http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 40
இதழ் 40 [ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, மதுரை மாவட்டக் குடைவரைகள் நூல் முடிவடைந்துவிட்டது. இந்த வார இறுதியில் அச்சுக்குச் செல்கிறது. அநேகமாக நவம்பர் இறுதிக்குள் நூல் வெளிவந்துவிடும். இந்த நூலின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக (2007) அக்டோபர் 6, 7ம் நாட்கள் மாங்குளம் சென்றிருந்தோம். மாங்குளத்திற்குச் சற்று முன்பாக உள்ள மீனாட்சிபுரத்தை ஒட்டியுள்ள ஓவாமலையில் ஐந்து குகைத்தளங்களும் ஆறு பழந்தமிழ்க் கல்வெட்டுகளும் உள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டாய்வாளர் நண்பர் திரு. வெ. வேதாசலம் எங்களுடன் துணைக்கு வந்திருந்தார். பயணம் மிகவும் இனிமையானதாக அமைந்தது. பக்கத்து ஊரிலிருந்த நிறைவடையாத குடைவரையையும் பார்வையிட்டோம். இவையெல்லாம் முடித்து மதுரை திரும்ப மணி மூன்றரையாகிவிட்டது. மாலை 5 மணியளவில் யானைமலை மேலுள்ள சமணப் படுக்கைகளையும் பழந்தமிழ்க் கல்வெட்டையும் பார்வையிட்டோம். மலை மேலிருந்து மதுரையைப் பார்த்த அநுபவம் மறக்கமுடியாதது. மறுநாள், பரங்குன்றம் சென்று சேட்டைத்தேவி, இராவண அனுக்கிரகர், யானைத்திருமகள் சிற்பத் தொகுதிகளைத் தூய்மை செய்து படங்கள் எடுத்தோம். மூன்றுமே தூய்மைக்குப் பிறகு மின்னின. நூல் வரும்போது, படங்களைப் பார்! தமிழ்நாட்டுக் கலை வரலாற்றிற்குப் பரங்குன்றத்துப் புதையலைப் புதிய பக்கங்களாய் இறைவன் எங்கள் வழிப் பதிவு செய்திருப்பதை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்து பூரிக்கின்றோம். தேடல் தளர்வதேயில்லை. அறிவியல் அடிப்படையில் அமைந்த ஆய்வுகள் புதியன பெறாமல் முடிவதேயில்லை. மதுரை மாவட்டக் குடைவரைகள் ஆய்வு இந்த உண்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதை யாரே மறுக்கமுடியும்! வாருணி, என் இளவல் பேராசிரியர் மா. ரா. அரசுவைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். என் கட்டுரைகள் பலவாக வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாகச் செய்யுமாறு 1984ன் தொடக்கத்திலிருந்தே அவர் என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதே போல், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் உரிமையாளர் திரு. இரா. முத்துகுமாரசாமியும் செந்தமிழ்ச் செல்வியில் வெளியாகியிருந்த கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கித் தருமாறு கேட்டிருந்தார். இந்த இருவருடைய அன்பே என்னை நூல் உருவாக்கத்தில் முனைய வைத்தது. அது நாள் வரை வெளியாகியிருந்த பதினாறு கட்டுரைகனை ஒன்றிணைத்து, மீண்டும் அவை அனைத்தையும் படித்துத் திருத்தி நூலாக்கினேன். 1. கலை வளர்த்த திருக்கோயில் (மானம்பாடி நாகநாதசாமி கோயில்) - தினமணி சுடர் 2. அப்பர் பாடிய ஆறை வடதளி - செந்தமிழ்ச் செல்வி 3. தழுவக் குழைந்த இறைவனும் தவமிருந்த தேவியும் - தினமணி கதிர் 4. குமரன் குடியிருக்கும் குமார வயலூர் - மாலை முரசு 5. பாழடைந்து கிடக்கும் பழையாறைத் திருக்கோயில் - தமிழ்ப் பொழில் 6. சோழபுரத்துக் கோயில்கள் - தினமணி கதிர் 7. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் - திருக்கோயில் 8. இன்கருப்பூர் விருப்பன் - திருக்கோயில் 9. புதையுண்ட தலைநகரும் புகழ்விளங்கும் திருக்கோயிலும் - மாலைமுரசு 10. உமைக்கு நல்லவன் - திருக்கோயில் 11. திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்கோயில் 12. கடம்பூர் கரக்கோயில் - தினமணி கதிர் 13. திருமூக்கிச்சுரம் - செந்தமிழ்ச் செல்வி 14. அழிந்து கொண்டிருக்கும் ஆறை மேற்றளி - கலைமகள் 15. வெற்றித் திருமகன் - கங்கைகொண்ட சோழன் விழா மலர் 16. கோழியூர்க் கோவலர் - திருக்கோயில் இந்தப் பதினாறு கட்டுகளும் அடங்கிய நூலிற்குக் 'கலை வளர்த்த திருக்கோயில்கள்' என்று பெயர் சூட்டப்பட்டது. நூல் 1984 டிசம்பரில் அச்சாகி 1985 பிப்ருவரியில் என் கைகளுக்குக் கிடைத்தது. அந்த நூலின் முதற் படியைப் பெற்ற நாள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத திருநாளாகும். யாருக்குமே தம் எழுத்துக்களை அச்சில் பார்ப்பது மகிழ்வளிக்கும். அதுவும் அந்த அச்சு வடிவம் நூலாக அமையும்போது கேட்கவே வேண்டாம். உள்ளத்தின் களிப்பைத் துணைவியுடன் பகிர்ந்து கொண்டேன். என் வாழ்வரசி என்னை நன்கறிந்தவர். அதனால் எனக்கு இணையாக அவரும் மகிழ்ந்து பெருமிதப்பட்டார். 1984ல் வெளியான இந்த நூலைத் தமிழ்நாடு அரசின் பரிசுக் குழுவிற்கு 1985ன் இடையில் பதிப்பாளர் அனுப்பி வைத்தார். பரிசுக் குழுவிற்கு அனுப்பும் விண்ணப்பத்தாளில் கையெழுத்திட்டதும் அதை நான் மறந்து போனேன். 1986 ஜனவரி 12ம் நாள் தமிழ்நாடு அரசிடமிருந்து எனக்கொரு தந்தி வந்தது. அதில் என் நூல் முதல் பரிசு பெற்றிருப்பதாகவும் 15. 1. 1986 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் அரசு பரிசளிப்பு விழாவில் தவறாமல் கலந்து கொண்டு பரிசு பெற்றுக் கொள்ளுமாறும் கூறப்பட்டிருந்தது. தந்தியைப் படித்த என் வாழ்வரசி மகிழ்ச்சிப் பெருக்குடன் வாழ்த்தினார். அடுத்த நாள் செய்தியிதழ்களிலும் இச்செய்தி வெளியாகியிருந்தது. நானும் என் துணைவியும் பிள்ளைகளுடன் சென்னை சென்றோம். என் முதல் நூலுக்கே பரிசு கிடைத்ததில் அளவற்ற மகிழ்வு ஏற்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு என் தமக்கையர், தம்பி, அண்ணன் அனைவரும் வந்திருந்தனர். குடும்ப விழாவாக அந்நிகழ்ச்சி அமைந்துவிட்டது. அங்குதான் காவல்துறை அதிகாரி திருமதி திலகவதியை முதன்முறையாகச் சந்தித்தேன். அவருடைய நூலொன்றும் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இருவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்! அப்போது முதல்வராக இருந்த மாண்புமிகு எம். ஜி. இராமச்சந்திரன் பரிசளித்தார். மாண்பமிகு நிதியமைச்சர் இரா. நெடுஞ்செழியன் என்னை முதல்வருக்கு அறிமுகப்படுத்தினார். தந்தையார் பெயரைக் கேட்டதுமே உளம் பூரித்த முதல்வர் என் கைகளை முத்தமிட்டார். ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்துப்போனேன். அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து விடுபடாமலேயே கீழிறங்கினேன். எல்லோரும் பாராட்டினார்கள். நான் பெற்ற பரிசைவிட முதல்வரின் அந்த அன்பான முத்தமே அன்றைய விழாவின் நாயகனாக என்னை உயர்த்திவிட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருந்த நிலையிலும் பரிசுகளைத் தருவதற்காக விழாவில் கலந்துகொண்டு எழுத்தாளர்களைச் சிறப்பித்த அந்தப் பெருந்தகையின் பேருள்ளத்தை என்றுமே மறக்கமுடியாது. 1986 ஜனவரியில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறையில் இருந்து முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் மூவர் என்னைக் காணவந்தனர். கோயில்களைப் பற்றி ஆய்வு செய்ய விழைந்த அவர்களுள் ஒருவராகவே மு. நளினி எனக்கு அறிமுகமானார். அவருடன் அவருடைய வகுப்புத் தோழிகள் வளர்மதி, சரசுவதி இருவரும் வந்திருந்தனர். மூவருக்குமே கோயில்களைப் பற்றி ஏதும் தெரியாது என்றாலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. மூன்று மாத கால அளவில் மூன்று ஆய்வேடுகள் என்பது சற்றுத் துன்பமானதுதான் என்றாலும் அவர்கள் ஆர்வத்தைக் கருதி ஒப்புக் கெண்டேன். நளினி திருஎறும்பியூர்க் கோயிலையும், வளர்மதி குமார வயலூர் கோயிலையும் சரசுவதி நாங்கள் அப்போது ஆய்வுசெய்து கொண்டிருந்த அழுந்தூர்க் கோயிலையும் ஆய்வுத் தலைப்புகளாகக் கொண்டனர். வயலூர்க் கோயில் நான் ஏற்கனவே ஆய்வு செய்த இடமாதலால் வளர்மதிக்கான பணி எளிதாக இருந்தது. அழுந்தூர் எங்கள் முனைப்பான ஆய்வில் அப்போது இருந்த இடம் என்பதால் அங்கும் பணிச்சுமை மிகுதியில்லை. எறும்பியூர் நான் ஆய்வு செய்யாத களம். அதனால், அங்குதான் நாங்கள் அடிக்கடி செல்ல வேண்டியதாயிற்று. நளினி கோயில்களைப் பற்றி ஒன்றும் அறியாதவராக இருந்த போதும் ஆர்வமும் துடிப்பும் உள்ளவராக இருந்தமையால், எது சொன்னாலும் அவரால் உடனே பதிவு செய்துகொள்ள முடிந்தது. ஏறத்தாழ இருபது முறையாவது அந்தக் கோயிலுக்குச் சென்றிருப்போம். ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஆய்வு முடிந்ததும் குறைந்தது அரைமணி நேரமாவது அங்கேயே அமர்ந்து பார்த்தவற்றைப் பற்றி விரிவான அளவில் பேசுவோம். மூவருமே அதிகமாகக் கேள்விகள் கேட்கமாட்டார்கள். தெரியாத துறை என்பதால் ஒருவகையான அச்சம் அவர்களுக்கு இருந்தது. அதைக் களைய நான் அவர்களைக் கேள்வி கேட்கத் தொடங்கினேன். ஆசிரியர் மாணவர் உறவாக இல்லாமல் நண்பர்களாக இயங்கினோம். என்னுடய அந்த அணுகுமுறை அவர்கள் தயக்கத்தை உடைத்தது. ஒரு மாத அளவிற்குள் மூவருமே இயல்பாகிவிட்டனர். ஆனாலும் அந்த மூவருக்குள் அடிக்கடி கேள்விகள் கேட்டுச் சிந்திக்க வைத்தவர் நளினிதான். எறும்பியூரில் கண்டபாதச் சிற்பங்களைப் பார்த்தபோது வியந்தேன். புள்ளமங்கை கண்முன் நிழலாடியது. மகரதோரணச் சிற்பமாக ஆதித்தர் கால ஆடவல்லானைக் கண்டறிந்தோம். மலையேறும் பாதையின் தொடக்கத்தில் இருந்த அரியண்ண உடையார் கல்வெட்டு, கோயிலின் சுற்றுச் சுவரிலிருந்த மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டு இவை எங்கள் முயற்சியால் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்தன. நளினி உழைக்க அஞ்சாதவர். ஆற்றல் மிக்கவர். தேவை ஏற்பட்டால் எந்தச் சூழலிலும் எத்தகு உழைப்பையும் அவரிடமிருந்து பெறமுடியும். ஊரகப் பகுதியிலிருந்து வந்தவர் என்பதாலும் எளிமையான குடும்பச் சூழலில் இருந்தவர் என்பதாலும் அளவற்ற ஆற்றலாளராய் அவர் விளங்கினார். அவருடைய துணிவும் பலமுறை என்னை வியப்பிலாழ்த்தியுள்ளது. நான் தயங்கிய இடங்களில்கூட அவர் தயங்காமல் பணி செய்தமை கண்டபோது அவர்மீது எனக்கிருந்த மதிப்பு பன்மடங்காக உயர்ந்தது. இந்தத் துறையிலேயே தொடர்ந்து பணியாற்றினால் மிக விரையில் அவர் உயர்ச்சியடைவார் என்று அப்போதே நினைத்தேன். எறும்பியூர்க் கோயிலில் இருக்கும் நிலவறைகளைக் கண்டறிந்ததும் அவர்தான். அந்த நிலவறைகளின் இருப்பு கோயிலாருக்கே தெரியாமல் இருந்தது. நானும் நளினியும் அந்த நிலவறைகளை முழுமையாக ஆய்வு செய்து படங்களுடன் 'இந்தியன் எக்ஸ்பிரஸில்' கட்டுரை வெளியிட்டோம். அந்தக் கட்டுரை வெளியானபோது பல அறிஞர்கள் எறும்பியூர் வந்து நிலவறைகளைப் பார்த்து வியந்தனர். நண்பர் அப்துல் மஜீது அந்த நிலவறைகளைக் காண விழைந்ததால் அவருடன் ஒரு முறை அங்குச் சென்றோம். அவரும் நளினியைப் பெரிதும் பாராட்டினார். தம்முடைய முதல் ஆய்விலேயே புதிய கல்வெட்டுகள், புதிய கட்டுமானங்கள் இவற்றைக் கண்டுபிடிப்பதென்பது ஓர் ஆய்வாளருக்கு எத்தனை மகிழ்வு தரும் என்பதை நானறிவேன். அதனால் நளினியின் கண்டுபிடிப்புகளை அவர் பெயரிலேயே நாளிதழ்களில் பதிவுசெய்தேன். அவர் பெரிதாக மகிழ்வார் என்று எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வளர்மதி, சரசுவதி, பேராசிரியர் முனைவர் சீ. கீதா, துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் கோ. வேணிதேவி இவர்கள் அனைவருமே பாராட்டியபோதும் நளினி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பெண்ணிற்குப் புகழின் அருமை தெரியவில்லையோ என்றுகூட ஐயுற்றேன். ஆனால், பழகப் பழகத்தான் நளினி இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவருடைய இந்த இருபதாண்டு வரலாற்றாய்வுப் பயணத்தில் முன்னூறு முறையாவது அவருடைய பெயர் நாளிதழ்களில் வந்திருக்கும். ஆனால், ஒரு முறைகூட அதற்காக அவர் பூரித்து நான் பார்த்ததில்லை. 'கண்டறிவது என் கடமை அதை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ளவே செய்தியிதழ்கள் தகவல் வெளியிடுகின்றன. இதில் என் பெயர் பதிவாவது கண்டு பூரிக்க என்ன இருக்கிறது' என்ற உளப்பாங்கு என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதது. நளினி முதுகலையிலேயே அந்த உள்ளம் வாய்த்திருந்தார். முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வு மாணவிகளுக்கு நான் நெறியாளராக இருந்திருக்கிறேன். என் நற்பேறோ என்னவோ எனக்கு வாய்த்த மாணவிகள் எல்லோருமே ஏறத்தாழ நளினியின் உளப்போக்கே பெற்றிருந்தனர். என்றாலும் நளினி அவர்களுக்கெல்லாம் பல படி மேலாக, எதையும் கருதாத தொண்டுள்ளம் பெற்றிருந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மாலை மலர் இதழில் ஒரு முறை நளினியை நேர்முகம் காண வந்திருந்தனர். நிறைய மாணவிகள் கல்வெட்டுத் துறைக்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்பியதால் நளினி அந்த நேர்முகத்தை மிக விரிவாக செய்திருந்தார். களப்பணிகளின் போது எடுத்த படங்கள் சிலவும் செய்தியாளர் பெற்றுப் போயிருந்தார். அந்த நேர்முகம் எந்த நாள் வெளிவருகிறது என்பதைச் செய்தியாளர் கூறினாரா என்று நளினியிடம் கேட்டேன். 'கூறவில்லை' என்றர். 'நீங்களாவது கேட்டிருக்கலாமே' என்றேன். 'நேர்முகம் தந்ததோடு என் கடமை முடிந்துவிட்டது. அது என்று வந்தால் என்ன? வரும் நாளில் மக்கள் படிக்கப் போகிறார்கள்' என்று அவர் மறுமொழி சொன்னபோது அதிர்ந்து போனேன். ஒரு நாளாவது தம்முடைய பெயர் செய்தியிதழ்களில் வெளிவராதா என்று ஏங்குவார் வாழும் காலத்தில் இப்படியொரு பெண்ணா என்று வியந்தேன். அந்த வியப்பு இன்றளவும் தொடர்கிறது. சரசுவதிக்கான அழுந்தூர் ஆய்வு குறிப்பிடத்தக்கது. திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் சிராப்பள்ளியிலிருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அழுந்தூர். அழுந்தியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் இவ்வூரில் பாழடைந்த கோயில் ஒன்றிருப்பதாகத் தகவல் தந்தவர் அங்கு அரிசி ஆலை வைத்திருந்த திரு. சத்தியநாராயணன். அவருடைய வழிகாட்டலில் நானும் என் குழுவினரும் அழுந்தூர் சென்றிருந்தோம். மேலூர்ச் சாலையிலிருந்து வலப்புறம் பிரியும் மண் சாலையில் 2 கி. மீ. வரை காரில் செல்லலாம். பிறகு அங்கிருந்து வயல் வரப்புகளிலும் முள்காடுகள் வழியும் 1 கி. மீ. நடந்துதான் கோயிலை அடையவேண்டும். கோயிலைச் சுற்றி எப்புறத்தும் ஏறத்தாழ ஒன்றரைக் கிலோமீட்டருக்குக் குடியிருப்புகளே இல்லாமல் இருந்த காலம் அது. கோயிலுக்கு விளக்குப் போடுவதாகச் சொல்லிக்கொண்டு கோயில் நிலங்களின் விளைவை அநுபவித்துக் கொண்டிருந்த ஒருவரின் குடிசை மட்டுமே கூப்பிடு தொலைவில் இருந்த ஒரே வாழிடம். கல்வெட்டுகளில் வரகுணஈசுவரம் என்றழைக்கப்படும் அந்தக் கோயிலில் இருந்து பல கல்வெட்டுகளைப் படியெடுத்தோம். அவற்றுள் 'பிச்சியார் மடம்' பற்றிக் குறிப்பிடும் துண்டுக் கல்வெட்டு ஒன்றும் அடக்கம். கல்வெட்டுக் கண்டுபிடிப்புப் பற்றி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டதும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறைப் பேராசிரியர் புலவர் செ.இராசு சிராப்பள்ளி வந்தார். அழுந்தியூருக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினார். அவரும் நானும் சென்றபோது அவருடைய அநுபவம் எனக்குத் துணையானது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. வி. ஐ. சுப்பிரமணியம் 'பிச்சியார் மடம்' பற்றி ஆர்வம் காட்டியதாக செ. இராசு குறிப்பிட்டார். என்னைத் தஞ்சாவூருக்கு அழைத்தார். அவர் அழைப்பை ஏற்று நானும் தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்று துணைவேந்தரைச் சந்தித்தேன். புதிய கோயிலையும் கல்வெட்டுகளையும் கண்பிடித்தமைக்காக என்னைப் பெரிதும் பாராட்டிய துணைவேந்தர், 'பல்கலையில் பேராசிரியராகச் சேர விருப்பம் உள்ளதா' என்று கேட்டார். விரும்புவதானால் நாளையே பணியில் சேரலாம் என்றார். அவருடைய அன்புள்ளத்திற்கு நன்றி தெரிவித்துவிட்டு விடை பெற்றேன். பிச்சியார் மடம் பற்றிய அவரது கேள்விகள் என்னைச் சிந்திக்க வைத்தன. மகளிர் சார்புடைய மடமாக அதை அப்பெருந்தகை கருதியிருந்தார். புலவர் செ. இராசுவும் அது குறித்து ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இந்தப் பயணத்தின் போதுதான் பேராசிரியர் முனைவர் எ. சுப்பராயலுவை முதன் முதலாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பமைந்தது. இச்சந்திப்பு குறித்து வரலாறு ஆய்விதழில் எழுதியுள்ளேன். அளவான பேச்சும், ஆழமான அறிவும் உடைய பெருந்தகையான அவரை நான் மனத்தில் இருத்தினேன். அழுந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் களஆய்வு செய்தோம். அந்த ஆய்வுகள் பெரும் பயன் தந்தன. அழுந்தூரின் பக்கத்து ஊரான செங்குளத்தில் கோயில் சுவடுகளைக் கண்டறிந்தோம். அதன் அருகிலிருந்த செட்டிஊருணிப்பட்டியில் ஒரு மண்டபம் தென்பட்டது. அதிலிருந்த பழங்கல்வெட்டைப் படித்து நாளிதழ்களில் செய்தி வெளியிட்டோம். வரகணீசுவரர் திருக்கோயிலின் சுற்றுப்புறத்திலிருந்தும் பிடாரித் தோப்பு, அய்யனர் தோப்பு செங்குளம் ஆகிய இடங்களிலும் பல சிற்பங்களை இவ்வாய்வின்போது கண்டறிந்து அடையாளப்படுத்தினோம். கல்வெட்டுகளுடன் அமைந்த சிற்பங்கள் இரண்டு கிடைத்தன. அழுந்தூரில் கிடைத்த சிற்பங்களைப் பற்றி இந்து நாளிதழ் அரைப்பக்க அளவில் படங்களுடன் செய்தி வெளியிட்டு எங்கள் உழைப்பை உலகத்திற்குக் கொண்டு சென்றது. இந்தச் செய்தி வெளியான அதே நாளில் காரைக்குடித் தமிழ்க் கல்லூரியில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். கல்லூரியின் தாளாளர் இல்லத்தில்தான் காலையுணவு ஏற்பாடாகி யிருந்தது. என்னை அன்புடன் வரவேற்ற அப்பெருந்தகை இந்து நாளிதழின் செய்திப் பக்கத்தைக் காட்டினார். என்னைவிட அந்தச் செய்தியின் பெருமை குறித்து அவர் மிக மகிழ்ந்து வாழ்த்தினார். அவருடைய இல்லக் கூடத்தில் பல தமிழறிஞர்களின் படங்கள் இருந்தன. அவற்றுள் என் தந்தையார் படமும் இடம்பெற்றிருந்தமையைக் காட்டி தந்தையாருடன் தாம் பழகிய காலத்தை அப்பெருந்தகை நினைவுகூர்ந்தார். அன்றைய கல்லூரி நிகழ்வின்போது அவருடைய உரையில், இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது குறித்துப் பேசினார். எங்கள் ஆய்வுகளை அறிவுலகம் எப்படி மதிக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்பதை அவர் சொன்னபோது உள்ளம் நிறைந்தேன். வாருணி, உண்மையான ஆய்வுகளும் உழைப்பும் என்றுமே தோற்பதில்லை. அழுந்தூர் ஆய்வுகள் சரசுவதியின் ஆய்வேட்டை வளப்படுத்தின. சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. விசுவநாதன் அழுந்தூரில் கிடைத்த சிற்பங்களையெல்லாம் சிராப்பள்ளி அருங்காட்சியத்தில் கொணர்ந்து சேர்க்கப் பேருதவியாக இருந்தார். கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நண்பர் இரா. இராஜேந்திரன் தம் மாணவர்களுடன் வந்து சிற்பங்களை அங்கிருந்து எடுத்துச் செல்ல உதவினார். திரு. சத்தியநாராயணன் மிகுந்த மகிழ்வுடன் இந்தத் திருப்பணியில் பங்கேற்று உதவினார். எங்கள் ஆய்வின்போது அழுத்தூர்க் கோயில் வழிபாடற்று இருந்தது. அதை வழிபாட்டிற்குக் கொணர விழைந்தோம். ஏற்கனவே முள்ளிக்கரும்பூர், பனமங்கலம் கோயில்களை வழிபாட்டிற்குக் கொணர்ந்த அநுபவம் உதவியது. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளும் கி. ஆ. பெ விசுவநாதம் மேனிலைப் பள்ளிப் மாணவர்களும் பேராசிரியர் முனைவர் சீ. கீதா, நண்பர் இரா. இராஜேந்திரன் வழிகாட்டலில் கோயிலைச் சீரமைத்தனர். திரு. அப்துல் மஜீது வழக்கம் போல் அவருடைய துறை அலுவலர்களுடன் வந்திருந்து மாணவ மாணவியரை நெறிப்படுத்தினார். சீரமைப்புப் பணியை காவல்துறைத் துணைத் தலைவர் திரு. வெங்கடேசனும் அவர் துணைவியாரும் தொடங்கி வைத்தனர். சீரமைப்பு முடிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி அழுந்தூரின் நிலையை விளக்கினோம். ஏற்கனவே நாளிதழ்களின் வழி தகவல்களை அறிந்திருந்த அப்பெருந்தகை உடன் அலுவலர்களிடம் பேசினார். மேலூர்ச் சாலையில் இருந்து அழுந்தூர் கோயில் வரை பாதை போடும் திட்டம் உருவானது. ஒரு வாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த அரும்பணியைச் செய்து முடித்தார். செட்டிஊருணிப்பட்டி, செங்குளம் வாழ் மக்களைச் சந்தித்து நானும் நண்பர்களும் பேசினோம். கோயிலைச் சீரமைத்துத் தந்தால் வழிபாடு தொடர்ந்து நடக்குமாறு பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் தாமே வந்து வழிபாட்டை தொடங்கி வைப்பதாக அன்புடன் கூறினார். 5. 12. 1985 அன்று அழுந்தூரில் வழிபாடு தொடங்கியது. மாவட்ட ஆட்சித் தலைவரும் அவர் துணைவியாரும் தங்கள் திருமகளுடன் வந்திருந்தனர். காவல்துறை துணைத்தலைவர் திரு. வெங்கடேசன் தம் துணைவியாருடன் கலந்துகொண்டார். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள், கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப் பள்ளி மாணவர்கள், பேராசிரியர் சீ. கீதா, நண்பர் இரா. இராஜேந்திரன் இவர்களுடன் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் நண்பர் மஜீதின் தலைமையில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். வயலூர் தலைமை சிவாச்சாரியார் திரு. ஜம்பு குருக்கள் மாணவியர் உதவியுடன் தேவராப் பதிகங்கள் முழங்க வழிபாட்டைத் தொடங்கினார். வெளவால்களின் வாழிடமாக இருண்டிருந்த அழுந்தூரில் அன்றைய நாள் மறக்கமுடியாத திருநாள். இந்த நிகழ்ச்சி நடந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சன்மார் நிறுவனம் அழுந்தியூர் கோயிலைத் தத்தெடுத்தது. இப்போது அந்நிறுவனத்தின் பொறுப்பில் கோயில் புதுவாழ்வு பெற்று வருகிறது. நல்ல உள்ளமுடைய ஆட்சியர்களும் உதவும் மனப்பாங்குடன் காவல் துறையினரும் உழைக்கும் ஆர்வத்துடன் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்களும் இருந்துவிட்டால் எந்த ஊருக்கும் எந்த நாளும் நலிவில்லை என்பதற்கு என் வாழ்க்கையில் நான் கண்ட மூன்றாம் சான்று அழுந்தியூர். வரகுணபாண்டியரின் பெயரையேற்றுப் பிறந்த இந்தத் திருக்கோயில் ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் தளராத உழைப்பால் மீண்டும் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்தது, வாழ்க்கையில் என்றென்றும் மறக்கமுடியா இனிய நிகழ்வாகும் இந்தப் பின்புலத்தில்தான் சரசுவதியின் ஆய்வைத் தொடங்கினோம். அவருடைய ஆய்வுக் காலத்தில்தான் அழுந்தூர் பற்றிய வரலாற்றுக் கட்டுரை உருவானது. மூன்று திங்கள் உழைப்பில் கிடைத்திருந்த அனைத்துத் தரவுகளையும் திரட்டி அவருடைய ஆய்வேட்டை முடித்தோம். வயலூர் ஆய்வேடும் மார்ச்சுத் திங்கள் இறுதியில் நிறைவடைந்தது. எறும்பியூர் ஆய்வேட்டை முடிக்க ஓர் இராஜகேசரியை, அவர் யார் என்று அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. நானும் நளினியும் அதற்காகக் கடுமையாக உழைத்தோம். சோழர் வரலாற்றை ஒருமுறைக்கு இரண்டு முறை வாசித்தும் பயனில்லை. அந்த நேரத்தில்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் ஆறு. அழகப்பன் தம் துறை ஆய்வு மாணவர்களுக்கு உரை நிகழ்த்த வருமாறு என்னை அன்புடன் அழைத்திருந்தார். அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |