http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 26
இதழ் 26 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2006 ] 2ம் ஆண்டு நிறைவு - மகேந்திரர் சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டாய்வு
மகேந்திரவர்மர்! இராஜராஜர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தஞ்சை இராஜராஜீஸ்வரம் எனும் மாபெரும் கற்கோயிலை எடுப்பித்த முதலாம் இராஜராஜர் நினைவிற்கு வருவது போல, மகேந்திரர் என்ற பெயரைக் கேட்டவுடன் நினைவிற்கு வருபவர் பல்லவ மன்னரான, சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மரே. எதனால் அப்படி? அவரும் பல்லவ வம்சத்தில் வந்த ஒரு மன்னர் என்பதைத் தவிர அவரை இன்றும் நாம் நினைவில் கொள்வதற்கும், அவரைப் பற்றி வரலாறு டாட் காமில் ஒரு சிறப்பிதழ் கொண்டு வருவதற்கும், எந்த வகையில் அல்லது எதில் சிறந்து விளங்கினார்? அவரின் சிறப்புகள் ஒன்றா இரண்டா? அடடா! எத்தனை அரிய மனிதராக, சிறந்த மன்னராக, விசித்திரசித்தராக பல கலைகளிலும் வல்லுனராக அவர் திகழ்ந்தார். இப்படி சொல்லிவிட்டால் போதுமா? அதற்கு ஆதாரங்கள் எங்கே என்று கேட்கிறீர்கள் இல்லையா? இதோ இக்கட்டுரையில் மகேந்திரவர்மரின் பல ஆற்றல்களையும், அவரின் பல முகங்களையும் அதற்கான கல்வெட்டு ஆதாரங்களையும் பார்க்கலாம். மகேந்திரர் அமைத்த குடைவரைகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும் அவரின் பல்வேறு விருதுப்பெயர்களும் அவர் பலவகையிலும் சிறந்தவராக, இசை ஓவியம் எனப் பல கலைகளில் வல்லவராக, சிறந்த நாடக ஆசிரியராக, சிறந்த பக்திமானாக, இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவராக, அசகாய சூரராக, பகைவர்களுக்கு கொடுமையானவராக, துன்பப்படுபவர்களுக்கு கருணை காட்டி அரவணைக்கும் சிறந்த மன்னனாக, இனியவனாக, அவனைக் காட்டுகின்றன. அவையனைத்தையும் ஒவ்வொன்றாக இக்கட்டுரையில் பார்க்கலாம். விருதுப்பெயர்கள் அவர் பல விருதுப்பெயர்கள் கொண்டிருந்தமையும், அவர் எடுப்பித்த குடைவரைக் கோயில்களிலெல்லாம், அவரின் பல்வேறு விருதுப்பெயர்களையும் பொறித்தமையும் கொண்டே, அவரின் விசித்திரசித்தத்தை உணரலாம். மிக நீளமான மெய்க்கீர்த்தியினை கல்வெட்டில் பொறிக்கும் வழக்கத்தை முதலாம் இராஜராஜர் ஆரம்பித்தது போல் விருதுப்பெயர்கள் சூடி மகிழும் வழக்கத்தை பல்லவ மன்னர்களிடம் தோற்றுவித்தவர் மகேந்திரர் எனக் கொள்ளலாம். ஏனெனில் அதற்கு முன் இருந்த பல்லவ மன்னர்கள் மகேந்திரரைப் போலவோ அவருக்கு அடுத்து வந்த பல்லவ மன்னர்களைப் போலவோ பல விருதுப்பெயர்கள் கொண்டிருந்தால் அது கல்வெட்டிலோ அல்லது செப்பேடுகளிலோ இடம்பெற்றிருக்கும். அப்படி எந்த சான்றும் இல்லாத காரணத்தால் மகேந்திரரே பல விருதுப்பெயர்களைச் சூட்டிக்கொள்ளும் வழக்கத்தை தொடங்கியவரென்று அமைதி கொள்ளலாம். அவரின் விருதுப்பெயர்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என்ற மூன்று மொழிகளில் கல்வெட்டுப் பொறிப்புகளாய் உள்ளன. அவற்றுள் கலஹப்ரியன் (கலகம்புரிவதை விரும்புபவன்), மத்தவிலாஸன் (களியாட்ட விரும்பி), இஷ்டதுஷ்டப்ரஷ்டசரிதன் (நல்லது-கெட்டது-சீரழிவு பற்றி தெரிந்தவர்) போன்ற விருதுப்பெயர்கள் மிகவும் வித்தியாசமானவை. வேறு எந்த மன்னனும் அவருக்கு முன்பும் பின்பும் இப்படிப்பட்ட விருதுப்பெயர்கள் சூட்டிக் கொண்டது கிடையாது என்பதே அவரின் தனித்தன்மையை உணர்த்துகிறது. கோயில்களில் புதுமைகளைப் புகுத்தியவர் பல்லவர், சோழர் கலைத்திறனில் விளைந்த கற்றளிகள் ஏராளம். அத்தகைய கற்றளிகளுக்கு, நல்ல கருங்கல் பாறைகள் கொண்டு அமைக்கப்பட்ட கோயில்களுக்கு வித்திட்டவர் மகேந்திரரே. சங்க காலம் தழுவி மகேந்திரர் காலம் வரை கற்றளிக் கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை. அன்றைய கோயில்கள் செங்கல், சுதை, மரம், உலோகம் முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டன. காலப்போக்கில் அவை சிதைந்து அழிந்தும் விட்டன. எனவே தான் சங்க காலக் கோயில்கள் நாம் பார்க்கும் வகையில் இன்று இல்லை. மகேந்திரவர்மர் அன்றே இதனை உணர்ந்திருந்தார். எனவே தான் என்றும் அழியா இறைவனுக்கு செங்கல் சுதை போன்ற அழியக்கூடிய பொருள்களால் இல்லாமல் என்றும் நிலைத்திருக்கும் வகையில் கருங்கல் பாறையைக் குடைந்து நான்முகன், சிவன், திருமால் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் எடுப்பித்தார். இதனை நான் சொல்லவில்லை. இன்று மண்டகப்பட்டு என்று வழங்கும் ஊரின் குடைவரையில் உள்ள ஒரு கிரந்தக் கல்வெட்டு இச்செய்தியைத் தெரிவிக்கின்றது. கோயிலின் பெயர் இலக்ஷிதாயனம் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மண்டகப்பட்டு குடைவரை விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்திலிருந்து இருபதாவது கிலோமீட்டரில் வலப்புறம் பிரியும் மண்சாலை வழியே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இக்கல்வெட்டுச் செய்தியிலிருந்து தமிழ்நாட்டில் முதன் முதலில் கோயில் கட்டுவதற்கு கருங்கல்லினைப் பயன்படுத்திய மன்னர் இவரே என்று தெரிகிறது. பல்லவர்களும் சோழர்களும் கற்றளிகள் அமைத்திருக்காவிட்டால் நம்மால் இன்று அவர்களின் கலைத் திறனை, அக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் சமூகம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டிருக்க முடியாது. இதற்கு வித்திட்டவர் என்ற முறையில் மகேந்திரருக்கு என்றும் நாம் நன்றிசெலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். இசை விற்பன்னர் காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள தூசி மாமண்டூருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நரசமங்கலம். இங்குள்ள மகேந்திரர் குடைவரையில், கிரந்தத்தில் இரு கல்வெட்டுகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு சில எழுத்துக்களாலான ஒரு வரியிலமைந்த கல்வெட்டு, இன்று படிக்க முடியாத அளவு சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு இராகமொன்றின் ஸ்வரபேதங்களாக இருக்கலாம் என்று கூ.ரா. சீனிவாசன் தமது "Cave Temples of the Pallavas" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பதினேழு வரியிலமைந்த மற்றொரு கல்வெட்டு அதனைப் படியெடுத்த காலத்திலேயே சிதைந்திருந்ததை தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 4 இல் உள்ள மைப்படியால் அறியமுடிகிறது. பல எழுத்துகள் படிக்கப்பட முடியாமல் சிதைந்திருக்கும் பொழுதும், எஞ்சியுள்ள படிக்கக்கூடிய சொற்றொடர்கள் மகேந்திரரைப் பற்றிய பல அரிய தகவல்களை நமக்கு அளிக்கின்றன. இக்கல்வெட்டின் முதல் வரியில் 'கந்தர்வ்வசாஸ்த்ர மகில' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கந்தர்வ சாஸ்திரம் என்னும் இசை நூலாகலாம் என்பது அறிஞர்களின் கருத்து. அப்படியானால் மகேந்திரர் கந்தர்வசாஸ்திரத்தை அறிந்தவராக இருந்திருக்கலாம். மேலும் இக்கல்வெட்டின் வரிகள் ஏழிலிருந்து பதின்மூன்று வரை, மகேந்திர வர்மரின் இசை ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. மகேந்திரரின் துணைவி நன்கு பயிற்சிபெற்ற இசை மேதை எனவும், அவரின் குரல் தேனீக்களின் ரீங்காரம் போல் இனிமையாக இருந்ததாகவும், அவர் தம் துணைவரான, படைப்புக் கடவுளை ஒத்த மகேந்திரருடன் இருந்தபொழுது, இசை, கலை ஆகியவற்றின் கடவுளான சரசுவதியை ஒத்திருந்ததாகவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இசையின் கோட்பாடுகளை தம் தேவியுடன் ஆராய்ந்த மகேந்திரர், விருத்தி, தட்சிணம், சித்ரம் என்ற மூன்று வழிகளில் இசைக்கருவிகள் குரலிசையை பின்பற்றமுடியும் என்றும், இதனால் மரபிலிருந்து விலகாமல் இசைக்கருவிகள் குரலிசையை பின்பற்றுமாறு இசை எழுத்துகளை நான்காகப் பொருத்தினார் என்றும் குறிப்பிடுகிறது. அவர் தம் தேவியின் குரலிசைக்கு ஏற்ப கருவியினை இசைக்கமுடிந்தமை கொண்டே, அவரால் கருவியிசையின் தரத்தை உயர்த்துமாறு அரிய சாதனை புரிய முடிந்தது என்றும் இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. இதிலிருந்து அவர் நல்ல இசை வல்லுனர் என்பது உள்ளங்கைகனியாக விளங்குகிறது. மகேந்திரரின் விருதுப்பெயர்களில் ஒன்றான பலபாடி, அவர் பலவும் பாடும் திறன் கொண்டவர் எனச் சுட்டுகின்றது. அவரின் மற்றொரு விருதுப்பெயரான ஸங்கீர்ணஜாதியும் இசையுடன் தொடர்புடைய ஒன்றே. குடுமியான்மலை மற்றும் திருமெய்யம் ஆகிய இடங்களில் கிரந்த இசைக்கல்வெட்டுகள் உள்ளன. மலையக் கோயில், திருமெய்யம் ஆகிய இடங்களில் இசையைப் பற்றி குறிப்பிடும் பழந்தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் எந்த மன்னரின் காலத்தில் வெட்டப்பட்டன என்று என்று தெளிவாகத் தெரியாத நிலையில், கல்வெட்டின் கிரந்த மற்றும் பழந்தமிழ் எழுத்து வடிவங்களை ஆராய்ந்து, பல அறிஞர்களும் அவற்றை மகேந்திரவர்மர் காலத்தியது என்று கருதுவது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மூன்று இடங்களிலும் உள்ள கல்வெட்டுகளில் காணப்படும் 'பரிவாதினி' எனும் வீணையும் மகேந்திரருடைய கண்டுபிடிப்பே என்பது பல அறிஞர்களின் கருத்து. நாடக ஆசிரியர் - நாடகங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நரசமங்கலம் குடைவரையில் உள்ள பதினேழு வரிக் கல்வெட்டின் ஆறாம் வரி பகவதஜ்ஜுகம் மற்றும் மத்தவிலாஸம் ஆகிய நாடகங்களை குறிப்பிடுகின்றது. இதனைக் கொண்டு இவ்விரு நாடகங்களையும் எழுதியவர் மகேந்திரரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் மகேந்திரரின் விருதுப்பெயர்களுள் ஒன்று மத்தவிலாஸன் என்பது. மத்தவிலாஸப்பிரகஸனம் என்ற அந்நாடகத்தை எழுதியது அவரே என்று முத்திரை பதிக்கும் விதமாய், அவர் தம் விருதுப்பெயரை நாடகத்தின் தலைப்பில் இணைத்துள்ளதிலிருந்து அவரின் கற்பனைத் திறனை, சமயோசிதமாய், சமத்காரமாய் யோசித்து செயல்படும் திறனை தெரிந்துகொள்ளலாம். பகவதஜ்ஜுகம், மத்தவிலாஸம் இவ்விரு நாடகங்களும் ஏழாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த எள்ளல் வகை நாடகங்களாகும். நாடகங்களின் தொடக்கத்தில் வரும் சூத்திரதாரி மற்றும் அவனின் மனைவி அல்லது நண்பன் ஆகிய பாத்திரங்களின் உரையாடல் இவ்விரு நாடகங்களும் அதுநாள்வரை இல்லாத புது முயற்சி என தெரிவிக்கின்றன. இச்சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் இரு கட்டுரைகள் இவ்விரு நாடகங்களைப் பற்றி விரிவாக விளக்குகின்றன. ஓவியம் வரைவதில் புலி ஆமாம். சித்திரக்காரப்புலி என்ற விருதுப்பெயர் அவருக்கு பொருத்தமானதாகவே இருக்கும். அவரின் மற்ற விருதுப்பெயர்களுக்கு கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பது போல் ஓவியத்திறமையை பறைசாற்றும் வகையில் ஆதாரம் ஒன்றுமில்லையெனினும், மன்னர் என்ற காரணத்தால் இம்மாதிரி அவரைப் புகழும் விதமாக பொருத்தமில்லாத விருதுப்பெயர்களை அவர் கொண்டிருந்தாரோ என்று ஐயப்படத் தேவையில்லை. அவர் தான் சத்யசந்தர் ஆயிற்றே :-) மேலும் சில பெருமைகள் அவர் ஒரு வீரர் என்பதும், நல்ல போர்த்திறம் மிக்கவர் என்பதும் அவரது போரில் மரணக்கடவுள், கருணையற்றவர், அறுக்கும் அரம், வலிய தேர் (இவையனைத்தும் வடமொழியிலும், தெலுங்கிலும் உள்ள விருதுப்பெயர்கள், இங்கே தமிழ்படுத்தப்பட்டுள்ளன) போன்ற விருதுப்பெயர்களின் மூலம் அறியலாம். அவர் பல கலைகளிலும் ஆற்றல் கொண்டவர் என்பது, அவரின் சோதிட அறிஞர், நடிகர், கலைப்புலி, வில்லாளி, பலவும் பாடுபவர் நிறைவான அறிஞர், விற்பனையாளர், பன்முக அறிஞர், வெள்ளி நாவினர் போன்ற விருதுப்பெயர்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறதூ. மேலும் அவர் ஏழைகளிடத்தும், ஆதரவற்றவர்களிடத்தும் மிகுந்த கருணை கொண்டவர் என்பதும் அவரது விருதுப்பெயர்ர்களிலிருந்து தெரியவருகிறது. தகவல்கள் கல்வெட்டிலிருந்து அவரது பெருமைகள் மட்டுமல்ல அவரைப் பற்றிய சில தகவல்களும் கிடைக்கின்றன. சான்றாக ஒன்று. இலக்கியங்களிலிருந்து, அப்பர் பாடல்களிலிருந்து நமக்கு தெரிந்த ஒரூ செய்தி, அப்பர் காலத்தில் இருந்த அரசர் ஒருவர் அப்பர் சைவநெறி தழுவியதற்காக அவரை பல வகையிலும் கொடுமைப் படுத்தி பிறகு சைவநெறியின் உயர்வை உணர்ந்து தாமும் சைவம் தழுவினார் என்பது. அந்த அரசர் மகேந்திரர் என்பது அறிஞர்களிடையே நிலவும் ஒரு கருத்து. 'கந்தர்வ சாஸ்திரம்' என்னும் சொல் அவர் கல்வெட்டில் இடம் பெற்றிருந்ததையும் அதனால் அவர் 'கந்தர்வசாஸ்திரத்தை' அறிந்தவராக இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுவதையும் பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். அப்பர் பெருமானின் பதிகம் ஒன்றிலும் கூட கந்தர்வசாஸ்திரம் குறிப்பிடப்படுகிறது. மேலும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில், உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள 'இலளிதாங்குர பல்லவேசுவர கிருகத்தில்' உள்ள ஒரு கல்வெட்டு அந்த இடத்தில் மகேந்திரர் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பிய காரணத்தை அழகாக கற்பனைத்திறனுடன் விளக்குகிறது. இப்பாடலின் ஆறாம் வரியில் "இலிங்கத்தை வழிபடும் அரசரான குணபரர், மாறுபட்ட நெறியிலிருந்து அந்த லிங்கத்தினால் திருத்தப்பட்ட அறிவை இவ்வுலகத்தில் நீண்ட காலம் பரவுமாறு செய்தார்." என்று வருகிறது. இலக்கியச் சான்றுகளுடன் கூட இக்கல்வெட்டுச் சான்றுகளையும் கொண்டு, அப்பர் பெருமான் மகேந்திரர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இப்படியாக யாரும் இதுவரை செய்யாத புது முயற்சிகளாக, மலையை குடைந்து கோயிலெழுப்பியது, அவர் கொண்டிருந்த கலைத்திறனையும், இரசனையையும் எடுத்துக்காட்டும் விதமாக பல விருதுப்பெயர்கள் தாங்கி அவற்றை கல்லிலும் பதிவு செய்து வைத்தது, எள்ளல் நாடகங்களை எழுதியது என அரிய பல செயல்கள் புரிந்து மன்னர் மன்னராக, கலைஞர்களின் கலைஞராக விளங்கிய விசித்திர சித்தரைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு இந்த ஒரு கட்டுரை போதாது. அவரின் விசித்திர சித்தத்தின் ஒரு துளியையேனும் இக்கட்டுரையின் மூலம் நீங்கள் உணர்ந்திருந்தால் அதுவே எங்களுக்கு பெரிதும் மகிழ்வளிக்கும். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |