http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 18
இதழ் 18 [ டிசம்பர் 16, 2005 - ஜனவரி 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம்,
மாதங்களில் சிறந்த மார்கழியில் மலரும் வரலாறு இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஐப்பசியிலும் கார்த்திகையிலும் அடை மழை அளித்த அண்ணல் மார்கழியில் தனது கருணை மழையைப் பொழிய பிரார்த்திக்கிறோம். பிரார்த்தனை என்றதும் நினைவிற்கு வருகிறது. எங்களது பயணங்கள் பல சமயம் பிரதோஷ தினத்தை ஒட்டி இருக்கும். அத்தகைய தினங்களில் வரும் கூட்டம் எங்கள் பணிகளுக்கு சற்றே இடையூறாக இருப்பினும், ஆளரவமற்ற கோயில்களில் அன்றைய தினத்திலாவது மக்கள் திரளாக வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமேயாகும். அதிலும், தஞ்சை இராஜராஜீஸ்வரத்திற்கு வந்தால் விபரீதம் ஏதும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் போய், பிரதோஷ தினத்தின் பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. அத்தகைய தினங்களில், கருவறையில் வீற்றிருக்கும் பெருமானை விட, அவரை நோக்கி கொலுவிருக்கும் அவரது வாகனமான நந்தி தேவருக்கே 'மவுசு' அதிகம். பலவித அபிஷேகங்கள், அலங்காரங்கள் எல்லாம் முடிந்த பின், அவர் காதில் வேண்டுதல் ஓதும் படலம் ஆரம்பிக்கும். இதை முதலில் கண்ட பொழுது வேடிக்கையாய் இருந்தாலும், ஒரு நண்பர் கூறியது போல, 'அவரவருக்கு அவரவர் கவலை, அதைப் போக்க அவரவர் வழிகள், நம்பிக்கைகள்', என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். பக்தியில் பல வகை, அதில் இதுவும் ஒரு வகை. ஒரு முறை சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த குப்பைகளையும், சமூகப் பிரக்ஞையே இல்லாமல் சுவரோரம் அசுத்தம் செய்யும் மக்களையும் கண்ட எமது நண்பர், "சுவர்களில் எல்லாம் கடவுள் இறை உருவங்களை வரைந்துவிட்டால், இவ்வாறு அசுத்தம் செய்ய மக்கள் பயப்படுவார்கள்", என்றார். அவர் கூற்றைக் கேட்டதும் சிரிப்புதான் வந்தது. அதற்கான காரணம், சென்ற முறை இராஜராஜீஸ்வரத்தை கண்ட பொழுது, அங்கிருந்த அற்புதக் கட்டுமானத்தையும், அழகிய சிற்பங்களையும் காண முடியவில்லை, பிரதோஷத்திற்கென வந்த மக்கள் திரள், இறைவனின் பிரசாதத்தை கொண்டிருக்கும் பிளாஸ்டிக் உறைகள் மற்றும் பல வகையான குப்பைகளால் கோயில் வளாகத்தையே நிரப்பியிருப்பதை மட்டுமே காண முடிந்தது. கோயிலின் உள்ளே அசுத்தம் செய்ய தயங்காதவர்களா சுவரில் இறையுரு கண்டு அஞ்சுவர்? கோயில் வளாகத்தில் குப்பை இட்டால்தான் குறை தீரும் என்று யாரும் பரிகாரம் கூறியிருக்க வாய்ப்பில்லாத பட்சத்தில், பக்தியில் திளைக்கும் மக்கள், தங்கள் இடர் களையும் அண்ணல் வசிக்கும் இல்லத்தை குப்பையில் திளைக்கவிடுவது பொறுப்பற்ற செயலாகும். தொல்லியல் அளவீட்டுத் துறை, இக்கலைக் கோயிலைக் காக்க மேற்கொள்ளும் பணிகளை வார்த்தைகளால் அடக்க முடியாது. பிரதோஷ தினத்தன்று சேரும் குப்பையை களையவே ஒரு வார காலம் பிடிக்கும் என்ற நிலையில், அவர்களுக்கிருக்கும் மற்ற பராமரிப்பு பணிகளை கவனித்தல் எப்படி முடியும்? அது மட்டுமன்றி, உலகின் பல மூலைகளிலிருந்து ஆர்வலர்களை இழுக்கும் இடமான இராஜராஜீஸ்வரம், நமது தேசத்தின் பெருமையை உலக அளவில் கட்டியம் கூறும் இடமாகும். அத்தகைய இடத்தை இத்தனை அசுத்தப்படுத்துவதன் மூலம் உலக அளவில் இந்தியாவிற்கு அவப் பெயரை விளைவிக்கும் துரோகச் செயலை செய்கிறோம் என்று உணர்ந்திருப்பின் யாரும் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டிருக்கு மாட்டார்கள். பக்தியை எவ்வகையிலும் வெளிப்படுத்த உரிமை இருப்பினும், அம்முறைகளை கையாளும் பொழுது, நமக்கிருக்கும் கடமைகளையும் மனதில் கொண்டால், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நமது கலை வரலாற்றை பறைசாற்றும் சின்னங்கள், இன்னும் பல்லாயிரம் காலங்களுக்கு நிலைத்திருக்கும். இத்தகைய பாவச் செயல்கள் புரிபவர்களின் மனம் பக்தியில் மூழ்கி உள்ளம் உருக அண்ணலை வேண்டிக் கொண்டிருப்பது, கல்வெட்டுகள் அடிக்கடி கூறுவது போல 'கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை' ஒத்ததாகும். பாவச் செயல் என்று அச்சுறுத்தக் கூறவில்லை. இத்தகைய மாறுதல்களை நிச்சயம் அச்சத்தால் கொண்டுவர முடியாது. இதற்குத் தேவை கலாச்சார மாறுதல். படித்தவர் பாமரர் என்று பாரபட்சமின்றி, குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல் குப்பையைப் போடும் மன நிலையில் மாறுதல் வேண்டும். அதற்கு, நம் உரிமைகள் புரிந்த அளவு கடமைகளை உணர்வது அவசியம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. பக்தியில் திளைக்கும் மனங்கள் சற்று கடமைகளையும் எண்ணிப் பார்க்குமா? -- ஆசிரியர் குழுthis is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |