http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 44

இதழ் 44
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
கூத்தம்பூண்டியான் வலசுக் குடைவரைகள்
அப்பர் என்னும் அரிய மனிதர் - 1
திரும்பிப் பார்க்கிறோம் - 16
The Chola Temple at Pullamangai(Series)
யாருக்கு யார் பகை?
முல்லை மகளே!! வாள் மங்கையே!!
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1 & 2
இதழ் எண். 44 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 16
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நூல்கள் எங்குக் கிடைக்கும் என்று பலரும் கேட்டு வருகின்றனர். தற்போது கிடைக்கும் எங்கள் வெளியீடுகள், அவற்றின் விலை, கிடைக்கும் இடம் பற்றிய தகவல்கள் கீழே தந்துள்ளேன்.

1. பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் ரூ. 120
2. கோயில்களை நோக்கி. . . ரூ. 120
3. வலஞ்சுழி வாணர் ரூ. 120
4. மதுரை மாவட்டக் குடைவரைகள் ரூ. 150
5. மகேந்திரர் குடைவரைகள் (5 படிகளே உள்ளன) ரூ. 100
6. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் ரூ. 100
7. வரலாற்றின் வரலாறு ரூ. 100
8. திரும்பிப்பார்க்கிறோம் ரூ. 50

இந்நூல்கள் அனைத்தும் 'டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், 48. புத்தூர் நெடுஞ்சாலை, திருச்சிராப்பள்ளி - 620 017, தமிழ்நாடு' என்ற முகவரியில் காலை 10 - பகல் 1 மணி வரையிலும் மாலை 5. 30 - இரவு 8. 30 வரையிலும் கிடைக்கும். தொலைப்பேசி எண் 0431 - 2766581. குரியர் அஞ்சல் வழி வேண்டுவோர் தமிழ்நாட்டிற்குள் என்றால் ஐம்பது ரூபாயும் பிற மாநிலங்கள் என்றால் அதற்குரிய தொகையும் நூல்களின் விலைத்தொகையோடு சேர்த்து வரைவோலை அல்லது பணவிடை வழி அனுப்பிப் பெறலாம். வரைவோலை 'டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்' என்ற பெயரில் அமையவேண்டும்.

சென்னையில்

நியு புக் லாண்ட்,
526, வடக்கு உஸ்மான் சாலை,
தியாகராயநகர், சென்னை - 600 017.

தொலைப்பேசி 044 - 28158171

என்ற முகவரியிலும்,

பாரி நிலையம்,
90, பிராடுவே, சென்னை - 600 108,

தொலைப்பேசி 044 - 25270795

என்ற முகவரியிலும்,

பூங்கொடி பதிப்பகம்
14, சித்திரைக்குளம், மேற்கு வீதி,
மயிலாப்பூர், சென்னை - 4.
தொலைப்பேசி : 044 - 24643074

என்ற முகவரியிலும் இந்நூல்களுள் பெரும்பாலானவை கிடைக்கும். வேண்டுவோர் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இனி, திரும்பிப் பார்ப்போம். இந்தியன் எக்ஸ்பிரஸ் திரு. அ. கோபாலனைப் போலவே என்னிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த மற்றோர் இனிய நண்பர் திரு. இராமன் அரசு ஆவார். இந்து நாளிதழின் செய்தியாளராக இருந்த அவர் அமைதியானவர்; ஆழமானவர். எந்தக் கூட்டத்திற்கு வந்தாலும், குறிப்பேதும் எடுக்காமலே கேட்பதையெல்லாம் நினைவில் இருத்தி, நாளிதழில் செய்திகள் ஆக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. தொடக்கக் காலங்களில் பிற நாளிதழ்களில் வரும் எங்கள் கண்டுபிடிப்புத் தகவல்களைப் பார்த்து, தகவல்களின் வளமைக்கேற்பச் சிறியதாகவும் பெரியதாகவும் செய்திகளை வெளியிட்டு வந்த அப்பெருந்தகை, அழுந்தூர்க் கண்டுபிடிப்பிற்குப் பிறகே நேரடியாகத் தொடர்புகொள்ளத் தொடங்கினார். தொலைப்பேசி வழியே பலமுறை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நேரில் பார்க்கும் நேரங்களில் புன்னகையோடு ஒரு வணக்கம். அவ்வளவுதான். என்றாலும், எங்கள் ஆய்வுகளில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அழுந்தூர்க் கண்டுபிடிப்புகளை, இந்து நாளிதழ் ஏறத்தாழக் கால் பக்க அளவிற்குப் படங்களுடன் செய்தியாக வெளியிட்டிருந்தமை கண்டு வியக்காதவர்களே இருந்திருக்க முடியாது. இந்து நாளிதழின் பதிவுகள் வழி எனக்குக் கிடைத்த அறிமுகம் வலிமையானது. அப்போது இந்நாளிதழ் சென்னை, மதுரை என இரண்டு பதிப்புகளே கொண்டிருந்தமையால் மதுரைப் பதிப்பின் வழி எங்கள் கண்டுபிடிப்புகள் பெரும்பாலான தென்மாவட்டங்களுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் போய்ச் சேர முடிந்தது.

சிராப்பள்ளியை அடுத்துள்ள திருவானைக்கா உயர்நிலைப்பள்ளியில் சர். சி. வி. இராமன் விழா ஏற்பாடாகியிருந்தது. அதற்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் வந்திருந்தார். கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமையால் நானும் அங்கிருந்தேன். அடிகளார் பெருந்தகை மேடைக்கு வந்ததும் அரங்கிலிருந்த அனைவரையும் பொதுவாக வணங்கி அமர்ந்தார். அரங்கம் முழுவதும் விரிந்த அவர் பார்வையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த நான் தென்பட்டேன். என்னை அவர் பார்வை சந்தித்ததும் வணக்கம் தெரிவித்தார். நான் அதற்கு முன் அடிகளார் பெருந்தகையை ஓரிரு முறைகளே சந்தித்திருந்தமையால், அந்த வணக்கம் என்னை நோக்கியது என்று கருதவில்லை. சிறியவனான நமக்கா அவர்கள் வணக்கம் சொல்வார்கள், பின்னால் யாரோ பெரியவர்கள் அமர்ந்துள்ளார்கள் போலிருக்கிறது, அவர்களுக்குத்தான் பெருந்தகையின் வணக்கம் எனக் கருதி, வாளாவிருந்தேன்.

அடிகளார் பெருந்தகை என்னை நோக்கிச் சுட்டி, மீண்டும் வணங்கினார்கள். நான் அதிர்ந்து போனேன். என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கையிலிருந்து எழுந்து அப்பெருந்தகையை வணங்கி அமர்ந்தேன். அடிகளார் மெலிதாகப் புன்னகைத்தார்கள். அரங்கிலிருந்த அனைவரும் வியப்பு கலந்த மரியாதையுடன் என்னைப் பார்ப்பதை உணர்ந்தேன். மிகுந்த கூச்சமும் நாணமும் உற்றேன். அத்தனை பெரிய அரங்கில் மிக எளியனான என்னைச் சுட்டி அப்பெருந்தகை தெரிவித்த வணக்கம் என் மீது அவர் கொண்டிருந்த அன்பை அறிவுறுத்தியாகவே உணர்ந்தேன்.

கூட்டம் முடிந்ததும் அடிகளார் பெருந்தகையைக் காண விழைந்தேன். ஆனால், அதற்குள் பெருங்கூட்டம் அவரைச் சுற்றிக்கொண்டது. அந்தக் கூட்டத்திற்குக் காரைக்குடி மின் வேதியியல் நிறுவன இயக்குநர் வந்திருந்தார். அவருடனும் பிறருடனும் பேசிக்கொண்டிருந்த பெருந்தகை, திடீரென, 'கலைக்கோவன்' என்று அழைத்தார்கள். தள்ளி நின்றிருந்த எனக்கு அவர்கள் அழைத்தது கேட்கவில்லை. ஒரு கை என்னைத் தழுவினாற் போல் சுற்றியது. திரும்பிப் பார்த்தேன். திரு. இராமன் அரசு நின்றிருந்தார். 'உங்களை அடிகளார் அழைக்கிறார்' என்றார். நான் விரைந்து முன்னேறக் கூட்டம் வழிவிட்டது. என்னைப் பார்த்துப் புன்னகைத்த அடிகளார், மின் வேதியியல் நிறுவன இயக்குநருக்கு அறிமுகப்படுத்தினார். என் பணிகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறினார். அப்போது அருகிலிருந்த இராமன் அரசு என் ஆய்வுப்பணிகளைப் பற்றி இயக்குநருக்கு எடுத்துக்கூறினார். எப்போதுமே அதிகம் பேசாதவரான திரு. இராமன் அரசுவின் இந்தச் செய்கை என்னை வியப்பிலாழ்த்தியது. இந்த நிகழ்வு அடிகளார் பெருந்தகை மீதும் இராமன் அரசு மீதும் எனக்கிருந்த மதிப்பினைப் பன்மடங்காக உயர்த்தியது.

திரு. இராமன் அரசு ஓய்வுபெற்ற பிறகும் எங்களுடன் நட்புடன் இருந்து வரும் பெருந்தகையாளர். அவர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் எங்களுடைய அனைத்துக் கண்டுபிடிப்புகளும் இந்து நாளிதழில் தவறாமல் இடம்பெற்றன. நாங்கள் தரும் தகவல்களை மெருகேற்றி வெளியிட்டு எங்கள் ஆய்வுப்பணிகளுக்குப் பெருமை சேர்த்தவர் அவர். சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில் பற்றிய எங்கள் ஆய்வுகளின் முடிவுகளைத் தாமே ஒரு கட்டுரையாக்கி இந்து நாளிதழில் முக்கால் பக்க அளவில் படங்களுடன் வெளியிட்டிருக்கிறார். அக்கோயில் தூண் ஒன்றின் மாலைத்தொங்கலில் நாங்கள் கண்டறிந்து வெளிப்படுத்திய வளைகாப்பு, பிள்ளைப்பேறு, தாய்சேய் தொடர்பான சிற்றுருவச் சிற்பங்களின் படங்களை இந்து நாளிதழ் தாங்கியிருந்தது. இச்சிற்பத்தொகுதியின் கண்டுபிடிப்பு முற்சோழர் காலத்திய வாழ்க்கை முறையின் போக்கை ஆராய உதவியது. இக்கோயிலில் இருந்த ஆடற்சிற்பங்களைப் பற்றிய தகவல்களையும் திரு. இராமன் அரசு நன்கு வெளியிட்டிருந்தார்.

சிவபெருமானின் ஆடல்தோற்றங்களைப் பற்றிய ஓர் அரிய கட்டுரையையும் என்னுடன் கலந்துரையாடி இந்து நாளிதழில் அவர் வெளியிட்டிருந்தார். இறைவனின் சதுர, லலித கரணங்களை விளக்கமாக பேசிய அக்கட்டுரை அவரது படைப்புகளில் சிறந்த ஒன்றாகும். திரு. கோபாலனைப் போலவே எங்கள் ஆய்வுகளில் நம்பிக்கை வைத்திருந்த அப்பெருந்தகையால் நாங்கள் பெற்ற பலன்கள் அளவற்றன. எங்கள் கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டின் படித்த உயர்தட்டு மக்களிடையே மிக எளிதாகச் சென்று சேர்ந்தது. அறிஞர்களின் பார்வை வட்டத்திற்குள் எங்கள் ஆய்வு மையம் நுழைந்தது. 'இந்து நாளிதழிற்குச் செய்தி போகிறது, அதனால் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்' என்ற கட்டுப்பாடும் எச்சரிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது. எங்கள் படைப்புகளிலும் கண்டுபிடிப்புகளிலும் வழுக்கல்கள் இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

தவத்திரு அடிகளார் பெருந்தகையைச் சந்திக்கும் வாய்ப்பு நண்பர் இளசை சுந்தரத்தால் அமைந்தது. சிராப்பள்ளி வானொலிக்குச் சிறுவர் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக வந்த இளசை சுந்தரம், நண்பர் சந்திரனால் எனக்கு அறிமுகமானார். சுந்தரத்துடன் சேர்ந்து பல சிறந்த தொடர் நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டுச் சிறார்களுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். வரலாறு, கல்வெட்டு, அறிவியல், உணவு தொடர்பாகப் பல தொடர் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்குள் உரையாடல் போல எங்களால் உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ ஐம்பதிற்கும் மேற்பட்ட இத்தகு அறிவூட்டும் நிகழ்ச்சிகள் அமையக் காரணமாக இருந்தவர் இளசை சுந்தரம். திரு. சுந்தரத்தின், 'சாதகப் பறவைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலைச் சிராப்பள்ளியில் வெளியிடத் தவத்திரு அடிகளார் அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் என்னையும் உரை நிகழ்த்தக் கேட்டிருந்த சுந்தரம், சிராப்பள்ளி வந்து தங்கியிருந்த அடிகளாரை நிகழ்ச்சிக்கு அழைத்துவர என்னைத் துணையாகக் கொண்டார்.

தவத்திரு அடிகளார் நகராட்சிப் பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். நானும் சுந்தரமும் சென்று அவரை அழைத்தோம். அப்போதுதான் முதல் முறையாக அடிகளார் பெருந்தகையை நெருக்கத்தில் சந்தித்தேன். 'கலை வளர்த்த திருக்கோயில்கள்' என்ற என் நூலின் படியை அவரிடம் தந்து வாழ்த்துப் பெற்றேன். தம்முடைய ஆகிவந்த விரல்களால் என் நெற்றி நிறையத் திருநீறிட்டுப் புன்னகைத்தார். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் சுந்தரம் என் பணிகளை அடிகளாருக்கு எடுத்துரைத்தார். அதற்கு முன் அடிகளார் பெருந்தகையை இரண்டு முறை சந்தித்திருந்தாலும் அப்போதெல்லாம் அவருடன் பேசும் வாய்ப்பு அமையவில்லை. முத்தமிழ்க் கலைமன்றத்தில், 'விதைத்தும் முளைக்காத விதைகள்' என்ற தலைப்பில் தமிழர்களின் அலட்சியப் போக்குகள் குறித்துக் கவலை தெரிவித்துப் பேசிய அவர் உரைக்கு நன்றி பாராட்டிப் பேசியவன் நான்தான். மற்றொரு முறையும் அவர் நிகழ்ச்சியில் இருந்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் அவர் பார்வைக்குள் நுழையும் பேறு எனக்கு வாய்க்கவில்லை. அவருடைய அன்பு வட்டத்திற்குள் நானும் இணைந்து கொள்ளும் வாய்ப்பிற்கு வழியமைத்துத் தந்தவர் சுந்தரம்.

கலை வளர்த்த திருக்கோயில்கள் நூலைப் படித்துவிட்டு அடிகளார் எனக்கொரு மடல் எழுதியிருந்தார். என் உழைப்பையும் எழுத்தையும் ஒருசேரப் பாராட்டியதுடன், என் பணிகள் தொடர வாழ்த்தியிருந்தார். மடலின் இறுதியில் இருக்கும், 'என்றும் வேண்டும் இன்ப அன்பு' எனும் தொடர் என்னுள் ஆழமாய்ப் பதிந்தது. அம்மடலுக்கு நன்றி பாராட்டி எழுதியதுடன், தொடர்ந்து எங்கள் ஆய்வு மைய நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்களையும் நாங்கள் நடத்திவந்த மருத்துவச் சொற்பொழிவுகளின் அழைப்பிதழ்களையும் அவருக்கு அனுப்பி வந்தேன். அடிகளார் சமுதாய நல நோக்கில் அமைந்த பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் பங்கெடுத்து வந்தமையால், நான் அனுப்பிய மருத்துவப் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் பற்றிய அழைப்பிதழ்கள் அவரைக் கவர்ந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

எங்களுடைய முதல் மருத்துவ வழக்காடு மன்றம் 9. 1. 1984ல் 'கண்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறும் பொதுமக்கள் குற்றவாளிகளே' என்ற தலைப்பில் அமைந்தது. சிராப்பள்ளியைச் சேர்ந்த புகழ்மிக்க கண்மருத்துவர்களுள் ஒருவரான ஆ. கோவிந்தராஜன் நடுவராக அமைந்தார். மருத்துவராவதற்கு முன் ஆசிரியப் பணியில் இருந்தமையால், நடுவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர்களை நெறிபிறழாமல் வழக்காட வைப்பது அவருக்குத் துன்பமாக இல்லை. நான் வழக்குத் தொடுத்தேன். திரு. சா. தட்சணசுப்பிரமணியன் வழக்கு மறுத்தார். முதல் மருத்துவப் பட்டிமன்றம் 24. 6. 1984ல் நடந்தது. 'இதய நோய்களில் எளிதாகத் தவிர்த்துக்கொள்ளக் கூடியவை இரத்தக்குழாய் நோய்களே! வால்வு நோய்களே!' என இரண்டு வேறுபட்ட தலைப்புகளில் பொது மருத்துவர்கள் திரு. சு. தியாகராசன், திரு. சு. பொன்னையா, திரு. சா. க. பழனிசாமி, திரு. கோ. பாலகோபால் நால்வரும் இரண்டு அணிகளாய்ப் பிரிந்து பேசினர். நான் நடுவராக இருந்து தீர்ப்புக் கூறினேன்.

இரண்டாவது வழக்காடு மன்றம் 'நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தவறும் பொதுமக்கள் குற்றவாளிகளே' என்ற தலைப்பில் அமைந்தது. ஆ. கோவிந்தராசன் நடுவராக இருந்தார். நான் வழக்குத் தொடுக்க தட்சணசுப்பிரமணியன் மறுத்தார். இந்த வழக்காடு மன்றம் மக்களின் பரவலான வரவேற்பைப் பெற்றதால், பல இடங்களில் பலமுறை நடத்தும்படியாயிற்று. தஞ்சாவூரிலும், குழித்தலை அருகிலுள்ள அய்யர்மலையிலும் நிகழ்ந்த வழக்காடு மன்றங்களுக்கு பேரா. அரசு நடுவராக இருந்தார். கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடந்தபோது என் வாழ்வரசி மருத்துவர் க. அவவை நடுவராக அமைந்தார். நவல்பட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலையில் மூவாயிரத்திற்கும் மேலான மக்கள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சிக்குக் கோவிந்தராசனே நடுவராக வந்திருந்தார். நாங்கள் அமைத்த வழக்காடு மன்றங்களிலேயே பெரும்புகழ் பெற்றுப் பல்வேறு இடங்களில் ஏறத்தாழ இருபது முறைகள் நிகழ்த்தப்பட்ட ஒரே வழக்காடு மன்றம் இதுதான். திருச்சிராப்பள்ளி வானொலியில் இந்நிகழ்ச்சி பலமுறை ஒலிபரப்பானது.

23. 9. 1984ல் 'உணவுப்பாதை நோய்களில் எளிதாகக் தவிர்த்துக் கொள்ளக்கூடியவை உணவுப் பழக்கங்களால் வருபவையே, நோய்க்கிருமிகளால் வருபவையே ' எனும் இருவேறு தலைப்புகளில் அமைந்த மருத்துவப் பட்டிமன்றத்தில் பா. நா. வாஞ்சீசுவரன், தே. நாராயணன், சு. பழனியாண்டி, சா. க. பழனிசாமி ஆகிய மருத்துவர்கள் பங்கேற்க, மருத்துவர் சு. பொன்னையா நடுவராக இருந்து தீர்ப்புக்கூறினார். இதையடுத்து 24. 2. 1985ல் நாங்கள் நிகழ்த்திய 'குழந்தை நலம் போற்றாத பெற்றோர்கள் குற்றவாளிகளே' எனும் தலைப்பிலமைந்த வழக்காடு மன்றம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வழக்கைக் குழந்தை நல மருத்துவர் ஜ. சி. இலட்சுமி நாராயணன் தொடுத்தார். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி மனையியல்துறைப் பேராசிரியை திருமதி இலலிதா ஜெயகர் ஒரு தாயின் நிலையில் இருந்து வழக்கு மறுத்தார். நான் நடுவராக இருந்தேன். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத நிலையிலும் திரு. இலட்சுமிநாராயணன் இந்த வழக்காடு மன்றத்தில் நன்கு உரையாற்றினார். அவரது உரையில் உண்மையின் ஒளியும் ஆணித்தரமான புள்ளிவிவரங்களும் நிறைந்திருந்தன. இலலிதா ஜெயகர் எவவளவோ முயன்றும் வழக்கைத் தம் பக்கம் திருப்பமுடியவில்லை. தீர்ப்பு இலட்சுமிநாராயணனுக்குச் சாதகமாகவே அமைந்தமைக்கு அவர் வாதத்திறமையும் உண்மையும் துணையாயின.

23. 6. 1985ல் நாங்கள் நிகழ்த்திய வழக்காடு மன்றம் அரசின் கவனத்தை ஈர்த்தது. 'குடும்பக் கட்டுப்பாடு திட்டம் குற்றமுடையதே' என்ற தலைப்பில் இந்த மருத்துவ வழக்காடு மன்றம் அமைந்ததால், இதை நடத்தக்கூடாது என்று குடும்பநலத்துறை தடையெழுப்பியது. நான் அத்துறை சார்ந்த அனைவரையும் வழக்காடு மன்றத்திற்கு வருமாறு அழைத்தேன். அவர்கள் வேண்டியவாறு 'குற்றமுடையதே' என்றிருந்த தலைப்பைக் 'குற்றமுடையதா?' எனும் கேள்வியாக மாற்றினோம். நலத் துறையினர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த வழக்காடு மன்றத்தில் குற்றமுடையதே என்று பேரா. அரசுவும், சா. தட்சணசுப்பிரமணியனும் வழக்குத் தொடுக்க மருத்துவர் சு. பொன்னையாவும் திரு. வெ. திருப்புகழும் வழக்கு மறுத்தனர். வழக்கு மிக முக்கியமான நாட்டுச் சிக்கல் பற்றியதென்பதால் 'நடுவர் குழு' அமைத்தோம். புனித சிலுவைக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்த திருமதி பவானிசங்கரி நண்பர் இரா.இராஜேந்திரன், நான் மூவரும் நடுவர்களாக அமர்ந்தோம். பெரும் மக்கள் திரளிடையே நிகழ்ந்த இந்த வழக்காடு மன்றம் முழுமையும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வானொலியில் ஒலிபரப்பானது. 'குடும்பநலத்திட்டம் குற்றமுடையதன்று' என்ற எங்கள் தீர்ப்பே நாளிதழ்களில் செய்தித் தலைப்பானது.

இந்த மருத்துவ வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்கள் பற்றியெல்லாம் நான் அனுப்பிவைத்த அழைப்பிதழ்கள் வழியும் செய்தித்தாள்கள் வழியும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிந்திருந்தார். அதற்குப் பிறகே திருவானைக்காவில் சி. வி. இராமன் விழாவில் நான் அவரைச் சந்தித்த நிகழ்வு அமைந்தது. அந்நிகழ்விற்குச் சற்றுப் பிறகு என் பணிகளை வாழ்த்தி அடிகளார் மடலொன்று எழுதியிருந்தார். அதில் திருஎறும்பியூர் அருள்நெறித் திருக்கூட்ட விழாவில் கலந்துகொள்ளத் தாம் வரவிருப்பதாகவும் அதுபோழ்து தம்மைச் சந்திக்குமாறும் கேட்டிருந்தார். அருள்நெறித் திருக்கூட்டத்தைச் சேர்ந்த சிவத்திரு ப. மூக்கப்பிள்ளை என்பார் நான் வரவேண்டிய இடம், நாள், நேரம் அனைத்தும் கூறி உதவினார். அடிகளாரைச் சந்திக்கும் பேறு கிடைத்தமை குறித்து மகிழ்ந்த நான் அவர்கள் குறித்திருந்த நாளில் எறும்பியூர்ச் சென்றேன். திருக்கூட்டத்தார் என்னை வரவேற்று இருக்கச் செய்தனர். அந்த நிகழ்ச்சிக்குச் சிராப்பள்ளி வீகேயென் நிறுவனத்தின் தலைவர் திரு.கண்ணப்பனும் வந்திருந்தார். கொடை வள்ளலான அப்பெருந்தகையைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தபோதும் அன்றுதான் முதன்முறையாக அவரைச் சந்தித்தேன். இருவரும் அடிகளார் பற்றிப் பேசி மகிழ்ந்தோம்.

அடிகளார் வந்ததும் எங்களை நலம் விசாரித்தார். நிகழ்ச்சி தொடங்கியது. அடிகளார் உரையாற்றியபோது என்னையும் திரு. கண்ணப்பனையும் கூட்டத்தாருக்கு அறிமுகப்படுத்தி, எங்கள் பணிகளைக் குறிப்பிட்டு, வாழ்த்திப் பேசினார். பிறகு என்னை மேடைக்கு அழைத்தார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்னை எதற்கு அழைக்கிறார் என்று கருதியவாறே மேடைக்குச் சென்றேன். அருகிலிருந்தவர் தந்த பொன்னாடையைப் பிரித்து என்னை அருகழைத்துப் போர்த்தியவர் கண்கள் மலரச் சிரித்தபடி எனக்கு வணக்கம் தெரிவித்தார். அடுத்துக் கண்ணப்பனுக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது. நான் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தேன். பொன்னாடை அணிவிப்பு நிகழ்வு முடிந்ததும் எங்களை மீண்டும் பாராட்டிப் பேசிய அடிகளார் உழைப்பின் பெருமையை வலியுறுத்தினார். எங்கள் உழைப்பே எங்களுக்குப் பெருமை சேர்த்தது என்று கூறி மகிழ்ந்தார். விழா முடிவில் அவரிடம் வியப்புத் தெரிவித்தபோது, 'உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும். அது நமது கடமை' என்று தட்டிக்கொடுத்தார். அவரது பெருந்தன்மையும், எளிய உழைப்பையும் பெரிதாக நினைத்துப் போற்றும் அவரது உள்ளத்தின் விரிவையும் நினைத்து வியந்தவாறே இல்லம் திரும்பினேன். 'பார்க்க வா' என்று அழைத்துப் பலர் முன்னிலையில் பாராட்டு விழா நிகழ்த்திவிட்டாரே என்ற எண்ணமே சிந்தனையில் உறைந்தது. அவருடைய அன்புக்கு ஆட்பட்ட மகிழ்வு புதிய உற்சாகம் தந்தது.மேலும் உழைக்கும் திடம் தந்தது. வாழ்வரசியிடம் என் பேறு பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன்.

தவத்திரு அடிகளாரிடமிருந்து ஒரு நாள் தொலைப்பேசி அழைப்பு வந்தது. ஆவுடையார் கோயில் பற்றிய ஒலி, ஒளிக்காட்சித் தொகுப்பொன்றைச் சென்னைத் தொலைக்காட்சி வழங்கவிருப்பதாகவும் அதில் நான் அக்கோயில் கல்வெட்டுகள் குறித்துப் பேசவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். படப்பிடிப்புக்குக் குன்றக்குடி வரவேண்டும் என்றும் கூறினார். நான் ஒப்புக்கொண்டேன். திருமடத்து அன்பரும் கவிஞர் பெருந்தகையுமான திரு. மரு. பரமகுரு, அடிகளாரின் உதவியாளராக இருந்தார். வரவேண்டிய நாள், வழி அனைத்தும் அவரே கூறி உதவினார். குறிப்பிட்ட நாளில் திருமடம் சேர்ந்தேன்.

அடிகளார் அறையில் படிப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் நான் உள்ளே அழைக்கப்பட்டேன். தொலைக்காட்சி நிறுவனத்தார் அடிகளார் அமர்ந்து பேசிய நாற்காலியைச் சுட்டிக்காட்டி, அதில் அமர்ந்து கல்வெட்டுகள் பற்றிய உரையை நிகழ்த்தச் சொன்னார்கள் அப்பெருந்தகை அமர்ந்திருந்த நாற்காலியில் அமர உள்ளம் இடம் கொடுக்கவில்லை. அதனால், நின்று கொண்டே பேசுவதாகக் கூறினேன். அது இயல்பாக இராதென்ற நிகழ்ச்சிப் பொறுப்பாளர் உட்காருமாறு வலியுறுத்தினார். என் தயக்கத்தின் காரணத்தைப் புரிந்துகொண்ட அடிகளார், என் அருகே வந்து என்னைப் பிடித்து அந்த நாற்காலியில் அழுந்த அமர்த்தினார். அவர் முகமெல்லாம் சிரிப்பு. என் தயக்கமும் அவர் கைகளால் பற்றப்பட்டதால் எனக்கேற்பட்ட அதிர்வும் அவரைப் புன்னகைக்க வைத்தன. 'இது என்ன அரியணையா? இப்படி அஞ்சுகிறீர்கள்! உட்காருங்கள்' என்று மென்மையாகச் சொன்னார். அவருடைய சிரிப்பு என் கூச்சத்தை அகற்றியது.

ஒளிப்படக் கருவி இயங்கத் தொடங்கியதும். நான் அறையை மறந்தேன். சூழலை மறந்தேன். என் கண் முன் ஆவுடையார் கோயில் மட்டுமே நின்றது. அந்தக் கோயிலை இருமுறை பார்வையிட்டிருந்ததால் அக்கோயிலின் படப்பிடிப்பு கண் முன் நின்றது. கோயிலின் சிற்பக் காட்சிகள், கட்டமைப்பு, கல்வெட்டுகள் அனைத்தும் பேசி நிறுத்தினேன். நிறுத்திய பிறகுதான் அடிகளாரின் அறையில் அவர் முன் அமர்ந்திருப்பதே நினைவிற்கு வந்தது. அடிகளார் தட்டிக்கொடுத்தார்.

ஒரே மூச்சில் எல்லாவற்றையும் முடித்துவிட்டமை குறித்துப் படப்பிடிப்பாளர்கள் வியப்புத் தெரிவித்தனர். 'இரண்டு, மூன்று முறையாவது நிறுத்தி, நிறுத்தி எடுக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். என் வேலையைக் குறைத்துவிட்டீர்கள்' என்று மகிழ்ச்சி தெரிவித்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர், கோயில்கள் பற்றித் தொடர்ந்து பணியாற்ற அழைத்தார். ஒப்புக்கொண்டேன். வாய்ப்பளித்த அடிகளார் பெருந்தகைக்கு நன்றி கூறி விடைபெற்றேன். திருமடத்திலேயே உணவருந்திச் செல்லுமாறு பணித்தார்கள். பரிமாறும் இடம் தூய்மையாக இருந்தது. உணவும் சுடச்சுடப் பரிமாறப்பட்டது. கவிஞர் பரமகுரு உடனிருந்து கவனித்துக்கொண்டார். அடிகளார் போலவே அவரும் அன்பான மனிதர். இன்றளவும் அவருடைய அன்பு வட்டத்திற்குள் நான் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமை.

'கலை வளர்த்த திருக்கோயில்கள்' என்ற என் முதல் நூலைத் தொடர்ந்து இன்னொரு நூல் வெளியிடலாம் என்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக உரிமையாளர் திரு. இரா. முத்துக் குமாரசாமி எழுதியிருந்தார். நாளிதழ்களிலும் வார, திங்கள் இதழ்களிலும் வெளியான பதினான்கு கட்டுரைகளை மீண்டும் படித்துச் செப்பம் செய்து நூலாக்கினேன். 'காட்டுக்குள் ஒரு கலைக்கோயில்' என்ற முதற் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்தது. சிராப்பள்ளிக் குழித்தலைச் சாலையிலுள்ள அல்லூர் என்னும் சிற்றூரில் காடு போல் வளர்ந்திருந்த புதர்களின் நடுவில் மாந்தோப்பு ஒன்றின் அருகாமையில் இருந்த முற்சோழர் கோயிலான நக்கன் தளியே அக்கட்டுரையின் கரு.

இந்தக் கோயிலை முதல் ஆய்வு செய்தபோது, கோயில் வளாகத்தில் பாம்புகளின் நடமாட்டம் இருப்பதை அறியமுடிந்தது. கோயிலைச் சுற்றிவர வாய்ப்பில்லாதவாறு புதர்கள் மண்டியிருந்தன. திரு. ஆறுமுகம் உதவியுடன்தான் புதர்களை ஒதுக்கிச் சுற்றிவர முடிந்தது. முதற் பராந்தகர், சுந்தரசோழரின் அருமையான கல்வெட்டுகள் உள்ள கோயில் அது. அந்தக் கோயிலில் உள்ள முருகன் சிற்பம் எழிலானது. கந்தர்வர் ஒருவரின் சிற்பமும் இங்குள்ளது. அதை திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் தம் நூலொன்றில் சண்டேசுவரர் என்று பிழையாகக் குறித்துள்ளமையையும் என் கட்டுரையில் சுட்டியிருந்தேன். தினமணி கதிரில் வெளியான அக்கட்டுரையில் கோயில் வளாகத்தை வண்ணித்திருந்த பத்திகளை, 1986ல் என் எழுத்து நடை எப்படி இருந்தது என்பதை நீ அறியவேண்டும் என்பதற்காகவே கீழே தந்துள்ளேன்.

'அல்லூர் நக்கன் கோயில் ஒரு மெளனமான சோகத்துடன், காட்டுக்குள் ஒரு கலைக்கோயிலாய்த் தனித்து நிற்கிறது. திருச்சிராப்பள்ளி - கரூர் நெடுஞ்சாலையில், சிராப்பள்ளியிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில், நெடுஞ்சாலையின் இடப்புறம் பிரியும் குறுகலான மண்பாதை ஒன்று அல்லூர் நக்கன் கோயில் மறைந்திருக்கும் தோப்புப்பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் இப்பாதையில் நடந்து வந்ததும் முள் வேலிகளின் நடுவில் இருக்கும் சிறு வழி ஒன்றின் துணையால் இக்கோயில் வளாகத்தை நெருங்கலாம். உள்ளே, காடாய் மண்டிக்கிடக்கும் காட்டுக் கொடிகளும் நெடிதுயர்ந்த மரங்களும் பரிவோடு எழும் பறவைகளின் கீச்சொலிகளும் இனம் புரியாத பூச்சி பொட்டுகளின் சங்கநாதங்களும் ஆள்நடமாட்டம் அற்ற சுற்றுப்புறமும் ஏதோ ஒரு காட்டுப் பகுதிக்குள் நுழைந்துவிட்ட உணர்வை உண்டாக்குகின்றன. இங்குதான் சிறியதாய், ஆனால், சிறப்பான கட்டட அமைப்புடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளும் கலை எழில் ததும்பும் சிற்பப் புதையல்களுமாய் அல்லூர் நக்கன் கோயில் பசுபதீசுவரர் கோயிலாய்ப் பெயர் மாற்றம் பெற்று, பழைமையின் பெருமைகள் பெரிதும் மங்கிய நிலையில், பரிதாபக் கோலத்தில், புரப்பார் யாருமின்றிப் பொலிவிழந்து நிற்கின்றது.

கோயிலின் மேல்தளத்தில் மரங்களின் கிளைகள் வாகாய்ப் படர்ந்துள்ளன. கோயிலின் வடக்குப்புறத்தில் உள்ள திருச்சுற்றைச் சுற்றிவர விரும்புவோர், பெரியதொரு போராட்டத்துக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். பரிணாம வளர்ச்சியின் அத்தனை கட்டங்களையும் இங்கே நாம் செயல்படுத்தவேண்டும். சில இடங்களில் குதித்தும் சில இடங்களில் தாவியும் சில இடங்களில் ஊர்ந்தும் இன்னும் சில இடங்களில் குனிந்தும் மட்டுமே திருச்சுற்று வந்து மகிழமுடியும். இத்தனை செயல்களும் அத்தனை எளிதாக முடிந்துவிடக் கூடியவையும் அல்ல. பல ஆண்டுகளாக உதிர்ந்து அடுக்கடுக்காய்க் குவிந்திருக்கும் பழுத்த இலைகள் ஒருபுறம்! முட்செடிகளின் முரட்டுத்தனமான வளர்ச்சி ஒருபுறம்! இப்படித்தான் கிளைவிடவேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் விருப்பம் போலெல்லாம் கிளைவிட்டிருக்கும் காட்டுச் செடி, கொடிகளின் அடர்த்தியான நெரிசல் இன்னொருபுறம். மொத்தத்தில் இக்கோயிலின் வடக்குப்புறத்தில் திருச்சுற்று வருவதென்பதே ஒரு கின்னஸ் சாதனைதான். அப்படி யாராவது தப்பித்தவறி இந்தச் சாதனையை நிகழ்த்திவிட்டால் அவர்களை அரவணைத்து வரவேற்பதற்காகவே எதிரில் ஒரு பெரிய பாம்புப் புற்று. இதிலிருந்து ஒரு பாம்பு அவவப்போது கோயில் வளாகத்திற்கு வந்து செல்கிறது.'

சக்கராயி, மோனத் தவத்திலொரு மாடமேற்றளி, புதிய செப்பேடு, வாடிக்கொண்டிருக்கும் வடகைலாசம், சண்டீசக் குழப்பம், புலிவலம் காட்டிய புதையல், மிதக்கும் கோயில், பனமங்கலத்தில் ஒரு புதுமங்கலம், தலைக்கோல், உறையூரில் ஒரு பழங்கோயில், முழையூர்ப் பரசுநாதர், கல்லில் வடித்த காதல் கவிதைகள், அப்பக்குடத்தான் என்னும் பதின்மூன்று கட்டுரைகளுடன், முதற் கட்டுரையான காட்டுக்குள் ஒரு கலைக்கோயிலும் இணைந்து இந்நூலாயின. இதை உருவாக்கவும் மெய்ப்புப் பார்க்கவும் அப்போது என் மாணவியராக இருந்த மு. நளினி, இரா. வளர்மதி இவர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். இந்நூலுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின், 'சிறந்த நூல்' பரிசு கிடைத்தது. அப்போது கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் க. அன்பழகன் இப்பரிசை வழங்கிப் பாராட்டினார். அன்றிரவு தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல்துறைப் பேராசிரியராக இருந்த புலவர் செ. இராசுவின் இல்லத்தில்தான் எங்களுக்கு இரவு உணவு அமைந்தது. விழாவிற்கு என் வாழ்வரசியும் பிள்ளைகளும் நளினியும் ஆறுமுகமும் வந்திருந்தனர்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.