http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 18

இதழ் 18
[ டிசம்பர் 16, 2005 - ஜனவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

பக்தியும் கடமையும்
பழுவூர் - 7
கல்வெட்டாய்வு - 13
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
Gopalakrishna Bharathi-4
சங்கச் சிந்தனைகள் - 6
இதழ் எண். 18 > இலக்கியச் சுவை
சங்கச் சிந்தனைகள் - 6
கோகுல் சேஷாத்ரி
பிரிவு என்னும் உறவு


நாளை மறுநாள் அவன் கிளம்புகிறான் என்று விசாரித்துவிட்டு வந்து சொன்னார்கள்.
எப்போது திரும்ப வருவானென்று தெரியாதாம். நிலவழியாகத்தான் செல்கிறானா அல்லது நீர்வழியாகச் செல்கிறானா ? அதுவும் தெரியாதாம் ! தோழியால் அந்த விபரங்களையெல்லாம் சேகரிக்க முடியவில்லை. உள்நாடா அல்லது கடல் கடந்து செல்கிறானா ? நல்லவேளை - உள்நாடுதான் ! பாண்டிதேசம் நோக்கிச் செல்கிறானாம்.

அவன் கிளம்பப் போகிறான். அந்த ஊரை விட்டு - உற்றாரை விட்டு - அன்னை தந்தையை விட்டு - பிறந்த மண்ணை விட்டு - அவளை விட்டு. அவளை விட்டு விட்டு அவன் நீண்டதொரு பயணத்தை மேற்கொள்ளப்போகிறான். பார்ப்பதற்கு உற்சாகமாகவே தோன்றினாலும் அவ்வப்போது அவன் முகம் மாறிற்றாம் - தோழி சொல்கிறாள். என்ன அர்த்தம் அதற்கு ? ஒருவேளை தன்னைப் பற்றிய நினைப்பாக இருக்குமோ ? அல்லது பொதுவாக தனது சுற்றத்தைப் பிரிந்து செல்வதினால் ஏற்பட்ட துக்கம்தானா அது ?

எல்லாம் தன்னால்தான் வந்தது ? அவனுடைய இந்த முடிவுக்கு ஒருவகையில் நாமும்தானே காரணம் ? அவள் ஆயசமாக கதவின் நிலைக்காலில் சாய்ந்துகொண்டு இரகசியமாகக் கண்ணீர் சொரிகிறாள்.

ஒரு கனவுக்காட்சியைப் போல எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

இந்திர விழாவில் அவனை முதல் முதலில் கண்டது. கண்களாலேயே இருவரும் பேசிக்கொண்டது - அது உறவாக மலர்ந்து காதலாகிச் செழித்த நிலையில் ஒரு நாள் தைரியம் வந்து அவன் தன் தந்தையைக் கண்டு பேசியது....

ஆ ! ஏன் அந்த நாளை மீண்டும் மீண்டும் நினைக்கிறோம் ?

"உனக்கு என் மகளைப் பெண்கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறதப்பா ?"

ஆ! அனலில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கியதைப்போன்ற தந்தையின் பேச்சு ! எத்தனை முறை மறக்க நினைத்தாலும் திரும்பத் திரும்ப சுவற்றிலடித்த பூப்பந்தாக மீண்டும் மீண்டும் அந்த வாக்கியம் அவளின் இதயத்தில் ஆணி அறைகின்றன.

என்ன தகுதி வேண்டும் ? அவன் நல்லவன். என்னை மனதார நேசிப்பவன். உழைப்பதற்கு அஞ்சாதவன். என்னை நன்றாக வைத்துக் காப்பாற்றக்கூடிய மனத்திண்மை வாய்ந்தவன். இது போதாதா ?

"கையகல நிலம் உனக்குச் சொந்தமாக உள்ளதா ? பசு கன்றுகளாவது உள்ளனவா ? என்ன செய்து பிழைக்கப்போகிறாய் ?"

அன்று அவருடன் பேசுவதை நிறுத்தினாள். இன்றுவரை அவரை நிமிர்ந்துகூடப் பார்ப்பதில்லை. தப்பித்தவறி அவருடைய கண்களைச் சந்தித்துவிட்டால் சொல்ல முடியாத அருவருப்பால் குறுகுறுத்துப் போகிறாள் அவள்.

அவ்வளவுதான். இனி வேறு ஊர் - வேறு மக்கள் - வேறு சுற்றம். மெல்ல மெல்ல அவன் தன்னை மறந்துவிடுவான். ஆனால் தனக்கோ ? ஐயோ ! பத்தினித் தெய்வமே ! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய் ?

கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிய அவள் சோர்ந்துபோய் தரையில் வீழ்கிறாள்.

அந்தோ ! பிரபஞ்சத்தின் இரகசியங்களை - வாழ்வு அவளை நடத்திச்செல்லும் சூட்சுமங்களை - அவள் அறியாள். அவள் மட்டுமல்ல - நம்மில் யார்தான் அதை அறிவார் ?

அவன் அன்று இரகசியமாக அவளைச் சந்திக்கிறான். அவளுக்காக - அவளுக்காக மட்டும் பொருள்தேடக் கிளம்புவதை அவளிடம் சொல்லி அவளுக்குத் தன் நிலையைப் புரிய வைக்கிறான். இரண்டு வருடங்களில் கைநிறைய பொருளோடு கம்பீரமாக வந்து அவளைக் கரம்பிடிப்பதாக காமக்கண்ணி தேவியின் மீது சத்தியம் செய்கிறான்.

அவனுடைய கைகளை பிடித்துக்கொண்டு அவள் ஆனந்தக் கண்ணீர் சொரிகிறாள். யுக யுகாந்திரங்கள் கடந்தாலும் அவனுக்காக வழிமேல் விழிவைத்து - கண்களில் நீர்திரளக் காத்திருக்கப் போவதாக அவளும் சத்தியம் செய்கிறாள்.

அவர்கள் பிரிகிறார்கள்.

இல்லை. பிரியவில்லை. அன்றிலிருந்துதான் அவர்கள் இணைகிறார்கள்.

பிரிவுதான் அவர்களின் காதலை அகழ்ந்து அகலப்படுத்தப்போகிறது. ஆழப்படுத்தப்போகிறது. காலம் செல்லச்செல்ல அந்தக் காதல் மிக மிக ஆழமானதொரு உணர்வாக வேரூன்றப்போகிறது.

கொற்கைத் துறைமுகத்தின் பெளர்ணமி இரவுகளில் தனியாக படகில் சாய்ந்துகொண்டு அவளை நினைத்து அவன் தெம்மாங்கு பாடுவான். அவனுடைய நலனுக்காக ஒவ்வொரு வெள்ளியும் அவள் காமக்கண்ணி அம்மனுக்கு நோன்பு நோற்பாள்.

பிரிந்தபின்தான் அவர்கள் ஒருவரை ஒருவர் இன்னாரென்று கண்டுகொண்டார்கள். இனையர் இவரெமக்கு இன்னையாம் என்று உணர்ந்தார்கள். உணர்வால் கலந்தார்கள்.

பிரிவே அவர்களுக்கு உறவாக விளங்கிற்று.

அவனுடைய ஊரைப் பகுதிக்கு வந்து செல்லும் யாத்ரீகர்களிடம் அவன் சங்கு வளைகளையும் ஒருமுறை சிறிய முத்தாரத்தையும் அவன் இரகசியமாக அவளுக்குக் கொடுத்தனுப்பினான். அந்த முத்தாரத்தின் ஒவ்வொரு முத்தையும் அவளின் கண்ணீர்த் துளிகள் அன்றாடம் அலங்கரித்தன. அம்மனுக்கு நேர்ந்துகொண்டு அவள் பூசாரியிடம் தாயத்தும் முடிக்காசும் கொடுத்தனுப்பினாள். அந்த தாயத்தைப் புஜத்தில் கட்டிக்கொண்டு அவன் அவ்வப்போது அதனைத் தடவி மகிழ்கிறான்.

வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு முகங்கள் உண்டு. நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. நாளின் இரு பொழுதுகளைப் போல.

ஒன்றின்றி மற்றொன்று இருக்க முடியாது.

பிறப்பு என்று சொல்லும்போது இறப்பும் அப்போதே தோன்றிவிடுகிறது. அதேபோல உறவு என்றொன்று முகிழ்க்கும்போது பிரிவும் ஏற்படத்தானே செய்யும் ?

உண்மையில் பிரிவு என்பதே முகமூடியணிந்த உறவுதான். உறவு தொடர்ந்து இருப்பதால்தானே பிரிவு வேதனையளிக்கிறது ? உறவே இல்லையெனில் பிரிவு என்னும் உணர்வுக்கே வேலையில்லையே ?

ஆக பிரிவும் ஒரு உறவு. இரகசிய வேடமணிந்த உறவு.

பிரிவு இருப்பதால்தான் இணைப்பும் சாத்தியமாகிறது. பிரிவு முடியும் இடத்தில் இணைப்பு தோன்றுகிறது. பிரிவு இல்லையேல் இணைதலில் கிளர்ச்சியும் காணமல் போய்விடும்.

உறவைப் பற்றிப் நுண்மையாகப் பாடும் பண்டைய தமிழப்பாடல்கள் பிரிவின் வேதனை பற்றியும் உருக்கமாக எடுத்துரைக்கின்றன. பிரிவின் இலக்கணத்தைப் பற்றிக் கூறத்தொடங்கும் தொல்காப்பியர் அந்நாள் நிகழ்ந்த பிரிவின் வகைகளை பல கட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

வாழ்க்கையில்தான் எத்தனை வகையான பிரிவுகள்... !

கல்வி கற்பதற்காகப் பிரிதல்.... தூது செல்வதற்காகப் பிரிதல்.... பகையின் காரணமாகப் பிரிதல்.... பொருள் ஈட்டுவதற்காகப் பிரிதல்..

பொருள் ஈட்டுவதற்காக நிகழும் பிரிவு அனைத்து வகை மக்களுக்கும் உரியதாம்."ஓதல், பகையே, தூது இவை பிரிவே"


(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - பிரிவு வகை - எண் 973)


"கல்வி கற்பதற்காகப் பிரிதல், பகை காரணமாகப் பிரிதல், தூது செல்லுதற்காகப் பிரிதல் ஆகிய இவை பிரிவின் வகைகளாகும்"

"பொருள் வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே"


(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - பிரிவு வகை - எண் 981)


"பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் பிரிவு எல்லா மக்களுக்கும் உரியது"எல்லா மக்களுக்கு மட்டுமல்ல - எல்லா காலங்களுக்கும்கூட உரியது.

அன்றிலிருந்து இன்றுவரை....பொருள்தேடி வெளியூர் செல்கையில் உற்றாரைப் பிரிகிறோம் - உறவினரைப் பிரிகிறோம் - சுற்றத்தைப் பிரிகிறோம் - சொந்த மண்ணைப் பிரிகிறோம்.

பிரிந்தபின்தான் உறவின் மகிமை புரிகிறது. இழந்தபின் இழந்ததன் அருமை தெரிகிறது.

வெளியூர் சென்றபின் சொந்த கிராமத்தை நேசிக்கத்துவங்கியவர்கள் நம்மில் எத்தனை பேர் ! வெளிநாட்டுக்குச் சென்றபின் தாய்நாட்டை நினைத்து அழுதவர்கள் நம்மில் எத்தன பேர் !

பிரிவு வாழ்க ! பிரிவால்தான் நாம் உறவை அடைந்தோம்.

பிரிவே ஒருவகை உறவுதான்.

ஏனெனில்...

பிரிவு இருக்கும்வரை உறவும் இருக்கிறதென்றுதானே அர்த்தம் ?

(மேலும் சிந்திப்போம்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.