http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 43
இதழ் 43 [ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
காவிரி! சோழவளநாட்டின் செல்வப்பெண்ணாள். இவளைப் பாடிக்களிக்காத கவியும் உண்டோ? கங்கையினும் புனிதமானவள் என்று ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். "சோழநாடு சோறுடைத்து" என்ற வாக்கிற்கு ஆதாரம் அவள். கோள்நிலை திரிந்தாலும், கோடை நீடித்தாலும் தான் திரியாத் தண்டமிழ் ஜீவநதி. இதோ! பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் வரிகள்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவுற் புட்டெம்பப் புயன்மாறி வான் பொய்ப்பினுந் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி கடலைப் போன்று விரிந்து, புனல் பரந்து, அகண்டப் பிரவாகமாய் இருந்தாளோ! அதனால்தான் கடற்காவிரி என்று பாடினாரோ! இவள் வழங்கும் செல்வத்தையும், சுகத்தையும் அனுபவிக்காத தமிழன்தான் இந்தத் தரணியில் உண்டோ! பண்டுதொடங்கிச் சோழநாட்டின் வாழ்வும் வளமும் இவளைச் சார்ந்தே வளர்ந்துள்ளது. இவளை அனுதினமும் திசைமக்கள் தொழுது ஏற்றுகிறார்கள். கவிஞர்கள், அறிஞர்கள், நாவலாசிரியர்கள் எனப்பலரும் புகழ்பாடுகின்றனர். ஆனால், உரிமை அதிகம் கொண்டாடிப் போற்றியவர்கள் சோழமன்னர்களே! வளவன், காவிரிக்கிழான் என்றால் அது சோழமன்னர்களே! மலை கொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன் வரராச ராசன்கை வாடிளன்ன வந்தெ எனத் தக்கயாகப்பரணி இரண்டாம் இராசராசனைப் பாடுகிறது. (தக்கயாகப் பரணி 549) மேலும், சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ வழியிட்ட வாள்காண வாரீர் என இராசராசசோழன் உலா அதே இரண்டாம் இராசராசனைப் பாராட்டிப் பெருமை கொள்கிறது. மேற்கோள் காட்டப்பட்ட ஒட்டக்கூத்தரின் பாடல்வரிகள் இராஜகம்பீரனின் வீரத்தையும், காவிரிக்கான அவரின் போராட்டத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. (அன்றும் காவிரிநீர் பிரச்சினை இருந்துள்ளதே! கல்வெட்டுச் சான்றுகள் கிடைப்பது காலத்தின் கைகளில் உள்ளது). இந்த நதியென்னும் நல்லாள் நடந்த பாதைகளெல்லாம் பொன்கொழித்தது. பொன்னி என்றும் பெயர் பெற்றாள். தம் குலவிளக்காய்க் கருதிய சோழமன்னர்களின் உயிரணைய தெய்வத்திரு அவளே. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் மன்னனுக்கு, சென்ற நூற்றாண்டில் "பொன்னியின் செல்வன்" என்றப் புதுப்பெயர் கிடைத்ததே! அதற்கு முன்னோட்டமாய் அமைந்த கல்வெட்டுக் கவிதை இதோ! 1. திருமகள் போலப்பெரு நிலச்செல் 2. வியுந்தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியு 3. நுளம்பாடியுந் தடிகைபாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தரவீழ மண்டலமும் திண்டிறல் வென்றித்த 4. ண்டாற்கொண்ட (தன் எ)ழில் வளரூழி எல்லாயாண்டும் தொழுதகை விளங்குயாண்டெ செழியரைத் தேசுகொள் கோவி 5. ராஜஇராஜகேசரிபன்மரா (ன _) இராஜஇராஜதேவர்க்குயாண்டு உயகஆவது அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன் 6. அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவ தென்றுங்கலை புரியுமதிநிபுணன் வெண்கிழான் 7. கணிச் (செ)க்கரமரு பொற்றியன்றன் நாமத்தால் வாமநிலை நி(ற்ற) குங் 8. கலிசிட்டு நீமிர் வைய்கை மலைக்கு நீடுழி இருமருங்கும் நெல்விளைய 9. க்கண்டோன் குலைபுரியும் படை அரசர் கொண்டாடும் பாதன் குணவீரமாமுநிவன் 10. குளிர் வைய்கைக் கோ வேய் திருமகளை, பெருநிலச்செல்வியை உரிமை பூண்டதொடு, நதிநங்கையையும் உரிமை பூண்டதைப் பேசுகிறது. "அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன் அருமொழி" க்கு என்ற கவின்மிகு மெய்கீர்த்திவரிகள், மற்ற ஏனையக் கல்வெட்டுக்களில் காணப்படும் மெய்கீர்த்தியினின்றும் சற்றே மாறுபட்டது. திருமகள், நிலமகள், நதிமகள். இம்மூவரும் தொன்றுதொட்டுப் பிதுரார்ஜிதமாக இராஜராஜசோழனுக்கு உரிமையானவர்களே! மற்றுமொரு முறை மெய்ப்பிக்கின்றன கல்வெட்டு வரிகள். காவிரியையும், அருமொழியையும் இணைத்துப் பேசி மகிழும் கல்வெட்டு இது ஒன்றுதானே!! இவளுக்குப் பொன்னி என்ற பெயர் சொல்லும் கல்வெட்டும் இதுவே! எத்தனை அழகாய், கவிதையாய், சிறப்பாய்க் கல்வெட்டில் செதுக்கிச் சென்றுள்ளார்கள். சென்ற இடமெல்லாம் பொன்மணிகளாய், நெல்மணிகளை வாரி வழங்கி, வளம் கொழித்து, செல்வம் செழித்து, நாடு தழைக்க வைப்பதனால் இவள் பொன்னியா? ஆதவனின் பொற்கிரணங்களை ஆடையென நாள் முழுவதும் அணிந்து கொள்வதனால் பொன்னியா? குபேரனின் நவநிதியும் உடைய சோழ வளநாட்டில் பொங்கிப் பிரவாகமெடுப்பதனால் இவள் பொன்னியா? இந்தப் பொன்னி என்றப் பெயர்ச்சொல்லிற்குப் பொருளும் அவளே! விளக்கமும் அவளே! திரைத்திவலைகள் நுரைப்பூக்கள் ததும்ப நடமிடும் புனல்நிறைந்த பொன்னிநதியை உடைமையாக, உரிமையாகக் கொண்ட சோழன் அருமொழிவர்மனுக்கு என்ற பொருள்படும் கல்வெட்டு வரிகள், இராஜராஜசோழனின் மெய்கீர்த்திக்கு மேலும் மெருகூட்டிச் சிறப்பிக்கின்றது. மேலும், கல்வெட்டுக் கூறும் செய்தியானது, இராஜராஜசோழனின் 21ம் ஆட்சியாண்டில், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பங்களநாட்டு முகைநாட்டுக் கூற்றத்து குணவீரமாமுனிவன் என்ற பெருந்தகை, கலைகளில் நிபுணராய்த் திகழ்ந்த சமணப் பெரியோரான வெண்கிழான் கணிசேகரமரு பொற்றியன் என்பார் பெயரால் கலிசு ஒன்றைக் கட்டியமைத்து வர்ங்கியுள்ளார். (கலிசு? தூம்பு. மடை. எளியத் தமிழில் மதகு) குணவீரமாமுனிவன் பாதங்களை தீதுபுரியும் படையுடைய மன்னர்களும் கொண்டாடியிருக்கிறார்கள். குளிர்தன்மை நிறைந்த வைகைமலைக்கு கோவான அவர். நெடுநாள் வாழ்ந்து வைகைமலைக்கு இருமருங்கிலும் நெல்விளையக் கண்டார். (அதாவது நெடுநாள் உயிர்வாழ்ந்தார் என்பதாம் இதன் விளக்கம்). கல்வெட்டில் காணும் வைகைமலை என்பது போளூர் அருகேயுள்ள திருமலையைக் குறிக்கும். அருமொழியையும், பொன்னிநதியையும் இணைத்துச் சிறப்பிக்கும் சொற்றொடர் கொண்ட கல்வெட்டுச் செய்தியைப் படிக்கும்போது மட்டில்லா மகிழ்ச்சியும், உவகையும், உளப்பூரிப்பும் ஏற்படுகின்றது. ஆத்தி மரங்கள் தலையசைத்து வரவேற்கும். செங்கழுநீர் மலர்கள் புன்னகைத்து நலம் கேட்கும் இந்த வளநாட்டு மண்ணில், காவிரிக்கரையில், முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வாழவேண்டும்!! ஒரு முறையேனும்!! காவிரி புரக்கும் நாடு கிழவோனே! மன்னவனும் நீயே! வளநாடும் உன்னுடையதே! காவிரியும் உன்னவளே! நந்தலாலா! this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |