைப்புரம், குன்னத்தூர் (வரிச்சியூர்), குடுமியான்மலை, பரங்குன்றம், மூவரைவென்றான், மகிபாலன்பட்டி, அரளிப்பட்டி, குன்றாண்டார்கோயில், மலையடிப்பட்டி, பூவாலைக்குடி எனத் திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கில் அமைந்துள்ள பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் காணப்படும் பிள்ளையார் சிற்பங்கள் விரிவான ஆய்விற்குரியவை. தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதற் பிள்ளையார் எனும் புகழைப் பெறுபவர் பிள்ளையார்பட்டியில், சிவபெருமான் குடைவரைக்குத்1 தென்புறமுள்ள பாறைச்சுவரில் கோட்டத் தெய்வமாய் உருவாக்கப்பட்டு, முதன்மைத் தெய்வமாகியுள்ள தேசிவிநாயகப் பிள்ளையார்தான். குடைவரைக்கு வடபுறமுள்ள மேற்குப் பாறைச்சுவரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அரைத் தூணில் காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டொன்றின் எழுத்தமைதி அடிப்படையில் ஐ. மகாதேவன் இக்குடைவரையின் காலத்தைக் பொ. கா. ஆறாம் நூற்றாண்டாகக் கொள்கின்றார்.2 வடக்கு நோக்கிச் சம்மணமிட்ட நிலையில் செதுக்கப்பட்டுள்ள பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் தோள்வளைகளும் கைவளைகளும் பூண்டுள்ள இரண்டு கைகளைக் கொண்டுள்ளார். வலக்கையில் சிதைந்த நிலையில் மோதகம்.3 இடக்கை உதரபந்தத்தைத் தொட்டபடி வயிற்றருகே உள்ளது. மார்பில் முப்புரிநூல் இல்லாத இப்பிள்ளையாரின் வலத்தந்தம் முழுமையாகவும் இடத்தந்தம் உடைந்தும் காணப்படுகின்றன. இன்னவகையினது என அடையாளப்படுத்த முடியாத சிறுமகுடமும் வலம்புரியாய்த் துதிக்கையும் அதிலொரு மோதகமும் கொண்டுள்ள இத்தேசி விநாயகர் இன்று கற்பக கணபதியாய்ப் பெயர் மாறியுள்ளார். தேசியாரைப் போலவே இரண்டு கைகளுடன் படைக்கப்பட்டுள்ள பிள்ளையாரின் பழஞ் சிற்பங்கள் குன்றக்குடியிலும் செவல்பட்டியிலும் உள்ளன.4 அர்த்தபத்மாசனத்தில் வீற்றிருக்கும் குன்றக்குடிப் பிள்ளையார் இங்குள்ள கிழக்குக் குடைவரையில் மேற்குப் பார்த்த நிலையில் காட்சிதருகிறார். வலக்கையில் மோதகம் கொண்டுள்ள இவரது இடக்கை தொடைமீதுள்ளது. வலம்புரியாய்த் துளைக்கைக் கொண்டுள்ள இவரது இரண்டு தந்தங்களுமே உடைந்துள்ளன. கரண்டமகுடமும் முப்புரிநூலும் உதரபந்தமும் கை, தோள் வளைகளும் அணிந்துள்ள இவரது கழுத்தில் பெரிய அளவிலான உருத்திராக்க மாலை.5 குன்றக்குடிப் பிள்ளையார் வடக்கு நோக்கியுள்ள செவல்பட்டிக் குடைவரைப் பிள்ளையார் குழந்தைகள் அமர்வது போல வரையறைக்கு உட்படாததோர் அமர்வில் உள்ளார்.6 இரண்டு கையினரான இவரது வலக்கையில் உள்ள பொருள் மோதகமா, பழமா என்பதை அறியக்கூடவில்லை. இடக்கையில் உடைந்த தந்தம். வலம்புரியாக வலத்தோள்வரை சுருண்டுள்ள துளைக்கையிலும்7 மோதகம். நீளமான கரண்டமகுடமும் முப்புரிநூலும் அலங்கரிக்கப்பட்ட உதரபந்தமும் தோள்வளைகளும் முத்து வளையல்களும் அணிந்துள்ள இவரது அரைப்பட்டிகை முடிச்சுகள் இருபாதங்களுக்கும் இடையில் காட்டப்பட்டுள்ளன. வலப்புறம் தந்தம் உள்ள இவருக்கு இடப்புறத் தந்தம் இல்லை. முன்னால் மோதக உருண்டையொன்று காட்டப்பட்டுள்ளது.8 செவல்பட்டிப் பிள்ளையார் கல்வெட்டுகளின் வழிகாட்டல்களற்ற நிலையில் செவல்பட்டிக் குடைவரை, குன்றக்குடிக் கிழக்குக் குடைவரை ஆகியவற்றை அவற்றின் கட்டமைப்புக் கொண்டு பொ. கா. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கநிலை அமைப்புகளாகக் கொள்ளலாம். ஏறத்தாழ இதே காலகட்டத்தைச் சேர்ந்த கோகர்ணம், திருக்கோளக்குடி, மலையக்கோயில் குடைவரைகளிலும் பிள்ளையார் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்புகள் 1. பிள்ளையார்பட்டித் திருக்கோயில் வளாகத்தில் சிவபெருமானுக்கு இப்படியொரு குடைவரை இருப்பது பலருக்குத் தெரியாது. இக்கோயிலுக்கு வருபவர்கள் பிள்ளையார் கருதியே வருவதால், அவரை அடுத்துள்ள ஹரிஹரரையோ, குடைவரையில் குடிகொண்டிருக்கும் திருவீங்கை ஈசரையோ கண்டுகொள்வதில்லை. கோயில் நிருவாகமும் பிள்ளையாரை அழகூட்டுவதில் காட்டும் ஆர்வத்தையும் கவனிப்பையும் ஹரிஹரரிடத்துச் செலுத்துவதில்லை. பிள்ளையார் மீது சாத்தி விலக்கப்படும் பூக்கழிவுகளில் ஹரிஹரர் திருமேனி நாளும் நலிந்துகொண்டிருக்கிறது. கலை நயத்தோடு அமைக்கப்பட்டிருக்கும் ஈங்கை ஈசுவரர் குடைவரையும் போதுமான பராமரிப்பின்றி மக்கள் பார்வைக்கும் மறைந்த நிலையில் உள்ளது. கோயில் நிருவாகம் கருணையுடன் ஹரிஹரரையும் ஈங்கை ஈசரையும் கவனித்துக் காப்பாற்றினால் கலைவரலாறு இரண்டு சிறந்த படைப்புகளை இழக்கும் நிலை தடுக்கப்படும். 2. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, p. 635. 3. இதை இலிங்கம் என்பார் மா. சந்திரமூர்த்தி. பிள்ளையார்பட்டி, ப. 14. 4. பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரை வண்ணிக்கும் இடத்தில், ‘இரண்டு திருக்கைகளுடன் அமைந்த விநாயகர் சிற்பம் இது ஒன்றேயாகும்’ என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார் மா.சந்திரமூர்த்தி. மு. கு. நூல். ப. 15. 5. அர. அகிலா, மு. நளினி, குன்றக்குடிக் குடைவரைகளும் கல்வெட்டுகளும், வரலாறு 2, ப. 76. 6. காஞ்சிபுரத்து இராஜசிம்மேசுவரப் பிள்ளையாரும் ஏறத்தாழ இதே அமர்வில் உள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தக்கது. சீ. கீதா, மு.நளினி, இரா. கலைக்கோவன், பல்லவர் கட்டுத்தகளிகள் ப. 204. 7. தமிழ்நாட்டின் பழம் பிள்ளையார்களில், இவரும் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்தாரும் மட்டுமே தோள்வரை சுருண்டுள்ள துதிக்கையுடன் இருப்பவர்கள். செவல்பட்டியார் வலம்புரித் தோளர். காஞ்சிபுரத்தார் இடம்புரித் தோளர். அமர்நிலை, துதிக்கைச் சுருட்டல் மட்டுமின்றி மகுடம், தந்த அமைவு ஆகியவற்றிலும் இவ்விரு சிற்பங்களுக்கிடையில் ஒற்றுமை இருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. 8. மு. நளினி, இரா. கலைக்கோவன், தென்மாவட்டக் குடைவரைகள், பக். 68-69. |
சிறப்பிதழ்கள் Special Issues
புகைப்படத் தொகுப்பு Photo Gallery
|
| (C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. | ||