http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 16

இதழ் 16
[ அக்டோபர் 16 - நவம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்றளி கட்டிய காரணம்
பகவதஜ்ஜுகம் - 5
கோயில்களை நோக்கி - 4
பனைமலையில் ஒரு மாலைப்பொழுது
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம் - 2
சிந்து வெளியில் முருகன் - திரு. ஐராவதம் மகாதேவனின் மறுமொழி
ஜி.என்.பாலசுப்ரமணியம்
சங்கச் சிந்தனைகள் - 4
இதழ் எண். 16 > தலையங்கம்
கற்றளி கட்டிய காரணம்
ஆசிரியர் குழு
நல்ல உலகத்தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளை வெளியிடும் டிஸ்கவரி சேனலில் Hour Asia : Lost Temples of India என்ற தலைப்பில் ஒருமணிநேர நிகழ்ச்சியொன்றினை சமீபத்தில் காண நேர்ந்தது. இது பல தென்னிந்தியக் கோயில்களைப் பற்றிய செய்தித் தொகுப்பாக இருந்தாலும் குறிப்பாக தஞ்சை இராஜராஜேஸ்வரம் என்னும் பெரியகோயிலைப் பற்றிய தகவல்களை அதிகம் கொண்டிருந்ததால் நமது ஆர்வத்தைக் கவர்ந்தது. இந் நிகழ்ச்சி முன்பே ஒளிபரப்பப்பட்டிருந்தாலும் நமக்குப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில்தான் கிடைத்தது.

இத்திருக்கற்றளியை இதுவரை வேறு எவரும் படம் பிடிக்காத கோணங்களில் வானிலிருந்து Ariel view என்று சொல்லப்படும் முறையில் ஹெலிகாப்டரிலிருந்து படம் எடுத்ததை எத்தனை பாராட்டினாலும் தகும். வானளாவ எழுந்து நின்ற அந்த கம்பீரமான விமானம் மேலிருந்து நோக்கும்போது விண்ணிடம் ஏதோ யாசித்து நிற்கும் கூப்பிய கரங்களைப் போல் நமக்குத் தோன்றியது. அற்புதமான காட்சி. பெரிய கோயில் மட்டுமின்றி மதுரை மீனாட்சியம்மன் ஆலய கோபுரங்கள் மற்றும் திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் கோபுரங்களையும் இதே கோணங்களில் காணும் பேறும் பெற்றோம். அது சரி, இன்றைக்கும் வழிபாட்டில் இருக்கும் இந்த ஆலயங்களை Lost Temples என்ற தலைப்பில் எப்படிச் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை - ஒரு வேளை வெளிநாட்டவரின் கருணைப் பார்வை(Kind Attention) கிடைக்கப்பெறாதவையெல்லாம் இழக்கப்பட்ட(Lost) சமாச்சாரங்கள் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கருதிவிட்டார்களோ என்னவோ !

பெரியகோயிலைப் பற்றி பல்வேறு தகவல்களை காட்சி ரூபமாகக் காட்டினார்கள். கற்றளிக்கு வேண்டிய பெரும் கற்களை மலைகள் அதிகமில்லாத தஞ்சைக்கு எவ்வாறு எடுத்துக்கொண்டு வந்திருப்பார்கள் என்பதை யானைகளைக் கொண்டு செய்து காண்பித்ததும் இரசிக்கும்படியே இருந்தது. மலையிலிருந்த பாறைகளை எவ்விதம் பிளந்தார்கள் என்பதனைப் பற்றிய தரவும் குறிப்பிடத்தக்கதே.

இந்நிகழ்ச்சியைப் பார்க்கும்போது இதேபோல இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஒளிந்துகொண்டிருக்கும் வேறு பல அரிய திருக்கோயில்களைப் பற்றிய தகவல்களை டிஸ்கவரி போன்ற உலகம் பரந்த வீச்சு கொண்ட ஊடகங்களில் காணும் நாள் என்னாளோ என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தொட்டதற்கெல்லாம் மூச்சுக்கு மூந்நூறு தடவை எகிப்தைப் பற்றியும் அதன் மம்மிக்களைப் பற்றியும் வலிந்து வலிந்து பலப்பல நிகழ்ச்சிகளை அடுக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் அதே அளவிற்குத் தொன்மையும் விரிவும் ஆழமும் பழமையும் கொண்ட இந்தியச் செல்வங்கள் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதது ஒரு பெரும் புதிர்தான். ஒரு வேளை அதே சர்வதேசத் தரத்திற்கு இந்தியத் திருக்கோயில்களைப் பற்றிப் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் இன்னும் அகப்படவில்லையோ என்னவோ ? அல்லது இந்தியாவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக நாளை எழுந்து நின்றால் அப்போது அதன் சரித்திரமும் உலகளாவிய அளவில் பேசப்படுமோ ? நாமறியோம். அட, வெளி நாட்டு ஊடகங்களை விடுங்கள் ! மம்மியோ டாடியோ - சரித்திரமென்று ஏதாவது காட்டிக்கொண்டிருக்கிறார்களே ! நமது தொலைக்காட்சி சேனல்கள் சதா சர்வகாலமும் சினிமா! சினிமா ! என்று மட்டுமல்லவா ஜபம்செய்துகொண்டிருக்கின்றன...

மீண்டும் டிஸ்கவரி நிகழ்ச்சிக்கே வருவோம்.

பெரிய கோயிலைப் பற்றிய அரிய பல தகவல்களை சொல்லாமல் விட்டதை நாமும் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுவோம்.

பெரிய கோயிலின் அஸ்திவாரம் நான்கே அடிதான் என்பதையும் அத்தனை பெரிய கருங்கல் விமானத்தின் எடையை - Centre of gravity சமாச்சாரங்களையெல்லாம் தெரிந்துகொண்டு தாங்கும் பரப்பளவை அதிகரித்து சாந்தார சாகசங்களெல்லாம் செய்து ஒருவழியாக தூக்கி நிறுத்திய அக்கால சிற்பிகளின் மாண்பை சொல்லாமல் விட்டதை விட்டுவிடுவோம்.

தஞ்சை மண்ணின் தாங்கு திறன் பெரிய கோயில் கட்டிய இடத்தில்தான் மிக அதிகம் என்று குறிப்பாக தேர்வு செய்து அந்த நிலத்தில் கற்றளி எழுப்பிய விந்தையைச் சொல்லாமல் விட்டதையும் விட்டுவிடுவோம்.

இன்னும் சிற்பங்களின் அழகை, அர்த்தத்தை, ஆழத்தை, சாந்தார நாழிகையின் இருப்பை, சிவ தாண்டவ சிற்பங்களின் மாண்பை - இவை எதையும் சொல்லாததும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அந்த நிகழ்ச்சி பெரிய கோயிலைப் பற்றி மட்டும் பேசாமல் பொதுவாக தென்னிந்தியக் கோயில்கள் பலதைப் பற்றியும் பொதுவாகப் பேசியதுதான்.

ஆனால் இம் மாபெரும் திருக்கற்றளியைப் பற்றி அபத்தக் களஞ்சியம் என்று சொல்லத்தக்க பல்வேறு தகவல்களும் பரிமாறப்பட்டதுதான் சோகம். டிஸ்கவரி ஒரு சர்வதேச ஊடகம் என்பதால் இத்தவறான தகவல்கள் அனைத்தும் உலக அளவில் போய்ச்சேர்ந்துவிட்டது சோகத்திலும் சோகம். வழக்கமான தவறான இராஜராஜர் - கருவூர்த் தேவர் ஓவியம் ஈ.....ண்டு விளக்கப்பட்டதுடன் அதனை வைத்து ஒரு சிற்ப மாதிரியையும் செய்து காட்டி இராஜராஜர் இப்படித்தான் இருப்பார் என்று மனதில் பதிய வைக்கவும் முயன்றார்கள். இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். இதுபோன்ற வேறு சிறிய தவறான தகவல்களையும் சற்று சிரமப்பட்டு சகித்துக்கொண்டு விடலாம்.

ஆனால் அந்த மாமனிதர் இம்மாபெரும் திருக்கற்றளியைக் கட்டியதற்கான காரணத்தை விளக்கினார்களே - அதைத்தான் நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இராஜராஜர் எதற்காக இப்படியொரு மிகப்பெரிய கற்றளியைக் கட்ட வேண்டும் ? தமிழனின் பொறியியல் திறனை உலகளாவிய அளவில் எடுத்துச் சொல்லவா ? சோழ தேசம் அவருடைய காலத்தில் அடைந்திருந்த மிகப் பெரிய மாண்பைச் சொல்லவா ? தம் தேசத்தைப் பற்றிய தம்முடைய கனவு எத்தனை பெரியது என்று வரப்போகும் சந்ததியருக்கு எடுத்துக் காட்டவா ? பரம்பொருள் பெரிது ! என்னும் தத்துவத்திற்கு உருக்கொடுக்க நினைத்து விண்ணில் துலங்கும் கயிலயங்கிரியை மண்ணில் காட்ட நினைத்தாரா ? அல்லது தக்கார் தகவிலார் என்பதவரவர் எச்சத்தாற் காணப்படும் என்ற குறளுக்கேற்ப தமது எச்சமாக காலகாலத்திற்கும் நிற்கப்போகும் இந்தக் கற்றளியை விட்டுச் சென்றாரா ?

டிஸ்கவரியைப் பொறுத்தவரை மேற்கூறிய காரணங்களெல்லாம்விட வேறு அதியற்புதமான ஒன்று காரணம் அகப்பட்டிருக்கிறது ! அது என்ன தெரியுமா ? இராஜராஜர் பல்வேறு தேசங்களிலும் படையெடுத்துப்போய் மிகப் பெரிய பாப மூட்டைகளை சம்பாதித்துக்கொண்டு விட்டாராம் ! அதனால் மதநம்பிக்கை அதிகம் கொண்ட அவர் எங்கே மறுபிறவி நல்லபடியாக அமையாது போய்விடுமோ என்று பயந்து இப்படியொரு கற்றளியைக் கட்டினாராம் ! எப்படி அற்புதமான காரணம் பார்த்தீர்களா ? அதுசரி, டிஸ்கவரி வாதத்தையே எடுத்துக்கொண்டாலும் இராஜராஜரினும் ஒரு படி மேலே போய் கடல் கடந்தெல்லாம் வீரம் பரப்பிய கங்கை கொண்ட சோழரின் பாப மூட்டை இன்னும் பெரிதாகவல்லவா இருந்திருக்கும் ? அப்போது அவருடைய கற்றளி இன்னமும் பெரியதாக இருந்திருக்க வேண்டுமே ? அது மட்டுமல்ல - அவருக்குப் பின்வந்த ஒவ்வொரு சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் தத்தம் பாப மூட்டைக்காக தலைக்குத் தலை கற்றளி கட்டியிருக்க வேண்டாமோ ? ஐயோ பாபம், குலோத்துங்க சோழருக்கும் ஜடாவர்மன் சுந்தர பாண்டியருக்கும் டிஸ்கவரியைப் பொறுத்தவரை மிகக்கொடுமையான மறுபிறவிதான் பரிசு ! நாயாகவும் நரியாகவும் பிறந்து நாசமாய்ப் போயிருப்பார்கள் ! அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.

வேறு ஏதாவது நாட்டின் கலைச்செல்வத்தைப் பற்றி உலகளாவிய ஊடகத்தில் இப்படியொரு தவறான தகவல் ஒலிபரப்பப்பட்டிருந்தால் நடந்திருப்பதே வேறு ! ஆனால் நமது நாட்டிலிருந்து ஒரு செய்திப் பத்திரிக்கையாவது ஒரு குரலாவது இது தவறு ! என்று எழுந்திருந்து சொல்லவேண்டுமே ? ஊஹூம் !

நமக்கே நம்மைப் பற்றி நமது கலைச் செல்வங்கள் பற்றி ஏதாவது அக்கறை, மரியாதை இருந்தால்தானே அதெல்லாம் வரும் ?this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.