http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 38

இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]
3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

தரிசனம் கிடைக்காதா!!!
பிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்
கதை 11 - ஒளி
திரும்பிப் பார்க்கிறோம் - 10
இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)
இராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்
A Megalithic Pottery Inscription and a Harappan Tablet : A case of extra-ordinary resemblance
Agricultural Terms in the Indus Script - 2
அங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)
Silpi's Corner-Introduction
Silpi's Corner-01
Links of the Month
ஆனங்கூர் - உத்தமரா? பராந்தகரா?
நீலப் பூக்களும் நெடிய வரலாறும்
இதழ் எண். 38 > வாசகர் சிறப்புப்பகுதி
ஆனங்கூர் - உத்தமரா? பராந்தகரா?
சு.சீதாராமன்
வாசகர் அறிமுகம் - திரு. சு.சீதாராமன்

எங்களின் ஆரம்பகாலம் தொட்டுப் பயணங்களில் உடன் வருபவரும் தமிழக (குறிப்பாகச் சோழர்) வரலாற்றின் மீது அளவிலாக் காதல் கொண்டவருமான கும்பகோணத்தில் வசிக்கும் நண்பர் திரு.சீதாரமன் அவர்களை இவ்வாசகர் பக்கம் வழி அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். 2003ல் பொன்னியின் செல்வன் யாஹூ குழுவினரின் முதல் யாத்திரையின்போது பயணக்குழுவுக்கு வழிகாட்டியாக இருந்து பலவகைகளில் உதவியவர். 2005ல் நடைபெற்ற திருவலஞ்சுழிக் கோயிலாய்வின்போது இவர் செய்த உதவிகள் எழுத்துக்களில் அடங்காதவை. இதுபற்றி அப்போதைய கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தனது M.Phil பட்ட ஆய்விற்காகப் புள்ளமங்கை திருவாலந்துறையார் கோயிலை எடுத்துக்கொண்டு, அதன் மூலமாகக் கட்டடக்கலையையும் சிற்பக்கலையையும் முனைவர் இரா.கலைக்கோவன் மற்றும் வரலாறு.காம் கட்டுரைகளின் உதவியுடன் மிகக்குறுகிய காலத்தில் முறையாகக் கற்றுத்தேர்ந்து கோயில்களை நோக்கி இன்று படையெடுத்துக் கொண்டிருக்கும் செயல்திறம் மிக்க இளைஞர். இவர் வரவு தமிழக வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. தனது ஆய்வுப்பயணத்தில் பல வெற்றிகளைக் குவிக்க வரலாறு.காம் மனதார வாழ்த்துகிறது.




இனி கட்டுரை...

வரலாறு.காம் இதழுக்கும் வாசகர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டு எனது முதல் எழுத்தைப் படைக்கிறேன்.

நானும் நண்பர் திரு.பத்மநாபன் அவர்களும் 12-8-2007 அன்று திருச்சென்னம்பூண்டி சென்றிருந்தோம். அது ஸ்ரீபராந்தகனின் கோயில்களில் ஒன்று. புள்ளமங்கைக்கும் இக்கோயிலுக்கும் சில வேறுபாடுகள் இருப்பதைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடிந்தது. நான் நண்பர் திரு.பத்மநாபனை வேறு ஏதாவது ஒரு முற்காலச் சோழர் கோயிலுக்கு என்னை அழைத்துச் செல்லமுடியுமா என்று கேட்டேன். அவரும் நாளை நான் ஒரு கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அதன் கட்டடக்கலை அமைப்பை ஆராய்ந்து அதனையே வரலாறு.காம்-க்கு பயணக்கட்டுரையாக அனுப்பி விடுங்கள் என்றார். பீடிகை பலமாக இருக்கவே என்னுடைய எதிர்பார்ப்பும் பலமாக இருந்தது. ஏற்கனவே புள்ளமங்கையின் எழில் என் மனதைக் கொள்ளை கொண்டிருந்தது. புள்ளமங்கை அனுபவம் கோயில்களை நோக்கி என்னை ஆர்வமுடன் இழுக்க ஆரம்பித்துவிட்டது. திரு.பத்மநாபன் எந்தக் கோயிலுக்கு நாளை நம்மை அழைத்துச் செல்வார் என்பதை மனம் ஆராயத் தொடங்கிவிட்டது. அது நாம் ஏற்கனவே சென்ற கோயிலாக இருக்குமோ அல்லது நமக்கு முற்றிலும் புதிய கோயிலோ என்று பொழுது எப்பொழுது விடியும் என்று காத்திருந்தேன்.

13-8-2007 காலை 8:30 மணி நான் ஆர்வ மிகுதியால் நாம் இன்று எந்தக் கோயிலுக்குப் போகப்போகிறோம் என்று தொலைபேசியில் கேட்டேன். பொறுங்கள் நான் அரைமணியில் உங்கள் வீட்டில் இருப்பேன். வந்து சொல்கிறேன் என்றார். எனக்கு வேறு வழியில்லை. அரைமணி பொறுத்தேன். நண்பர் பத்மநாபன் காலம் தவறுவதில்லை. சொன்னால் சொன்ன நேரத்திற்கு வந்துவிடுவார். சரியாக அரைமணியில் வந்தார். வாருங்கள் திருவாவடுதுறை போவோம் என்றார். நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இதற்குத்தானா இத்தனை பீடிகை? நான் ஏற்கனவே பலமுறை பார்த்த கோயிலாயிற்றே அது. இருப்பினும் என்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இருவரும் கிளம்பி திருவாவடுதுறை சென்றோம். திரு. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் திருவாவடுதுறை ஸ்ரீபராந்தகன் கோயில் என்று குறிப்பிட்டிருந்தார்.

நான் முன்பு சென்றிருந்தபோது கட்டடக்கலை என்ற கண்கொண்டு அக்கோயிலைப் பார்த்ததில்லை. எனவே இப்பொழுது அந்த நோக்கில் இக்கோயிலைப் பார்க்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டேன். இருவரும் திருவாவடுதுறை அடைந்தோம். அங்குள்ள பொறுப்பாளரை அணுகி எங்கள் வருகையின் நோக்கத்தைத் தெரிவித்தோம். அவர் முறையான விண்ணப்பத்தை சந்நிதானத்திடம் செலுத்தி பிறகு உங்கள் 'அலுவலை'த் தொடருங்கள் என்று கூறினார். [வாசகர்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். கோயிலுக்குச் செல்வதற்கு என்ன முறையான விண்ணப்பம் என்று? எங்களின் முக்கிய அலுவலே புகைப்படம் எடுப்பதுதானே? எனவேதான் பொறுப்பாளர் அவ்வாறு தெரிவித்தார்]. நாங்களும் முறையான விண்ணப்பத்தை சந்நிதானத்திடம் அளித்துவிட்டுக் காத்திருந்தோம். சற்று நேரத்திற்கெல்லாம் அவருடைய உதவியாளர் எங்களைச் சென்று வரும்படியும் நாங்கள் புகைப்படம் எடுக்கும் நாள் தபால் மூலம் எங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். எனக்கு நம் நேரம் இப்படி வீணாகிவிட்டதே என்று இருந்தது. ஆனால் நண்பர் பத்மநாபன் வேறு ஒரு திட்டமிட்டு இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. அவர் மிகுந்த நிதானத்துடன் இருந்தார். என்ன இது நாம் இன்று திருக்களித்திட்டை சென்றிருக்கலாமே? இங்கு வந்து நாம் நேரத்தை வீணாக்கி விட்டோமே என்றேன். அவர் கூறினார். பொறுங்கள் இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் ஒரு முற்காலச் சோழர் ஆலயம் உள்ளது. அங்கு செல்லலாம் என்றார்.

முன்பே என்னை அழைத்துப் போயிருக்கலாமே என்று கேட்டேன். அவர் அதற்கு உங்களுடைய M.Phil-க்கு திருவாவடுதுறை ஆராய்ச்சி பயனளிக்கும் என்ற நோக்கில்தான் நான் இங்கு அழைத்து வந்தேன் என்று கூறினார். நாம் ஒருமுறை இக்கோயிலை வலம்வந்து பின் 'அந்தக்'கோயிலுக்குச் செல்வோம் என்றார். இம்முறை நான் இந்தப் பீடிகைக்கு மசியவில்லை. இவர் நமக்குத் தெரிந்த வேறு ஏதேனும் ஒரு கோயிலுக்குத்தான் அழைத்துச் செல்லப்போகிறார் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். கோயிலை வலம்வந்தோம். போதிகைகளையும் கோட்டச்சிற்பங்களையும் கையகலச் சிற்பங்களையும் வைத்து இக்கோயில் ஸ்ரீபராந்தகர் காலக் கட்டமைப்புதான் என்று உணர்ந்தோம். அனுமதி வந்தவுடன் திரும்ப வந்து நம் அலுவலைச் செவ்வனே முடிக்கவேண்டும் என்று எண்ணியவாறு நண்பர் கூறிய கோயிலை நோக்கிப் பயணப்பட்டோம். எனக்கு இப்பொழுது எவ்வித எதிர்பார்ப்பும் பலமாக இல்லை. மறுபடியும் இவ்வாறு இவர் ஏமாற்றினால் பலமாகக் கடிந்து கொள்ளவேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.

எங்களது வாகனம் மேக்கிரிமங்கலத்தை அடைந்தது. ஒரு ஆர்ச் எங்களை வரவேற்றது. மேக்கிரிமங்கலம் தற்போது தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு அமைச்சர் திரு.கோ.சி.மணி அவர்களின் சொந்த ஊர். இச்செய்தியும் எனக்கு முன்பே தெரியும். நான் திரு.பத்மநாபனைக் கேள்விக் குறியுடன் பார்த்தேன். அவர் இன்னும் சற்று தூரம்தான் என்று கூறினார். நான் அந்த ஆர்ச்சை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். மனம் தானாக மலர்ந்தது. காரணம் இதுதான்.

"எங்கள் மண்ணின் மைந்தர்
பொன்னியின் செல்வன்
பவளவிழா 2005
நுழைவு வாயில் ஆனாங்கூர்"

என்று இருந்தது. எம்முடைய மகிழ்ச்சிக்குக் காரணம் எனக்கு ஏதோ தெரியும் என்பதல்ல. அந்த வாசகத்தில் பொன்னியின் செல்வன் இருந்ததுதான்.

சற்று நேரத்தில் நாங்கள் கோயிலை வந்தடைந்தோம். நண்பர் கூறினார். இதுதான் நான் உங்களுக்குக் காட்ட நினைத்த கோயில். பாருங்கள்! நான் கண்ட காட்சியைப் படமாக உங்களுக்கு அளித்துள்ளேன். பார்க்கவும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.



நான் நண்பரைச் சுட்டெறித்து விடுவது போல் பார்த்தேன். காரணம் உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கோயில் ஒன்று திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் நாம் காணும் காட்சி. முகப்புத் தோற்றத்தில் சிமெண்ட் பூசப்பட்ட ஒரு சிறுமண்டபம். இதனைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தோம்? இவருக்கு என்ன கிறுக்குப் பிடித்திருக்கிறதா? மேற்கூறிய எண்ணங்களை என் நா வெளிப்படுத்தவில்லை. கண்கள் கட்டுப்படுத்தவும் இல்லை. நண்பர் விஷமப்புன்னகை புரிந்தார். 28 கி.மீ வந்தாயிற்று. ஒரு 5 மீ. முன்னே வரமாட்டீர்களா என்றார். சரி, இவர் கூறுவதும் உண்மைதான். 5 மீ. முன்னே சென்றுதான் பார்ப்போமே என்று அவருடன் சென்றேன்.

நண்பர் திரு. பத்மநாபனிடம் மிகப்பெரிய கெட்டபழக்கம் ஒன்று உண்டு. அழைத்து வந்தவர் என்ன செய்திருக்கவேண்டும்? என்னை அழைத்து முறையாகச் சுற்றிக் காட்டியிருக்கவேண்டும் அல்லவா? அவர் அவ்வாறு செய்யவில்லை. எப்போதும் அவருடன் இணைபிரியாமல் இருக்கும் அவருடைய கேமராவை எடுத்துக்கொண்டு படமெடுக்கச் சென்றுவிட்டார், என்னை அம்போ என்று விட்டுவிட்டு [படம் பார்க்க].



நானும் இவ்வளவு அவசரமாகக் கேமராவைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாரே என்னவென்று பார்ப்போம் என்று பார்த்தேன். உண்மையிலேயே நம் கண்ணையும் கருத்தையும் அந்தச் சிறியகோயில் கவர்ந்தது. கோட்டச் சிற்பங்களும், வேதிகைத் தொகுதிச் சிற்பங்களும் கண்ணையும் கருத்தையும் வெகுவாகக் கவர்ந்தன. நான் நண்பரைப் பார்த்துக் கேட்டேன். 'ஐயா, என்னைக் கொஞ்சம் கவனியுங்கள். நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையிலேயே குறியாக இருக்கிறீர்களே?'. அவர் கூறினார். நான் முன்பே சொல்லிவிட்டேன். நீங்கள்தான் கோயிலைப் பார்த்து இதனுடைய கட்டடக்கலை அமைப்பைக் கூறவேண்டும். சந்தேகம் வரும்போது என்னை அழையுங்கள் என்று கூறிவிட்டு அவர் 'பணி'யைத் தொடர்ந்தார். சரி, இவரை வேறுவழியில் பழிதீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அவர் கூறிய ஒரு வார்த்தையை ஆயுதமாகப் பயன்படுத்தினேன். அது என்னவென்று பார்க்கிறீர்களா? சந்தேகம் வரும்போது அழையுங்கள் என்றாரல்லவா? அழைத்துக்கொண்டே இருந்தேன். நண்பருக்கு வேறு வழியில்லாமல் என்னைக் கவனிக்கும்படி ஆயிற்று.

சரி. அவருடைய வழிகாட்டுதலின்பேரில் நான் அறிந்துகொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் வாருங்கள்!

இக்கோயிலின் கட்டமைப்பு ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம் மற்றும் பட்டிகை பெற்றுப் பாதபந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. இதனை ஆய்ந்தபின் கோட்டச் சிற்பங்களில் கண் நின்றது. முகமண்டபத்தின் தென்புறச்சுவரின் கிழக்கு மூலையில் விநாயகர் இருந்தார். அவருக்கு இடப்பக்கம் இருக்கவேண்டிய தூண் கண்ணில் படவில்லை. அவருடைய வலப்பக்கம் ஒரு நான்முக அரைத்தூண் இருந்தது. அவரை அடுத்து இரண்டாவது கோட்டத்தில் அகத்தியரும் மூன்றாவது கோட்டத்தில் சிதிலமடைந்த நடராஜரும் காட்சியளித்தனர். முகமண்டபத்திலிருந்த இந்த மூன்று கோட்டங்களிலும் நான்முக அரைத்தூண்கள் அணைவு பெற்றிருந்தன. முகமண்டபம் முடிவுபெற்று கருவறைப்பகுதி ஆரம்பமாகிறது. கருவறையின் தென்பகுதிக் கோட்டத்தில் புன்னகையுடன் தட்சிணாமூர்த்தி எழிலாக அமர்ந்திருந்தார்.



இந்தக் கோட்டத்தில் இருமருங்கிலும் நான்முக அடிப்பாகம் கொண்ட விஷ்ணுகாந்தத் தூண்கள் உள்ளன. தூண்களின் மேற்பகுதியான வீரகண்டத்திற்குமேல் பட்டையுடன் கூடிய குளவுத் தரங்கப்போதிகைகள் உள்ளன. போதிகைகள் தாங்கும் உத்திரத்திற்கு மேல் வாஜனமும் அதற்குமேல் வலபியும் கூரையும் அமைந்துள்ளன. வலபியில் பூதவரிகள் அழகுடன் காட்டப்பட்டுள்ளன. கூரைப்பகுதி முன்னிழுக்கப்பட்டுக் கபோதமாகக் காட்டப்பட்டுக் கூடுகள் அமைந்துள்ளன. இக்கபோதத்திற்குமேல் பூமிதேசம் காட்டப்பட்டு முதல்தளம் முடிவடைகிறது. அடுத்து சிமெண்ட் தளமாக இரண்டாம் தளம் மற்றும் விமானம் உயருகிறது.





விமானத்தின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கில் சதுரக்கட்டுக் கொண்ட விஷ்ணுகாந்தத் தூண்கள் கொண்டு இரண்டு கர்ணபத்திகளும் ஒரு சாலைப்பத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன அமைப்பிலேயே கருவறையின் மேற்குப் பகுதியில் லிங்கோத்பவரும் வடக்குப் பகுதியில் பிரம்மாவும் எழிலுடன் அமைந்துள்ளனர். இம்மூன்று கோட்டங்களிலும் மகரதோரணங்களும் காட்டப்பட்டுள்ளன. முகமண்டப வடக்குச் சுவரில் உள்ள கோட்டங்களில் பிச்சாடனர், துர்க்கை, மற்றும் அம்மையப்பர் காட்சி அளிக்கின்றனர். கோயிலை அடுத்து உள்ள மரத்தடியில் ஒரு ஜேஷ்டா சிலையும் உள்ளது.







முகமண்டபத்தில் பக்கத்திற்கு மூன்று கோட்டங்களும் கருவறையில் பக்கத்திற்கு ஒரு கோட்டமுமாக மொத்தத்தில் ஒன்பது கோட்டங்கள் அமைந்துள்ளன. முகமண்டபம் மற்றும் கருவறையைச் சுற்றியுள்ள வேதிகைத் தொகுதியில் புள்ளமங்கையில் உள்ளதுபோல் [Miniature] சிற்பங்கள் உள்லன. சிற்பத்தின் நேர்த்தி குறித்துக் கருத்துக் கூற இயலவில்லை. சில வேதிகண்டச் சிற்பங்கள் பணி நிறைவு பெறாமல் அரைகுறையாக உள்ளன. ஆனால் கோட்டச்சிற்பங்கள் மிகுந்த அழகுடன் ஜொலிக்கின்றன. ஒரே ஒரு குறைதான், அனைத்துச் சிற்பங்களிலும் யாரோ ஒரு புண்ணியவான் மூக்கை அறுத்ததுதான் அது.

மூக்கறுபட்ட குறைதவிரச் சிற்பத்தின் அழகும் நேர்த்தியும் மிகவும் அருமை. திரு. பத்மநாபன் அவர்களை மனமாரப் பாராட்டினேன் [இக்கோயிலுக்கு அழைத்து வந்ததற்காக]. அடுத்ததாக இக்கோயில் யாரால் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது குறித்து விவாதித்தோம். இதுகுறித்து எங்களால் அப்பொழுது எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. இதற்கிடையில் உணவுநேரம் வந்தமையால் இருவரும் குடந்தை திரும்பினோம். கோயிலின் பூசாரி மாலைவரை கோயிலுக்கு வரவில்லை. ஆதலால் உள்ளே செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை.

வீடு திரும்பிய உடன் திரு. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அவர்களுடைய Early Chola Temples என்ற புத்தகத்தைப் புரட்டியதில் ஆனங்கூர் உத்தமசோழனுடைய கோயில் என்று தெரியவந்தது. நான் திரு. பத்மநாபனைத் தொலைபேசியில் அழைத்து நாம் சென்றுவந்த கோயில் உத்தமசோழன் காலத்தில் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது என்று கூறினேன். அவர் உத்தமசோழன் காலமும் சோழர்களில் முற்காலத்தைச் சேர்ந்ததுதான் என்று பதிலளித்தார்.

உத்தமசோழன் கோயில் என்றதும் என் நினைவுக்கு வந்தது ஊருக்குள் நுழையும்போது வரவேற்ற நுழைவாயில்தான்.

உத்தமசோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலின் கோட்டச் சிற்பங்களை மூக்கை வெட்டியவர் யார் என்ற ஆராய்ச்சியை வாசகர்களுக்கே விட்டுவிடுவோம்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.