http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 22
இதழ் 22 [ ஏப்ரல் 16 - மே 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
செல்போன் செல்லமாய்ச் சிணுங்கியது. எடுத்துச் செவியோடு உறவாடினால், அழைத்தது டாக்டர். ஆனந்த அழைப்பு. "பத்மனாபன்! இந்த வாரம் உடையாளூர் வரவில்லை. ஞாயிறு அன்று தஞ்சாவூர் வருகிறோம். காலை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் புதிதாக முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துடன் கூடிய நடுகற்களை பார்க்கிறோம். பின்பு பெரிய கோயிலின் விமானம் ஏறுகிறோம். இயலுமானால் கலந்துகொள்ளலாம்." இவ்வாறு டாக்டர் கூறியவுடன், நான் கனவுலகில் மிதக்கத் தொடங்கினேன். ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஞாயிறு கீழ்வானத்தில் உதயமாகத் தொடங்கியதும் நான் என் பைக்கை உதைத்தேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வந்தடைந்தபோது மணி 7.30. அங்கு ஒருவரும் இல்லை. எதிர்ப்பட்ட காவலரிடம் டாக்டரின் வருகையை விசாரித்தேன். ஒருவரும் வரவில்லை என்று கூறியவுடன் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அறியக் கண்ணுற்றேன். அமைதியான சூழலில் அதிக ஓசை இல்லாமல் மெதுவாக வந்தடைந்தது டாக்டரின் கார். முகமன் கூறிக்கொண்டதும் மாடிக்கு விரைந்தோம். டாக்டரின் நடையில் ஒரு அவசரம் தெரிந்தது. ஆர்வம் விரைந்தது. திரு. இராஜன் அவர்கள் தன் அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார். "இவைதான் அந்த நடுகற்கள்" என்றார். எங்கள் கண் முன்னே மூன்று கற்கள் பிராமி எழுத்துடன் தரைமீது கிடத்தப்பட்டிருந்தன. மூன்று நடுகற்கள். அதுவும் பழைய தமிழ் எழுத்தான பிராமி எழுத்துடன். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டன என்று திரு. இராஜன் கூறியவுடன் சுமார் 2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்களைத் தடவிப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அகநானூற்றிலும் மணிமேகலையிலும் இச்சொல் அமைந்த பாடல் உள்ளது என்று டாக்டர் கூறியவுடன் கலித்தொகையும் மணிமேகலையும் நிகண்டுகளும் புரட்டப்பட்டன. டாக்டர் கூறியது போலவே 'பேடு' குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வளவு ஒரு ஆழ்ந்த படிப்பு, திரும்பத் திரும்ப வாசித்தல் என்பது போன்ற நடைமுறை இருந்தால் மட்டுமே இப்படி ஒரு ஞாபக சக்தி எழமுடியும் என்று நினைத்து டாக்டரின் அறிவாற்றலை எண்ணி வியந்தேன். இந்நடுகற்களைக் கண்டுபிடித்த திரு. செல்வகுமார், திரு யதிஷ்குமார் என்ற இரு மாணவர்களைப் பாராட்டிவிட்டு பெரிய கோயிலை நோக்கி விரைந்தோம். சோழர்கால ஓவியங்கள் உள்ள பகுதிக்குச் சென்றோம். இவ்வோவியங்களில் சுந்தரர் தடுத்தாட்கொண்ட புராணம் பற்றி டாக்டரும் பேராசிரியர் நளினி அவர்களும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சோழர் காலத்தில் மக்கள் உடுத்தியிருந்த உடை அணிகலன்கள், இறைவன் அந்தணராய் ஒரு கையில் குடை மறுகையில் ஓலை என வாதுரைக்கும் காட்சியில் உள்ள வளமை, திரு அஞ்சைக்களம், திரு அருட்துறை கோயில்கள், அக்கோயில்களின் கட்டிடப் பரிமாணக்கலை, சுந்தரர் வெள்ளை யானை மீதும் சேரமான் பெருமாள் குதிரை மீதும் கைலாயம் செல்லுதல், இறைவனின் முன்பு சுந்தரரும் சேரமானும் உட்கார்ந்திருக்கும் பவ்யம், இறைவனின் கம்பீரம். அப்பப்பா! எவ்வளவு தத்ரூபமான காட்சிகள்! இவ்வோவியங்களை கருத்தூன்றிப் பார்த்தாலே ஏதோ ஒரு சோழர்காலக் கல்யாணத்தில் கலந்துகொண்டது போலவும், ஒரு நீதிமன்ற விசாரணையைப் பார்வையிட்டது போலவும் சோழர் காலத்தில் இருந்த கோயில்களில் சென்று இறைவழிபாட்டில் கலந்து கொண்டது போலவும் தோன்றும். டாக்டர் மதியச் சாப்பாட்டிற்கு அழைக்க தஞ்சையிலுள்ள இசையாசிரியை லலிதாம்பாள் வீட்டிற்குச் செல்லக் கோயிலிலிருந்து கீழே இறங்கினோம். அங்கே புன்முறுவலுடன் கிருபா. கிருபா என் பைக்கில் ஏறிக்கொள்ள மற்றவர்கள் டாக்டரின் காரில் ஏறிக்கொள்ள லலிதாம்பாள் வீட்டிற்கு சென்றோம். அறுசுவை உணவுடன் அன்பும் பரிமாறப்பட்டது. திரும்பக் கோயிலினுள் நுழையும் போதும் வெயில் எங்களை விரட்டியது. எல்லோரும் கோயிலினுள் ஓடிச்சென்றுவிட்டோம். எங்கள் பாதங்கள் எல்லாம் "இட்டடி நோக எடுத்த அடி கொப்பளிக்கும் பாதங்களாக மாறத் தொடங்கின. வெயில் தாழ்ந்தவுடன் மாலை சுமார் 4.30 மணி அளவில் கோயில் விமானம் ஏறத்தொடங்கினோம். தொல்பொருள் துறையினரால் தஞ்சை பெரிய கோயில் கேரளாந்தகன் வாயில், இராஜராஜன் வாயில், விமானம் ஆகியவற்றைப் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விமானத்தைப் புதுப்பிப்பதற்காகக் கீழேயிருந்து உச்சி கலசம் வரை சாரம் கட்டியுள்ளனர். பாதிவிமானம் ஏறியவுடன் கீழே பார்த்தால் சிறிய சிறிய மனிதர்கள், கோயில் மதிற் சுவரின் பிரம்மாண்டம், சிவகங்கை குளம் என ஒரு சேர காட்சி தந்தது. நாங்கள் பேசிக்கொள்ளும் சத்தம் தவிர வேறு எவ்வித ஓசையும் இல்லை. அமைதி ஆக்ரமிக்கத் தொடங்கியது. மேலே ஏறிக்கொண்டேயிருந்தோம். விமானத்தில் உள்ள சிலையின் மேலெல்லாம் சுண்ணாம்புச் சுதை பூசப்பட்டு இருந்தது. நாயக்கர்களின் பணி போலும். கலசம் எத்தனை அடி உயரம், உச்சி பல கற்களால் ஆனது என்ற உண்மை, மேலிருக்கும் நந்தி எத்தனை அடி உயரம் என்று அறிய வேண்டும் என்ற ஆவல் விமானம் ஏறும்போது இருந்தது. ஏறியவுடன் இவை எல்லாம் மறந்து உலகம் எல்லாம் மறந்து, இந்த ஏகாந்தம் என்னைக் காந்தமாய் இழுத்துப் பரவசமாய்ப் பக்தி உணர்வோடு இந்தத் தக்ஷ¢ணமேருவில் தங்கும் தேவனைத் தரிசித்த உணர்வே மேலோங்கியது. ஒரு மனிதன் இவையெல்லாம் தோற்றுவித்து முடித்துவிட்டான் என்றால் அம்மனிதன் ஒரு யுகப்புருஷனாய் இருக்க வேண்டும். ஆம்! இராஜராஜன் ஒரு யுகப் புருஷன் தான். தமிழனை, அந்த யுக புருஷனைத் தாள் பணிந்து தலை வணங்கிக் கீழே இறங்கத் தொடங்கினேன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |