http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 35

இதழ் 35
[ மே 15 - ஜூன் 14, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆய்வேடுகளின் அருமை
போசளீசுவரம் கோயிலில் புதிய கல்வெட்டு
பைசாசம் - வாசகர் எண்ணங்கள்
பைசாசம் - ஒரு விமர்சனம்
பழுவூர் - 14
உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 7
கோயில்களும் கலைகளும்
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 1
தமிழின் பெருமையைக் குறைசொன்னாரா மதன்?
Links of the Month
சங்ககாலத்து உணவும் உடையும் - 1
இதழ் எண். 35 > கலையும் ஆய்வும்
கோயில்களும் கலைகளும்
மா. இலாவண்யா
கோயில்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள். இன்று இறை வழிபாட்டிற்கு மட்டுமே என்ற அளவில் இருக்கும் கோயில்கள், நமது முன்னோர்களுக்கு வாழ்க்கையுடனும் சமுதாயத்துடனும் பின்னிப் பிணைந்த ஒரு ஆதார தலமாக இருந்தது. முக்கியச் செய்திகளை விவாதித்து முடிவெடுக்கவோ, அச்செய்திகளை அனைவரும் அறியுமாறு பதிவு செய்து பத்திரப்படுத்தவோ, இயல் இசை நாடகங்களை கூடி இரசிக்கவோ, வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றிய அறிவுச் சொற்பொழிவுகளை கேட்டு மகிழவோ, தமது வாழ்வின் மங்கள நிகழ்ச்சிகளைக் கொண்டாடவோ மக்கள் நாடியது கோயில்களையே. நமது முன்னோர்களுக்கிருந்த வரலாற்று நோக்கு அவர்களைத் தமது ஊர் சார்ந்த செய்திகளைக் கோயில்களின் கருங்கல் சுவர்களில் கல்வெட்டாய்ப் பொறிக்க வைத்தது. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத் தென்னிந்திய வரலாற்றை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது கோயில்களில் உள்ள கல்வெட்டுகளே. நமது முன்னோர்களின் கலைத்திறனுக்குச் சான்று வேண்டுமா, செல்லுங்கள் கோயில்களை நோக்கி. கோயில்களில் உள்ள சிற்பங்களின் வடிவில் உள்ள முந்தைய கால வீரர்களும் நாரீமணிகளும், ஆயிரம் ஆண்டுகளாய் அழியாமல் ஒரு சில கோயில்களில் இன்றும் பேசாமல் பேசும் உயர்சித்திரங்களும் நமது மூதாதையர்கள் கொண்டிருந்த உயர் கலைத்திறனை, உள்ளத்தில் தோன்றியதையும், தாம் பார்த்த அன்றாட நிகழ்வுகளையும் கல்லிலே செதுக்கி ஓவியத்திலே காட்சிகளாய் விரித்த அவர்களின் கைவித்தையைப் பறைசாற்றும்.

இசை, நாட்டியம் நாடகம், ஓவியக்கலை எனப் பல கலைகளும் தமிழ் நாட்டினருடன் பின்னிப் பிணைந்து வளர்ந்திருந்ததை நமக்குச் சங்க இலக்கியங்களும் அதற்குப் பின் வந்த இரட்டைக் காப்பியங்களான, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையும் தெளிவாக விளக்குகின்றன. தொல்காப்பியம் கலைஞர்களை பாணர், கூத்தர், விறலியர் என வகைப்படுத்துகிறது. பாணர் பாட்டு பாடுபவர், கூத்தர் நாட்டியம் ஆடுபவர், விறலியர் பாட்டு பாடி நாட்டியமாடும் திறமை பெற்றவர். சிலப்பதிகாரம் இசை நாட்டியம் சம்பந்தமான பல தகவல்களையும் தந்து இசையும் நாட்டியமும் பண்டைய காலத் தமிழகத்தில் உயர் வளர்ச்சி பெற்றிருந்ததை தெரியப்படுத்துகிறது.

இலக்கியங்கள் பண்டைய தமிழர்கள் இசைத்த பல இசைக்கருவிகளின் பெயர்களை நமக்குத் தருகின்றது. பலவகையான யாழ், வீணை, குழல், முழவு, மத்தளங்கள், சல்லிகை, கரடி, இலைத்தாளம், பேரிகை, எக்காளம், முரசு, போன்று எத்தனையோ கருவிகளைப் பாணர்களும் இசை வல்லுனர்களும் இசைத்திருக்கின்றனர். அந்த இசைக்கருவிகள் எப்படி இருந்தன? தெரிந்துகொள்ளப் பண்டைய கோயில்கள் உதவுகின்றன. பல கோயில்களில் கபோதம் என்று சொல்லப்படும் கூரை அல்லது sun-shade போன்ற அமைப்பின் கீழ்ப்பகுதியான வலபியில் இடம்பெற்றிருக்கும் பூதகணங்களில் சில ஆடற் தோற்றத்துடனும், வாத்தியம் இசைத்தபடியும், இசைபாடிக் கொண்டிருக்கும்படியுமாக அமைக்கப் பெற்றிருக்கின்றன. இந்தப் பூதகணங்களும், கோயில் சிற்பங்களில் உள்ள கின்னரர்களும், கடவுளரும் இசைக்கும் இசைக்கருவிகள் தான் எத்தனை!! தோல், நரம்பு, காற்று, கஞ்சமென்னும் நால்வகை இசைக்கருவிகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தது இத்திருக்கோயில்களின் வழி தெள்ளெனத் தெரிகிறது. யாழில் ஒரு வகையான வில்யாழைக் காஞ்சிபுரம் கைலாயநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு பூதம் இசைத்துக்கொண்டிருக்கிறது. வில்லிசைக் கருவியான சிரட்டைக்கின்னரியைப் பற்றிச் சங்க கால இலக்கியங்களிலோ, கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளிலோ காணக்கிடைக்கவில்லை. சரி இப்படி ஒரு கருவி இருந்தது பின் எப்படித் தான் தெரிந்தது? திருமலைப்புரம் என்னும் பாண்டியர் குடைவரையில் உள்ள ஒரு சிற்பத்தொகுதியில், சிவபெருமான் ஆட, அவருக்கு இரு பக்கங்களிலும் இரு பூதகணங்கள் இருக்கின்றன. அதில் இடப்புறம் உள்ள பூதகணம் இடத்தோளில் சாற்றியபடி இடக்கையால் பிடித்திருக்கும் நரம்பிசைக் கருவியை வலக்கையில் உள்ள ஒரு கோலால் மீட்டி இசைக்கின்றது. இப்படிப்பட்ட வில்லிசைக்கருவி காணக்கிடைக்கும் முதல் கோயில் இதுவேயாகும். இசையறிஞர் அமரர் வீ.ப.கா. சுந்தரம் இவ்விசைக் கருவியை சிரட்டைக்கின்னரி என்று பெயரிட்டு அழைத்தார். சிலர் இதைப் பாடவியம் என்று குறிப்பிடுகின்றனர். இது போல எட்டாம் நூற்றாண்டிற்குப் பிந்தைய பல்லவர் கோயில்களிலும், சோழர்காலக் கோயில்கள் பலவற்றிலும் இந்த வில்லிசைக் கருவி காணக்கிடைக்கின்றன.

இராஜசிம்மேசுவரம் என்று கல்வெட்டுகளில் சுட்டப்படும் இராஜசிம்மபல்லவனின் தளியான காஞ்சி கையிலாயநாதர் கோயில் எட்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் இசைக் கருவிகள் வளர்ச்சியுற்றிருந்ததை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. நால்வகை இசைக்கருவிகளில் பலவும் அங்குள்ள சிற்பங்களில் காணக்கிடைக்கின்றன. மகேந்திரவர்ம பல்லவர் (கி.பி 6ம் நூற்றாண்டு) இசைக்கலையில் மிக்க தேர்ச்சி பெற்றிருந்தவர். நரசமங்கலம் என்ற ஊரில் உள்ள அவரின் குடைவரையில் உள்ள ஒரு கல்வெட்டு, மகேந்திரருக்கும் அவரது துணைவிக்கும் இருந்த இசைப்புலமையையும், துணைவியின் குரல் இனிமையையும் சுட்டுகின்றது. அவரது துணைவியின் குரலினை ஒத்து வாத்தியக்கருவியை இசைக்க அவர் மேற்கொண்ட முயற்சியும் அதில் அடைந்த சாதனையையும் விளக்குவதாக உள்ள கல்வெட்டு அவரின் இசைப்புலமையைத் தெளிவாகக் காட்டுகின்றது. இராஜசிம்ம பல்லவனும் இசையில் சிறந்த தேர்ச்சி பெற்று விளங்கினான் என்று, அவனது சில விருதுப்பெயர்கள் மூலம் நாம் அறியமுடிகிறது. இராஜராஜர் இசையில் அளவுகடந்த ஆர்வம் கொண்டிருந்தார். தஞ்சை பிருகதீஸ்வரர் கோயில் (இக்கோயிலின் பெயர் இராஜராஜீஸ்வரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது) கல்வெட்டுகள் இக்கோயிலில் இசைபாடி வந்த நூற்று முப்பத்தெட்டு கலைஞர்களின் பெயர்களும், அவர்கள் எவ்வகைப் பாடகர்கள், அவர்கள் இசைத்த இசைக்கருவிகள், அவர்களின் ஊதியம் எனப் பல தகவல்களையும் தருகிறது. காந்தர்வர்கள், பாணர்கள், தமிழ் பாடியவர்கள், ஆரியம் பாடியவர்கள், கொட்டுப்பாட்டு பாடியவர்கள், காண பாடர், பிடாரர்கள் என பலவகைக் கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது.

கோயில்களில் உள்ள நாட்டியச் சிற்பங்களும் ஓவியங்களும் தான் எத்தனை. சங்க இலக்கியங்கள் குரவைக்கூத்து, குடக்கூத்து, வெறியாட்டு எனப் பதினொரு வகையான கூத்துகள் ஆடப்பெற்றமை குறித்த தகவல்களைத் தருகின்றன. பெரும்பாலான கூத்துகள் இன்று பெயரளவில் மட்டுமே தெரிகின்றன. அவை எப்படி ஆடப்பெற்றன என்று இன்று நமக்குத் தெரியவில்லை. கோயில்களில் உள்ள சில கூத்துச் சிற்பங்களும் ஓவியங்களுமே நாம் இன்று அக்கூத்துக்களைப் பற்றி ஓரளவேனும் தெரிந்துகொள்ள உதவுகின்றன. சிவனின் ஆடற்தோற்றங்களும், பூதகணங்கள் மற்றும் ஆடற்பெண்களின் சிற்பங்களும் நமக்கு அக்காலத்தின் நாட்டியநிலையை நன்கு விளக்குகின்றன. பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் தாண்டவ லக்ஷணம் என்னும் பகுதி 108 கரணங்களைப்பற்றியும் பற்றியும் விரிவாகக் கூறுகின்றது. இக்கரணங்கள் இன்று ஆடப்பெறுவதில்லை எனினும், இக்கரணங்கள் எப்படி ஆடப்பெற்றன என கோயில்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் சில ஓவியங்களின் மூலம் தெரியவருகிறது. தஞ்சை இராஜராஜீஸ்வரம் , கும்பகோணம் சாரங்கபாணி கோயில், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் என பல கோயில்களில் இந்த நூத்தியெட்டு கரணங்களும் இடம்பெற்றுள்ளன. பனைமலையில் உள்ள தலகிரீஸ்வரர் கோயிலில் உள்ள பல்லவ ஓவியம், சிவன் ஆடும் ஊர்த்துவஜானு என்ற கரணத்தை படம்பிடித்துள்ளது. பல கோயில்களில் நாட்டியம் ஆடும் பெண்கள் (தேவரடியார்) இருந்ததை கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜீஸ்வரத்து தளிச்சேரிக் கல்வெட்டு பல கோயில்களிலிருந்தும் இராஜராஜீஸ்வரத்துக்கு நாட்டியமாட அழைத்துவரப்பட்ட நானூறு நாட்டியப்பெண்களின் பெயர்களையும், அவர்கள் முன்பு எந்தக் கோயிலில் பணியாற்றினர் என்ற செய்தியையும், அவர்களின் ஊதியங்களையும், அவர்கள் வசிக்க அக்கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட வீடுகளையும், யார் யார் எந்த வீட்டில் வசித்தனர் என்றும் இன்னும் பல செய்திகளையும் நமக்கு வழங்குகிறது. நாட்டியப்பெண்கள் எவ்வாறு முக்கியமானவர்களாக கருதப்பட்டனர் என்பதும், சமுதாயத்தில் எவ்வாறு மதிக்கப்பட்டனர் என்பதும் இதன் வழி புலனாகின்றது.

ஆயிரம் வருடங்களாக அழியாத அஜந்தா ஓவியங்களைப் பற்றி அனைவரும் அறிவர். இத்தகைய ஓவியங்கள் சில தமிழ்நாட்டின் கோயில் சுவர்களில் இன்றும் இருப்பது தெரியுமா? இராஜசிம்மபல்லவன் எடுப்பித்த காஞ்சி கைலாயநாதர் ஆலயம் ஒரு காலத்தில் கோயில் முழுமையும் வண்ணம் தீட்டப்பெற்று ஓவியக் காட்சிகளுடன் எழிலுடன் விளங்கியிருக்கலாம். இன்று வெளிச்சுவர்களில் ஓவியங்கள் ஏதும் காணக்கிடைக்கவில்லை ஆயினும் விமானத்தை சுற்றியுள்ள சுற்றாலையின் பக்கச் சுவர்களில் உள்ள சிறு சிறு கோட்டங்களில் இருக்கும் பல்லவ ஓவியத் துணுக்குகள் பல்லவ ஓவியங்களின் சிறப்பை நமக்கு நன்றாக எடுத்துக்காட்டுகின்றன. அவ்வோவியங்களில் குடக்கூத்து ஆடும் சிவபெருமானும், இசைக்கருவிகள் இசைக்கும் பூதகணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஓவியத்துணுக்குகளை ஆராய்வதன் மூலமே, பல்லவர் காலத்தில் இசைக்கப்பெற்ற இசைக்கருவிகள் சில, பூணப்பெற்ற அணிகலன்கள், ஆடைகள் இவற்றைப்பற்றிய சில தகவல்களை அறியமுடிகிறது. புதுக்கோட்டை அருகில் உள்ள சித்தன்னவாசலில் பாண்டியர் காலத்தை சேர்ந்தது என்று கருதப்படும் ஜைனக்குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. இக்குடைவரையின் அர்த்தமண்டப மேற்கூரையில் 7 ம் நூற்றாண்டு மிக அழகான ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வோவியத்தில் ஒரு தாமரைத் தடாகமும், ஜைன முனிவர்களும், பெண்களும், மீன்களும், வாத்து அன்னம் மற்றும் சில விலங்குகளும் இடம்பெற்றுள்ளன. தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின் முதல் தளத்தில் உள்ள சுற்றாலையின் இருபக்கச் சுவர்களிலும் உள்ள சோழர் கால ஓவியங்கள் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் அழகுற அழைந்துள்ளது. தஞ்சையை நாயக்கமன்னர்கள் ஆண்ட காலத்திலே, இச்சோழர் கால ஓவியங்களை மறைத்து வேறு ஓவியங்கள் தீட்டப்பெற்றன. இந்தியத் தொல்லியல் துறையினர் நாயக்க ஓவியங்களை மிகவும் ஜாக்கிரதையாக நீக்கி சோழர் ஓவியங்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். மேல் தளத்தில் இருக்கும் இந்த ஓவியங்கள் படமெடுக்கப்பட்டு, கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் ஒரு இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சோழர்காலத்தில் இருந்த இறையுணர்வு, நாகரிகம், ஆடை அணிகலன்கள், புராணங்களின் மேல் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு என பல தகவல்களை இந்த ஓவியங்கள் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன.

ஆயிரமாயிரம் கோயில்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிற்பங்கள், நமது மூதாதையரின் சிற்பத்திறனை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. கோயில்களை எவ்வாறு காலவகைப்படுத்துவது. கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் மன்னரின் பெயரையும் ஆட்சியாண்டையும் படித்து அறியலாம். கல்வெட்டுகளே இல்லையென்றால், கட்டிடக்கலைக் கூறுகளை வைத்து அறியலாம். இல்லையென்றால் சிற்பங்களைக் கொண்டும் தெரிந்துகொள்ளலாம். காலத்திற்கேற்ப சிற்பக்கலையும் மாற்றம் அடைந்து வந்துள்ளது. பல்லவ சிற்பங்களும், முற்சோழர் சிற்பங்களும் நெஞ்சையள்ளும் அழகு பெற்று, உடலமைப்பு, உணர்ச்சிகளின் வெளிப்பாடு என எல்லாவற்றிலும் சிகரமாக, உயிர்சிற்பங்களாகத் திகழ்கின்றன. மிக அரிய சிற்பங்கள் இடைச்சோழர் காலத்தில் கட்டப்பெற்ற சில கோயில்களில் இன்றும் நாம் பார்த்து மகிழும்படி அழகுடன் விளங்குகின்றன. அதற்கு அடுத்து வந்த காலங்களில் சிற்பக்கலை சற்று தன் உயர்நிலையை இழந்துவிட்டது என்றே கூறவேண்டும். பல்லவர், முற்சோழர் காலத்து சிற்பங்களில் மிளிர்ந்த பேரழகும், உயிர்நிலையும், பிற்கால சிற்பங்களில் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றன. பேரழகுடன் இல்லாவிட்டாலும் பிற்கால சிற்பங்களிலும் அழகு இல்லாமல் இல்லை.

பல்லவ, பாண்டிய குடைவரைகள், ஒருகல் தளிகள், கோயில்கள் மற்றும் பல சோழர் கோயில்களை ஆராய்வதன் மூலம் கோயிற் கட்டிடக்கலை வளர்ச்சியைப்பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறாக கலைகளைப் பற்றிய பல செய்திகளையும் கோயில்கள் நமக்கு வழங்குகின்றன. இச்செய்திகளை வழங்கும் கல்வெட்டுகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் பாதுகாப்போம், அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம், அவற்றை ஆராய்ந்து புலமை பெறுவோம்.

________________________

பார்வை நூல்கள்:

1) சிரட்டைக்கின்னரி கட்டுரை - அர. அகிலா, வரலாறு.com இதழ் 1
2) இராஜராஜீஸ்வரத்துப் பாடகர்கள் - முனைவர் மு. நளினி, வரலாறு.com இதழ் 1
3) யாழ் என்னும் ஒரு இசைக்கருவி - லலிதா, வரலாறு.com இதழ் 8
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.