http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 40
இதழ் 40 [ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். சென்ற மாதம் முனைவர் இரா.கலைக்கோவனின் திரும்பிப் பார்க்கிறோம் 11 கட்டுரையில் வைத்திருந்த வேண்டுகோளை ஏற்று, பஞ்சவன்மாதேவி ஈசுவரத்தின் கல்வெட்டை மறைத்திருக்கும் கட்டுமானத்தை அகற்ற நிதியுதவி அளிக்க முன்வந்த வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதழ் வெளியான மறுநாளே முழுச்செலவையும் தாமே ஏற்பதாகக் கரூரைச் சேர்ந்த திரு. கே.என்.பாலுசாமி அவர்கள் தெரிவித்தபோது, வரலாறு.காம் உண்மையான ஆர்வலர்களை வாசகர்களாகப் பெற்றிருக்கிறது என்ற மனநிறைவு ஏற்பட்டது. அவருக்குத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் ஏற்கனவே நன்றி தெரிவித்திருந்தாலும், மீண்டும் எத்தனைமுறை இங்கே குறிப்பிட்டுப் பாராட்டினாலும் தகும் என்று கருதி இங்குப் பதிவு செய்கிறோம். ஒருவரே முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டதால், மற்ற வாசகர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாது போயிற்று. இருப்பினும், தமிழகம் முழுக்க எண்ணற்ற கோயில்கள் பஞ்சவன்மாதேவி ஈசுவரத்தைக் காட்டிலும் மோசமான நிலையில் உள்ளன. அவற்றிற்கெல்லாம் ஆர்வலர்களது சேவை நிச்சயம் தேவை. தேவைப்படும்போது மீண்டும் தொடர்பு கொள்கிறோம். ஆகஸ்டு 2007 மாத வரலாறு.காம் இதழ் வழி வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான குடந்தைவாழ் எங்கள் நண்பர் திரு.சு.சீதாராமன் அவர்களின் மேற்பார்வையில் கல்வெட்டை மறைத்திருந்த கான்கிரீட் மற்றும் கருங்கல் கட்டுமானத்தை அகற்றும் பணி முழுவதுமாக முடிந்து, கல்வெட்டு நல்ல நிலைமையில் மீட்கப்பட்டிருக்கிறது என்ற நல்ல செய்தியையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இல்லாவிடில், சோழமாமன்னர் இராஜேந்திர சோழர் தம் சிற்றன்னைக்கு எடுப்பித்த பள்ளிப்படைக் கோயில் என்ற தகவல் பொதிந்த கல்வெட்டு எதிர்காலத் தலைமுறைகள் கண்டு மகிழ முடியாவண்ணம், காட்டுமன்னார்கோயில் எனப்படும் உடையார்குடியில் இருந்த ஆதித்தகரிகாலன் கொலை தொடர்பான கல்வெட்டு திருப்பணியாளர்களால் அழிக்கப்பட்டதுபோல் ஆகியிருக்கும். இப்பணியைக் காலத்தே செய்து முடித்த திரு. பால.பத்மநாபன், திரு.சீதாராமன் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு வரலாறு.காம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. வரலாற்றுப் புதையல்களான கோயில்கள் அழியாமல் காப்பாற்றி உதவுவது ஒருபுறமிருந்தாலும், அப்புதையல்கள் மக்களுக்குப் பயன்படும் வண்ணம் கல்வெட்டுகள் என்னும் தகவல் சுரங்கங்களைத் தோண்டும் வரலாற்றாய்வாளர்களுக்கும் உதவ வேண்டியது அவசியம். சென்னையைச் சேர்ந்த திரு. தேவமணி ரஃபேல் அவர்கள் ஒருமுறை, 'சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டு எப்படிச் சிவபெருமானுக்கே செய்தது போன்றதோ, அதுபோல் வரலாற்றாய்வாளர்களுக்குச் செய்யும் உதவி வரலாற்றுக்கே செய்தது போலாகும்' என்று கூறினார். அதுபோல் அவர் ஆய்வாளர்களுக்கு உதவியும் இருக்கிறார். ஆனால் எந்த ஆய்வாளரும் தமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு உதவச்சொல்லிக் கேட்பதில்லை. அனைத்தும் அப்போதைய ஆய்வு தொடர்பானதாகவே இருக்கும். தமிழகமெங்கும் இருக்கும் வரலாற்று ஆர்வலர்கள் படித்துப் பயன்பெற வேண்டுமென்பதற்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணித்து, சொத்துக்களையெல்லாம் விற்று, வரலாற்று நூல்களைத் தனது சேகர் பதிப்பகம் மூலம் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார் திரு. வெள்ளையாம்பட்டு சுந்தரம். அவருக்குத் தமது நூல்களைத் தந்து உதவுபவர்கள் வரலாற்றாய்வாளர்கள். வரலாற்றாய்வாளர்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் ஆர்வலர்கள். மண்ணிலிருந்து செடி வளர்ந்து, பூப்பூத்துக் காய்காய்த்து விதையை மீண்டும் மண்ணுக்கே தருவதுபோல் இதுவும் ஒரு சுழற்சியே. இடையில் ஒன்று நின்றாலும் தொய்வு ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுவர். ஆய்வு என்பது வெறும் புத்தகம் பதிப்பிப்பது மட்டுமே அல்ல. ஆய்வு செய்யும் கோயில்களுக்குப் பலமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து தங்க வேண்டியிருக்கும். தங்குமிடம் கோயிலின் அருகில் இல்லாவிடில் அங்கு சென்றுவரப் போக்குவரத்துச் செலவு என நீண்டுகொண்டே போகும். திருச்சிராப்பள்ளியிலிருந்து மாமல்லபுரம் சென்று தர்மராஜரதம் எனப்படும் அத்யந்தகாமத்தை ஆய்வு செய்வதற்கு முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களுக்கு ஆய்வை முடிக்க ஆன காலம் சுமார் எட்டு ஆண்டுகள். எட்டு ஆண்டுகளுக்கு ஆன செலவு எத்தனை தெரியுமா? சுமார் இரண்டு இலட்சம் ரூபாய். ஒரு ஆய்வுக்கே இவ்வளவு என்றால், கடந்த 25 ஆண்டுகளாக எத்தனை செலவு ஆகியிருக்கும் என்று வாசகர்கள் ஊகித்துக்கொள்ளலாம். திரு. குடந்தை சேதுராமன் போன்ற தொழில் வணிகப் பின்புலம் கொண்ட ஆய்வாளர்கள் வேண்டுமானால் முழுக்க முழுக்கத் தாங்களே செலவு செய்து மற்றவர்களுக்கும் அன்பளித்து ஆய்வு மேற்கொள்ளலாம். ஆனால் எல்லோராலும் அது முடியாது. இன்று வரலாற்றாய்வாளர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் தொல்லியல் துறை அல்லது ஆசிரியப்பணியில் இருப்பவர்கள்தாம். கிடைக்கும் சம்பளம் குடும்பச் செலவுகளுக்கே சரியாக இருக்கும் நிலையில், அதிலிருந்து ஆய்வுக்குப் பணம் ஒதுக்குவதென்பது சற்று சிரமமான காரியம். குடும்பத்தினரும் ஆய்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒத்துழைப்புத் தருவார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. இவற்றுக்கிடையில், சில தொழிலதிபர்களும் பத்திரிகை நிறுவனர்களும் ஆய்வுக்குப் பொருளுதவி செய்கிறார்கள். ஆனால், அதற்கான பண்டமாற்றாக அவர்கள் கேட்பது நூலாசிரியர் எனும் பட்டத்தை அல்லது பக்கத்திற்குப் பக்கம் அவர்களது முகஸ்துதியை. உண்மையான ஆய்வு முடிவுகள் மட்டுமே அழியாப்புகழ் பெறவேண்டும் என்று எண்ணும் எந்த ஆய்வாளரும் இதற்கு உடன்படமாட்டார்கள். அதிகபட்சமாக முகவுரையிலும் சமர்ப்பணத்திலும் பின்னட்டையிலும் மட்டும் இவர்களைப் புகழலாம். இவர்களை விட்டால் வேறு வழியில்லாமல், இப்படியாவது வரலாற்றுத் தரவுகள் மக்களைச் சென்றடைந்தால் சரி என்று எண்ணும் உண்மையான ஆய்வாளர்களும், இவர்கள் புகழ்பாடுவதன் மூலம் வேறு பல லாபங்களை அடையும் பொருட்டு சமரசம் செய்து கொள்ளும் சந்தர்ப்பவாத ஆய்வாளர்களும் இருப்பதால்தான் எல்லா ஆய்வாளர்களிடமும் இத்தகைய போக்கை எதிர்பார்க்கிறார்கள். எனவே, வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் உதவி செய்ய ஆரம்பித்தாலே, ஆய்வாளர்கள் தம்மை மட்டுமே நம்பி இல்லை என்று உணர்ந்து திருந்துவார்கள். அறிவியல், கணிப்பொறி போன்ற மற்ற எந்தத் துறைகளை விடவும், வரலாற்றில் ஆர்வம் உடையவர்களே எண்ணிக்கையில் அதிகம். பெரும்பாலும் மற்ற துறைகளின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்கள் அவ்வத்துறையிலேயே பணியாற்றுபவர்களாகவே இருப்பர். ஆனால், வரலாற்றின் மீது எல்லாத் தரப்பினரும் ஆர்வம் கொண்டுள்ளனர். அனைவரும் உதவ முன்வந்தாலே, நிறைய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும். வரலாறு.காம் ஆசிரியர் குழுவில் யாருமே முழுநேர வரலாற்றுப் பணியில் இல்லை. படிப்பவர்களும் அனைவருமே வரலாற்றை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் என்று சொல்லமுடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக, 'ஆயிரம் ரூபாய்த் திட்டம்' என்ற திட்டத்தை ஆரம்பித்து, ஒவ்வொருவரும் மாதம் 1000 ரூபாயைச் சேமித்து வைக்கிறோம். ஐந்துபேர் ஆறு மாதங்கள் சேமித்தால் வரும் 30000 ரூபாயைக் கொண்டு ஒரு வரலாற்று நூலைப் பதிப்பித்து, ஆய்வாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். இன்றுவரை இது வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், ஐந்துபேரால் எத்தனை ஆய்வாளர்களுக்கு இப்படி உதவமுடியும்? வாசகர்களும் இதுபோல் சிறுசிறு குழுக்களாக இணைந்து செயல்பட்டால், எத்தனையோ ஆய்வாளர்களின் ஆய்வுகள் நூலாக மலரும். பாதியில் நின்று போன ஆய்வுகள் மீண்டும் தொடரும். சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்ற நிலை மாறும். ஆர்வலர்களின் உதவி பொருளுதவியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உடலுழைப்பாகவோ, கள ஆய்வுப் பணிகளை எளிதாக்குவதாகவோ, தமக்குத் தெரிந்த கோயில் ஊழியரிடம் பரிந்துரைத்து, அனுமதி மற்றும் ஒத்துழைப்புப் பெற்றுத் தருவதாகவோ கூட இருக்கலாம். தேவை உதவும் மனம் மட்டுமே. காலத்தை மீறிக் கனவுகண்டு, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பலமுறை நிரூபித்த மீசைக்காரக் கவிஞன் வேறு எதற்கோ கூறியது இதற்கும் பொருந்தும். நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்! இவையனைத்தும் இருந்தாலே, வரலாற்றாய்வுலகம் தலைநிமிர்ந்து வாழும்!! தமிழினம் தலைநிமிர வாழ்த்தும்!! அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |