http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 47

இதழ் 47
[ மே 16 - ஜூன் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

பள்ளிப்படைக் குழப்பங்கள்
விழிஞம் குடைவரைக்கோயில்
மகப்பேற்றின் கொண்டாட்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 19
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 2
காற்றே! காற்றே! கதை சொல்லாயோ!!
Olipathi Vishnugraham in Malaiyadippatti
அவர் - முதல்பாகம்
கத்திரி வெயிலில் கோடைமழை
ஒரு தழுவலும் இரண்டு மன்னர்களும்
இதழ் எண். 47 > கலையும் ஆய்வும்
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 2
நீலன்

1. நிலை குலையும் ஒரு கலைக்கோயில் - II

(சென்ற இதழின் தொடர்ச்சி...)

முகமண்டபச் சிற்பங்கள்

1. பிட்சாடனார்


முகமண்டபத்தின் தென்புறம் கிழக்கில் உள்ள கோட்டத்தில், இடதுகால் ஊன்றி, வலதுகால் சற்று தளர்த்தி முன்வைத்து, சற்றே இடப்புறம் பார்வைகொண்டும், கால்களில் செருப்பு அணிந்து, தாருகாவனத்தில் பிச்சை எடுக்கும் பெம்மான் பூதகணத்துடன் காட்சியளிக்கிறார்.

இவடது தலையலங்காரம், பிறைநிலவை வலப்புறம் கொண்டும் பாம்புகள் அணைவு பெற்ற மண்டை ஓட்டினை நடுவில் கொண்டும் அமைந்த ஜடாபாரமாய்க் காட்சியளிக்கிறது. நெற்றியில் மணிகள் பதிக்கப்பெற்ற பட்டம் சூடி, பின் கைகளில் உடுக்கையும், கவரியும் ஏந்தி நெற்றிக்கண் விளங்கக் காட்சியளிக்கும் இப்பிட்சாடனாரின் இடது முன்கையில் கபால ஓடு ஏந்தியும் வலதுமுன்கை நெகிழ்வாகி மானுக்குப் புல்கொடுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. கழுத்தில் ஆபரணங்களாக சவடி, அக்கமாலை, சரப்பளி, முத்துமாலை ஆகியவற்றை அணிந்த இவரின் முப்புரிநூல் உபவீதமாய் இறங்க, இதிலிருந்து ஸ்தனசூத்திரம் பிரிகின்றது. கைவளை, தோள்வளை, உதரபந்தம் அணிந்த இப்பிட்சடனாரின் வலச்செவியில் மகரம், இடச்செவி பனையோலைக் குண்டலம். வலதுகாலில் வீரக்கழல், உதரபந்தமும் முப்புரிநூலும் அணிந்த பூதகணம் ஒன்று தலையுல் உணவுத்தட்டினை ஏந்திய நிலையில் உடன்வர பிச்சை ஏற்கும் பெம்மான் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறார்.



2. நடராஜர்

முகமண்டபத்தின் தென்புறத்தில் உள்ள காலைக் கோட்டத்தில் ஆனந்த தாண்டவராய்க் காட்சியளிக்கும் நடராஜர் கொக்கு இறகு, நெருஞ்சிப்பூ, ஊமத்தம்பூ மற்றும் பாம்புகள் அணைவுபெற்ற மண்டை ஓடு இவைகளைக் கொண்ட சடைமகுடராய்க் காட்சியளிக்கிறார். நெற்றிப்பட்டம் சூடிய நடராஜரின் செவிகளில் வலதுபுறம் மகரமும் இடதுபுறம் பனையோலையும் உள்ளன. நுதல்விழியும் காட்டப்பட்டுள்ளது. பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும் ஏந்திய நடராஜரின் வலது முன்கரம் அபய ஹஸ்தத்தில் அமைய, இடது முன்கரன் கஜஹஸ்தமாக மார்பிற்குக் குறுக்கே அமைந்துள்ளது. வலது பாதத்தைப் பார்சுவமாய் நிறுத்தி, இடது காலை உயர்த்தி வலப்புறம் நீட்டி 'புஜங்கத்ராசிதம்' காட்டும் இறைவனின் இடக்கரத்தில் மணிக்கட்டு அருகே சிதைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் அணிகலன்களாக கண்டிகை, சரப்பளி, முத்துமாலை காட்டப்பட்டுள்ளது. கைவளை, தோள்வளை, உதரபந்தம், முப்புரிநூல் அணிந்த நடராஜரின் இடையில் தோலாடை.

இடைக்கட்டு ஆடையின் முடிச்சுகள் இவரின் சுழன்று ஆடும் ஆட்டத்திற்கேற்ப இருபுறமும் விசிறி விரிந்து காணப்படுகின்றன. இடக்கரத்தின் மணிக்கட்டிலிருந்து பாம்பு ஒன்று தொங்குகின்றது. நடராஜர் கோட்டத்தின் வலப்புறம் நந்தி குடமுழா வாசிக்க அதன் அருகே அடியவர்கள் அறுவர் மகுடம் அணிந்து அஞ்சலிக் கரத்துடன் நிற்கின்றனர். இடப்புறக் கோட்ட அணைவுத் தூணில் காளி 'ஸ்வஸ்திக' கரணத்தில் நடனமாடுகின்றாள். இவ்விருவரின் நடனங்களைப் பார்க்கும்வண்ணம் உடைவாள் தரித்த ஆண் ஒருவர், பெண் ஒருவர் மற்றும் சிறுவர்கள் அஞ்சலிஹஸ்தத்தில் நிற்கின்றனர். இவர்களை மன்னன் குடும்பத்தினராகவோ அல்லது சிற்றரசன் குடும்பத்தினராகவோ கருதலாம்.



3. கணபதி

முகமண்டபத்தின் தென்புறம் காணப்படும் கோட்டங்களில் மேற்கில் உள்ள கோட்டத்தில் கரண்டமகுடம் அணிந்து நெற்றியில் பட்டம் சூடி வலது முன்கரத்தில் ஒடிந்த தந்தம் பெற்றும் பின்கரத்தில் அங்குசம் ஏந்தி கணபதி காட்சியளிக்கின்றார். முறுக்கேறிய உதரபந்தம், கண்டிகை, சரப்பளி அணிந்து சமபாத ஸ்தானகத்தில் நிற்கும் கணபதியின் இடது முன்கையில் மோதகம் உள்ளது. இதனை துணைக்கரம் கொண்டு சுவைக்க முற்படுமாறு காட்டப்பட்டுள்ள இக்கணபதியின் இடது பின்கரம் தெளிவாகக் காணுமாறு இல்லை.

இக்கோட்டத்தின் வலப்புறம் பூதகணம் ஒன்று தலையில் தட்டு ஏந்திய நிலையிலும், இடப்புறம் ஒரு பூதகணம் பலாப்பழத்தை உரிப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளன. அருகில் ஓர் அடியவர் கையில் ஏதோ ஒரு பொருளை வைத்துள்ளார். கணபதியின் பின்புறம் திருவாசி காட்டப்பட்டுள்ளது.



4. கங்காதரர்

முகமண்டப வடபுறச் சுவரில் கிழக்கில் உள்ள கோட்டத்தில் சடைமகுடராய்க் காட்சியளிக்கும் கங்காதரரின் செவிகளில் மகரம். வலது முன்கரத்தில் சின்முத்திரை காட்டி இடமுன்கையால் இறைவியை ஆலிங்கனம் செய்யும் இவரின் வலப்பின்கரத்தில் உடுக்கை. இடப்பின்கரத்தில் மான்.

கண்டிகை, சரப்பளி, முத்துமாலை அணிந்து முப்புரிநூலும் உதரபந்தமும் பெற்றுத் தன் உடலை வலப்புறம் சற்றே சாய்த்துள்ள கங்காதரரின் ஆலிங்கனத்தால் ஆளப்பட்ட இறைவி இறைவனை நோக்கி திரும்பி நிற்கின்றார். கரண்டமகுடம் அணிந்த இறைவியின் கழுத்தில் சரப்பளி, ஆரம். இறைவியின் வலதுகரம் மலர் ஏந்தியும் இடதுகரம் நெகிழ்வுடன் டோல ஹஸ்தமாகவும் காட்டப்பட்டுள்ளது.



5. கொற்றவை

முகமண்டபத் தென்புறச் சாலைப்பத்திக் கோட்டத்தில் மகிடத்தின் தலைமீது இடதுகாலை அழுந்தி ஊன்றி வலதுகாலைத் தளர்த்திச் சற்றே இடப்புறம் சாய்ந்து நிற்கும் கொற்றவை பட்டாடை உடுத்தியுள்ளார். இவரின் தலையில் கரண்டமகுடம், நெற்றியில் பட்டம் சூடி, கழுத்தில் சவடி, சரப்பளி அணிந்தும், மார்பில் கச்சுக்கொண்டு காட்சியளிக்கும் இக்கொற்றவையின் செவிகளில் மகர குண்டலங்கள். இவரின் வலது பின்கரங்களில் மேலேயிரும்டு கீழாகச் சக்கரம், வாள், அம்பும், இடது பின்கரங்களில் சங்கு, வில்,கேடயம் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன. வலது முன்கரத்தை அபய ஹஸ்தம் காட்டியும் இடது முன்கரத்தில் கிளி ஒன்றினை ஏந்தியும் காட்சியளிக்கும் இக்கொற்றவையின் கைகளில் அடுக்கு வளையல்கள். கால்களில் தாள்செறிகள். இடைக்கட்டின் முடிச்சுகள் இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. கொற்றவையின் தலைக்கு மேலே குடையும், பக்கங்களில் சாமரங்களும் உள்ளன.



6. அம்மையப்பர்

முகமண்டப வடசுவரில் மேற்கில் அமைந்துள்ள கோட்டத்தில் இடக்காலை அழுந்தி ஊன்றி, வலக்காலை சற்றே தளர்த்தி நிற்கும் அம்மையப்பரின் செவிகளில் வலப்புறம் மகரம், இடப்புறம் பனையோலை. சடைமகுடம் அணிந்து நெற்றிப்பட்டம் சூடிக் கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்து நிற்கும் அம்மையப்பரின் வலது முன்கரம் பின்னால் நிற்கும் காளையின் தலைமீது தாங்குதலாய் வைக்கப்பட்டுள்ளது. வலது பின்கரத்தில் முத்தலை ஈட்டி. ரிஷபத்தின்மீது சாய்ந்து ஒயிலாகக் காட்சியளிக்கும் அம்மையப்பரின் இடையில் இடப்புறம் பட்டாடை, வலப்புறம் சிற்றாடை.



(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.