http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 3
இதழ் 3 [ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள வாருணி,
உன் மடல் கிடைத்தது. 'திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் கோயில்கள் சீர்குலைந்தன என்று எங்கோ படித்தேன். அக்கூற்றுச் சரிதானா?' என்று கேட்டிருக்கிறாய். கோயில்களின் சீர்குலைவிற்கும் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டதற்கும் திராவிடக்கட்சிகளையோ அவற்றின் ஆட்சிக் காலத்தையோ யாரும் எந்தவிதத்திலும் குறைகூற முடியாது. அப்படிக் கூறுபவர்கள் அதற்குரிய வரலாற்றுச் சான்றுகளை முன்வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கோயில்களின் சீர்குலைவு பற்றிய காலநிரலான ஆய்வை, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் மேற்கொண்டு தெளிவான முடிவுகளை முன்வைத்துள்ளது. (காண்க: இரா.கலைக்கோவன், சுவடழிந்த கோயில்கள், பாரி நிலையம், சென்னை, 1987, பக்.1-30, 98-123). சங்ககாலத்திலேயே கோயில்கள் சீர்குலைந்திருந்த நிலைகளை, மக்கள் வரத்தின்றி அவை அழிந்து கொண்டிருந்த காட்சிகளைப் பாடல்களின் படப்பிடிப்பாகப் பார்க்கமுடிகிறது. கூடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் கோயில் ஒன்றின் சீரழிவை, 'இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறா துறந்த மரஞ்சோர் மாடத்து எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை' என்ற அகப்பாடலில் மிக விரிவாகச் சுட்டியுள்ளார். இதுபோல் பலி இழந்த பலிதளங்கள், சுவர் சாய்ந்த பொதியில்கள், புதர் மண்டிய இறைத்திருமுன்கள் எனச் ச்ங்க இலக்கியங்கள் படம்பிடிக்கும் கோயில் சீர்குலைவுகள் ஒன்றிரண்டல்ல. மக்கள் வரத்தின்றிக் கோயில்களில் புல்லும் முள்ளும் மண்டியதால்தான் அப்பர், அவற்றை அகற்றும் தொண்டராக நேர்ந்தது. ஒருபுறம் கோச்செங்கணான் எழுபத்தெட்டு மாடக்கோயில்களை எடுத்தாலும், மறுபுறம் இறைக்கோயில்கள் மக்கள் ஆதரவிழந்த நிலையையும் பார்க்க முடிகிறது. இதற்கான சமுதாயப் பண்பாட்டுக் காரணியங்கள் எண்ணற்றவை. அவற்றையெல்லாம் இப்போது விரிவாக எழுதினால், கி.பி. 3 - 6ம் நூற்றாண்டுக் கால இறைக்கோயில் எழுச்சி வீழ்ச்சிக் கட்டுரையாக இக்கடிதம் மாறிவிடும். என் நோக்கம் கல்வெட்டழிப்பில் திராவிடக் கட்சிகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதைத் தெளிவுபட விளக்குவது மட்டுமே. உனக்குக் காலநிரலாக இந்தப் புறக்கணிப்பு வரலாறு வேண்டுமென்றால், அடுத்த கடிதத்தில் எழுத முயல்வேன். வாருணி, தமிழ்நாட்டுக் கோயில்களில் நிகழ்ந்த, நிகழும் கல்வெட்டழிப்புகளுக்கு முதல் காரணமும் முழுமையான காரணமும் கோயில் திருப்பணியாளர்களே என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்தியாவைத் தம் ஆட்சியின் கீழ்க் கொணர்ந்த ஆங்கிலேய அரசாங்கம், இங்குள்ள கோயில்கள் வரலாற்றின் விடிவிளக்குகளான கல்வெட்டுகளின் புதையல்களாய் விளங்குவது கண்டு அவற்றையெல்லாம் படியெடுத்து இந்தத் திருநாட்டின் வரலாற்றை உருவாக்க அரசு சார் கல்வெட்டியல் அமைப்பொன்றை உருவாக்கியது. அந்த அமைப்பில் தொடக்க காலத்தில் பணியாற்றிய வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்கள், தாங்கள் கண்டதை, தங்களுக்கு நேர்ந்ததை எல்லாம் தாங்கள் பதிப்பித்த கல்வெட்டறிக்கைகளில் பதிவுசெய்துள்ளனர். அவற்றுள் ஒரு பதிவு இருண்ட வீட்டில் ஒரு விளக்காய் உனக்கு உதவும். 'Information having been received from the Thahsildar of Trichinopoly that the Panchavarneshvara temple at Uraiyur is to be rebuilt shortly, all the inscriptions found in it have been copied and the temple authorities have been instructed to number and arrange the inscribed stones in some order. The Collector has been requested to prohibit the practise followed in the Jambukesvaram and Kilambil temples of using some of the inscribed stones in the new buildings and throwing away the rest.' கல்வெட்டுகளை அவர்கள் படியெடுத்த காலத்திலேயே (1890) பல கல்வெட்டுகள் சிதைந்திருப்பதாகவும் தொடர்பற்றிருப்பதாகவும் இருக்க வேண்டிய இடங்களில் கல்வெட்டுக் கற்கள் இல்லாமல், இருக்கக்கூடாத இடங்களில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெளிவாகச் சுட்டியுள்ளனர். இந்த அவலங்களுக்கெல்லாம் முந்து திருப்பணியாளர்களே காரணர்கள் என்பது உள்ளங்கைக் கனி. என் இருபத்தைந்து ஆண்டுக் கால ஆய்வு அநுபவத்தில் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த யாரும் கோவில் சீரழிவிற்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ காரணமாக இருந்ததைப் பார்த்தறியேன். 'நாத்திக வாதம் மக்களைத் திசைதிருப்பியது; அதனால் கோயில்கள் புறக்கணிக்கப்பட்டன' என்பது தெளிவற்றவர்களின் கூற்றே தவிர, கள ஆய்வாளர்களின் முடிவன்று. எந்தக் காலத்திலும் திருக்கோயில்களுக்குச் செல்பவர்கள் சென்றுகொண்டுதான் இருந்தார்கள். அதுபோல் புறக்கணிப்பும் உடன் விளைவாக இருந்துகொண்டுதான் இருந்தது. நாத்திக வாதம் உச்சத்தில் இருந்த காலத்தில்கூட மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டமையை நானே பார்த்திருக்கிறேன். இது பல ஊர்க் கோயில்களுக்கும் பொருந்தும். கோயிலாய்வில் முழுவீச்சில் ஈடுபட்ட பிறகுதான், கோயில்களின் சீரழிவிற்கு முழுமையான காரணர்கள் திருப்பணியாளர்களும் கோயிலைச் சார்ந்தவர்களும் மட்டுமே என்பதைக் கண்ணெதிர்க் காட்சிகளாக என்னால் கண்டறிய முடிந்தது. சில சான்றுகளை முன்வைத்தால் உனக்கு எளிதாகப் புரியும். திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர்ச் சாலையில் உள்ள திருநெடுங்களம் பாடல் பெற்ற கோயிலுள்ள ஊர். இக்கோயிலைத் திருப்பணி செய்ய முற்பட்ட காலத்தில் நானும் எங்கள் மைய ஆய்வாளர்களும் இக்கோயில் ஆய்வில் முனைந்திருந்தோம். திருப்பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர் கழுத்தில் ருத்திராக்கமும் நெற்றி நிறைய திருநீறும் பூசியிருந்தனர். அவர்கள் வாயைத் திறந்த போதெல்லாம் உதிர்ந்த சொல் 'சிவா'. எத்தனை சைவ எழுச்சி என்று நானே வியந்து போனேன். இந்தக் கோயிலின் உள்திருச்சுற்றின் தென்புறத் தரையில், முதலாம் ஆதித்தர் காலக் கல்வெட்டுள்ள கல்லொன்று முந்து திருப்பணியாளர்களால் பதிக்கப்பெற்றிருந்தது. அந்தக் கல்வெட்டைப் படித்த பேராசிரியர் மு.நளினி, அது புதிய கல்வெட்டு என்றும் தமிழ்நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் வழக்கில் இருந்திராத மூக்கு மத்தளம் இக்கோயிலில் இயக்கப்பட்ட செய்தியை அக்கல்வெட்டுத் தருவதாகவும் கூறி மகிழ்ந்தார். அக்கல்வெட்டைப் படியெடுக்க நாங்கள் முயன்றபோது திருப்பணிக் குழுவினரில் ஒருவர் தடுத்தார். அவரிடம் கல்வெட்டின் அருமையைச் சொல்லித் தரையில் பாவப்பட்டிருப்பதால் மிதித்து மிதித்தே அக்கல்வெட்டுப் பெரும்பாலும் அழிந்திருப்பதைச் சுட்டி, இப்போது படியெடுக்காவிட்டால் இந்த அரிய வரலாற்றுச் செய்தி பதிவாகாமல் போகும் ஆபத்து இருப்பதை விளக்கிப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு கல்வெட்டைப் படியெடுத்தோம். திருப்பணித் தொண்டர்களின் தலைவரைச் சந்தித்து அக்கல்வெட்டின் அருமையைக் கூறி அதைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி, நடைபாதையிலிருந்து அதை அகழ்ந்தெடுத்து வேறு கல் பாவச்செய்தோம். இதுபோல் அரிய கல்வெட்டுகள் பத்திற்கும் மேல் எங்களால் கண்டறியப்பட்டு இக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. குழுவின் தலைவர் கல்வெட்டுகள் உள்ள கற்பலகைகளைக் கோயில் திருச்சுற்றில் பாதுகாப்பாக இருத்துவதாக உறுதி கூறினார். அவருக்கு இக்கல்வெட்டுகளின் தரவுகள் அடங்கிய குறிப்புரையும் தரப்பட்டது. பாதுகாக்கத் தந்த கல்வெட்டுகளுள் ஒன்று தந்திவர்மர் காலத்தது. மிக அரிய வகையில் நந்திகளும் சூலமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த கல்வெட்டு அது. மற்றொன்று கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகக் குழுவினரின் காவல் வீரர்கள் பற்றியது. இன்னொன்று அதுவரை அறியப்படாத பிற்சோழர் கால நாடகங்கள் பற்றிய கல்வெட்டு. பிறிதொன்று ஒரு காலத்தே இங்கிருந்து அழிவுற்ற ஸ்ரீபுறக்குடிப்பள்ளி என்னும் சமண இருக்கை பற்றிப் பேசும் கல்வெட்டு. திருப்பணியாளர்களை நம்பி, அவர்கள் இக்கல்வெட்டுகளைப் பாதுகாப்பார்கள் எனக் கருதி நாங்கள் பணி முடித்து விடைபெற்றோம். திருப்பணி முடிந்து ஒருமாத அளவில் ஊர்க்காரர் ஒருவர் கண் சோதனை செய்துகொள்ள என்னிடம் வந்தார். அவரிடம் கல்வெட்டுகள் பற்றிக் கேட்டேன். திருப்பணியாளர்கள் அக்கற்களை எல்லாம் தூக்கி கோயிலுக்கு வெளியே வீசிவிட்டதாகவும் அவை இப்போது வேண்டப்படாதனவாக ஒதுக்கப்பட்ட கற்குவியலில் எங்கோ சிக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். என் கண்களில் நீர் கசிந்தது. திறக்க நேர்ந்த நேரங்களில் எல்லாம் வாய்மணக்கச் சிவபெருமானின் பெயரை உச்சரித்தவர்களின் கைகள் எத்தகு அவலத்தை இந்த மண்ணின் வரலாற்றிற்கு இழைத்துள்ளன என்று வருந்தினேன். உடன் பேராசிரியர் நளினிக்குத் தொலைபேசி செய்தேன். நானும் அவரும் பிறருடன் நெடுங்களம் சென்றோம். கோயிலின் வெளிச்சுற்றெங்கும் கற்குவியல்கள். அவற்றில் எங்கென்று அந்தக் கல்வெட்டுப் புதையல்களைத் தேடுவது? எங்கள் துன்பமறிந்த உள்ளூர் அன்பர்கள் சிலர் உதவிக்கு வந்தனர். எல்லாருமாக மூன்று மணிநேரம் தேடி அக்கல்வெட்டுகளுள் பலவற்றைக் கண்டறிந்தோம். நாடகக் கல்வெட்டு மட்டும் கிடைக்கவே இல்லை. எங்களுடன் உழைத்த உள்ளூர் நண்பர் திரு. குருசாமி அக்கல்வெட்டுகளை எப்படுபட்டாகிலும் கோயிலுக்குள் சேர்ப்பதாக உறுதி அளித்தார். குப்பையாய் அள்ளி வீசப்பட்ட அந்தக் கல்வெட்டுகள், நம் முன்னோர்களின் வழங்கல்கள், வாக்குறுதிகள், வாழ்க்கைச் சம்பவங்கள் என்பதுடன் நம்முடைய தலைப்பெழுத்துக்களும் கூட என்பதைச் 'சிவா, சிவா' என்று எப்போதும் கூவிய வாய்களின் சொந்தக்காரர்கள் மறந்து போனதை நினைக்கும்போது, கோயிலுக்கு வராத நாத்திகர்கள் நூறு மடங்கு தேவலாம் என்றே தோன்றுகிறது.அவர்களால் கல்வெட்டுகளுக்கோ கோயில்களுக்கோ எந்தக் காலத்திலும் எந்த இழப்பும் நேர்ந்ததில்லை. இந்து அறநிலையத் துறையின் ஆட்சியில் இருக்கும் கோயில்களுக்குத் தான் இந்த நிலைமை என்று கருதிடல் வேண்டா. மடாதிபதிகள் என்று தங்களைப் பெருமையோடு அழைத்துக் களிக்கும் மடத்தலைவர்களின், சமயாச்சாரியார்களின் ஆளுகையில் இருக்கும் கோயில்களிலும் இதே நிலைதான். அமரர் குன்றக்குடி அடிகளார் ஒரு விதிவிலக்கு. திருப்புத்தூர்த் திருத்தளிநாதர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது திருப்பணியாளர்களால் அங்குள்ள கல்வெட்டுகளுக்குப் பெருஞ்சேதம் விளைந்திருந்ததை நாங்கள் கூறக் கேட்ட அப்பெருந்தகை, திருக்கோளக்குடிக் கோயில் கல்வெட்டுகளைக் காப்பாற்ற எங்கள் வேண்டுகோள்களுக்கெல்லாம் செவி சாய்த்தார். தாமே நேரிடையாக வந்து பலமுறை திருப்பணியைப் பார்வையிட்டார். அவர் ஒத்துழைப்பால், வரலாறு அதுவரை கண்டிராத, கேட்டிராத செய்திதரும் கல்வெட்டுகளை எல்லாம் நாங்கள் கண்டறிய முடிந்தது. 'பதப்பிலீசுவரம்' எனும் தெந்தமிழ்நாட்டின் மிகப்பழமையான தமிழ் எழுத்துக் கல்வெட்டைத் திருக்கோளக்குடி மலையில் நாங்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியபோது மகிழ்ந்த அப்பெருமகனார் அதைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்தார். என்னுடைய இருபத்தைந்து ஆண்டுக்கால கள ஆய்வு வரலாற்றில், ஆய்வாளர்களைக் கேட்டுக் கோயில் திருப்பணி செய்த ஒரே மனிதர் அமரர் குன்றக்குடி அடிகளார் தான். ஆனால் அவராலும் கூடச் சில கல்வெட்டுகளைக் கட்டுமானப் பணியாளர்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் போனது என்பது வேதனைக்குரிய உண்மை. நூற்றுக்கணக்கான கோயில்களில் திருப்பணியாளர்கள் கல்வெட்டுகளை அழிப்பதைப் பார்த்திருக்கிறேன், தடுக்க முயன்றிருக்கிறேன். அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஊர் மக்களுக்கும் எடுத்துச் சொல்லி வேண்டியிருக்கிறேன். ஆனால் பல இடங்களில் தோல்வியையே சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு கல்வெட்டு அழியும் போதும் நம் உடம்பின் ஓர் உறுப்பு வெட்டப்படுகிறது என்பதை இவர்களுக்கு எப்படி உணர்த்துவது? தமிழ்நாட்டுக் கோயில் சிற்பிகள் மாநாட்டில் பேசியிருக்கிறேன்; திருமடங்களில் உரையாடியிருக்கிறேன்; அறநிலையத்துறை அலுவலர்களிடம் வேண்டியிருக்கிறேன்; திருப்பணியாளர்களிடம் போராடியிருக்கிறேன்; என்றாலும் கல்வெட்டழிப்பைத் தடுக்க முடியவில்லை. ஒரு கோயிலைத் திருப்பணி செய்வதற்கு முன் திருப்பணியாளர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையின் அனுமதியும் வழிகாட்டலும் பெறவேண்டும் என்று அரசுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் இத்துறையினரைத் திருப்பணி செய்வோர் யாரும் கண்டுகொள்வதே இல்லை. இலட்சம் லட்சமாகப் பணம் கொடுப்பவர்களோ, அப்பணத்தைப் பெற்று முன்நின்று திருப்பணி நடத்துபவர்களோ கல்வெட்டுகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவர்களுக்குத் திருக்கோயில் பற்றிய அடிப்படை அறிவுகூட இருப்பதில்லை. கட்டட அமைப்பு, கல்வெட்டு, சிற்பங்கள் என்று திருக்கோயில் சார்ந்த எந்தத்துறை பற்றியும் தெளிவான பின்புலமற்ற கோயில் கட்டுமானப் பணியாளர்களின் துணையோடு மனம் போன போக்கில் வண்ணங்களை அள்ளி வீசிச் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் இவர்கள் அழிக்கும் போக்கிற்கு இரையாகி அழிந்த பழங்கோயில்கள் நூற்றுக்கணக்கில் அடங்கும். அற்புதமான சோழர்கால ஆடற்பெண்களின் சிற்பங்களை, அலங்கோலமான வண்ணப்பூச்சால் விலைமகளிர் போல மாற்றிவிட்ட திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் விமானக் காட்சியைப் போய்ப்பார். அதே கோயில் கோபுரத்தில் இருந்த அதிஅற்புதமான சக்திசதுஷ்கா சிற்பத்தைச் சிதறடித்துப் புதிதாகக் கோமாளிப்பொம்மை போல் ஒரு சிற்பத்தை அண்மைக்குடமுழுக்கு உருவாக்கி வைத்திருக்கிறது. (இந்தியாவில் இரண்டு சக்திசதுஷ்கா சிற்பங்கள்தான் இருந்தன. ஒன்று இராஜஸ்தான் மாநிலத்தில் பிஜோல்யாவில் உள்ளது. மற்றொன்று திருச்செந்துறையில் இருந்து அழிந்தது.) வாருணி, குட்டைப்பாவாடையும் நவீன மார்க்கச்சுமாகப் பார்வதியைப் பார்க்கவேண்டும் என்றால் திருவாரூர் செல்லலாம். தார் பூசிய கல்வெட்டுகள், கருப்பு வண்ணத்தால் படிக்கமுடியாதபடி செய்யப்பட்ட கல்வெட்டுகள், சிமெண்டால் விழுங்கப்பட்ட கல்வெட்டுகள் என்று இந்தத் திருப்பணியாளர்களின் கோரப்பசிக்கு இரையான கல்வெட்டுகள் தமிழ்நாடெங்கும் உள்ளன. திருவிசலூர் சிவயோகநாதசாமி கோயில் நூறு கல்வெட்டுகளைத் திருப்பணியாளர்களிடம் பறிகொடுத்துள்ளது. திருச்சிராப்பள்ளி பஞ்சவர்ணசாமி கோயில் ஒரு செட்டியார் திருப்பணியால் இருபது கல்வெட்டுகளை இழந்தது. திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரர் கோயில் நாற்பது கல்வெட்டுகளைச் செட்டியார் திருப்பணியில் இழந்தது. அழகாதிரிப்புத்தூர்த் திருக்கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற கோயில். அதில் பதினாறு கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் திருக்கோயில்களில் தொடரும் இக்கல்வெட்டழிப்புத் தமிழர்களின் அடையாளங்களை முற்றிலுமாக அகற்றி வருவதை நீ மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மனங்கொள வேண்டும். கோயில்களைத் திருப்பணி செய்வது முறைப்படுத்தப்பட வேண்டும். அமரர் தமிழ்க்குடிமகன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு குழு அமைக்கப்பட்டது. புலவர் செ. இராசு முதலிய அறிஞர்கள் பலருடன் நானும் நளினியும் அதில் உறுப்பினர்களாக இருந்தோம். பல நல்ல திட்டங்கள் அரசிற்கு எடுத்துரைக்கப்பட்டன. ஆனால் அவற்றுள் ஒன்றைக்கூட அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அறநிலையத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சியில் ஒரு விழுக்காடு முயற்சியைத் திருப்பணியின்போது கைக்கொண்டால் கல்வெட்டுகள் பிழைத்துவிடும். மக்களுக்குக் கோயில்களின்பால் உண்மையான ஈடுபாடு இல்லை. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் மேற்கிலுள்ள தோட்டம் மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டபோது, அந்த நாள் மாலையில் கோயில் ஊழியர்கள் கூட்டிச்சேர்த்த குப்பை ஒரு லாரியில் ஏற்றுமளவு இருந்தது. நாச்சியார் கோயில் திருநறையூர் மணிமாடப்பெருமாள் கோயிலில் ஒருமுறை ஆய்வு மேற்கொண்டபோது, கோயில் மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ந்து நிர்வாக அலுவலரிடம் அதன் ரகசியம் கேட்டேன். சிரித்தபடியே, 'மக்கள் அதிகமாக வருவதில்லை. அதனால்தான் இது முடிகிறது' என்றார் அவர். என் மகிழ்வு வருத்தமாக மாறியது. மக்கள் கோயிலுக்கு வரவேண்டும். ஆனால் கோயிலில் எப்படி இயங்கவேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு இருக்கவேண்டும். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் காவலுக்கு வந்திருந்த போலீஸ்காரர் ஒருவர் முருகன் கோயில் அருகே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துத் தடுத்திருக்கிறேன். அதே கோயிலின் அம்மன் திருமுன்னில் அங்கு ஊழியம் செய்யும் அர்ச்சகரே மட்டமான திரைப்படப்பாடலொன்றைப் பாடியபடி குதித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து வருந்தி அவரைக் கடிந்திருக்கிறேன். நாகர் வடிவங்களை நாககன்னிகைகள் என்று கூறித் திருமணமாகாத இளம்பெண்களைப் பூசைக்கழைத்து ஏமாற்றும் கொடுமையும் இங்குண்டு. இதையும் கூட்டங்களில் மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். என் கோயில் அனுபவங்கள் என்னை நாத்திகனாக்கிவிடுமோ என்று பலமுறை உள்ளம் சோர்ந்திருக்கிறேன். தமிழர்களின் வரலாறு கோயிலில் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருப்பதாலேயே என்னால் இன்னமும் கோயில்களை இரசிக்க முடிகிறது. மணிமங்கலம் விஷ்ணு கோயிலில் அருமையான சோழர்காலச் சிற்பங்கள் உள்ளன. அவை அனைத்திலும் உச்சந்தலை முதல் திருவடி வரை எண்ணெய் வண்ணத்தால் நாமம் போட்டிருக்கிறார்கள். இதே கதிதான் நாமக்கல் அரங்கநாதர் குடைவரையிலும். எது பக்தி, எது அலங்கோலம் என்பது கூடப் புரியாத ஆத்திகர்கள், நம் கலையும் பண்பாடும் மிளிரும் இறைக்கோயில்களுக்குச் செய்யும் தீமைகளைப் பார்க்கும்போது நாத்திகர்கள் வணங்கத்தக்கவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் இறை மறுப்புக் கொள்கையோடு நின்றுவிடுகிறார்கள். ஆத்திகர்கள் இறைவனைப் புகழ்ந்தபடியே தங்கள் வரலாற்றையும் நாட்டின் வரலாற்றையும் ஏன் இறைவனின் வரலாற்றையும் கூட கிஞ்சித்தும் கவலைப்படாமல் அழித்துவிடுகிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முடிவு எப்போது வாருணி? பக்தியை அரசியலாக்கிவரும் இயக்கங்கள் மக்களை மேன்மேலும் மூடர்களாக்கி வருகின்றன. பிழைப்புக் கருதிப் பலர் கோயில்களை மூடநம்பிக்கைகளின் கூடமாக்கியுள்ளனர். அரைக்கால் சட்டையும், 'கட்' பனியனும் போட்டபடி கிடார் வாசிக்கும் பிள்ளையாரைச் சிராப்பள்ளியில் உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்பைடர்மேன் பிள்ளையாரைத் தினமணி படம்பிடித்து வெளியிட்டிருந்தது. இவற்றைச் செய்திருப்பவர்கள் நாத்திகர்கள் அல்லர். ஆத்திகர்களே. பிள்ளையாரே வருத்தப்படும் அளவிற்கு அவரைத் 'திரைப்படக் கேளிக்கை' போல உருமாற்றியிருக்கும் செயல்களைப் பார்க்கும்போது மனம் நோகிறது. பிள்ளையார் வழிபாட்டை இத்தனை இழிநிலைக்கு இறக்குவது மதஞ்சார்ந்த இயக்கங்களுக்கு என்ன நன்மையைத் தந்துவிடும் என்பது புரியவில்லை. நம்முடைய அடையாளங்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை தமிழர்களுக்கு என்று வருமோ தெரியவில்லை. பழமையின் பெருமையை, அதன் முக்கியத்துவத்தை, அதுதான் எந்தக்காலத்திலும் நம் வேரை வெளிப்படுத்தவல்ல ஊடகம் என்பதை இளஞ்சிறார்கள் நெஞ்சில் என்று பதிய வைக்கிறோமோ அன்றுதான் தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளங்கள் காப்பாற்றப்படும். வாருணி, நாத்திகர்கள், அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தபோதும், எந்த அமைப்பினராக இருந்தபோதும், எந்தக் காலத்திலும் இறைக்கோயில்களைச் சீர்குலைத்ததில்லை. வரலாற்றின் ஊற்றுக்கண்களான கல்வெட்டுகளை, சிற்பங்களை அழித்ததில்லை. ஆனால் ஆத்திகர்கள் சமயப்பூசல், சாதிப்பூசல், தனிமேலாண்மை எனும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் சிற்பங்களுக்கும் உள்ளிருந்தே கொல்லும் நோயாக ஊறுசெய்து வருகின்றனர். இவர்களிடமிருந்தும், பொறுப்பற்ற கோயில் அலுவலர்களிடம் இருந்தும் திருப்பணியாளர்களிடமிருந்தும் முறையான கோயிற்கலைப் பயிற்சியற்ற கட்டுமானப் பணியாளர்களிடமிருந்தும் கோயில்களைக் காப்பாற்ற வரலாற்று ஆர்வமுள்ள, தமிழன் என்ற உணர்வுள்ள ஒவ்வொரு மனிதரும் கையிணைக்க வேண்டும். திருப்பணிகளை முறைப்படுத்தச் சட்டம் இயற்றுமாறு அரசை வற்புறுத்தவேண்டும். அனைத்துக் கோயில்களும் வரலாற்றுக் களங்கள் என்று அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்குக் கோயில்களைக் காப்பாற்றும் நெறிமுறைகளில் பயிற்சி தரப்படவேண்டும். கோயில்களைப் பாதுகாப்பது எத்தனை இன்றியமையாதது என்பதை இந்த மண்ணின் மைந்தர்கள் உணரும் வரை, தமிழ்நாட்டின் வரலாறு காப்பாற்றப்படும் என்பது உறுதியில்லை. அன்புடன் இரா. கலைக்கோவன் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |