http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 35
இதழ் 35 [ மே 15 - ஜூன் 14, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
பைசாசம்
(பைசாசம் நாவலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (கம்பம் கிளை) தலைவரும் அக்குபஞ்சர் மருத்துவருமான ஹீலர் திரு.அ. உமர் பாருக் அவர்கள் எழுதியளித்த விமர்சனக் கடிதம். தம்பி திரு. உமர் அவர்களுக்கு நன்றி.)
மதிப்பிற்குரிய கோகுல் அவர்களுக்கு, வணக்கம். அண்ணன் இரவி முலம் வரலாறு டாட் காம் ஏற்கனவே எனக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும் கூட, முன்பு முழுவதும் வாசித்ததில்லை. பார்வையிடுவதோடு சரி. தொடர்கதைகளை பொறுமையோடு காத்திருந்து வாசிக்கும் ஆர்வமில்லை என்பதால் இராஜகேசரி - பைசாசம் நாவல்களை முன்பு வாசிக்கவில்லை. வழக்கம்போல் ஒருநாள் வரலாறு டாட் காமை பார்த்துக்கொண்டிருந்தபோது பைசாசம் ஈர்த்தது. முதல் அத்தியாயத்தை வாசித்த கையோடு அனைத்து அத்தியாயங்களையும் இறக்கம் செய்து நகலெடுத்து இப்போது வாசித்து முடித்திருக்கிறேன். பைசாசம் என்னுள் விளைவித்த சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்தில் இக்கடிதத்தை எழுதுகிறேன். சரித்திரக் கதை என்றாலே பக்கம் பக்கமாக விரியும் வர்ணனைகள் பயமுறுத்தும். மன்னரையும் அவர் பிரதாபங்களையும் பெரும் அலுப்போடு ஏற்று வாசித்த அனுபவம்தான் முதலில் நினைவுக்கு வரும். சாதாரணக் குடிகளின் வாழ்க்கையை இவ்வளவு எளிமையாக - அவர்கள் மண்ணின் உயிர்ப்போடும் எங்கள் முன்னனே கொண்டு வந்திருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள். எழுத்துலக பீஷ்மர் வல்லிக்கண்ணன் கூறுவார் - சிறுகதை என்பது நிகழ்வு. நாவல் என்பது வாழ்வு. நிகழ்வுகளின் ஊடாக விளக்கம் பெறவேண்டும் என்று. அப்படியொரு சிறு நிகழ்வு முலம் நாவலுக்குள் இட்டுச்செல்லும் முதல் அத்தியாயம் - ஒரு வாழ்வையே வெளிச்சம் போட்டுக் காட்டும் புதிய உலகிற்குள் முதல்படி. சரித்திர நாவல்கள் குறித்து எப்போதுமே எனக்கொரு கருத்துண்டு. அவை மிகை புனைக்கதைகள். தன்னுடைய குறிப்புக்களை - பிரசாரத்தை ஆசிரியர் கதாபாத்திரங்கள் வாயிலாக வலிய திணிப்பவை - என்பதுதான் அது. இதற்கு நேர்மாறாக ஒரு கதையை - இயன்றவரை உண்மைத்தன்மையோடு - உண்மையான நிலப்பரப்பில் அதன் அளவீடு, பெயர்கள் போன்ற சூழலோடு நீங்கள் விவரித்த விதம் புதுமையானது. இது சரித்திரக் கதையா அல்லது ஆய்வுக்கதையா என்று வியக்குமளவிற்கு புகைப்படங்கள் / வரைபடங்கள் கதைக்கு வலு சேர்த்துள்ளன. உங்களுடைய பைசாசத்தில் எளிமையும் உண்மையும் அற்புதமான புதுத்தொனியோடு வெளிப்பட்டிருக்கிறது. உண்மையின் அளவு அதிகரிக்குமானால் ஆவணக்கதையாக மாறும் அபாயம் உண்டு. எளிமை அதன் அளவை மீறுமானால் உண்மை குறையக்கூடும். இரண்டையுமோ ஒரே கலவையில் பேசும் உங்களின் தனித்த நடை யாரையுமே நினைவுபடுத்தவில்லை என்பது ஆரோக்கியமான விஷயமாகும். நீங்கள் எடுத்துக்கொண்ட கரு சிக்கலான சர்ச்சைகளுடையது. ஆயினும் எதிலும் சிக்காமல் - மாயாவாதமும் அதன் தாக்கமும் அற்று - சுவாரசியமும் குன்றாமல் கதையின் போக்கு அமைந்திருக்கிறது. பாத்திர உரையாடல்களில் நுட்பமும் சில இடங்களில் தத்துவ விசாரமும் வெளிப்படுகிறது. தேவையான இடத்தில் நீட்டவும் தேவையற்ற இடத்தில் குறுக்கவும் உங்கள் நடை அறிந்திருக்கிறது. முதல் அத்தியாயத்தை ஒரு வரியாக சொல்லிவிட முடியும். கதையின் மையமாக உள்ள மூவேந்தன் கதையை நீட்டவும் முடியும். ஆனால் கதையின் ஒட்டுமொத்த தன்மைக்கேற்ப மாறுபாடு ஏற்படாத வண்ணம் இரு கூறுகளுமே கையாளப்பட்டிருக்கிறது. அத்தியாயங்கள் நகர்கிறபோது நடையின் தன்மையில் மெருகேறி ஒளிர்கிறது. கதையின் கடைசிப்பகுதிக்கான காத்திருப்பை உங்கள் தங்குதடையற்ற நடை உறுதி செய்கிறது அப்புறம்... விமர்சனமாகக் கூற வேண்டுமானால் ஒன்றே ஒன்றுதான். கதை மாந்தர்களின் பெயர்கள். அவை அக்காலத்தை உணர்த்துபவையாக இருந்தாலும்கூட அந்தப் பாத்திரம் மனதில் பதிகிற அளவிற்கு பெயர்கள் ஒட்ட மறுக்கின்றன. பெயர்களின் உள்ள உண்மைத்தன்மையை நான் மறுக்கவில்லை. அதுவும் அவசியம்தான். என்றாலும் அக்காலப் பெயர்களிலேயே எளிமையானவற்றை தேர்வு செய்யலாமே.. திருவரங்கன், பிச்சன், மூவேந்தன், வெண்ணாடர்... போன்றவை மனசில் நிற்கின்றன. அதற்குக் காரணம் கதாபாத்திரத்தின் பின்புலம் மட்டுமல்ல அவற்றின் எளிமையான பெயர்களும்தான் என்பது என் கருத்து. இப்போது இராஜகேசரியை கணிணியில் இறக்கம் செய்து வாசித்து வருகிறேன். முழுமையாகப் படித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன். அன்புடன் அ. உமர் பாருக் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |