http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 18

இதழ் 18
[ டிசம்பர் 16, 2005 - ஜனவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

பக்தியும் கடமையும்
பழுவூர் - 7
கல்வெட்டாய்வு - 13
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
Gopalakrishna Bharathi-4
சங்கச் சிந்தனைகள் - 6
இதழ் எண். 18 > கலையும் ஆய்வும்
கல்வெட்டாய்வு - 13
மா. இலாவண்யா
இதுவரை வந்துள்ள கல்வெட்டாய்வுக் கட்டுரைகளிலும், மற்றும் வேறு கல்வெட்டு பற்றிய உங்களுக்குத் தெரிந்த செய்திகளிலும், கோயில் சார்ந்த கல்வெட்டுகள் பலவற்றை பார்த்திருப்பீர்கள். அவை கோயிலுக்குக் கொடை வழங்குவது பற்றியோ, கோயிலுக்கு விளக்கெரிக்கக் கொடுக்கப்பட்ட கொடையைப் பற்றியோ, அல்லது கோயிலை எடுப்பித்த செய்தியைத் தாங்கிய கல்வெட்காவோ இருக்கும். இப்படிப் பல கல்வெட்டுகளைப் பற்றி இதுவரை பார்த்தோம்.

சரி, ஒரு கோயிலை மூடியதைப் பற்றிய செய்தியை எந்த கல்வெட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா? என்ன கோயிலை மூடுவதா? இது என்ன விபரீதமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஒரு கோயிலை மூடுவது இக்காலத்தில் அவ்வளவு எளிதான செயல் இல்லை தான். கோயிலை மூடுவது என்று எவரேனும் பிரஸ்தாபித்தாலே பெரும் போராட்டமல்லவா ஏற்பட்டு விடும்.

இந்நாளிலே மட்டும் தான் இப்படியா, பண்டைய நாளிலும் இப்படி போராட்டங்கள் நிகழ்ந்தனவா என்று இதுவரை நான் படித்த கல்வெட்டுகளிலும், கல்வெட்டுப் பாடங்களிலும் பார்த்ததில்லை. ஆனால் கோயில் ஒன்று மூடப்பட்ட செய்தியும், பல வருடங்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளது. அக்கோயில் மிகச் சிறிய புகழடையாத கோயிலும் இல்லை. மிகவும் புகழ் வாய்ந்த, முதலாம் இராஜராஜராலும் புகழப்பட்ட ஒரு சிறந்த கோயில். பல்லவர்கால கலைக்கூடம். அக்கோயில் காஞ்சிபுரம் இராஜசிம்மேச்வரம் தான். என்ன வியப்பாக உள்ளதா? நம்ப முடியவில்லையா? கீழ்வரும் கல்வெட்டுப் பாடத்தினையும், பொருளையும் படித்தால் உங்களுக்கே விளங்கும்.

காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்தில் உள்ள 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டு.

1. ஸ்வஸ்தி ஸ்ரீமனுமஹாமண்ட
2. ளேஸ்வர அரிராயவிபாடன்
3. பாஷைக்குத்தப்புவ ராய
4. ர் கண்டன் பூர்வ்வாபஸ்சிம்ஸமு
5. த்ராதிபதி ஸ்ரீகம்பண
6. உடையர் ப்ரதிவிரா
7. ஜ்யம் பண்ணி அரு
8. ளாநின்ற ஸகாப்தம் ஆயி
9. ரத்துஇருநூற்றுஎண்ப
10. த்துஆறின் மெல் செல்
11. லாநின்ற விஸ்வாவஸு வருஷ
12. த்து ஆடி மாதம் முதல் ஸ்ரீ
13. மதுகொப்பணங்கள்
14. காஞ்சிபுரத்தில் இராஜ
15. ஸிம்ஹபன்மீஸ்வரமு
16. டையார் ஆன எடுதத்து
17. ஆயிரமுடைய நாயனார் கொ
18. யில் தானத்தாற்க்கு நிருபம் || எ
19. டுதத்து ஆயிரமுடைய நாயநார்
20. தானத்தை முன்பெ குலொத்
21. துங்கசொழதெவர் காலத்தி
22. லெ இறங்கல் இட்டு நாயனார்
23. திருநாமத்துக்காணியுமாறி தி
24. ருவிருப்பும் திருமடைவிளாகமு
25. ம் அனையபதங்காவுடைய னா
26. யனா[ர்]க்கு குடுத்த இதுவும் எடுத
27. த்து ஆயிரமுடைய நா[ய]
28. னார் தானத்தை இறங்
29. கல் இட்ட இதுவும் தர்ம்ம
30. ம் அல்லாதபடி ஆலே
31. இன்னா[யனா]ர் தானம் இறங்க
32. ல் மிண்டு ஆடி மாதமுத
33. ம் பூசை திருப்பணி நடக்
34. கும்படிக்கு தென்கரை
35. மணவிற்கொட்ட
36. த்து பன்மாநாட்டு முரு
37. ங்கை ஊர் அடங்கலும் ஸர்வ்வாமா
38. னயம் இறையலி ஆக
39. நாற்பாற்க்கெல்
40. லைக்குட்பட்ட
41. நிலமும் சந்திராதித்தவ
42. ரையும் நடக்கும்படிக்
43. கும் | இன்னாயனார் தி
44. ருவிருப்புக்கு வடபாற்
45. கெல்லை வடதாழம்பள்
46. ளத்து தெற்கும் | தென்
47. பாற்கெல்லை கழனிக்
48. கு வடக்கும் | மெல்பா
49. ற்கெல்லை கரை ¦
50. மட்டுக்கு கிழக்கும் | கி
51. ழ்பாற்கெல்லை வரி
52. வாய்க்காலுக்கு மெ
53. ற்க்கும் | இந்த நாயனார்
54. சந்நதித்தெரு அட
55. ங்கலும் ஸர்வ்வாமா
56. ந்னியம் ஆகச்சந்தி
57. ராதித்தவரையும் செ
58. ல்லும்படி முன்பு இறங்
59. கல் இட்ட நாளில் வெ
60. ட்டின கல் வெட்டுப்படி
61. தவிர்த்து குடுத்த அ
62. ளவுக்கு இவ் ஓலை
63. சாதனம் ஆக கல்
64. லும் வெட்டி தாழ்
65. வற நடத்திக்கொ
66. ள்ளவும் பாற்பது ||
67. இவை கொப்பணங்கள்
68. எழுத்து ||

கல்வெட்டுக் காலம்: சக வருஷம் 1286 அதாவது கி.பி.1364ம் வருடம். கம்பண்ண உடையார் என்பவர் ஆட்சிபுரிந்த காலம், கொப்பணங்கள் என்பவர் அவரது ஆட்சியில் ஒரு மந்திரியாகவோ அல்லது ஒரு உயர் அதிகாரியாகவோ இருக்கக்கூடும். கம்பண்ண உடையார் காலப் பிற கல்வெட்டுகளிலும், கொப்பணங்கள் வருகிறார்.

கல்வெட்டு செய்தி:

1-10 வரிகள்: மஹாமண்டலேசுவரர், எதிரிகளை வென்று (அவர்கள் அரசை) கைப்பற்றுபவர், சொல் மீறும் அரசர்களை அழிப்பவர், கிழக்கு மற்றும் மேற்கு ஸமுத்திரங்களின் அரசர் கம்பண்ண உடையார் உலகினை ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் சகாப்தம் 1286.
11-18: விஸ்வாவஸுவருஷம் ஆடிமாதம் முதல் ஸ்ரீமதுகோப்பணங்கள், ஸ்ரீ இராஜஸிம்ஹபன்மீஸ்வரமுடையார் ஆன எடுதத்து ஆயிரமுடைய நாயனார் கோயில் தானத்தார்க்கு வழங்கிய ஆணை. )
19-30: முன்பு குலோத்துங்கசோழதேவர் காலத்தில் இக்கோயிலை மூடிவிட்டு, இக்கோயில் சார்ந்த நிலமும், கோயில் இருக்கும் இடமும், கோயிலை சுற்றியுள்ள கோயில் வளாகமும் அனையப்பதங்காவுடைய நாயனார்க்குக் குடுத்தது தர்மம் இல்லையாதலால்
31-42: மூடப்பட்ட இக்கோயிலை மீட்டு, வரும் ஆடிமாதம் முதல், பூசை மற்றும் திருப்பணிகள் நடக்கவும், தென்கரையிலுள்ள மணவிற்கோட்டத்தைச் சேர்ந்த பன்மாநாட்டு, முருங்கை எனும் ஊர் உள்பட நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலமும் நிலவும் சூரியனும் இருக்கும் வரை இருக்குமாறு இறையிலியாக கோயிலுக்கு கொடுக்கப்படுகிறது.
43-53: நில எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
53-62: நான்கெல்லையிலகப்பட்ட நிலமும், கோயில் சந்நிதிதெரு உள்பட ஸர்வமானியமாக சந்திரசூரியர் இருக்கும் வரையில் இருக்கும்படியாக, முன்பு கோயிலை மூடிய நாளில் வெட்டின கல்வெட்டுப்படி கோயில் மூடப்பட்டதை, தவிர்க்கும் அளவுக்கு இவ்வோலை (அதாவது முன்பு குலோத்துங்கசோழதேவர் காலத்தில் வெட்டின கல்வெட்டு செல்லாதபடி, மூடப்பட்ட கோயில் மீண்டும் திறக்கப்படக் கொடுத்த ஆணை (ஓலையில் எழுதப்பட்டது)).
63-68: இவ்வாணையினை கல்லிலும் வெட்டி, எக்குறைவும் இல்லாதபடி நடத்திக்கொள்ளவேண்டும். இப்படிக்கு கொப்பணங்கள் கையெழுத்து.

இக்கல்வெட்டிலிருந்து, இராஜஸிம்மேசுவரம் என்று நாம் கூறும், கையிலாசநாதர் கோயில் என்று இந்நாளில் பொதுவாக வழங்கப்படும் இக்கோயில், கம்பண்ண உடையார் காலத்தில் ஸ்ரீ ராஜஸிம்ஹபன்மீஸ்வரம் என்று ஸ்ரீராஜசிம்மவர்மரின் முழுப் பெயர் கொண்டும், எடுதத்து ஆயிரமுடையநாயனார் கோயில் என்றும் வழங்கப்பட்டது புலனாகின்றது. இதிலிருந்து இக்கோயிலை எடுப்பித்தது இராஜஸிம்மவர்மர் என்பது அக்காலத்தில் தெரிந்தே இருந்ததும் புலனாகின்றது. அப்படியென்றால் குலோத்துங்கசோழ தேவர் காலத்திலும் இச்செய்தி தெரிந்தே இருக்கும். இக்கோயில் குலோத்துங்கசோழ தேவர் காலத்தில் ஏன் மூடப்பட்டது என்பது இக்கல்வெட்டிலிருந்து புலனாகவில்லை. மூடப்பட்டபோது வெட்டப்பட்ட கல்வெட்டு ஒருவேளை கிடைத்தால், காரணத்தை நாம் அறிந்துகொள்ளமுடியும். கோயிலை மூடுவது தர்மமலாத காரியம் என்றும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆயினும் குலோத்துங்கசோழ தேவர் காலத்தில் இக்கோயில் முடப்பட்டுள்ளது கொண்டு, அக்காலத்தில் அப்படி கோயிலை மூடுவது தர்மமல்லாத செயலாக கருதியிருப்பார்களா என்பது சந்தேகமே. அப்படியென்றால், பல கோயில்களை எடுப்பித்த குலோத்துங்கசோழர் இக்கோயிலை மூடும்படி எதற்காக உத்தரவிட்டிருப்பார்?

இக்கோயில் நிலங்களும், வளாகமும், அனையப்பதங்காவுடைய நாயனார் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அனையப்பதங்காவுடைய நாயனார் கோயில் என்பது காஞ்சிபுரத்தில் இராஜஸிம்மேசுவரத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு கோயில். இக்கோயிலை திருஞானசம்பந்தரும், சுந்தரரும் தமது பதிகங்களில் 'அனேகதங்காபதம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

(தகவல்: South Indian Inscriptions Vol I)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.