http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 3

இதழ் 3
[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தலையங்கம்
மத்தவிலாச அங்கதம் - 1
வாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...
கதை 2 - காரி நங்கை
வாருணிக்குக் கலைக்கோவன்
என்றைக்கு விழிப்பது?
கட்டடக்கலை ஆய்வு - 3
கல்வெட்டாய்வு - 2
வல்லமை தாராயோ?
கருங்கல்லில் ஒரு காவியம் - 3
சங்கச்சாரல் - 3
கோச்செங்கணான் யார் - 1
இதழ் எண். 3 > பயணப்பட்டோம்
கருங்கல்லில் ஒரு காவியம் - 3
கோகுல் சேஷாத்ரி
கிழக்குப்புற நுழைவாயில்

கிழக்குப்புற நுழைவாயில் வழியாக ஏணிப்படிகளில் ஏறி உள்ளே நுழைந்தோம். நுழைவதற்கு முன் வாயிலில் தெரிந்த துவாரபாலகர்களைக் கண்டு சற்று பயந்தே விட்டேன் - அப்படியொரு உக்கிரம் கண்களில்! சிற்பத்துக்கு மேல் வரையப்பட்ட மீசையும் கிருதாவும்கூட சற்று உற்று நோக்கினால் தெரிகின்றன - இந்த வண்ணங்களெல்லாம் இராஜராஜன் காலத்தியதுதானா, பிற்காலத்தியதா என்று அறியக்கூடவில்லை.இராஜராஜன் காலத்தில் முழுவதும் வண்ணமயமாய்த் திகழ்ந்திருக்கும் இந்தக் கோயில் என்று எண்ணம் ஓடியது..

உள்ளே நுழைந்ததும் கேமரா உபயோகிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டதால் (அங்கிருக்கும் புராதன ஓவியங்கள் அடிக்கடி Flash Light பட்டால் பாழாகிவிடும் என்பது காரணம்) கேமராவை உள்ளே வைக்க வேண்டியதாயிற்று. ஆக இனிவரும் காட்சிகளை நேயர்கள் தங்கள் மனக்கண் கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நுழைந்தவுடன் முதலில் கண்களில் பட்டவர் பிரம்மாண்டமான வீரபத்திரர். சிற்பந்தானே? என்று தொட்டுப் பார்த்த பின்புதான் மனம் சாந்தியாயிற்று.

இராஜராஜேஸ்வரம் கருவறையைச் சுற்றியமைந்த உள் சுவர்களில் சோழர்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மகத்தானதொரு விஷயம்தான். சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் காலத்தில் வேறு வகையான ஓவியங்கள் தீட்டப்பட்டு இராஜராஜன் காலத்து ஓவியங்கள் முழுவதுமாய் மறைக்கப்பட்டு விட்டன. இந்த நுற்றாண்டின் ஆரம்பத்தில்தான் இப்படி ஓவியங்கள் இருக்கின்றன என்பதே கண்டுபிடிக்கப்பட்டு நாயக்க ஓவியங்களை பாழாகாமல் விலக்கி சோழர்கால ஓவியங்கள் ஒருவாறு பல நூற்றாண்டுகளுக்குப்பின் வெளிச்சத்தைக் கண்டன.

இன்னும் எல்லா ஓவியங்களும் வெளிவந்தபாடில்லை - பல சுவற்களில் இன்னும் நாயக்க ஓவியங்களின் அடியில் சோழ ஓவியங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

ஓரளவுக்குதான் நம்மால் காப்பாற்றப்பட்டவற்றைப் பார்த்தாலே பிரமிப்பாயிருக்கிறது - முழு ஓவியங்களும் வெளியே வந்தால்.. அப்பப்பா!

காப்பாற்றப்பட்ட ஓவியங்கள் அமைந்திருப்பது முக்கியமாக கருவறையின் கிழக்கு மற்றும் தெற்கு உட்சுவற்றில்தான். மேற்குச் சுவர் ஓவியங்களை இன்னும் வெளிக்கொணர இயலவில்லை.ஓவியங்கள் - ஒரு உத்தேசமான லேஅவுட்

எல்லா ஓவியங்களும் படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பதுபோல் சுவற்றில் இரு தூண்களுக்கிடையில் அமைந்துள்ள சமமான பகுதியை சீர்செய்து வரையப்பட்டவை. பல நேரங்களில் ஓவியத்தின் சில பகுதிகள் தூண்களிலும் பாவி நிற்கின்றன.

ஓவியங்களின் சிறப்பு

குறிப்பிட்ட ஓவியங்களைப்பற்றி பேசுவதற்குமுன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

- ஓவியங்கள் சோழர்காலத்தவை - அதாவது கிட்டத்தட்ட யிரம் ண்டுகளுக்கு முற்பட்டவை

- வேறு எந்த இடத்திலும் சோழர்கால ஓவியங்கள் இத்தனை பத்திரமாய் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த ஒரு இடம்தான்.

