http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 43
இதழ் 43 [ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி,
உன் கடிதம் கண்டேன். நன்றி. 'தொட்டு விட்ட பணிகள் நூறு இருக்கும் என்று எழுதியுள்ளீர்களே, ஏன் அவற்றைத் தொடராமல் விட்டுவிட்டீர்கள்' என்று கேட்டிருக்கிறாய். என் இனிய நண்பர் கும்பகோணம் சீதாராமன் கூட, 'சொல்லுங்கள் சார், பொருளுதவி வேண்டுமானாலும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். தாராசுரம் ஆய்வைத் தொடரலாம்' என்று அன்போடு உற்சாகப்படுத்தியிருக்கிறார். எனக்கும் ஆசைதான். குறைந்தபட்சம் நாயன்மார் தொகுதிகளையாவது முழுமையான அளவில் ஆய்வுசெய்துவிட வேண்டும் என்று கருதுகிறேன். அந்தச் சிற்பத்தொகுதிகள் அற்புதமானவை. பன்னிரண்டாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் கண்முன் வைக்கும் அற்புதக் களஞ்சியமாய் விளங்கும் அந்தச் சிற்பத்தொகுதியை காலம் அநுமதிக்குமானால் செய்துமுடிப்போம். தமிழ்நாட்டுக் குடைவரைகளை முழுமையான அளவில் ஆய்வுசெய்து தரவுகள் தொகுத்திருப்பதால் இப்போது அவற்றைப் பதிவுசெய்யும் பணியில் முனைந்துள்ளோம். மகேந்திரர் குடைவரைகள் பற்றிய நூல் இவ்வரிசையில் முதல் நூலாக எங்களால் வெளியிடப்பட்டது. இரண்டாவது நூல், 'தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி-1' என்ற தலைப்பில் 2006ல் வெளியிடப்பட்டது. குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் ஆளுகையிலுள்ள நான்கு குடைவரைகளை முழுமையான அளவில் ஆய்வுசெய்து விரிவான அளவில் தரவுகள் தொகுத்து இந்நூலில் தந்திருக்கிறோம். 2007 டிசம்பரில் 'மதுரை மாவட்டக் குடைவரைகள்' நூலை வெளியிட்டுள்ளோம். இந்நூலில் மதுரை மாவட்டத்திலுள்ள, திருப்பரங்குன்றம், யானைமலை, குன்றத்தூர், அரிட்டாபட்டி, மாங்குளம் எனும் ஊர்களில் விளங்கும் அனைத்துக் குடைவரைகளும் விரிவான அளவில் ஆராயப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டு வரலாறு பெறாத பல அரிய கண்டுபிடிப்புகளும் தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் கூடப் பார்த்திராத பல அரிய சிற்பங்களும் இந்நூலில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, 'புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள்' உருவாக்கத்தில் உள்ளது. என்னிடம் முதுகலை ஆய்வு செய்த தி. சுமிதா இப்போது இந்தத் தலைப்பில் முனைவர் ஆய்வு செய்கிறார். அவர் ஆய்வுக்குத் துணை நிற்க இம்மாவட்டக் குடைவரைகளை மீளாய்வு செய்து வருகிறோம். நவம்பரில் நார்த்தாமலை சென்றிருந்தோம். டிசம்பரில் மலையடிப்பட்டிக் குடைவரைகளை மீளாய்வு செய்தோம். அப்போது அரிய தமிழ்க் கல்வெட்டொன்றைப் பாறைப் பரப்பிலிருந்து தற்செயலாகக் கண்டுபிடித்தோம். இது எங்கள் முதல் ஆய்வின்போது நாங்கள் பார்க்காதது. எட்டாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள இக்கல்வெட்டைப் பற்றி, 'சுடச்சுட' நளினி எழுதியுள்ளார். ஜனவரி 2008ல் குன்றாண்டார் கோயில் செல்கிறோம். வரலாறு 17ம் தொகுதி வெளியாகிவிட்டது. அதில் புதுக்கோட்டையிலுள்ள கோகர்ணம் குடைவரையை மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளோம். வைணவப் பெருந்தலங்களான திருக்கண்ணபுரம், திருவாலி, திருநகர்க் கோயில்களைப் பற்றியும் விரிவான கட்டுரைகள் படங்களுடன் அவ்விதழில் இடம்பெற்றுள்ளன. 2008ம் ஆண்டிற்கான வரலாறு - 18 தயாராகிறது. அதனுடன், என் அன்புக்குரிய வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவினர் மிக எதிர்பார்த்திருக்கும், 'வாணன் வந்து வழி தந்து' நூலும் உருப்பெறத் தொடங்கியுள்ளது. சுந்தரரையும் இராஜராஜரையும் சேரமான் பெருமாளையும் தராசுத் தட்டுகளில் நிறுத்தும் இந்த நூலுக்கான படங்களை ம. இராமச்சந்திரன் மிக அற்புதமாக எடுத்துத் தந்திருக்கிறார். இந்த நூலைத் தங்கள் வெளியீடாக வெளியிட்டுப் பெருமை செய்ய வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவினர் காத்திருப்பது என் பேறு. வாருணி, ஆய்வுகளுக்கு நிறைய பொருள் தேவைப்படுகிறது. ஓர் இடத்தை முழுமையாக ஆய்வுசெய்து கட்டுரையாகவோ நூலாகவோ பதிவுசெய்ய வேண்டுமானால் குறைந்த தொகையாக ரூபாய் ஐம்பதாயிரம் தேவை. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகிலுள்ள மலையடிப்பட்டிக் குடைவரைகளை 1985ல் நாங்கள் ஆய்வுசெய்து வரலாறு நான்காம் தொகுதியில் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம் அந்த ஆய்வின்போது பல புதிய கல்வெட்டுகள் எங்களால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், விஷ்ணு குடைவரையின் பெயர் சொல்லும் சோழர் கல்வெட்டும் கிடைத்தது. என்னிடம் முதுகலை ஆய்வுசெய்த ம. ஜான்சி இந்தப் பயணங்களுக்குத் துணையானார். இப்போது நூலாக்கம் செய்வதற்கு அங்குச் சென்றதால், பழைய கட்டுரையில் சில திருத்தங்கள் செய்யுமாறு நேர்ந்தது. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் நாங்கள் பெற்றுள்ள அநுபவம் எங்கள் பார்வையை, சிந்தனைகளை மாற்றியமைத்துள்ளது. பார்வை மாறுவதால், தரவுகளின் வெளிச்சத்திலும் மாற்றம் நிகழ்கிறது. இப்படித் தரமான, முழுமையான ஆய்வுசெய்யக் காலமும் நிறையத் தேவைப்படுகிறது. பொருளும் தேவைப்படுகிறது. வரலாறு டாட் காம் இதழைப் படித்துவிட்டு நிறைய நண்பர்கள் உதவி செய்ய விழைவதாக எழுதுகிறார்கள். அவர்களுடைய அன்பிற்கு வரலாறு மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலிருந்து திரு. வெங்கடாசலம் எனும் தம்பி வந்திருந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த இனிய இளைஞர், வரலாற்றில் கொண்டிருக்கும் ஆர்வம் இணையற்றது. எங்கள் ஆய்வுகளுக்குத் துணைநிற்க விரும்பிய அந்த இளைஞர் தம் ஊதியத்திலிருந்து மாதம் ஆயிரம் ரூபாய் மையத்திற்கு அனுப்புவதாகக் கூறியதுடன் முதல் தவணையாக ஆயிரம் ரூபாயை என் கையில் தந்துவிட்டு எங்கள் நூல்கள் சிலவற்றையும் வாங்கிச் சென்றார். காஞ்சிபுரத்திலுள்ள சில கோயில்களையாவது ஆய்வுசெய்ய விழையும் அவருக்கு வரலாறு துணையிருக்கும். திரு. சுந்தர் பரத்வாஜ், வரலாறு டாட் காம் ஆசிரியர்கள் திரு. ச. கமலக்கண்ணன், திரு. ம. இராமச் சந்திரன், திருமதி. மா. இலாவண்யா, திரு. சாந்தகுமார் சுந்தரம் இவர்களெல்லாம் சூழ இருப்பதால்தான், 'வலஞ்சுழி வாணர்', 'பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்', 'கோயில்களை நோக்கி. . .', 'மதுரை மாவட்டக் குடைவரைகள் தொகுதி 1' எனும் நூல்களை எங்களால் நாங்கள் விரும்பியவாறு வெளியிடமுடிந்தது. திரு. சே. கோகுல் பெண்தெய்வ வழிபாடு நூலிற்குத் துணைநின்றதையும் திரு. சு. சீதாராமன் உடையாளூர் ஆய்விற்குப் பெருளாதாரப் பின்புலமானதையும், 'வலஞ்சுழி வாணர்' நூற்படிகளை வாங்கி விற்பனை செய்வதன் வழி எங்களுடைய இன்னொரு நூலை வெளியிடச் சுவாமிமலைத் திருக்கோயில் இணை ஆணையர் திரு. ச. இலட்சுமணன் உதவி வருவதையும் எந்தச் சொற்களில் எப்படிச் சொல்லி எங்கள் நன்றியைப் புலப்படுத்துவது. இந்த உதவிகளும் தாங்கல்களும் தொடருமானால் இறைவன் நீண்ட ஆயுளையும் உழைக்குமளவு நலத்தையும் தருவாரானால், தமிழ்நாட்டு வரலாற்றிற்கு எங்களால் இயன்றதைச் செய்து மகிழ்வோம். வரலாறு டாட் காம் இதழ்களைப் படித்துவிட்டுக் கருத்து எழுதுபவர்கள் பலராகி வருகின்றனர். இது மகிழ்ச்சி தருவதுடன், மேலும் ஊக்கத்துடன் உழைக்க அடித்தளம் இடுகிறது. இந்தக் கருத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவரங்கம் திரு. சேஷாத்திரி. அவருடைய மடல்களைப் படிக்கும்போது, எவ்வளவு ஆழமான அணுகுமுறையுடன் அவர் வரலாறு டாட் காம் கட்டுரைகளைத் தொடுகிறார் என்பதை அறியமுடிகிறது. வரலாறும் இலக்கியமும் தமிழர்களின் இரத்தத்திலேயே உள்ளன என்பதற்குத் திரு. சேஷாத்திரி சிறந்த சான்றாக மிளிர்கிறார். 'நாவலோ நாவல்' கட்டுரைக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டை வழங்கியிருக்கும் அவரது சிந்தனை வளம் மகிழ்வூட்டுகிறது. நல்ல படிப்பாளிகள் இருந்தால்தான் நல்ல படைப்பாளிகள் உருவாகமுடியும். சுந்தரர் பற்றிய கட்டுரைக்குத் திரு. சுந்தர் பரத்வாஜ் எழுதியிருந்த மறுமொழி அவரது அறிவுக்கூர்மையைப் புலப்படுத்தியது. வாணன் வந்து வழி தந்து நூலுக்கான கீற்றை அவருடைய கூர்மையான புலன்கள் அந்தக் கட்டுரையில் அடையாளம் கண்டுகொண்டது என்னை வியப்படைய வைத்தது. எங்கள் பேறு, இத்தகு இனிய படிப்பாளர்கள் எங்கள் படைப்புகளைப் படிப்பது. தொடரட்டும் இந்தத் தூண்டுதல். நிறைய நண்பர்கள் கல்வெட்டுப் படிக்கக் கற்றுத்தருமாறு கேட்டு எழுதி வருகிறார்கள். அவர்களுடைய ஆவல் நிறைந்த எதிர்பார்ப்பை விரைவில் நினைவாக்குவோம். தமிழ்நாட்டின் சிறந்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவரான பேராசிரியர் முனைவர் மு. நளினி மிக எளிமையாக, பயன்தரும் முறையில் இந்தத் தொடரைத் தர இசைந்துள்ளார். தொடரை எப்படி அமைப்பது என்பது குறித்துக் கலந்துரையாடி வருகிறோம். கோயில்களுக்குப் போகாமல் கல்வெட்டுப் படிக்கமுடியாது என்பது உண்மைதான் என்றாலும், வெளிநாடுகளில் வாழும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்குத் தொடக்கநிலை வழிமுறைகளைத் தந்துவிட்டால், அவர்கள் இந்தியா வரும்போது, கோயில்களுக்குச் சென்று களஆய்வு பெற வாய்ப்பாகும். வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவுடன், குறிப்பாகக் கல்வெட்டுத் தொடரைத் தொடங்கிய திருமதி மா. இலாவண்யாவுடன் கலந்து பேசி விரைவில் உரிய அறிவிப்புகளுடன் தொடர் தொடரும் என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, திரும்பிப் பார்ப்போம்! 1984-85களில் நான் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கது சக்கராயி. என் இளவல் பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசு, தஞ்சாவூர் கருந்திட்டைக்குடி மாணவர்கள் சிலரின் ஒத்துழைப்புடன், 'இளமையின் குரல்' என்றோர் இதழை வெளிடத் தொடங்கினார். அதன் இரண்டாம் இதழில்தான் (நவம்பர் 1984) 'சக்கராயி' வெளியானது. தாராசுரத்திற்குச் சென்ற காலங்களில், கும்பகோணம் எலுமிச்சம்பாளையம் பகுதியில் உள்ள கோயிலில் வித்தியாசமான இறைவடிவம் ஒன்று உள்ளதென்றும், அதைப் பார்த்து நான் எழுதவேண்டும் என்றும் கூறிய திரு. பிச்சை, அக்கோயிலுக்கு வழிச் சொல்லி என்னை அனுப்பிவைத்தார். நானும் என் வாழ்வரசியும் திரு. ஆறுமுகமும் அங்குச் சென்றோம். கருவறையில் இறைத்திருமேனிக்கு மாறாக ஒரு கற்பலகை இருந்தது. அதை முற்றிலுமாய் மறைத்துத் துணி சுற்றியிருந்ததால், அப்பலகையில் எந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது என்பதை அறியக்கூடவில்லை. அக்கோயிலில் இருந்த பூசாரியைத் துணியை அகற்றிக் காட்டுமாறு கேட்டபோது முதலில் மறுத்தவர், பிறகு உடன்பட்டுத் துணியை நீக்கினார். தலையோ, கழுத்தோ இல்லாமல் வெறும் உடல் மட்டும் பெற்றிருந்த பெண் சிற்பமொன்று அக்கற்பலகையில் காட்சியளித்தது. தலைக்குப் பதிலாக உடம்பின் மேற்பகுதியில் மலர்ந்த தாமரை காட்டப்பட்டிருந்தது. சிற்பவடிவத்தின் இரண்டு கைகளும் மேல்நோக்கி வளைந்து அந்தத் தாமரையின் இரண்டு ஓரங்களையும் பிடித்திருந்தன. கைகளின் முழங்கைப் பகுதிகள் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த முழங்கால்களின் மீது தாங்கலாக இருந்தன. கழுத்தில் சரப்பளி எனும் அணிகலனும் தோள், கைகளில் வளைகளும் இருந்தன. மார்பகங்கள் மிகப் பெரிய அளவினவாகவும் எடுப்பாகவும் அமைந்திருந்தன. மார்புக்குக் கீழ் மூன்று மடிப்புகளுடன் உள்ள வயிற்றுப்பகுதியை அடுத்து, புடைத்த நிலையில் அடிவயிற்றையும் பிறப்புறுப்பையும் பார்க்க முடிந்தது. பிறப்புறுப்பிற்கு முக்கியத்துவம் தருவதற்காகச் சிற்பத்தின் சிலம்பணிந்த கால்கள் நன்கு விரிக்கப்பட்டிருந்தன. நான் அதுநாள்வரை பார்த்திருந்த சிற்பங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்த அந்தச் சிற்பம் வியப்பூட்டியது. தாய்த் தெய்வ வழிபாடு, யோனி வழிபாடு இவற்றோடு தொடர்புடைய தாந்திரிக வகைச் சிற்பம் அது என்பது விளங்கினாலும், சிற்பத்தின் பின்புலம் பிடிபடவில்லை. ஊருக்குத் திரும்பியதும் தாந்திரீகம் பற்றிய நூல்களைப் பெற்றுப் படித்தேன். ஐ. கே. சர்மாவின், 'The Development of Early Saiva Art and Architecture', எஸ். செட்டாரின், 'In Praise of Aihole, Badami, Mahakuta and Pattadakkal' எனும் நூல்களும் முனைவர் இரா. நாகசாமியின், 'A Tantric Iamage of Darasuram' எனும் கட்டுரையும் தெளிவுதந்தன. நாகார்ஜூனகொண்டா அகழாய்வுகளில் கிடைத்த சிதைந்த சிற்பமொன்றைக் குறிப்பிடும் ஐ. கே. சர்மா, அதிலுள்ள கல்வெட்டின் பாடத்தையும் தந்துள்ளார். எவுலசம்தமூலா என்ற இக்சவாகு மன்னரின் தேவியான மகாதேவி கந்தவுலா தம் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் தம் குழந்தைகளின் நல்வாழ்விற்காகவும் இத்தெய்வ வடிவத்தை எடுப்பித்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. இது போன்ற சிற்பவடிவங்கள் சாதவாகனர்கள் ஆண்ட பகுதிகளான தற்போதய மகாராஷ்டிரம், கொண்டவூர் இவற்றிலும் முற்சாளுக்கியர் பகுதிகளான பாதாமி, பட்டடக்கல், ஆலம்பூர் இவற்றிலும் அதிக அளவில் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. இச்சிற்பத்தை ஆய்வாளர்கள், 'லஜ்ஜாகெளரி' என்று அழைக்கின்றனர். ஆனால் மக்களோ, எல்லம்மா, ரேணுகா, நஜ்னகபந்தா, கமலமுகி எனப் பல்வேறு பெயரிட்டு வணங்குகிறார்கள். நஜ்ன என்றால் நிர்வாணமான என்று பொருள். கபந்தா என்றால் தலையற்ற உடல் என்று பொருள். எலுமிச்சம்பாளையம் கோயில் சிற்பத்தைவிட அமைப்பிலும் கலைநுட்பத்திலும் சிறந்த பல சிற்பங்களின் படங்களை செட்டார் வெளியிட்டுள்ளார். சாளுக்கிய பூமியில் அவர்தம் கலைப்படைப்புகளைக் காண்பதற்காக 1990 ஜனவரியில் பயணம் மேற்கொண்டபோது சித்தனகொல்லா என்ற ஊரில் குகைத்தளம் ஒன்றில் லஜ்ஜாகெளரி சிற்பத்தைக் கண்டேன். ஸ்வர்ணவைகாக்ஷம் எனும் அணிகலனை மார்பில் பெற்றிருந்த இச்சிற்பத்தின் தொடைகளிலும் வளைகள் காணப்பட்டன. இச்சிற்பமுள்ள பாறைத் தளத்திற்கு அருகே பெருங்கற்படைச் சின்னங்களைக் காணமுடிந்தது. மணமாகாதவர்களும் குழந்தைப்பேறு அற்றவர்களும் இக்கோயிலுக்கு வந்து பூவும் வளையல்களும் வைத்து வணங்கினால் அவர்கள் எண்ணுவது கிட்டும் என்று சொல்லப்படுகிறது. எலுமிச்சம் பாளையத்திலும் இதே நம்பிக்கையுடன் வழிபாடு நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் இங்குக் கூடும் கூட்டம் அளவில்லாதது. பெரும்பாலும் பெண்களே இங்குத் திரள்வது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிற்பத்தைப் பற்றி மிக விரிவாக ஆராய்ந்த நிலையில், கிடைத்த தரவுகளையெல்லாம் தொகுத்து, 1. 2. 1986ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், 'Lajja Gauri' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரைக்கு அறிஞர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பிருந்தது. அறிஞர் பி. எல். சாமி அந்தக் கட்டுரையை வெகுவாகப் பாராட்டி உரைத்ததுடன் தம்முடைய 'தாய்த் தெய்வ வழிபாடு' நூலிற்காக, எலுமிச்சம்பாளையம் சக்கராயியின் படமொன்றையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். 9. 6. 1985 என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்களுள் ஒன்று. அன்றிரவுதான் சிராப்பள்ளி வானொலியில் அரைமணி நேரப் பொழிவாக என்னுடைய, 'அழிந்து கொண்டிருக்கும் அழகுக் கோயில்கள்' உரை ஒலிப்பரப்பாகியது. தமிழ்நாட்டின் வரலாற்றைச் சுமந்துகொண்டிருக்கும் இணையற்ற எழில்படைத்த திருக்கோயில்கள் பல, அரசின் மெத்தனத்தாலும் மக்களின் பொறுப்பற்ற போக்காலும், நிருவாகத்தினரின் அலட்சியத்தாலும் அழிவின் பாதையில் நெடுந்தொலைவு வந்துவிட்ட நிலையைச் சான்றுகளோடு எடுத்துரைத்த உரை அது. பின்னாளில் என்னுடைய மூன்றாவது நூலான, 'சுவடழிந்த கோயில்கள்' புத்தகத்தில் கட்டுரையாக இடம்பெற்ற அந்த உரைதான் தற்போது இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கல்வெட்டுப் பிரிவில் முதுநிலைக் கல்வெட்டாய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. சு. இராசவேலுவை எனக்கு நண்பராகப் பெற்றுத்தந்தது. திரு. சு. இராசவேல் அப்போது தமிழ்ப் பல்கலையின் கலைக்களஞ்சியப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென அவரிடமிருந்த ஒரு கடிதம் வந்தது. அதில் வானொலி உரையைக் கேட்டதாகவும் மிகச் சிறப்பான உரையாக அது அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டிருந்த நண்பர் இராசவேல், அக்கட்டுரையின் ஒரு படியைத் தமக்கு அனுப்புமாறு கேட்டிருந்தார். தம்முடைய களஞ்சியத் தொகுப்பிற்கு அது உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் கேட்டவாறே கட்டுரையின் படியை அனுப்பியிருந்தேன். அண்மையில் எனக்குத் தொலைபேசி செய்து பேசியபோது, அக்கட்டுரையின் படி இன்றளவும் தம்மிடம் இருப்பதாக இராசவேல் நினைவுகூர்ந்தபோது நான் நெகிழ்ந்து போனேன். திரு. சு. இராசவேல் உழைப்பாற்றல் உள்ளவர். துணிவு நிரம்பியவர். அனைவரிடமும் இணைக்கமாகப் பழக விரும்புபவர். தொடக்கக் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பலவற்றைக் கண்டறிந்து தமிழ்மொழிக்கு வளம் சேர்த்தவர். தமிழ்நாட்டிலிருந்துதான் எழுத்து முறை தோன்றி வடபுலம் சென்றது என்ற கருத்துடையவர். அக்கருத்தை நிலைநிறுத்தப் பல அரிய சான்றுகளை ஆராய்ந்து தொகுத்துள்ளவர். பல நூல்களின் படைப்பாளி. அவரும் நானும் பலமுறை ஒன்றாகக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளோம். 2006ல் கூட இலங்கை அரசு நிகழ்த்திய மூன்று நாள் கலாச்சாரக் கருத்தரங்கில் நானும் அவரும் அரசின் விருந்தினர்களாகப் பங்கேற்றோம். என் தலைமையில் அவருடைய கட்டுரை ஒன்று அமைந்தது. மற்றொருவர் தலைமையில் அவர் நிகழ்த்திய மாமல்லபுரம் சாளுவன்குப்பம் அகழாய்வு குறித்த காட்சியுரை அறிஞர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றது. கல்வெட்டாய்வில் முன்னணியில் நிற்கும் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க சிலருள் சு. இராசவேல் குறிப்பிடத்தக்கவர். திரு. இராசவேலைப் போலவே சிராப்பள்ளி வானொலியில் நிகழ்ச்சிப் பொறுப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஈ. ச. சுந்தரமூர்த்தியையும் இவ்வுரை வெகுவாக ஈர்த்தது. உரை ஒலிபரப்பான மறுநாளே தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியவர்,அடுத்த சந்திப்பில் 'கல்வெட்டுகள்' பற்றி ஒரு தொடர் செய்யும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். எட்டு அல்லது பத்து அரைமணிநேர உரைகளைக் கல்வெட்டுகள் தொடர்பாகத் தயாரித்து வழங்க முடிவாயிற்று. நண்பர் இராஜேந்திரன், சு. இராசவேல், தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை நண்பர் சொ. சாந்தலிங்கம், கி. ஸ்ரீதரன் எனப் பலரையும் அந்தத் தொடரில் பங்கேற்க வைத்தேன். அத்தொடரில் உரை வழங்க ஒப்புதலளித்த அனைவருமே நன்கு ஒத்துழைத்தமையால், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் எத்தனை வளமான வரலாற்றுப் புதையல்கள் என்பதை எளிதாக வெளிப்படுத்த முடிந்தது. நண்பர் இரா. இராஜேந்திரன், 'கல்வெட்டுகளில் சமுதாயம் ஒரு பார்வை' என்ற தலைப்பில் கல்வெட்டுகள் சுட்டும் சமுதாயம் சார்ந்த நல்லனவற்றையெல்லாம் மிக விரிவாகத் தம் உரையில் எடுத்துக்காட்டியிருந்தார். அந்த உரையைச் சுந்தரமூர்த்தி மிகவும் இரசித்தார். அப்போது நான் அவரிடம், 'நீங்கள் கேட்டது பழஞ் சமுதாயத்தின் ஒரு பக்கம்தான். அந்தச் சமுதாயத்திற்கு மறுபக்கமும் இருக்கிறது. அதை நான் உரையாக அமைக்கலாமா?' என்று கேட்டேன். ஒரு சமுதாயத்தின் நல்ல பகுதியை மட்டுமே படம்பிடித்துக் காட்டி, அந்தச் சமுதாயத்தில் நிகழ்ந்த தவறுகளை, மீறல்களை, குற்றங்களை மறைத்துவிடுவது, முறையான வரலாற்றுப் படம்பிடிப்பாகாது என்று அவரிடம் விவாதித்தேன். அவர் மிகவும் தயங்கினார். வானொலி அரசு சார்ந்த மக்கள் ஊடகம் என்பதால், பழஞ் சமுதாய இருட்டுகளைப் படம்பிடித்துக் காட்டினால், யாரேனும் ஏதேனும் எழுதி, தொல்லைகள் வந்துவிடுமோ என்று அஞ்சினார். அதே சமயம் என் எழுத்திலும் சொல்லும் முறையிலும் அவருக்கு நம்பிக்கையிருந்தது. சில நிமிட நேரக் கலந்துரையாடலுக்குப் பிறகு எழுதுவது என முடிவாயிற்று. நான் மிகுந்த எச்சரிக்கையுடன் எழுதிய மிகச் சில கட்டுரைகளுள், 'கல்வெட்டுகளில் சமுதாயம் மறுபார்வை' என்ற கட்டுரையும் ஒன்று. கட்டுரையை முடித்ததும் என் வாழ்வரசியிடம் படித்துக் காண்பித்தேன். நன்றாக வந்திருப்பதாக அவர் கூறியதும், நண்பர்கள் இராஜேந்திரனிடமும் சந்திரனிடமும் தந்து படித்துக் கருத்துரைக்கக் கேட்டேன். இருவருமே ஒலிப்பரப்பிற்கு உகந்த நிலையில் உள்ளதென்றனர். அதன் பின்னரே நண்பர் சுந்தரமூர்த்தியிடம் உரையைத் தந்து படித்துப் பார்க்குமாறும், அவருக்குக் கட்டுரை ஏற்புடையதாக இருந்தால் ஒலிப்பதிவு செய்யலாமென்றும் கூறி வந்தேன். அவர் அன்றிரவே தொலைப்பேசியில் அழைத்தார். அடுத்த நாள் பிற்பகல் ஒலிப்பதிவிற்குச் சென்றேன். 'மிகக் கடுமையான செய்திகளைக்கூட மிக மென்மையாகக் கூறியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டு வரலாற்றில் இத்தனை அவலங்களும், அநியாயங்களும் இருப்பதை முற்றிலுமாய் அறியாமல் இருப்பதுகூட ஒரு குற்றந்தான். ஏன் வரலாற்று நூல்கள் இவை பற்றியெல்லாம் பேசுவதில்லை?' என்று கேட்டவர் மகிழ்வுடன் ஒலிப்பதிவிற்கு வந்தார். 'குற்றங்களையும் தவறுகளையும் இடறல்களையுமே சமுதாயத்தின் மறுபக்கமாகக் காட்டப்போகிறீர்கள், எப்படி ஒலிப்பரப்புவது என்று மருகிக் கொண்டிருந்தேன். ஆனால், அவற்றையே ஒலிப்பரப்பிற்கு ஏற்றவாறு நயப்படுத்தி, அதே சமயம் உண்மைகளை உண்மைகளாகவே வடிவம் மாற்றாமல் தந்திருப்பது சாதனைதான்' என்று ஒலிப்பதிவு முடிந்ததும் அவர் கூறியபோது எனக்கு நிறைவேற்பட்டது. 22. 9. 1985 இரவு 9.30 - 10.00 மணி அளவில் அந்த உரை ஒலிபரப்பானபோது எனக்கு வந்த தொலைப்பேசிகளுக்குக் கணக்கில்லை. அவற்றுள் பலவும் வியப்பையே வெளிப்படுத்தின. "எந்த ஒரு சமுதாயமும் நன்மையே நிரம்பிய, நல்லவர்களே வாழும் சமுதாயமாக இருந்துவிடமுடியாது. அந்தச் சமுதாயத்தின் ஒரு பக்கத்தையே பார்த்துக்கொண்டு, இதுதான் சமுதாயம் என்று ஏமாந்துகொண்டிருப்பதும் நியாயமாகாது. பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையில் இந்த நாட்டில் செதுக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளுள் பல, சமுதாய மறுமலர்ச்சியைக் காட்டும் அதே நேரத்தில், சில, அந்தந்தக் காலகட்டங்களில் இந்த மண்ணில் நிலவிய சமுதாய அமைப்புகளில் ஆங்காங்கே நிகழ்ந்த அவலங்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த கலகங்களையும் பரவலாக நிகழ்ந்த குற்றங்களையும் சுட்டிக் காட்டுகின்றன என்றால், அக்காலத்து மக்களின் வரலாற்று நேர்மையை எப்படிப் போற்றுவதென்றே தெரியவில்லை. சமுதாயக் குறைபாடுகளைச் செதுக்கி வைத்ததன் மூலம், நடந்ததைக் காட்டி, இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கவேண்டும் என்ற ஆர்வ விளக்கை ஏற்றி வைப்பதுடன், அந்த ஒளியில், அடாத செயல்கள் அடியோடு மறைய வேண்டும் என்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்தி, இது ஒரு எச்சரிகை, நேர்மைதான் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும், முறைகேடுகளும் ஒழுங்கின்மையும் கண்டிக்கப்படுவதோடு தண்டிக்கவும் படும் என்பதைப் பொதுநோக்கோடு எடுத்துரைத்து, சமுதாயச் சீரமைப்புக்கு வழி கோலியிருக்கும் அந்தகாலப் போக்குகள் நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன" என்ற முன்னுரையுடன் தொடங்கப்பட்ட அந்த உரை, தமிழ்நாட்டு வரலாற்றுக் கருவூலங்களில் தொடப்படாமல் விடப்பட்டிருந்த பல திசைகளிலும் பயணித்துத் தமிழ்நாட்டின் அனைத்து அரசு மரபுகளின் கீழும் நிகழ்ந்தேறிய அவலங்களைப் பரவலான வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து குவித்தது. "பல்லாயிரமாய்ப் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில், பழந்தமிழர் திரட்டி வைத்துவிட்டுப் போயிருக்கும் ஆயிரமாண்டு கால வரலாற்றை, உவத்தல், காய்தல் இன்றி பார்க்கும்போது மகிழ்வும் ஏற்படுகிறது; மருட்சியும் ஏற்படுகிறது. கலைகளை வளர்த்து, கவினுறு கோயில்களை எடுத்து, வரலாற்று உணர்வுடன் செய்திகளை வடித்து, நம்மை வியப்பிலும் களிப்பிலும் மெய்சிலிர்க்கவைக்கும் அதே சமுதாயம், ஒழுக்கக் குறைவுகளிலும் நிருவாகத் தவறுகளிலும் சாதி சமயச் சழக்குகளிலும் மூழ்கித் தத்தளித்ததையும் சமுதாயத்தின் முழுப் பார்வையாகப் பார்க்கநேரும்போது கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லைதான். என்றாலும், ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் என்பது போல், ஒரு சமுதாயத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பது இயற்கைதானே. இதில் தளர்ந்து போவதற்கும் தயக்கம் கொள்வதற்கும் எந்த அவசியமும் இல்லை. வளரும் சமுதாயங்களில் இது போன்று நெல்வயலின் களைகளாய், நாளும் நடக்கும் நல்லவைகளுக்கு நடுவில், அங்கொன்றும் இங்குகொன்றுமாய்க் கேடுகளும் குறைபாடுகளும் நிகழ்வது என்பது தவிர்க்க முடியாதது. எத்தனை நேர்மையுணர்வும் நியாயப் போக்கும் வரலாற்றுத் தொலைநோக்கும் இருந்திருந்தால், நல்லவைகளைப் பொறித்த அதே நேரத்தில், நம் முன்னோர்கள், நடந்துபோன தீமைகளைக்கூட, மறைக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், அடுத்த தலைமுறைகள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தாலும் இதைப் படிக்கும் அடுத்தவர்கள் இந்தப் பொல்லாப் பாதைகளைப் புறக்கணிக்கவேண்டும் என்ற துடிப்பாலும் கோயில் சுவர்களில் பலரும் பார்க்க எழுத்தாக்கிப் போயினர் என்பதை நினைக்கும்போது வியப்பு மலர்கிறது. அவர்பால் நம் மதிப்பும் உயர்கிறது என்ற முடிவுரையுடன் நிறைவு பெற்ற 'கல்வெட்டுகளில் சமுதாயம் மறுபார்வை' என்ற அந்த வானொலி உரை 1987ல் வெளிவந்த என்னுடைய நான்காவது நூலான 'எழில் கொஞ்சும் எறும்பியூர்' நூலில் பதினோராம் கட்டுரையாக இடம்பெற்று எழுத்துவடிவிலும் பதிவாயிற்று. அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |