![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [187 Issues] [1839 Articles] |
|
Issue No. 187
இந்த இதழில்.. In this Issue..
|
ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி அப்பர் சாடிய குலமும் கோத்திரமும் அப்பர் வலியுறுத்திய அறங்களுள், நன்னெறிகளை முந்தைய பதிவில் பார்த்தோம். நெகிழ்ந்து நவின்றவை, குழைந்து கூறியவை, மென்மையாய் முறைப்படுத்தியவை, உவமைகளாய் நயந்தவை, பழமொழிகளாய்ச் சொல்லியவை, சினந்து சாற்றியவை, அறுதியிட்டுரைத்தவை என்று திருநாவுக்கரசர் விளக்கியவை அனைத்தும் உணர்ச்சிப் பெருக்கும் மொழிவளமும் கலந்த தீந்தமிழ்ச் சாறு. அவர் வெளிப்படுத்தியவை பத்திமை நெறி என்ற பெட்டகத்துள் அடைக்கப்பட்டாலும், அதில் தனித்தொளிரும் சமூகப் பார்வையே அவரைப் பத்திமை நெறியாளர்களுள் முற்போக்குச் சிந்தனையாளராகவும் காட்டி நிற்கிறது. தம்மை மீறிய அறியவொண்ணா ஆற்றல்மேல் அச்சமென்ற முதல்நிலை மெள்ள மெள்ள மாறி இறைவனென்ற பெயரால் பற்றென்ற படிநிலைக்கு மக்கள்கூட்டம் கட்டுப்படுவது, தலைமுறைகள் கடந்து ஏற்படும் சமூகமாற்றம். சமூகம் மாற்றிய பத்திமைப்போக்கில், இறைப்பற்றைத் தாண்டிய அடுத்த படிநிலை மிகவும் கடினமான ஒன்று. அந்நிலை- 1. இறைப்பற்றாளர்களைக் காட்டிலும் மேலும் நெருக்கமாக இறைவனை உணரச் செய்வது; 2. யான் பற்றிய இறைவன், நான் அவனைப் பற்றிக்கொண்டது போலவே என்னைப் பற்றியிருப்பான் என்ற நம்பிக்கை தருவது; 3. நான் தாள்பிடித்த கடவுள் என் தோளணைத்துத் துணைநிற்பான் என்ற உறுதியளிப்பது; 4. நெஞ்சில் இறைவனை நினைந்து நினைந்துருக, தனித்ததொரு பேருருவாக இல்லாமல் மனத்தகத்து குடிகொண்ட அன்பனென்ற புரிதல் எய்துவது- அதுதான் அன்பென்னும் உன்னதநிலை. எனில், அன்புவழியில் இறைவனைப் பற்றுவது அவ்வளவு கடினமானதா? நாவுக்கரசர் பதிகங்களைப் படிக்கையில் ஆமெனவே தோன்றுகிறது. அன்புநெறியால் இறைவனை நாட அவர் கூறும் வழிமுறைகளில் சில- 1. தன்னைப் போல் பிறரையும் நேசிக்கும் பண்பு வேண்டும்; 2. பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றுபோல் மதிக்க வேண்டும்; 3. விதவிதமாய்ச் சடங்குகளையும் சாத்திரங்களையும் புறந்தள்ளிச் சிந்திக்க வேண்டும்; 4. தொன்றுதொட்டதென நம்பப்படும் பத்திமைப் பழக்கவழக்கங்கள் சகமனிதர்களைப் பிரிவினைக்கு உள்ளாக்குமெனில், பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும்; 5. மனமே இறைவன் வாழும் ஆலயமெனில், இறைவனை நெஞ்சில் வைத்த அடியார் அனைவரும் இறைவடிவே என்ற தெளிவு வேண்டும். 'அன்பினுள்ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள்ளார்க்கே அணைதுணையாமே' என்று திருமூலரும், 'அன்புறு சிந்தையராகி அடியவர் திருநல்லூர்ப் பெருமணம் நோக்கிச் செல்வர்' என்று சம்பந்தரும், அன்பே அடியார்களின் மைய உணர்வு என்றுரைத்தார்கள். நம் நாவுக்கரசரோ, 'தமக்கன்பு பட்டவர் பாரமும் பூண்பர் திருவாரூர் அரநெறி இறைவர்,' என்று அடியார்களிடத்து இறைவனுக்கான பொறுப்பையும் உறுதிபடவுரைத்து அன்பின் உயர்வை உறுதிசெய்கிறார். நாயன்மார்களின் வாழ்வின்மூலம் நாமுணரவேண்டியதும் அன்பின் ஆழத்தைத்தான். இறைவன்பால் அவர்கள் கொண்ட மட்டற்ற அன்பும் பதிலுக்கு இறைவன் அன்பர்கள்மீது பொழியும் இணையற்ற அன்புமே பத்திமை இயக்கத்தின் அடிநாதம். பின்னும், அதே கேள்வி எஞ்சி நிற்கிறது… அன்புவழியில் இறைவனைப் பற்றுவது அவ்வளவு கடினமானதா? 'அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் நெஞ்சம்வாழி நினை நின்றியூரரைநீ' (05.023.09) என்று, திருநின்றியூர் ஈசனை அச்சத்தாலோ அன்பாலோ நினைக்குமாறு பணிக்கிறார் அப்பர். இங்கு, நெறியின்றிப் பயணித்த சமூகத்தை இறைவன்பால் மனத்தைச் செலுத்த வலியுறுத்தும் நோக்கில், அப்பர் அச்சத்தையும் சேர்த்துக் கொண்டதாகவே தோன்றுகிறது. ஏனெனில், “இறைவனின் தமர் நாம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை,” என்றும் “திருச்சேறை செந்நெறியப்பர் இருக்க அஞ்சுவது என்னுக்கே?” என்றும், நெஞ்சை அச்சம்நீக்கி அமைதிப்படுத்திய அப்பரா இறைவனிடம் அச்சப்படச் சொல்லுவார்? இறைவழிபாட்டில் நிலைத்துப்போன 'பயபக்தி' என்ற சொற்றொடரை நாவுக்கரசர், 'அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்' என்றதன்மூலம் கையாண்டிருந்தாலும், அச்சம் நீக்கி அன்பையே உயர்த்திப் பிடித்தார் என்பதற்கு அவர் பதிகங்களே சான்று. ஆயினும், முன்னெழுந்த கேள்வியே விஞ்சி நிற்கிறது…. அன்புவழியில் இறைவனைப் பற்றுவது அவ்வளவு கடினமானதா? நாவுக்கரசரின் மொழியில் கடினமெனவே தோன்றுகிறது. ஏன்? அன்பும் அறனும் அறிவும் உடைத்தாயின்.. சாத்திரங்களை நம்பிய வேதியர்க்கும் அன்பொன்றையே மனதில் வைத்த தொண்டர்க்கும் தேவையான அடிப்படைக் கோட்பாடு மனிதம் பேணலென்பதைப் பலவாறாக எடுத்துரைத்தார் அப்பர். கண்மூடி வழிபட்ட தொண்டர்கள் அறிவுக் கதவை மூடாமல் அன்புடன் மனிதம் பேணுவதைப் பத்திமையின் தலையாய பகுதியாக முன்வத்தார் அவர். அதனால்தான், தம் பாடல்களில் நல்லறிவுக்கும் அறிவில் செறிவுக்கும் சிறப்பிடம் கொடுத்தார். சிவபெருமான், ஆதியுமறிவுமானவர்- அறிவினுட் செறிவுமானவர்- சோதியுட் சுடருமானவர்- தூநெறிக் கொருவரானவர்- என்று கூறுமிடத்தில் அறிவில் பொருந்தி நிற்கவேண்டிய செறிவையும் சேர்த்தே குறித்தார். பின், இறைவனை வழிபடும் அன்புநெறி கடினமாயில்லாமல் எப்படியிருக்கும்? திருச்சேறை அம்மையப்பரை வழிபட, தொண்டர்களுக்குக் 'கூரிதாய அறிவு கைகூடிடும்' என்று கூறியவர், 'பூந்துருத்தி உறையும் அறிவுடை ஆதிபுராணனை நாமடி போற்றுவதே' என்று ஆதிபுராணனின் அறிவுத்திறனையும் போற்றத் தவறவில்லை. 'அன்பும் அறனும் உடைத்தாயின்' என்று வள்ளுவர் இல்வாழ்க்கைக்குச் சொன்னதைப் பத்திமையில், அன்பும் அறமும் அறிவுமென்று இணைத்துச் சொன்ன புதுமை எண்ணத்திற்குச் சொந்தக்காரர் நாவுக்கரசர். அன்புடன் அறிவு இணைதல் வேண்டும்; அறிவுத்திறனோடு இணையவேண்டியது ஒழுங்குமுறையன்றோ? வானோர்கள் முறைமையால் வணங்கியேத்த, தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்ல, முறையினால் முனிகள் வழிபாடு செய்ய- என்று முறைகளுக்கு மதிப்பளித்த அப்பர், தொண்டர்களுக்கு மட்டும் அன்பொன்றையே முறையெனச் சாற்றினார். எனவேதான், அன்பின் வழியொற்றியே இறைவனை அவர்கள் பூவும் நீரும் பண்ணும் கொண்டு தொழுதழுதாடிப் பாடினர். துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும் அன்பலாற் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே (04.040.06) என்று, தொண்டர்களின் அன்பைக் காட்டிலும் இறைவனுக்கு வேறுயர்ந்த பொருளேதுமில்லை என்று கூறியவர், மற்றோரிடத்தில் மேலும் தெளிவுபடுத்தினார்- தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லை கண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லை பண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணி அண்டவா னவர்க ளேத்து மையனை யாற னார்க்கே (04.040.04) பழைய நான்மறைகளாலும் உணரவியலாதவர் சிவபெருமானென்று வானவர்கள் பணிந்து அவர் துணையைத் தேடுகின்றனர். ஆனால் அவரோ யார் துணையை நாடுகிறாராம்? 'தொண்டலாற் றுணையுமில்லை; கலந்தபின் பிரிவதில்லை'- தொண்டரின் அன்புக்கே இறைவன் கட்டுப்பட்டவர்; தொண்டர்களின் அன்பில் கலந்தபின் அவர் பிரிவதுமில்லை. ஆயினும், அன்புவழி இறைநெறிக்கும் பலப்பல முறைமைகள் வைத்தார் நாவுக்கரசர். அவை, அன்பை மட்டுமே நம்பியோர்க்கு எளியனவாகவும், மக்களிடமிருந்து இறைவனைத் தள்ளிவைத்த கோட்பாடுகளை நம்பிய சமயவாதிகளுக்குக் கடினமானவையாகவும் இருந்தனபோலும். தம் பாடல்களில் அப்படிப்பட்டவர்களை நாவுக்கரசர் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தது தெரிகிறது. நாவின் மன்னவர் உரைத்த சமூக நீதி சேக்கிழார் அப்பரை 'நாவின் மன்னவர்' என்று அன்புடன் விளிக்கிறார். இறைவனின் அருளென்ற குடையின்கீழ் அன்பர்களில் பாகுபாடில்லை என்ற சமூகநீதியை வாழ்க்கை முறையாகக் கொண்டது அவருடைய அன்புநெறி. வையகத்து மனிதர்கள்மேல் பிரிவினையறியா அன்பு கொள்ளலே இறையன்பு என்பதே அப்பரின் கொள்கை. பத்திமையின் பெயரால் இறைவனைச் சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தியோருக்கும், சமூகத்தோரை உயர்வு தாழ்வு கண்டு பிரித்தவர்களுக்கும் அப்பர் சொன்ன அன்புநெறி கடினமானதுதானே.. மனிதர்குலமெனும் ஒற்றைப் பிரிவை ஏற்காமல், குலமும் கோத்திரமும் கொண்டு பிரிவினை பேசும் சமயச் சழக்கர்களைச் சாடிய பத்திமைக்கால முன்னவர் அவரே. திருமாற்பேற்றுப் பதிகத்தில் அத்தகையோரின் ஒவ்வா எண்ணங்களைக் குறிப்பிட்டு, சினந்து சீறினார். சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே (05.060.03) சிவனே வணங்குதற்குரியவர் என்று பணிந்தால் நொடிப் பொழுதில் அருளுவார் மாற்பேறர் என்பதை மட்டும் சொல்லி நகர்ந்திருந்தால், இறைவனைப் பணிந்து வணங்கிவிட்டு எளிதில் சென்றிருப்பர் அப்பர் சாடிய சழக்கர்கள். அவரோ அவர்களை நிற்கவைத்துக் கேள்வியெழுப்பினார். “கோத்திரமும் குலமுங்கொண்டு என் செய்வீர்?” என்று கனலைக் கக்கிய அவருடைய கேள்வி சிலரையாவது சிந்திக்கச் செய்திருக்கும். "இருந்து சொல்வன் கேளுங்கள் ஏழைகாள்! சாற்றிச் சொல்வன் கேளுங்கள் தரணியீர்!” என்று அப்பதிகத்தில், பொங்கிய ஆதங்கத்தைத் தொடர்ந்து சினந்தும் வெளிப்படுத்தினார் நாவுக்கரசர் எனும் சமூகப் போராளி. அதுமட்டுமா? அப்பதிகத்தின் முதல் பாடலிலேயே, 'ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்குப் பேதமின்றி அவரவருள்ளத்தே' உமையோடு இருந்து மகிழ்வர் திருமாற்பேறர் என்றார். மனிதருள் நிலவிய பேதங்களால் பாதிக்கப்பட்ட அப்பர், இறைவன் பேதமின்றி அருளுபவர் என்று உறுதியளித்து நல்வழிப்படுத்த முயன்றார். கூடுதலாக அப்பதிகத்தில், 'காவெனில் வாட்டந் தீர்க்கவும் வல்லர் மாற்பேறரே' என்றும், 'செய்ய பாதமிரண்டும் நினையவே வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே' என்றும் இறைவனை வழிபட, சாத்திரங்கள் தேவையில்லை என்பதை மென்மேலும் வலியுறுத்துவதை உணரலாம். அப்பரைப் பாதித்த குல வேற்றுமை 'கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்?' என்று கோபமாய்க் கேட்ட அப்பர், குலத்தால் மக்களைப் பிரித்து விலக்கிய சமூகப் பார்வையை மேலும் பல்வேறிடங்களில் சுட்டிப் பாடினார். சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே (04.011.06) தன்னைச் சார்ந்தவர்களுக்கு நாடோறும் நலம் நல்கும் சங்கரன், சாராதவர்களுக்கு நலத்தை வழங்கமாட்டார் என்று பொதுவாகப் பொருள் கொள்வர்; இதை வெறுமனே சொல்லாமல் சிவனைச் 'சலமிலன்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் அப்பர். 'சலம்' என்ற சொல் சிந்திக்கத் தூண்டுகிறது. 'சலம்' என்ற சொல் மதுரைக் காஞ்சியில் மாறுபாட்டைக் குறிக்க, பரிபாடலில் வஞ்சனை (பாடல் 6) என்றும் கோபமென்றும் (பாடல் 15) பொருள்படக் கையாண்டுள்ளனர் ஆசிரியர்கள். வள்ளுவரும் வஞ்சனையைக் குறிக்கிறார் (குறள் 660). சைவத்தைச் சாராதவர்களுக்கு நலன் வழங்கமாட்டார் என்றதன் எதிர்ப்பதமாக, 'கரைந்து கைதொழு வாரையுங் காதலன் - வரைந்து வைதெழு வாரையும் வாடலன்' (05.012.01) என்பதும் அப்பர் வாக்கே. மனமுருகி கைதொழுவாரைக் காதல்மிகுந்து அருளும் சிவன், தம்மை இகழ்வாரை வாடச் செய்யமாட்டார் என்று திருவீழிமிழலைப் பதிகத்தில், சைவம் தழுவியோருக்கும் சைவம் தழுவாதோருக்கும் இடையில் வேறுபாடு காணாமல் அருளும் இறைவனின் இயல்பைப் பெரிதும் போற்றினார் அப்பர். அடுத்து வரும் 'குலமிலராகிலும் குலத்துக்கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே' என்ற அடிகளை, சைவக் குலமிலராயினும் அவர்தம் பற்றுக்களால் செய்யும் வினைகளுக்கேற்ப நலந்தருவது நமச்சிவாயம் என்றே பொருள்கொள்ளல் சரியாகும். ஆனால், அப்படியொரு முடிவுக்கு வருவதற்கு, 'குலம்' என்ற சொல்லைத் தம் பாடல்களில் அப்பர் எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார் என்பதை நோக்க வேண்டும். ஒன்றே குலம்- மனிதர் குலம்; ஒருவனே தேவன்- அவன் சிவன் என்று திருமூலர் அறுவுறுத்தியதை, “அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ” என்று, அனைத்தும் சிவமென மாற்றியமைத்தார் நாவுக்கரசர். அடுத்தபடியாக, ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும்நீ (06.095.01) என்று சேர்த்தார். குலமெனில், சமூகத்தினருக்கான ஒரே குலம் சைவகுலமென்று ஒருமுகப்படுத்தினார் அவர். 'குண்டிகை தூக்கினார் குலந்தூரறுத்தே' (05.058.02) என்று சமணர் குலத்தையும், கோச்செங்கணானைச் 'சோழர் தங்கள் குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே' (04.049.04) என்று சோழர் குலத்தையும் சுட்டி, ஒத்த நெறியுடைய பெருங்கூட்டத்தைக் குறிக்கவும் 'குலம்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார் நாவின் மன்னவர். அரிகுலம் மலிந்த அண்ணாமலை யுளாய் (04.063.06) என்று குரங்குக் கூட்டத்தையும் 'குலம்' குறிக்கக் காணலாம். ஏன், கூட்டமாய்க் கிளர்ந்துவரும் அலைகளைக் 'குலங்கிளரும் வருதிரைகள்,' என்றும் காட்டினார். 'விறலரக்கர் குலங்கள்வாழு மூரெரித்த கொள்கை' இதென்னவோ? என்று வலிமைபொருந்திய அரக்கர் கூட்டத்தைக் குலங்களென்கிறது சம்பந்தரின் பதிவு. 'குலம்' சுட்டியவை வேறென்னென்ன? மேன்மையுடை மலையாம் இமயத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலைமகள் 'குலவரையின் மடப்பாவை' என்றே போற்றப்படுகிறார். மேருமலையை வில்லாகக் கொண்டு மும்மதில்கள் எரியச் செய்த தலைவனை- 'குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானை' (திருக்கச்சியேகம்பம்) எனுமிடத்தில், பெருமை பொருந்திய மலையைக் குறிக்கிறது குலவரை. திருச்செம்பொன்பள்ளியில், 'குலவில்லால் எயில்மூன்றெய்த கூத்தரே' என்று இறைவனின் அதே பெருமைமிகு செயலில் பங்கேற்ற வில்- குலவில்லென உயர்வுக்கான முன்னொட்டைத் தாங்கி நிற்கிறது. சேக்கிழாரும் கயிலை மலையைக் குலக்கிரி என்ற சொல்லால் சுட்டக் காணலாம். வாரணாசியில் வழிபட்டு மகிழ்ந்த நாவின் மன்னவர், அடுத்ததாக அரிய பெருங்காட்டைக் கடந்து கயிலைமலையில் இறைவனைக் காணும்பொருட்டு பயணத்தைத் தொடர்ந்தார். இந்தக் காட்சியைச் சேக்கிழார், 'பெருங்கயிலைக் குலக்கிரி எய்துவார்,' என்று கூறுகிறார். அடுத்து, குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் (06.095.09) என்று நாவுக்கரசர் தன்னை நொந்து கொண்டதைப் பார்க்கிறோம். “நான் சேர்ந்த கூட்டத்தாலும் பண்புகளாலும் குறிக்கோளாலும் பொல்லாதவனாக- தீயவனாக உள்ளேன்,” என்றுரைக்கையில் 'குலம்' என்ற சொல்- சேர்ந்த கூட்டத்தையே குறிக்கும். எனவேதான், 'குலமிலராகிலும் குலத்துக்கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே' என்ற அடிகள், சைவம் தழுவாத கூட்டத்தினராயினும் சலமிலரான சங்கரர் தத்தம் பண்புகளுக்கேற்ப நலந்தருவார் என்றே பொருள்படும். பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான போதம், அப்பரின் இப்பாடலை விரித்துரைக்கக் காணலாம். சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல் சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் - சார்ந்தடியார் தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு (சிவஞான போதம், 10.03) தம்மைச் சார்ந்தாரை இறைவர் காத்தாலும், தம்மைச் சாராதவர்களுக்கும் சலமிலராய் வினைப்பயனை ஆய்ந்தருளுகிறார் எனும்போது, மனிதருள் வேறுபாடு பாராதவராகச் சிவபெருமான் இங்கும் காட்டப்படுகிறார். அன்பர்களுள் பிரிவினை நோக்காக் கடவுளென்று சிவபெருமானிடம் மக்களைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்ல 'சலமிலன்' என்ற சொல்லை நாவுக்கரசர் கையாண்டதையே இது வலியுறுத்துகிறது. திருச்சேறையிலுறையும் செந்நெறியான் கழலை மனதில் வைக்க- பிறப்பு, மூப்பு, பசி, பிணி, இறப்பு நீங்கி இம்மையிலேயே இன்பம் கிட்டும் என்று பலவாறாக எடுத்துக்கூறி, “இறைவனிருக்கிறார், பின் அச்சமெதற்கு,” என்று திருச்சேறைப் பதிகத்தில் தோள்தட்டித் தொண்டர்களை ஊக்கப்படுத்தினார். குலங்களென்செய்வ குற்றங்களென்செய்வ துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே (05.077.08) என்று, குலங்களின் அடிப்படையிலான சமூகப் பாகுபாட்டை எண்ணிச் சோராதிருக்குமாறு நெஞ்சுக்கு நிம்மதியளித்தார். குற்றமில்லாத் தலைவனால்தான் மக்களின் குற்றங்களை விலக்கமுடியும் என்பதால், 'குற்றமில் குணத்தினானே கோடிகாவுடைய கோவே' (04.051.01) என்றே சிவனாரைப் பாடினார். செய்யத்தகாதன செய்யும் குற்றம் தனிமனிதத் தவறு. குலங்களின் அடிப்படையில் வேறுபடுத்தி ஒதுக்குவதோ சமூகக் குற்றம். குற்றம் புரிந்தவன் திருந்தி இறைவனை நாட, மனத்தினால் ஏற்படும் குற்றங்கள் நீக்குவது கடவுளர்க்குரிய பெருந்தன்மை. ஆனால், மனிதரால் இழைக்கப்படும் குற்றமாகிய குலப்பாகுபாட்டை உடைத்தெறியும் அப்பரின் ஆற்றல்மிகு தெய்வம், அவருடைய மறுமலர்ச்சி எண்ணம் படைத்த புதுமைத் தெய்வம். மனிதருள் வேறுபாடின்மையை நாடிய அப்பருக்கு அதை ஏற்காத சமூகம் பெரிதும் மனவுளைச்சலைக் கொடுத்ததுபோலும். தம்மைச் சுற்றியிருந்த மனிதர்களால் செய்யவியலாததை இறைவனைக் கொண்டே செய்துவைக்க முயன்ற ஆர்வலர் அவர். உலகத்து மாந்தரைக் குலத்தால் பிரித்துவைத்து நலம் வழங்காத சமூகத்தில், சைவகுலத்தைத் தழுவாதோருக்கும் நலம் கொடுப்பவர் நமச்சிவாயம் என்று அறுதியிட்டுச் சொன்ன அப்பர், குலத்தைக் கொண்டு மனிதர்களைப் பிரிப்பவர்களுக்கு வேறு வழியின்றி ஒரு தீர்வு தந்தார்போலும். இறைவர் ஒருவரே எனும்போது, அவரை வழிபடும் தொண்டரும் ஒரே குலத்தவராகத்தான் இருத்தல் வேண்டும். அதைத் தரவல்லவரும் அதே இறைவர்தான். 'அடியவர்' எனும் குலங்கொடுத்துக் துன்பம் நீக்க வல்லவர் சிவபெருமான், என்று திருநள்ளாற்றுப் பதிகத்தில் பொறித்து வைத்த தொண்டர்களின் முதல் தலைவர் அப்பர். குலங்கொடுத்துத் துன்பம் நீக்கி- தன்னை வழிபட்ட தாழ்ந்தோர்க்கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பியாக நள்ளாற்றானை நாவுக்கரசர் கண்முன் கொணர்ந்தார் (06.020.06). அடியாரில் இறைவனைக் காணும் அன்புநெறி தொண்டர்களுக்கு வேண்டிய நெறிகளை இறைவன்மேலும் ஏற்றிவைப்பது அப்பரெனும் ஆசிரியரின் வழக்கம். அவ்வகையில், தொண்டர்கள் கற்றுத் தேர்ந்து வாழ்க்கைமுறையாகப் பற்றிக்கொள்ள வேண்டியவை அன்பும், அறமும், அறிவும், அறிவில் செறிவும், குற்றமற்ற மனமும், மனிதருள் வேறுபாடு காணாத போற்றுதற்குரிய தகைமையும்- என்று நீண்ட பட்டியலிட்டால், அந்தப் பண்புகளெல்லாம் தொண்டர்கள் வழிபடும் தலைவனுக்கும் உண்டென்பதை அடிக்கடி வலியுறுத்தியவர் அப்பர். நகமெலாந் தேயக் கையா னாண்மலர் தொழுது தூவி முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர் அகமலாற் கோயி லில்லை யையனை யாற னார்க்கே (04.040.08) எனும் அடிகளில் தொண்டின் உயர்வையும், திருத்தொண்டைக் கொண்டாடி அன்பர் மனமே கோயிலாக உறையும் இறைவனின் இணையில்லா மேன்மையையும் ஒருசேரவே காட்டினார். தம் சொற்களைக் கேளாமல் நின்றோரை “வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்!,” என்றழைத்து, 'சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கிக் கொள்வார் விசயமங்கைப்பிரான்,' (05.071.09) என்று பொறுமையாக விளக்கினார். இறைவனைச் சிக்கெனப் பிடித்து இறைவனின் உறவாக ஏற்கப்பட்ட தொண்டர்களை இறைவனாகவே பார்க்க அறிவுறுத்தினார். எக்காலத்தவரும் தம் எண்ணங்களை குழப்பமோ ஐயமோயின்றிப் புரிந்துணரும் வண்ணம்- அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே (06.095.10) என்றுரைத்த பத்திமைப் பெருஞ்சுடர் திருநாவுக்கரசர். இங்கு, சமூகம் அறவே ஒதுக்கிவைத்த இரண்டு பகுதியினரைச் சுட்டுகிறார். ஒரு வகுப்பினர்- அங்கமெலாம் குறைந்தழுகும் தொழுநோயர்; மற்றவர்- பசுவை உணவாகத் தின்றோர். இந்த இரு பிரிவினரும் இறைவனுக்கு அன்பரெனில், கடவுளாக வணங்குவேன் என்று சொல்லும் ஈடில்லா அன்பும் தெளிவும் வியக்கவைப்பவை அன்றோ? மனிதம் பேணும் பணியை முன்னுரிமையாகக் கொண்ட அச்சமில்லா மனம் அப்பருடையது. திருமாலும் நான்முகனும் தேடியும் காணா இறைவனைத் தேடித் தன்னுள்ளே கண்டுகொண்டதனால்தான் அப்பர், இறைவனை எளியோரின் துணைவனாகக் காட்டினார்போலும். முன்னெழுந்த கேள்வியை மறுபடி சிந்தித்துப் பார்ப்போம்... அப்பர் விரித்துரைக்கும் அன்புவழியில் இறைவனைப் பற்றுவது அவ்வளவு கடினமானதா? கடினமல்ல எளிதுதான் என்றல்லவா தோன்றுகிறது! இறைவனை நாடி நெக்குருகிப் பணிந்திட, சாத்திரங்களும் கோத்திரங்களும் தேவையில்லையென்று ஆணித்தரமாகச் சொன்ன அப்பரின் அறவுரைகளால், அன்பொன்றையே அடிப்படைத் தகுதியாகக் கொண்ட இறைவழிபாடு எளிமையாக்கப்பட்டது. சமயப்பற்றின் பெயரால் தம் காலத்தே பரவியிருந்த சமூகக்கட்டுகளையும் கூடா மரபுகளையும் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்திய நம்பிக்கைகளையும், அதே சமயப்பற்றின் அடிவேராம் இறையன்பின் பெயரால் மாற்றியமைக்க முயன்றவர் திருநாவுக்கரசர். இறைவனையும் எளிய தொண்டர்களையும் பிரித்து வைத்த பத்திமை நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் தம் உழவாரப் படையையே ஆயுதமாகக் கொண்டு களைந்தெறியப் பாடுபட்டவர் அவர். அகலாத சமூகப் பார்வையால், எளியோருக்காகப் போராடும் குரலாகவும் தம் பாடல்களை ஒலிக்கச் செய்தார் அப்பரெனும் அன்புத் தொண்டர். இப்போது சொல்லுங்கள்.. அன்புவழியில் இறைவனைப் பற்றுவது எளிதுதான் இல்லையா? நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி. |
சிறப்பிதழ்கள் Special Issues
புகைப்படத் தொகுப்பு Photo Gallery
|
| (C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. | ||