http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 3

இதழ் 3
[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தலையங்கம்
மத்தவிலாச அங்கதம் - 1
வாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...
கதை 2 - காரி நங்கை
வாருணிக்குக் கலைக்கோவன்
என்றைக்கு விழிப்பது?
கட்டடக்கலை ஆய்வு - 3
கல்வெட்டாய்வு - 2
வல்லமை தாராயோ?
கருங்கல்லில் ஒரு காவியம் - 3
சங்கச்சாரல் - 3
கோச்செங்கணான் யார் - 1
இதழ் எண். 3 > கலையும் ஆய்வும்
என்றைக்கு விழிப்பது?
மு. நளினி

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களிலும் பிற இடங்களிலுமாய்க் காணக்கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளில் ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு கல்வெட்டுகளே இதுநாள்வரையிலும் படியெடுக்கப்பட்டுள்ளன. படியெடுக்கப்பெற்ற இவ்வைம்பது விழுக்காடு கல்வெட்டுகளுள் ஐந்து விழுக்காடு கல்வெட்டுகளுக்கே முழுமையான பாடங்கள் கிடைத்துள்ளன. எஞ்சிய நாற்பத்தைந்து விழுக்காடு கல்வெட்டுகளுக்கு அவற்றின் திரண்ட கருத்தாகப் படியெடுத்தவரும் பதிப்பித்தவரும் கருதிய தரவே, 'சுருக்கம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இத்துன்பமான பின்புலத்தில்தான், கிடைத்திருக்கும் ஐந்து விழுக்காட்டுத் தரவுத் திரட்சி கொண்டுதான் தமிநாட்டின் வரலாறு அவரவர் நோக்கிற்கும் விழைவிற்கும் திறனுக்குமேற்ப கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வந்துள்ளன; வந்து கொண்டிருக்கின்றன.

திருச்சிராப்பள்ளியில் இயங்கிவரும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாறாய்வு மையம் இவ்வவலநிலையைப் போக்க, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலையும் முழுமையாக ஆய்வுசெய்து, அக்கோயிலிருக்கும் ஊர் சார்ந்த வரலாற்றைக் கல்வெட்டுகள், கட்டடக்கலை கொண்டு மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுவருகிறது. இதுநாள்வரையிலும் ஏறத்தாழ ஐம்பது கோயில்கள் நிறைவான நிலையில் ஆராயப்பட்டுள்ளன. இந்த அநுபவப் பின்புலத்தில், திருச்செந்துறையின் சமுதாய வரலாற்றைத் தமிழ்நாட்டுச் சமுதாய வரலாற்றுப் பானையின் ஒரு சோறாகப் பதம் பார்ப்போம்.

திருச்செந்துறை
திருச்சிராபள்ளி குழித்தலைச் (குழித்தண்டலை) சாலையில், சிராப்பள்ளியிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் தென்கரையில் அம்நிதுள்ள சிற்றூரே திருச்செந்துறை. ஏறத்தாழ மூவாயிரம் பேர் வாழும் இச்சிற்றூர் வரலாற்று வெளிச்சத்திற்கு வருவது கி.பி. 883ல்தான். ஐம்பத்திரண்டு கல்வெட்டுகளால் தன் வரலாற்றை முன்வைக்கும் இவ்வூர், சோழர் காலத்திற்கு முன் எப்படியிருந்தது என்பதை அறிய இவ்வூரிலோ, இதன் சுற்றுப்புறங்களிலோ கல்வெட்டுச் சான்றுகளில்லை. சோழர்களின் தொடக்கக் காலத்திலேயே குறிப்பிடத்தக்க ஓர் ஊராகக் காட்சிதரும் திருச்செந்துறை, உறையூர்க் கூற்றத்தின் ஓர் அங்கமாக விளங்கிய ஈசானமங்கலம் எனும் பிரமதேயத்தின் ஆட்சிக்குட்பட்ட சிற்றூராகவே நெடுங்காலம் இருந்தது. இச்சிற்றூரின் ஆவணங்கள் எவற்றிலும் இவ்வூர் தனியாட்சி பெற்றிருந்தமைக்கான சான்றுகளைப் பெறமுடியவில்லை.

மக்கள்
பிரமதேய மகாசபையின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த திருச்செந்துறையில், ஊர் நடவடிக்கைகளை சபை கவனிக்க, கோயிற் செயற்பாடுகளை மூலபருடையார் என்ற குழு மேற்கொண்டது. கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகளை நோக்க, இவ்விரு குழுக்களிலும் பிராமணர்களே உறுப்பினர்களாயிருந்தமையை அறியமுடிகிறது. சோழப் பேரரசுக்குட்பட்ட கொடும்பாளூர் வேளிர்குல அரசர்களின் பரவலான அரவணைப்பிலிருந்த இவ்வூரில் வாச்சியன், சாவந்தி, காசியப்பன், மொகிலியன், பாரதாயன் போன்ற கோத்திரங்களைச் சேர்ந்த பிராமணர்களையடுத்து வேளாளர்களே மிக்கிருந்தனர். கல்வெட்டுகளில் கிடைக்கும் ஆள் பெயர்களில் இந்த விழுக்காட்டளவிற்குக்கூட நல்ல தமிழ்ப்பெயர்கள் இல்லாமை குறிப்பிடத்தக்கது. சொக்கன், முருகன், சீராளன், ஐயன், பெருமாள், சடையன், கலிச்சி, பொக்கி எனும் பெயர்கள் ஆராயத்தக்கன. பாண்டியர்களைக் குரிப்பதாகக் கருப்படும் 'தென்னவன்' என்ற சொல் வேளிர் அரசருடைய முதற்பெயராகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவர் பெயரின் முன்னும் அவரவர் ஊர்ப்பெயர்கள் முன்னொட்டுக்களாக இடம்பெற்றுள்ளமை அவ்வவ்வூரில் அவரவர்கட்குள்ள நில உரிமையைக் குறிப்பதாகும்.

கல்வி
எத்தகு கல்விமுறை வழக்கிலிருந்தது என்பதறிய நேரடிச் சான்றுகளில்லை என்றாலும் சபை உறுப்பினர்களாக 'வேதக் கல்வி' அடைப்படைத் தேவையாக இருந்தமையால், வேதம் பயின்ற பிராமணர்கள் ஈசானமங்கலத்தில் மிக்கிருந்ததாகக் கொள்ளலாம். எந்தவொரு கல்வெட்டிலும் கையெழுத்தாளர்கள் தற்குறிகளாகச் சுட்டப்படாமையின், ஈசானமங்கல சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தமை கண்ட்கூடு. நிலவிற்பனை ஆவணங்கள் அமைக்கப்பட்டிருக்கும் முறை, சட்டம் பற்றீய அவர்தம் தெளிவான அறிவிற்கு எடுத்துக்காட்டாக அமிந்துள்ளது. பாடல் வடிவத்தில் கிடைக்கும் கல்வெட்டால், தமிழில் பாடலியற்றூம் ஆற்றலுடைய புலவர் பெருமக்கள் ஓரிருவரேனும் இவ்வூர்ப்பகுதியில் சோழர் காலத்தில் இருந்தமையை அறியமுடிகிறது. ஆவணங்களில் குறிப்பிடப்பெற்றுள்ள நுண்மையான நில அளவுகள், மக்களின் கணக்கியல் அறிவுக்குச் சான்றாகின்றன. நிர்வாக இயலில் அவர்கட்க்குத் தேர்ச்சியிருந்தமையை அவ்வூரிலிருந்து கிடைத்திருக்கும் ஐம்பத்திரண்டு கல்வெட்டுகளுமே மெய்ப்பிக்கின்றன.

வேளான்மை
மக்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது வேளாண்மை. வேளாண் பொருளாதாரம் சார்ந்த அரசாஅகவே சோழப் பேரரசு விளங்கியது. விளைநிலங்கள் அனைத்தும் நன்செய், புன்செய் எனப் பாசனம், பயிர்விளை திறனுக்கேற்ப பாகுபாடு செய்யப்பட்டுத் தரமறியப்பட்டன. இத்தரத்திற்கேற்பவே வரியினங்கள் அமைந்தன. நிலங்கள் அனைத்தும் துல்லியமாக அளக்கப்பட்டு, எல்லைகள் குறிக்கப்பட்டு, உரிமையாளர் பெயர்களுடன் புத்தகப் பதிவாயின. இறைக் கோயிலுக்குப் பல்வேறு காரனங்களுக்காக கொடையளிக்கப்பட்ட நிலங்கள் 'தேவதானம்' என்ற பெயரில் வழங்கப்பெற்றன.

நில அளவைகள்
திருச்செந்துறைப் பகுதியில் நிலங்களை அளக்க இரண்டு நீட்டளவைகள் பயன்படுத்தப்பட்டன. இவையிரண்டுமே இங்குள்ள சிவன் கோயிலின் விமானம், முகமண்டபம் ஆகியவற்றின் தென்புறத்தே கல்வெட்டுப் பொறிப்புகளுடன் காட்டப்பட்டுள்ளன. 'குழிக்கோல்' என்று குறிப்பிடப்பட்டுள்ள சிறிய அளவுகோல், 90 செ.மீ. நீளமுடையதாக விமானத்திலும் 4மீ. நீளமுடைய அளவுகோல், 'நிலமளந்த கோல்' என்ற பெயருடன் அர்த்தமண்டபத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. திருச்செந்துறைக்கு மேற்கிலுள்ள அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயிலில் காணப்படும் முதல் ராஜராஜரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், இப்பகுதியில் நிலமளக்கப் பயன்பட்ட பெருங்கோலாக இக்கோல் குறிக்கப்பட்டுள்லமை இதன் சிறப்பையும் பயன்பாட்டையும் உணர்த்தவல்லதாகும்.

கொடை நிலங்கள்
பல்வேறு காரனங்களுக்காகக் கொடையளிக்கப்பட்ட நிலத்துண்டுகள் அவ்வகாரணங்களின் பெயர்களாலேயே வழங்கப்பட்டன. கோயிலின் முதன்மைத் தெய்வத்தைப் பூசித்த சிவயோகியர்க்கு வழங்கப்பட்ட நிலம் சாந்திப்புறமெனப்பட்டது. சாலையொன்றைத் தொடங்குவதற்காகத் தரப்பட்ட நிலம் சாலாபோகம் என்று பெயரேற்றது. கூட்டஙக்ள் நிகழ்த்தவும், ஊர் சபை கூடவும் பயன்பட்ட 'அம்பலம்' எனும் பொதுவிடத்தை எழுப்பவும் நிர்வகிக்கவும் தரப்பட்ட நிலத்துண்டு அம்பலப்புறமாகியது. இறைவழிபாட்டிற்கும் பூசனைக்கும் தரப்பட்ட நிலப்பகுதிகள் சில, சுவாமி போகம், தேவர்ப்புறமென்று அழைக்கப்பட்டன.

திருவிழாக்களைச் செம்மையாக நிகழ்த்துவதற்காகவென்றே ஒதுக்கப்பட்ட நிலத்துண்டுகள் திருவிழாப்புறங்களாக, கோயில் வாழ் இசைக்கலைஞர்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்துண்டு உவச்சப்புறமாக அறியப்பட்டது. கல்வெட்டுகளில் மிக அரிதாகக் குறிக்கப்பெறும் தோலிசைக் கருவிகளுள் ஒன்று தட்டழி. இதைத் தட்டளியென்றும் சில கல்வெட்டுகள் சுட்டுகின்றன. திருச்செந்துறைக் கோயிலில் தட்டழி கொட்டி வாழ்ந்த கலைங்ஜருக்குத் தரப்பட்ட நிலத்துண்டு தட்டழிப்புறமாகச் சுட்டப்பட்டுள்ளது.

நிலம்-பாகுபாடு, பெயர்கள், சீர்மை
விளைத்திறனுக்கும் நீர்வளத்துக்கும் ஏற்ப நிலங்கள் நன்செய், மென்செய், புன்செய், நீரநிலம், வயக்கல், மயக்கல், விளாகம் எனப் பலவாறாக பாகுபடுத்தப்பட்டிருந்தன. இவற்றுள் நன்செய், மென்செய் ஆகிய சொற்கள் ஒருபொருட் பன்மொழிகளாக அமைந்துள்ளன. அதுபோலவே மயக்கல், வயக்கல், விளாகம் எனும் சொற்களும் ஒரு பொருட் பன்மொழிகளாக விளங்குகின்றன. நன்செயும் மென்செயும் இடையீடற்ற நீர்வரத்துள்ள நிலங்களைக் குறிக்க, புன்செய் நீர்வளம் குறைந்த நிலப்பகுதிகளைச் சுட்டியது. நீர்நிலம், நிரந்தரமான நீர்நிலை பெற்ற நிலப்பகுதியைக் குறித்ததாகக் கொள்ளலாம். களராகவும், திடலாகவும், பாழாகவும் இருந்த நிலப்பகுதிகள் பண்படுத்தப்பட்டு விளைச்சலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவை மயக்கல், வயக்கல், விளாகம் எனும் சொற்களால் குறிக்கப்பட்டன. சண்டேசுவர விளாகம், மின்னாமழை வயக்கல், திருமாலிருஞ்சோலை வயக்கல் என்பன அவற்றுள் சில.

நிலங்கள் அவற்றின் உரிமையாளர் பெயராலும் விளைந்த பயிர்களின் பெயராலும் கூட அழைக்கப்பட்டுள்ளன. திருச்செந்துறையில் வேதம் படித்துக் கொண்டிருந்த பிராமணர்களின் நிலம் சட்டப்பெருமக்கள் நிலமாகப் பெயரிடப்பட்டிருந்தது. சேந்தன் பிராமணி நிலம், நக்கன் காடன் நிலம், ஆவணிச்செட்டி நிலம், மாறன் சாத்தன் நிலம், நக்கன் கற்குடி நிலம் என்பன தனியார் பெயரேற்றிருந்த நிலத்துண்டுகளுள் சிலவாம். வீடுகட்ட ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பகுதி மனை நிலம் என்ற பெயரிலும், சில பருவங்களில் மட்டும் விளைந்த நிலத்துண்டுகள் அவ்வப் பருவங்கள் பெயராலும் (கார் நிலம்) அழைக்கப்பட்டன. பனஞ்செய், மூங்கில்செய் எனும் நிலப் பெயர்கள் விளைபொருள்களால் ஏற்பட்டவை. இவை தவிர கொகிளங்காற்செய், திருமாலிருஞ்சோலை விளாகம், அவற்றூடவை எனப் பலவிதமான பெயர்களைப் பெற்றிருந்த நிலத்துண்டுகளும் திருச்செந்துறையில் இருந்தன.

ஸ்ர்தனம் - நில உரிமை
திருமணத்தின்போது பெண்களுக்கு வழங்கப்பட்ட நிலம் ஸ்ர்தனமாகக் கொள்ளப்பட்டது. பெண்களுக்கு உரிமையிடையனவாய் விளங்கிய இந்நிலத்துண்டுகள் காலப்போக்கில் அவர்தம் குடும்பத்து ஆடவர்கள் பெயருக்கும் மாற்றீத்தரப்பட்டன. குடும்பஞ்சார்ந்த நிலப்பகுதி அக்குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிமையுடயதாய் விளங்கியது. இந்நிலப்பகுதிகள் விற்பனைக்கு வந்தபோது, குடும்பஞ்சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் விற்பனை ஆவணத்தில் கையெழுத்திட்டிருப்பதைக் காணமுடிகிறது. சில ஆவணங்களில் குடும்பத்து மூத்தவர்கள் மட்டும் குடும்பஞ்சார்ந்த அனைவருக்குமாய் அவர்தம் பெயர்களைச் சுட்டிக் கையெழுத்திட்டுள்ளனர். இப்பொதுச் சொத்துமுறை, நிலம் துண்டாடப்படுவதைத் தவிர்த்ததுடன், நிலஞ்சார்ந்த உழைப்பை ஒருமுகப்படுத்தவும் குடும்பத்துள்ளார் அனைவரும் அவ்வுழைப்பைப் பகிர்ந்துகொள்ளவும் உதவியதுடன், குடும்பத்தில் கூட்டுறவு மனப்பான்மையை வளர்க்கவும் வழிவகுத்தது.

விளைநில விரிவாக்கம்
தேவைக்கேற்ப விளைநிலங்களின் பரப்பளவு விரிவாக்கப்பட்டது. இவ்விரிவாக்கத்திற்காகத் தரிசு நிலம் பயன்படுத்தப்பட்டு விளைச்சலுக்குக் கொணரப்பட்டது. கோயிலுக்கு நிலக்கொடையளிக்க விரும்பியவர்கள் இத்தகு நிலப்பகுதிகளை சபையாரிடமோ, தனியாரிடமோ விலைக்குப் பெற்று நிலத்திற்கு நீர்வளமூட்டி, உழைப்பத் தந்து அல்லது விலைக்கு உழைப்பைப் பெற்று அதன்வழி நிலத்தைப் பயன்படுத்தி விளைச்சலுக்குக் கொனர்ந்து நன்கு விளைதிறன் பெற்றநிலையில் அந்நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையளித்தமையைப் பல கல்வெட்டுகள் விளக்குகின்றன. திருச்செந்துறைத் திருக்கோயிலைக் கற்றளியாக்கிய கொடும்பாளூர்க் கோமகன் ஆதித்தபிடாரி, பருடையாரிடமிருந்து சில நிலத்துண்டுகளை விலைக்கு வாங்கி, நூறு கழஞ்சு பொன் செலவழித்து அந்நிலத்திற்கு நீர்வரத்தும் உழைப்பும் பெற்று அதை விளைநிலமாக்கி மின்னாமழை வயக்கல் என்ற பெயருடன் கோயிலுக்களித்தார்.

நிலவிலை
நிலம் பொன்னுக்கு விற்கப்பட்டது. நானூற்று எழுபத்து மூன்றே கால் பாத்தி அளவு நிலம் அதற்கு நீரளித்த குளத்துடன் இருபத்தெட்டரை கழஞ்சுப் பொன்னுக்கு விற்கப்பட்டது. கால் செய் அளவுள்ள நிலத்துண்டொன்று முப்பத்து நான்கரைக் கழஞ்சுப் பொன்னுக்கு விற்கப்பட்டது. ஐந்நூறு சின்னம் பாத்தியளவு நிலம் முப்பது கழஞ்சுப் பொன்னுக்கு தரப்பட்டது. இரண்டு மாச்செய் நிலம் பத்துக் கழஞ்சுப் பொன்னுக்கு விற்கப்பட்டது. இந்நான்கு விற்பனைகளுமே முற்சோழர் காலத்தில் நிகழ்ந்துள்ளன. பாத்தி, செய் எனும் கல்வெட்டுக் கால அளவுகளுக்கு நேரான தற்கால அளவுகளை அறியக்கூடாமையின் நில அளவுகளையும் அவற்றின் விலைகளையும் இன்றைய சூழலுக்கேற்பக் காணக்கிடக்கூடவில்லை.

நீர்ப்பாசனம்
காவிரியாற்றின் கரையிலமைந்த ஊரென்பதால், இவ்வூர் வயல்களுக்கு ஆற்றுநீர்ப்பாசனம் தலையாயதாய் அமைந்தது. காவிரியிலிருந்து பெருவாய்க்கால்கள் வெட்டப்பட்டு, திருச்செந்துறைக்கும் பக்கதிலிருந்த ஊர்களுக்கும் நீரேற்றப் பயன்படுத்தப்பட்டன. பிரமதேய வாய்க்கால் ஈசானமங்கலத்து நிலங்களுக்கும், அல்லூர் வாய்க்கால் பக்கத்திலிருந்த அல்லூர் நிலங்களுக்கும் நீரெடுத்துச் சென்றன. உலகு வாய்க்கால், திடக்கி வாய்க்கால் என்பன திருச்செந்துறை நிலத்துண்டுகளுக்கு நீரளிக்கப் பயன்பட்டன. ஆதித்யதேவ வதி எனும் பெயரிலமைந்த சிறுகால் ஒன்றும் சில நிலத்துண்டுகளுக்கு நீரூட்டியது.

நீர்ப்போக்கைக் கட்டுப்படுத்த உதவிய மதகுகள் பெயரிடப்பட்டிருந்தன. மறவன் வாய், கண்டன் வாய், வடவாய், கீழ்வாஅய் என்பன அவற்றுள் சில. மறவன் வாயிலிருந்து நீரெடுத்துச் சென்ற வாய்க்கால் மறவன் வாய்க்காலென்று பெயரிடப்பட்டிருந்தது. ஊரின் மேற்கிலும் தெற்கிலும் உள்ள நிலத்துண்டுகளுக்கு நீரளித்த உள்வாய்க்கால்கள், திசைப்பெயர்களிலேயே சுட்டப்பட்டன. வேளான் பெருமக்களின் நிலத்தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சல் அமைந்தது.

பயிர்கள்
நெல் முதன்மைப் பயிராக அமைந்தது. பயறுகளும் விளைவிக்கப்பட்டன. வாழைமரங்கள் செழித்திருந்தன. பலவகைக் காய்கறிகள் பயிராயின. பாக்குமரத் தோப்புகளும், தென்னந்தோப்புகளும் விளங்கின. வெற்றிலைக் கொடிக்கால்கள் இருந்தன. பல்வகைப் பூக்கள் பயிரிடப்பட்ட நந்தவனங்களும் கோயில்சூழ அமைக்கப்பெறிருந்தன.

மகளிர்
சமுதாயத்தின் அனைத்துத் தளங்களைச் சார்ந்த மகளிரும் கொடையாளிகளாகக் காட்சியளிக்கின்றனர். கொடும்பாளூர்க் கோமகளான பூதி ஆதித்தபிடாரி பதின்மூன்று கல்வெட்டுகள் வழி இக்கோயிலுக்கும் கோயில் சார்ந்த பணியாளர்களுக்கும் பல நன்மைகளைச் செய்துள்ளார். தென்னவன் இளங்கோவேளின் தேவியான விக்கிரமகேசரியும், தஞ்சாவூர் அரண்மனைப் பணிப்பெண்ணான சோழப் பெருந்தேவியும் இக்கோயிலுக்குக் கொடையளித்துள்ளனர். முன்னவர் பொன் தந்து விளக்கேற்ற, பின்னவர் நிலம் தந்து, தம் தாய் வெடேல்விடுகு மங்கலத்தில் எழுப்பிய அம்பலம் புரக்கச் செய்தார். பெண்களுக்கு அவர்தம் பெயரிலேயே நிலமிருந்தமையும், அந்நிலத்துண்டுகளை விழைவு போல் விற்கவும் பயன்படுத்தவும் அவர்கள் உரிமை பெற்றிருந்தமையையும் அறியமுடிகிறது.

பழக்க வழக்கங்கள்
குடும்பத்தில் அமையும் சிறப்பான நிகழ்வுகளின்போது இறைக் கோயிலுக்குத் தட்சிணையாக அறக்கட்டளை அமைக்கும் வழக்கம் அந்நாளில் இருந்தது. ஆதித்தன் திருவொற்றியூர் அடிகள் தம் திருமணத்தின்போது விவாக தட்சிணையாகக் கோயிலில் பன்னிரெண்டு நந்தாவிளக்குகள் ஏறுவதற்காகப் பவருத்ர பட்டர் என்பாரிடம் நிலத்துண்டொன்றைக் கொடையாகத் தந்திருந்தார். ஆதித்தம் பூதி தம் மகனுக்கு முதல் சோறு ஊட்டியபோது திருச்செந்துறைக் கோயில் இறைவனுக்கு வழிபாடும் படையலும் அமையுமாறு கொடையளித்தார்.

உணவு
அரிசிச்சோறு முதன்மை உணவாக அமைந்தது. நெய், தயிர், காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. காய்கள் பொரித்தும் அவித்தும் உண்ணப்பட்டதால் வறுத்த உணவுகளும் பயன்பாட்டில் இருந்தன. புளி, உப்பு, மிளகு மூன்றும் சமைத்தலில் பயன்பட்டன. பெருங்காயம் பயன்பாட்டில் இருந்ததோ எனக் கருதுமாறு ஒரு கல்வெட்டு அமைந்துள்லது. பயற்றுப் போனகம் எனும் சத்துணவு காலை நேஎரத்து உணவாக இருந்தது. சரியான விகதங்களில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள் ஆகியவை சேர்ந்த உணவாக இது அமைந்திருந்தமையை, இதைச் செய்ய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு தீர்மானிக்கமுடிகிறது. வெற்றிலையும் பாக்கும் உணவுக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

அளவுகள்
வேலி, காணி, மா, முந்திரிகை, சின்னம், பாத்தி என்பன நில அளவுகளாக இருந்தன. நிறுத்தல், முகத்தல் அளவைகளும் பயன்பாட்டில் இருந்தன. பதக்கும், தூணி, குறுணி, உழக்கு, மரக்கால், கலம், உரி, நாழி என்பன முகத்தல் அளவைகளாக அமைய, கழஞ்சு பொன்னையளக்கும் நிறுத்தலளவையாக இருந்தது. குடிஞைக்கல்லும் விடேல்விடுகு கல்லும் அளவு நிர்னயம் செய்யப்பட்ட பொன்னளவைகளாக வழக்கில் இருந்தன. துளைப்பொன், திப்பொக்குச் செம்பொன் என்பன உயர்தரப் பொன்வகைகளாகக் கருதப்பட்டன. கோயிலுக்கு அளக்கப்பட்ட நெல்லையளக்க சூலக்கால் எனும் அளவு நிர்னயம் செய்யப்பட்ட சிறப்பு முகத்தலளவை பயன்படுத்தப்பட்டது. அதுபோலவே சூலநாழி, திருச்செந்துறையுடையான் எனும் முகத்தலளவைகளும் இவ்வூர்ப் பகுதிகளில் அளவு நிர்ணயம் செய்யப்பட்ட முகத்தலளவைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

நாணயம்
வணிகத்தின் முதுகெலும்பாக விளங்கிய நாணயம், 'அன்றாடு நற்காசு' எனும் பெயரில் இப்பகுதியில் வழக்கிலிருந்தது. குற்றமற்ற நற்காசு எனும் நானயம், அன்றாடு நற்காசின் புழக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்களைத் தவிர்க்க உற்பத்தி செய்யப்பட்ட புதிய நாணயமாகலாம். இக்காசுகள் செம்பு, பொன் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டிருந்தன.

கடன்களின் மீதும், வைப்புநிதிகளின் மீதும் வட்டி பெறப்பட்டது. பலிசை எனும் சொல் இவ்வட்டியைக் குறித்தது. கி.பி. பதினோராம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஒரு காசுக்கு ஒரு திரமம் வட்டியாகப் பெறப்பட்டது.

ஊரமைப்பு
திருச்செந்துறையில் பல தெருக்கள் இருந்தன. சில பெருந்தெருக்களாகவும் சில குறுகலான தெருக்களாகவும் இருந்தன. பிராற்றுப் பெருந்தெரு, தெற்குப் போன பெருந்தெரு என்பன பெருந்தெருக்களுள் சிலவாம். அம்பலத்திற்குப் போன தெரு அம்பலத்தெரு என்றும், காவிரியின் ஈசானத்துறைக்குச் சென்ற தெரு ஈசானத்துறைத் தெரு என்றும் பெயரிடப்பட்டிருந்தன. கோயில் நில ஊழியர்களுக்கான வீடுகள் ஊரின் ஒருபுறமிருக்க, கோயில் பணியாளர்களின் வீடுகள் கோயிலைச் சூழவிருந்தன.

முடிவுரை
சோழர் காலச் சமுதாயத்தின் ஒரு சிறு துளியே திருச்செந்துறை. இதுபோல் பலதுளிகள் சேர்த்துக் காவிரியாய்ப் பெருக்கெடுக்கும் சமுதாயப் புலத்தைக் காட்டத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் தவிப்படக்கி, வரலாற்றின் நெடுங்கதவுகளைத் திறந்து தமிழ்ச் சீர்மை பேச, விளக்க, புலப்படுத்த அரசுகளும் தயாரில்லை; இந்த மண்ணின் மைந்தர்களும் தயாரில்லை. மேடைப் பேச்சுகளிலும் பக்தி பூகம்பத்திலும் அடையாளமிழந்து போய் நிற்கும் இந்தச் செழித்த சமுதாயத்தின் தலைப்பெழுதுக்கள் குடமுழுக்குக் கோலாகலங்களில் கரந்து கொண்டிருப்பதைக் காலம் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கண்ணுறங்கிப் போன தமிழர்கள் என்றைக்கு விழிப்பது?this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.