http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 43

இதழ் 43
[ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஜல்லிக்கட்டு சங்ககாலப் பழமையதா?
மலையடிப்பட்டியில் புதிய கல்வெட்டு
திரும்பிப் பார்க்கிறோம் - 15
Temples of Narthamalai and Kadambar malai
மாங்குளம் குடைவரை
காரோணன் குடிகொண்ட கடல்நாகை
திரைக்கை காட்டும் தென் நாகை
மனிதம் சரணம் கச்சாமி!!!
காவிரியும் உன்னவளே! நந்தலாலா!
அங்கும் இங்கும் (ஜன. 16 - பிப். 15)
இதழ் எண். 43 > பயணப்பட்டோம்
திரைக்கை காட்டும் தென் நாகை
சு.சீதாராமன்
வரலாறு .காம் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை நமது பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.

செப்டம்பர் -2 -2007 காலை மணி 11.00 நாமும் நமது நண்பரும், வரலாறு.காம் இதழின் ஆசிரியர் குழு அங்கத்தினர்களில் ஒருவருமான திரு.சே.கோகுல் அவர்களும் குடந்தையிலிருந்து நாகை செல்ல திட்டமிட்டோம்.புறப்படும்போதே மிகவும் நேரமாகிவிட்டது. எனவே நம் அனைவருக்கும் இனிய நண்பரான திரு.பால பத்மநாபனின் உதவியை நாடினோம்.அவர் நாகை காயாரோகணர் ஆலயத்திற்கு தொலைபேசியில் அழைத்து எங்களுக்கு உதவுமாறு வேண்டிக்கொண்டார். நண்பர் பாலா தன் இனிய சுபாவத்தினால் எல்லா இடங்களிலும் அற்புதமான நட்பைப் பெற்றிருப்பவர். உரியவரைச் சந்தித்தால் தேவைப்படும் உதவி கிடைக்கும் என்று கோயிலாரிடமிருந்து அனுமதி கிடைத்தது.

நாமும் மிகவும் மகிழ்ச்சியுடன் நாகை நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.நண்பர் பாலாவும் உடன் வந்திருந்தால் நன்றாயிருக்கும் என்று எண்ணினோம்.அவருக்கும் மிகுந்த ஆசைதான். இருப்பினும் அவசர வேலை கருதி சென்னை சென்று விட்டார்.

கும்பகோணம் திருவாரூர் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் நம் மனோ வேகத்திற்கு ஈடு கொடுத்து வாகனத்தை இயக்க இயலவில்லை. எனவே நாம் நினைத்ததை விட தாமதமாகத்தான் திருவாரூரையே அடைந்தோம்.திருவாரூர் -நாகை சாலை நன்றாக இருந்ததால் பயணத்தின் கடைசி அரை மணி நேரம் நன்றாக அமைந்தது.

நாகையைப் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே



மன்னி நீடிய செங்கதிரோன் வழிமரபின்
தொன்மை ஆம் முதல் சோழர்தம் திருக்குலத்து உரிமைப்
பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்
நன்மை சான்றது நாகப்பட்டினத் திரு நகரம்.


என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாகை மாவட்டம் பற்றிய சில தகவல்களை இங்கே அளித்தால் நன்றாயிருக்கும் என்று எண்ணுகிறேன்.


நாகை மாவட்டம் ஒரு அறிமுகம் (நடிகர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர் திரு.விஜய காந்த் பாணியில் வாசிக்கவும்)

மாவட்ட துவக்கம் : 1991 அக்டோபர் -18

நான்கெல்லை : கிழக்கில் வங்கக்கடல் / மேற்கில் திருவாரூர் மாவட்டம் / வடக்கில் கடலூர் மாவட்டம் / தெற்கில் பாக் ஜலசந்தி

தலை நகர் : நாகைப்பட்டினம்

பரப்பளவு : 2,614.33 ச.கி.மீ

மக்கள் தொகை :13,17,601

பாராளுமன்ற தொகுதிகள் -2 : 1)நாகைப்பட்டிணம் 2) மயிலாடுதுறை

சட்டமன்ற தொகுதிகள்-6 : 1)நாகைப்பட்டிணம் 2) மயிலாடுதுறை 3) சீர்காழி 4)பூம்புகார் 5)வேதாரண்யம் 6)குத்தாலம்

வருவாய் வட்டங்கள் -7 : 1)நாகைப்பட்டிணம் 2) மயிலாடுதுறை 3)சீர்காழி 4)வேதாரண்யம் 5)கீழ்வேளூர் 6)தரங்கம்பாடி 7)திருக்குவளை

பேரூராட்சிகள் : 10

கிராமப்பஞ்சாயத்துகள் : 433

முக்கிய ஆறுகள் : காவிரி,வெண்ணாறு

மழையளவு ஆண்டிற்கு சராசரி: 1229 மி.மீ

கல்வி -
மொத்த பள்ளிகள் :1126

கல்லூரிகள் : 7

தொழிற்பயிற்சி நிறுவனங்கள் : 2

நூல் நிலையங்கள் :60

தொழிற்சாலைகள் :74

முக்கிய இடங்கள் : காயாரோகணர்-நீலாயதாட்சிஅம்மன் - கோயில், செளந்தர்யராஜ பெருமாள் கோயில், சீர்காழி சட்டநாதர் கோயில், சிக்கல்-சிங்காரவேலர்,எட்டுக்குடி-சுப்பிரமணியர்,தரங்கம்பாடி-டேனிஷ் கோட்டை,பூம்புஹார்-சிலப்பதிகார கலைக்கூடம்,திருக்கடையூர்,வேதாரண்யம் வனவிலங்கு சரணாலயம்,கோடியக்கரைவனவிலங்கு சரணாலயம் நாகூர் தர்கா,வேளாங்கண்ணி மாதா தேவாலயம்.

கனிம வளம் : வண்டுவாஞ்சேரி,வடமழை - சிலிகா / நரிமணம் - இயற்கை எரிவாயு

நாம் இப்பொழுது நாகை நகருக்குள் நுழைகிறோம். நுழைந்தவுடன் "பொன்னியின் செல்வனின்" நினைவலைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. நாகை சூடாமணி விஹாரம், கடல் கொந்தளிப்பு, சேந்தன் அமுதன், பூங்குழலி,"அருள்மொழிவர்மன்”, புத்த பிஷூ இவர்களனைவரும் ஒரு கணம் வந்து சென்றார்கள்.

ஊரில் நுழைந்தவுடன் "காயாரோகணர்" கோயில் எங்குள்ளது என்று எதிர்ப்பட்டவர்களை வினவினோம். ஒருவருக்கும் நாம் கேட்டது விளங்கவில்லை.பிறகு இந்த ஊரிலேயே பெரிய கோயில் எது என்று கேட்டோம். உடனே "நீலாட்சியம்மன்(நீலாயதாட்சிஅம்மன்) கோயிலா? இப்படியே போங்க" என்று வழி கிடைத்தது. (சிதம்பரமா? மதுரையா? என்று கேட்பவர்கள் இனி சிதம்பரமா? நாகையா? என்று தாராளமாகக் கேட்கலாம். "அய்யா"வை விட "அம்மா" அவ்வளவு "பிரசித்தம்" இங்கே.





காயாரோஹணர் திருக்கோயில் நுழைவாயில்


ஒருவாறு கோயிலை அடைந்தோம். கோயில் அலுவலகத்தை அணுகி நண்பர் பால¡வின் "முத்திரை" மோதிரத்தைப் பயன்படுத்தி நம்மை அறிமுகம் செய்து கொண்டோம். கோயில் அலுவலர் அவர்கள் நம்மை கோயிலுக்குள் செல்லவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்து விட்டார். என்னடா எல்லாம் நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறதே, திருநள்ளாற்றுப் பெருமான் தன் திருப்பணியைத் தொடங்க மறந்துவிட்டாரா என்ன என்று வியந்துகொண்டே நமது "வேலை"க்கு ஆயத்தமானோம்.

உள்ளே சென்றவுடன்தான் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யாமல் வந்து விட்டோமே ! என்று தோன்றியது. அந்த தகிக்கும் வெய்யிலில் தண்ணீர் இல்லாமல் தாக்குப்பிடிக்க முடியுமென்று தோன்றவில்லை. சரி, தண்ணீர் வாங்கி வரலாம் என்று இருவரும் வெளியில் வந்தோம். அவ்வளவுதான். திருவாளர் சனீசுவர பகவான்... மன்னிக்கவும், அங்கிருந்த காவலர்.... நம்மை பிடித்துக் கொண்டுவிட்டார்.இதற்குள் கோயில் நடை சாற்றும் வேளையும் வந்து விட்டது. காவலர், சில மாதங்களுக்குமுன் நாகையின் மரகத லிங்கம் திருட்டுப் போய்விட்டதாகவும் அதிலிருந்து காவல்துறையின் "அரவணைப்பிலேயே" கோயில் இருப்பதாகவும் கூறி நாம் உள்ளே செல்வதை பிடிவாதமாக மறுத்தார். ஆஹா கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே ! இவரிடம் மாட்டிக்கொண்டதற்கு பதில் தண்ணீருக்குத் தவித்தபடி உள்ளேயே இருந்திருக்கலாமே என்று தோன்றியது.

நழுவ விட்ட வாய்ப்பு குறித்து இருவரும் வருந்தினோம். இருந்தாலும் விடாக்கண்டர்களாக நமக்குத் தெரிந்த ஆய்வாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு காவலரிடம் பேசி அனுமதி பெற முயன்றோம். ம்ஹூம் ! ஒன்றும் நடக்கவில்லை. கோயில் திறந்தவுடன் வந்து உங்கள் "வேலை"யைத் தொடருங்கள் என்று எளிமையாகக் கூறிவிட்டார் அவர்.

அங்கிருந்து வெளியே செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இதற்குள் வயிற்றில் மணியடிக்கவே ஏதேனும் உணவுச்சாலைக்குச் சென்று மதிய உணவை முடித்துக்கொண்டு பிறகு யோசிக்கலாம் என்று முடிவெடுத்து வெளியே சென்றோம். மதிய உணவு முடித்தவுடன், வாருங்கள்... சூடாமணி விஹாரம் ஒருகாலத்தில் அமைந்திருந்த இடத்தைப் பார்க்கலாம் ! என்று அழைத்தார் கோகுல். சரி என்று கிளம்பினால் நேராக நாகையின் மத்திய இடமான புதுவெளி பஸ்நிலையம் அமைந்திருந்த இடத்திற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் அவர்.

"இதுவா சூளாமணி வர்ம விஹாரம் இருந்த இடம் ? மருந்துக்குக்கூட ஒரு புத்தர் சிலையைக்கூடப் பார்க்க முடியவில்லையே ?" என்றேன்.

"இங்கு அவற்றையெல்லாம் பார்க்க முடியாது. முந்நூற்றுக்கும் மேற்பட்ட பெளத்தப் படிமங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றும் இங்கில்லை. அவற்றைப் பார்க்க வேண்டுமென்றால் சென்னை மியூசியத்திற்கோ நியூயார்க்கின் இராக்கிபெல்லர் சென்டருக்கோ சென்றுதான் காணமுடியும் !" என்று பதிலளித்தார் அவர். அத்துடன் நாகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பிழைத்திருந்த புதுவெளிக் கோபுரத்தைக் குறிப்பிட்டு இன்று சப் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் இயங்கும் இடத்தில்தான் அந்நாளில் விஹாரம் இருந்தது என்று தெரிவித்தார். அந்த சுற்றுவட்டாரத்தில் இருவரும் சிறிது நேரம் சுற்றிவிட்டு வந்தோம்.





கடற்கரைப் படகுகள்


நாகப்பட்டினம் வரை வந்துவிட்டு அதன் கடற்கரையைப் பார்க்காமல் போவதாவது ? "வரையார்வன போல் வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை" என்று மலையளவுள்ள கலங்கள் உலாவும் இடமாக சம்மந்தப் பெருமானால் வர்ணிக்கப்படும் நாகைக் கடற்கரைக்கு அடுத்தபடியாக விஜயம் செய்தோம். கடற்கரையும் அங்குள்ள "கலங்கரை விளக்கமும்" அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளும் மனதிற்கு ரம்மியமாக இருந்தன. ஆனால் மலைபோன்ற கலங்கள் ஒன்றும் தென்படவில்லை.

சற்று நேரம் இருவரும் அங்கே உரையாடிவிட்டு நாகை "அருங்காட்சியகம்" நோக்கிச் சென்றோம். அங்கே உருப்படியாக ஒன்றும் தேறவில்லை. சிறிது நேரம் அதைச் சுற்றிப் பார்த்தோம். அருங்காட்சியகத்தின் மேலேறி பார்த்த பொழுது அங்கிருந்து பரந்து விரிந்த கடலும்,அருகில் தெரிந்த கலங்கரை விளக்கமும் அளவிடமுடியாத மகிழ்ச்சியை அளித்தன.





கலங்கரை விளக்கம்



"முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்
திரைக்கை காட்டும் தென்னாகை"

என்று சுந்தரப் பெருமானால் வர்ணிக்கப்பட்ட இடம் இன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட இடமாகவே அறியப்படுவரைக் குறித்து சிறிது நேரம் உரையாடினோம். மீண்டும் கீழே வந்து அருங்காட்சியகத்தை சுற்றிபார்தத பொழுது "இராஜ ராஜ சோழனின்” செப்பு நாணயங்கள் கண்களில் பட்டன. அவைகளை புகைப்படக்கருவிக்குள் சுட்டுக் கொண்டு அங்கிருந்து மீண்டும் காயாரோகணரின் ஆலயத்திற்குச் சென்றோம்.





சித்திர மண்டபம்


இன்னும் நடை திறக்க ஒரு மணி நேரம் ஆகும் என்று அங்கிருந்த காவலர் அறிவிக்கவே, சரி நாம் அதற்குள் மண்டபத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து அங்கிருந்த மண்டபத்திற்குள் நுழைந்தோம். அது ஒரு "சித்திர மண்டபமாக" காட்சியளித்தது. ஓவியங்கள் சமீபத்தியவை என்றாலும் பார்பதற்கு நன்றாகவே இருந்தன.அந்த சித்திர மண்டபத்தில் "அதி பத்த நாயனாரின் வாழ்க்கை" ஓவியங்கள் ஆக்கப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களை பார்த்தாலே அவருடைய வாழ்க்கை வரலாறு உங்களுக்குப் புரியும். இருப்பினும் அதை சுருக்கமாகக் கூற என் மனம் விழைகிறது.





அதிபத்த நாயனார் வாழ்க்கை வரலாறு-01


அதிபத்த நாயனார் நாகை அருகே உள்ள நுளைபாடியில் மீனவர் குடியில் பிறந்தவர். இவரை 63 நாயன்மார்களில் ஒருவராக "பெரிய புராணம்" அங்கீகரிக்கிறது.மிகச்சிறந்த சிவனடியார்களில் இவரும் ஒருவராவார்.




அதிபத்த நாயனார் வாழ்க்கை வரலாறு-02


ஒவ்வொரு நாளும் மீன் பிடித்து கரையேறியவுடன் ஒரு மீனை சிவனுக்கு காணிக்கையாக கடலில் விட்டுவிடுவது அவர் வழக்கம். "திருவிளையாட"லுக்கு பேர் போன சிவன் அடியாரை சோதிக்க எண்ணினார்.




அதிபத்த நாயனார் வாழ்க்கை வரலாறு-03





அதிபத்த நாயனார் வாழ்க்கை வரலாறு-04


அந்த நாளிலிருந்து அடியார் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் ஒரே ஒரு மீன் மட்டுமே கிடைத்தது அடியாரும் தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் கிடைத்த ஒரு மீனையும் சிவனுக்கு காணிக்கையாக்கி பசியுடனே வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டார். ஒரு நாள் மீன் பிடிக்கச் செல்லும்போது ஒரே ஒரு "தங்க மீன்" கிடைத்தது. வழக்கம் போல் அதையும் சிவனுக்கு காணிக்கையாக்கி பசியுடனே வீடு திரும்ப முனைந்தார். சிவன் அவருடைய உயர்ந்த தூய பக்தியை மெச்சி "ரிஷபாரூடராக" காட்சியருளினார்.





அதிபத்த நாயனார் வாழ்க்கை வரலாறு-05


இந்த காட்சிகளைக் கண்டு இன்புற்று சற்று தென்மேற்கே நம் கவனத்தைச் செலுத்தினால் நாம் கண்ட சிற்பம், பொன்னியின் செல்வனில் நமது கதாநாயகன் வந்தியத்தேவன் சுந்தர சோழ சக்கிரவர்த்தியை முதன் முதலில் தஞ்சை அரண்மணையில் சந்திக்கச் சென்றபொழுது அரண்மணை வாயிலில் பார்த்த சிற்பத்தை ஞாபகப்படுத்தியது. நேயர்களுக்காக ஓவியர் மணியம் திரு.கல்கியின் கற்பனைக்காக வரைந்த ஓவியத்தையும் இங்கு அளிக்கிறோம்.





குதிரை வீரன்





குதிரை வீரன் - பொன்னியின் செல்வனில் மணியத்தின் ஓவியம்


இதற்குள் கோயில் நடை திறந்து விட்டபடியால் இருவரும் ஆவலுடன் சென்று நம் "வேலை"யைத் தொடர்ந்தோம். கோயிலின் உள்ளே நாங்கள் பார்த்து அனுபவித்ததை இதே இதழில் கோகுல் அவர்களின் "காரோணன் குடிகொண்ட கடல் நாகை" கட்டுரையைப் படித்து நேயர்களும் அனுபவிக்கலாம்.

மீண்டும் வேறொரு பயணத்தில் சந்திப்போம். வணக்கம்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.