http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 38

இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]
3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

தரிசனம் கிடைக்காதா!!!
பிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்
கதை 11 - ஒளி
திரும்பிப் பார்க்கிறோம் - 10
இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)
இராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்
A Megalithic Pottery Inscription and a Harappan Tablet : A case of extra-ordinary resemblance
Agricultural Terms in the Indus Script - 2
அங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)
Silpi's Corner-Introduction
Silpi's Corner-01
Links of the Month
ஆனங்கூர் - உத்தமரா? பராந்தகரா?
நீலப் பூக்களும் நெடிய வரலாறும்
இதழ் எண். 38 > கலையும் ஆய்வும்
இராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்
ச. கமலக்கண்ணன்
<கமல்> : ஹலோ பத்மநாபன் சார்! வணக்கம். கமல் பேசறேன் ஜப்பான்லேர்ந்து!

<பத்மநாபன்> : வணக்கம் கமல்! எப்படி இருக்கீங்க?

<கமல்> : நல்லா இருக்கேன். நீங்களும் நலம்தானே?

<பத்மநாபன்> : கைக்கெட்டும் தூரத்தில் புத்தகங்களும் என் வாகனத்திற்கெட்டும் தூரத்தில் கோயில்களும் புடைசூழக் குடந்தை நகரில் வசிக்கும்போது நலத்திற்கு என்ன குறை?

<கமல்> : பார்த்தீர்களா!! எனக்கு இதெல்லாம் இல்லை என்று குத்திக் காட்டுகிறீர்களே!!

<பத்மநாபன்> : அய்யய்யோ! அதெல்லாம் இல்லை. கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்றுதான் சீதாரமனுடன் திருவாவடுதுறையும் ஆனங்கூரும் சென்று வந்தேன். அந்தத் திளைப்பில் கூறினேன்.

<கமல்> : ஓ! எப்படி இருந்தன இரண்டும்?

<பத்மநாபன்> : கொஞ்சநாள் பொறுங்கள். பயணக்கட்டுரையை சீதாராமன் அனுப்புவார்.

<கமல்> : சரி. மாமல்லபுரமும் பனைமலையும் போகவேண்டும் என்று திட்டமிட்டிருந்தீர்களே, எப்பொழுது போகப்போகிறீர்கள்? இராஜசிம்மர் சிறப்பிதழுக்கு வேறு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

<பத்மநாபன்> : லலிதாராமுக்கு இந்தவாரம் தேர்வு இருப்பதால், பயணத்தை ரத்து செய்துவிட்டோம்.

<கமல்> : அடடா!! அப்படியானால், மாமல்லபுரத்திற்கு ஒரு Virtual Tour போய் வந்துவிடலாமா? (வாசகர்களுக்கு : வேறு அலுவல்கள் காரணமாக எங்களால் பயணம் செய்ய இயலாதபோது, இதுபோல் Virtual Tour போவது வழக்கம். அதாவது, ஏற்கனவே எடுத்திருக்கும் புகைப்படங்களையும் அக்கோயில் தொடர்பான புத்தகங்களையும் இணைத்துப் படித்துப் பார்த்து, நேரில் கண்ட அனுபவத்தைப் பெறுவது. இது சிலசமயம் நேரில் சந்திக்கும்போது நிகழும். சிலசமயம் தொலைபேசியில்)

<பத்மநாபன்> : நல்ல யோசனை. போகலாமே!

<கமல்> : மாமல்லபுரம் முழுவதும் போவது கடினம். இது இராஜசிம்மர் சிறப்பிதழ் என்பதால், அவருடைய கட்டுமானங்களான கடற்கரைக் கோயில் அல்லது தர்மராஜரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இரண்டைப் பற்றியும் என்னென்ன புத்தகங்கள் வைத்திருக்கிறீர்கள்?

<பத்மநாபன்> : கடற்கரைக் கோயிலைப் பற்றி அவ்வளவாக இல்லை. தர்மராஜரதத்தைப் பற்றி டாக்டர்.கூ.இரா.சீனிவாசனின் 'The Dharmaraja Ratha and its Sculptures, Mahabalipuram' நூலும் டாக்டர்.இரா.கலைக்கோவனின் 'அத்யந்தகாமம்' நூலும் இருக்கின்றன.

<கமல்> : இவை இரண்டும் போதுமே! தர்மராஜரதத்தின் முழுமையான படப்பிடிப்பாக இருக்கும். புகைப்படங்களே தேவையில்லை. கட்டடக்கலை மற்றும் சிற்பங்களின் வர்ணனைகளைப் படித்தாலே பார்த்தது போன்ற திருப்தி ஏற்படும். இவை இரண்டையும் தாண்டி, புதிய விஷயங்கள் நம் போன்ற ஆரம்பநிலை ஆய்வாளர்களுக்குத் தேடினாலும் கிடைப்பது கடினம்.

<பத்மநாபன்> : ஆமாம். உண்மைதான். போகலாமா? முதலில், தர்மராஜரதத்தின் சிறப்புகள் என்னென்னவென்று பார்த்து விடலாமா?

<கமல்> : ஓ! தாராளமாக! ஒன்றா, ரெண்டா சிறப்புகள்? எல்லாம் சொல்லவே, ஓர்நாள் போதுமா?

<பத்மநாபன்> : ஹலோ! பாட்டெல்லாம் அப்புறம் பாடிக்கலாம். முதலில் என்னென்ன சிறப்புகள் என்று பட்டியலிடுங்கள்.

<கமல்> : இதுவும் தஞ்சை இராஜராஜீசுவரம் போன்றே பல 'முதல்'களுக்குச் சொந்தமானது. குடைவரைகளுக்குப்பின் பல்லவர்கள் அமைத்த முதல் முழுமையான ஒருகல்தளி இதுதான். முழுமுதற் கடவுளுக்கு அமைக்கப்பட்ட முதல் முழுத்திருக்கோயில். மற்ற ரதங்களில், அருச்சுனர் ரதத்தில் ஆறு அங்கங்கள் (தாங்குதளம், சுவர், கூரை, ஆரம், கிரீவம், சிகரம், கலசம்) இருக்கின்றன. ஆனால் கருவறையில்லை.

<பத்மநாபன்> : பீம ரதத்தில் கருவறை இருக்கிறது. ஆனால் சாலை விமானத்தின் கருவறையில் பாம்புப் படுக்கையில் இருக்கவேண்டிய பள்ளிகொண்டான் இல்லை.

<கமல்> : திரௌபதி ரதத்தில் கருவறையும் இருக்கிறது. கொற்றவையும் இருக்கிறார். ஆனால் விமானம் ஆறங்கம் இல்லாமல் குடிசை விமானமாகப் போய்விட்டது.

<பத்மநாபன்> : மாமல்லபுரத்தில் காணப்படும் கணேசர், பிடாரி ஆகிய மற்ற ரதங்களில் எதிலுமே இறைவன் இல்லை.

<கமல்> : ஆக, இதுதான் தர்மராஜரதத்தின் முதற்சிறப்பு.

<பத்மநாபன்> : இந்த ரதத்திலேயேதான் தெளிவாக இதன் பெயர் 'அத்யந்தகாம பல்லவேசுவரகிருகம்' என்று குறிக்கப்பட்டிருக்கிறதே! இன்னும் ஏன் தர்மராஜரதம் என்றே சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்?

<கமல்> : சரி. அத்யந்தகாமம் என்றே இனி அழைக்கலாம்.

<பத்மநாபன்> : இதன் இன்னொரு சிறப்பு, இந்த அத்யந்தகாமம் ஒரு கல்வெட்டிலிருக்கும் வாசகங்களுக்கு உருவம் கொடுத்த ஒரு ஒற்றைக்கல்தளி.

<கமல்> : ஆமாம். இதே மாமல்லபுரத்தில் புலிக்குகை அல்லது யாளிக்குகைக்கு அருகிலிருக்கும் அதிரணசண்டேசுவரத்திலிருக்கும் கல்வெட்டுதான் அது.

<பத்மநாபன்> : அடுத்த சிறப்பு, கட்டடக்கலை தொடர்பானது. கோயிற்கலை வரலாற்றில் முதல் கபோதபந்தத் தாங்குதளம் இதுதான்.

<கமல்> : இதுதான் பல்லவச் சிற்பிகளின் கற்பனைத்திறனுக்குத் தகுந்த எடுத்துக்காட்டு. பாதபந்தம், பிரதிபந்தம் ஆகிய இரண்டும் மகேந்திரர் அமைத்த குடைவரைகளிலேயே தோன்றிவிட்டன. இந்த இரண்டையும் இணைத்து, அதன்மேல் கபோதத்தை அமைத்து, கபோதபந்தத் தாங்குதளம் என்ற புதிய வடிவத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொடையளித்திருக்கின்றனர்.

<பத்மநாபன்> : பிற்காலங்களில் இத்தகைய மரபையொட்டிய மரபு மீறல்கள் மிகக்குறைவு.

<கமல்> : அதுதான் ஆகமங்கள் வந்து, சிற்பிகளின் கற்பனைக்குக் கடிவாளம் போட்டு விட்டனவே!

<பத்மநாபன்> : உண்மைதான். ஆனாலும், ஆகமங்கள் என்னும் விலங்கு போடாவிடில், கட்டடக்கலை உறுப்புகளுக்கு ஒரு வரைமுறை இல்லாமல் போய், சோழச் சிற்பிகளின் கற்பனைத் திறனுக்கு ஈடுகொடுத்து நம்மால் கட்டடக்கலைக் கூறுகளை அவ்வளவு எளிதாகக் கற்கமுடியுமா?

<கமல்> : எல்லா விஷயங்களிலும் நன்மை, தீமை இரண்டுமே இருக்கத்தான் செய்கின்றன. நாம் எப்படிப் பார்க்கிறோமோ, அதுபோலத்தான் உலகம் காட்சியளிக்கிறது. அதனால்தான் தமிழில் உலகத்துக்குப் 'பார்' என்ற சொல் இருக்கிறதோ என்னவோ!

<பத்மநாபன்> : ஆஹா! தத்துவம் நெம்பர் 10216. சரி, அடுத்த சிறப்பைப் பார்க்கலாமா?

<கமல்> : இதுதான் மிகவும் முக்கியமானது. நம் கட்டுரைத் தலைப்புக்குப் பொருந்தி வருவதும் கூட. சாந்தாரம்.

<பத்மநாபன்> : சாந்தாரம் என்று சொல்லமுடியாது. சாந்தார முயற்சி என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

<கமல்> : இது மட்டும் சாந்தாரமாக இருந்திருந்தால், தமிழ்நாட்டின் முதல் சாந்தார விமானம் என்ற பெயரைப் பெற்றிருக்கும். அல்லது ஆதிதளச் சுவர்களின் தூண்களாவது முழுமை பெற்றிருந்தால், முதல் உள்திருச்சுற்று கொண்ட விமானம் என்று அழியாப்புகழ் பெற்றிருக்கும்.

<பத்மநாபன்> : முதலில் சாந்தாரத்திற்கும் உள்திருச்சுற்றிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைச் சொல்லிவிடுங்கள். நிறையப்பேர் இரண்டையும் குழப்பிக் கொள்கிறார்கள்.

<கமல்> : சாந்தாரம் என்பது கருவறையின் சுவருக்கு வெளியே சுற்றிவரும் அளவுக்கு இடைவெளி விட்டு இன்னொரு சுற்றுச் சுவரை அமைத்திருப்பது. திருச்சுற்று என்பது, விமானத்திற்கு வெளியில் சுற்றிவர வழி செய்திருப்பது. பொதுவாக விமானம் மதிலால் சூழப்பட்டிருந்தால் உள்திருச்சுற்று என்று கூறுவோம்.

<பத்மநாபன்> : ஏதோ காரணத்தால் வேலை தடைபட்டுப் போனதால், இரண்டுக்கான வாய்ப்பையுமே இழக்க வேண்டியதாகி விட்டது. இந்த முயற்சியைத்தான் முதலாம் இராஜராஜர் முன்னெடுத்துச் சென்று இராஜராஜீசுவரத்தில் முழுமையாக்கி முடித்துக் காட்டினார் என்று சொல்லலாமா?

<கமல்> : உறுதியாகச் சொல்லமுடியாது. அதற்கு முன்பே, காஞ்சி கைலாசநாதரில் இராஜசிம்மரே சாந்தாரத்தை முழுமைப்படுத்தி விட்டாரே! இருப்பினும், இரண்டு தளங்களிலும் சாந்தாரத்தை அமைத்தது சாதனைதான். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைக் கண்டு 'கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி' என்று வியந்து பாராட்டியவரின் கல்வெட்டுகள் மல்லைக் கடலோரத்திலும் இருப்பதால், நிச்சயம் இதைப் பார்த்தும் வியந்திருப்பார் என்று கூறலாம்.

<பத்மநாபன்> : தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் சர்வதோபத்ர விமானம் என்ற பெருமையும் மயிரிழையில் நழுவிப் போய்விட்டது.

<கமல்> : சர்வதோபத்ர விமானம் என்றால் என்ன என்று சொல்லிவிடுங்கள். கலைச்சொற்களைப் பயன்படுத்தும்போது, அவற்றிற்கான விளக்கங்களை அதே இடத்தில் தரவேண்டும் என்பது வரலாறு.காம் நேயர் விருப்பம்.

<பத்மநாபன்> : சாந்தார வழியைப் போல் வெளிச்சுற்றுச் சுவர் இல்லாமலும், வெளிப்புறத் தூண்களைக் கொண்டு உள்திருச்சுற்றாக அமையாமலும், நான்கு மூலைகளிலும் சுவராகவும், நடுவில் திறப்பாகவும் நான்கு திசைகளிலும் நுழைவாயிலைப் போலவும் அமைத்திருந்தால், அதுதான் சர்வதோபத்ர விமானம். சுருங்கச் சொன்னால், ஒரு விமானம் தனது கருவறைக்கு நான்கு திசைகளிலும் வாயில்களைக் கொண்டிருந்தால் அது சர்வதோபத்ர விமானம்.

<கமல்> : இந்தப் பெருமையையும் தஞ்சை இராஜராஜீசுவரம் தட்டிச் சென்று விடுகிறது.

<பத்மநாபன்> : இந்த அத்யந்தகாம பல்லவேசுவரகிருகம் இராஜராஜீசுவரத்திற்கு மட்டுமல்ல; இராஜசிம்மரின் பின்னாளைய கட்டுமானங்களான பனைமலை தாளகிரீசுவரர் மற்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயங்களுக்கும் வழிகாட்டியாக இருந்திருக்கிறது.

<கமல்> : ஆமாம். அங்காலயம் எனப்படும் சிக்கலான அமைப்புக்கான சிந்தனையும் இதைப் பார்த்துத்தான் வந்திருக்கவேண்டும். அல்லது அதை இங்கே முயன்று, சரியாக வராததால், கட்டுமானத்தளியில் மீண்டும் சோதனை செய்து நிறைவேற்றியிருக்கவேண்டும்.

<பத்மநாபன்> : கர்ணகூடங்கள் வெளித்தள்ளி அமைந்திருப்பதால், அதற்கான முயற்சி நடந்திருக்கலாம் என்று கூறலாம்.

<கமல்> : பல பிற்காலக் கட்டுமானச் சாதனைகளுக்கு முன்னோடி மட்டுமல்ல இந்த ஒருகல் சாதனைத்தளி. குடைவரைகாலக் கட்டடக்கலை முயற்சிகளுக்கு முழு உருவம் கொடுத்தது என்றும் கூறலாம்.

<பத்மநாபன்> : தளவானூர்ச் சத்ருமல்லேசுவராலயத்தில் முயற்சித்துப் பார்க்கப்பட்ட முன்றில் இங்கே நிறைவுற்றிருப்பதைச் சொல்கிறீர்களா?

<கமல்> : அதேதான். முன்றிலுக்கு மேலே கர்ணசாலை அமைந்திருக்கிறதே, அதுவும் இத்தளியின் தனிச்சிறப்பு.

<பத்மநாபன்> : கர்ணசாலையைப் பற்றி கட்டடக்கலைத்தொடர்-9 ல் விளக்கியுள்ளீர்கள். எனவே இங்கே மீண்டும் போரடிக்காமல், அக்கட்டுரைக்கு ஒரு இணைப்பை மட்டும் கொடுத்து விடுவோம்.

<கமல்> : இப்போதுதான் ஒரு தளத்தை முடித்திருக்கிறோம். அதற்குள் தொலைபேசிக் கட்டணம் எகிறிக் கொண்டிருக்கிறது. மற்ற தளங்களைப் பற்றி இன்னொரு சமயம் விரிவாகப் பேசுவோமா?

<பத்மநாபன்> : சரி பேசலாம். ஆனால், மறக்காமல், இத்தொலைபேசி உரையாடலை Minutes of Meeting போல உடனே கட்டுரையாக்கி வாசகர்களுக்குப் படைத்து விடுங்கள்.

<கமல்> : அப்படியே ஆவதாக! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! பருகட்டும் இராஜசிம்மரின் கலைவிருந்தை!!!

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.