http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 34
இதழ் 34 [ ஏப்ரல் 16 - மே 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, சிராப்பள்ளி வானொலி நண்பர் திரு. அ. அருளப்பன் என் கூட்டுறவுடன், 'பாரறியாப் பழங்கோயில்கள்' என்ற அருமையான தலைப்பில் வாரந்தோறும் ஒரு பழங் கோயிலைப் பற்றிய தரமான உரைச்சித்திரத்தை வழங்கிக் கொண்டிருந்தார். இந்த உரைச்சித்திரங்கள் வரலாறு, கோயிற்கலைகள், கல்வெட்டுகள் இவற்றின் அடிப்படையில் திருக்கோயில்களின் பெருமையை உணர்த்துவனவாய் அமைந்தன. அவற்றில் தொடர்ந்து என் பெயர் இடம்பெற்றமையும் சில கல்வெட்டுச் சொற்கள் குறித்து நான் அளித்த விளக்கங்களும் அறிஞர் பெருந்தகை கூ. ரா. சீனிவாசனுக்கு மகிழ்வளிக்கவில்லை. அதனால், சிராப்பள்ளி வானொலி நிலைய இயக்குநருக்கு ஒரு மடல் எழுதியிருந்தார். அம்மடலில், 'அபூர்வி' என்ற கல்வெட்டுச் சொல்லிற்கு நான் அளித்திருந்த விளக்கத்தை மறுத்திருந்ததுடன், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையில் உயர்ந்த பொறுப்பில் பல காலம் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சிராப்பள்ளியில் தற்போது இருப்பதாகவும் வானொலி இது போன்ற தேவைகளுக்குத் தம்மைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். அவருடைய மடல் என்னிடம் அளிக்கப்பட்டது. மடலை நான் பெற்ற போது, அறிஞர் கூ. ரா. சீனிவாசன் யார் என்று கூடத் தெரியாத நிலையில் இருந்தேன். மடலைப் படித்ததும் நண்பர் மஜீதுடன் தொடர்புகொண்டேன். அவர்தான் அறிஞர் கூ. ரா. வைப் பற்றிக் கூறி அவர் பணிகளையும் அறிமுகப்படுத்தினார். வானொலி இயக்குநருக்கு அறிஞர் கூ. ரா. வின் மேதைமை விளக்கி, 'அபூர்வி' என்ற சொல்லுக்கு நான் அளித்திருந்த விளக்கத்தின் மூலமும் சுட்டி மறுமொழி தந்தேன். என்ன காரணத்தாலோ அறிஞர் கூ. ரா. வின் மடலுக்குப் பிறகும் வானொலி அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில்தான் திரு. இராமமூர்த்தி, அறிஞர் கூ. ரா. என்னைப் பார்க்க விழைவதாக அழைத்திருந்தார். அவ்வழைப்பை ஏற்று அவருடன் அப்பெருந்தகையைக் காணச் சென்றேன். ஆனால், அவர் ஏதோ பணி காரணமாகச் சென்னை சென்றுவிட்டதால் காண முடியாமல் திரும்பினேன். திருவரங்கத்தில், அரங்கர் கோயிலுக்குச் சொந்தமான மற்றொரு கோயில் இருப்பது அறிந்து அதைக் காண நானும் நண்பர் மஜீதும் வானொலி நண்பர் திரு. தே. சந்திரனும் 1983 மார்ச்சுத் திங்களில் சென்றிருந்தோம். கோயிலைப் பார்வையிட்டவாறே விவாதித்துக் கொண்டிருந்த போது கோயில் சுவரில் சுண்ணாம்புப் பூச்சின் கீழ் எழுத்துக்கள் தெரிவது போல் உணர்ந்து மஜீதிடம் காட்டினேன். அவர் என்னைப் பாராட்டியபடியே சுவரருகே சென்று பூச்சை இலேசாக அகற்றினார். கிரந்த எழுத்துக்கள் தெரிந்தன. உடனே அனைவருமாகச் சேர்ந்து ஆளுக்குச் சிறிது நேரம் பூச்சைத் தேய்த்து அகற்றினோம். அருமையான வடமொழிக் கல்வெட்டு வெளிப்பட்டது. எங்களில் யாருக்குமே வடமொழி தெரியாது. ஆகையால், அதைப் படித்துப் புரிந்துகொள்ளக் கூடவில்லை. தொல்லியல் ஆய்வுத்துறையில் உள்ள தம் நண்பர் திரு ஹரிஹரன் வடமொழி வளம் உள்ளவர் என்று கூறிய மஜீது, அவர் துணையுடன் படித்தறியலாம் என்றவாறே அந்தக் கல்வெட்டை நாங்கள் கொண்டு சென்றிருந்த குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார். வடமொழி தெரியாமையினால்தான் அந்தக் கல்வெட்டைப் படிக்கக் கூடவில்லை என்ற வருத்தம் என்னை வாட்டியது. எப்படியாவது வடமொழி பயிலவேண்டும் என்று விழைந்தேன். கிரந்த எழுத்துக்களை விளங்கிக்கொள்ள முயற்சித்தேன். அப்போது கண் மருத்துவர் திரு. சி. கேசவராஜின் மாமனார் திரு. இராமகிருஷ்ணனின் நினைவு வந்தது. அவர் சிறந்த வடமொழி வல்லுநர். என்னிடம் தான் விழியாடி வெளுப்பிற்கு அறுவை செய்து கண்ணாடி அணிந்து கொண்டார். மருத்துவமனையில் தங்கியிருந்த போது வடமொழி இலக்கியங்கள் பற்றி நிறைய பேசுவார். நான் படித்துக்கொண்டிருந்த தமிழ் இலக்கியங்கள் பற்றியும் கேட்டறிவார். என் கோயில் ஆய்வுப்பணி அவருக்குப் பிடித்திருந்தமையால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. அவர் நினைவு வந்ததும் மஜீது எழுதித் தந்திருந்த கல்வெட்டுப் படியுடன் அவர் இல்லம் விரைந்தேன். கல்வெட்டுப் பாடத்தைப் படித்துப் பார்த்தவர், அது செய்யுள் நடையில் இருப்பதாகவும் பல சொற்கள் தமக்கு விளங்கவில்லை என்றும் கூறியதுடன், அரசன் ஒருவன் குருவுக்கு அளித்த காணிக்கையாக அந்தக் கோயில் அமைந்திருக்கலாம் என்பது போலக் கருத்துக் கொள்ள இடமிருப்பதாக உணர்த்தினார். வடமொழி பயிலும் ஆர்வம் குறித்துச் சொன்னேன். கற்றுக் கொடுக்க ஒப்புக்கொண்டவர், கிரந்த எழுத்துள்ள சில நூல்களைத் தந்தார். படித்துப் பார்த்துவிட்டு வரச்சொன்னார். கிரந்த எழுத்துக்களையும் சொற்களையும் உள்ளடக்கிய அந்த நூல்களில் ஆங்கில மொழியாக்கம் இருந்தமையால் படிப்பது எளிதாக இருந்தது. இருப்பினும், எனக்கு கிரந்த உச்சரிப்பு சரியாக வரவில்லை. அவரிடம் படித்த ஓராண்டும் இந்தச் சிக்கல் இருந்தது. நான் வடமொழி வகுப்புச் சேர்ந்திருப்பது அறிந்ததும் நண்பர் சந்திரனும் இணைந்து கொண்டார். தொடர்ந்து வரமுடியவில்லை என்றாலும் பல வகுப்புகளுக்கு இருவருமாகவே சென்றிருக்கிறோம். உச்சரிப்பில் என்னைக் காட்டிலும் அவர் சிறந்து விளங்கினார். எனக்கும் கற்றுத்தர முயன்றார். எனினும், அவர் போல் தெளிவான உச்சரிப்பு எனக்கு வாய்க்கவில்லை. இப்போதும் கூட கிரந்த எழுத்துக்களைப் படித்துவிடலாம். ஆனால், உச்சரிக்கத் தயக்கமுண்டு. எவ்வளவுதான் கிரந்தம், வடமொழி தெரிந்திருந்தாலும் பழங் கல்வெட்டுகளை விளங்கிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதைக் காலப்போக்கில் உணர்ந்தேன். இப்புரியாமையே பல வடமொழிக் கல்வெட்டுகளை மொழியாக்கம் செய்வதில் அறிஞர்களுக்குள் கருத்து மாறுபாடுகளை உண்டாக்கியிருப்பதையும் பின்னாளில் தெரிந்துகொள்ள முடிந்தது. 1983 மேத் திங்களில் எட்டரை திரு. செல்வராஜ் அவர் ஊருக்கு அருகிலிருந்த புலிவலம் சுப்பிரமணிய சாமி கோயிலில் சில கல்வெட்டுகள் இருப்பதாகக் கூறி அழைத்தார். கோயில் திருமுன் சுவர்களில் துணுக்குகளாகச் சிதறடிக்கப்பட்டிருந்த கல்வெட்டொன்றைப் படித்தோம். அக்கோயிலுக்குத் தரப்பட்டிருந்த கொடையைச் சுட்டிய கல்வெட்டுச் சான்றாளர்களுள் மூவர்தம் ஊர்ப்பெயராய் முள்ளிக்குறும்பூரைச் சுட்டியது. இவ்வூர் எங்குள்ளது என்று செல்வராஜுக்குத் தெரியவில்லை. ஊரைக் கண்டறிய விழைந்ததனால் மருத்துவமனை உதவியாளர்களிடம் முள்ளிக்குறும்பூரிலிருந்து நோயாளிகள் யாரும் வந்தால் தெரியப்படுத்துமாறு கூறியிருந்தேன். முள்ளிக்குறும்பூரைக் குறிப்பிடும் கல்வெட்டுக் கண்டறியப்பட்ட மூன்று திங்கள்களுக்குப் பிறகு அவ்வூர்க்காரர் ஒருவர் கண் பரிசோதனைக்கு வந்தார். அவரை விசாரித்ததில் வயலூருக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில், உள்ளடங்கிய ஊராய் முள்ளிக்குரும்பூர் இருப்பது தெரியவந்தது. ஊரில் ஒரு பாழடைந்த கோயில் இருப்பதைத் தெரிவித்தவர் தாம் உடன்வந்து காட்டுவதாகக் கூறினார். அன்று மதியமே முள்ளிக்கரும்பூராக மாறியிருந்த முள்ளிக்குறும்பூர் சென்றேன். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பழங்கோயில் ஒன்று சிதைந்த நிலையில் கைவிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. கோயில் மண்டப வெளிச்சுவரில் கல்வெட்டொன்றும் இருந்தது. மேலோட்டமாகப் படித்த நிலையில் அதை முதலாம் குலோத்துங்கருடையதாகக் கருதிச் செய்தி இதழ்களுக்குத் தகவல் தந்தேன். நாளிதழ்களைப் பார்த்த நண்பர் இராமமூர்த்தி, முள்ளிக்கரும்பூர் சென்று அக்கல்வெட்டைப் படித்து வந்தார். அவர்தான் அக்கல்வெட்டுக் குலோத்துங்கருடையது அன்று, விக்கிரமசோழருடையது என்பதைத் தெரிவித்தார். நான் அன்று மாலையே மீண்டும் முள்ளிக்கரும்பூர் சென்று அக்கல்வெட்டை மறுபடிப்புச் செய்தேன். என் தவறு விளங்கியது. திரு. இராமமூர்த்திக்கு நன்றி கூறியதுடன் இனி அவசரப்பட்டு முடிவிற்கு வரக்கூடாது என்று உறுதிபூண்டேன். முள்ளிக்கரும்பூர் பற்றிய செய்திகள் 27. 8. 1983 மாலை முரசு இதழிலும் 30. 8. 1983 தினமணி இதழிலும் வெளியாகின. 1. 9. 1983 இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் திரு. அ. கோபாலன் சுருக்கமாக ஆனால் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார். பழுதுபட்டிருந்த அந்தக் கோயிலை எப்படியாகிலும் சரிசெய்யவேண்டும் என்று கருதினேன். டாக்டர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய மன்றத்தின் நிகழ்வுகள் வழி எனக்கு அறிமுகமாகியிருந்த கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. இரா. இராசேந்திரன் அப்போது நாட்டுநலப் பணித்திட்ட அலுவலராகவும் இருந்தமையால் அவருடன் கலந்தாலோசித்தேன். தொல்லியல்துறையின் துணையோடு இதைச் செய்யமுடியும் என்ற முடிவுக்கு வந்தேன். இந்த நேரத்தில்தான், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் இரண்டு நாள் கருத்தரங்கொன்றைச் சிராப்பள்ளியில் நடத்தும் பொறுப்பு திரு. மஜீதின் தோள்களில் இறங்கியது. ஆரவாரமோ, தன்முனைப்போ சற்றுமற்றவர் என்பதால் மஜீதிற்குச் செல்வாக்கான நண்பர்கள் சிராப்பள்ளியில் குறைவாகவே இருந்தனர். கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்ற ஆணை வந்ததுமே என்னிடம் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அவருக்குத் துணைநிற்க விழைந்தேன். கருத்தரங்கு நடத்த இடம் தேவைப்பட்டது. மருத்துவர் மு. சிவக்கண்ணுவிற்குச் சொந்தமான குறிஞ்சி திருமண அரங்கைக் கேட்கக் கருதி அவரை அணுகினேன். அப்பெருந்தகை உளமுவந்து இரண்டு நாட்களும் மண்டபத்தைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார். துறையினர் தங்கவும் கருத்தரங்கு நிகழவும் இடம் கிடைத்ததில் மஜீதிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. கருத்தரங்கின் போது தேனீர் வழங்கும் பொறுப்பை எங்கள் மன்றம் ஏற்றுக்கொண்டது. உணவு அவர்களே பார்த்துக்கொண்டார்கள். கருத்தரங்கத்தில் என்னையும் ஒரு கட்டுரை வாசிக்குமாறு மஜீது உற்சாகப்படுத்தினார். 'மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்' என்ற தலைப்பில் கட்டுரை படிக்கத் தயாரானேன். கருத்தரங்க முதல் நாள் காலை மண்டபத்திற்குச் சென்றபோது தொல்லியல் துறை பெருமக்களைச் சந்திக்க முடிந்தது. மஜீது அனைவரையும் அறிமுகப்படுத்தியதோடு, மேலே அழைத்துச் சென்று மாடியில் தங்கியிருந்த அவர்கள் துறை இயக்குநர் அறிஞர் திரு. இரா. நாகசாமிக்கு என்னை அறிமுகப்படுத்தினார். அறிஞர் திரு. இரா. நாகசாமியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். அவருடைய நூல்களுள் சிலவற்றையும் படித்திருந்தேன். என் திருமண வரவேற்பிற்கு, என் அண்ணன் திரு. மா. ரா. இளங்கோவனின் நண்பர் என்ற முறையில் அறிஞர் திரு. நாகசாமி வந்திருந்தமையை அவருக்கு நினைவூட்டி, வரலாற்றில் எனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். என் ஆர்வத்தைப் பெரிதும் போற்றிய திரு. நாகசாமி கருத்தரங்கிற்கு நான் செய்திருந்த ஏற்பாடுகளைப் பாராட்டினார். நான் கட்டுரை வாசிக்க இருப்பது அறிந்ததும் மகிழ்ந்து வாழ்த்தினார். உணவு இடைவேளைக்கு முன் என் கட்டுரையைப் படித்தேன். கட்டுரையை முழுவதுமாகக் கேட்ட அறிஞர் திரு. இரா. நாகசாமி என் கட்டுரையை மதிப்பீடு செய்து பத்து நிமிடங்களுக்கு மேல் பேசினார். கட்டுரையின் அறிவியல் பின்புலத்தையும் ஆய்வு அணுகுமுறையையும் பற்றி விரிவாகப் பேசினார். கருத்தரங்க அளவில் வாசிக்கப்பட்ட முதல் கட்டுரை என்பதால், எனக்குப் பெருமகிழ்வு ஏற்பட்டது. கட்டுரையின் ஒவ்வொரு தொடரையும் அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பது அவர் உரை வழி வெளிப்பட்டது. மேதைகளின் சொத்தாக இருந்த தொல்லியல்துறையை மக்களிடத்துக் கொண்டு சென்ற முதல் அறிஞர் என்ற வகையில் அவரிடத்து எனக்கு எப்போதுமே மிகு மதிப்புண்டு. துறைக்கு முற்றிலும் புதியவனான என்னை அவர் ஊக்கப்படுத்திய விதம் என் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அன்று இரவு மஜீதின் நண்பர்களுக்கும் அறிஞர் இரா. நாகசாமிக்கும் என் வீட்டில் விருந்தளித்தேன். திரு. கு. தாமோதரன், திரு. மா. சந்திரமூர்த்தி, திரு. ச. ஹரிஹரன் ஆகியோர் நண்பர்களாயினர். தொல்லியல்துறையில் பல்லாண்டு அநுபவம் பெற்ற அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நம்பினேன். இரண்டு நாட்களும் கருத்தரங்க வளாகத்திலேயே இருந்து படிக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் கவனமாகக் கேட்டதில் பல செய்திகளை அறிய முடிந்ததுடன், பல்வேறு விதமான அணுகுமுறைகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டது. திரு. ஹரிஹரனின் துணையுடன் காட்டழகிய சிங்கர் கோயில் வடமொழிக் கல்வெட்டின் பொருள் அறியமுடிந்தது. கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் இராஜேந்திரர் விழா ஒன்றினை தமிழ்நாடு அரசு எடுத்தது. அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு அறிஞர் இரா. நாகசாமி என்னை அழைத்தார். அந்த விழாவில்தான் குடந்தை திரு. சேதுராமனையும் புலவர் செ. இராசுவையும் சந்தித்தேன். புலவர் இராசு மிகுந்த அன்போடு பழகினார். இந்த விழாவிற்குச் சென்றபோது கங்கைகொண்ட சோழீசுவரம் கோயிலை விரிவாகப் பார்க்கும் வாய்ப்பமைந்தது. கோயிலின் கட்டமைப்பு என்னை மயக்கியது. என்னுடன் வந்திருந்த நண்பர்கள் திரு. தே. சந்திரன், திரு.இரா.இராசேந்திரன் இவர்களுடன் இலக்கியம், கோயிற்கலைகள் பேசியபடி அக்கோயிலை வலம் வந்தமை நேற்று நடந்தது போல் நினைவில் உள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் வழியில் ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில், மாடமேற்றளி இவற்றைப் பார்வையிட்டோம். கைலாசநாதர் கோயில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. 'மிதக்கும் கோயில்' என்ற தலைப்பில் இக்கோயிலைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை தினமணிகதிர் 3. 02. 1985ம் இதழில் வெளியிட்டது. இந்தக் கட்டுரையின் பலன் ஓராண்டில் தெரிந்தது. கோயிலுக்குள் நீர் நுழையும் வழிகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டன. அக்கோயில் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட கட்டமைப்புகளின் பட்டியலில் இருந்ததால் மஜீதின் துணையோடு அதை முறையாகப் பாதுகாக்கும் முயற்சிகளைத் தொடங்கினோம். ஆனந்த விகடன் இதழில் பாளையங்கோட்டையில் பெண் மருத்துவர் ஒருவர் தம் மருத்துவமனையில் மக்களுக்காக மருத்துவச் சொற்பொழிவுகள் நிகழ்த்திக்கொண்டிருப்பதை செய்திக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். எனக்கு அந்தப் பணி மிகவும் பிடித்திருந்தது. சிராப்பள்ளியிலும் அது போல் செய்ய விழைந்தேன். டாக்டர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய மன்றச் சொல்லாற்றல் போட்டிகளில் பங்கேற்று என் அன்புக்கு இலக்காகியிருந்த திரு. ச. தட்சிணசுப்பிரமணியன் அப்போது உய்யக்கொண்டான் லியோ மன்றப் பொறுப்பிலிருந்தார். அந்த அமைப்பின் சார்பில் என் பணியில் பங்குகொள்ள அவர் விழைந்தார். நிகழ்ச்சியை நடத்த அரங்கம் தேவைப்பட்டது. தமிழ்ச் சங்கம் மக்களுக்கு வாய்ப்பான இடம் என்று கருதியமையால் அதன் அமைச்சர் திரு. சா. பெரியசாமியுடன் உரையாடினேன். நல்ல பணி என்று உடன் ஒப்புதல் தந்து ஒத்துழைத்தார். 1983 அக்டோபர் 23ம் நாள் மருத்துவச் சொற்பொழிவு தொடங்கியது. மருத்துவர் அர. கணேசன் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப் பேசினார். திரளாக வந்திருந்த மக்கள் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டினர். அதனால், தொடர்ந்து ஒவ்வொரு திங்களும் துறை சார்ந்த மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு மக்களுக்காக முற்றிலும் தமிழில் மருத்துவச் சொற்பொழிவு அமையும் என்று அறிவித்தோம். தினமணி திரு. கோபாலன் எங்களுக்குப் பெரிதும் துணையாயிருந்தார். சிராப்பள்ளி வானொலியைச் சேர்ந்த திரு. மீ. அரங்கசாமி அனைத்து உரைகளையும் பதிவுசெய்து வானொலி வழி அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறுமாறு வழங்குவதாக உறுதியளித்தார். நவம்பர் 27ம் நாள், 'இனிப்பும் கசப்பும்' என்ற தலைப்பில் நீரிழிவு நோய் தொடர்பாக இரு உரைகள் அமைத்திருந்தோம். மருத்துவர்கள் திரு. சு. தியாகராசன், திரு. வி. கனகராஜ் உரையாற்றினர். மக்கள் தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவுகொள்ள வாய்ப்பளித்தோம். கேள்வி நேரமே ஒரு மணியளவில் தொடர்ந்தது. 1983 டிசம்பர் 18ம் நாள், 'அழகைத்தேடி' என்ற தலைப்பில் சேலம் தோல் நோய் மருத்துவர் கோ. நா. மோகனவேலு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க சிராப்பள்ளியில் அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மாண்பமை திரு. பி. நடேசனின் துணைவியார் திருமதி சாந்தி நடேசனை அழைத்திருந்தோம். அந்த அழைப்பு எட்டரை புத்தர் சிராப்பள்ளி வருவதற்கு வழியமைக்கும் என்று நான் அப்போது நினைக்கவேயில்லை. நாளிதழ்கள் வழி புத்தர் சிற்பம் கண்டுபிடிப்புப் பற்றி படித்திருந்த திருமதி சாந்தி நடேசன் அதன் வரலாறு கேட்டார். நான் அனைத்தும் கூறிவிட்டு, சிற்பத்தைச் சிராப்பள்ளி அருங்காட்சியகத்திற்குக் கொணர முடியாமல் இருக்கும் நிலைமையை விளக்கினேன். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூறி ஆவண செய்வதாக அவர் அன்போடு கூறினார். அடுத்த நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே சென்றேன். திரு. பி. நடேசனிடம் அனைத்தும் விளக்கினேன். அப்பெருந்தகை உரிய அலுவலர்களை என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டார். ஒரு மணி நேரத்தில் அந்தநல்லூர் கோட்ட அலுவலர் திரு. ஜெயபாலன் என் மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் தகவல் சொன்னதும் தாம் நேரில் சென்று அனைத்தும் பார்த்துவிட்டு மாலையில் சந்திப்பதாக உறுதி கூறிச் சென்றார். அன்று மாலையே புத்தரை மீட்கும் திட்டம் உருவாயிற்று. திரு. ஜெயபாலன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். நான் திரு. மஜீதிற்குத் தகவல் தந்தேன். புத்தரை மீட்கும் பணியில் எட்டரை திரு. செல்வராஜ், திரு. பாலசுந்தரம் கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், திரு. இரா. இராசேந்திரன் என அனைவரும் ஈடுபட்டோம். மாணவர்களால் மட்டுமே இப்பணி நிறைவடையாது என்பதை ஊகித்திருந்த திரு. ஜெயபாலன் புத்தரைக் கரையிலிருந்து மேட்டிற்குக் கொணர்ந்து வண்டியில் ஏற்ற யானை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நாளும் அன்று ஏற்பட்ட அனுபவங்களும் வாழ்க்கையில் என்றென்றம் மறக்க முடியாதவை. அரசு அலுவலர்கள் மனம் கொண்டால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை நான் அறிந்த நாளது. மாவட்ட ஆட்சியர் இதில் ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதொன்றே புத்தர் அசையக் காரணமாயிற்று. திரு. ஜெயபாலன் செயல் வல்லாராக அமைந்தமையால் புத்தர் கரை ஏறினார். அன்று மாலை அந்தச் சிற்பத்தைக் களத்திலேயே சந்திக்க மாவட்ட ஆட்சியரும் அவரது துணைவியாரும் வந்தனர். புத்தர் டிராக்டரில் ஏற்றப்பட்டமையைக் கண்ட என் கண்கள் பனித்தன. திருமதி. சாந்தி நடேசனை நன்றியோடு நோக்கினேன். அந்த அம்மையின் வரலாற்றார்வமும் ஆட்சியரின் அணுகுமுறையுமே புத்தர் சிராப்பள்ளி வரக் காரணமாயின. மாவட்ட ஆட்சியரிடமும் அவர் துணைவியாரிடமும் நானும் மற்றவர்களும் மிகுந்த நன்றி பாராட்டினோம். புத்தரை அருங்காட்சியகத்தில் சேர்ப்பிக்கச் சொல்லி உத்தரவிட்ட ஆட்சியர் விடைபெற்றார். புத்தரை அருங்காட்சியத்தில் சேர்த்தவர்கள் டிராக்டரில் இருந்து இறக்கும்போது முகமும் உடலும் தரையைப் பார்க்குமாறு போலக் கவிழ்த்துப் போட்டுவிட்டார்கள். எட்டரை புத்தர் சிராப்பள்ளி வந்து சேர்ந்த செய்தி அடுத்த நாள் பெரிய அளவில் அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தமையால் ஆர்வம்ுள்ளவர்கள் பார்க்க வந்தார்கள். கவிழ்ந்து கிடந்த புத்தர் அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். எனக்குச் செய்தி வந்தது. ஆனால், நான் அருங்காட்சியகம் செல்வதற்குள், இச்செய்தியைக் கேள்விப்பட்ட வேளாண் பொறியியல் துறையைச் சேர்ந்த உயர் அலுவலர் ஒருவர் பளுதூக்கிப் பொறியுடன் வந்து புத்தரை நிமிர்த்தி வைத்து மக்கள் கண்டு மகிழ வகை செய்திருந்தார். தம் பெயரைக் கூடக் கூறாமல் இந்த அரும்பணியைச் செய்துவிட்டுச் சென்ற அவரைப் போன்ற பெருமக்களால்தான் இந்த நாடும் வாழ்கிறது. வரலாறும் வளம் பெறுகிறது. அன்புடன், இரா. கலைக்கோவன் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |