http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 44

இதழ் 44
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
கூத்தம்பூண்டியான் வலசுக் குடைவரைகள்
அப்பர் என்னும் அரிய மனிதர் - 1
திரும்பிப் பார்க்கிறோம் - 16
The Chola Temple at Pullamangai(Series)
யாருக்கு யார் பகை?
முல்லை மகளே!! வாள் மங்கையே!!
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1 & 2
இதழ் எண். 44 > தலையங்கம்
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

தமிழைச் செம்மொழியாக அறிவித்திருப்பதைக் குறித்து நாமனைவரும் மிக்க பெருமிதம் கொண்டுள்ளோம். இச்செம்மொழியை மேம்படுத்த இந்திய அரசு ஏராளமான நிதி ஒதுக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. மைசூரிலிருக்கும் தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையத்தைச் சென்னைக்கு மாற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது தமிழக அரசு. இம்மையத்தின் முதல்கட்டப் பணிகளாகக் கீழ்க்கண்டவை முன்மொழியப்பட்டுள்ளன.

Definitive Editions of Ancient Tamil Works
Translation of Ancient Tamil Works
Historical Grammar of Tamil
Antiquity of Tamil: An Inter-Disciplinary Research
Synchronic And Diachronic Study of Tamil Dialects
India As a Linguistic Area
Digital Library For Ancient Tamil Studies
Online Teaching of Classical Tamil
Corpus Development For Classical Tamil Works
Visual Episodes on Classical Tamil

இத்திட்டத்தின்படி சங்க இலக்கியங்களை நல்ல உரையுடன் கூடிய ஒரு பதிப்பாகக் கொண்டு வரச் சில தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஒரு முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழில் நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட (M.Phil, Ph.D) ஆய்வுகள் மேற்கொள்ளும் மற்றும் மேற்கொண்ட மாணவர்களுக்குச் சங்க இலக்கியம் மற்றும் சமய இலக்கியங்களில் வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கென நல்ல தமிழ் அறிஞர்களைக் கொண்டு வகுப்புகள் எடுக்கப் பயிற்சிப் பட்டறைகளுக்காகப் பல்லாயிரம் ரூபாய் செலவழிக்கப்படுகின்றது. இத்திட்டங்கள் தமிழை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்குடன் தொடங்கப்பட்டவை. எனவே மிகவும் போற்றத்தக்கன.

ஆனால் தமிழை மேம்படுத்த அரசு செய்யக்கூடியது இவை மட்டும்தானா? இத்திட்டங்களால் மெய்யான பயன் ஏதேனுமுண்டா? இப்பட்டியலில் உள்ள சில திட்டங்கள் அவசியமானவைதானா என்று ஆராயப்புகுந்தோமானால், அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. பல வருடங்களுக்கு முன்னமே திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் சிறந்த தமிழ் அறிஞர்களின் துணைகொண்டு நல்ல உரையுடன் கூடிய சங்க இலக்கிய நூல்களைப் பதிப்பித்திருக்கின்றனர். அப்புத்தகங்கள் இப்பொழுது கிடைப்பதில்லை. ஏற்கனவே செய்துவிட்ட இந்தப் பணியை மறுபடியும் தொடக்கத்திலிருந்து செய்வதனால் என்ன பயன் விளையும்? அப்புத்தகங்களை மறுபதிப்பு செய்து குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கும் வகை செய்தாலே போதுமே. அதற்கு இப்பொழுது செலவாகும் தொகையில் ஒரு சிறுபங்கு தொகைதான் செலவாகும். மக்களுக்கும் நல்ல சங்க இலக்கியப் பதிப்பு கிடைக்கும்.

தமிழில் நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களோ, தங்கள் பாடத்திட்டங்களில் சங்க இலக்கியங்களையும் சமய இலக்கியங்களையும் ஏற்கனவே படித்து அதைப்பற்றி நன்கு அலசி விவாதம் செய்யும் திறன்பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு மேலும் அவற்றைப் பற்றியே வகுப்புகள் எடுப்பதால் என்ன முன்னேற்றம் ஏற்படும்? இதுவும் அவசியமில்லாத செலவாகவல்லவா இருக்கின்றது. இப்பயனில்லாத திட்டங்களுக்குப் பதில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துப் பல பயன்தரும் திட்டங்களை அரசு செயல்படுத்தலாம். நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட மாணவர்களுக்குச் சங்க இலக்கிய வகுப்பெடுப்பதை விடுத்து, அவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துத் தமிழ் இலக்கியங்களை நுட்பமாகப் பல வகையில் ஆராயும் வகை செய்யலாம். இப்படி ஆராய்ந்து தெளிந்த கருத்துகளைப் பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் எளிய தமிழ்நடையில் சிறுசிறு புத்தகங்களாய்ப் பதிப்பிக்கலாம்.

சங்க இலக்கியங்களுக்குப் பதில் அவசியமான பல பதிப்புகளை அரசு கொண்டு வரலாம். உதாரணமாக இதுவரை பதிப்பிக்கப்படாத தமிழ்க் கல்வெட்டுகளைப் பதிப்பித்தால் வரலாற்றாய்வாளர்களுக்கும், வரலாற்றில் ஆர்வம் கொண்ட பொதுமக்களுக்கும், மற்றும் வரலாறு பயிலும் மாணவர்களுக்கும் எவ்வளவோ உபயோகமாக இருக்கும். மேலும் தமிழக வரலாற்றை முழுமையாகத் தெரிவிக்கும் வகையில் ஒரு நூலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சிறந்த வரலாற்றறிஞர்களின் துணைகொண்டு தமிழ் வரலாற்றினைப் பற்றிய முழுமையான நூலைப் பதிப்பிக்க முயற்சி செய்யலாம். கோயிற்கலைகள் சம்பந்தப்பட்ட பல சொற்கள் இன்றளவும் சமஸ்கிருத மொழியிலேயே வழங்கி வருகின்றது. இவ்வார்தைகளுக்குத் தமிழ் அறிஞர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்துப் பல தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆராய்ந்து சரியான தமிழ்ப்பதங்களை ஒரு அகராதிபோல் பதிப்பிக்கலாம். இப்படிச்செய்வது தமிழிலேயே கோயிற்கலைகளைப் பற்றிப் பயிலவும் எழுதவும் வகை செய்யும். மேலும் சமஸ்கிருத எழுத்துக்கு ஈடான பழந்தமிழ்ச் சொற்களும் புத்துயிர் பெறும்.

பழங்கோயில்கள் அழியாமலும், அவற்றிலுள்ள கல்வெட்டுகள் பாழாகாமலும் அக்கோயில்களுக்கு நிதி ஒதுக்கி அவற்றைச் சீர்படுத்திப் பாதுகாக்கலாம். அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கித் தமிழ்வரலாற்று மாணவர்களுக்கும், வரலாற்றில் ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் முன்வருபவர்களுக்கும் அகழ்வாராய்ச்சி எப்படிச் செய்வது என்பது பற்றி வகுப்பெடுத்து அவர்களைத் தயார்படுத்தி மேலும் மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் செய்யலாம். இது ஏதோ ஒரு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியில் வேறொரு திட்டத்தைச் செயல்படுத்தக் கோரும் விண்ணப்பமல்ல. தமிழ்மொழி வரலாறும் தமிழக வரலாறும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் பானையோடுகளில் பொறிந்திருந்த எழுத்துகள் மூலமாகவே தமிழ் எழுத்துவடிவம் கி.மு 500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று அறிவியல் பூர்வமாய் நிறுவியுள்ளனர். இதுபோல மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் செய்வதன் மூலம் தமிழ் எழுத்துகள் மற்றும் பழந்தமிழரின் கலாசாரம் பற்றிய பல புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் பிறமொழியிலுள்ள அரிய நூல்களைத் தமிழ்ப்படுத்தி வெளியிடலாம். அறிவியல் தமிழ் வளர்ச்சியுற கணிதம், மருத்துவம், பொறியியல் என அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிடலாம். இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஊடகங்கள் செலுத்திவரும் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், தமிழகத்திலிருக்கும் ஊடகங்களும் தமிழில் பிறமொழிச்சொற்கலப்பைச் செவ்வனே செய்து வருகின்றன. இது தமிழனுக்குத் தலைகுனிவு தரும் செயல்தான். ஆனால் இப்படி எதுவும் நேராமல், ஊடகத்தமிழ் மறுமலர்ச்சி பெறும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்தால், எல்லாத் தொலைக்காட்சிகளும் மக்கள் தொலைக்காட்சி போல் மாற வாய்ப்புண்டு.

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றில்லாமல், நாமும் வீழாமல், தமிழும் வாழ, ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாகப் பயன்படுத்தி, ஆக்கபூர்வமான புதுமையான திட்டங்களை ஏற்படுத்தி, அவற்றைச் சீரான முறையில் செயல்படுத்தினால் தமிழ் மேன்மேலும் முன்னேற்றமடைந்து எக்காலத்திலும் செம்மொழியாக நிலைத்து நீடூழிவாழும்.

அன்புடன்
ஆசிரியர் குழுthis is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.