http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 35

இதழ் 35
[ மே 15 - ஜூன் 14, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆய்வேடுகளின் அருமை
போசளீசுவரம் கோயிலில் புதிய கல்வெட்டு
பைசாசம் - வாசகர் எண்ணங்கள்
பைசாசம் - ஒரு விமர்சனம்
பழுவூர் - 14
உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 7
கோயில்களும் கலைகளும்
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 1
தமிழின் பெருமையைக் குறைசொன்னாரா மதன்?
Links of the Month
சங்ககாலத்து உணவும் உடையும் - 1
இதழ் எண். 35 > கலைக்கோவன் பக்கம்
உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்
இரா. கலைக்கோவன்
அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

திரு. வெ.இறையன்புவின் கேள்விக்குத் திரு. மதன் ஆனந்த விகடன் 07.03.2007 இதழில் தந்திருந்த மறுமொழியைப் படித்து உளம் வருந்தியவர்களுள் நானும் ஒருவன். 'தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள்' எனும் நூல் தயாரிப்புப் பணியில் முழுமையாக ஆழ்ந்திருந்தமையால் என்னால் உடன் கருத்துரைக்கக் கூடவில்லை. வரலாறு மின்னிதழ் ஆசிரியர்களுள் ஒருவரான திரு. ச.கமலக்கண்ணன் திரு. மதனுக்கு எழுதிய வெளிப்படையான மடலும் அந்த மடலுக்குத் திரு. மதன் 25.04.2007 ஆனந்த விகடனில் தந்திருந்த மறுமொழியும் படித்தேன். திரு. மதனின் முதல்மொழி, மறுமொழி இவற்றையும் திரு. ச.கமலக்கண்ணனின் வெளிப்படையான மடலையும் படித்து உலகளாவிய நண்பர்களான நீங்கள் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.

திரு. மதனுக்குத் தமிழர் வரலாறு குறித்த உண்மைகளை எழுதவேண்டும் என்று கருதிய நிலையில், இந்த வாய்ப்பு மாற்றத்தைத் தந்தது. திரு. மதனுக்குத் தனிப்பட எழுதுவதைவிட, அவர் கருத்துக்களை நண்பர்கள் மன்றில் ஆய்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், திரு. மதனின் இரண்டு மறுமொழிகளையும் படித்து வரலாறு மின்னிதழுடன் தொடர்புகொண்ட அனைவரையும் நண்பர்களாய் விளித்து இந்த மடலைத் தொடங்கியுள்ளேன்.

திரு. ச.கமலக்கண்ணனின் மறுமொழியை, 'உணர்ச்சிப் பெருக்கில் தம்மைத் தாக்கிய' மடலாகவே திரு. மதன் பார்த்திருப்பது துன்பம் தருகிறது. அந்த மடலில், கல்வெட்டுகளைக் கொண்டு ஓர் அரச மரபினர் (பழுவேட்டரையர்) தொடர்பான வரலாறு உருவாக்கப்பட்டிருப்பதையும் சங்க இலக்கியப் பாடல்கள் தமிழரின் வாழ்வியல் சுட்டும் உண்மையையும் திரு. ச.கமலக்கண்ணன் வெளிப்படுத்தியிருந்தார். 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் வரலாற்றை எழுதமுடியும்?' என்று திரு. மதன் கேட்டிருந்த கேள்விக்குத்தான் திரு. கமலக்கண்ணன் தாம் நன்கறிந்த இந்த இரண்டு சான்றுகளைத் தந்திருந்தார். இது போல பல சான்றுகள் உள்ளன. திரு. மதனுக்கு மட்டுமல்லாது, தமிழறிந்த அனைத்து நண்பர்களுக்கும் இவை தெரியவேண்டும் என்பதற்காகவே இந்த மடல் தொடர்கிறது. இது உணர்ச்சிப் பெருக்கில் உருவாகும் மடல் அன்று. உண்மைகளை உலகத் தமிழர்கள் முன் நிறுத்த மேற்கொள்ளப்படும் ஓர் எளிய முயற்சி.

07.03.2007 ஆனந்த விகடன் இதழில் திரு. வெ. இறையன்பு, 'சோழப் பேரரசு' பற்றிய ஆதாரபூர்வ நூல் எழுதுமாறு திரு. மதனைக் கேட்டிருக்கிறார். 'சோழப் பேரரசு' பற்றித் தமிழில் திரு. வை. சதாசிவ பண்டாரத்தாரும் முனைவர். மா. இராசமாணிக்கனாரும் ஆங்கிலத்தில் திரு. நீலகண்ட சாஸ்திரியாரும் அருமையான ஆதாரபூர்வமான நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளனர். திரு. சாஸ்திரியாரின் நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது. திரு. கே.கே.பிள்ளை, 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்ற நூலில் சோழர்களைப் பற்றி மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் வரலாற்று வல்லுநர்க் குழு, 'சோழப் பெருவேந்தர் காலம்' என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் வெளியிட்டுள்ளது.

சோழர்கால வருவாய் அமைப்புப் பற்றித் திரு. ப.சண்முகமும் சோழர்கால நில உடைமை பற்றித் திரு. கரோஷிமாவும் சோழர்கால வருவாய்ப் பிரிவுகள் பற்றித் திரு. எ.சுப்பராயலுவும் சோழர்கால வணிகம் பற்றித் திரு.கனகலதா முகுந்தும் சோழர்காலப் பொருளாதாரம் பற்றித் திரு. அப்பாதுரையும் சோழர்காலப் படிமங்கள் பற்றி முனைவர் இரா.நாகசாமியும் சோழர்கால நீர்ப்பாசனம் பற்றித் திரு. சீனிவாசனும் சோழர்கால ஆடற்கலை பற்றி இரா.கலைக்கோவனும் சோழர்காலக் கோயில் பொருளியல் பற்றித் திரு. மெ.து.இராசுகுமாரும் சோழர்காலக் குடியேற்றங்கள், சோழர்காலக் கட்டடக்கலை, சோழர்காலச் சிற்பக்கலை பற்றி முனைவர் மு.நளினியும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்த வணிக நடவடிக்கைகள் குறித்துப் பல அறிஞர்களும் (டெய்ஷோ பல்கலைக்கழகம்) மிக விரிவான நூல்களை, ஆய்வேடுகளைப் படைத்துள்ளனர்.

சோழப்பேரரசு குறித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட தரமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள 'அருண்மொழி' என்ற நூல் சோழப் பேரரசின் பல பரிமாணங்கள் குறித்த இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழகக் கடல்சார் வரலாறு, தமிழகத் துறைமுகங்கள், The Political Structure of Early and Medieval South India, Peasent State and Society in Medieval South India என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சோழப் பேரரசு குறித்தும் சோழச் சமுதாயம் குறித்தும் எத்தனை எத்தனை நூல்கள் உள்ளன.

திரு. வெ.இறையன்பு இவை பற்றி அறியாதவர் அல்லர். ஆய்வாளர்களுக்காகவும் வரலாற்று நோக்கர்களுக்காகவும் எழுதப்பட்ட இந்நூல்களை அனைத்துத் தள மக்களும் படித்து மகிழ்தல் இயலாது எனக் கருதியே, 'வந்தார்கள் வென்றார்கள்' அமைப்பில், சோழப் பேரரசு குறித்து யாவரும் படித்து மகிழக்கூடிய, அனைத்துத் தள மக்களையும் சென்று சேரக்கூடிய ஒரு நூலைத் திரு. மதன் எழுதவேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்தார். எதனையும் எளிமைப்படுத்திச் சுவைபட வழங்கவல்ல திரு. மதனின் ஆற்றலில் திரு. இறையன்புவிற்கு இருக்கும் நம்பிக்கையை இந்த வேண்டுகோள் காட்டுவதாகக் கொள்ளலாம்.

இந்த வேண்டுகோளைத் திரு. மதன் எதிர்கொண்டவிதம்தான் சிக்கலை உண்டாக்கிவிட்டது. 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் நம் வரலாற்றை எழுதமுடியும்?' என்று திரு. வெ. இறையன்புவிற்கு எதிராகக் கேள்வி வைத்ததைவிட, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களை, கல்வெட்டறிஞர்களை அவர் தொடர்புகொண்டு, ஆதாரங்கள் பற்றிக் கேட்டுத் தெளிந்திருக்கலாம். 'நான் தமிழ் ஆய்வாளனும் அல்ல; தொல்பொருள் ஆராய்ச்சியாளனும் அல்ல' என்று தம்முடைய 25.04.2007 மறுமொழியில் ஒப்புக்கொண்டிருப்பவர், முதல் மொழியைத் தரும் முன்னரே இவற்றை உணர்ந்து, உரியவர்களைக் கலந்து மறுமொழி அளித்திருந்தால், திரு. மதனின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையும் மதிப்பும் கூடியிருக்கும். தெரியாத துறைகளைப் பற்றி மறுமொழி அளிக்கும்போது எச்சரிக்கை தேவை. எந்த ஒரு மனிதனும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. தெரியாமல் இருப்பது குற்றமும் அன்று. ஆனால், தெரியாத நிலையில், 'தெரியாது' என்பதுதான் மறுமொழியாக இருக்கவேண்டுமே தவிர, எல்லாம் தெரிந்தது போல எழுதுதலும் மொழிதலும் சான்றாண்மையன்று.

இனி, திரு. மதனின் இரண்டு மறுமொழிகளையும் விரிவாகவே பார்க்கலாம். இவை, 'வரலாறு' பற்றி அறிந்துகொள்ளவும் அநுபவித்துத் துய்க்கவும் நம்மவர்க்குப் பெரிதும் உதவும். 07.03.2007 இதழில், 'தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அனேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் எழுதியுள்ளார். இந்த இரு கூற்றுகளுமே பிழையானவை. தமிழ் மன்னர்களைப் படம்பிடிக்க அவர்கள் விட்டுச் சென்ற கோயில்கள் உள்ளன. பாடல்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எப்படி முதன்மையான வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படுகின்றனவோ அது போலவே கோயில்களும் வரலாற்றுச் சான்றுகளாகவே விளங்குவதை யாரே மறுக்க முடியும்?

ஒரு கோயில், அதை உருவாக்கிய மன்னனின் ஆளுமை, திறன், இயல்புகள், அக்கால மக்களின் கலைநோக்கு, கலைஞர்களின் சிந்தனை வளம், சமுதாயச் சார்புகள் எனப் பலவும் சொல்லுவதாக காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழீசுவரம் கொண்டு தெளியலாம். ஒரு கோயில் இவ்வளவு செய்திகளை வெளியிடமுடியுமா என்று கருதுவார் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் பற்றி வெளியாகியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் படிக்கவேண்டும். திரு. பி.வெங்கட்ராமனின், 'இராஜராஜேசுவரம்', மு.நளினியின், 'இராஜராஜீசுவரம் புதிய உண்மைகள்', இரா.கலைக்கோவனின், 'கோயில்களை நோக்கி . . .' இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாய் அமையும்.

திரு. சுந்தர் பரத்வாஜின் கொடையால் சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழிக் கோயில் ஒரு நூலாக வடிவம் எடுத்திருப்பதை நண்பர்கள் அறியவேண்டும். ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட சோழ நாட்டு ஊர்கள் இந்நூலால் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சேத்ரபாலர் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்நூல் ஆராய்ந்துள்ளது. அப்பர் காலத்திலிருந்து வளர்ந்து பரந்த ஒரு கோயில் சமுதாயத்தை எப்படி அணைத்திருந்தது என்பதை 'வலஞ்சுழி வாணர்' படித்தவர்கள் அறியமுடியும்.

கோயில்களினும் சிறந்த வரலாற்றுக் களங்கள் இல்லை. இக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், கட்டடக்கலைக் கூறுகள் இவை அவ்வக்கால வாழ்வியல் பின்னணிகளை மிக அருமையாக எடுத்துவைக்கின்றன. கோயில் பூதவரிகளில் (சுவரும் கூரையும் இணையும் பகுதியில் உள்ள பூதங்களின் சிற்பத்தொகுதி) பல்துறை வரலாற்றுத் தரவுகள் புதைந்து கிடப்பதை அநுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும். தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுதியும் பாடியும் செதுக்கியும் வைத்துள்ளார்கள். தெரிந்து கொள்வதும் தேர்ந்து கொள்வதும் நம் திறமை.

'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் தம்முடைய முதல் மறுமொழியில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பிழை. உலகம் போற்றும் கல்வெட்டு மேதையான திரு. ஐராவதம் மகாதேவன் தம்முடைய, 'Early Tamil Epigraphy' என்ற நூலில் சங்கத் தமிழ் மன்னர்களைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டுகளின் பாடங்களையும் காலத்தையும் குறிப்பிட்டுள்ளார். மாங்குளத்தில் படியெடுக்கப்பட்டிருக்கும் அக்கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயரைத் தருகின்றன. அவற்றின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு. பாண்டியர்களைப் பெயர் சுட்டிக் குறிப்பிடும் காசுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கி.மு. இரண்டாம் நூற்றாண்டின. தினமலர் ஆசிரியர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவை பற்றி நூல் எழுதியுள்ளார். அசோகரின் கிர்னார் கல்வெட்டு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் மரபுகளாகச் சோழர்களையும் பாண்டியர்களையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மன்னர்களைப் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. உண்மைகள் இப்படியிருக்க, 'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் எழுதுவது எந்த வகையில் நியாயம்?

சிறந்த தமிழறிஞர்களான மு.வரதராசனார், மா.இராசமாணிக்கனார், வ.சுப.மாணிக்கனார், தமிழண்ணல் இவர்கள் தங்களுடைய தமிழ்மொழி இலக்கிய வரலாறு பற்றிய நூல்களிலும் கால ஆராய்ச்சி பற்றி நூல்களிலும் சங்க காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையென வரையறுத்துள்ளனர். அண்மையில் கிடைத்துள்ள பல்வேறு அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் தொல்லியல் அறிஞர் கா.இராஜன், சங்ககாலம் கி.மு. நான்காம் நூற்றாண்டுவரை கொண்டு செல்லத்தக்கது என்று மிகத் தெளிவாக அறிவித்துள்ளார் (தொல்லியல் நோக்கில் சங்க காலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு).

திரு. சு.இராசவேலு, திரு. கோ. திருமூர்த்தி இருவரும் எழுதியுள்ள, 'தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள்' தமிழ்நாட்டில் நிகழ்ந்த 98 அகழாய்வுகளின் முடிவுகளைத் தெரிவிக்கின்றன. இந்நூலில், 'இந்தியாவில் தமிழ்நாட்டு அகழாய்வுகளில்தான் மட்பாண்டங்களில் இத்தகைய எழுத்துப் பொறிப்புகள் பெருமளவில் கிடைத்துள்ளன. இது தமிழகத்தில் அசோகருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கி இருந்தனர் என்ற உண்மையை' விளக்குகிறது என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்தை வலியுறுத்தி, 'சங்க காலத்தில் அறிவொளி இயக்கம்' என்று திரு. ஐராவதம் மகாதேவன் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளார்.

'தமிழனிடமிருந்துதான் எழுத்துமுறை இந்தியாவில் பரவிற்று' எனும் உண்மையைக் கண்டுபிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக உறுதிப்படுத்துக் கொண்டிருக்கும் இந்த நல்லோரையில், 'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்னும் தவறான கருத்தொன்றைப் பொதுமக்கள் பலரும் படிக்கும் ஓர் இதழில் திரு. மதன் எழுதலாமா? தாம் ஒரு தமிழ் ஆய்வாளர் அல்லர் என்ற உண்மையை இந்தக் கருத்தை எழுதும் முன் அவர் உணர்ந்திருக்க வேண்டாமா?

பேராசிரியர்கள் திரு. இரா. இளங்குமரன், திரு. தமிழண்ணல், திரு. பொன். கோதண்டராமன், திரு. க.ப.அறவாணன், திரு. க.நெடுஞ்செழியன், திரு. சிற்பி பாலசுப்பிரமணியன், திரு. இ.சுந்தரமூர்த்தி எனப் பல தமிழறிஞர்கள் இன்றும் நம்மிடையே தமிழ் பற்றித் தகுந்தன கூறக் காத்திருக்கும்போது, அவர்கள் அநுபவத்தை, அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஒரு பிழையான தகவலை மக்களுடன் பகிர்ந்துகொள்வது, 'வந்தார்கள் வென்றார்கள்' போன்றதொரு நூலை எழுதிய திரு. மதனுக்குப் பொருந்துமா என்பதை உலகளாவிய தமிழ் நண்பர்களான நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

திரு. மதன் 07.03.2007 ஆனந்த விகடனில், 'புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும் பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு . . . உணர்ச்சி வசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள்' என்று கூறிக் கரிகாலனின் வடபுலப் படையெடுப்பைப் பற்றிச் சிலப்பதிகாரம் தரும் தரவுகளை எடுத்துக்காட்டாக முன்வைத்து, பாடல் மிகையாகப் புகழ்வதாகக் கூறி, 'உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை' என்று கருத்துரைத்துள்ளார்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்றெல்லாம் இன்றளவும் உலகம் ஒப்பும் உயரிய கருத்துக்களை விதைத்துச் சென்ற தமிழ்ப் புலவர்களை இதைவிடக் கீழ்மையாக யாரும் மதிப்பீடு செய்ய முடியாது. மதுவுக்கும் பொற்காசுகளுக்கும் உணர்ச்சி வயப்பட்டுப் புலமையை விற்றவர்களா தமிழ்ப்புலவர்கள்? சங்க இலக்கியங்களான தொகை நூல்களிலும் பத்துப்பாட்டிலும் மன்னர்களைப் பாடியவர்கள் உணர்ச்சி வயப்பட்டவர்களா? அதீதக் கற்பனையாளர்களா? திருமுருகாற்றுப்படை தவிர்த்த ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் மன்னர்களைப் பற்றியவைதான். இந்த அற்புதமான வரலாற்றுக் களஞ்சியங்கள் புலவர்களின் அதீதக் கற்பனைகளா? ஆற்றுப்படை நூல்களை ஆழமாக ஆராய்ந்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் தரவுகளையெல்லாம் கள ஆய்வுகள் மூலம் உண்மை எனக் கண்டறிந்து பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் எழுதிச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை திரு. மதன் ஒருமுறையாவது படிக்கவேண்டும். அப்போதுதான் பத்துப்பாட்டு இலக்கியங்களைப் பாடிய புலவர்கள் எத்தகு வரலாற்று உணர்வுடன் அவற்றைப் படைத்திருக்கிறார்கள் என்பதை உணரமுடியும்.

புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் புலவர்கள் மன்னர்களைப் போற்றிப் பாடியவைதான். இவை மது மயக்கத்தில் உணர்ச்சி வயப்பட்ட புலவர்களின் அதீத கற்பனைகளா? பங்காளிகளான சோழ மன்னர்களுக்குள் நிகழவிருந்த போரைத் தவிர்க்க முயன்ற புலவர், அதியமானின் தூதுவராகச் சென்ற அவ்வையார், பேகனுடன் அவன் துணைவி கண்ணகியை இணைத்து வைக்க முயன்ற புலவர் இவர்கள் எல்லாம் பொன்னுக்கும் மதுவுக்கும் கீழ்ப்பட்டா இத்தகு அரிய பணிகளைச் செய்தனர்?

திரு. மதன் கூறும் கரிகாலனின் வடபுலப் படையெடுப்பை எடுத்துக்கொள்வோம். இந்தச் செய்தி சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் கூறப்படுகிறது. இதை ஏன் மிகை என்று கொள்ளவேண்டும்? இது மிகை என்றால், அதே சிலப்பதிகாரம் கூறும் சேரன் செங்குட்டுவனின் வடபுலப் படையெடுப்பும் அன்றோ மிகையாகிவிடும்?

இந்த இரு நிகழ்ச்சிகளையும் பாடிய துறவி இளங்கோவடிகளுக்கு மதுவும் பொற்காசுகளும் தந்து அதீதக் கற்பனையில் எழுதச் செய்தவர் யார்? சிலப்பதிகாரத்தை மேலோட்டமாகப் படித்தவர்கள்கூட எத்தகைய அரியதொரு வரலாற்று ஆவணம் அந்த இலக்கியம் என்பதை அறிவார்கள். அந்த இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள்கூட மிகை, அதீதக் கற்பனை என்றால், தமிழ்நாட்டு வரலாறே 'மிகை'தான்.

சங்க அரசர்களுள் வடபுலப் படையெடுப்பை நிகழ்த்திய ஆற்றலாளர்களாய்க் குறிக்கப்படுபவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகால்சோழன் இவர்கள் மூவர்தான். இது அதீத கற்பனையென்றால், ஏன் இந்தக் கற்பனைப் பெருமைகளை மற்ற மன்னர்களுக்குப் புலவர்கள் தரவில்லை? அவர்களும் தாங்கள் பாடிய மன்னர்களிடம் மதுகுடித்துப் பொற்காசுகள் பெற்று உணர்ச்சி வயப்பட்டவர்கள்தானே? பதிற்றுப்பத்தின் பிற சேர வேந்தர்கள் ஏன் வடபுலம் ஏகவில்லை? சோழன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, இளஞ்சேட்சென்னி, பாண்டியப் பெருவேந்தர்கள் நெடுஞ்செழியன், முதுகுடுமிப் பெருவழுதி, அறிவுடைநம்பி இவர்கள் எல்லாமும் வடபுலம் போயிருக்கலாமே? இவர்களைப் பாடிய புலவர்களும், திரு. மதனின் கூற்றுப்படி, பாவம், மதுகுடித்துப் பொற்காசுகளைப் பெற்றவர்கள்தானே?

'உண்மையில் கரிகாலன் தெலுங்குப் பகுதிகளைத் தாண்டிப் போனதில்லை' என்கிறார் திரு. மதன். அப்படியே வைத்துக் கொள்வோம். இளங்கோ மது மயக்கத்தில் பொற்காசுகளை முடிந்துகொண்டு உணர்ச்சிவயப்பட்டு உளறிய உளறலாகவே கரிகாலனின் வடபுலப் படையெடுப்பைக் கருத்திக்கொள்வோம். கரிகாலன் தெலுங்குப் பகுதிகளுக்குப் போனமைக்கு என்ன சான்று உள்ளது? கரிகாலன் தெலுங்குப் பகுதிகளைப் போராடி வென்றாரா? எந்த மன்னரிடமிருந்து அப்பகுதிகளை வென்றார்? எவ்வளவு காலம் அங்கு இருந்தார்? இதற்கெல்லாம் அம்மன்னரது கல்வெட்டுகளோ, செப்பேடோ அல்லது வேறேதேனும் சான்றுகளோ உள்ளனவா? அச்சான்றுகளில் ஒன்றையேனும் திரு. மதன் தரமுடியுமா? 'உண்மையில்' என்று உறுதியாகச் சொல்லும் திரு. மதன், இந்த உண்மைக்குப் பின் நிற்கும் கரிகாலனின் ஆந்திரப் படையெடுப்புப் பற்றி ஆதாரங்களோடு எழுதினால் நாம் எவ்வளவு தெளிவுபெற முடியும்!!

ஒரு தமிழ் மன்னன் தமிழ்நாடு தாண்டிப் படையெடுப்பதோ பிற பகுதிகளை வெல்வதோ இயலாத செயலன்று. நூற்றுக்கணக்கில் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் கோயில்களும் சான்றுகளாய் நின்று தமிழ் மன்னர்களின் அயலகப் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் உறுதிப்படுத்துகின்றன.

பாதாமியில் முதலாம் நரசிம்மவர்மரின் கல்வெட்டு இல்லையென்றால் அவருடைய வாதாபிப் படையெடுப்பைக்கூட அதீதக் கற்பனையாக்கி விடுவார்கள் நம்முடைய நண்பர்கள். முதலாம் இராஜேந்திரனைக் குறிப்பிடும் ஹொட்டூர்க் கல்வெட்டு இல்லையென்றால் இராஜேந்திரனின் இரட்டைபாடிப் படையெடுப்பும் கற்பனையாகிவிடும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னன் (முதலாம் நரசிம்மவர்மன்) இலங்கைக்கும் வாதாபிக்கும் படையெடுக்க முடியுமென்றால், கி.முவின் இறுதியிலோ கி.பியின் தொடக்கத்திலோ வாழ்ந்த தமிழ் மன்னர்கள் ஏன் இலங்கைக்கும் வடபுலத்திற்கும் படை நடத்தியிருக்கக்கூடாது? இலங்கை வரலாறு பேசும் மகாவம்சம் கி.மு முதல் நூற்றாண்டில் தமிழரசர் போரை இலங்கைச் சந்தித்ததாகக் கூறுவது இங்கு நினைக்கத்தக்கது.

ஒரு தரவை அதீதக் 'கற்பனை' என்று தீர்மானிக்கும் முன் அத்தரவு இடம்பெற்றுள்ள மூலத்தின் உண்மைத் தன்மையை ஆராயவேண்டும். சிலப்பதிகாரம் தமிழ்நாட்டின் தவப்பேறாய் விளைந்த இலக்கியம். படைக்கப்பட்ட காலத்தின் மக்கள் வாழ்க்கை பேசும் இலக்கியம். 'இலக்கியம்' என்றால் அங்குக் கற்பனைதான் தாண்டவமாடும் என்ற சிந்தனையோடு எல்லா இலக்கியங்களையும் அணுகுதல் முறையாகாது. இந்தத் தவறான போக்கால்தான் இன்றளவும் சங்க இலக்கியங்கள் வரலாற்றாசிரியர்களின் நிறைவான பார்வையைப் பெறாமல் உள்ளன.

ஒரு தரவை ஒரு வரலாற்றாசிரியன் சொல்வதற்கும் ஓர் இலக்கிய ஆசிரியன் சொல்வதற்கும் வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுதான் இலக்கியத்தை 'இலக்கியமாக' அடையாளப்படுத்துகிறது. மெலிதான கற்பனைப் பூச்சுகள் வரலாற்றின் மேல் படியும்போது அது இலக்கியமாகிறது. சில இலக்கியங்களில் தேவைக்கேற்ப கற்பனை இடம்பெறவில்லை என்பது இலக்கிய நுகர்ச்சியுடைய அனைவரும் அறிந்த உண்மையாகும்.

ஓர் இலக்கியம் சொல்வதை ஓர் எழுத்தாளர் எடுத்தாளும்போது அது எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதற்குத் திரு. மதன் தம்முடைய இரண்டாம் மொழிவின் வழிச் சான்றாகிறார். 'பொருநராற்றுப் படையில் ஒரு புலவர், தங்கக் கோப்பையில் தொடர்ந்து ஒயின் அருந்தியதால் பெருமகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூடவே என் கை, கால்கள் நடுங்கி உடல் தள்ளாட ஆரம்பித்தது என்கிறார்' என்று திரு. மதன் 25.04.2007 ஆனந்த விகடன் மொழிவில் கூறியுள்ளார். அவர் சொல்லும் இந்தச் செய்தி பொருநராற்றுப்படையில் எப்படி இடம்பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.

'போக்கில் பொலங்கலம நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செறுக்கொடு நின்ற காலை மற்றவன்
திருக்கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கித்
தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பயம் எய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர நடுக்கம் அல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து'

'பொன்வட்டில் நிறையுமாறு வார்த்துத் தந்தபோதெல்லாம் வழிநடை வருத்தம் போகும்படி நிறையப் பருகி, மன்னன் அரண்மனையில் உறங்குதற்கேற்ற இடத்தில் இருந்து, தவம் செய்தவர், தம்முடைய இப்பிறவி உடலுடனேயே அத்வைதத்தின் பயனைப் பெற்றாற் போன்று, வழிநடை தந்த வருத்தத்தை என்னிடமிருந்து அறவே நீக்கிய கள்ளின் களிப்பால் உண்டான மெய்நடுக்கம் அன்றி, மனக்கவலை காரணமான மெய் நடுக்கம் இன்றி நன்கு துயில்கொண்டான்' என்கிறார் புலவர்.

நெடுந்தொலைவு நடந்து வந்த துன்பம் தீரத் தரப்பட்ட பானத்தைத் தரத்தரப் பருகிய பொருநன் களைப்பும் கவலையும் நீங்கிக் களிப்படைவதாய் பாடல் அடிகள் சொல்கின்றன. பாடலில், தரப்பட்ட பானம், 'இன்னது' என்ற சுட்டல்கூட இல்லை. உரையாசிரியர்கள்தான் 'கள்' தரப்பட்டதாகப் பொருள் கொண்டுள்ளனர். கள் தருவதும், பெறுவதும் திரு. மதன் குறிப்பிட்டிருப்பது போல, சங்க காலத்தில், 'மிகச் சாதாரணமான விருந்தோம்பல்'. அப்படியிருக்க, மது குடித்த புலவர்கள் உணர்ச்சி வயப்பட இடமேது?

கரிகாலன் அரண்மனையில் வரவேற்பாளர்களால் களைப்புத் தீரத் தரப்பட்ட பானத்தை அருந்திய பொருநன், தன் வழிநடைக் களைப்பு அகன்றதாகவும் மகிழ்வு ஏற்பட்டதாகவும் கூறுகிறாரே தவிர உணர்ச்சி வயப்பட்டு அதீத கற்பனைகள் எவற்றிலும் ஆழவில்லை என்பதற்கு பொருநர் ஆற்றுப்படையே சான்று.

கரிகாலனைப் பற்றிய அருமையான தரவுகளைப் பொருநர் ஆற்றுப்படையும் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் தரும்போது நமக்கென்ன குறை? அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அனைத்து வரலாற்றறிஞர்களும் கரிகாலனின் வரலாற்றை எழுதியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, ஒரு வெண்பாவும் பழமொழியும் வழங்கு கதையும் கூறும் தகவல்களை மட்டும் முன்வைத்துக் கரிகாலன் வரலாற்றிற்குச் சான்றுகளே இல்லாதது போல ஒரு தோற்றத்தை ஏன் ஏற்படுத்தவேண்டும்? இவற்றைக் கரிகாலனின் வரலாற்றை எழுதியுள்ள வரலாற்றாசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.

எது வரலாற்றுச் சான்று, எது கற்பனை என்பதை வரலாற்றாசிரியர்களால் அறியமுடியும். அப்படி அறிந்திருப்பதனால்தான் சங்க கால வரலாறு தமிழ்நாட்டரசால் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. சங்க காலச் சோழர்கள் பற்றி மிக விரிவான அளவில் திரு. இராசமாணிக்கனாரும் திரு. நீலகண்ட சாஸ்திரியாரும் எழுத முடிந்துள்ளது.

கண்முன் இருக்கும் ஆயிரக்கணக்கான சான்றுகளைக் கண்ணெடுத்தும் பாராமல், 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் நம் வரலாற்றை எழுதமுடியும்?' என்றும் 'தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கி.பி. 600 வரை நம்மிடையே இல்லை' என்றும் துணிவுடன் கூறும் திரு. மதனைப் பார்த்து நம்மால் ஆழ வருந்த மட்டுமே முடிகிறது.

தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கி.பி. 600 வரை நம்மிடையே இல்லை என்றால், கி.பி. 600 வரை தமிழனுக்கு வரலாறே இல்லை என்று பொருளா? அப்படியானால் சங்க இலக்கியங்கள் அனைத்தும் மதுவுக்கும் பொற்காசுகளுக்கும் உணர்ச்சி வயப்பட்ட புலவர்களின் அதீத கற்பனைகளா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை எனத் திரு. ஐராவதம் மகாதவன் தொகுத்து வெளியிட்டிருக்கும் 89 தமிழ் பிராமி கல்வெட்டுகளும் 21 முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் விதந்துரைக்கும் வரலாற்றுத் தகவல்கள் பொய்யுரைகளா? இவற்றின் அடிப்படையில் ஐம்பது பக்க அளவில் தமிழ்நாட்டு வரலாற்றைத் திரு. மகாதேவன் அதே நூலில் எழுதியுள்ளாரே, அதுவும் உணர்ச்சி வயப்பட்ட கற்பனையா?

கி.பி. 250ல் இருந்து கி.பி 600 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்டதாகக் கல்வெட்டறிஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பதினைந்திற்கும் மேற்பட்ட செப்பேடுகள் வழங்கும் வரலாற்றுத் தரவுகள் எல்லாமே பொய்யுரைகளா? கோச்செங்கட்சோழன் கற்பனையில் உதித்தவரா? அப்படியானால் அவரைப் பற்றிப் பாடியிருக்கும் பொய்கையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர் இவர்களெல்லாம் பொய்யர்களா? கோச்செங்கட்சோழனை முன்னோனாகக் குறிப்பிடும் சோழக் குடிவழி இடம்பெற்றுள்ள செப்பேடுகளெல்லாம் பொய் வெளீயீடுகளா? கோச்செங்கனான் எழுப்பியனவாய் இன்றளவும் வழிபாட்டில் உள்ள மாடக்கோயில்கள் என்னாவது?

சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்கள் வெளியிட்ட நூற்றுக்கணக்கான காசுகளைப் பெற்று அறிஞர் திரு. இரா.கிருஷ்ணமூர்த்தி, அளக்குடி திரு. ஆறுமுக சீதாராமன் இவர்கள் ஒளிப்படங்களோடு அமைந்த எண்ணற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட தரமான, ஆய்வு நோக்குடைய சங்ககாலக் காசியல் நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, தமிழ்நாட்டு அருங்காட்சியகத் துறை இவற்றிடமும் நடுவண் அரசின் தொல்லியல் துறையிடமும் பழங்காசுகள் உள்ளன. இவை தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் நாணய சேகரிப்பாளர்கள் எண்ணற்றோர் சங்க காலக் காசுகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதோடு கண்காட்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்தக் காசுகளெல்லாம் வரலாற்றுத் தகவல்கள் அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்?

'கி.பி. 300லிருந்து கி.பி 600 வரை தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்கிற தகவலே இல்லை. இதை ஒரே வார்த்தையில் களப்பிரர் ஆட்சி என்று புத்தகங்கள் சொல்லிவிட்டு அதோடு நிறுத்திக் கொள்கின்றன' என்று 25.04.2007 ஆனந்த விகடனில் திரு. மதன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஒரே வார்த்தையில் மூன்று நூற்றாண்டு வரலாற்றை மூடிமறைத்திருக்கும் அந்த வரலாற்றுப் புத்தகங்களையும் அவற்றின் ஆசிரியர்தம் பெயர்களையும் திரு. மதன் வெளியிட்டால், தமிழ்நாட்டு வரலாற்றை அறிய மறுக்கும் நூலாசிரியர்களை நாமும் அடையாளம் காணுவதோடு உண்மை வரலாற்றை அவர்கள் உணருமாறு செய்யலாம்.

திரு. எம். அருணாசலம், சென்னைப் பல்கலைக் கழகத் தாளிகையில், 'பாண்டிய நாட்டில் களப்பிரர்கள்' என்ற தலைப்பில் ஆழமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இது பின்னாளில் நூலாகவும் வந்துள்ளது. திரு. கே.கே.பிள்ளை தம்முடைய, 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்னும் நூலில் இக்காலகட்ட வரலாற்றைப் பல பக்கங்களில் எழுதியுள்ளார். திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியை கோ.வேணிதேவி தம்முடைய முனைவர் பட்ட ஆய்வாக கி.பி. 300க்கும் கி.பி.600க்கும் இடைப்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றையே எடுத்துக்கொண்டு, அரசியல், சமுதாயம், பண்பாடு எனும் மூன்று பெரும் தலைப்புகளின் கீழ் 300 பக்கங்களுக்கும் அதிக அளவிலான ஆய்வேட்டை வழங்கி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். களப்பிரர்களை அடையாளப்படுத்தும் கல்வெட்டுகளைப் பற்றி இந்திய கல்வெட்டாய்வுக் கழகத்தின் ஆய்வுத் தொகுப்பொன்றில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை மேலோட்டமாகப் படித்துவிட்டு, நாளும் பொழுதும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் காடு, மேடு பாராமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் அகழ்வாய்வுப் பொருட்களையும் அமைப்புகளையும் காசுகளையும் அறிந்து கொள்ளாமலே, அவை வெளிப்படுத்தியிருக்கும் வரலாற்றுத் தரவுகளைத் தெரிந்துகொள்ளாமல், தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றிக் கருத்துரைப்பது எந்த வகையில் நியாயம்?

திரு. வெ.இறையன்புவின் கேள்வியையும் திரு. ஆர்.ஜெ.மாயவநாதனின் கேள்வியையும் திரு. மதன் மிக மேலோட்டமாகவே அணுகியிருப்பதை, அவருடைய இரண்டாம் மொழிவிலிள்ள பிழையான சுட்டல்கள் தெளிவாக்குகின்றன.

1. திருவாலங்காடு, கரந்தைச் செப்பேடுகள் இவை இரண்டும் முதலாம் இராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டவை. திரு. மதன் குறித்திருப்பது போல இராஜராஜசோழனால் அன்று.

2. பெரிய கோயிலில் (தஞ்சாவூர் இராஜராஜீசுவரம்) இதுநாள் வரையிலும் திரு. மதன் சுட்டியிருப்பது போலச் சோழர் காலச் செப்பேடுகள் ஏதும் கிடைத்தில.

3. இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளையே திரு. மதன் செப்பேடுகளாகக் கருதி எழுதியிருக்கிறார் என்றால், இவற்றில், 'கோயில் பொருளாதாரம் நிதி நிலைமை பற்றி மட்டுமே நுணுக்கமான தகவல்கள் உண்டு' என அவர் தெரிவித்திருக்கும் கருத்து பிழையானது.

4. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் இருந்து படியெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகளுள் ஒன்றான தளிச்சேரிக் கல்வெட்டு பற்றி மட்டும் 67 பக்கங்களில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டு நூலாகவும் வந்துள்ளது. இக்கட்டுரை முதலாம் இராஜராஜர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த 102 தளிச்சேரிகளைச் சுட்டுவதுடன் நானூறு ஆடல் பெண்களின் பெயர்களையும் அவர்தம் வாழ்க்கை வசதிகளையும் தெரிவிக்கிறது. அத்துடன், இக்கோயிலில் பணியாற்றிய 36 வகையான தொழில் பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழிலாளர்களைப் பற்றியும் அக்காலத்திலிருந்த இசைக்கருவிகள், கலைஞர், தொழிலர் ஊதியம், அவர்கள் தொழில் குறித்த நடைமுறைச் சட்டங்கள் பற்றியும் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. சோழர் காலத்தில் இருந்த 63 ஊர்களின் பெயர்களும் 49 கோயில்களின் பெயர்களும் இக்கல்வெட்டால் அறியப்படுகின்றன. ஒரு கல்வெட்டே இவ்வளவு வரலாற்றுத் தரவுகளைத் தரமுடியும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட தமிழக கல்வெட்டுகள் எத்தகு வரலாற்றை இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்!

தமிழ்நாட்டு வரலாறு, திரு. மதன் உட்படப் பலரும் நினைப்பது போல சான்றுகளில்லாமல் தவிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த ஆர்வமும் அறிவாற்றலும் மிக்க ஆய்வாளர்களும் தங்கள் உழைப்பாலும் உயர் சிந்தனைகளாலும் தமிழ்நாட்டு வரலாற்றைத் தகுதிசான்ற ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கித் தந்திருப்பதுடன், அதற்கெனவே தொடர்ந்து உழைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த உழைப்பையும் உண்மைத் தன்மையையும், தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறியவேண்டும், மதிக்கவேண்டும், போற்றவேண்டும். நமக்காகவும் எதிர்வரும் தலைமுறைகளுக்காகவும் எத்தனையோ துன்பங்களுக்கிடையில் வரலாற்றைத் தேடித் தொகுக்கும் அந்த இனிய உள்ளங்களை, தமிழனுக்கு வரலாறே இல்லை என்று சொல்லி எள்ளி நகையாடுவதும் புண்படுத்துவதும் அருள்கூர்ந்து இனி வேண்டாம்.

உண்மைகளை உண்மைகளாகப் பாருங்கள். சார்தல் வேண்டாம். காய்தல், உவத்தல் வேண்டாம். யார் எழுதுகிறார்கள் என்பதினும் என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பார்த்து உண்மைகளைத் தேடுங்கள். வரலாறு எங்கோ இல்லை! இல்லாமலும் இல்லை! அது நம்மைச் சூழ நம்மிடமே உள்ளது. அதனால்தான் அதன் அடையாளம்கூட நமக்குத் தெரியாமல் போகிறது.

அன்புடன்,
இரா.கலைக்கோவன்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.