- இந்த ஓவியங்களை தீட்டப் பயன்பட்ட வண்ணங்கள் கனிம வகையா(Minerals based) தாவர வகையா(Organic material) என்று உறுதியான முடிவிற்கு வரமுடியவில்லை. யிரம் ண்டுகளுக்குமேல் தாக்குப்பிடிக்கக்கூடிய அற்புத வண்ணங்களை உருவாக்கும் மார்க்கங்களை நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம்.

- ஓவியங்களுக்குமேல் நாயக்க ஓவியங்கள் மட்டும் தீட்டப்படாதிருந்தால் கிட்டத்தட்ட அஜந்தா அளவுக்கு பேசப்பட்டிருக்கும். னாலும் என்ன? கிடைக்கும் ஓவியங்களை வைத்தே அந்தக்கால கலைநுட்பங்களை நன்றாக உணர முடிகிறது.

- இருக்கும் ஓவியங்களில் பாதிக்குமேல் இன்னும் வெளியே கொண்டுவரமுடியவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். இதற்கான வழிமுறைகள் இல்லாமலா போய்விடும் ? யாராவது தீவிர முயற்சி எடுக்க வேண்டும் - அவ்வளவுதான்.

இந்த ஓவியங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருப்பவை உணர்ச்சிகள்! உணர்ச்சிகள்! உணர்ச்சிகள்தான்! மேலும் அந்தக்காலத்து நடை உடை, வாழ்க்கைமுறை, சமுதாயம் முதலியவற்றை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதால் வரலாற்றாய்வாளர்களுக்கு இவை புதையல் என்று சொன்னால் மிகையில்லை. நாம் சினிமா மற்றும் மீடியா முலம் அந்தக்காலத்தைப் பற்றி மனதில் கொண்டுள்ள பிம்பங்களை (Images) தகர்த்தெறிந்துவிடுகின்றன இந்த அற்புத ஓவியங்கள்.

இந்த ஓவியங்களைப்பற்றி மட்டும் பலப்பல முனைவர் ய்வு செய்யலாம் - அத்தனை விஷயங்கள் உள்ளன! இதில் ஒரே ஒரு ஓவியத்தைப் பற்றி மட்டும் டாக்டர் மற்றும் வரலாற்றுமைய ய்வாளர்கள் ஒரு புத்தகத்தையே எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !

தட்சிணமூர்த்தி ஓவியம்

முதலில் நாங்கள் கண்டது தட்சிணாமுர்த்தி ஓவியம்.

இந்த ஓவியத்திற்கு சற்று பாதிப்பு அதிகம்தான். குறிப்பாக ஓவியத்தின் மிக முக்கிய பாத்திரமான தட்சிணாமுர்த்தியே முகமே பாதிக்கப்பட்டிருப்பதால் ஓவியம் மனதில் அதிகம் பதியவில்லை.

வெண்தாடிமீசையுடன் காட்சியளிக்கிறார் தட்சிணாமூர்த்தி. ஏன் என்று கேட்டால் - மறையவராக வந்துதானே மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தார் இறைவன் ! என்று விளக்கமளித்தார் டாக்டரவர்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் காதை ஓவியம்

அடுத்து வருவது ஓவியங்களில் மிக முக்கியமான சுந்தரர் காதை.

தஞ்சை ஓவியங்களிலேயே மிக மிக நல்ல முறையில் காப்பாற்றப்பட்டு நமக்குக் கிடைக்கப் பெற்றிருப்பது இந்த ஓவியம்தான். இதில் மேற்பாதி ஓவியம் சற்று பாதிப்படைந்திருந்தாலும் கீழ்ப்பாதி மிக நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதால் ஓவியத்தை நன்கு இரசிக்கலாம்.

இந்த ஓவியத்தின் உத்தேசமான லே அவுட்டை கீழே கொடுத்திருக்கிறேன்.சுந்தரமூர்த்தி நாயனார் பேனல் - ஒரு உத்தேசமான லேஅவுட்

நான் கட்டம் கட்டமாகப் பிரித்துக் காண்பித்திருந்தாலும் உண்மையில் ஓவியம் ஒரு பகுதியுடன் மற்றொரு பகுதி பின்னிப் பிணைந்து அற்புதமான தொகுப்பாகத்தான் காட்சி அளிக்கிறது.

வாலிபன் சுந்தரமூர்த்திக்குத் திருமணம்.

திருமணம் என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது கல்யாணச் சாப்பாடுதானே ? அதோ - கமகமவென்று பெரிய பெரிய அடுப்புக்களில் வாசனை கமழ கல்யாண வீட்டுச் சமையல் களைகட்டிவிட்டதே !

அதோ - கோவணத்தை வரிந்து கட்டிக்கொண்டு பெண்களோடு ண்களுமல்லவா சமையலில் ஈடுபடுகிறார்கள் ! நன்று! நன்று !

ஒருத்தி விறகடுப்பில் பெரிய பானையில் ஏதோ ஒன்றைக் கிளறிக்கொண்டிருக்கிறாள் - ஒருவர் சமைத்த உணவை சிறு பாத்திரமொன்றில் ருசிபார்த்துக் கொண்டிருக்கிறார்..

பின்பக்கம் பெரிய பெரிய கைப்பிடிவைத்த பித்தளைப் பாத்திரங்களில் கறிகாய்வகைகள் வெந்துகொண்டிருக்கின்றன...

விதானத்தில் பட்டுத்துணி கட்டப்பட்டிருக்கிறது - ஓஹோ, துணிகட்டிய விதானத்தின் கீழ் அறுசுவைச் சமையல் நடக்கிறது போலும் !

எல்லாவற்றையும் நோக்க நோக்க வாயில் நீர் ஊறுகிறதே...

பந்திக்கு இன்னும் நேரமிருப்பதால் சற்று நகர்வோம்.

ஓவியத்தின் அடுத்த பகுதி.

சுந்தரமூர்த்தி தாலியைக் கட்டத் தயாராய் நிற்கிறான்...மணப்பெண்ணும் தயார்.

அடடா! இதென்ன? வெண்தலை வெண்தாடியுடன் ஒரு முதியவர் சபைக்குள் நுழைகிறார்... கையில் குடை. இடுப்பில் அரையாடை.மார்பின் குறுக்கே வெண் வஸ்திர யஞ்யோபவீதம் (முப்புரிநுல்).

கண்களில் நட்பில்லை. கையில் ஏதோ ஓலையை வேறு பிடித்திருக்¢றார்.

யாரிவர் ?

ஓலையை நீட்டி சுந்தரரை நோக்கி ஏதோ சொல்கிறார்.

சுந்தரர் முகத்தில் அதிர்ச்சி ! இருக்காதா பின்னே ?

ஆசை ஆசையாய் கல்யாணம் செய்துகொள்ள விழையும்போது எவனோ ஒரு கிழவன் சபைக்குள் நுழைந்து நீயும் உன் பரம்பரையும் எனக்கு அடிமையென்றால் ? கோபம் வரத்தானே செய்யும் ?

ஆனால் கிழவரைப் பாருங்கள் ! இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கிறார்போல் இல்லையே ?

அடுத்த காட்சி.

விசாரணை மன்றம் காண்பிக்கப்படுகிறது.

அந்நாளில் விசாரணைகள் கோயில் மண்டபங்களில் நடந்தன போலும் - அதைக் குறிக்க சபைக்கு மேல் மகர தோரணங்கள் காட்டப்படுகின்றன.

விசாரணை நடந்தும் ஊர்மன்ற நடுவிருக்கையாளர்களைப் பாருங்களேன் - எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி கலந்த ச்சரியம்! அடப்பாவி ! நம்ம சுந்தரன் கடைசியில் ஒரு அசலூர்க்காரனுக்கு அடிமை போலிருக்கிறதே ? இவனுக்குப்போய் நம்ம ஊர்ப் பெண்ணைக் கொடுக்க இருந்தோமே ?

அதில் ஓரிருவர் தன் பக்கத்திலிருப்பவர்களுடன் கூடிக் கூடிக் பேசுவதையும் கவனியுங்கள் - அடடா ! அந்தக்கால நிதிமன்றம் அப்படியே கண்முன் பொங்கி நிற்கிறதே !

பஞ்சாயத்தார் நீதிநூல் கற்றவர்கள் என்பதைக் குறிக்க அனைவரின் கைகளிலும் ஓலைச் சுவடி.

அதில் தலைவரைப்போன்று தெரியும் முதியவர்தான் வாதி - பிரதிவாதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

கிழவர் ஓலையைப் பிடித்திருக்கும் கரத்தை நீட்டி நீட்டிப் பேசுவதைப் பாருங்கள் ! கண்களில் கோபம் வேறு !

( இந்த ஓலையில் அப்படி நுணுக்கி நுணுக்கி என்னதான் எழுதியிருக்கிறது என்பதைப் படித்துப் பார்த்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருந்த டாக்டர் நளினி, ஹேண்டிகேமின் பெரிதுபடுத்திப் பார்க்கும் வசதியுடன் ஒருவழியாக எழுத்துக்களை படித்தே விட்டார்! அதில் எழுதியிருப்பது - "இப்படிக்கு முவேந்த வேளான்" - அதாவது ஓலையின் கடைசி கையெழுத்து ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது.)

மழித்த முகத்துடனும் பச்சை அரையாடையுடனும் சுந்தரன் செய்வதறியாமல் கைகளைப் பிசைந்து நிற்கிறான். எதிர்காலமே அவன் கண்முன் சுற்றிச் சுழல்கிறது.

கடைசியில் நாம் போயும் போயும் ஒரு அடிமையா ? அதுவும் இந்தக் கிழவனிடமா ? சிவ சிவா !

அடுத்த காட்சிக்கு நகர்கிறோம்.

கிழவரை சுந்தரன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். கிழவரோ அங்குமிங்கும் போக்குக்காட்டிவிட்டு திருவெண்ணைநல்லூர் கோயிலில் கருவறையில் மறைந்துவிடுகிறார்.

இந்தக் காட்சி விளக்கப்பட்டிருக்கும் பகுதி சற்று பாதிக்கப்பட்டிருப்பதால் தெளிவாக எதையும் இரசிக்க முடியவில்லை. என்றாலும் "சுந்தரா ! எனை மறந்தாயோ ?" என்கிற அதட்டலும் அதனைத் தொடர்ந்து " பித்தா ! பிறைசூடி பெருமானே !" என்ற புலம்பலும் காதுகளில் வந்து விழுகின்றன.

கனத்த மனத்துடன் நகர்கிறோம்.

திருவஞ்சிக்களம்.

சேர நாட்டில் அமைந்துள்ள சைவத்திருத்தலம்.

இங்கிருந்துதான் சுந்தரர் வானுலகம் ஏறிப்போக அவர் பிரிவை தாங்கவொண்ணாத சேரமான் பெருமாளும் வானுலகம் செல்கிறார்.

அதோ ! வஞ்சிக்களக் கோயில் மிக நன்றாகவே தெரிகிறது ! கூர்ந்து நோக்குங்கால் கோயிலினுள் நடராஜரும் உமையும் தெரிகின்றனர். கோயிலுக்கருகில் சுந்தரர் அமர்ந்திருக்கிறார்.

அடுத்த முக்கியமான காட்சி. இந்தக் காட்சிதான் பார்வையாளர் மட்டத்திலிருந்து சுவர் முழுவதையும் அடைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே ஓவியன் இந்தக் காட்சியைத்தான் பிரதானப் படுத்திக்காட்ட முயன்றுள்ளான் என்பது திண்ணம்.

அதென்ன காட்சி ?

கையிலாயத்திலிருந்து சுந்தரரை அழைத்துச்செல்ல இந்திரனின் ஐராவதம் வந்திறங்கியுள்ளது. அடடா ! அந்த தேவ கஜம் என்ன அழகு! தெய்விக யானை என்பதைக் குறிப்பிட று தந்தங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. உடம்பெங்கும் பொன்னாபரணங்கள், தந்தங்களில் தங்கப் பூண்கள்.

யானைமீது சுந்தரர் ஏறி அமர - அது வான வெளியில் பறக்கிறது ! ஓ ! இப்போதுதான் கவனிக்கிறோம் ! வாலிப சுந்தரனுக்கு சற்று வயதாகி விட்டபடியால் தாடி மீசையெல்லாம் வளர்ந்துள்ளதே ! அந்த தாடியைக்கூட ஓவியன் எத்தனை மெல்லிய கோடுகளால் (Fine strokes) சித்தரித்திருக்கிறான் பாருங்கள் !

இருகால்களையும் ஒருபக்கம் வைத்து கைகளில் எதையோ தாங்கி (ஜால்ரா போல் தெரிகிறது) அமைதியான முகத்துடன் சுந்தரர்.

கீழே இதென்ன ? அலை புரள மீன்கள் அசைய - ஓஹோ ! கஜேந்திரன் கடலைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறான் போலிருக்கிறது !

வானுலகத்தில் - அதோ ! மேகங்களுக்கு நடுவே வானவர்களும் தேவர்களும் அரம்பையர்களும் கிம்புரு கின்னரர்களும் தெரிகின்றனர்.. அவர்களெல்லாம் ஏதோ நடனமாடிக் கொண்டிருக்கிறார்களே ! கைகளில் ஏதோ முத்திரை காட்டுகிறார்போல் தெரிகிறது ?

ஓ - இப்போது புரிகிறது ! அவர்களெல்லோரும் சுந்தரரை வரவேற்கின்றனர் போலும் !

அப்ஸரஸ்களில் சிலர் கைகளில் தாமரை மலர் ஏந்தியிருக்கின்றனர் - சிலர் ஏதோ வாத்தியத்தை முழக்கிக் கொண்டிருக்கின்றனர்.

எங்கும் மங்கல ஓலி கேட்க சுந்தரர் வானுலகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார்.

அட ! யானைக்கு முன் புரவி வந்துவிட்டதா ? ஓ ! இவர்தான் சேரமான் பெருமாள் நாயனார் போலும் சுந்தரர் பிரிவை தாங்கமாட்டாமல் அவருக்கு முன்னரே குதிரையில் சென்றுகொண்டிருக்கிறாரே ?

குதிரை பொன் சேணங்கள் பூட்டப்பட்டு தலை குனிந்து முன்கால்களை தூக்கிய நிலையில் பறந்துகொண்டிருக்கிறது...

சேரமான் ஏதோ அங்குசம் போல் தோன்றும் ஒன்றை கைகளில் ஏந்தியிருக்கிறார். ஐராவதம் முன் அதை நீட்டியிருப்பதைப் பார்த்தால் அதனை அங்குசமென்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

சற்று மேலே அண்ணாந்து பார்க்கிறோம்.

திருக்கயிலாயக் காட்சி.

சிவபெருமான் மந்தஹாஸப் புன்னகையுடன் கால்களை மடக்கி அமர்ந்திருக்கிறார். கைகளை மிக இயல்பாக மடக்கிய கால்களுக்குமேல் படரவிட்டிருக்கிறார்.

அருகில் உமையும் அவள் கீழ் நந்தி தேவரும் தெரிகிறார்கள். உமையின் கண்களில் ச்சரியம் - உதடுகளில் புன்னகை.

இந்தக் காட்சிகளையெல்லாம் இன்னும் இரசிக்க சுந்தரரின் திருக் கயிலாயப் பதிகங்களைப் படிக்கவேண்டும். அந்தப் பதிகங்களைப் படித்தால்தான் அவை காட்டும் காட்சிகளை எப்படித் தத்ரூபமாய் ஓவியன் வரைந்து வைத்திருக்கிறான் என்பது தெரியும்.

உதாரணமாக சுந்தரர் கையிலாயம் வந்து சேர்ந்தவுடன் யாரோ ஒருவர் "இவர் யார் ?" என்று சிவபெருமானை வினவ, அவர் "இவன் நம் பையன் !" (இவரு நம்மாளுப்பா ! என்று சொல்கிறோமே - அதேதான் !) என்று பெருமிதத்தோடு சொல்கிறாராம்.

ஏனெனில் சுந்தரரே கையிலாயத்திலிருந்து புமியில் பிறப்பெடுத்த நம்பியாரூரர்தானே ?

இந்தக் காட்சியைத்தான் ஓவியன் தீட்டியிருக்கிறான். அதனால்தான் சிவ வதனத்தில் அப்படியொரு மந்தகாசம். இப்போது புரிகிறதா ?

இதற்கும் மேலே தீட்டப்பட்ட ஓவியங்கள் சிதைந்துள்ளன. வெளிச்சமும் அதிகம் தெரியவில்லையாதலால் சரிவர பார்க்கமுடியவில்லை. மேலே உள்ளது சோமாஸ்கந்த வடிவமாக இருக்கலாம் என்றார் டாக்டர்.

நடராஜர் வழிபாடு ஓவியம்

அடுத்து வருவது நடராஜர் வழிபாட்டு ஓவியம்.

மிக உயரமாயும் அகலமாயும் சுவர் முழுக்கப் பாவிநிற்கும் நடராஜர். முகத்தில் லேசான புன்னகை.

அவரது ட்டத்திற்கேற்றவாறு புலித்தோல் காற்றில் படபடக்கிறது - கழுத்திலிருக்கும் அரவம் கைகளுக்குக் கீழ் தொங்குகிறது. மார்பின் கீழ் நாகபாசம் தெரிகிறது.

நடராஜர் தலைக்குமேல் பொற்கூரை. தில்லைச் சிற்றம்பலம்தானே ? என்றால் உறுதியாகக் கூறுவதற்கில்லையென்றார் டாக்டர்.

இவரை வழிபடுபவர்கள்தான் கவனிக்கவேண்டியவர்கள்.

ஓவியத்தில் தாடியும் கொண்டையும் வைத்த ஒருவரும் அவரது மூன்று தேவியரும் பிரதானமாய்க் காட்டப்பட்டிருக்கிறார்கள். இது இராஜராஜ சோழனேதான் என்று ஒரு சாரார் கற்பூரமடித்து சத்தியம் செய்கிறார்கள். னால் டாக்டர் ஒப்புக்கொள்ளவில்லை.

கொண்டை தாடி சாமிக்கு உடலில் எந்தவிதமான நகைகளும் இல்லை. இடையில்கூட மிக எளிமையான வெள்ளாடைதான். கட்டுமஸ்தான உருவம்.

கூடநிற்கும் தேவியர்க்கும் இடுப்பிற்கு மேல் துணியில்லை. இடுப்புக்குக் கீழும் மிக மெல்லிய டையே உடுத்தியுள்ளனர். இடுப்பில் மேகலை போன்றதொரு பரணம் தெரிகின்றது. கழுத்து நிறைய முத்து மாலைகள். முகத்தில் இராஜகளை.

இந்த உருவங்களை சுற்றி பல்வேறு டவரும் பெண்டிரும் சிறிய அளவில் காண்பிக்கப்படுகிறார்கள். எல்லோரும் அந்தக் காலத்திய உடையமைப்பில் தோன்றுவது தனிச்சிறப்பு !

ஆடவர்களில் படைவீரர்கள் மட்டும்தான் சட்டை அணிந்திருக்கிறார்கள். அந்நாளில் இதற்கு மெய்ப்பை என்று பெயர். கையில் வேல், இடையில் குறுவாள் இவர்களுக்குக் கட்டாயம் உண்டு.

மற்ற ஆண்கள் அனைவருமே ஏறக்குறைய அரையாடைதான்!

முப்புரி நூலணிந்த மறையவர்களில் பலருக்கு வெண்தாடி மீசையுண்டு.

பெண்கள் இடுப்பிற்குக் கீழ் தொடையை ஒட்டிவரும் டை உடுத்தியள்ளார்கள்.

குருவும் சீடனும் ஓவியம்

அடுத்து வருவது பெரியகோயில் ஓவியங்களிலேயே மிக மிகப் பிரபலமான குரு சீடன் ஓவியம்.இவர்களா இராஜராஜனும் கருவூர்த்தேவரும் ?

அதிக டை அணியலங்காரம் இல்லாமல் சடாமுடியுடனும் வித்தியாசமான குறுந்தாடியுடனும் குரு. விரிசடை சற்று பின்னே வழிகிறது.

கண்களில் கருணை. சற்றே வளைந்த புருவங்கள்.

வலக்கை கமண்டலத்தை ஏந்தியிருக்க இடக்கை ஏதோ முத்திரையைக் காட்டுகிறது.

இவரா திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் ?

அவரது அருகில் கருணையே வடிவாக ஜடாமகுடதாரியாய் ஒரு இளைஞன். விரிசடை மிக அதிகமாகவே இவனுக்குப் புரள்கிறது - இளைஞனல்லவா ?

மார்பில் பொன்னாபரணங்கள்.

ஒருகரம் சின்முத்திரை காட்டுவதுபோல் தெரிகிறது.

முழு உடலும் குருவுக்குப் பின் மரியாதையோடு மறைந்து தெரிகிறது.

இவனா பேரரசன் இராஜராஜசோழன் ?

இல்லையென்பது டாக்டரவர்கள் வாதம். அரசன் மணிமுடியின்றி வெளியே வரவே மாட்டான் என்பதிலிருந்து பல காரணங்களை அவர் அடுக்கினார். அவற்றை இங்கே விவரிப்பது சாத்தியமில்லை.

எல்லோருடைய கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்த்து நடுநிலைமையோடு அலசி ராய்ந்து - அவர்கள் இராஜராஜன் கருவூர்த்தேவராகவும் இருக்கலாம், அல்லது சனகாதி முனிவர் சனத்குமாரராகவும் இருக்கலாம், அல்லது வேறு எவராகவேனும்கூட இருக்கலாம் என்கிற நமது அதி அற்புதமான புதிய ய்வு முடிவை முன்வைத்து மேலே செல்வோம்.

திரிபுரசம்ஹார ஓவியம்

திரிபுர அசுரர்களை அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு படையெடுத்து வருகிறார் சிவபெருமான்.

அவருக்குத் துணையாய் கைலாயமே உடன்வருகிறது !

எல்லோருக்கும் முன்னால் மூஷிகத்தின்மேல் கணபதி பாய்ந்து வருகிறார்.

மேலே சக்தி சிங்கத்தின் மேலும், குமரன் மயில் மேலும் யுதங்களுடன் அசுரர்களைத்தாக்க வருகிறார்கள்.

நான்முகன் சாரதியாய் அமர்ந்த இரதத்தில் ரெளத்திரமே வடிவாக மிகப்பெரிய சிவபெருமான். வில்லினை வளைத்து நாணேற்றும் நிலையில் ஒரு காலை இரதத்தில் வைத்து மறுகாலை மடித்து வேசம் பொங்கக் காட்சியளிக்கிறார்.

அதோ ! அவரை மூர்க்கத்தோடு தாக்கும் அசுர கணங்கள் ! அவற்றின் கண்களில் என்ன கோபம்... என்ன வெறி !

கையில் கிடைத்ததை தூக்கி எறிகின்றன போலும் - ஒன்று கைகள் நிறைய கற்களை நிரப்பி வைத்துக் கொண்டுள்ளது பாருங்கள் !

மற்றொன்று அம்பு பாய்ந்து கீழே இறந்து கிடக்கிறது... அசுர கணங்களுக்கு நடுவே, யாரது ?

அடடா ! ஒரு பெண் கணம் போலும்...

கண்களில் என்ன அப்படியொரு கெஞ்சல் ? ஓஹோ ! சிவபிரானுடன் போருக்குச் சென்று அழியாதே என்று கெஞ்சுகிறது போலும் ! அடடா ! பார்வையில் என்ன ஒரு குழைவு ! கைகளில் என்ன ஒரு பரிவு ! அக்காலத்தில் போருக்குக் கிளம்பும்போது இம்மாதிரியான காட்சிகளை ஓவியன் அடிக்கடி கண்டிருப்பான் போலும்.. அதனை அப்படியே வடித்துவிட்டான் !

அவள் அப்படிக் கெஞ்சுவதை அந்த அசுர கணம் ஒரு பொருட்டாய் மதிக்க வேண்டுமே ? ம்ஹூம் ! அதற்கு மேலும் வெறிதான் மிஞ்சுகிறது !

இந்த ஓவியத்தில் வார்த்தைகளுக்குச் சிக்காத ஒரு பேருவகை ஒளிந்துகொண்டிருக்கிறது.

அதாவது சிவபெருமான் கையிலாயத்திலிருந்து கிளம்பும்போது எல்லா தேவ தேவியரும் உடன் கிளம்பினர் என்பதைக் கண்டோமல்லவா ? இந்த தெய்வங்களுக்கெல்லாம் கொஞ்சம்போல ணவம் வந்ததாம் ! அதாவது - அண்ட சராசரங்களையும் உள்ளடக்கும் சிவபெருமானாக இருந்தாலும் அவருக்கும் நமது உதவி தேவைப்படுகிறதுபார் - என்ற ணவம்.

பெருமான் இதை உணர்ந்தார். தோளிலிருந்து வில்லை எடுத்தார் - ஆனால் நாண் இழுத்து அம்பு பூட்டவில்லை. அப்படியே கைகளை மடக்கி ஒரு கணம் ஆணவத்துடன் தன்னைச் சுற்றி நிற்கும் தேவதைகளைப் பார்த்தார்.

மறு கணம் கண்களில் சினம் பொங்க திரிபுர அசுரக் கூட்டங்களை நோக்கி ஒரே ஒரு மந்தகாசம் புரிந்தார்.

ஒரே ஒரு மந்தகாசம் - அவ்வளவுதான் ! அசுரக் கும்பல்கள் அனைத்தும் பஸ்பமாகி விழுந்தன !

இந்த முக்கியமான கணம் - பெருமான் கண்களில் சினத்துடன் மந்தகாசம் புரியும் காட்சிதான் ஓவியத்தில் காவியமாக தீட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் கண்களில் பொங்கும் சினத்தையும் அதே சமயம் முகத்தில் விரியும் மந்தகாசத்தையும் ஓவியன் எவ்வாறு தீட்டியுள்ளான் என்பதை விளக்குவது சாத்தியமில்லை. அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால் விட்டுவிடுவோம்.

ஓவியங்கள் தவிர சில அற்புத சிற்பங்களும் சாந்தாரத்தில் உண்டு. சந்தியா நிருத்த மூர்த்தி, மனோன்மணி என்று எல்லாமே மிகப்பெரிய சிற்பங்கள்.

கருவரைக் காவலர்

மிகுந்த நேரமாகிவிட்டபடியால் தளங்களின்மேல் ஏறுவது என்று முடிவாயிற்று.

பிரியவே மனமில்லாமல் ஓவியங்களைப் பிரிந்தோம்.

தளத்திற்கு மேல் ஏறுகையில் கருவறை முன் வாயில் காவலரை காண நேரிட்டது.

ஒரு யானை.. அந்த யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது.

அப்படியென்றால் அந்தப் பாம்பு எத்தனை பெரிதாயிருக்க வேண்டும் ?

அந்தப் பாம்மை வாயில் காவலன் ஒரு கரத்தில் தரித்திருக்கிறானென்றால் அவன் எத்தனை பெரியவனாயிருக்க வேண்டும் ?

அவனே தன் கைகளால் வியந்து எத்தனை பெரியவர் என்று விஸ்மயம் என்று சொல்லப்படும் வியப்பு முத்திரையைக் காட்டி நிற்கிறானென்றால் அந்த தட்சிண மேரு விடங்கரான இராஜராஜ சோழீச்சுரமுடையார் எத்தனை எத்தனை பெரியவராயிருக்க வேண்டும் ?

அம்மாடி ! நினைக்கவே பிரம்மாண்டமாய் இல்லை ?

மிக மிகப் பெரியவர் என்பதை வெறும் அளவில் மட்டும் காட்டாமல் வாயில் காவலன் தரித்திருக்கும் ஒரு சர்ப்பத்தின் வாயிலாக பூடகமாக (Symbolic) சொல்லப்பட்ட மேன்மையை என்னென்பது ?

இதனை உருவகப் படுத்தும் பதிகம் சம்மந்தர் பாடலில் உண்டாமே ?

தளங்களின் மேலே

படிகளின் வழியாக முதல் தளத்தை அடைந்தோம்.

இங்குதான் நாட்டியத்தின் 108 கரணங்களை நடராஜரே டிக் காட்டுவதுபோல் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.கரணங்களை டிக்காட்டும் சிவபெருமான்

82 கரணங்கள் மட்டுமே செதுக்கப்பட்ட நிலையில் சிற்பவேலை கைவிடப்பட்டுவிட்டது. காரணம் புலப்படவில்லை.

(பெரியகோயிலே ஒரு முற்றுப்பெறாத காவியம். கிட்டத்தட்ட 52 இடங்களில் வேலை முழுமையடையவில்லையென்று தெரிவித்தார் டாக்டர்)

இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் முதலில் கற்கள் கொண்டுவந்து பதிக்கப்பட்டு அதற்குப்பின்தான் சிற்ப வேலைகளே துவங்கியிருக்கின்றன ! முற்றுப்பெறாத கற்கள் பதிக்கப்பட்டிருப்பதே அதற்கு சாட்சி !

விமான உள் அமைப்பு

விமானத்தின் உள் அமைப்பு மிக அபுர்வமானது. நேர்த்தியானது.

முதலில் செவ்வகமாகவும் (Square) , மேலே செல்லச் செல்ல வட்ட வடிவமாகவும் (Circular) செல்லும் தன்மையுடையது.

இதனை சரியாகக் கவனிக்க வேண்டுமானால் படுத்திருந்து பார்த்தால்தான் முடியும் என்று டாக்டர் சொல்ல, அனைவரும் தரையில் படுத்துப் புரண்டோம். இராஜராஜனும், குந்தவையும் மற்ற சோழதேசத்துப் பெருமக்களும் நடந்த பூமியல்லவா ? அதனால் சற்று சந்தோஷமாகவே புரண்டோம்.விமான உள் அமைப்பு

இந்த விமானத்தின் மொத்த உள் இடத்தையும் பார்த்தால் ஏறக்குறைய லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும். (The empty space within the Vimana resembles a Linga structure)

இதையும் ஒரு காச லிங்கமெனக் கருதி மன்னன் வழிபட்டான் என்பது டாக்டர். குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் கருதுகிறார். (பார்க்க - தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்பிரமணியம்)

முடிவுரையாத்திரை முடிந்த நிலையில் விமானத் தளத்தின்மேல்.. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஒருவழியாய் ஓய்ந்துபோய் மங்கிய மாலை வெளிச்சத்தில் தளத்தில் அமர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் தர இயலாது.

ஒரு மகத்தான மன்னனும் அவனது காலம் கடந்த சிருஷ்டியும் மனதை மொத்தமாய் க்கிரமித்துக் கொண்டன. எல்லோர் மனதும் இனம் புரியாததொரு நிறைவால் சூழப்பட்டிருந்தது.

நாங்கள் அனைவரும் மிக நெருக்கமானதொரு நட்பின் வட்டத்தில் சிக்கியிருந்ததை உணர்ந்தோம். தமிழ் உலகமே போற்றும் மிகப் பெரிய ஆய்வாளர்கள் - வரலாற்றில் முதல் அடியைக்கூட எடுத்து வைக்காத மாணவர்கள் என்கிற பேதமெல்லாம் மறைந்தே போனது. உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன் - என்னையும் உன்னிலிட்டேன் என்றொரு நம்மாழ்வார் பாசுரம் வருமே ? அதுபோன்று வர்ணிக்கவேண்டியதொரு அற்புத சங்கமம் அது.

அந்த இடத்திற்கு முந்திய பல பிறவிகளில் அங்கு கூடியிருந்த அத்தனை பேருமே வந்திருந்தது போலவும் இன்னும் வரப்போகும் பல பிறவிகளிலும்கூட அதே போன்று கூட்டமாய் வருவோம் என்பது போலவும் எண்ணம் ஓடியது.

வார்த்தை நிலைகடந்த அந்த பேருணர்வை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதேயொழியச் சரிவரச் சொல்ல இயலவில்லை.

தட்சிணமேரு விமானத்தில் மிக நெருக்கமான தூரத்தில் கையிலாயக் காட்சி தெரிந்தது...

அம்மையும் அப்பரும் தெரிந்தார்கள்...

அதற்கு மேல் விமானம் தெரிந்தது... விமானத்தின் நந்திகள் தெரிந்தன...

விமானத்தின் மேல் அமைந்த பொற்கலசம் மங்கிய இருளில் தகதகத்தது...

அந்தக் கலசத்துக்கு நேர் மேலே, வானில் தன்னந்தனியாய் மெல்லியதொரு நட்சத்திரம் சுடர்விட்டு பிரகாசித்தது.

அது உடையார் ஸ்ர் இராஜராஜ சோழ தேவராகவே இருக்கக்கூடும் - அவர்தான் எங்களை தாரகை வடிவில் வந்து சீர்வதிக்கிறார் என்று மனதில் பட்ட அந்தக் கணத்தில் -

ஆலயத்தின் சந்தி கால புஜைமணி "ஓம்!" "ஓம்!" என்று மும்முறை சப்தித்து ஓய்ந்தது.

நன்றி -

டாக்டர்.இரா.கலைக்கோவன், மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம், திருச்சி
டாக்டர்.மு.நளினி, மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம், திருச்சி
திரு.சுந்தர் பரத்வாஜ், Baycity Developers, Chennai
Archaeological Survey of India (ASI)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.