http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 34

இதழ் 34
[ ஏப்ரல் 16 - மே 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

அரும்பொருட்களும் காட்சியகங்களும்
நாவல் படிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 6
கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 2
கொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள்
ஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்
சங்கச்சாரல் - 17
இதழ் எண். 34 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 17

'சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து' என்பது உண்மையோ, பொய்யோ, நமக்குத் தெரியாது. ஆனால் இலக்கிய வட்டத்தில் அறிஞர்களுக்கிடையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் மிகுந்த சுவைமிக்கதாக இருக்கும். வரலாறு ஆய்விதழ் -8ல் வெளியிடப்பட்ட சங்கத் துணுக்குகளைத் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழறிஞர் பேராசிரியர் திரு. அ.மா.பரிமணம் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைத் துணுக்குகளுடன் அவரது மறுமொழியையும் வெளியிட்டு வாசகர்களுக்கு விருந்து படைக்கிறோம்.




ஊர்ப்புலத்தி

இன்று அழுக்குத் துணிகளைச் சலவைசெய்யப் பல வழிகள் உள்ளன. சலவைப்பொறி கூட வந்துவிட்ட காலமிது. அந்நாளில் எவ்வாறு சலவை செய்தனர்? அவரவர் வீடுகளிலேயே தோய்த்துக் கொண்டனரா? அல்லது ஊருக்கு ஊர் தோய்ப்பவர் இருந்தனரா? கலித்தொகை (72), ஊரவர் ஆடை கொண்டு ஒலிக்கும் புலத்தியை அடையாளம் காட்டுவதால், தோய்க்குந் தொழில் செய்வார் இருந்ததையும் அவர்கள் புலத்தியரென்று அழைக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. இவர்கள் அடித்துத் தோய்த்தே அழுக்கு நீக்கியதையும் பாடலடி விளக்குகிறது. இப்புலத்தியர் பற்றிய குறிப்புகள் பிற சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. வீட்டிலேயே தோய்த்து உலர்த்தியமைக்குப் பாடலுள்ளதா? அறிஞர்கள் தகவல் தரலாம்.

மறுமொழி

கலித்தொகை 72ம் பாடலில், இடம்பெறும் சொல் 'புலைத்தி' என்பது. புலைத்தி என்பதற்கு (1) ஆடை வெளுப்பவள், (2) தாழ்ந்த குலப் பெண் என்னும் பொருள்கள் உள. புலையன், புலைத்தி என்பது தாழ்ந்த குலத்துதித்தவர்களைக் குறிப்பதனை, 'ஆவுரித்துத் தின்றுழலும் புலையர்' என்னும் திருமுறைத் தொடராலும் அறியலாம். புலத்தி என்பது நற்றிணையின் ஓரிடத்தில் (பாடல் 90) வந்துள்ளது. பின்னத்தூரார், 'புலத்தி-ஆடை ஒலிக்கும் தொழிலி; வண்ணாத்தியென்ப' என உரை வரைந்துள்ளார். ஆனால் புலைத்தி என்னும் ஆட்சியே பலவிடங்களில் இடம்பெற்றுள்ளது.

ஆடைகளைத் துவைக்குங்கால், அவற்றிற்குக் கஞ்சியிட்டு வெளுப்பது கூறப்பட்டுள்ளது. அக்கஞ்சிப் பசை நீங்கக் கசக்கித் துவைக்கும் செயல் காணப்படுகிறது. பேரூர்களில் வளமிக்க குடிகள் (மேட்டுக்குடிகள்) நிறைந்த இடங்களில் ஊராருக்கென வண்ணார் - வண்ணாத்தியர் இருந்திருத்தல் கூடும். எளிய பொதுமக்கள் தம் ஆடைகளைத் தாமே துவைத்து உலர்த்தியிருத்தல் வேண்டும். தனியார் வீடுகளில், ஆடைகளை ஒலித்து (துவைத்துக்) காயவைத்த செய்யுட்குறிப்பு காணப்பட்டிலது. ஊர்மக்கள் ஆடைகளை - அடியார் உடைகளை - ஒலிக்கும் செயலைத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வரலாற்றால் அறியலாம்.




பக்கம் வரும் பெருமீன்

சங்க காலத்துப் பரதவர்கள் பெரிய அளவிலான மீன்களை எப்படிப் பிடித்தனர்? அகப்பாடலொன்று (210) அருமையாக விளக்குகிறது. குறுகிய வாயிலையுடைய குடிசைகளில் வாழும் கொலைத் தொழில் பரதவர் பெரிய மீன்களைப் பார்த்ததும் தம் கையிலிருக்கும் பேருளிகளை அவற்றின் மீது எறிவர். உளி உடலில் தாக்கிப் புகுந்ததும், இரத்தம் பீறிட வலியால் துவளும் மீன், வானவில்லைப் போலத் தாவி, அலைகள் நிறைந்த கடல்பரப்பைக் கலக்கி, அங்குமிங்குமாய்ப் புரண்டு, இரத்தப் பெருக்கால் வலிமை குன்றி, படகின் பக்கத்தில் வந்து விழும். பிறகென்ன! அள்ளியெடுக்கும் பரதவர்க்கு அலைகள் வழங்கிய உணவாகவோ அல்லது அங்காடிச் செல்வமாகவோ பெருமீன் உருமாறும்.

மறுமொழி

கடலில் திமில் (படகு) கொண்டு சென்று வலைவீசும் பரதவர்களின் வலைகளில் மிகப்பெரிய மீன்கள் (சுறா) அகப்பட்டு இழுபடுவதும், வலையினை அறுத்துக்கொண்டு ஓடுவதும் இயல்பே. பெருங்குளம் ஒன்றில் தூண்டிலில் அகப்பட்ட ஆண் வரால் தூண்டில் வேட்டுவன் இழுக்கவும் வராமல் கயத்தினை (குளம்) உழக்கிய காட்சி ஒன்று அகம் 36ம் பாடலில் காட்டப்படுகின்றது. தாங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி, வலையும் தூண்டிலுமில்லாமல் எறிஉளியால் தாக்கிப் பெருமீனைக் கவரும் காட்சியாகும். (அகம் 210). எறிஉளி, நீண்டதும், கூரியநுனி உடையதும், தூண்டில் போல் முனை கொண்டதுமாகும். நெடிய கயிற்றின் ஒருமுனையில் அவ்வுளி கட்டப்பெற்றிருக்கும். கயிற்றின் மறுமுனை திமிலொடு பிணிக்கப்பட்டிருக்கும். தகுதியான இலக்கினை அறிந்து எறிஉளியால் பெருமீனைத் தாக்குவர். அம்மீன் எறியப்பட்ட உளியினின்றும் விடுபட இயலாத நிலையில், தாங்கள் கூறியதுபோல, உயிர்தப்பும் போரில் முயன்று தோல்வியுற்றுத் தளர்ந்த நிலையில் கயிற்றால் இழுக்கப்பட்டுப் பின்னர் உணவாகவோ அங்காடிச் செல்வமாகவோ மாறிவிடும். தாக்குண்ட பெருமீன் சிந்தும் குருதியால் நீர் நிலையின் அப்பகுதி சிவப்பதுண்டு. கயிறு இன்றி, உளியினை எறிந்தால் திமில் பக்கம் வராமல் வேறு பக்கம் செல்லவும், நீரினுள் ஆழ்ந்துவிடவும் கூடும். கயிறு இருப்பதனால் திமிலை நோக்கிப் படர்வதினின்றும் தப்பமுடியாது. எறிஉளிப்புண் வெளிப்படுத்திய குருதியினால் நீர்நிறம் மாறுபடுவதனைப் 'புண்ணுமிழ் குருதியின் புலவுக் கடல் மறுப்பட' என்று பாடல் குறிப்பிடுகின்றது.

நெடுஞ்சேரலாதன் நிகழ்த்திய கடற்போரில், வாள் வெட்டுண்ட பகைவரின் மார்பிலிருந்து வெளிப்போந்த குருதியால் நீரின் நீலநிறம் மாறி மனாலக் கலவை போலாகியது என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது (பதி. 11). அங்கும், இங்கும் (பதி. 11, அகம் 210) புண்ணுமிழ் குருதி என்னும் தொடர் ஆளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, அங்கு அத்தொடர் அப்பாட்டின் பெயருமாயது.




ஞாயிறு பாலைக்குத் தெய்வமா?

கலித்தொகைப் பாடலொன்று (16) ஞாயிற்றைப் பாலை நிலத் தெய்வமாகக் குறிப்பதாகக் கூறும் நச்சினார்க்கினியர், மழையையும் காற்றையும் தருகின்ற ஞாயிறு பாலைக்குத் தெய்வமாயினமை, 'மாயோன் மேய' என்னும் சூத்திரத்தான் உணர்க என்கின்றார் (தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பு, பக். 103). பருதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியும் பாலைக்குத் தெய்வமென்பர் அடியார்க்கு நல்லார் (தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பு, பக். 177). கலித்தொகை உரையாசிரியர் இ.வை.அனந்தராமையரோ, 'ஆதித்தன் எல்லா நிலத்திற்கும் பொதுவென மறுக்க', என்கிறார். எவர் கூற்று சரியென்று அறிஞர்கள் கருத்துக் கூறுவார்களா?

மறுமொழி

கலித்தொகை உரையாசிரியர், நச்சினார்க்கினியர். இ.வை.அனந்தராமையர், நச்சினார்க்கினியர் உரைக்குத் தம் அடிக்குறிப்புகளால் விளக்கமும் மேற்கோள்களும் தந்து பதிப்பித்த பதிப்பாசிரியரேயாவார். அவருடைய பதிப்பினைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், நிழற்படப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

'பாடின்றிப் பசந்த கண்' எனத் தொடங்கும் (கலி 16) பாடலுக்கு உரை வரையுங்கால், மூன்றாம் தாழிசையினடியில், விளக்கமெழுதுமிடத்தே, "மழையையும் காற்றையும் தருகின்ற ஞாயிறு பாலைக்குத் தெய்வமாயினமை, 'மாயோன் மேய' என்னும் சூத்திரத்தானுணர்க" என்று குறிப்பிட்டுள்ளார். அத்தொல்காப்பிய நூற்பாவிற்கு (அகத் 5) விளக்கம் தருகையில், "இனிப் பாலைக்கு, 'சினைவாடச் சிறக்குநின் சினந் தணிந்தீகெனக் கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ' எனவும், 'வளிதரு செல்வனை வாழ்த்தவும் இயைவதோ' எனவும் ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற்றோன்றிய மழையினையும் காற்றையும் அத்தெய்வப்பகுதியாக்கிக் கூறுபவாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவிகொடுக்குங்கால் அங்கி ஆதித்தன் கட் கொடுக்குமென்பது வேதமுடிபாகலின், ஆதித்தன் அவ்வெல்லா நிலத்திற்கும் பொதுவென மறுக்க' என்று வரைந்துள்ளார்.

இதனை அனந்தராமையர் தம் பதிப்பின் 102ம் பக்கத்தில் எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றைக் காணுங்கால், ஞாயிறு பாலைக்குத் தெய்வம் என்று கலித்தொகை உரையுள்ளும், ஞாயிறு பாலைக்குத் தெய்வம் என்பாரை மறுத்துக் கூறிய தொல்காப்பிய விளக்கத்துள்ளும் அமைந்துள்ள கருத்து முரண்பாடு நன்கு புலப்படும்.

இந்த முரண்பாட்டினைப் பேராசிரியர் மு.அருணாசலம் பிள்ளையவர்களும் தமது 'தொல்காப்பியம் - அகத்திணையியல் உரைவளம்' நூலில் (மதுரைப் பல்கலைக்கழக வெளியீடு), சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் பிள்ளையவர்கள், "தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர்; பிறர் பகவதியையும் ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர்" என்பர் இறையனார் களவியலுரையாசிரியர் (நூற்பா. 1, உரை, பக். 26, பவானந்தர் பதிப்பு) என்றும், "பாலைக்குத் தெய்வம் 'பரிதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியும் எனக்கொள்க' என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். பதிகம். அடி - 1-2, உரை)" என்றும் விளக்கம் தந்துள்ளார்.

தொல்காப்பியத்திற்கு மிகப் பல நூற்றாண்டுகள் பிந்தையது சிலப்பதிகாரம். அதற்குச் சில நூற்றாண்டுகள் பிந்தையது களவியலுரை. அதற்குப் பிந்தையது அடியார்க்கு நல்லார் உரை. அதற்கும் சில நூற்றாண்டுகள் பிந்தியவர் நச்சினியார்க்கினியர். இவற்றை உளங்கொண்டு சிந்தித்தால், தொல்காப்பியரால் நிலமும் தெய்வமும் கூறப்படாத பாலைக்கு நிலமும் தெய்வங்களும் எவ்வாறு படைக்கப்பட்டன என்பதனை ஒருவாறு ஊகித்தல் கூடும். ஞாயிறு பாலைக்குத் தெய்வமாகாது என்பது இளங்கோவடிகளின் கருத்தாகும். இதை நூலின் தொடக்கத்தே வாழ்த்துக் கூறுங்கால் திங்கள், ஞாயிறு, மழை ஆகியவற்றை ஞாலத்திற்குரிய பொதுப்பொருளாகக் கொண்டு போற்றியிருப்பதனால் உணரலாம். ஞாயிற்றை ஒரு நிலத் தெய்வமாகக் கொண்டிருந்தால் (பாலை), பிற நிலத் தெய்வங்களையும் போற்றும் கடமையுட்பட்டிருப்பரன்றோ?

நானிலத்து ஐந்திணை நிலை கூறவெண்டியது இயல்பாதலின், முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து, நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்துப், பாலை என்பதோர் படிவம் கொள்ளும்' (சிபல். காடுகாண், 64-66) என்று பாலைநிலத் தோற்றம் கூறீய இளங்கோவடிகள், அதற்குக் காரணத்தையும் "வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்" தான் நலம் திருகுதலையும் காட்டியுள்ளார் (மேலது, 62-63). பாலையான நிலையில் ஆண்டு வாழும் வேட்டுவருக்கு, வீரம் விளைத்தற்குரிய கொற்றவையினைத் தெய்வமாக்கி, அம்மக்கள் பரவினர் என்பதனைக் காட்டியுள்ளார் (வேட்டுவவரி). மு.அருணாசலம் பிள்ளையவர்கள், "... பாலையானது காட்டு நிலத்தின் சார்பைப் பெரிதும், மலை நிலத்தின் சார்பைச் சிறிதும் பெற்றுத் தோன்றுவதாகும்" என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பிற்காலத்தில் தோன்றிய 'நம்பியகப்பொருள்' காலவயப்பட்டுப் பாலைக்கு நிலமும் தெய்வமும் வகுத்துள்ளது. பாலையின் கருப்பொருள் கூறும் நூற்பாவின் தொடக்கத்தில் அமையும். 'கன்னி விடலை காளை மீளி' என்னும் பகுதியில் கன்னி (துர்க்கை - கொற்றவை - காடுகிழாள்) பாலை நிலத் தெய்வமாகக் கூறப்பட்டுள்ளது.

கதிரவன் (காய்கதிர்ச்செல்வன்) வெப்பமிகுதியால் முல்லை - குறிஞ்சி நிலப்பகுதிகள் பாலையாக, அக்கதிரவன் மழை பெய்வித்தலால் அந்நிலம் பண்டுபோல முல்லை - குறிஞ்சிப் பகுத்டிகளாக மாறும் என்பது கருத்து. சகாரா, கோபி முதலிய பாலைவனங்களைப் போன்ற நிலையான பாலைப்பகுதி தமிழகத்தில் இல்லாமை நோக்கித் தாமறிந்த உலகிற்கு, "நானிலம்" என்னுமொரு பெயரினைத் தமிழ் மக்கள் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு, பலர் புகழ் ஞாயிறு' என்று நக்கீரர், ஞாயிறு உலகப் பொதுப்பொருளாக அமைந்தமையினைச் சுட்டினார். அவருக்குப் பல நூற்றாண்டுகள் பின்னர்த் தமிழகத்தே தோன்றிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஞாயிற்றின் பொதுமைக்கு, வேதவழியமைப்பும் வைதிக நோக்கிலான காரணம் கூறியுள்ளார்.

பாலைக்கு ஞாயிற்றைத் தெய்வமாக்குவது நேரித்டாகாது. தொல்காப்பியர் குறிப்பிடாத நிலையில், காலப்போக்கில், பின்வந்தார் கருத்துப்படி, பகவதி, திகிரிச்செல்வி, கன்னி என்றும், பிறவாறும் வழங்கப்பெறும் கொற்றவையினைத் தெய்வமாகக் கொள்வது குற்றமாகாது. அது பிற்காலப் புலவர்கள் போற்றிய இலக்கிய நெறியாகும்.




this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.