http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 26
இதழ் 26 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2006 ] 2ம் ஆண்டு நிறைவு - மகேந்திரர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
கடவுள் வாழ்த்து
அரசர் அரசனாம் மகேந்திரன். அவன் மகுடத்தை அலங்கரித்த பாதங்கள் அண்டத்தின் இயக்கமாய் ஆட்டமாடும் அழகிய குஞ்சித பாதங்கள். உருத்திர சிவ பாதங்கள் நமைக் காக்கட்டும். லலிதா: இதோ கோர்ட்யார்ட் மரியட், அறை எண் 325. உள்ளே செல்வோம் லலிதா: யக்ஞா! யக்ஞா! யக்ஞா: சொல்லுடா. லலிதா: இங்கே வேறு யாரேனும் இருந்தாலும், இனியது ஒன்று சொல்கிறேன். யக்ஞா: விஷயத்தை நீ சொல்லு. இனியதா இல்லையா-னு நான் சொல்றேன். லலிதா: இன்னிக்கு ஆபீஸை விட்டு வரும்போது ஒரு குறி சொல்லுகிற இத்தாலியன் ஃபிகரைப் பார்த்தேன். அவ சொன்னா "உன்னாலதான் இந்த வரலாறு.காம் இதழ் வெளி வர லேட்டாகும்". யக்ஞா: இதைச் சொல்ல என்ன ஜோசியம் வேண்டிக் கிடக்கு? லலிதா: முழுசாக் கேளுடா! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஒரு ஆர்ட்டிகள் எழுதி இந்த இதழை வெளியிடுவோம்னு சொன்னா. இலாவண்யா: லேட்டஸ்டானா? லலிதா: ஒரு புது முறையானு வெச்சுக்கோயேன். யக்ஞா: அப்போ, இதுவரை வராத வகையில ஒரு ஆர்ட்டிகள் எழுதலாம். லலிதா: கதை, கட்டுரை, நாடகம், நேர்காணல் எல்லாம் வந்தாச்சு. ஒரு கற்பனை உரையாடல் கூட கமல் எழுதிட்டாரு. பேசாமல், நம்ம டிஸ்கஷனையே எழுதிடலாம். யக்ஞா: நாம அடிக்கற வெட்டி அரட்டையையா? இலாவண்யா: வெட்டி அரட்டைக்கு நடுவுல குட்டி குட்டியா பல சுவாரசியமான விஷயங்களும்தானே பேசறோம். யக்ஞா: இந்த இதழ் மகேந்திரரைப் பத்தினதுங்கறதால, நாமளும் அவர் சம்பந்தமா ஏதாவது பொங்கல் போடலாம். லலிதா: இந்தியத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக..ஐயையோ...சாரி...வரலாறு.காம்-இல் முதல் முறையாக, அம்பலத்துக்கு வந்து பல நூற்றாண்டுகளே ஆன, புத்தம் புதிய 'எள்ளல் நாடகமான... இலாவண்யா: அரத பழசுனு சொல்லு! லலிதா: பகவதஜ்ஜுகத்தைப் பற்றிய ஒரு அரட்டைக் கச்சேரி. அப்படீனு விளம்பரப் படுத்தினா எப்படி இருக்கும்? யக்ஞா: கேவலமா இருக்கும். லலிதா: சரி சரி. நீ பகவதஜ்ஜுகம் படிச்சு இருக்கியா? யக்ஞா: அதுல இன்ன கீது படிக்கறத்துக்கு. இலாவண்யா: என்ன இப்படிக் கேட்டுட்ட! யக்ஞா: ராஜா காலத்து ரொமான்ஸ்ல என்ன மேட்டர் இருக்கு? லலிதா: ரொமான்ஸ்-னு உனக்கு யார் சொன்னா? இது ஒரு satire-டா.. இலாவண்யா: மகேந்த்திரரோட நக்கல் முன்னாடி சோ, கிரேஸி மோகன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. யக்ஞா: அப்போ ஸ்டோரிலைனை அவுத்து வுடு... லலிதா: அந்த கதையைப் புரிஞ்சுக்கணும்னா..."சரி, தெரிந்துகொள்ள நீ தீர்மானித்துவிட்டபடியால் புண்ணியப் பாதையில் செல்லும் எங்களை..." யக்ஞா: டாய்! மரியட்டுக்கு வர பாதையே உனக்கு தெரியலை. புண்ணியப் பாதையில நீ போகப் போறியா. லலிதா: நான் போகலைடா. இந்தக் கதை இப்படிதான் ஆரம்பிக்கும். சூத்திரதாரி அவனோட விதூஷகனுக்கு கதை சொல்லும்போது இப்படிதான் ஆரம்பிப்பான். நாம எல்லாம் "ஒரு ஊரில ஒரு நரி இருந்துதாம்" அப்படீன்னு ஆரம்பிப்போமே. அந்த மாதிரி, மகேந்திரரோட இரண்டு நாடகங்களிலுமே சூத்திரதாரி அவனோட சகாக்கு சொல்ற மாதிரிதான் கதை ஆரம்பிக்குது. அவன் முடிக்கும்போது, லைட்ஸ் அந்த பக்கத்தில ஆஃப் ஆகி, வேற பக்கத்துல நாடகத்தோட மெய்ன் காரெக்டர் பக்கம் ஒளி வருது... யக்ஞா: அப்போ இந்த சூத்திரதாரிதான் நரேட்டரா? இலாவண்யா: அதே அதே. சபாபதே! லலிதா: சரி, இதாம்பா கதை. ஒரு யோகிக்கும், காலத்தால் கட்டாயப்படுத்தபட்டு அவர் கிட்ட இருக்கிற சிஷ்யனுக்கும் நடக்கற சம்பாஷணைகள்தான் கதை. யோகி சிஷ்யனுக்கு வைதீக கல்வியைக் கத்துக் கொடுக்க நினைக்கறார். சிஷ்யன், "அதை ஏன் கத்துக்கணும்-னு" குறுக்குக் கேள்வி கேட்கறான். பல சமயங்களில், சிஷ்யனோட கேள்விகளுக்கு பதில சொல்லமுடியாம யோகி திண்டாடறாரு. யக்ஞா: interesting! அந்த சிஷ்யன் நம்மள மாதிரி practical type போல இருக்கே. இலாவண்யா: practical-ஓ இல்லையோ, சரியான சாப்பாட்டு ராமன். ஒரு ஏழை அந்தண குடும்பத்துல பிறந்து, சாப்பாட்டுக்காக புத்த மதத்தில போய் சேர்ந்தான். அங்க ஒரு வேளைதான் சோறு போடறாங்கன்னு அதையும் விட்டுட்டு, நம்ம யோகிக்கு மூட்டைத் தூக்க போனான். லலிதா: சாப்பாட்டுக்காகதான் வந்தான்னாலும், he is honest enough to accept that. யக்ஞா: இதுல எங்க satire வருது? இலாவண்யா: இரு இரு. அவரசரப்படாத. லலிதா: சிஷ்யன் குரு கிட்ட எப்படி பிச்சை வாங்கறதுன்னு கேட்கறான், அதுல அவர், 'வசை கேட்டும் வாடாதே. இவ்வுலகமிழை வாழ எது வேண்டும் அது மட்டில் யாசி' அப்படீன்னு சொல்றார். அவர் சொன்னபடியே, 'நான் வாழ சோறுதான் வேணும். அதனாலதான் உன் கிட்ட வந்து இருக்கேன்'-னு சொல்றான் சிஷ்யன். யக்ஞா: விவரம் எல்லாம் நானே படிக்கறேன். நீ ட்ரெய்லர் மட்டும் காட்டு. இலாவண்யா: சரி. கதையோட அவுட்லைன் இதுதான். சாப்பாட்டு நேரத்துல பிச்சை கேட்க குருவும் சிஷ்யனும் கிளம்பறாங்க. போற வழியில ஒரு சோலையில இளைப்பாறராங்க. அப்போ யோகி விதிகளை எல்லாம் சொல்லிக் கொடுக்க நினைக்கறார். சாண்டில்யனுக்கோ சாப்பாட்டுலதான் நாட்டம். அப்போ ஒரு ராஜகணிகை அந்த சோலைல அவளோட காதலனுக்காக காத்துகிட்டு இருக்கா. அப்போ ஒரு பாம்பு தீண்ட, அப்புறம் கிரேசி மோகன் டைப் ஆள் மாறாட்டம் நடக்கறது. லலிதா: இது soul மாறாட்டம். அந்த யோகி கூடு விட்டு கூடு பாய்ஞ்சு கணிகையோட உடலுக்குள்ள போக, கணிகையோட உயிரைத் தவறுதலா எடுத்துண்டு போய் எமன் கிட்ட ரெய்டு வாங்கறான் எமதூதன். திரும்ப கொண்டு வந்தா அவ உடலில் யோகியின் உயிர் இருக்கு. அதனால ஃப்ரீ இருக்கிற யோகியோட உடலில் கணிகையோட உயிரைப் பார்க் பண்ணிடறான். இப்போ இதுல 'ஆண்டவன்' யாரு 'அஜ்ஜுகா' யாருனு குழப்பம் வருது. இலாவண்யா: அதுதான் இந்த நாடகத்தின் டைட்டில். 'யோகி + கணிகை' = "பகவதஜ்ஜுகா". லலிதா: இதற்கு முன்னாடி இந்த வகை 'எள்ளல் நாடகங்கள்' இருந்திருப்பதா தெரியலை. இலாவண்யா: In fact, கதையோட தொடக்கத்துலையே சூத்திரதாரி 10 நாடக வகைகளைப் பத்தி சொல்லி, இது புதிய ஸ்டைலுனு பீட்டர் வுடறாரு. யக்ஞா: இதுல குறிப்பா எதை நக்கல் அடிச்சு இருக்காங்க? லலிதா: அவங்களுக்கே தெளிவில்லாம, ஆன்மா, அண்டம், மாயைனு எல்லாம் யாருக்குமே புரியாத வகையில ஜல்லி அடிக்கற ஆசாமிகளை சாண்டில்யனோட கேள்விகள் மூலமா மகேந்திரர் நக்கல் அடிக்கறாரு. இலாவண்யா: உதாரணமா, அதுல வர ஒரு உரையாடல் பகுதிய பார்க்கலாம் <சாண்டில்யன்> : ஆண்டவனே, அப்படியானால் மறுபடியும் வினவுகிறேன். பந்தமறுப்பதா? அது என்ன? <பரிவிராசகர்> : அதுதான் நடுநிலைமை. விருப்புக்கும் வெறுப்புக்கும் ஊடான ஒரு நடுவழி. அதாவது : வாழ்வெனினும் தாழ்வெனினும் ஒன்றாகட்டும் ஆபத்தோ ஆனந்தமோ அசைவற்றிரு. பற்று பகை இரண்டினையும் ஒன்றென்று அறிந்தார்க்கு அந்நிலையே பந்தமின்மை. <சாண்டில்யன்> : அப்படியும் உண்டோ? <பரிவிராசகர்> : இல்லாததைச் சொல்லமாட்டோமே! <சாண்டில்யன்> : அதை அடைவது கூடும் என்கிறாரா ஆண்டவர்? <பரிவிராசகர்> : அதில் சந்தேகமா? <சாண்டில்யன்> : பொய், இது பொய். <பரிவிராசகர்> : அது எப்படி? <சாண்டில்யன்> : அது மெய்யானால் ஆண்டவர் என் மீது ஏன் கோபங்கொள்கிறார்? <பரிவிராசகர்> : நீ படிக்காத காரணத்தால்தான். <சாண்டில்யன்> : நான் படிக்கிறேன், இல்லாவிட்டால் இல்லை. எல்லாவற்றையும் துறந்த உமக்கு அதைப்பற்றி என்ன கவலை? <பரிவிராசகர்> : இல்லை. அது அப்படி இல்லை. (தனது கைத்தடியால் அடித்து விடுகிறார். பிறகு தனது முறையற்ற செயலுக்காக சிரித்துச் சமாளிக்கிறார்.) சீடனாகும் ஒவ்வொருவனுக்கும் அடிபடுவது விதிமுறைக்கு அப்பாற்பட்டதல்ல. அதனால் கோபக்குறி ஒன்றுமின்றி உன்னை அடித்துவிட்டேன். <சாண்டில்யன்> : அழகு! அழகு! கோபமில்லாமலேயே ஆண்டவன் என்னை அடிக்கிறார். விடுங்கள் அந்தக் கதையை. யாசகத்துக்கு நேரம் வந்தது. <பரிவிராசகர்> : முட்டாள். மதியங்கூட ஆகவில்லை. உலக்கையை ஒதுங்க வைத்து, உலை நெருப்பை அணைத்த பிறகு வீட்டுக்காரர்கள் சாப்பிட்ட பிறகுதான் சரியான நேரம். அதனாலே அதோ சோலை ... அங்கே போய் இளைப்பாறலாம். லலிதா: இன்னொரு இடமும் செம காமெடி. களைப்பு <சாண்டில்யன்> : களைப்பூட்டும் பாதை, எங்கே இளைப்பாறுவது? <பரிவிராசகர்> : நல்லது. இங்கேயே இரு. <சாண்டில்யன்> : அழுக்கு, அழுக்கு. <பரிவிராசகர்> : காட்டுநிலம் அழுக்கற்றது. <சாண்டில்யன்> : களைப்பாகி உட்கார வேண்டுமென்றால் அழுக்கையும் சுத்தமென்கிறீர்கள். <பரிவிராசகர்> : வேதவிதிகளையே குறிப்பிட்டேன். நானாகச் சொல்லவில்லை. புகழ் போதை ஏறுகையில் பிழையதனையும் பொறையென்பர் அவ்வழியே எதுவொன்றும் ஆன்மமல்ல அப்படியே உலகியம் அவையெல்லாம். <சாண்டில்யன்> : எத்தனை பெரிய சிந்தனையாளர் தாங்கள், தங்களுக்குமேல் வேதவிதி எங்குள்ளது? <பரிவிராசகர்> : அல்ல. அப்படியல்ல. ஆன்றோர் அரிதியிட்டுச் சொன்னதுவே அலையாத தன்மையதே சாத்திரமாம். சாத்திரத்தின் வேறான பொய்யான சாத்திரங்களை சாற்றினது இல்லையவர் அவ்வொன்றே மெய்யாகும். <சாண்டில்யன்> : நன்று! உங்களுக்குமேல் ஒரு சாத்திரத்தை எனக்குத் தெரியாது, நீங்கள்தான் உயர்ந்த சிந்தனையாளர். யக்ஞா: இந்த சாண்டில்யன் அந்த கால விவேக் போல இருக்கு. இலாவண்யா: சாண்டில்யன் வர இடம் மட்டும் இல்லை. கணிகைய பாம்பு தீண்டினப்பறம் ஒரு மருத்துவரை கூட்டிண்டு வராங்க. கணிகையோட உடல்ல இருக்கற யோகிக்கும் மருத்துவருக்கும் நடக்கற உரையாடல் எல்லாம் கூட நல்ல காமெடி. அந்த காலத்துலயும் சில அரைகுறை மருத்துவர்கள் இருந்திருக்காங்க. <ராஜகணிகை>: முட்டாள் வைத்தியனே, பயனற்ற கிழமே, உயிர்கள் எப்படி மடிகின்றன? உனக்குத் தெரியவில்லை. எந்த வகைப் பாம்பு அவளைக் கொன்றிருக்கிறது? சொல்லும் பார்ப்போம். <மருத்துவர்>: இது ஒரு பெரிய காரியமா? <ராஜகணிகை>: ஏதும் விதிமுறை உண்டா? <மருத்துவர்>: ஏராளம். ஆயிரத்து ஐந்நூறு வரை. <ராஜகணிகை>: சொல்லும் விதிமுறைகளை எங்களுக்குச் சொல்லும். <மருத்துவர்>: கேளுங்கள்: வாதம், பித்தம், சிலேசம், அ . . . புத்தகம் . . . புத்தகம் . . . <சாண்டில்யன்>: ஓஹோ . . . மெத்த படித்த வைத்தியர் முதல் வரியே மறந்துவிட்டார். இருக்கட்டும். நண்பர் தானே, இதோ புத்தகம். <மருத்துவர்>: கேளுங்களம்மா . . . 'வாத பித்த சிலேசனமாம் இந்த விடங்கள் மிகக் கொடியனவாம் மூன்றன் இவைகள் கொடு நாகங்களாம் நான்கென்றளவு ஒன்று இதில் இல்லையதாய்.' <ராஜகணிகை>: ஒரு சொல் தவறு. மூன்றன் என்றல்ல. மூன்று என்று குறிப்பிடவேண்டும். மூன்று என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பால். ஆண்பால் அல்ல. <மருத்துவர்>: ஆ . . . அப்படியானால் இலக்கணப் பாம்பே கடித்திருக்க வேண்டும். <ராஜகணிகை>: விஷம் ஏறும் விஷயத்தில் எத்தனைப் படிகளுண்டு. <மருத்துவர்>: நூறு. <ராஜகணிகை>: இல்லை, இல்லை. ஏழு படிகளே. இப்படி: முகங்கருத்தல் வாயுலர்தல் நிறம் மாறல் உடல் நடுங்கல் விக்கல் முணங்கல் மூர்ச்சையாதல் நாடின் விடமேறும் ஏழு படிகள். இதைக் கடந்து விடமேறிவிட்டால் வானுலக மருத்துவராலும் மாற்றமுடியாது. இதற்குமேல் ஏதும் இருந்தால் சொல்லும் . . . <மருத்துவர்>: இது மெய்யாகவே எங்களுக்குப் பாடமில்லை . . . வணக்கம் தாயே . . . வருகிறேன். யக்ஞா: அது சரி அந்த காலத்த பத்தி கொஞ்சம் விவரங்களும் இருக்குமே. லலிதா: கொஞ்சம் என்ன நிறையவே இருக்கு. பத்து வகையான நாடகங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட வகையான மரம் செடி கொடிகள், மருத்துவக் குறிப்புகள், யோகாசனத்தைப் பற்றி, நதிகள் மற்றும் பல goegraphical details கொடுக்கப்பட்டிருக்கு. இலாவண்யா: மகேந்திரரோட இசை மற்றும் கவிதைப் திறன் பல இடங்களில் தெளிவா தெரியுது. குறிப்பா கணிகை பாடும் பாடல் ரொம்பவே அழகிய வர்ணனைகளோட அமைஞ்சிருக்கு. அந்திவான கதிரவன் பொன்னுருக்கும் பாண்டத்து முகடுடுத்த தங்கம் போல இருக்காம்! எவ்வளவு அழகிய கற்பனை இது! லலிதா: எள்ளல்களுக்கு நடுவிலும் abstract philosophical விஷயங்கள், மதக் கொள்கைகள் எல்லாம் அலசியிருக்கார். இலாவண்யா: முனைவர் கலைக்கோவன் அவரோட புத்தகத்துல குறிப்பிட்டு இருக்கறா மாதிரி, 'கல்வியின் பெருமை' திரும்ப திரும்ப வருது. பல விஷயங்களை முழுமையா ஆழ்ந்து பல வருடங்கள் பயின்றாதான் புரியும். நுனிப் புல் மேய்ஞ்சா குழப்பமே மிஞ்சும் அப்படீங்கறத்துக்கும் சாண்டில்யன் ஒரு நல்ல உதாரணம். லலிதா: இதையெல்லாம் பார்க்கும் போது, மகேந்திரர் அரண்மனையிலேயே இருந்தாரா இல்ல மக்களோட மக்களா இருந்தாரான்னு கூட சந்தேகம் வருது. இலாவண்யா: அவரோட நகைச்சுவை உணர்வுக்கு அவரோட இரண்டு இலக்கியப் படைப்புகளுமே நல்ல உதாரணம். லலிதா: அவரையே கிண்டல் பண்ணிக்கிற வகையிலதானே அவரோட பெயர்களா 'மத்த விலாசன்', 'விரச' அப்படீன்னு எல்லாம் வெச்சுகிட்டு இருக்காரு. யக்ஞா: இப்படியே போனா, முழு கதையயும் நீங்க இரண்டு பேருமே சொல்லிடுவீங்க. அப்புறம் நான் படிக்கும் போது சுவாரசியமா இருக்காது. அதனால stop please. உலகங்கள் தோறுமினி யோகங்கள் ஆளட்டும் வானதூதர் யாவருமே அனுகூலமாகட்டும் ஊழின் இன்னல் யாவுமே இல்லையாகப் போகட்டும் மேலும் நாடும் இன்பமே நானிலத்து நிலவட்டும் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |