http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 44

இதழ் 44
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
கூத்தம்பூண்டியான் வலசுக் குடைவரைகள்
அப்பர் என்னும் அரிய மனிதர் - 1
திரும்பிப் பார்க்கிறோம் - 16
The Chola Temple at Pullamangai(Series)
யாருக்கு யார் பகை?
முல்லை மகளே!! வாள் மங்கையே!!
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1 & 2
இதழ் எண். 44 > நூல்முகம்
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1 & 2
ச. கமலக்கண்ணன்
வரலாறு.காம் மின்னிதழ் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், வாசகர்கள் எண்ணிக்கை பெருகியிருப்பது மட்டுமின்றி, பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வாசகர்களின் கடிதங்களுக்கு உடனுக்குடனோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ தேவைக்கேற்பப் பதிலளித்து வருகிறோம். ஒரு வாசகரின் பின்னூட்டத்திற்கு அளிக்கும் மறுமொழி மற்ற வாசகர்களுக்கும் சில பயனுள்ள தகவல்களை அளிக்கும் நிலையிலிருந்தால், அடுத்த மாத இதழின் தகுந்ததொரு கட்டுரையில் வெளியிடும் வழக்கத்தையும் மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, இந்த மாதம் திரு.முத்தையா என்ற வாசகர் சென்றமாதம் வெளியான மாங்குளம் குடைவரை என்ற கட்டுரைக்கு அளித்திருந்த பின்னூட்டத்திற்கான பதிலை அனைத்து வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம். இந்த வாய்ப்பினை அளித்த திரு.முத்தையா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




முத்தையா :

மதிப்பிற்குரிய வரலாறு குழுவுக்கு என் வணக்கங்கள். உங்கள் குழுவில் இணைந்து கொள்ள மிக்க ஆசையாய் உள்ளது. இது குறித்த விதிமுறைகளை அறியத் தந்தால், மேல் விபரங்களைத் தருகிறேன்.

உங்கள் ஆராய்ச்சிகளில் நீங்கள் வரலாற்றை அணுகும்போது நடுநிலையுடன் அணுக வேண்டுகிறேன். ஓர் உதாரணம். குடைவரைக் கோவில்களை நீங்கள் சிவாலயங்களாகவே கருதி வருகிறீர்கள். சிவலிங்கம் இருப்பதனாலும் தற்போது வணக்கத்தில் உள்ள விஷ்ணு போன்ற சிற்பங்கள் உள்ளதாலும் அவைகளைத் துவக்கத்தில் இருந்தே சிவாலயமாகக் கருதுகிறீர்கள். நீங்கள் தயவுசெய்து ஜைனக் கொள்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். குடைவரைகள் அனைத்தும் ஜைனப் பள்ளிகள் ஆகும். ஜெயின் சமயத்தில் தற்போது நாம் வழிபடும் சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன், சரஸ்வதி, கணபதி உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களும் உண்டு. ஜைனக் கோவில்களே பின்னர் சிவ, வைஷ்ணவக் கோவில்களாக மாற்றப்பட்டன. இவைகள் உங்களுக்கும் தெரிந்தே இருக்கும். அவைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி




எங்கள் குழுவில் இணைய விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பும் நண்பர்களின் எண்ணிக்கை சமீபகாலமாகக் கூடிவருகிறது. வரலாறு.காம் ஆசிரியர் குழுவை நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்புப்பெற்ற சில வாசகர்கள் மட்டுமின்றி, மற்ற பெரும்பாலான வாசகர்களுக்கும் எங்கள் குழு வரலாற்றின்மீது பற்றுக்கொண்ட தன்னார்வலர்களால் ஆனது என்பது தெரிந்திருக்கும். இதில் மற்றவர்கள் சேர்வதற்குக் கடுமையான விதிமுறைகள் ஏதுமில்லை. தமிழக வரலாற்றின்மீது ஆர்வமும், தமிழ்மீது பற்றும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் விழைவும், கற்றுக் கொள்வனவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையும் கொண்டிருந்தால், ஏற்கனவே நீங்கள் எங்கள் குழுவில் ஒருவர் என்றுதான் பொருள். இம்மின்னிதழில் கட்டுரை எழுதத் தடையேதும் இல்லை. எங்களது படைப்புகள் மட்டுமே வெளியாகவேண்டும் என்று நாங்கள் எண்ணுவதும் இல்லை. வாசகர் சிறப்புப்பகுதியில் அறிமுகமாகும் புதியவர்கள் மாதந்தோறும் தொடர்ந்து எழுதிவருவதைக் காணலாம். இதுதவிர, 1000 ரூபாய்த் திட்டத்தில் சேர விரும்பினால், editor@varalaaru.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் விவரங்களை அறியத்தருகிறோம்.

திரு.முத்தையா அவர்கள் குறிப்பிடும் சமண சமயக் குகைத்தளங்கள் தொடர்பான கருத்து விரிவான ஆய்வுக்குரியது. சமணத் துறவிகளுக்கும் இயற்கையாக உருவான குகைத்தளங்களுக்கும் கி.முவுக்கு முன்பிருந்தே தொடர்புகள் இருந்தாலும், பல்லவர், முத்தரையர் மற்றும் பாண்டியர் குடைவரைகளுக்கும் சமணத்திற்கும் அவ்வளவாகத் தொடர்புகள் இல்லை. சைவசமய மறுமலர்ச்சிக் காலத்தில் சமணத்தை வெல்ல இக்குடைவரைகள் பயன்படுத்தப்பட்டதை வேண்டுமானால் இவற்றிற்கிடையேயான தொடர்பாகக் கொள்ளலாம். கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பக்கலைக் கூறுகளை ஆராயும்போது, கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டனவாகவே இக்குடைவரைகள் தோற்றமளிக்கின்றன. சமணத்துறவிகள் பயன்படுத்தி வந்த குகைகளைக் கைப்பற்றி அதில் சைவ, வைணவத் திருமேனிகளைச் செதுக்கி விட்டார்கள் என்று சொல்வதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லை. சமணத்தைப் பற்றி ஆராய்ந்து வரும் ஆய்வாளர்கள்கூட இத்தகைய கருத்தை முன்வைத்ததாகத் தெரியவில்லை. சமணத்தில் வைதீகக் கடவுள்கள் இருப்பதால் சமணர்களால் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகக் கண்கொண்டு பார்த்தாலும், குடைவித்தவர் பெயர் சுட்டும் கல்வெட்டுகள் இவ்விருளில் வெளிச்சம் பாய்ச்சி ஐயம் தெளிவிக்கின்றன. தமிழகச் சமய வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்தால், இதை விளங்கிக் கொள்ளலாம்.

சங்ககாலத்தில் பௌத்த, சமண, ஆசீவக மதங்களால் மறுப்புக்குள்ளான வைதீக சமயங்கள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிய காலமும், பல்லவ மன்னர்கள் முதலாம் மகேந்திரவர்மரும் இராஜசிம்மரும் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைகளில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த விழைந்த காலமும் ஒன்றாக இருந்தது இவ்வைதீக மதங்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம் என்று சொல்லலாம். வைதீக எதிர்ப்பு மதங்கள் ஆசையை ஒழித்தல், புலால் உண்ணாமை போன்ற வாழ்வியல் ஒழுக்கங்களை வகுத்து மக்களைக் கவர்ந்த நிலையில், சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் என்று பிளவுற்றிருந்த வைதீக சமயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, எதிர்ப்பு மதங்களில் மக்களின் ஆதரவு பெற்ற கொள்கைகளையும் கருத்துக்களையும் தன்னுள் வலிந்து வருவித்துக்கொண்டது. விலங்குகளைப் பலியிட்டு இரத்தத்தைக் கடவுளுக்குப் படைக்கும் வழக்கம், பூசணிக்காயை வெட்டிக் குங்குமத்தைத் தடவுவதாக மாறியது.

முதலாம் மகேந்திரவர்மர் எழுதிய மத்தவிலாச அங்கதம் மற்றும் பகவதஜ்ஜுகம் என்ற நகைச்சுவை நாடகங்கள், பௌத்தத் துறவிகள் எத்தகைய லௌகீக வாழ்வு வாழ்ந்தனர் என்பதை விளக்குகிறது. எதிர்ப்பு மதங்கள் சுகபோக வாழ்வைத் தடைசெய்யாத நிலையில், வைதீக சமயங்கள் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் விதித்துக்கொண்டு தனிப்பட்டுப் போக நேரிட்டது. பின்னர் மறுமலர்ச்சி பெறுவதற்காக, வைதீக மதங்களிலும் இல்லற வாழ்வுக்கு முக்கியத்துவம் உண்டு என்று வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடவுள்களுக்குள் உறவுமுறைகள் உருவாக்கப்பட்டன. இதை மக்களிடையே பரப்பப் பக்தி இலக்கியங்கள் இயற்றப்பட்டன. இராஜசிம்மர் காலத்தில் இதற்கும் ஒருபடி மேலேபோய், சோமாஸ்கந்தர் என்ற புதிய கடவுட்தொகுதி உருவாக்கப்பட்டு, அவர்காலக் கோயில்களில் கருவறையின் பின்சுவர்கள் இச்சிற்பத்தால் நிரப்பப்பட்டன. பின்னர் வந்த சோழர், பாண்டியர் ஆட்சிகளில் இவ்விலக்கியங்களில் கூறப்பட்ட நிகழ்வுகளுக்குச் சிற்பவடிவம் தரப்பட்டது. எனவே, சமணக்குகைகளைக் கைப்பற்றிப் புதிய குடைவரைகளை உருவாக்கினார்கள் என்று கூறமுடியாது. தமிழகம் முழுவதும் காணப்படும் தொடங்கிய பணிகள் நிறைவுறாமல், பல்வேறு கட்டங்களில் நின்று போயிருக்கும் ஏராளமான குடைவரைகளே இதற்குச் சான்று.

இதுபோல் சமணத்தை வெல்ல எழுந்த தென்தமிழ்நாட்டிலிருக்கும் குடைவரைகளைப் பற்றிய தொகுப்புதான் தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1 & 2.





நூல் விபரம்

தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் 1

ஆசிரியர்கள் : முனைவர் இரா.கலைக்கோவன், முனைவர் மு.நளினி

விலை : ரூ. 100

பதிப்பகம் : சேகர் பதிப்பகம்








மதுரை மாவட்டக் குடைவரைகள் (தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் 2)

ஆசிரியர்கள் : முனைவர் இரா.கலைக்கோவன், முனைவர் மு.நளினி

விலை : ரூ. 150

பதிப்பகம் : டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்

இவ்விரு நூல்களும் கிடைக்குமிடங்கள் :

டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்,
C-87, 10வது குறுக்கு,
தில்லை நகர் மேற்கு,
திருச்சிராப்பள்ளி - 18.
தொலைப்பேசி : 91-431-2766581

பூங்கொடி பதிப்பகம்
14, சித்திரைக்குளம்,
மேற்கு வீதி,
மயிலாப்பூர்,
சென்னை - 4.
தொலைப்பேசி : 91-44-24643074

நியு புக் லாண்ட்,
526, வடக்கு உஸ்மான் சாலை,
தியாகராயநகர்,
சென்னை - 17.
தொலைப்பேசி 91-44-28158171

பாரி நிலையம்,
90, பிராடுவே,
சென்னை - 108,
தொலைப்பேசி 91-44-25270795




திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டால், தமிழ்நாட்டை வட, மைய மற்றும் தென் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடதமிழ்நாட்டிலிருக்கும் பல்லவர் குடைவரைகளையும், மைய நாட்டிலிருக்கும் முத்தரையர் குடைவரைகளையும் விரிவான அளவில் ஆய்வு செய்த இந்நூலாசிரியர்கள், தென்தமிழ்நாட்டிலிருக்கும் பாண்டியர் குடைவரைகளையும் ஆராய்ந்து முடித்துவிட்டால், தமிழ்நாட்டுக் குடைவரைகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வு முழுமையடையும் என்று எண்ணி, தாம் கண்டறிந்த ஆய்வு முடிவுகளைக் கட்டுரைகளாக்கி, அதன் பயனைத் தமிழ் கூறும் நல்லுலகம் பெறட்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்நூல்களை வெளியிட்டுள்ளனர். நிறையப் பாண்டியர் குடைவரைகளை ஆராய்ந்திருந்தாலும் கீழ்க்கண்ட 11 குடைவரைகளின் ஆய்வை மட்டுமே நூலாக வெளிக்கொணர்ந்துள்ளனர். மீதமுள்ள குடைவரைகள் கூடிய விரைவில் நூலாக்கம் பெறும். இந்த நூலாக்கங்களுக்கு உதவிய ஒன்றிரண்டு பயணங்களில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பையும் மதுரை மாவட்டக் குடைவரைகள் நூலை 1000 ரூபாய்த் திட்டத்தின்மூலம் வெளியிடும் பேற்றையும் எங்கள் குழு பெற்றிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

1. குன்றக்குடிக் குடைவரைகள்
2. பிரான்மலைக் குடைவரை
3. திருக்கோளக்குடிக் குடைவரை
4. அரளிப்பட்டிக் குடைவரை
5. அரிட்டாபட்டிக் குடைவரை
6. மாங்குளம் குடைவரை
7. குன்றத்தூர் குடைவரை
8. கந்தன் குடைவரை
9. யானைமலை நரசிங்கர் குடைவரை
10. தென்பரங்குன்றம் குடைவரை
11. வடபரங்குன்றம் குடைவரை

முதல் நான்கு குடைவரைகளும் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி திருமடத்தின் நிர்வாகத்தின்கீழ் வருவதால் அவற்றை ஒரு நூலாகவும், அடுத்த ஏழு குடைவரைகள் மதுரை மாநகரைச் சுற்றி அமைந்திருப்பதால் மதுரை மாவட்டக் குடைவரைகள் என்ற பெயரில் ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு நூல்களிலும் தனித்தனியாக ஒப்பீடுகள். தொகுதி 1-ல் முதல் நான்கு குடைவரைகளும் தொகுதி 2-ல் அனைத்துக் குடைவரைகளும் ஒப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பீட்டில் கீழே தரப்பட்டுள்ள வரிகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.

"கட்டமைப்பு, சிற்ப இருப்பு இவ்விரண்டிலும் தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் ஒன்றோடு ஒன்று சில நிலைகளில் வேறுபட்டும் பல நிலைகளில் ஒன்றுபட்டும் அமைந்துள்ளன. தொடர்பிழைகளைக் காணமுடியும் அதே நேரத்தில் தனித்துவங்களையும் அடையாளப்படுத்த முடிகிறது. தோன்றிய இடம், காலம், சூழ வாழ்ந்த சமுதாயம், அதன் சமயக் களம், நிலவிய வரலாற்றுப் பின்னணி இவற்றின் அடிப்படையில் இக்குடைவரைகளை ஆராய்வது அவசியமாகிறது. அப்போதுதான் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயிற்கலையின் பொருளார்ந்த பின்புலத்தைத் தெளிய அறியமுடியும். அதற்கு இக்குடைவரைகள் அனைத்தையும் ஒருசேரப் பார்க்கும் வாய்ப்புத் தேவைப்படுகிறது."

அதாவது, ஓர் ஆய்வு என்றால், அந்த ஒரு கோயிலை அல்லது ஒரு குடைவரையை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அதனுடன் தொடர்புடைய அனைத்துக் குடைவரைகளையும் விட்டுவிடாமல் ஆராய்வதே முழுமையான ஆய்வாகும். எனவேதான், இவை தொடர் நூல்கள் என்பதால், இந்நூலாசிரியர்களின் 'அத்யந்தகாமம்', 'வலஞ்சுழி வாணர்' போன்ற நூல்களுடன் ஒப்பிடுகையில் இவ்விரண்டு நூல்களும் முழுமையடையாமல் உள்ளன என்று கூறலாம். தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் என்ற விரிவான தலைப்பை எடுத்துக்கொண்டதால், ஒவ்வொரு தொகுதியாக ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வரவில்லை. அப்படி வரவும் கூடாது. முதல் தொகுதி ஒப்பீட்டைக் காட்டிலும் இரண்டாம் தொகுதி ஒப்பீடு சற்று விரிவாக இருக்கிறது. பாண்டியர் குடைவரைகளைப் பற்றி நான் படிக்கும் முதல்நூல் என்பதால், இந்த ஒப்பீட்டுப் பகுதியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தொகுதி 1-ல் நான்கரைப் பக்கங்களை மட்டும் கண்டதும் சற்று ஏமாற்றமாக இருந்தது. அதை வாசித்துவிட்டுப் பிறகு யோசித்துப் பார்த்த போதுதான், எளிமையான நான்கே நான்கு குடைவரைகளில் கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து இதற்குமேல் ஒப்பாய்வு செய்ய இயலாது என்றும், இத்தரவுகளை வைத்து ஒரு முடிவுக்கு வருவது யானை பார்த்த குருடர் கதையாகத்தான் முடியும் என்பதும் புரிந்தது.

இந்நூலாசிரியர்களுடன் நாங்கள் செல்லும் பயணங்களின்போது கற்றுக்கொள்ளும் ஆய்வு நுணுக்கங்களை நூலாக்கம் பெற்றபின்பு வாசித்துப் பார்க்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி அருகிலுள்ள செவல்பட்டி குடைவரைக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள சிவபெருமானின் ஆடல்தோற்றம் ஒன்றைப் பார்த்தபோது அதிலிருக்கும் அர்த்தரேசித அமைப்பைப் பற்றிச் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டுக் குடைவரைகளில் அவ்வளவாகக் காணப்படாத அரிய அமைப்பான அர்த்தரேசிதத்தைக் கொண்டுள்ள மற்ற குடைவரைகளைப் பார்க்காமல் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது என்ற முடிவுக்கு வந்தோம். அதேகருத்து இந்நூல்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலாசிரியர்கள் படைக்கும் நூல்களின் முழுமைத்தன்மை குறித்துத் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. ஒருமுறை வாசித்துப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புரியும். ஒவ்வொரு குடைவரையையும் கட்டடக்கலை அமைப்பு, சிற்பங்கள், கல்வெட்டு கூறும் செய்திகள் என்ற அமைப்பில் அனைத்துத் தரவுகளையும் பதிவு செய்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் தரும் செய்திகளைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, வடபரங்குன்றத்தில் கிடைத்திருக்கும் முப்பத்து நான்கு கல்வெட்டுகள் தரும் செய்திகள் கீழ்க்கண்ட பிரிவுகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

1. வளநாடு - நாடு - ஊர்கள்
2. நிருவாக அமைப்புகள்
3. வரிகள்
4. வேளாண்மை, நீர்ப்பாசனம்,
5. நிலவிற்பனை
6. நிலக்கொடைகள்
7. மடங்களும் மடப்புறங்களும்
8. விளக்கு, வழிபாடு, படையல்
9. மனைகள்
10. சிறப்புச் செய்திகள்
11. இரத்தக் காணிக்கை
12. கோயில்கள்
13. ஊராக்கம்
14. கோயில் நிருவாகம்
15. பரங்குன்றத்தின் வரலாறும் குடைவரைகளின் காலமும்

இந்த முப்பத்து நான்கு கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட அனைத்துமே நிவந்தங்கள் பற்றியவைதான். அவற்றிலிருந்துதான் மேற்கண்ட நிவந்தம் சாராத தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன. எனவே, கோயிற்கல்வெட்டுகளில் நிவந்தங்கள், கொடைகள் தவிர வேறெதுவும் இல்லை; வரலாற்றை அறிய அவ்வளவாக உதவாதவை என்ற கருத்துடைய அறிவிலிகள் ஒருமுறை இந்நூல்களைப் படிப்பது அவர்தம் பித்தத்தைத் தெளியவைத்து உண்மை நிலையை உணர்த்தும்.

இந்நூல்களால் புதிய கலைச்சொல் ஒன்றும் நமக்குக் கிடைத்திருக்கிறது. குடைவரை என்ற சொல்லுக்கு, மலையில் குடையப்பட்ட கோயில் என்ற பொதுவான பொருள் ஒன்று இருந்தாலும், மலை, குன்று மற்றும் பாறைகளில் குடையப்படும் கோயில்கள் என்றே பொருள்படும். இக்கோயில்கள் பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மண்டபங்களையும் கருவறைகளையும் கொண்டிருக்கும். வடபரங்குன்றம், திருக்கோளக்குடி போன்ற இடங்களில் மண்டபங்கள் இல்லாமலும் கருவறைகள் மட்டும் இருக்கின்றன. இவற்றை எத்தகு கலைச்சொல்லால் சுட்டுவது என்பதில் சிக்கல் உள்ளது. கட்டுமானக் கோயில்களில் உள்ள சுவர்க்கோட்டங்களைத் திருமுன் என்றழைக்கும்போது, இத்தகைய குடையப்பட்ட திருமுன்களைக் குடைவுத்திருமுன் என்ற சொல்லால் குறிக்கலாம் என்றெண்ணி, இச்சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நூல்களுக்காக ஆசிரியர்கள் மேற்கொண்ட பயணங்களை முன்னுரையிலேயே காணலாம். குன்றக்குடி, திருக்கோளக்குடி மற்றும் வடபரங்குன்றம் ஆய்வுகளின்போது தலா ஒரு பயணத்தில் நாங்களும் கலந்துகொண்டோம். அவற்றை வரலாறு.காம் இதழ்களில் அவ்வப்போது வெளியிட்டு இருக்கிறோம். திருவலஞ்சுழி ஆய்வுப் பயணங்கள் அளவுக்கு அடிக்கடி கலந்து கொள்ள இயலாவிட்டாலும், கிடைத்த வாய்ப்புகளை ஓரளவுக்குச் சரியாகப் பயன்படுத்தி முடிந்த அளவு கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி எங்களுக்கு இருக்கிறது. அதுபோலவே, பயண அனுபவங்களும் மறக்க முடியாதவை. திருப்பரங்குன்றம் குடைவரைக்குக் கீழே உள்ள இருளடைந்த சேட்டைத்தேவித் திருமுன் உள்ளே நுழைவதற்கு முன் கோயில் அலுவலர்கள் மிகவும் பயமுறுத்திவிட்டார்கள். பின்னர் குடைவரைக் காவலர் திரு.கி.பாலமுருகன் அவர்களின் வழிகாட்டலில் கைவிளக்கின் உதவியுடன் உள்ளே சென்று தரிசித்து வந்தோம். வெளியே வந்தபிறகு, 'நிறையப் பாம்புகள் இருக்கின்றன என்று சொன்னீர்கள், ஆனால் ஒன்றைக்கூடப் பார்க்கவில்லையே' என்று இலாவண்யா கேட்டதற்கு, 'வெளியே வரும்போது உங்கள் காலருகே இரண்டு ஊர்ந்து சென்றன. சொன்னால் அதிர்ச்சியில் மிதித்திருப்பீர்கள் என்பதால் சொல்லவில்லை' என்று பாலமுருகன் சொன்னதைக் கேட்டதும் ஒரு கணம் திகைத்துப்போனோம்.

ஒவ்வொரு நூலை உருவாக்கும் முன்னும் இந்நூலாசிரியர்கள் எதற்காக இத்தனை பயணங்களை மேற்கொள்கிறார்கள் என்று ஆரம்ப நாட்களில் யோசித்திருக்கிறோம். பிறகு படிப்படியாகப் புரிந்து கொண்டோம். கடந்த பாண்டியர் குடைவரைப் பயணங்களின்போது இதன் பயனைக் கண்கூடாகக் கண்டோம். சில குடைவரைகளைச் சில நூலாசிரியர்கள் ஒருமுறைகூட நேரில் பார்க்காமலேயே அவற்றைப் பற்றி எழுதியுள்ளார்கள். ஒரு அறிஞர் எழுதிய ஒரு புத்தகத்தை அப்படியே தழுவி வேறொருவர் பெயரில் எழுதும்போது, முதல் நூலில் உள்ள பிழைகள் இரண்டாம் நூலிலும் அப்படியே தொடர்ந்திருப்பது மட்டுமின்றி, அதற்கு ஒருபடி மேலேபோய், முதல் நூலிலும் குடைவரையிலும் இல்லாத தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. எழுதப்படும் குடைவரையை ஒரேயொரு முறையாவது நேரில் பார்த்திருந்தாலும் வெளிப்படையாகத் தெரியும் சில பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். 'இப்படிக்கூட வரலாற்றாய்வு நூல்களை எழுதுவார்களா?' என்று அதிர்ச்சியுற்றோம். சில ஆய்வாளர்களின் நூல்களில் தவறான தகவல்கள் எப்படி இடம்பெறுகின்றன என்று புரிந்தது. பிற்காலத்தில் நாங்கள் நூல் ஒன்றை எழுதும்போது இத்தகைய தவறுகள் நேரக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டோம்.

இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நூல்களை வாசிக்கும்போது தோன்றியவை. படிக்கும்போது தோன்றியும் எழுதும்போது நினைவில் வராமல் போனவையும் நிறைய உள்ளன. வாசகர்கள் படிக்கும்போது இன்னும் சில கருத்துக்கள் தோன்றலாம். அவற்றை எங்களுடன் பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ பகிர்ந்துகொண்டால் உளம் நிறைவோம்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.