http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 47

இதழ் 47
[ மே 16 - ஜூன் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

பள்ளிப்படைக் குழப்பங்கள்
விழிஞம் குடைவரைக்கோயில்
மகப்பேற்றின் கொண்டாட்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 19
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 2
காற்றே! காற்றே! கதை சொல்லாயோ!!
Olipathi Vishnugraham in Malaiyadippatti
அவர் - முதல்பாகம்
கத்திரி வெயிலில் கோடைமழை
ஒரு தழுவலும் இரண்டு மன்னர்களும்
இதழ் எண். 47 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 19
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

கோயிற் கட்டடக்கலை என்பது பார்த்தவுடனோ, படித்தவுடனோ புரிந்துவிடும் ஒன்றன்று. அதனால்தான், கோயிற் கட்டடக்கலைத் துறையில் அறிஞர்கள் பலராக இல்லை. சிறந்த நூல்கள் என்று பின்பற்றத்தக்க வகையில் நூல்களும் அதிகம் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு நூல்களைக் களங்களுக்கே எடுத்துச்சென்று, படித்துக் கட்டடக்கலை உறுப்புகளை அடையாளம் கண்டு, அவற்றைப் பிற கோயில்களில் தேடிப் படிப்படியாக கட்டடங்களோடு உறவாடத் தொடங்கிய காலம் இந்தப் பழுவூர் ஆய்வுக்காலம்தான்.

ஏறத்தாழ ஓராண்டு காலம் பழுவூர் ஆய்வு தொடர்ந்தது. அப்போதுதான் அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த திரு. இல. தியாகராஜன் அறிமுகமானார். அவர் ஏற்கனவே அப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்தமையால் அவருடைய அறிமுகம் நளினிக்கும் வளர்மதிக்கும் உதவும் என்று கருதினேன். திரு. தியாகராஜன் தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய கல்வெட்டியல் பட்டயக் கல்வி பெற்றவர். அதனால் கல்வெட்டு வாசிப்பில் அவருக்குப் பயிற்சி இருந்தது. பழுவூர்க் கோயில்களின் கல்வெட்டுகளைப் படித்து, அவை தொடர்பான ஒன்றிரண்டு கட்டுரைகளை நாளிதழ்களில் வெளியிட்டிருந்தமையால் அவரைத் தொடர்புகொண்டேன்.

என் அழைப்பை ஏற்றுப் பழுவூர் வந்த திரு. தியாகராஜனைக் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலில் சந்தித்தோம். அக்கோயில் வளாகத்தில் இருந்து அவர் கண்டுபிடித்திருந்த பள்ளிப்படைக் கல்வெட்டொன்றை எங்களுக்குப் படித்துக்காட்டினார். கல்வெட்டொன்றின் சிதறிய துணுக்காக இருந்த அந்தத் தொடர்பற்ற கல்வெட்டின் துணைகொண்டு பள்ளிப்படைக்குரிய மன்னரையும் அவர் தீர்மானித்திருந்தார். சோழர்களைப் பற்றியும் பழுவேட்டரையர்களைப் பற்றியும் உடல் நிறத்தின் அடிப்படையில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

திரு. தியாகராஜனை இரண்டு காரணங்களுக்காகப் போற்றவேண்டும். தம்மிடம் பயிலும் மாணவர்களுள் ஆர்வம் உடையவர்களைக் கல்வெட்டுத் தேடலில் ஈடுபடுத்தி அவர்கள் வழி அரியலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கோயில்களை ஆய்வுசெய்து படியெடுக்கப்படாதிருக்கும் பல கல்வெட்டுகளை வரலாற்று வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர் அவர். அத்துடன், தம்முடைய கண்டுபிடிப்புகளைச் சிறுசிறு நூல்களாக அவ்வப்போது வெளியிட்டு வரலாற்றின் வளர்ச்சிக்கும் துணைநிற்கிறார்.

திரு. தியாகராஜனுக்கும் எனக்கும் பலமுறை கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தபோதும், இன்று வரை நானும் அவரும் இணக்கமாகவே இருந்துவருகிறோம். அவருடைய உழைப்பை நான் எப்போதுமே மதித்து வந்திருக்கிறேன். பின்னாளில் அவருடைய ஆய்வுகள் புவியியல் சார்ந்த வரலாற்றுப் பதிவுகளில் ஆழ்ந்தபோது அவர் கண்டுபிடிப்புகள் பற்றிய நாளிதழ்ச் செய்திகள் குறையத் தொடங்கின. என்றாலும், அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்கின்றன என்றே கருதுகிறேன்.

பழுவூர் ஆய்வுகளுக்கு நான் எதிர்பார்த்த அளவிற்குத் திரு. தியாகராஜனால் உதவக்கூடவில்லை. ஆனால், பழுவூர்ப் பற்றிய அவருடைய கட்டுரைகள் எங்கள் ஆய்வுகளைக் கூர்மைப்படுத்தின. ஊகங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருந்த அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் மறுக்க நாங்கள் நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அவர் ஆய்வு செய்த பழுவூர்க் கோயில் வளாகங்களிலிருந்து நாற்பத்தைந்து புதிய கல்வெட்டுகளைக் கண்டறியும் பேறு எங்களுக்கு வாய்த்தது. பழுவேட்டரையர்கள் பற்றி ஏற்கனவே எழுதியிருந்த பேராசிரியர்கள் திரு. கோவிந்தசாமி, திருமதி பாலாம்பாள், திரு. சுந்தரேச வாண்டையார், திரு. ஜி. வி. சீனிவாசராவ் இவர்தம் கருத்துக்களைக் களஆய்வுகளில் கிடைத்த வலிமையான சான்றுகளின் அடிப்படையில் மாற்றியமைக்க முடிந்தது.

என் தொடக்கக் கால ஆய்வுகளில் மாடக்கோயில்கள், முள்ளிக்கரும்பூர், சதுரதாண்டவம் இவற்றிற்குப் பிறகு என்னை அதிகம் வேலை வாங்கிய ஆய்வு பழுவூர் ஆய்வுதான். கோயில்களிலிருந்து எப்படி வரலாறு பெறுவது என்பதை நளினி, வளர்மதி இவர்களுடன் இணைந்து நானும் பயின்றேன். ஆய்வைத் தொடங்குவதற்கு முன்பே பழுவூர், பழுவேட்டரையர் தொடர்பாக வெளியாகி இருந்த நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் சேகரிக்குமாறு நளினி, வளர்மதி இருவருக்கும் அறிவுறுத்தியிருந்தேன். பழுவூர்க் கோயில்களில் இருந்து படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டிருந்த அனைத்துக் கல்வெட்டுகளையும் அவர்கள் பெற்றுப் படிக்குமாறு செய்தேன்.

ஆய்வு தொடங்கிய ஒரு மாதத்திற்குள் பழுவேட்டரையர்களைப் பற்றிய நூல்களும் பழுவூர்க் கோயில்களின் கல்வெட்டுகளும் கிடைத்தன. வழக்கம் போல் பேராசிரியர் மா. ரா. அரசுவின் உதவி குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது. முனைவர் பாலாம்பாளின் Feudatories of South India எனும் புத்தகத்தைத் திரு. தியாகராஜன் தந்துதவினார். முனைவர் பாலாம்பாளின் மற்றொரு நூலான, 'பழுவேட்டரையர்கள்', முனைவர் கோவிந்தசாமியின் The Role of Feudatories in Later Chola History ஆகிய நூல்களை அரும்பாடுபட்டு அரசு பெற்றுத்தந்தார்.

பழுவேட்டரையர்களைப் பற்றி திரு. வை. சுந்தரேச வாண்டையார் 1966ல் எழுதி வெளியிட்டிருந்த கட்டுரை பல நூலகங்களில் தேடியும் பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. தருமபுர ஆதீன வெளியீடான திருப்பழுவூர் - திருமழபாடி திருப்பதிகங்கள் நூலை எழுதியிருந்த திரு. வி. சா. குருசாமி தேசிகரோடு நிகழ்ந்த ஒரு சந்திப்பு அந்தக் கட்டுரை இடம்பெற்றிருந்த நூலின் பெயரை அறிய உதவியது. கல்வெட்டுக் கருத்தரங்கு - 1966 என்ற அந்நூலின் பெயரைத் தெரிவித்ததுமே அரசு அந்நூலை அனுப்பி உதவினார். திரு. வை. சதாசிவ பண்டாரத்தார், திரு. நீலகண்ட சாஸ்திரி, திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் இவர்தம் நூல்களையும் மூவரும் படித்தோம்.

பழுவேட்டரையர்களின் மரபுவழி பற்றிய அவர்தம் கருத்துக்களில் ஒத்திசைவு இல்லை. ஆனால் அனைவருமே உதயேந்திரம் செப்பேடு, அன்பில் செப்பேடு இவற்றைத் தங்கள் கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தனர். அதனால் அவ்விரு செப்பேடுகளையும் விரிவான அளவில் ஆராயவேண்டியிருந்தது. தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி நூலகர் திரு. அருள் உதவியினால் அவ்விரு செப்பேடுகளும் வெளியாகியிருந்த எபிகிராபியா இண்டிகா தொகுதி 15, தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 2 இவற்றைப் பெற்றுப் படித்தோம். வாழ்க்கையில் முதல் முறையாக செப்பேடுகளை வாசித்தமை இந்த ஆய்வின்போதுதான். ஒரு செப்பேடு எந்த அளவிற்கு வரலாற்றுத் தரவுகளின் புதையலாக விளங்குகிறது என்பதை அந்த வாசிப்பு எனக்கு உணர்த்தியது.

உதயேந்திரம் செப்பேடு கங்க மன்னர் இரண்டாம் பிருதிவிபதியால் வெளியிடப்பட்டது. தம் காலச் சோழ அரசரான முதல் பராந்தகர் பற்றிய குறிப்பை அதில் பிருதிவிபதி பதிவுசெய்திருக்கிறார். 'புலோமனின் மகளை இந்திரனும் மலைமகளைச் சிவனும் அலைமகளை விஷ்ணுவும் மணந்து கொண்டாற் போல் கேரள மன்னன் மகளைப் பராந்தகன் மணந்தார்' என்ற அந்தத் திருமணக் குறிப்பைத் திரு பண்டாரத்தார் உட்பட அறிஞர்கள் அனைவரும் சரியான தளங்களில் உணர்ந்து கொள்ளாமல், தாங்கள் கருதிய முடிவுகளுக்குத் துணையாகக் கொண்டனர். திரு. பண்டாரத்தார் இராஜாதித்தன் தாயாகிய கோக்கிழானடிகளே அந்தக் கேரளப் பெண் என முடிவு செய்திருந்தார்.

அன்பில் செப்பேடு சுந்தரசோழரால் வெளியிடப்பட்டது. இச்செப்பேட்டின் மரபுவழிப் பகுதி பராந்தகன் மணந்து கொண்ட கேரள இளவரசியின் தந்தை பழுவேட்டரையர் என்று குறிப்பதுடன், பராந்தகருக்கும் அந்தக் கேரள இளவரசிக்கும் பிறந்தவரே அரிஞ்சயன் என்ற தகவலையும் தருகிறது. இந்தச் செய்தியைக் குறிக்கும்போது திரு. பண்டாரத்தார், 'பராந்தகனுக்கு மற்றொரு சேரர் குலப் பெண்மணியும் மனைவியாய் இருந்தனள்' என்று கூறுகிறார். இரண்டு செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி ஒருவரே என்ற உண்மையை அவர் கவனிக்கவில்லை என்பது எங்களுடைய மற்றொரு கண்டுபிடிப்பாலும் உறுதியானது.

பராந்தகரின் மனைவிகளைப் பற்றிக் குறிக்குமிடத்தில் திரு. பண்டாரத்தார், அருமொழி நங்கை என்ற பெயரிலிருந்த அரசியையும் சுட்டியுள்ளார். அந்த அம்மையைக் குறிக்கும் கல்வெட்டுத் திருச்சென்னம்பூண்டியில் உள்ள கோயிலில் இருப்பது அறிந்ததும் அந்தக் கோயிலை நோக்கி எங்கள் பயணம் அமைந்தது. முற்சோழர் கட்டடக்கலை, சிற்பக்கலை இரண்டிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் அந்தக் கோயிலின் அன்றைய நிலை கண்களில் நீரை வரவழைத்தது. ஊரில் விசாரித்தபோது அது தமிழ்நாடுஅரசு தொல்லியல்துறையின் பராமரிப்பில் இருப்பதாகக் கூறினார்கள். எனக்குப் பழுவூர் அவனிகந்தர்வ ஈசுவர வளாகம்தான் நினைவிற்கு வந்தது.

பராமரிப்பிற்கு எடுத்துக்கொள்ளும் திருக்கோயில்களை எப்படிப் பாதுகாப்பது என்பதைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை அறிந்திருந்தபோதும் நிதி ஒதுக்கீடுகளின் பற்றாக்குறையினால் அத்துறை செயலிழந்து இருந்தது. அந்தக் கோயிலைக் கண்காணிக்கக் காவலர்கூட இல்லை. பெருமுயற்சி செய்து உள்ளூர் மக்கள் உதவியுடன் கோயிலைச் சுற்றிச் சூழ்ந்திருந்த புதர்களை அகற்றிக் கல்வெட்டுகளைப் படித்தோம். திருச்சடைமுடி மகாதேவர் கோயிலில் திருவிளக்கு ஒன்று ஏற்றுவதற்காகப் பழுவேட்டரையர் மகளார் பராந்தகர் தேவியார் அருமொழி நங்கையாரின் பரிவாரத்தைச் சேர்ந்த குணவன் சூரதொங்கி பதினாறு கழஞ்சுப் பொன் அளித்திருந்தமையை முதல் பராந்தகரின் பதினேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டின் வழி அறியமுடிந்தது.அந்தக் கல்வெட்டைப் படித்ததன் மூலம் பல உண்மைகள் எங்களுக்குப் புலப்பட்டன.

1. முதலாம் பராந்தகர் காலத்திலிருந்தே பழுவேட்டரையர்களுடன் சோழர்களுக்கு மணவினைத் தொடர்பு இருந்தது.

2. திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டுக் குறிப்பிடும் அருமொழி நங்கையே உதயேந்திரம் செப்பேடும் அன்பில் செப்பேடும் குறிக்கும் கேரள இளவரசி.

3. செப்பேடுகள் குறிக்கும் கேரள அரசரான பழுவேட்டரையர் சோழ நாட்டின் ஒரு பகுதியில் ஆட்சியில் இருந்த சிற்றரசர்.

4. பழுவேட்டரையர் பெண்ணான அருமொழி நங்கையின் பெயரிலிருந்தே முதல் இராஜராஜரின் பெயரான 'அருமொழி' பெறப்பட்டது.

இந்த நான்கு உண்மைகளும் பழுவேட்டரையர் மரபுவழியின் தொடக்க நிலைகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவின. நடுவண் அரசின் கல்வெட்டுத்துறை திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டின் ஒரு பகுதியை மட்டுமே படியெடுத்து வெளியிட்டிருந்தது. படியெடுக்காமல் விடப்பட்டிருந்த கல்வெட்டின் தொடர்ச்சியைக் களஆய்வின்போது படியெடுத்து வரலாறு ஆய்விதழ் ஆறாம் தொகுதியில் வெளியிட்டோம்.

திருச்சென்னம்பூண்டிக் கோயிலின் கண்டபாதச் சிற்பங்கள் அற்புதமானவை. ஆடற்கலை தொடர்பான ஆய்வாளர்களுக்கு இங்குள்ள சோழச் சிற்பங்கள் பல அரிய தரவுகளை வழங்க வல்லவை. என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்கு இக்கோயிலின் சிற்பங்கள் துணையாயின. இங்குள்ள சிற்பம் ஒன்றின் துணையுடன்தான் சம்பந்தரின் பாடல் அடியான, 'குடமுழவச் சதி வழியே' இறைவன் ஆடினார் என்பதை என்னால் மெய்ப்பிக்க முடிந்தது. இங்குள்ள மகரதோரணச் சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. தெற்கு மகரதோரணத்திலுள்ள புஜங்கத்ராசிதக் கரணச் சிற்பம் ஆடவல்லான் தத்துவத்தின் தொடக்க வடிவமாகும். திருஎறும்பியூர்க் கோயில் தென்திசைக் கடவுள் மகரதோரணத்திலுள்ள புஜங்கத்ராசித வடிவத்தோடும் திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில் மகரதோரண புஜங்கத்ராசித வடிவத்தோடும் பல வகைகளில் ஒத்திசையும் திருச்சென்னம்பூண்டிச் சிற்பம் குறிப்பிடத்தக்க கலைவடிவமாகும்.

திருச்சென்னம்பூண்டியை விரிவான அளவில் ஆய்வுசெய்யவேண்டும் என்று கருதியிருந்தபோதும் வாய்ப்புகள் அமையவில்லை. ஓராண்டிற்கு முன் முசிறியைச் சேர்ந்த அறுவை மருத்துவர் அருள்மொழிவர்மன், தாம் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் திருச்சென்னம்பூண்டிக் கோயிலை விரிவான அளவில் ஆய்வுசெய்து கட்டுரையோ, சிறு நூலோ வெளியிட வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் வைத்து, அதற்கான செலவினங்களுக்காக ரூபாய் பத்தாயிரம் அனுப்பியிருந்தார். திருச்சென்னம்பூண்டி எங்கள் ஆய்வுப் பட்டியலில் உள்ளது.

திருச்சென்னம்பூண்டிக்கு அருகிலுள்ள கோவிலடியில் இரண்டு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று பெருமாளுக்கான மாடக்கோயில். அப்பக்குடத்தான் என்றழைக்கப்படும் அக்கோயில் இறைவனைப் பற்றி எழுதவேண்டும் என்ற வேண்டுகோளுடன் அக்கோயில் நிருவாகிகளுள் ஒருவரான திரு. வசந்தகிருஷ்ணன் அழைத்திருந்தார். அவர் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகக் கோயிலடி சென்றோம். எங்களுடன் ஒளிப்பட வல்லுநர் நண்பர் திரு. பாபுவும் வந்திருந்தார்.

'சோழா போட்டோ ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழும் திரு. பாபு எங்கள் குழுவில் தொடக்கக் காலங்களில் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்ட இணையற்ற நண்பராவார். குமரன் போட்டோ ஸ்டூடியோவில் பணியிலிருந்த காலத்திலிருந்தே எங்கள் குழுவில் ஒருவராக விளங்கிய அவர் உதவியுடன் பல அரிய சிற்பங்களைப் படமெடுத்திருக்கிறேன். குடந்தை நாகேசுவரர் திருக்கோயில், திருச்செந்துறைத் திருக்கோயில், திருச்சென்னம்பூண்டித் திருக்கோயில் என அவர் கைவண்ணத்தில் படமான கோயில்கள்பல. கலை ஆர்வமும் இரசிப்புத் தன்மையும் நிரம்பிய அவரது ஒளிப்படக் கோணங்கள் கவிதைகளாக விளங்கியமையை பலமுறை அனுபவித்து மகிழ்ந்திருக்கிறோம்.

அப்பக்குடத்தான் திருக்கோயில் ஆய்வு முடிந்ததும் திரு. வசந்தகிருஷ்ணன் அதே ஊரிலிருந்த திவ்யஞானேசுவரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பராமரிப்பற்ற நிலையிலிருந்த அந்தக் கோயிலையும் முழுமையான அளவில் ஆய்வுசெய்தோம். எறும்பியூர்க் கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றிருந்த செம்பியன் வேதிவேளானைப் பற்றி மேலும் அறிய அக்கோயில் கல்வெட்டுகள் உதவின. பின்னாளில், 'செம்பியன் வேதிவேளான்' என்ற தலைப்பில், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருந்தகையின் பொதுநலப் பணிகள் குறித்து விரிவான அளவில் ஒரு கட்டுரை எழுதக் கோயிலடிக் கல்வெட்டுகள் துணையாயின. 'கோயிலடி மக்களின் கோபம் என்ன?' என்ற தலைப்பில் கலைமகள் திங்களிதழில் 1987 மே மாதம் இக்கோயிலைப் பற்றிய கட்டுரை வெளியானது. அப்பக்குடத்தான் கட்டுரை திருக்கோயில் 1986 மார்ச்சு இதழில் வெளியானது.

பழுவூர் ஆய்வுகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்திலேயே சிராப்பள்ளிப் புனித சிலுவைக் கல்லூரி இளங்கலை வரலாற்றுப் பிரிவைச் சேர்ந்த மாணவியர் ஒன்பதின்மர் ஒரு குழுவாக அமைந்து தங்கள் ஆய்வேட்டிற்காக என்னை அணுகினர். சிராப்பள்ளி முசிறி சாலையில் சிராப்பள்ளியிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருந்த மாற்றுரை வரதீசுவரர் திருக்கோயிலை அவர்தம் ஆய்வுக் களமாகக் கொண்டோம். மாற்றுரை வரதீசுவரர் திருக்கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலம். குறிப்பிடும்படியான சிற்பச் சிறப்புகள் ஏதுமில்லை என்றாலும் சோழர் காலக் கல்வெட்டுகளை அதிக அளவில் அக்கோயில் பெற்றிருந்தது. அதுவரை படியெடுக்கப்படாதிருந்த சோழர் காலக் கல்வெட்டுகள் ஒன்பதைக் களஆய்வில் கண்டறிய முடிந்தது.







அவற்றுள் சில அக்கோயில் சார்ந்த நக்கன் கற்பகவல்லி, நக்கன் ஆவடுதுறை, நக்கன் மோடி முதலிய ஆடல் மகளிரையும் நக்கன் மோடியான மும்ம்ுடிசோழத் தலைக்கோலி, நக்கன் கொற்றமான வீதிவிடங்கத் தலைக்கோலி, நக்கன் அழகியான நக்கன் சோழத் தலைக்கோலி, நக்கன் குராவ்ியான திருவரங்கத் தலைக்கோலி எனும் திறன் வாய்ந்த ஆடற்கலை அரசிகளையும் இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் வெளிச்சத்திற்குக் கொணர்ந்தன. உவச்சர் என்ற சொல் கோயிலில் பணியாற்றிய இசைக்கலைஞர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பொதுச்சொல் என்பதை அறியவும் இக்கல்வெட்டுகள் உதவின.

நால்வர் பெருமக்களுள் ஒருவரான சுந்தரர், 'இவரலாது இல்லையோ பிரானார்!' என்று முடியும் பதிகம் ஒன்றை இக்கோயில்மீது பாடியுள்ளார். இக்கோயில் கல்வெட்டுகளை ஆராய்ந்த நிலையில்தான் திருவாசி என்ற இவ்வூரின் இன்றைய பெயர், திருப்பாச்சில் ஆச்சிராமம் என்னும் பழம் பெயரின் மருவிய வடிவம் என்பதை அறிய முடிந்தது. அனைத்துக் கல்வெட்டுகளும் இவ்வூரைத் திருப்பாச்சில் ஆச்சிராமம் என்றே அழைக்கின்றன. இக்கோயிலில்தான் பாம்பின்மீது திருவடி இருத்தி ஆனந்தத்தாண்டவம் ஆடும் ஆடவல்லானின் செப்புப் படிமம் இருக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம் தொடர்பான கல்வெட்டு ஒன்றையும் இங்கிருந்த மண்டபம் ஒன்றிலிருந்து கண்டறிந்தோம். வணக்கத்திற்குரிய குருமகா சன்னிதானம் அவர்களே நேரில் வந்திருந்து அந்தக் கல்வெட்டைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

இவரலாது இல்லையோ பிரானார் என்ற தலைப்பில் இக்கோயில் பற்றிய கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் மார்ச்சு 1987ல் இருந்து ஆகஸ்டு 1988 வரை தொடர்ந்து வெளியானது. இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்ட காலத்தில்தான் அருகிலிருந்த துடையூர் விஷமங்களேசுவரர் திருக்கோயிலைப் பார்வையிட்டோம். முற்சோழர் காலக் கோயில்களுள் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கண்டபாதச் சிற்பங்களில் குடக்கூத்து, புஜங்கத்ராசிதம் இவற்றை இங்குக் கண்டறிந்தோம். கலைமகளின் சிற்பம் கோட்டச் சிற்பமாக இடம்பெற்ற கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன் திருப்பாச்சிலாச்சிராமம், துடையூர்க் கோயில்களுக்குச் சென்றிருந்தோம். அந்தப் பயணத்தில்தான் விஷமங்களேசுவரர் கோயிலின் முழு வீச்சையும் உணரமுடிந்தது. இருபதாண்டு கால அனுபவமும் பார்வை விரிவும் எவ்வளவு செய்திகளை அள்ளித் தருகின்றன என்பதை எளிதில் உணரமுடிந்தது.





பழுவூர் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் தருமபுரம் திருமடத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆய்வு மைய இயக்குநர் முனைவர் ஜெயச்சந்திரன், 'சமுதாயத்தில் திருமுறைத் தாக்கம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதித் தருமாறு அன்போடு கேட்டிருந்தார்கள். திருமுறைகளில் ஆழ்ந்தும் தோய்ந்தும் உள்ள அறிஞர் பெருமக்களின் கைவண்ணங்களால் சீர்பெற்றுவந்த அந்தத் தொடரில் நம் கட்டுரையா என்று பெரிதும் தயங்கினேன். முனைவர் ஜெயச்சந்திரன் தந்த உற்சாகம் என் தயக்கம் நீக்கியது. டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் சைவசமய வளர்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி எனும் இரண்டு நூல்களும் பெரிதும் உதவின. என் மாமனார் மருத்துவர் தி. வ. அரங்கநாதன் நூலகத்தில் இருந்த திருமுறை நூல்களும் கைகொடுத்தன. நவம்பர் 1986 ஞானசம்பந்தம் திங்களிதழில் என் கட்டுரை வெளியானது. சமயம் சார்ந்து நான் எழுதிய முதல் கட்டுரை அதுவெனலாம்.

அந்தக் கட்டுரையினால் திருமுறைகளின் பால் மிகுந்த ஈடுபாடு உண்டானது. அதுநாள்வரை திருமுறைகள் பத்திமை இலக்கியங்களே என்று கருதியிருந்த எனக்குக் கண்திறப்பு நிகழ்ந்ததென்றே கூறலாம். சமூதாயம் சார்ந்த மிக அரிய தரவுகள் அந்தப் பத்திமைப் பாடல்களில் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலோட்டமாகப் படித்த நிலையிலேயே திருமுறை அறிஞர்களால் அதுகாறும் எடுத்துரைக்கப்படாதிருந்த வரலாற்றுத் தரவுகள் சிலவற்றை அவற்றில் அடையாளம் காணமுடிந்தது. திருமுறைகளை ஆழக் கற்பது என முடிவுசெய்தேன். அதன் பலன் நான் எதிர்பார்த்ததைவிட மிகுதியாகவே இருந்தது.

திருமுறைகள் சார்ந்த ஆய்வுகளின் விளைவால் அப்பர் பெருந்தகையிடம் அளவற்ற ஈடுபாடு ஏற்பட்டது. தமிழ்ச் சமய வரலாற்றில் அந்த மாமன்ிதருக்கு இணையான ஒரு சமுதாயச் சிந்தனையாளரை இதுகாறும் கண்டதில்லை. அவருடைய மூன்று திருமுறைத் தொகுதிகளையும் பலமுறை படித்திருக்கிறேன். அந்தப் பதிகங்கள் அவரைப் புரிந்துகொள்ளவும் அவர் ஆளுமையை உணர்ந்து கொள்ளவும் பேருதவியாயின. தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் அப்பர் பெருமானுக்குத் தனியிடமுண்டு. ஆடற்கலை தொடர்பான பல அரிய தரவுகளை அவர் பதிகங்களிலிருந்து பெறமுடிந்தது. அவிநயம் பற்றிய என் பின்னாளைய ஆய்வுகளுக்கெல்லாம் அவர் பாடலடிகளே படி அமைத்துத் தந்தன. அவிநயத்தின் அத்தனை கூறுகளையும் தேவார மூவரில் அவர் ஒருவர் மட்டுமே பதிவுசெய்துள்ளார். தமிழிலக்கிய வரலாற்றிலும் அப்பருக்குத் தனியிடமுண்டு. மன்றத்துப் புன்னையும் மாமனிதர் அப்பரும், அப்பர் என்னும் அரிய மனிதர் முதலிய கட்டுரைகள் அதைத் தெளிவுபடுத்த வல்லன. அப்பரின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் விதமாக நூல் ஒன்று எழுதும் ஆவலும் உண்டு.

ஒரு கல்வெட்டைப் படிப்பது எளிதான செயலே. ஆனால், அக்கல்வெட்டின் உட்பொருளை முழுமையுற விளங்கிக் கொள்ள மொழி அறிவும் வரலாற்றுப் பின்புலமும் இன்றியமையாதவை. துறை வல்ல அறிஞர்கள் கூடக் கல்வெட்டைப் படித்துப் புரிந்துகொள்வதில் தடுமாறியிருந்த நிலைகளையும் அதன் விளைவாக வரலாற்றின் போக்கையே மாற்றியிருந்த சூழல்களையும் பழுவூர் ஆய்வின் போது எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. பழுவூர் அவனிகந்தர்வ ஈசுவர வளாகத்தின் தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புறச் சுவரிலுள்ள இராஜகேசரிய்ின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் அதே இடத்திலிருக்கும் இராஜகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் வரலாற்றறிஞர்களை எப்படியெல்லாம் திசை திருப்பியிருந்தன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

1 ஸ்வஸ்திஸ்ரீ கொவிராஜகேசரிபம்மற்கு யாண்டு பதின்மூன்றாவது
2 குன்றக்கூற்றத்து அவனிகந்தர்வ ஈசுவர கிருஹத்து மஹாதேவர்க்கு இன்னாட்டு பழுவூர்
3 பகைவிடை ஈசுவரத்து தேவனார் மகன் நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்
4 டன் பிரஸாதத்தினால் அருளிச் செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி அபோஹ
5 னம் கிடந்த பூமியை கல்லி இரண்டு பூவிலும் விளைய மசக்கி குடு
6 த்த நிலம் எட்டுமா இப்பூமியில் போன்த போகம் கொண்டு இரண்டு தளியி
7 லும் ஒரோ நொந்தாவிளக்கு இரவும் பகலும் எரிக்க கடவோம் இத்தளிபட்
8 டு உடையோம் எழுவோம்

எனும் முதற் கல்வெட்டு, பழுவேட்டரையன் குமரன் கண்டனின் அருளாணையினால் பகைவிடை ஈசுவரத்து தேவனார் மகன் நக்கன் பூதி இவ்வளாகத்த்ுள்ள இரண்டு கோயில்களிலும் விளக்கேற்ற, ஊரகன்குடியில் அளித்த நிலக்கொடை பற்றிப் பேசுகிறது.

இக்கல்வெட்டைத் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றில் (எண். 235) பதிப்பித்த கல்வெட்டாய்வாளர், இக்கல்வெட்டின் பாடத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத நிலையில், நக்கன் பூதியையும் பழுவேட்டரையன் குமரன் கண்டனையும் இருவராகப் பார்க்காமல் இரண்டு பெயர்களும் ஒருவரையே குறிப்பிடுகின்றன எனக் கொண்டு, 'This states that a plot of land, 8 ma in extent in the devadana village Uragankudi belonging to the temple of Avanigandharva Isvara Griham in Kunra kurram which had been lying fallow was brought under cultivation by order of Pudi Paluvettaraiyan Kumaran kandan son of Pagaividai Isvarathu Devanar of Paluvur and left incharge of the seven temple servants for maintaining two perpetual lamps in the two shrines of the temple' என விளக்கம் அளித்துள்ளார்.

இந்தக் கல்வெட்டு இரண்டு செயற்பாடுகளின் இணைவாகும். கோயில்களில் விளக்கெரிக்க நிலம் தந்தவர் ஒருவர். அந்நிலத்தின் விளைவு கொண்டு விளக்கெரிக்க ஒப்புக்கொண்டவர்கள் எழுவர். இரண்டாம் செயற்பாட்டில் குழப்பமில்லை. முதற் செயற்பாடு தொடர்பாக அறிமுகமாகும் நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டன் என்பது ஒருவரின் பெயரே எனக் கொள்ள, கல்வெட்டின் மொழி நடை இடம்தரவில்லை. 'நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டன் பிரஸாதத்தினால் அருளிச் செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி அபோஹனம் கிடந்த பூமியை கல்லி இரண்டு பூவிலும் விளைய மசக்கி குடுத்த நிலம் எட்டுமா'. எனும் இக்கல்வெட்டுப் பகுதியில் இரண்டு செயல்கள் உள்ளன.

ஒரு செயல், பிரஸாதத்தினால் அருளிச் செய்தது. மற்றொரு செயல், நிலத்தைத் திருத்திக் கொடுத்தது. இந்த இரண்டு செயல்களையும் நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டனே செய்ததாகக் கொள்ளக் கல்வெட்டின் தொடரமைப்பு ஒத்துழைக்கவில்லை. அருளிச் செய்தவர் பழுவேட்டரையன் குமரன் கண்டன், நிலத்தித் திருத்திக் கொடுத்தவர் நக்கன் பூதி எனக் கொண்டால்தான் கல்வெட்டுத் தொடரமைப்பு பொருளார்ந்து அமையும். இந்த எளிமையான அமைப்பைக் கூடப் புரிந்து கொள்ளாத நிலையில்தான் கல்வெட்டுத் தொகுதியின் விளக்கம் அமைந்துள்ளது.

இந்த விளக்கத்தை மட்டும் பார்த்து, கல்வெட்டுப் பாடத்தை ஆராயாத நிலையில் முனைவர் பாலாம்பாள், திரு. சுந்தரேசனார், எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் இவர்கள் நக்கன் பூதியையும் பழுவேட்டரையன் குமரன் கண்டனையும் ஒருவராக்கி அதன் விளைவாகப் பழுவேட்டரையர்களை வேளிர்களாகக் கருதிக் கட்டுரைத்திருப்பதோடு, குமரன் கண்டனின் தந்தையாகப் பகைவிடை ஈசுவரத்து இறைவனை (பகைவிடை ஈசுவரத்து தேவனார் மகன்) அறிவித்திருந்தார்கள். இக்கோயில் வளாகத்தின் முன் தொல்லியல்துறை வைத்திருந்த அறிவிப்புப் பலகையிலும் தவறான செய்தியே இருந்தது. தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாச ராவ், தொகுதியில் நேர்ந்துள்ள இந்தப் பிழையை உணர்ந்த நிலையில் தம்முடைய முன்னுரையில் இது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் (முன்னுரை, ப. 8). வரலாற்றுத்துறை சார்ந்த எந்தப் பகுதியிலும் முதலில் ஆய்வு செய்யும் ஒருவர் தவறுதலாக எதையேனும் எழுதிவிட்டால் அந்தத் தவறு பின் வரும் ஆய்வாளர்களால் ஆராயப்படாமல் அப்படியே பின்பற்றப்படுவதற்கு இதனினும் சிறந்த சான்று வேண்டுமா?

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.