http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 26
இதழ் 26 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2006 ] 2ம் ஆண்டு நிறைவு - மகேந்திரர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டுக் கதைகள்
கொல்லையில் கட்டப்பட்டிருந்த பசு "ம்மா..!" என்று ஒரு முறை கத்திற்று. சுபசகுனம்.
பரமேஸ்வரப் பெருந்தச்சர் (1) நூற்றியோராவது முறையாக தமது சாமானகள் எல்லாம் பத்திரமாக வண்டியில் ஏற்றப்பட்டு விட்டனவா என்று கவனித்துக்கொண்டார். உளிப்பை, சுத்தியல்கள், பூஜை சாமான்கள் - முக்கியமானவை எல்லாமே கண்களுக்குத் தட்டுப்படுகின்றன. எல்லாவற்றையும் ஞாபகமாக எடுத்து வைத்துக்கொண்டதுபோல்தான் தோன்றும். களத்திற்குச் சென்ற பிறகுதான் மறந்தவை ஒவ்வொன்றாக ஞாபகம் வரும். (1) உத்திரமேரூர் கல்வெட்டில் இடம்பெரும் பரமேஸ்வரச் சிற்பியை இவருடைய வழித்தோன்றலாகக் கொள்க "என்ன ஆரத்தி கரைத்தாயிற்றா ?" என்று வீட்டிற்குள் ஒரு குரல் கொடுத்தார். இந்தப் பெண்டுகளுக்கு அரை நாழிகையாவது நம்மை தாமசிக்காவிட்டால் தூக்கம் வராது ! "வந்துகொண்டேயிருக்கிறோம் !" என்று உள்ளிருந்து குரல் வந்தது. தெருவை நோக்கினார். காஞ்சிச் சூரியன் கம்பீரமாக எழுவதற்குரிய அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிட்டான். இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுதான். பலபலவென்று பல்லவ நாடெங்கும் வெளிச்சம் படர்ந்துவிடும். வல்லத்துப் பிடாகையை அடைவதற்குள் மாலை ஆனாலும் ஆகிவிடலாம். சென்ற வருடம்போல் அடிக்கடி காஞ்சிக்கு வந்துபோய்க்கொண்டிருக்க முடியாது. அது நன்றாகவும் இராது. ஒரு அயனமாவது(2) தங்கி வேலையை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டுத்தான் மறுவேலை. மூன்று கோயில்கள் - சற்று பெரிய பணிதான். (2) ஆறு மாதங்கள் தெரு ஓரமாக அவரது சீடர்கள் மிகுந்த மரியாதையுடன் அணிவகுத்து நின்றார்கள். அனைவர் தோள்களிலும் ஒரு துணிப்பை தொங்கியது. உள்ளிருந்த உளி மற்றும் சிற்ப ஆயுதங்கள் பையில் ஆங்காங்கே நீட்டிக்கொண்டு தெரிந்தன. அந்த முகங்களை சிறிது ஆராய்ந்தார். புத்துணர்ச்சியோடு காட்சியளிக்கும் முகம். சோர்ந்த முகம். சற்று பயந்த முகம். புதிய பயணத்தினால் உற்சாகம் கொண்டு பூரிக்கும் முகம். அறிமுக முகங்கள். இத்தனை சீடர்களா நமக்கு என்று சிறிது நேரம் வியந்தார். மூன்று வண்டிகள் போதுமா ? வேண்டுமானால் சாத்தனிடம் சொல்லி நான்காவது வண்டியனுப்பச் சொல்ல வேண்டியதுதான். இந்தப் பணியைப் பொறுத்த வரையில் பொற்கழஞ்சுகளை தாராளமாகவே செலவழிக்கலாம். கந்தசேனன் அள்ளிக்கொடுத்திருக்கிறார். பணியை நன்றாக செய்து முடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். வீட்டினுள் ஆயத்தங்கள் கேட்டன. பெண்டுகள் ஒரு வழியாகத் தயாராகிவிட்டார்கள் போலும். அவருடைய மனையாள் தன் வயதொத்த இரண்டு மத்திய வயதுப் பெண்களுடன் நாணிக் கோணிக்கொண்டு வெளியில் வந்தாள். வழக்கம்போல அவர் வண்டியின் முன் விறைப்பாக நிற்க சக்கரங்களில் எலுமிச்சை சொருகப்பட்டது. ஆரத்தியின்போது மெல்லிய பாடல் - அவருடைய மனையாட்டியின் குரல்தான் - கேட்டது. மடிப்பையை பிரித்து ஒரு கழஞ்சை தட்டில் இட்டார். உடனடியாகக் கிளம்ப வேண்டியதுதான். மயங்கி மயங்கி நின்றுகொண்டிருந்தால் தாமசம்தான் அதிகமாகும். வண்டியில் ஏறி அமரும்போதுதான் கவனித்தார். தெருமுனையில் இரண்டு இளைஞர்கள் அவரை நோக்கி வேகவேகமாக வந்துகொண்டிருந்தார்கள். கண்களை சுருக்கி அவர்களை அடையாளம் காண முயற்சிசெய்தார். அதற்குள் அவர்கள் நெருங்கிவிட்டார்கள். "ஐயா !....எங்களை விட்டுவிட்டுக் கிளம்ப ஆயத்தமாகிவிட்டீர்களே ! நல்லவேளை தெய்வாதீனமாக இன்று காலை நீங்கள் புறப்படுவதற்குள் செய்தி கிடைத்து வந்துவிட்டோம்...." "அட - நீங்களா அப்பா ? நான்தான் அப்போதே சொன்னேனே ! ஏற்கனவே புதியவர்கள் பலரையும் இந்தப் பணியில் சேர்த்துக்கொண்டாகி விட்டது. உங்களுக்குத் தற்சமயம் இந்தப் பணியில் இடமில்லை. அதனால்தான் இன்று காலை கிளம்பும் செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கவில்லை. மகேந்திர போத்ராதிராசர் இராஜ்ஜியத்தில் கல் திருப்பணிகளுக்கா பஞ்சம் ? அடுத்த வேலையின்போது சேர்ந்து கொள்ளுங்களேன்....." "ஐயா ! நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. எங்கள் குடும்பம் இருக்கும் நிலைமையை முன்பே கூறினோம். இந்தப் பணி இல்லாவிட்டால் நாங்களும் குடும்பத்தாரும் பட்டினி கிடந்து உயிரை விடவேண்டியதுதான் !" "பல்லவ இராஜ்ஜியத்தில் வேலைக்கா பஞ்சம் ? ஏதாவது பணிசெய்து பிழைத்துக் கொள்ளுங்களேன் !" "ஐயா ! இன்றைய தேதியில் சிற்பிகளுக்கு இங்கிருக்கும் மரியாதை வேறு எவருக்குமில்லை. நமது மன்னர் வயந்தப் பிரியரும் இத்திருப்பணிக்குக் கொடுக்கும் ஆதரவு தாங்கள் அறியாததல்ல. தயவு செய்து மனது வைத்து.... "அடடா - விட மாட்டீர்கள் போலிருக்கிறதே ! உங்களை எடுபிடி ஆளாகத்தான் சேர்த்துக்கொள்ள இயலும். இப்போதைக்கு அந்தப் பணிக்குத்தான் ஆட்கள் தேவையாயிருக்கிறது. சாதாரணமாய் எடுபிடிகளை அந்த அந்த ஊரிலேயே சம்பாதித்துக்கொள்வது வழக்கம் ! நான்தான் வழக்கத்திற்கு மாறாக வேலை மெனக்கெட்டு காஞ்சியிலிருந்து ஆளெடுத்துச் செல்கிறேன். மாதத்துக்கு ஐந்து கழஞ்சுகள் கூலி - சரிதானா ?" "தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் !" "உங்களின் பெயர் ?" "என் பெயர் ஆதன். இவன் சாம்பவன் (3)" (3) சிவபெருமானின் திருப்பெயர்களுள் ஒன்றான சம்பு என்பதே இதன் வேர்ச்சொல் "வண்டியில் இடமில்லையென்றால் நடந்துதான் வரவேண்டும் - சரியா ?" "அதற்கென்ன ?" அந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொன்ன செய்திகள் சீடர்கள் மத்தியில் இளக்காரத்தைத் தோற்றுவித்திருந்தது. ஆனாலும் அந்த இளைஞர்களின் தோற்றத்தில் இருந்த பொலிவு நேரடியான ஏளனத்திற்கு அனுமதிக்கவில்லை. "கிளம்பலாம் - வருகிறேனம்மா !" என்று குரல்கொடுக்க வண்டிக்காரன் மாடுகளை தட்டிக்கொடுத்துக் கிளப்பினான். பெருந்தச்சர் மனையாட்டியைப் பார்த்துக் கையசைத்தார். குடும்பம் குழந்தைகள் எல்லோருக்கும் அவள்தான் தாய் தந்தை எல்லாமே. அவர்தான் திருப்பணி திருப்பணி என்று ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறாறே.... தனது வலது கரத்தை நோக்கினார். உளி பிடித்துப் பிடித்து காப்புக் காய்த்துப் போயிருந்தன அந்தக் கரங்கள். இருபது வருடங்களுக்குமுன் அவருடைய குருவாக இருந்த தகப்பனார் ஒரு சிற்றுளியை அவருடைய சிறு கைகளில் திணித்துச் சொன்ன வாக்கியங்கள்தாம் ஞாபகத்துக்கு வந்தன. "சிற்ப வேலை என்பது ஒரு தவம் - ஒரு யோகம் - பரமேஸ்வரா ! எல்லோருக்கும் அது வாய்த்துவிடுவதில்லை. எல்லோருக்கும் கலை கைவந்துவிடுவதில்லை. நமது பரம்பரையிலேயே பெருந்தச்சர் என்று சொல்லத்தக்கவர் ஒருவர்தான் இருந்தார் ! ஸ்கந்த சிஷ்யர் காலத்தில் அவருடைய பெயரும் ஸ்கந்தப் பெருந்தச்சர் (4) என்று கொடிகட்டிப் பறந்தது. நான் என்னாலான பணிகளை செய்து முடித்துவிட்டேன். என் காலம் முடிந்தது. இனி உன் காலம் ஆரம்பம். இன்றுமுதல் இந்த உளிதான் உன் அன்னை - அப்பன் - ஆசான் - மனைவி - மக்கல் - எல்லாமே. தெய்வ அனுக்கிரகம் உனக்கு வாய்த்திருக்கிறது. கலாதேவியான சரஸ்வதி உன் கரங்களில் குடிகொண்டிருக்கிறாள். தெய்வங்கள் உன் கலையால் உயிர்பெறட்டும். உன் காலத்தில் சிற்பக்கலை முன்பு காணாத மகோந்நதமான இடத்திற்குச் செல்லுமென்று ஒரு ஜோசியன் சொன்னான். அதற்கான அறிகுறிகள் வலுவாகவே தெரிகின்றன ! நீ நீடூழி வாழ்வாய் !" (4) மன்னர்களின் பெயரை அல்லது அவர்களில் பட்டப்பெயர்களை அந்நாளைய சிற்பிகள் வைத்துக்கொள்வது ஒரு மரபோ என்று தோன்றுகிறது. இராஜராஜர் காலத்தில் இராஜராஜப் பெருந்தச்சர் என்றொருவரை கல்வெட்டுக்கள் அறிமுகம் செய்கின்றன அந்த ஆசீர்வாதம்தான் இன்றுவரை அவரை செலுத்திக்கொண்டிருக்கிறது போலும். இன்றைய தேதியில் பரமேஸ்வரப் பெருந்தச்சர் என்பது பல்லவ தேசத்தில் அனைவருக்கும் தெரிந்த பெயர். மாமண்டூர் குணமிலீச்சுரம் (5) அவரை அந்த இடத்திற்குக் கொண்டுசென்றுவிட்டது. (5) குணமிலி என்பது மகேந்திரரின் பட்டப்பெயர். அவர் காலத்தைய குடைவரையான மாமண்டூர் குடைவரை அவருடைய பெயரில்தான் அமைந்திருந்திருக்கும் என்பது நமது கற்பனை. சோழர் கல்வெட்டுக்களில் இக்கோயில் உருத்திரவாலீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது பழைய நினைவுகளிலிருந்து கலைந்து பின்புறம் திரும்பிப் பார்த்தார். அந்த இரண்டு இளைஞர்கள் மட்டும் வண்டிகளின் பின் நடந்து வருவது தெரிந்தது. "அடே, யாரது ! அந்த இரண்டு எடுபிடிகளை சமையல் சாமான்கள் ஏற்றியிருக்கும் கடைசி வண்டியில் ஏறிக்கொள்ளச்சொல். அங்கு இடம் இல்லாவிட்டால் என் வண்டிக்கே வரட்டும் - நீண்ட தூரம் பயணப்பட வேண்டியிருக்கிறது !" என்ன, குருநாதரின் வண்டியில் இந்த எடுபிடிப் பயல்களா ? என்று யோசித்த சீடர்கள் அவர்களிருவருக்கும் கடைசி வண்டியில் ஒருவழியாக இடம்பிடித்துக்கொடுத்தார்கள். *********************************************************************************************** ஆடிஅசைந்து அவர்கள் களத்திற்கு வந்துசேர்வதற்கு மறுநாள் நண்பகலாகிவிட்டது. களம் என்று நாம் குறிப்பிடும் பகுதி சிறு குன்றுகள் அமைந்த பகுதியாக காணப்பட்டது. ஒரு பக்கம் வயல்வெளிகளும் சற்று தள்ளி பனைமரங்களும் அதற்குப் பின்னால் சிற்சில குடிசை வீடுகளும் தெரிந்தன. அந்த இடத்தில் சொல்லமுடியாத ஒரு அமைதியும் மோனமும் குடிகொண்டிருந்தன. பறவைகளின் கீச்சொலி தவிர வேறு சப்தமேயில்லை. "அப்பாடா !" என்றபடி துண்டை விரித்து அருகிலிருந்த பாறை நிழலொன்றில் அமர்ந்தார் பெருந்தச்சர். நல்ல இடம். கந்தசேனன் பார்த்துத்தான் தெரிவு செய்திருக்கிறான். இதில் முதல் கோயிலை கிழக்குப் பார்த்திருக்கும் பாறைத்தளத்தில் ஆரம்பித்துவிடலாம். மற்ற இரண்டும் சிறியவை - பாறை சாய்வாக இறங்கும் இடத்தில்கூட அவற்றை இருத்திவிடலாம். சீடர்கள் சுற்றுப்புறத்தில் நல்ல இடங்களாக தேர்வு செய்து கூடாரங்கள் கட்டுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார்கள். நட்ட நடுவே ஆரோக்கியமான - வளர்ந்த மூங்கில் கழியொன்று ஊன்றப்பட்டு அதிலிருந்து நாற்புறமும் கயிறுகள் விரிந்தன. இந்த அமைப்புக்குமேல் கெட்டியான துணியை போர்த்திவிட்டால் கூடாரம் உண்டாகிவிடும். அந்த எடுபிடி இளைஞர்களில் ஒருவன் இவரை நெருங்கி "ஐயா, பருகுவதற்கு நீர் வேண்டுமா?" "அதற்குத்தான் ஊருக்குள் ஆள் போயிருக்கிறதே - வரட்டும் !" "வழியிலிருந்த சுனையில் சிறிதளவு நீர் சேந்திக்கொண்டோம். நீர் தேனாக தித்திக்கிறது - வேண்டுமா ?" தாகம் அவருடைய தொண்டையை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது. "சரி !" சுரைக்குடுவையிலிருது மிகுந்த பணிவுடன் அவன் பெருந்தச்சருக்கு நீர் மொண்டு விடுவதை அவருடைய பிரதம சீடர்கள் உற்று நோக்கினார்கள். பொறாமையின் சுவடுகள் அவர்கள் கண்களில் லேசாகப் படிந்திருந்தன. *********************************************************************************************** மறுநாள் காலை. அந்தக் குன்றுகளுக்கு முன்னால் சிறு ஹோமத்தீ வளர்ந்துகொண்டிருந்தது. பாறைகளின் பல இடங்கள் சந்தனம் - குங்குமப் பொட்டிடப்பட்டு காட்சியளித்தன. முக்கியப் பாறையின்மேல் மாலை சாற்றப்பட்டிருந்தது. பரமேஸ்வரப் பெருந்தச்சர் பூமிபூஜையில் தம்மை மறந்து ஈடுபட்டிருந்தார். அவருக்கு உதவியாக அந்த இரு இளைஞர்களும் ஓடியாடி வேலைசெய்துகொண்டிருந்தார்கள். "ஹே வல்லத்துக் கிராம தேவதைகளே ! இஷ்ட தெய்வங்களே ! சப்த மாதர்க்களே ! இந்த இடத்தில் மகாதேவருக்கு ஒரு குடைவரையை எடுப்பிக்க வேண்டுமென்று எங்கள் அரசரின் மகன் விரும்புகிறார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். இந்தப் பணிக்கு உங்கள் முழு ஆழியையும் நல்குங்கள். இந்தப் பாறையில் ஏதாவது ஆத்மா ஆவிர்பரித்திருந்தால் அது வேறு பாறைக்கு நகர்ந்து செல்ல உத்தரவிடுங்கள் ! இந்தக் கற்களில் தோஷங்களிருந்தால் அதனை நீங்கி எங்கள் திருப்பணிக்குக் குந்தகம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் பட்சிகளும் விலங்குகளும் ஊர்வனவவும் வேறு இடத்திற்கு நகர்ந்துசெல்லட்டும் ! எங்கள் குருவாக விளங்கும் மய ஆச்சாரியரே ! உங்கள் உத்தரவின் பேரால் இந்தத் திருப்பணியைத் துவங்குகின்றோம். உங்களின் ஆன்மா எங்களை ஆசீர்வதிக்கட்டும் !" அவர் தன்னுடைய தந்தையை மனதில் வரித்தார். கண்களில் நீர்மல்க கைகூப்பினார். "ஐயா ! எனக்கு கண்ணுக்குக் கண்ணாக நின்று இந்த தேவ வித்தையைக் கற்பித்தீர். அதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் ? இதோ உங்கள் பெயரைச் சொல்லி மற்றொரு திருப்பணி துவங்கியிருக்கிறேன். உங்கள் ஆசிகள் வேண்டும் !" "நீ நினைப்பதைவிடவே இந்தத் திருப்பணி சிறப்பாக அமையும் ! எமது ஆசிகள்" வானத்திலிருந்து இரண்டு கரங்கள் உயர்ந்து அவரை ஆசீர்வதித்தன. இவ்வளவுதான் அவருக்குத் தேவைப்படுவதெல்லாம். உத்தரவு கிடைத்துவிட்டது. இனி பாறைகளிடம் அனுமதி கேட்கவேண்டியதுதான் மீதமிருக்கும் ஒரே வேலை. அவர் மெதுவாக கிழக்குப் பக்கம் அமைந்திருந்த குன்றுப் பாறைகளின் மீதேறினார். அகழப்படப்போகும் முதற்பாறை கிழக்கு திசையை நோக்கியிருத்தல் நலம் - ஏனெனில் முதற் குடைவரையாவது கிழக்கு நோக்கி அமைதல் வேண்டும். "சீடர்களே ! கற்களில் ஆண் கற்கள் - பெண் கற்கள் - நபும்சகக் கற்கள் என்று பல வகைகளுண்டு. தேடித் தெரிவு செய்து நமது திருப்பணியை ஆரம்பிக்க வேண்டும். பிளவுகள் இல்லாத இடமாக - பெரும்பாறைகள் நன்கு இருத்தி நிற்கும் இடமாக - தோஷமில்லாத இடமாக - தேர்வு செய்ய வேண்டும். இதனை கற்களைத் தட்டிப் பார்த்து மட்டும் சொல்லிவிட முடியாது. ஆத்மார்த்தமாக இந்தப் பாறைகளோடு பாறையாக நாமும் ஒன்றவேண்டும். பாறைகளுடன் பேசிப் பழக வேண்டும். அவற்றைப் பிளக்க அவற்றின் அனுமதி கேட்க வேண்டும். உங்களில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து எங்கும் நிறைந்த பரம்பொருளுக்குக் கோயில் எழுப்பப் போகிறேன் - அனுமதிக்கிறீர்களா என்று இறைஞ்சி நிற்க வேண்டும். அவை இசைந்தால்தான் இந்தப் பணி நல்ல முறையில் நடக்கும். அவை மறுத்தால் நான் உளி பிடிக்க மாட்டேன். பாறைகளுடன் பேசும் மொழி உங்களுக்குத் தெரியுமா ?" அவர் கம்பீரமாகக் கேட்டுவிட்டு நாலாபுறமும் நோக்கினார். எவரும் பதில் பேசவில்லை. ஒரு சிட்டுக்குருவி மட்டும் கீச் கீச்சென்று கத்திக்கொண்டு குறுக்கே பறந்து சென்றது. "ஆஹா ! அதுதான் - அதுதான் சரியான பதில் !" என்றார் பெருந்தச்சர். சீடர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள அந்த இரண்டு எடுபிடிகளும் கண்கள் விரிய அவரை நோக்கினார்கள். வியந்தார்கள். இருவரில் ஒருவன் பளிச்சென்று அவருடைய பாதங்களில் வீழ்ந்தான். "பாறைகளுடன் பேசும் மொழியை எனக்கும் தாங்கள் கற்றுத்தர வேண்டும் !" என்று கரம் குவித்தான். "எழுந்திரு ! எழுந்திரு ! எனக்கென்ன தெரியும் - நான் சிறியவன். மிகச் சிறியவன்" என்று அவர் சங்கடப்பட்டார். அவன் தீவிரமாக அவரை உள்வாங்கிக்கொண்டான். அவரிடம் கற்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் என்பது அவனுக்கு அந்தக் கணத்தில் புரிந்தது. சீடர்களுக்கு உள்ளுர கோபம் பொங்கியது. அந்த இருவரையும் அவர்கள் புறக்கணிக்க - சங்கடப்படுத்த - முடிந்தால் அந்தப் பணியிலிருந்து வெளியேற்றத் தீர்மானித்தார்கள். *********************************************************************************************** அந்தப் பகுதிகளில் உளிகளின் சப்தம் விடாமல் கேட்கத் தொடங்கியது. குகைத்தளம் மற்றும் தரை சம அளவுள்ள சதுரங்களாக பிரித்துக்கொள்ளப்பட்டன (6). ஒருவனுக்கு இத்தனை சதுரம் - இத்தனை குழி அகலம் என்று ஒதுக்கப்பட்டது. மதியத்திற்குள் இத்தனை சதுரங்கள் அகழ்ந்து முடிக்கப்படவேண்டும் - இரவுக்குள் இன்னின்ன பகுதிகள் குடையப்பட்டிருக்கவேண்டும் என்ற கணக்கை பரமேஸ்வரப் பெருந்தச்சரின் உதவியாளன் ஓலையில் எழுதிக்கொண்டிருந்தான். (6) மாமண்டூரிலும் மாமல்லபுரத்திலும் முடிக்கப்படாத குடைவரைகளிலிருந்து இந்தச் செய்தி புலனாகின்றது மாமண்டூர் குடைவரையில் கற்கள் சதுரங்களாக பிரிக்கப்பட்டு அகழப்பட்டதற்கான தடயம் பாறையின் பகுதிகள் சிறிது சிறிதாய் வெட்டி எடுக்கப்பட, பரமேஸ்வரர் உள்ளுக்குள் விரியும் பாறையின் தன்மையை நிதானமாக ஆராய்ந்தார். பாறையின் குறுக்கே ஓடிய கறுப்பு வரிகள் அவரிடம் சங்கேத பாஷையில் சேதிசொல்லின. குடைவரைப் பணி நடந்துகொண்டிருக்கையில் திடீரென்று பாறையில் பிளவு தோன்றிவிடக்கூடாது என்பது அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது. "அவசரப்படாதீர்கள் - நிதானமாகக் குடையுங்கள் என்று அவ்வப்போது அவர் அறிவுறுத்தி வந்தார். எடுபிடிகள் இருவரும் சுறுசுறுப்பாக சமையலில் ஈடுபட்டிருந்தார்கள். பணியில் மும்முரமாக இருந்துகொண்டே பரமேஸ்வரர் என்ன செய்கிறார் - எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கிறார் என்பதை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார்கள். கை வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும் அவர்களது கவனம் தன் பேரில்தான் இருக்கிறது என்பதை பரமேஸ்வரர் அவர்கள் கேட்ட கேள்விகளால் உணர்ந்துகொண்டார். வருடக்கணக்காக அவரிடம் தங்கி வேலை பழகும் முக்கிய சீடர்கள்கூட கேட்கத்தவறிய -கவனிக்கத்தவறிய விஷயங்களை நுட்பமாக கவனித்துக் கேட்பது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. அவர்களில் ஒருவனையாவது விரைவில் தச்சுப்பணியில் அமர்த்திவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார் அவர். சீடர்களுக்கு இந்த நெருக்கம் மிகுந்த சங்கடமளித்தாலும் எடுபிடிகளின் கைப்பக்குவம் அவர்களை ஏறக்குறைய கட்டிப்போட்டுவிட்டது. வழக்கமான சமையல்காரனை ஏறக்குறைய ஓரங்கட்டிவிட்டு புதிதாக வந்த எடுபிடிகளையே மூன்று வேளைகளும் சமைக்கச்சொல்லி வயிறார தின்று தீர்த்தார்கள் அவர்கள். *********************************************************************************************** "கைகளை நீட்டு !" நீட்டினான். "அடடா - மிக மிக மென்மையாக இருக்கிறதே அப்பா ! உளியைப் பிடித்தால் காப்புக் காய்த்துப்போய் விடுமே !" "பரவாயில்லை ஐயா ! பரம்பரையாக வணிகத்தில் ஈடுபட்டிருந்த குடும்பம் எங்களுடையது. சிறு வயதிலிருந்தே அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டதில்லை - அதனாலென்ன ? விரைவில் பழகிவிடும். நீங்கள் எங்களை தச்சுப்பணியில் ஈடுபடுத்தப்போகிறீர்கள் என்பதே மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது" "இருவரையும் ஒருசேர பணியில் ஈடுபடுத்த முடியாது. அதற்கு சில காரணங்கள் உண்டு. உங்களிருவரில் முதலில் உன்னைத்தான் பணியில் அமர்த்தப் போகிறேன். சிறிது நாட்கள் கழித்து உன் நண்பனைப் பற்றி யோசிக்கலாம் !" அவர் அந்தக் காரணங்கள் என்னவென்று சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு அது தெரிந்தேயிருந்தது. ஏற்கனவே பொறாமையில் புழுங்கித் தவித்துக்கொண்டிருந்த சீடர்களிடம் இது மிகுந்த மனவருத்தத்தைத் தோற்றுவிக்கும் என்பதுதான் அது. அவர் தயாராக வைத்திருந்த உளியையும் சுத்தியலையும் அவனிடம் கொடுத்தார். சட்டென்று அவன் அவருடைய பாதங்களில் விழுந்து பரவினான். "அடடா - எழுந்திரப்பா ! கலைவாணியான சரஸ்வதிதேவியின் அருள் உனக்கு என்றும் இருக்கட்டும். இதோ - இவ்வாறுதான் உளியைப் பிடிக்க வேண்டும். சுத்தியலில் முழுசக்தியையும் பிரயோகித்து உளியின் மத்தியில் அடி விழுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கே, பிடி பார்ப்போம் !" அவன் பயபக்தியோடு உளியை வாங்கிக்கொண்டான். பாறையில் உளியைப் பதிக்க உள்ளுக்குள் சிலீரென்று எதோ ஓடியது. "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ? இதற்காகத்தானே இத்தனை தூரம் குடும்பத்தைப் பிரிந்து வந்து சிரமப்பட்டு..... இதற்குத்தானே ?" அவன் மனதை ஒருமுகப்படுத்தி உளியின் தலையில் நச்சென்று சுத்தியலால் அடிக்க "ணங்!" என்றொரு சப்தம் எழுந்தது. "பாறையின் பேச்சை கவனித்தாயா ? இந்த உளிச்சப்தம்தான் உனக்கும் பாறைக்கும் ஒரு உறவை உருவாக்கப்போகும் உன்னத மொழி. அதனை கவனமாகக் கேள் !" அவன் மறுபடியும் சுத்தியலை ஓங்கினான். "நீ உளியைப் பிடித்திருக்கும் முறையே சரியில்லை ! இப்படிப்பிடித்தாயானால் அடி உன் விரல்களுக்குத்தான் விழும். இதோ பார் ! இப்படி நேராக உளியைப் பிடிக்கவேண்டும். முதலில் பலமாக சுத்தியலால் அடிக்காமல் மெதுவாக அடித்துப் பழகு - புரிகிறதா ?" *********************************************************************************************** பரமேஸ்வரரின் முக்கிய சீடர்களில் ஒருவன் அவரை நெருங்கி நின்றான். "ஐயா !" "சொல்லப்பா !" "தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது ! நீங்கள் புதிதாக சேர்த்துள்ள எடுபிடி இப்போது சுத்தியலெடுத்து கல்லுடைக்க ஆரம்பித்துவிட்டான்.." "ஆம் - நான்தான் அவனுக்கு உளியெடுத்துக் கொடுத்தேன் !" "தாங்களா எடுத்துக் கொடுத்தீர்கள் ? அடடா - விபரம் புரியாமல் நமது பயல்கள்..." அவன் அவரிடம் வேகவேகமாக விடைபெற்றுக்கொண்டு விலகுவதைக் கண்டு பரமேஸ்வரரும் அவனைப் பின்தொடர்ந்தார். குடைவரையின் மேற்பரப்பில் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் ஆதனைச் சுற்றி அனைவரும் நின்றுகொண்டு கேலிபேசிக்கொண்டிருந்தனர். "அடடா - அடுத்த பெருந்தச்சர் கல்செதுக்கும் கலையைப் பாரேன் !" "தச்சர் பாவம் மெய்ப்பை கழற்றாமலே பணிபுரிந்துகொண்டிருக்கிறாரே - யாராவது பனையோலை கொண்டு விசிறுங்களேன் !" "ஆதப் பெருந்தச்சர் எதற்கு சிற்பங்கள் வடிக்காமல் கல்லுடைத்துக்கொண்டிருக்கிறாராம் ?" "யாருக்குத் தெரியும் - யாராவது கேட்டுச்சொல்லுங்களடா !" "அடேய் - பெருந்தச்சர் என்னசொன்னாலும் பேசாமல் மெளனம் சாதிக்கிறாரடா !" "உளியை எடுத்து மண்டையில் நாலு சாத்து சாத்தினால் தானாகப் பேசிவிட்டுப் போகிறார் !" "என்ன பந்தயம் ? இந்த உளியால் தலையில் மட்டென்று அடித்தால் ஆதப் பெருந்தச்சர் பேசுவார் என்றா சொல்கிறாய் ? நான் பேசமாட்டார் என்கிறேன் !" "சரி - பந்தயத்தை ஒப்புக்கொள்கிறேன் - அடேய் யாராவது உளி கொடுங்களேன் !" - இப்படிச் சொன்னவன் முகம் சட்டென்று கூட்டத்திற்கு நடுவில் பரமேஸ்வரப் பெருந்தச்சரைப் பார்த்ததும் வெளிறிற்று... "...அது... வந்து...." அவன் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்துகொள்ளப்பார்க்க அந்தக் கூட்டமோ அவனை உள்ளே விடாமல் தடுக்க... "யாரும் இருந்த இடத்தை விட்டு அசையக்கூடாது. ஒரு அடி அசைந்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும் !" என்றார் பரமேஸ்வரர். எவரும் அசையவில்லை. "நீங்கள் இருவரும் இப்படி வாருங்கள் !" - கேலிபேசிய அந்த இருவரும் முன்னே வந்தார்கள். "உங்கள் பெயர் - ஊர் - தாய் தந்தை விபரங்களைச் சொல்லுங்கள் ! " சொன்னார்கள். "இன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்கு நீங்கள் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் எந்த மூலையிலும் எந்தவிதமான சிற்பப் பணியிலும் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிடுகிறேன். இதற்கான அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மீறி ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் தலை உடலில் இருக்காது. மூட்டை முடிச்சுக்களுடன் உடனடியாக வெளியேறுங்கள் ! அடேய் - அவர்களின் பெயர் மற்றும் விபரங்களைக் குறித்து முறி தயார்செய். அரசாங்கத்துக்கு அனுப்பியாக வேண்டும் !" அவர்கள் பேயறைந்ததுபோல் நின்றார்கள். "வெளியேறுங்கள் என்றது காதில் விழவில்லை ?" முகத்துக்கு நேராக உறுமினார் பெருந்தச்சர். மிக மிக மென்மையான மனிதராக அதுவரை அவர்களுக்கு அறிமுகமாகயிருந்த பெருந்தச்சரின் நரசிம்மாவதாரம் அவர்களின் வயிற்றைக் கலக்கியெடுத்தது. கால் நடுங்க வெளியேறினார்கள். "அவர்களின் கேலிப்பேச்சிற்கு உறுதுணையாயிருந்த இந்தக் கூட்டத்தில் இருப்பவர் அத்தனை பேருக்கும் நாளை முழுவதும் உணவில்லை - நீர் மட்டும்தான் ஆகாரம். அதுதான் தண்டனை. பிடித்தமாக இல்லையென்றால் மூட்டையைக் கட்டலாம் !" அவர் ஆதனை நெருங்கினார். "நீ என்னுடன் வா !" அவர் ஆதூரத்துடன் அவனை ஏதோ கேட்பதும் அதற்கு அவன் பணிவுடன் மறுமொழி சொல்வதும் சீடனுக்குத் தெரிந்தன. *********************************************************************************************** அவர் பனையோலையில் வரையப்பட்டிருந்த சித்திரங்களைக் காண்பித்து விளக்கிக்கொண்டிருந்தார். "இதுதான் போதிகைக் கரங்கள் - இது கட்டு - இது சதுரம் - இவை அரைத்தூண்கள் - புரிந்ததல்லவா ?" "புரிந்தது" "இதிலிருந்துதான் குடைவரைக் கோயில் ஆரம்பமாகின்றது. இதற்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையோடு அகழ வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் ஒட்டுமொத்த பணியும் பாதிப்படைந்துவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள் !" சீடர்களின் முகத்தில் சிறிதளவு பயம் தெரிந்தது. குடைவரைப் பணியில் மிகப்பெரிய பிரச்சனை சிறிதும் தவறு நேர்ந்துவிடக்கூடாது என்பதுதான். "சரியான ஆழம் வரும் வரை அகழ்ந்துவிட்டு சூலதேவர் மற்றும் மழுவடியாருக்கு இடம்விட்டுவிட்டு நடுவில் குடைந்துகொண்டே செல்ல வேண்டும்" "குடைவரைக்கு இடமும் வலமும் கோஷ்டங்கள் உண்டா ?" கேள்வி கேட்டது ஆதன்தான். "அட, அது உனக்கெப்படித் தெரியும் ?" "அன்று இளவரசர் கந்தசேனர் வந்திருந்தபோது தங்களுடன் பேசிக்கொண்டிருந்தது சிறிதளவு காதில் விழுந்தது.... அவர் தேவக்கோட்டங்கள் அகழ விருப்பம் தெரிவித்ததும் தாங்கள் தயங்கியதும்...." "ஆம் இதுவரை நான் அப்படிப்பட்ட பணி செய்ததில்லை என்பதால் தயங்கினேன்..." "சிறியவன் நான் - இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்கிறேன். இந்த இரண்டு கோட்டங்களும்தான் இக்குடைவரைக்கு பெருமை சேர்க்கப் போகின்றன என்று ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்கின்றது !" பரமேஸ்வரர் லேசாக புன்னகைத்தார். *********************************************************************************************** குடைவரையின் கிழக்குப் பக்கத்தில் ஆழமான கோட்டம் அகழப்பட்டு அங்கே அழகே வடிவான கணவதிப் பிள்ளையார் பெருந்தச்சரின் கைவண்ணத்தில் எழுந்தருளினார். லளிதாசனத்தில் அமர்ந்தபடி ஒரு பக்கம் திண்டு வைத்து அதில் சாய்ந்து ஓய்வாக இருக்கும் நிலையில் வடிக்கப்பட்ட அந்த அற்புதமான சிற்பம் பார்ப்பவர்களை பரவசப்பட வைத்தது. தென்புறத்தில் சேட்டை தேவி உருவாகிக்கொண்டிருந்த நிலையில் பரமேஸ்வரருக்கு திடீரென்று ஒருநாள் நெஞ்சுவலி கண்டது. பக்கத்து ஊரில் தேடிப் பிடித்து வைத்தியரை வரவழைத்தார்கள். "கல்தூசு தச்சருக்கு ஒத்துக்கொள்ளவில்லை - நுரையீரல் முழுவதும் கெட்டிருக்கிறது - சிறிது காலத்திற்கு குடைவரையின் பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாது - கல்தூசு அவருக்கு ஆகாது " என்று வைத்தியர் எச்சரித்துவிட்டுப் போனார். ஆனால் காஞ்சிக்குக் கிளம்பிக்போக குடும்பத்தார் மன்றாடியும் தச்சர் மறுத்துவிட்டார். தனித்த இரவில் ஆதன் அவருக்கு அருகில் அமர்ந்து கால்பிடித்துவிட்டுக்கொண்டிருக்கும்போது தான் ஏன் ஊருக்குப் போகவில்லை என்ற இரகசியத்தையும் அவனிடம் சொன்னார். "எனக்குள் இருக்கும் அனைத்தையும் உனக்குள் இறக்காமல் நான் இறந்துவிட்டால் என் கடமையிலிருந்து தவறியவனாகிவிடுவேன் !" "ஐயா !" - அவன் குரல் தழுதழுத்தது. அன்றுமுதல் ஆதன் அவருடைய பிரதம சிஷ்யனானான். தச்சருக்கு அருகிலிருந்த தென்னந்தோப்பில்தான் வாசம். பொழுதுக்கு மூன்று தடவைகள் அவரிடம் பணி நடந்துள்ள விபரங்களை தெரிவிப்பது ஆதன் வேலை. மேற்கொண்டு யோசனைகள் தெரிவித்தல் மட்டுமே அவரின் பணி. ஒவ்வொரு நாள் அதிகாலை பொழுது புலரும் நேரத்தில் கல் பொளிக்கும் பணி துவங்குவதற்குமுன் அவர் இடங்களைப் பார்வையிட்டுவிடவேண்டும் - பின் நாள் முழுவதும் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கக்கூடாது. மூன்று குடைவரைகளும் சீரிய முறையில் முடிவடைந்து கொண்டிருந்தன. என்றாலும் பரமேஸ்வரரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டுதான் வந்தது. ஒருநாள் மதியம் பரமேஸ்வரரிடமிருந்து திடீரென்று வந்து போகும்படி ஆதனுக்கு அழைப்பு வந்தது. தென்னந் தோப்பிற்குள் நுழைந்தால் - பரமேஸ்வரருக்கருகில் இளவரசர் கந்தசேனர். ஆதனை அருகில் அழைக்கிறார் பரமேஸ்வரர். "இளவரசே ! வாக்குக் கொடுத்ததுபோல் உங்கள் தமக்கையை உங்களிடமே ஒப்படைத்து விட்டேன் ! இனி இவளுக்கு சொல்லித்தரவேண்டிய வித்தை எதுவுமில்லை !" - ஆதன் கரங்களை கந்தசேனரிடம் ஒப்புவிக்கிறார் அவர். ஆதன் திடுக்கிட்டுப் போய் கந்தசேனனை நோக்குகிறான். "கொம்மை ! என்னை மன்னித்துவிடு. ஒரு பொய்யைச் சொல்லி நீ வித்தை கற்பிப்பது எனக்கு சிறிதும் பிடித்தமாக இல்லை. மேலும் நமது தந்தைக்கும் நீ இளவரசி என்கிற விபரம் தெரியாமல் இவரிடம் பல காலம் பணியிலமர்ந்து வேலை செய்வதில் ஒப்புதலில்லை. உன்னுடைய முரட்டுப் பிடிவாதத்தினால்தான் இத்தனை காலம் வீட்டை விட்டுப் பிரிந்திருப்பதற்கே மனமொப்பினார் தந்தை. இரண்டு பேரும் கலந்தாலோசித்து பெருந்தச்சரிடம் ஒருநாள் உண்மையைச் சொல்லிவிடுவது என்று முடிவெடுத்தோம்.... பெருந்தச்சரிடம் எக்காரணம் கொண்டும் இந்த செய்தி தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவேண்டாமென்று சொன்னோம் ! விபரம் புரிந்தபிறகுதான் உன்னை தச்சுப்பணியிலேயே அமர்த்தினார் அவர்...." "ஐயா ! என்னை மன்னித்துவிடுங்கள் !" பெருந்தச்சரின் முகத்தில் லேசான முறுவல். "முடிந்தவரை உன்னைத் தெரிந்ததாக இந்தக் கிழவன் காட்டிக்கொள்ளவில்லை, பார்த்தாயா ? வேடம் மிக நன்றாகவே கட்டுகிறாய் அம்மா ! என்ன, தனங்களை மறைக்க இடுப்பில் துணியை சுற்றிக்கொண்டு மெய்ப்பையையும் கழற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டாயே - அதைப் பார்க்கும்போதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கும்..." "பெருஞ்சிற்பியாரே ! நான் கேட்டுக்கொண்டபடி கொம்மையை ஒரு திங்கள் காஞ்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். பாண்டி நாட்டிலிருந்து இளவரசர்...." கொம்மையின் முகத்தில் சட்டென்று வெட்கம் பரவுகிறது. பெருந்தச்சரின் கால்களில் விழுகிறாள் அவள். "நீண்ட ஆயும் ஆரோக்கியமும் பெற்று நிறைவாழ்வு வாழ்வாயம்மா !" என்று வாழ்த்துகிறார் பெருந்தச்சர். அவருடைய கண்களில் வழியும் நீரை ஆமோதிப்பதுபோல் வானத்திலிருந்து மெல்லிய சாரல்கள் பூமியில் இறங்குகின்றன. (முற்றும்) கல்வெட்டுச் செய்தி வல்லம். தமிழ்நாட்டில் பல வல்லங்கள் உள்ளன. நாம் இங்கு குறிப்பிடுவது செங்கல்பட்டு மாவட்டத்து வல்லத்தை. இங்கு அமைந்துள்ள பாறைக் குன்றுகளின் மீது அமைந்துள்ளன மூன்று குடைவரைகள். மூன்றும் மகேந்திரவர்ம பல்லவர் காலத்தவை என்று கணிக்கப்பட்டுள்ளன. முதல் குடைவரையில் மகேந்திரரின் விருதுப்பெயர்களேடு இக்குடைவரை செய்வித்த வயந்தப்பிரியர் மகன் கந்தசேனன் பெயர் பதிவாகியுள்ளது. மீதமிருக்கும் இரண்டு குடைவரையில் உள்ள கல்வெட்டுக்கள்தாம் இக்கதையின் கருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் குடைவரைகள் பல இருப்பினும் அவற்றைக் கட்டுவித்தவர்கள் பெரும்பாலும் அரசர்களே. திருப்பரங்குன்றத்து நக்கன் கொற்றி அம்மை விதிவிலக்கு. ஆனால் நக்கன் கொற்றிக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பெண்கள் உருவாக்கியவை இந்தக் குடைவரைகள் என்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு. அது மட்டுமல்ல - இரண்டில் ஒன்று பல்லவப் பேரரசர் மகளாலும் மற்றொன்று சாதாரணக் குடிமகள் ஒருவராலும் உருவானது என்பது ஆச்சரியமான விஷயம். பலர் பார்வையிலும் படத்தவறிய இக்கல்வெட்டுக்களை முதல் முறையாக பதிவாக்கிய மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய ஆய்வாளர்கள் நமது நன்றிக்குரியவர்கள். திருக்கோயில் - செங்கல்பட்டு வல்லம் - இரண்டாவது குடைவரைக் கோயில் இடம் - முகப்பு உத்திரம் காலம் - முதலாம் மகேந்திரவர்மர் (கி.பி. 590 - 630) கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - வரலாறு இதழ் 1 கல்வெட்டுப் பாடம் 1 லக்க சோமாசியார் மகள் 2 தேவகுலம் திருக்கோயில் - செங்கல்பட்டு வல்லம் - மூன்றாவது குடைவரைக் கோயில் இடம் - முகப்பு உத்திரம் காலம் - முதலாம் மகேந்திரவர்மர் (கி.பி. 590 - 630) கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - வரலாறு இதழ் 1 கல்வெட்டுப் பாடம் 1 பல்வ பேர் அரைசர் மகள் கொம்மை தேவகுலம் தேவகுலம் என்பது திருக்கோயில்களைக் குறிக்கும். மகேந்திரர் தேசத்தில் உண்டாக்கிய கலையார்வம் பேரரசர் மகளாரிலிருந்து சாமானியர் வரை பாய்ந்து பரவியிருந்தது என்பதற்கு இதுவும் சான்று. அரசர்கள் இளவரசர்களுக்கு இணையாக "நானும் ஒரு குடைவரை செய்விப்பேன் !" என்று எழுந்து நின்ற கொம்மையும் அவர்களின் தோழி - பெயர் தெரியாத அந்த லக்க சோமாசியார் மகளும் - கண்களில் நிற்கின்றனர். பரமேஸ்வரப் பெருந்தச்சரால் கடைசிவரை அந்த சேட்டை தேவி சிற்பத்தை செய்து முடிக்க முடியவில்லை. இன்று வரை அது பூர்த்தியாகாத சிற்பமாகவே நிற்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது வல்லம் குடைவரைகளுக்கு ஒரு மாலை வேளையில் சென்று அந்தக் குடைவரைகளை - சிற்பங்களைத் தொட்டுப்பாருங்கள். அவற்றை செய்வித்த அந்த இரண்டு பல்லவர்காலப் பெண்கள் பற்றி தனிமையில் யோசியுங்கள். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |