http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 35
இதழ் 35 [ மே 15 - ஜூன் 14, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
(மார்ச் 4, 1995-ம் ஆண்டு தினமணி சுடரில் வெளியான கட்டுரை, சிறிய மாற்றங்களுடன் வரலாறு.காம் வாசகர்களின் பார்வைக்கு...)
திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசால் சென்னையில் வெளியிடப்பட்டது என்பது இதுவரை எவருக்கும் தெரிந்திராத ஒரு வியப்பான செய்தியாகும். கும்பினியார் வெளியிட்ட காசு கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் 'விஷ்ணு'வின் திருவுருவமும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. மேற்கண்ட குறிப்பில் இக்காசில் காணப்படும் உருவம் 'விஷ்ணு' என்று தவறாக அடையாளம் காட்டப்பட்டதாலும், நாணயத்தின் படம் அந்த நூலில் தரப்படாததாலும், சென்னையிலிருந்து கும்பினி அரசி வெளியிட்ட பல 'நட்சத்திர பகோடா' காசுகளில் இதுவுமொன்று என்று கருதி நாணயவியல் அறிஞர்கள் இந்த அரிய நாணயத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்யாமலே விட்டுவிட்டனர் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கல்கத்தா பல்கலைகழகத்து வரலாற்றுப் பேராசிரியர் பி.என்.முகர்ஜி கல்கத்தா அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலை மட்டும் தெளிவான வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். இந்நூலில்தான் முதன்முதலாக இங்கு குறிப்பிடப்படும் தங்க நாணயத்தின் வண்ணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாணய வரலாற்றிலேயே மிகச் சிறந்த தங்க நாணய வெளியீடுகளில் இதுவுமொன்று என்று இந்த நூல் சுட்டிக் காட்டியிருக்கிறது. காசின் முன்புறம் அமர்ந்த நிலையில் காணப்படும் திருவுருவம் 'முனிவராகவோ அல்லது தெய்வமாகவோ' இருக்கலாம் என்று முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். நாணயத்தைப் பற்றிய விவரங்கள் காசின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு முனிவரின் திருவுருவம் காணப்படுகிறது. அவர் ஒரு பீடத்தின் மீது பத்மாசனமிட்டு தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். வலது கை தொடை மீதும் இடது கை ஒரு சுவடியை ஏந்தி உள்ள பாவனையிலும் உள்ளன. இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை; பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது. காசின் பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரம் புள்ளிகளாலான வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது. யார் இந்த முனிவர்? காசின் முன்புறம் காணப்படும் உருவத்தின் மேனியில் எந்தவிதமான ஆபரணங்களும் இல்லாததாலும், சுற்றிலும் கொடி, ஆயுதம் போன்ற எந்தவிதமான சின்னங்களும் காணப்படாததாலும் இவ்வுருவம் எந்த ஒரு தெய்வத்தையோ அல்லது அரசனையோ குறிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. மேலே உள்ள குடை, அமர்ந்துள்ள பீடம், தீர்த்த பாத்திரம், பத்மாசனத்தில் தியான நிலை, எளிய உடை ஆகியவற்றிலிருந்து இத்திருவுருவம் ஒரு முனிவரைக் குறிக்கிறது என்று நிச்சயமாகக் கூறலாம். மேலும் அவருடைய இடையில் உள்ள வேட்டி தட்டுச் சுற்றாக இருப்பதினாலும், தோளில் துண்டை மடித்துப் பாங்கிலிருந்தும் இவர் ஒரு தமிழ் முனிவர் என்று அடையாளம் காண முடிகிறது. இவர் சுவடியை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ளது இவர் ஒரு ஆசானாகவோ பெரும்புலவராகவோ இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. யார் இந்த முனிவர்? இவருடைய திருவுருவம் கும்பினியார் போட்ட தங்கக் காசில் எப்படி இடம் பெற்றது? காசில் எழுத்துக்கள் இல்லாத நிலையில் இக்கேள்விகளுக்குப் பலதரப்பட்ட அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் கொண்டுதான் விடை காண முடியும். எளிய உடையுடன் தியான நிலையில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து ஒரு நூலை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ள இத் திருவுருவம் திருவள்ளுவப் பெருமானுடையதாக இருக்கலாமோ என்று ஓர் எண்ணம் என் மனதில் பளிச்சிட்டது. இந்த யூகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வரும் கும்பினி அரசாணைகளையும் அக்கால நாணய சாலையின் அறிக்கைகளையும் பார்வையிட்டதில் சில முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாய்வுக்கு எல்லா வசதிகளையும் செய்து உதவிய ஆவணக் காப்பகத்தின் ஆணையர் திரு.எம்.பரமசிவம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். காசின் காலம் இக் காசின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து முனை நட்சத்திரச் சின்னத்திலிருந்து, ஆங்கிலேயக் கிழக்கிதியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட "நட்சத்திரப் பகோடா" அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம். எல்லிஸ் துரையும் திருக்குறளும் அக்கால கட்டத்தில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார். தமிழ் நூல்கள் அச்சேறிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும். எல்லிஸ் துரைக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பரிய பற்று இருந்தது. திருக்குறளிலிருந்து பல குறள்களை தேந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர் எழுதினார். இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும். துரதிருஷ்டவசமாக அந்நூல் முற்றுப்பெறும் முன்னரே எல்லிஸ் துரை இராமநாதபுரத்தின் அருகே முகாமிட்டு இருந்த போது தற்செயலாக விஷ உணவை அருந்தி அகால மரணமடைந்தார். அவர் இறந்த பின் வெளிவந்த அந்த நூலை மீண்டும் சிறந்த முறையில் ரா.பி.சேதுப்பிள்ளை பதிப்பித்துள்ளார். இந்நூலில் எல்லிஸ் துரை முன்னூறுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களிலிருந்து காட்டியுள்ள மேற்கோள்களிலிருந்து அவருடைய ஆழ்ந்த புலமை வெளிப்படுகிறது. இன்று காணாமற் போய்விட்ட வளையாபதி போன்ற சங்க நூல்களிலிருந்தும் இவர் மேற்கோள்களைக் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டில் திருக்குறள் (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |