http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 38

இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]
3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

தரிசனம் கிடைக்காதா!!!
பிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்
கதை 11 - ஒளி
திரும்பிப் பார்க்கிறோம் - 10
இராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)
இராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்
A Megalithic Pottery Inscription and a Harappan Tablet : A case of extra-ordinary resemblance
Agricultural Terms in the Indus Script - 2
அங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)
Silpi's Corner-Introduction
Silpi's Corner-01
Links of the Month
ஆனங்கூர் - உத்தமரா? பராந்தகரா?
நீலப் பூக்களும் நெடிய வரலாறும்
இதழ் எண். 38 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 10
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி, தமிழ்நாட்டரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை 'திருக்கோயில்' எனும் திங்களிதழை வெளியிட்டு வந்தது. கவிஞர் ந. ரா. முருகவேள் அதன் ஆசிரியராக இருந்தார். 1982ல் சிராப்பள்ளி வந்த அப்பெருமகனார் என்னை மருத்துவமனையில் சந்தித்துத் திருக்கோயில் இதழிற்குக் கட்டுரைகள் அனுப்புமாறு அறிவுறுத்தினார். அவரது அன்பினால் ஈர்க்கப்பட்ட நிலையில், 'திருக்கோழியூர்' என்ற தலைப்பிலான கட்டுரையை அனுப்பினேன். உறையூர் நாச்சியார் கோயிலைப் பற்றிய அந்த ஆய்வுக் கட்டுரை 1982ம் ஆண்டு பிப்ருவரி இதழில் வெளியானது. கட்டுரையைப் பெரிதும் பாராட்டிய திரு. ந. ரா. முருகவேள் தொடர்ந்து கட்டுரைகள் அனுப்புமாறு எழுதினார். அதன் விளைவாக மார்ச்சு இதழில், 'திருவைகல் மாடக்கோயில்' பற்றிய கட்டுரையும் ஜூலை இதழில், 'திருநன்னிலத்துப் பெருங்கோயில்' கட்டுரையும் செப்டம்பர் இதழில், 'திருஅரிசிற்கரைப் புத்தூர்' கட்டுரையும் வெளியாயின.

திருக்கோயில், என் தந்தையார் காலத்திலிருந்து வெளிவரும் திங்களிதழாகும். அவ்விதழில் தந்தையாரின் கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன. அதன் காரணமாகவும், திரு. ந. ரா. முருகவேளின் அன்பின் வலிமையாலும் அவர் ஆசிரியராக இருந்த காலம் வரை அவ்விதழிற்கு என்னால் இயன்றபோதெல்லாம் கட்டுரைகள் அளித்துவந்தேன். நவம்பர் 1982 இதழில் 'உறையூர்த் தான்தோன்றீசுவரர் திருக்கோயில் கல்வெட்டுகள்' கட்டுரை வெளியானது. பிப்ருவரி 1983 இதழில் 'கோச்செங்கட் சோழரின் கோனேசர் பெருங்கோயில்' கட்டுரையும் மார்ச்சு 1983 இதழில் 'திருத்தேவூர்' கட்டுரையும் ஜூலை 1983 இதழில் 'கீழ்வேளூர் மாடக்கோயில்' கட்டுரையும் வெளியாயின. மாடக்கோயில்கள் பற்றிய பெரும்பாலான கட்டுரைகள் திருக்கோயில் இதழிலேயே வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கோனேரிராசபுரமென்று அழைக்கப்படும் திருநல்லம் உமைக்கு நல்லவர் கோயில் ஆய்வு என்னுடைய தொடக்கக் கால ஆய்வுகளுள் குறிப்பிடத்தக்கது. அக்கோயில் தொடர்பான இரண்டு கட்டுரைகள் திருக்கோயில் இதழில்களில், 'திருநல்லம் கல்வெட்டுகள்' என்ற தலைப்பில் செப்டம்பர் 1983லும் 'உமைக்கு நல்லவன்' என்ற தலைப்பில் பிப்ருவரி 1984லும் வெளியாயின. கும்பகோணம் அணைக்கரை சாலையிலுள்ள கருப்பூர்க் கோயில் பற்றிய கட்டுரை 'இன்கருப்பூர் விருப்பன்' என்ற தலைப்பில் டிசம்பர் 1983 இதழில் வெளிவந்தது. குமாரவயலூர் கல்வெட்டுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரையைப் பிப்ருவரி 1984 இதழில் வெளியிட்டிருந்தார் திரு. ந. ரா. முருகவேள்.

திரு. ந. ரா. முருகவேள் சைவ சித்தாந்தம் தொடர்பாகப் பல ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். அதனால் சிராப்பள்ளி வரும்போதெல்லாம் சைவ சமயம் குறித்து விரிவாகப் பேசுவார். சமய ஆய்வுகளில் எனக்கு அதிக நாட்டம் இல்லாதிருந்தபோதும் அவரது உரைகளைக் கவனத்துடன் கேட்டு வந்தேன். 'சைவ சித்தாந்தம்' என்ற தமது ஆய்வு நூலின் படியொன்றினை என்னிடம் அளித்துப் படித்துக் கருத்துரைக்கக் கேட்டிருந்தார். எந்த நூலைப் படித்தாலும் ஒன்றிப் படித்துக் கருத்துப் பெறுவது வழக்கம் என்பதால் அந்நூல் பற்றிய என் கருத்துகளை தெளிவாகச் சுட்டியிருந்தேன்.

அப்போது தருமபுர ஆதீனத்தின் சார்பில் சிராப்பள்ளியில் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வகுப்பில் பொழிவொன்று தர அழைக்கப்பட்டிருந்தேன். அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திரு. ந. ரா. முருகவேளின் 'சைவ சித்தாந்தம்' நூலைத் திறனாய்வு செய்தேன். சிராப்பள்ளியில் ஆதிமுருகவேள் என்ற பெயரில் சைவ சித்தாந்தப் புலவர் ஒருவர் இருந்தார். அவரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார். நான் முருகவேள் பெயரைக் குறிப்பிட்டபோதெல்லாம் அவர் தம்மைக் குறிப்பிடுவதாகக் கருதிக்கொண்டார் போலும். கூட்ட இறுதியில் நான் குறிப்பிட்ட முருகவேள் தாம் இல்லை என்பதை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோளை நிறைவேற்றி வைத்தேன்.

நூல் பற்றிய என் திறனாய்வோ, கருத்துரையோ எனக்கும் திரு. ந. ரா. முருகவேள் இடையில் இருந்த அன்பான பிணைப்பை ஏதும் செய்யக்கூடவில்லை. அதற்கு அப்பெருந்தகையின் பேருள்ளமே காரணம். தொடர்ந்து என் கட்டுரைகளைப் பெற்றுத் திருக்கோயில் இதழில் வெளியிட்டார். 'புதையுண்ட தலைநகரும் புகழ் விளங்கும் திருக்கோயிலும்' கட்டுரை ஜூன் 1984 இதழிலும், 'திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்' கட்டுரை ஜூலை 1984 இதழிலும் வெளியாயின. நீரிழிவு நோயினால் துன்பப்பட்டு வந்த திரு. ந. ரா. முருகவேள் மறைவிற்குப் பிறகு டாக்டர் த.அமிர்தலிங்கம் திருக்கோயில் இதழின் ஆசிரியரானார்.

அருங்கலை வளர்த்த அருமொழிவர்மன் (பிப்ருவரி 1985), சமயபுரம் மாரியம்மன் (ஜூலை 1985), அப்பக்குடத்தான் ( மார்ச் 1986), தடங்கல் உந்து சாய்க்காடே (ஆகஸ்டு 1986), தாமரைத் திருவடிக்கீழ் ( டிசம்பர் 1986) எனும் ஐந்து கட்டுரைகளுடன் எனக்கும் திருக்கோயிலுக்கும் இருந்த தொடர்பு முடிவுக்கு வந்தது. 1986க்குப் பிறகு ஆய்வுகள் ஆழப்பட்ட நிலையில் அடிக்கடி கட்டுரைகள் எழுதியனுப்புவது இயலாமற்போனமையே அதற்குக் காரணம். திருக்கோயில் இதழில் கட்டுரைகள் வெளியான காலத்தில் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு இருக்கும். அவர்கள் துறை சார்ந்த இதழில் எழுதுபவன் எனபதால் தடையின்றி ஆய்வு செய்ய அநுமதியும் ஒத்துழைப்பும் கிடைத்தன. இந்தக் காலகட்டத்தில் பல கோயில்களை ஆய்வு செய்ய வாய்த்தமை இறையருள்தான். எல்லாவற்றிற்கும் இனியவர் திரு. ந. ரா. முருகவேளே காரணர் எனலாம்.

மாலைமுரசு இதழின் செய்தி ஆசிரியராக இருந்த திரு. இரா. ஜேசுவடியான் அருமையான நண்பராக அமைந்தார். மாலைமுரசு சனிக்கிழமைகளில் வாரமலர் வெளியிட்டு வந்த காலமது என்பதால் என்னைச் சிறுகதைகள் எழுதத் தூண்டினார் அவர். ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தே சிறுகதைகள் எழுதி வெளியிட்டிருந்தமையால் அது ஒன்றும் கடினமான பணியாக இருக்கவில்லை. 'பொய்முகம்' (10.1.1981), 'சில நினைவுகள் சில கனவுகள்' (12.4.1981), 'ஒரு நிலா கதை சொல்கிறது' (25.10.1981) எனும் கதைகள் மாலைமுரசில் வெளியாயின. ஜேசுவடியானிடம் சிறுகதைகளுக்கு மாற்றாகக் கோயில் கட்டுரைகள் தருவதாகக் கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலம்வரை தொடர்ந்து என் கோயிற் கலைக் கட்டுரைகளைப் பெற்று மாலைமுரசில் வெளியிட்டார். நான் தந்திருந்த கட்டுரைத் தலைப்புகளை மாற்றி, மாலைமுரசு படிப்பவர்களை ஈர்க்கும் தலைப்புகளில் அக்கட்டுரைகளை அவர் வெளியிட்டார். பல தலைப்புகள் எனக்கு ஒப்புதல் இல்லையாயினும், உள்ளீடு மாற்றப்படாதவரையில் சரியென்று வாளாவிருந்தேன். கோயில் தொடர்பான செய்திகள் மக்களைச் சென்றடைந்தால் போதும் என்பதே அப்போது என் கருத்தாக இருந்தது.

கல்வெட்டு செய்யும் காவியம் (14. 8. 1982), புதையுண்ட தலைநகர் புகழ்மிக்க வரலாறு (3. 12. 1982), கங்கைகொண்ட சோழபுரம் ( 30. 12. 1982), கல்வெட்டுக் கூறும் கோவணத் திருட்டு (12. 11. 1982), குடமுழுக்குக் காணவிருக்கும் குமாரவயலூர் ( 12. 3. 1983), தழுவக் குழைந்த இறைவனும் தவமிருந்த தேவியும் (16. 4. 1983), திருச்சிராப்பள்ளி அருங்காட்சியகம் (30. 7. 1983), காதல் சிலைகள் (3. 11. 1983), இராஜராஜனின் காதலி (15. 9. 1984) என்னும் அக்கட்டுரைகளால் எளிய மக்களிடைச் சென்றடைய முடிந்தது. இந்தக் கட்டுரைகளை எழுதிய காலத்தில் கோயில்கள் மக்கள் வரத்தின்றி இருந்தன. ஆனால், பாழ்படாமல் இருந்தன. இன்று அதே கோயில்களைப் பார்க்கும்போது கண்களில் நீர் வருகிறது. இறைவனை எப்படி வழிபடுவது, வழிபடும் இடத்தை எப்படி வைத்துக்கொள்வது என்ற தெளிவுகூட இல்லாமல் கோயில்களை, அவை சார்ந்த அத்தனை பேருமே அழித்துக் கொண்டிருப்பது வேதனையான உண்மை.

நெய்வேலித் தமிழ்ச் சங்கம் ஜூலைத் திங்கள் இறுதியில் நடத்திய, 'தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்' கருத்தரங்கில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிய நானும் நளினியும் திருமுதுகுன்றம் கோயிலுக்குச் சென்றிருந்தோம். செம்பியன்மாதேவி கற்றளியாக்கிய பாடல் பெற்ற திருக்கோயில் அது. கருவறைப் புறச்சுவர்களில் சோழர் கல்வெட்டுகள். அந்தக் கல்வெட்டுகள் மீதே மக்கள் தங்கள் பெயர்களையும் வண்டி எண்களையும் எழுதுவதைப் பார்க்கமுடிந்தது. எங்களால் ஆனவரை தடுத்தோம். 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டால், இப்படி எழுதினால், எது எண்ணி எழுதுகிறார்களோ அது நன்றாக அமையும் என்று யாரோ சொன்னார்களாம். 4. 8. 2007 கும்பகோணம் சென்றிருந்த போது அங்கேயும் கோயிலொன்றின் விமானச் சுவர்களில் மக்கள் இப்படிக் கரிக்கோலம் போடுவதைக் காணமுடிந்தது.

மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு வயிறு வளர்க்கும் கூட்டம் இது போல் பல தவறான வழிகாட்டல்களால் உள்ளிருந்தே கொல்லும் நோயாகக் கோயில்களை அழித்துக் கொண்டிருப்பதை யார் எப்போது தடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இரண்டு கோயில்களிலும் நிர்வாக அலுவலர்களிடம் கூறி இக்கொடுஞ் செயலைத் தடுக்குமாறு வேண்டி வந்தது மட்டுமே எங்களால் முடிந்த செயலாக அமைந்தது. மடைமை என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ளது. கருவறையிலுள்ள இறைவன் திருமேனி நோக்கி வீச்சொளி விளக்கு அமைத்திருக்கும் ஒரு கோயிலின் நிர்வாக அலுவலர், இருள் சூழ்ந்த உள்மண்டபத்திற்குள் விளக்கமைப்பது மரபு அன்று என்கிறார். அந்த உள்மண்டபத்திற்குள் எலிகள் துள்ளி விளையாடுகின்றன. அற்புதமான கோழர் காலத் தூண்கள் மக்கள் பார்வைக்குக் காட்சியாக முடியாதவாறு இருள் ஆட்சி செலுத்துகிறது. வான்முட்டுவது போல் வளர்ந்துள்ள ஒரு கோபுரத்தின் அத்தனை தளங்களிலும் புறாக்கழிவுகள். கால் வைக்க இயலாதவாறு பல ஆண்டு கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. யார் எந்தக் காலத்தில் இவற்றையெல்லாம் சரி செய்யப் போகிறார்கள்?

சார்ங்கபாணி கோயில் கோபுரத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்துப் படியெடுத்த கரணப் பெயர்களுள் பெரும்பான்மையன இன்று அழிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக காப்பற்றப்பட்டு வந்த அந்த கிரந்த வரிவடிவங்கள் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிற்பங்களின் கீழ் மட்டுமே காணப்படுவது எத்தனை துன்பமானது! 'திருப்பணி' என்ற பெயரால் தமிழரின் அடையாளங்கள் தமிழர்களாலேயே அழிக்கப்படுவது வேதனையல்லவா! கல்வெட்டுகளையும் சிற்பங்களையும் இழந்துவிட்டால் தமிழன் தலைப்பெழுத்தின்றிப் போய்விடுவான் என்பது ஏன் இன்னும் இந்த மக்களுக்குப் புரியாமல் இருக்கிறது?

வாருணி, என்னுடைய இருபத்தைந்து ஆண்டு கோயில் வாழ்க்கையில் அனைத்து இடங்களும் தூய்மையாக விளங்கிய ஒரு பழங்கோயிலை இதுநாள்வரை கண்டதில்லை. பல கருவறைகளைப் பார்த்திருக்கிறேன். தரையில் கால் வைக்கக் கூசுமளவிற்குத்தான் அவை இருந்திருக்கின்றன. சில கருவறைத் தரைகளில் நடப்பதற்கே அச்சமாக இருக்கும். அத்தனை வழுக்கல்! வழிபாட்டிலுள்ள ஒரு குடைவரைக் கோயிலில் இரண்டு சுவர்த் தெய்வங்கள் உள்ளன. ஒன்று எப்படியோ உலகப் புகழ் பெற்றுப் பெருங் கூட்டத்தைக் கூட்டிவருகிறது. இன்னொன்று பாவம், கோட்டத் தெய்வத்தின் மீது அணிவிக்கப்பட்டு அகற்றப்படும் கழிவுகளைச் சுமந்தே உருக்குலைந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அது அப்பனும், அண்ணனும் மாமனுமான கூட்டிணைவு! என்ன செய்யலாம்! எடுத்துச் சொல்லி எவ்வளவோ முன்றும் ஏற்பட்டதெல்லாம் தோல்விதான்! இந்த வளாகத்தில் இப்படியொரு இறைத்திருமேனி இருப்பதே வருகின்ற கூட்டத்திற்கும் வழிபடும் கூட்டத்திற்கும் தெரியாத உண்மை!

அண்மையில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்றுக் கொழும்பு சென்றிருந்தேன். அரசின் ஓர் அங்கமான இந்து சமய கலாசாரத் திணைக்களத்தின் சார்பில் அங்கு மூன்று நாள் கருத்தரங்கம். ஓர் அமர்விற்குத் தலைமை தாங்கினேன். கருத்தரங்கம் முடிந்ததும் கண்டி சென்றிருந்தேன். அங்கிருக்கும் புத்தரின் 'பல்' வைக்கப்பட்டிருக்கும் கோயிலைப் பார்த்தேன். அந்தக் கோயிலின் வெளி வளாகத்தில் விளக்கேற்றுவதற்கென்றே ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த அமைப்பில் பல வரிசைகளில் இரும்புச் சட்டங்களில் அகல்கள் உள்ளன. விரும்புவார் அவற்றில் எண்ணெய் ஊற்றித் திரியிட்டு விளக்கேற்றுகிறார்கள். கோயிலுக்குள் புகையில்லை! எண்ணெய் வழுக்கல் எங்கும் இல்லை! அந்தக் கோயிலின் வரலாற்றைத் தெரிவிக்கும், விளக்கும் பயனுள்ள அருங்காட்சியகங்கள் வளாகத்திற்குள்ளேயே உள்ளன. மலர்களைச் சுமந்து வரும் மக்கள் கருவறைக்கு முன்னுள்ள பெருந்தட்டில் இட்டு வணங்கிப் பின் திருநடையில் யாருக்கும் இடையூறாகாதவாறு அமர்ந்து வழிபட்டுச் செல்வதைப் பார்க்கமுடிகிறது.

நம் ஊர்ப் பெருங் கோயில்களிலாவது இவற்றை நடைமுறைப்படுத்த முயலலாமே என்று தோன்றுகிறது. திருமுதுகுன்றம் கோயிலில் நாங்கள் சந்தித்த விளக்குத் துன்பம் சொல்லி மாளாது. எங்காவது அசைவின்றி ஓரிரு நிமிடம் நின்றிருந்தால் எங்கள் தலையிலும் அன்று எண்ணெய் ஊற்றி விளக்கேற்றியிருப்பார்கள்! கருவறை சூழ்ந்த திருச்சுற்றில் நடக்க முடியாதவாறு புகை மண்டலமும் எண்ணெய்ப் பிசுக்கும்! அப்பப்பா! அந்த முதுகுன்றத்தானை வேண்டியபடியே தப்பிப் பிழைத்து வெளியில் வந்தோம். கோயிலில் விளக்கேற்றுவது புண்ணியம் என்று பாடியதும், வழிகாட்டியதும் கோயில்கள் விளக்கின்றி இருந்த காலங்களில்! இன்று மின் விளக்கு இல்லாத கோயில் இல்லை. இறைத் திருமுன்களில் கோயிலாரே விளக்கேற்றுகின்றனர். இருள் சூழ்ந்திருக்கும் இடங்களை வெளிச்சப்படுத்த கூடுதல் மின்விளக்குகளுக்கும் அதற்கான மின் செலவுக்கும் விழைவார்கள் கொடை வழங்கித் துணை நிற்கலாம். விளக்கேற்றுவது மரபு, விட்டுவிடக்கூடாது எனக் கருதுவார் கோயில் வளாகங்களின் வெளியே விளக்குக் தூண்கள் அமைத்து விளக்கேற்ற உதவலாம். அதை விடுத்து, ஏற்கனவே காற்று அடைபட்டிருக்கும் கருவறைச் சுற்றுகளில் புகை மண்டலத்தைப் பெருக்குவது எத்தனை கேடு!

இந்தச் சிந்தனைகளெல்லாம் இன்றைக்கிருக்கும் பத்திமைப் பேரலையில் யாரையும் வயப்படுத்தா. மக்கள் எது செய்தாவது கடவுளின் கணக்குகளிலிருந்து தப்பிக்க விரும்பும் காலமிது. கோயில்களின் வாயில்களுக்கு மக்களை இழுக்கப் பதினைந்தாண்டுகளுக்கு முன் போராடியதை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது. மக்கள் வந்தால் கோயில்கள் வாழும் என்று நினைத்த நிலைமை மாறி, மக்கள் வரத்துக் குறைந்தால் நன்றாக இருக்கும் என்று சிந்திக்கும்படியாகிவிட்டது. ஒரு பிரதோஷ நாளில் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய்ப் பார். கோயில் நடை சாத்தப்படும் நேரம் நீ அங்கிருந்தால்தான், அந்தக் கோயில் வளாகம் அந்த ஒரு மாலைப் போதில் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். திருமுதுகுன்றத்தில் முழு நிலா நாளில் சிக்கிக் கொண்டதால், நானும் நளினியும் பார்த்த காட்சிகள்தான் இந்த அளவிற்கு எழுதுமாறு செய்து விட்டன.

1983, 84, 85 களில் நான் பார்த்த கோயில்கள், கோயில் வகைகளைப் பற்றிய பல சிந்தனைகளை எனக்குள் வளர்வித்தன. ஒரு கோயிலை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டுமானானல், சிற்ப, கட்டடக்கலை நூல்களில் ஆழமான பயிற்சி வேண்டும். மயமதம் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்த முதல் நூல் சிற்பச் செந்நூல். அதையடுத்து ஸ்ரீதத்துவ நிதியும் சிற்பரத்னாவும் கிடைத்தன. அவற்றைப் புரிந்துகொள்வது எளிதானதாக இல்லை. கேட்டால் சொல்லித்தரும் அளவு அவற்றில் ஆழமான புலமை உடையவர்களையும் நான் சந்திக்கக் கூடவில்லை. பலமுறை படித்து, கோயில் வளாகங்களில் அம்மொழிவுகளை அடையாளப்படுத்த முயன்ற காலங்களில் பட்ட துன்பங்கள் அளவிறந்தன. இந்தச் சிற்ப, கட்டடக்கலை நூல்களுக்கும் கோயில் அமைவுகளுக்கும் நிறைய வேறுபாடுகளைக் காணமுடிந்தது. இவற்றில் கூறப்பட்டிருக்கும் சில கட்டட உறுப்புகளை இன்றுவரை எந்தக் கோயிலிலும் காணமுடிந்ததில்லை.

ஆனந்தத் தாண்டவம் பற்றி அறிவதற்காகச் சகளாதிகாரம் வாங்கிப் படித்தேன். கோயில் நடைமுறைகளைப் பற்றி அறிய விழைந்து சிவச்சாரியார்களிடம் கேட்டபோதெல்லாம், 'காரணாகமம், காமிகாகமம்' எனும் இரண்டு ஆகமங்களின் பெயர்களைச் சொன்னார்களே தவிர, அந்த ஆகமங்கள் வழிபாடு, படையல் பற்றி என்னவெல்லாம் கூறுகின்றன என்று யாரும் தெளிவுபடப் பகிர்ந்து கொண்டதில்லை. துருவித் துருவிக் கேட்டாலும் பதில் ஒரே மாதிரியாகத்தான் வரும். ஆறுகாலப் பூசை, படையல்கள், நாளும் சொல்லும் மந்திரங்கள் இவை தவிர சிவாச்சாரியார்களிடமிருந்து பயனுள்ள தகவல்கள் எவற்றையும் பெறமுடிந்ததில்லை. பல சிவாச்சாரியார்களுக்கு அவர்கள் பணியாற்றும் பாடல் பெற்ற கோயில்கள் தொடர்பான பதிகங்கள்கூட முழுமையாகத் தெரியாத நிலையையும் பார்த்திருக்கிறேன்.

கோயில் தொடர்பான அனைவர் திருவாய்களிலிருந்தும் பிறந்து விரியும் ஒரு சொல் 'ஆகமம்'. இந்தச் சொல்லை உச்சரிக்கும் அன்பர்களை அன்புடன் அணுகி, ஆகமம் என்றால் என்ன? அந்த ஆகமங்களின் காலம் என்ன? அந்த ஆகமங்களுள் ஒன்றையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? 'ஆம்' என்றால் படித்திருக்கிறீர்களா? என்றொல்லாம் மெல்ல விசாரித்துப் பார். வியப்பூட்டும் உண்மைகளை உன்னால் அறியமுடியும். நான் கேட்டறிந்த வரையில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில், 'ஆகமம்' பற்றிய அறிமுகம் பெற்ற சிவாச்சாரியார்கள் மிகச் சிலரே. அவருள்ளும், 'ஆகமம்' பற்றிய தெளிவுடையவர்களை எண்ணிவிடலாம்.

திருக்கோயில் கட்டமைப்பு, சிற்ப அமைதிகள், அக்கோயில்களில் உள்ள இறைத் திருமேனிகள் பற்றிய விரிவான, தெளிவான அறிமுகம் பெற்ற கோயில் தொடர்பானவர்களும் எண்ணிக்கையில் குறைவானவரே. நாளும் பூசை செய்யும் திருமேனிகளை மட்டுமே பலருக்கு அடையாளம் தெரியும். அவர்கள் ஆளுகையில் உள்ள கோயில் வளாகத்தில் காணப்பெறும் அனைத்து இறைத்திருமேனிகளையும் அறிந்து, சொல்லி விளக்கக்கூடியவர்களை தேடவேண்டி யிருக்கும். இதுதான் இன்றைய கோயில்களில் காணக்கிடைக்கும் ஆகம நிலை. ஆனால், 'ஆகமம், ஆகமம்' என்று எதற்கெடுத்தாலும் இந்த ஆகமங்களை இழுத்து நம்மை அல்லல்படுத்தும் ஆத்மாக்களுக்கு மட்டும் குறைவே இல்லை.

இந்த ஆகமம் தொடர்பாகப் பல அவலமான அனுபவங்கள் எனக்கு உண்டு. திருமடத்துத் தலைவர்களிலிருந்து தத்துவ ஆசான்கள், ஆய்வாளர்கள், மொழி அறிஞர்கள், சிவாச்சாரியார்கள் எனப் பலரிடமும் ஆகம உரையாடல்களின்போது கிடைத்த அனுபங்கள் அவை. அவற்றை எல்லாம் அனைவரும் அறியுமாறு பகிர்ந்துகொண்டு மக்களின் நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளை இற்றுப் போகச் செய்வது நியாயமாகாது. நெஞ்சு பொறுக்குதில்லையே என்று குமுறிய காலங்களில்கூட அந்த அனுபவங்களை எழுத்து வடிவில் இறக்கி வைக்க விழைந்தேன் இல்லை. எல்லா உண்மைகளையும் எல்லாரிடமும் எந்தக் காலத்திலும் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. காரணம் அந்த உண்மைகள் கசப்பானவை. என்றாவது ஒரு நாள், என்னினும் துணிந்தவர் ஒருவர் இந்த உண்மைகளை எல்லாம் ஊருக்கு உரைக்க முன்வரக்கூடும். ஒருவேளை, கோயில் ஆய்வுகளை இத்துடன் நிறுத்திவிடலாம் என்று முடிவெடுக்கும் நாள் என்றேனும் எனக்கு அமையுமானால், நானேகூட அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இயலுவதே.

வாருணி, 1985ல் என் ஆய்வு வாழ்க்கையில் மறக்கமுடியாத ஓர் ஆண்டாக அமைந்தது. அதுநாள்வரை கோயில்களைப் பார்த்த என் பார்வையில் இந்த ஆண்டு சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பார்த்துப் பரவசப்பட்டு, இருப்பதை எடுத்துரைப்பதே பணி எனக் கருதியிருந்த என்னிடம் கோயில்கள் உரையாடத் தொடங்கிய ஆண்டு 1985. ஆய்வு என்ற சொல்லின் முழு வீச்சையும் அந்தச் சொல்லுள் உறைந்திருக்கும் பேரின்பத்தையும் உணரத் தொடங்கிய ஆண்டும் 1985தான். இந்த ஆண்டில் வாணிக்காகப் படிக்க நேர்ந்த நூல்கள் பல புதிய தடங்களில் என்னைப் பயணப்பட வைத்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன வரலாற்று வரைவியல் பற்றிய நூல்கள். வரலாறு அறிவியல் பாடமே என்று உணருமாறு செய்த அந்நூல்கள், சான்றுகள் குறித்த தேடலைப் பரவலாக்கின. இரண்டாம் நிலைச் சான்றுகள் நம்பிக்கைக்குரியன அல்ல என்பதை மூன்றாண்டு ஆய்வு வாழ்க்கை கற்றுத் தந்திருந்தபோதும் முதன்மைச் சான்றுகளைச் சுற்றி ஆய்வு வளர வேண்டிய நுட்பங்களை வரைவியல் நூல்களே முன்வைத்து முதன்மைப்படுத்தின.

சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் வரலாற்றுத்துறை இந்த வகையில் நான் வளரப் பெருந்துணையாக அமைந்தது. அத்துறையின் நூலகத்திலிருந்துதான் வரைவியல் நூல்களை வாணி பெற்றுத் தந்தார். அப்போது துறைத் தலைவியாக இருந்த முனைவர் இராஜலட்சுமியும் துறைப் பேராசிரியர்களாக இருந்த கோ. வேணிதேவி, சீ. கீதா இவர்களும் வாணியின் ஆய்விற்குத் துணைநின்று ஊக்குவித்தமையைக் குறிப்பிடவேண்டும். பேராசிரியர்கள் கோ. வேணிதேவி, சீ. கீதா இவர்களுடன் என் நட்பு வளரவும் வாணியின் அறிமுகமே காரணமாக அமைந்தது. வாணியின் வருகைக்கு முன் கி. ஆ. பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்களே என் கண்டுபிடிப்புகளை அருங்காட்சியகங்களில் சேர்க்கும் பணிகளுக்குத் துணையிருந்தனர். பேராசிரியர் சீ. கீதா, நாட்டுநலப் பணித்திட்ட அலுவலராகவும் இருந்தமையால் எங்கள் அறிமுகம் பல கோயில்களை சீரமைக்கவும் வழிபாட்டிற்குக் கொணரவும் பாதையமைத்தது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.