http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 40
இதழ் 40 [ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
'பிறர்க்கொன்று ஈதல் சிறந்தது. அப்படித் தரப் பொருள் வேண்டும். பொருள் பெற உழைக்க வேண்டும். அதனால், வா, நெடுந்தொலைவு சென்றாவது பொருளீட்டி வருவோம்' என்று ஒரு தலைவனிடம் உரையாடி அழைத்தது அவன் உள்ளம்.
'வான் அளாவ வளர்ந்து நிற்கும் இகணை மரத்தின் நெருங்கிய இலைகளைப் போல இருண்டு தாழ்ந்த கூந்தலையும் வண்டுகள் தொடர்ந்து மொய்த்துத் தேன் அருந்துமாறு புதிதாய்ப் பூத்த மலர்களால் ஆன மாலையையும் உடைய என் காதலியை விட ஈதல் சிறந்தது என்று கூறி, அதற்காகப் பொருள் தேட என்னை அழைக்கிறாயே, உள்ளமே, நீ அழைத்துச் செல்லவிருக்கும் பாதை எப்படிப்பட்டது தெரியுமா?' என அந்த உள்ளத்திடம் கேட்ட தலைவன் பாதையின் பெருமைகளைப் பேசுகிறான். 'விசிலடிப்பது போன்ற ஒலியுடன் சென்று தாக்கும் கூர்அம்புகளை உடைய வெட்சி மறவர் விடியல் பொழுதில் பசுக்களைக் கவர்ந்து சென்ற அச்சம் தரும் கொடிய பாதை! அந்தப் பாதையில் பசுக்களைப் பறிகொடுத்தவர்கள், கவர்ந்து சென்றவர்களுடன் போரிட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த அந்த உத்தமர்கள் எத்தகையோர் தெரியுமா? முள்ளும் கற்களும் நிரம்பிய நெடும் பாதையில் நடந்த துயரால் நடை ஓய்ந்து நின்று, வலியின் துன்பத்தால் கண்ணீர் சோர நிற்கும் கன்றுகளின் கண்களில் இருந்து வழியும் நீரைத் துடைத்து அவற்றின் பால் அன்பு காட்டும் இரக்க மனம் உள்ளவர்கள்! பசுக்களைக் காப்பாற்றும் போரில் இந்த நல்லவர்கள் உயிரிழந்தார்கள். அவர்தம் வீரத்தையும் அன்பையும் போற்றிய உற்றாரும் உறவினரும் அம்மறவர்கள் மாய்ந்த இடத்தில் நடுகல் எடுத்தனர். இறந்தவர்தம் பெயர்களும் அவர்தம் பெருமையும் பொறிக்கப்பட்ட அந்த நடுகற்களை வழிபட்டவர்கள் அவற்றின் மேல் மயில் தோகைகளைப் பொருத்தியுள்ளனர். இறந்தவர் வீரம் சுட்டுமாறு அந்நடுகற்களைச் சுற்றி வேல் கம்புகளும் கேடயங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்சி அந்தப் பாதையையும் சுற்றுப்புறத்தையும் போர்ப் பாசறை போல மாற்றியுள்ள நிலையில், உள்ளமே, இந்தப் பாதையில் போகலாம் என்கிறாயே, நியாயம்தானா? இந்தப் பாதையில் சென்று பொருள் ஈட்டுவதும் அதன் வழி ஈவதும் என் காதலியினும் முக்கியமானவைதானா?' தலைவன் கேள்விகளுக்கு உள்ளம் என்ன மறுமொழி உரைத்தது என்பதை மதுரை மருதன் இளநாகனார் (அகம் 131) கூறவில்லை. ஆனால், இந்தப் பாடல் சங்கக் காதலர்களின் உள்ளம் காட்டி, வீரர்தம் ஈரநெஞ்சம் காட்டி, அக்கால மரபுகளையும் அல்லவா படம்பிடித்துள்ளது. பதினைந்து அடிகளுக்குள் எத்தனை வரலாற்றுத் தரவுகள்! பாடல் 131. தலைவன் கூற்று பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது திணை : பாலை இயற்றியவர் : மதுரை மருதன் இளநாகனார் 'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என வீளை அம்பின் விழுத் தொடை மழவர் நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் வெருவரு தகுந கானம், 'நம்மொடு வருக' என்னுதி ஆயின், வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |