http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 16

இதழ் 16
[ அக்டோபர் 16 - நவம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்றளி கட்டிய காரணம்
பகவதஜ்ஜுகம் - 5
கோயில்களை நோக்கி - 4
பனைமலையில் ஒரு மாலைப்பொழுது
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம் - 2
சிந்து வெளியில் முருகன் - திரு. ஐராவதம் மகாதேவனின் மறுமொழி
ஜி.என்.பாலசுப்ரமணியம்
சங்கச் சிந்தனைகள் - 4
இதழ் எண். 16 > கதைநேரம்

பணிப்பெண் (ப): வாருங்கள் தாயே வாருங்கள்.

தாய்: எங்கே என் மகள்.

பணிப்பெண் (ப): இந்த சோலையில் தான் அஜ்ஜுகாவை பாம்பு கடித்துவிட்டது.

தாய்: ஐயோ, விதிகெட்டவள் நான் அழிந்தேன்.

பணிப்பெண் (ப): அமைதி, அமைதி, அஜ்ஜுகா உயிரோடிருக்கிறாள்.

தாய்: அவளுக்கு ஒன்றுமில்லையே, மகளே வசந்தசேனை இது என்ன?

ராஜகணிகை: மூதாட்டியே என்னைத் தொடாதே.

தாய்: ஐயோ, பாவமே இது என்ன?

பணிப்பெண் (ப): விஷம் நேராக தலைக்கு ஏறிவிட்டது.

தாய்: சீக்கிரம் போ, ஒரு மருத்துவரை அழைத்துவா.

பணிப்பெண் (ப): அப்படியே தாயே. (போகிறாள்.)

(இராமிலகனும் பணிப்பெண் மதுகாரிகாவும் வருகிறார்கள்)

பணிப்பெண் (ம): வாழ்க, வாழ்க, ஐயனே. அஜ்ஜுகா தங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.

இராமிலகன்:

அகல் விழி இரக்கத்து அவளழகு மொழிவழியெ
இன்முகச் சுவையழகைப் பருக வேண்டுகிறேன்
தகவமைந்து தேனூதும் துந்துமிக்கு எனவமைந்த
மெல்லிதழின் தாமரை போல் முகவழகே.

(அவள் அருகில் சென்று) என்னைக் கண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள், எப்படி?

(ஆடையின் முனையை இழுக்கிறான்)

சிற்றலை திருப்பும் செங்கமலம் போல்
உருகொண்ட அருளே திரும்பாயே
சிந்தா தெங்கிலை சிறு பனிபோல்
உள்ளம் அள்ளுதே குறுநோக்கும்.

ராஜகணிகை: அசட்டைக்காரரே, என் ஆடையின் முனையை விட்டுவிடும்.

இராமிலகன்: அன்பே இதுவென்ன?

தாய்: பாம்பு தீண்டியது முதலே சம்பந்தமில்லாமல் பேசுகிறாள்.

இராமிலகன்: அப்படியா?

வேற்றொருவர் சக்தியுடன் பற்ற நின்றாள்
வேறுபடி மயக்கம் தானும் காட்டுகின்றாள்.

(மருத்துவரும் பணிப்பெண் பரப்பிரிதிகாவும் வருதல்)

பணிப்பெண் (ப): வாருங்கள் ஐயா, வாருங்கள். (வருதல்.)

மருத்துவர்: எங்கே அவள்?

பணிப்பெண் (ப): அதோ அஜ்ஜுகா, அவள் சரியாக இல்லை.

மருத்துவர்: பெரும் பாம்பே அணுகியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

பணிப்பெண் (ப): எப்படித் தெரிகிறதையா?

மருத்துவர்: எப்படியென்றால், அவளது செயல்கள் விபரீதமாக இயற்கைக்கு முரணாக உள்ளன. எனது ஆயுதங்களை எல்லாம் கொண்டுவா.

விஷத்துக்கான மருத்துவத்தைத் தொடங்குகிறேன்.

(உட்கார்ந்து ஒரு வட்டம் வரைகிறார்.)

சுருண்டு குறுகும் ஒன்றே, இந்த வட்டத்துக்குள் போ, நுழைந்து போ, வாசுகியின் மகனே நில் . . . நில் . . . சூ . . சூ . . உன்னுடைய மண்டையை

உடைப்பேன். எங்கே கோடரி?

ராஜகணிகை: முட்டாள் வைத்தியரே, உம்மைக் கெடுத்துக்கொள்ளாதேயும்.

மருத்துவர்: ஓஹோ? பித்தக் கோளாறா? உனது பித்தவாத கிலேசத்தைப் போக்கிவிடுகிறேன்.

இராமிலகன்: முயற்சியுங்கள். நன்றி மறக்கமாட்டோம்.

மருத்துவர்: பாம்பு கடிக்கென்று ஒரு நல்ல குளிகை கொண்டுவருகிறேன். (அவர் வெளியேறுகிறார்.)

(அப்பொழுது எமதூதன் வருகிறான்)

எமதூதன்: ஓகோ! எமராஜர் என்மீது பாய்கிறார்.

அல்ல இந்த வசந்தசேனை அல்லவடா
கொண்டேகு இவளை அங்கே திரும்பவடா
அடுத்து விதிமுடிந்த வசந்தசேனை உண்டு அடா
கொண்டுவா சென்றவளை இங்கேயடா.

அவளது உடல் தகனம் செய்யப்படவில்லை யென்றால் அவளது உயிரை அங்கேயே நிலைப்படுத்தி விடுவேன்.

(அவளைக் கண்டு) ஆ! அவள் எழுந்துவிட்டாள். என்ன இது?

இங்கென் கையிலிவள் உயிரிருக்க
எழுந்துவந்து கணிகை இவள் நிற்கிறாளே?
இவ்வுலகம் இதுகாறும் கண்டதில்லை
என்னவொரு விந்தையிது இது போலே.

(சுற்றிப் பார்த்து) ஆ! யோகி சன்னியாசிப் பயல் ஒருவன் அங்கு கிடக்கிறான். என்ன செய்யலாம்? பார்க்கலாம். ராஜகணிகையின் உயிரை

சன்னியாசியின் உடலில் வைக்கிறேன். கூத்து முடிந்தவுடன் சரிபடுத்திவிடுகிறேன்.

(அப்படியே செய்கிறான்.)

அந்தணன் உடலுக்குள்ளே பெண்ணினாவி
அதன் செயல்களெல்லாம் மேவி இனி
ஆன்மத்தின் இயல்பின் வழி மாறிவிடும்.

(அவன் மறைகிறான்)

பரிவிராசகர்: (எழுந்து) பரப்பிரிதிகா, பரப்பிரிதிகா.

சாண்டில்யன்: ஆ! ஆண்டவனுக்கு உயிர் வந்துவிட்டது. கருமம் செய்தவர்கள் எளிதாகச் சாவதில்லை.

பரிவிராசகர்: எங்கே, எங்கே இராமிலகன்?

இராமிலகன்: ஆண்டவனே, இதோ அடியேன்!

சாண்டில்யன்: ஆண்டவனே, இது என்ன? திருவோடு ஏந்தத் தகுந்த உமது இடது கை ஏராளமான சங்கு வளையல்களை அணிந்துள்ளது போல

எனக்குத் தெரிகிறதே!

பரிவிராசகர்: இராமிலகா, என்னை அணைத்துக்கொள்.

சாண்டில்யன்: உமது திருவோட்டை அணைத்துக்கொள்ளும்.

பரிவிராசகர்: நான் இராமிலகன் மீது மயங்கிவிட்டேன்.

சாண்டில்யன்: இல்லை! இல்லை! உமக்கு பைத்தியம் பிடித்துவிட்டது!

இராமிலகன்: பொருளற்ற இவரது பிதற்றல் ஆண்டவன் என்ற பெயருக்கே களங்கம்.

பரிவிராசகர்: எனக்கு மது வேண்டும்.

சாண்டில்யன்: விஷத்தைக் குடியும்! சரி, சரி, கிண்டலுக்கும் ஒரு அளவு முறை இருக்கிறது. இது ஆண்டவனுமில்லை . . . அஜ்ஜுகாவுமில்லை . . .

ஆண்டவஜ்ஜுகா * என்றுதான் அழைக்கவேண்டும்.

பரிவிராசகர்: பரப்பிரிதிகா, பரப்பிரிதிகா, என்னை அணைத்துக்கொள்.

பணிப்பெண் (ப): விலகிப் போகும்.

தாய்: மகளே - வசந்தசேனா.

பரிவிராசகர்: அம்மா, நான் இதோ உள்ளேன். எனது வாழ்த்துக்கள் அம்மா . . .

தாய்: சாமி . . . இது என்ன?

பரிவிராசகர்: அம்மா, என்னை உங்களுக்குத் தெரியும் இல்லையா? இராமிலகா நீ இன்று பிந்திவிட்டாய்.

சாண்டில்யன்: அப்படியே இருக்கட்டும்.

(மருத்துவர் வருகிறார்)

மருத்துவர்: மருந்தும் நாலுதோலா குளிகையும் கொண்டு வந்திருக்கிறேன். பிழைப்பாளோ? மரிப்பாளோ? தண்ணீர் . . . தண்ணீர். (அருகில் சென்று.)

பணிப்பெண் (ம): இதோ தண்ணீர்.

மருத்துவர்: இந்தக் குளிகையைப் பொடி பண்ணுகிறேன். ஆ . . . அவளுக்கு கடியில்லை, பேய்பிடித்திருக்கிறது.

ராஜகணிகை: முட்டாள் வைத்தியனே, பயனற்ற கிழமே, உயிர்கள் எப்படி மடிகின்றன? உனக்குத் தெரியவில்லை. எந்த வகைப் பாம்பு அவளைக்

கொன்றிருக்கிறது? சொல்லும் பார்ப்போம்.

மருத்துவர்: இது ஒரு பெரிய காரியமா?

ராஜகணிகை: ஏதும் விதிமுறை உண்டா?

மருத்துவர்: ஏராளம். ஆயிரத்து ஐந்நூறு வரை.

ராஜகணிகை: சொல்லும் விதிமுறைகளை எங்களுக்குச் சொல்லும்.

மருத்துவர்: கேளுங்கள்: வாதம், பித்தம், சிலேசம், அ . . . புத்தகம் . . . புத்தகம் . . .

சாண்டில்யன்: ஓஹோ . . . மெத்த படித்த வைத்தியர் முதல் வரியே மறந்துவிட்டார். இருக்கட்டும். நண்பர் தானே, இதோ புத்தகம்.

மருத்துவர்: கேளுங்களம்மா . . .

'வாத பித்த சிலேசனமாம்
இந்த விடங்கள் மிகக் கொடியனவாம்
மூன்றன் இவைகள் கொடு நாகங்களாம்
நான்கென்றளவு ஒன்று இதில் இல்லையதாய்.'

ராஜகணிகை: ஒரு சொல் தவறு. மூன்றன் என்றல்ல. மூன்று என்று குறிப்பிடவேண்டும். மூன்று என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பால்.

ஆண்பால் அல்ல.

மருத்துவர்: ஆ . . . அப்படியானால் இலக்கணப் பாம்பே கடித்திருக்க வேண்டும்.

ராஜகணிகை: விஷம் ஏறும் விஷயத்தில் எத்தனைப் படிகளுண்டு.

மருத்துவர்: நூறு.

ராஜகணிகை: இல்லை, இல்லை. ஏழு படிகளே. இப்படி:

முகங்கருத்தல் வாயுலர்தல்
நிறம் மாறல் உடல் நடுங்கல்
விக்கல் முணங்கல் மூர்ச்சையாதல்
நாடின் விடமேறும் ஏழு படிகள்.

இதைக் கடந்து விடமேறிவிட்டால் வானுலக மருத்துவராலும் மாற்றமுடியாது. இதற்குமேல் ஏதும் இருந்தால் சொல்லும் . . .

மருத்துவர்: இது மெய்யாகவே எங்களுக்குப் பாடமில்லை . . . வணக்கம் தாயே . . . வருகிறேன்.

(எமதூதன் வருகிறான்)

எமதூதன்: ஆ . . . இது . . .

கருச்சிதைவு கட்டி காய்ச்சல் காதுநோய்
கடுஞ்சூலை கண் மூளை நெஞ்சடைப்பு
கணக்கிட்டு நோய் பலவும் நான் சொல்வேன்
இதுகணமே வகை பலவாய் ஜீவன் களை
காலநகர் கொண்டு செல இருக்கின்றன.

நான் எமராஜன் ஆணைவழி செல்லவேண்டும் . . .

(ராஜகணிகையிடம் சென்று) ஆண்டவனே, பெண்ணுடலை விட்டுவிடும்.

ராஜகணிகை: அப்படியே!

எமதூதன்: என் கடமையைச் செய்து அவளது உயிரை மாற்றிவிடுவேன்.

(அவன் அப்படியே செய்துவிட்டு மறைகிறான்)

பரிவிராசகர்: சாண்டில்யா! சாண்டில்யா!

ராஜகணிகை: பரப்பிரிதிகா! பரப்பிரிதிகா!

பணிப்பெண் (ப): அஜ்ஜுகா முன்போலவே பேசுகிறாள்.

தாய்: மகளே, வசந்தசேனை . . .

இராமிலகன்: ஆ . . . அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் . . . அன்பே வசந்தசேனை இப்படி வா!

(ராஜகணிகை இராமிகனுடனும் பணிப்பெண்களுடனும் தாயுடனும் செல்கிறாள்)

சாண்டில்யன்: ஆண்டவனே, இதெல்லாம் என்ன?

பரிவிராசகர்: அது பெரிய கதை. நமது இருப்பிடத்திற்குப் போனதும் மறுபடி சொல்லுகிறேன் (சுற்றிப் பார்த்து) பொழுது போய்விட்டது . . .

இப்பொழுது:

பொன்னுருக்கும் பாண்டத்து முகடுடுத்த தங்கம் போல்
அந்திவானக் கரையினிலே ஞாயிறுபோய் மூழ்கினது
பின்னும் மேகக் கூட்டங்கள் கொப்பளித்த எழிலிலே
அற்புதமாய் சொர்கத்துக் கோட்டமொன்று தெரியுது

(அவர்கள் புறப்படுகிறார்கள்)

உலகங்கள் தோறுமினி யோகங்கள் ஆளட்டும்
வானதூதர் யாவருமே அனுகூலமாகட்டும்
ஊழின் இன்னல் யாவுமே இல்லையாகப் போகட்டும்
மேலும் நாடும் இன்பமே நானிலத்து நிலவட்டும்

முற்றும்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.