http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 47

இதழ் 47
[ மே 16 - ஜூன் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

பள்ளிப்படைக் குழப்பங்கள்
விழிஞம் குடைவரைக்கோயில்
மகப்பேற்றின் கொண்டாட்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 19
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 2
காற்றே! காற்றே! கதை சொல்லாயோ!!
Olipathi Vishnugraham in Malaiyadippatti
அவர் - முதல்பாகம்
கத்திரி வெயிலில் கோடைமழை
ஒரு தழுவலும் இரண்டு மன்னர்களும்
இதழ் எண். 47 > ஆலாபனை
கத்திரி வெயிலில் கோடைமழை
லலிதாராம்
சுட்டெரிக்கும் மே மாதக் கத்திரி வெயிலை மட்டுப்படுத்தும்பொருட்டு மழைத்துளிகள் சென்னையின் நிலத்தை நனைத்தன. நெஞ்சம் கனத்திருந்த அம்மாலைப் பொழுதில், அந்தத் தூறல்கள் ஆனந்தக் கண்ணீரும், அழுகையும் சேர்ந்த ஓர் அபூர்வக் கலவையாகத் தோன்றின! மே 11-ஆம் நாளின் மாலைப்பொழுதை நாரத கான சபையில், கோடைமழையாய்ப் பொழிந்து அரங்கைக் குளிர்வித்த பழநி சுப்ரமணிய பிள்ளையின் முழவிசையைக் கேட்ட அனைவருக்கும் இவ்வெண்ணமே தோன்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஓர் அற்புதக் கலைஞனின் இமாலயச் சாதனைகளுள் சிலவற்றை, நாரத கான சபையின் மினி அரங்கில் ஒலித்த ஒலி அலைகள் மூலம் கேட்ட அனைவரின் மனதிலும் எல்லையில்லா உவகை எழுந்திருக்கும். கூடவே காலத்தைக் கடந்து, நூற்றாண்டு விழா காணும், இசையொடு வாழ்ந்த அம்மேதையின் இசை, இசைவரலாற்றில் நீங்கா இடம் பெற்றது. எனினும், அவர் வாழ்ந்த காலத்திலேயே விருதுகளும் பட்டங்களும் அவரை அலங்கரிப்பதற்குள் அவர் அடைந்த அகால மரணத்தை எண்ணி அங்கு குழுமியிருந்தோர் மனம் கலங்கியிருக்கும். இப்படிப்பட்ட சூழலில், அன்று தரையிறங்கிய தூறல்களை உவகையும், துயரமும் கலந்த கலவையாக உணர்வது இயற்கைதானே?'பழநி', 'சுப்புடு', 'பிள்ளைவாள்', 'சுப்ரமணியம் பிள்ளை', 'வாத்தியார்', 'பழனி அண்ணா', 'பழநி சார்' என்றெல்லாம் நூற்றாண்டுவிழா நாயகரை விளித்தோர் குழுமியிருந்த அரங்கில் ரசிகர் கூட்டம் அலை மோதவில்லை எனினும், வெயிலின் கடுமையைப் பொருட்படுத்தாது 3.30 மணிக்கே ரசிகர்களும், கலைஞர்களும் கணிசமான அளவில் குழுமியிருந்தனர். வந்தோரின் கவனத்தை முழவிசை மாமேதை ஸ்ரீ. பழநி சுப்ரமணிய பிள்ளையின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படம் கவர்ந்தது. நெடிய உருவமும், படிய வாரப்பட்ட தலை முடியும், ஜொலிக்கும் கடுக்கனும், நெற்றியை அலங்கரித்த ஜவ்வாதுப் பொட்டும், தென்றலின் தீண்டலையும், சூறாவளியின் சீற்றத்தையும் அநாயாசமாக வெளிப்படுத்திய மந்திரக் கரங்களும், அக்கரங்களில் தென்பட்ட நீண்ட விரல்களும், அங்கு வந்த அனைவரையும் தன் அருகில் ஈர்த்தன. அதற்கு அடுத்தபடியாக அனைவரையும் கவர்ந்தது அங்கு ஒலித்த இனிய நாதஸ்வர இசை. சேலையூர் சண்முகம் - ரகுராமன் குழுவினரின் ஒரு மணி நேர இசை நிகழ்ச்சி உருக்கமாக அமைந்து அன்றைய விழாவை இனிதே தொடங்கி வைத்தது. அதன்பின் பழநி சுப்ரமணிய பிள்ளை வாசித்த நான்கு உருப்படிகள், அவரது சீடர் காளிதாஸின் அறிமுகத்திற்குப் பின் அரங்கை நிறைத்தன.நாரத கான சபை போன்ற புகழ் பெற்ற, பாரம்பரியம் மிக்க சபையின் ஒலிபரப்பு சாதனங்கள் இத்தனை சாதாரணமாக இருக்குமா என்று ஆச்சரியப்படும் வகையிலேயே மினிஹாலின் ஒலி அமைப்பு இருந்தது. அத்தனை குறைபாடுகளையும் மீறி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ந்ததே பழநி சுப்ரமணியம் பிள்ளையின் வாசிப்பின் தனிச் சிறப்பாகும். வழக்கமாய்க் கச்சேரிக்கு வரும் கூட்டம், பாடகர் பாடும்போதெல்லாம் கர்ம சிரத்தையாய்க் கேட்பது போல பாவனை செய்துவிட்டு, தனி ஆவர்த்தனம் தொடங்கிய அடுத்த வினாடியே, ஏதோ இமாலய சாதனையை நிகழ்த்தினாற்போல சோம்பல் முறித்துக் கொண்டு காண்டீனை நோக்கிப் படையெடுக்கும். அன்று வந்திருந்த கூட்டமோ, அரை மணி நேரத்துக்கும் மேலாக ஒலித்த இரண்டு தனி ஆவர்த்தனங்களைக் கூர்ந்து கவனித்து ரசித்தது. இக்காட்சியை எட்டாவது உலக அதிசயங்களுள் சேர்க்கலாமா என்று கூடச் சிலர் பேசிக்கொண்டனர். முதலாவதாக ஒலித்த ஆதிதாளத் தனி ஆவர்த்தனத்தை, தனது அறுபது வருட ரசிகானுபவத்தில் முதல் இடத்தைப் பிடித்த தனியாக வர்ணித்தார் கே.எஸ்.காளிதாஸ்.மிகவும் கடினமான கணக்கு வழக்குகளை மிருதங்க வித்வான் வாசிக்கும்போது, உன்னிப்பாகக் கவனித்துத் தாளம் போட்டுக் கேட்கும் ரசிகரின் மனதில், ஒருவித பரபரப்பு ஏற்பட்டு உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை ஏற்படுவது சகஜம். பலசமயம், கணக்கு வழக்குகளில் கவனத்தைச் செலுத்துவோமெனில், வாசிப்பில் பொதிந்திருக்கும் 'மனதைத் தொடும்' ரம்யமான அம்சங்கள் காதில் விழாமலேயே போய்விடும். அதற்காக, கணக்கு வழக்கே இல்லாமல் ஒருவர் வாசித்தாரெனில், எவ்வளவுதான் நாதத்தை அவர் மிருதங்கம் பொழிந்த போதும், கேட்போர் மனதில் நிறைவு ஏற்படுவது கடினம். ஒரு நல்ல வாசிப்பில் கணக்கு வழக்கு நிறைந்த விவகாரங்களும், உள்ளத்தைத் தொடும் விஸ்ராந்தியும் சரியான அளவு கலந்திருப்பது கடினம். எது சரியான அளவு என்று அறிய விரும்புவோர், ஜி.என்.பி-யின் வானொலி கச்சேரியில் 'ப்ரோசேவா' என்ற கிருதிக்கு உமையாள்புரம் கோதண்டராம ஐயருடன் சேர்ந்து பழநி வாசித்திருக்கும் தனியைக் கேட்டறியலாம்.

நறுக்குத் தெரித்தாற்போல அமைந்த மோராக்கள், மின்னல்வேக ஃபரன்கள், கேட்போரை மயக்கும் தொப்பியின் இனிய நாதம், ஸர்வலகுவில் கல்லையும் கரைக்கும் வண்ணம் ஒலிக்கும் டேக்கா சொற்கள், திஸ்ர நடையில் சதுஸ்ரத்தில் புகுத்திய சாமர்த்தியம், உடன் வாசிப்பவரின் திறனை உணர்ந்து, அவருக்கு வலிமை சேர்க்கும் வகையில் வாசித்திருக்கும் குறைப்பு, 'வேறெவருக்கும் இப்படி அமைந்திடாது' என்று ஒருமித்த கருத்தைக் கட்டியம் கூறும் நீண்டு ஒலித்து நெஞ்சையள்ளும் 'கும்காரச்' சொற்கள், கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் அமைந்திருக்கும் உச்சகட்ட மோரா கோர்வை என்றெல்லாம் அத்தனி ஆவர்த்தனத்தைப் பற்றி வார்த்தைகளால் இட்டு நிரப்பலாமே தவிர, அத் தனியின் தனிச்சிறப்பில் இலட்சத்தில் ஒரு பங்கைக்கூட வார்த்தையால் வடிக்க முடியாது.

ஆதிதாள தனியைத் தொடர்ந்து, பழநி மிருதங்கம் வாசித்து ஜி.என்.பி பாடிய 'மனஸுலோனி' கிருதி ஒலிபரப்பானது. ஒரு மிருதங்கக் கலைஞர் எவ்வளவுதான் உழைத்துத் தன் கலையை விருத்தி செய்திருப்பினும், அவரின் தனித்திறனைக் காட்ட அவருக்கு அதிகபட்சம் 15-20 நிமிடங்களே கிடைக்கும். மற்ற நேரங்களில் பாடகரின் பாட்டிற்கு ஏற்றாற்போல பக்க வாத்தியம் வாசித்து, அழகான இடங்களை மெருகேற்றி, கஷ்டமான இடங்களில் கைகொடுத்து, பாடகரின் வெற்றிக்கு வழிவகுப்பதே மிருதங்க வித்வானின் குறிக்கோளாக இருக்கும். பழநியைப் பற்றிக் குறிப்பிடும் எவரும் அவர் பாடல்களுக்கு அளிக்கும் 'போஷாக்கை' குறிப்பிடாமல் இருக்க முடியாது. கிருதியின் வெவ்வேறு பகுதிகளான பல்லவி, அனுபல்லவி, சரணங்களுக்கு எப்படி வாசிப்பது, பாடகர் வெவ்வேறு சங்கதிகளைப் பாடும்போது, எப்படி வெவ்வேறு தாளக்கட்டுகளையும், நடைகளையும் புகுத்திப் பாடலை மிளிரச் செய்வது போன்றவற்றை நன்கு உணர்ந்து வாசித்ததன் மூலம் அவர்க்குப் பின் வந்த கலைஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் பழனி. 'மனஸுலோனி' கிருதியின் கல்பனை ஸ்வரங்களுக்குப் பழனி வாசித்திருக்கும் முறை, அவரது மேதமையின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.பழநியின் பிரதான சீடரான திருச்சி சங்கரனுடன் இணைந்து வாசித்த 'மிஸ்ர ஜம்பை' தனி ஆவர்த்தனம் 'மனஸுலோனி' கிருதியைத் தொடர்ந்தது. தனி ஆவர்த்தனத்துக்குச் சற்றே அரிய தாளமான மிஸ்ர ஜம்பையில், பழநியும் சங்கரனும் மாறிமாறி (லய) மாரி பொழிந்திருப்பதை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. குறிப்பாக, மிஸ்ர நடை கதி பேதமும், விவகாரங்கள் நிறைந்த சங்கீர்ண குறைப்பும் நுட்மாகக் கேட்போருக்குப் பிரமிப்பைத் தருவன. காட்டாறாய், பெருமழையாய், புயல்காற்றாய் வீசிய தனி ஆவர்த்தனத்துக்குப் பின், உல்லாசமாய்ப் பயணம் செய்யத் தோதான ஓடையாய், கோடையில் இளைப்பாறுவதற்கு ஏற்ற நிழலாய், களைப்பைக் களைந்து களிப்பைத் தரும் தென்றலாய் ஒலித்தது அடுத்த பாடல்.

பழநியின் வாசிப்பின் உச்சகட்டம் என்று கருதப்படும் 'கந்தன் கருணை புரியும் வடிவேல்' என்ற மதுரை மணியின் பாடல்தான் அடுத்து ஒலித்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தப் பாடலைப் பொறுத்தவரை, பாடலைப் பாடியவர் மதுரை மணி, பக்கவாத்தியம் வாசித்தவர் பழநி சுப்ரமணிய பிள்ளை என்று சொல்வது தவறு. அப்பாடலை இருவரும் சேர்ந்து பாடினர் என்று சொல்வதே சரி. தன் கைவேலின் புகழைப் பாடல் உரைப்பதால் மகிழ்ந்து, அந்தப் பாடலை அமரத்துவம் பெறச்செய்யும் வகையில், அந்தப் பழநிவாழ் வேலனே பழநி சுப்ரமணிய பிள்ளையாக வந்து வாசித்தாரோ என்றுகூட எண்ணத் தோன்றும் வகையில் அந்த வாசிப்பு அமைந்துள்ளது.

'கோல மயில் நடம் கொஞ்சிடும் செவ்வேல்' என்னும் வரியில் அத்தனை கொஞ்சலையும் தன் மிருதங்கத்தின் தொப்பியில் வெளிப்படுத்தவதென்பது மனிதனால் ஆகக்கூடியதா என்ன? 'அண்டம் ஆண்டிடும் ஆதிமகள்' என்ற வரியில்தான் அலையலையாய்ப் பெருகும் எத்தனை சங்கதிகள்! ஒவ்வொரு சங்கதிக்கும், அந்த சுநாதத் தருவின் வலந்தலையில் இடது கையும், தொப்பியில் வலதுகையும், ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல தன்னிச்சையாய்ச் சிதறவிடும் நாதத்திவலைகள்தான் எத்தனை? உச்சஸ்தாயியின் 'அன்னை பராசக்தி அருள் சுடர்வேல்' என்று பாடல் ஒலிக்க, நீண்டு ஒலிக்கும் ஒரு ரீங்கார ஒலியில், தீம் என்ற சொல்லை ஓம்கார ஒலியாய் ஒலிக்கச் செய்வதன் மூலம், வேலின் அத்தனை ஜொலிஜொலிப்பையும் கண்முன் நிறுத்துவதைக் கேட்பவர் உணர்ச்சிவயப்படாமல் இருக்க முடியாது!

எப்படிப்பட்ட வாசிப்பு! எப்பேர்ப்பட்ட கலைஞன்! அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்துப் பிறந்தவரும் கேட்கும் வகையில் ஒலிநாடாக்கள் இன்றும் கிடைப்பதை எண்ணி மனம் தானாகவே இறைவனின் கருணைக்கு நன்றியுரைத்தது.இந்நிகழ்ச்சிக்குப்பின், அன்றைய தினத்தின் முக்கிய நிகழ்ச்சியான 'நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் உறை' வெளியீடு நடைபெற்றது. டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, லால்குடி ஜெயராமன், டாக்டர் டி.கே மூர்த்தி, குருவாயூர் துரை, ஹிண்டு என்.முரளி ஆகியோர் மேடையை அலங்கரித்த சிறப்பு விருந்தினர்கள். பாலக்காடு ரகுவின் பெயர் அழைப்பிதழில் இருந்த போதும் உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை.

'இசை மழலை' குழுவைச் சேர்ந்த பிருந்தா மணிவாசகம் 'ஸ்ரீ கணேசாத்பரம்' பாடலை உருக்கமாகப் பாடி விழாவைத் தொடங்கி வைத்தார். மிருதங்க வித்வானும், பழநி சுப்ரமணிய பிள்ளையின் சீடருமான குருவாயூர் துரை அவையோரை வரவேற்றார். நிகிலா ஷ்யாம்சுந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து, போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராமானுஜம், பழநியின் நூற்றாண்டினை நினைவுகூறும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். அதனை நாரத கான சபையின் காரியதரிசி கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு நாயகரைப் பற்றிய வலைத்தளம், palanisubramaniapillai.orgpalanisubramaniapillai.org பாலமுரளிகிருஷ்ணாவால் வெளியிடப்பட்டது. பாலமுரளி கிளிக்கியதும் வலையுலகப் பிரவேசம் செய்த அவ்வலைத்தளத்திலிருந்து சுநாதமான மிருதங்க ஒலி எழுந்து அரங்கை நிரப்பி சில ஆவர்த்தனங்கள் ஒலித்து, ஜி.என்.பி-யின் பாராட்டுடன் (அந்த ஒலிப்பதிவில் ஜி.என்.பி தன்னை மறந்து 'ஆ' என்று கூறுவதையே இப்படிக் குறிப்பிடுகிறேன்) முடிந்தபோது கேட்டவர் அனைவரும் தமை மறந்தனர். ஓர் உன்னதக் கலைஞனின் இசைவாழ்வு, அவரது வாசிப்பின் நுணுக்கங்கள், அவரது இசைப் பாரம்பரியம், அவரைப் பற்றி அவருடன் பழகியோரின் நினைவாஞ்சலி, அரிய புகைப்படங்கள் என்று அரிய பொக்கிஷமாய் மலர்ந்திருக்கும் இவ்வலைத்தளம் அனைத்து இசை ஆர்வலர்களின் கவனத்தை அடைதலும் அவசியம்.

நாரத கான சபையின் காரியதரிசி கிருஷ்ணமூர்த்தி தனது உரையில் வருடா வருடம் பழநியின் சீடர்கள் நடத்தும் குரு பூஜையைக் குறிப்பிட்டு, அது தொடர்ந்து நாரத கான சபையில் நடப்பதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறினார்.அவரைத் தொடர்ந்து ஹிண்டு என்.முரளி உரையாற்றினார். புதுகோட்டை பாணி மிருதங்க வாசிப்பின் தலை சிறந்த வித்வான் என்று பழநி சுப்ரமணிய பிள்ளையை நினைவு கூர்ந்த அவர், ஆரம்ப நாட்களில் பழநியின் இடதுகைப் பழக்கம் அவருக்குப் பெரிய இடராய் இருந்ததையும், அவர் வாசிப்பின் உன்னதத்தை உணர்ந்த செம்பை வைத்தியநாத பாகவதர், தனது அளுமையைப் பயன்படுத்தி, பழநியுடன் வாசிக்க மறுத்தோரையும் மனம் மாற வைத்ததையும் எடுத்துரைத்தார். ஆரம்ப நாட்களில், கணக்கு வழக்குகளிலேயே அதிகம் கவனம் செலுத்திய பழநியை, அழகுணர்ச்சியுடனான அற்புத வாசிப்பின் பக்கம் இழுத்த பெருமையும் செம்பையையே சாரும் என்றும் முரளி கூறினார்.அதன்பின் பேசிய பாலமுரளிகிருஷ்ணா, 'பழநி சுப்ரமணிய பிள்ளைக்கு ஒரு பிள்ளை உண்டு தெரியுமா?' என்று பீடிகையுடன் ஆரம்பித்தார். 'அந்தப் பிள்ளை நாந்தான்' என்று புன்னகையுடன் தன் மழலைத் தமிழில் அவர் கூறிய போது அரங்கம் அதிர்ந்தது. இளைஞனான தன்னைப் பலவகையில் ஊக்குவித்து, 'முரளி சார்! உங்க புகழ், பணம், பெருமை எல்லாம் இங்க இருக்கு. நீங்க ஆந்திராவில் இருக்க வேண்டாம்' என்று அறிவுரை வழங்கியதையும், அவர் கூறிய வாக்கு இன்று உண்மையானதையும் நினைவு கூர்ந்தார். 'இடதுகைப் பழக்கம் உடையவர் என்ற போதும், பாடகர்களுக்கு வலதுகரமாகவே அவரது வாசிப்பு அமைந்தது' என்று அழகாகப் பழநியின் வாசிப்பை விளக்கினார். கேரளாவில் நிகழ்ந்த ஒரு கச்சேரிக்குப்பின், பழநியுடன் செய்த ரயில் பயணத்தைப் பற்றி பேசுகையில், 'இனி எக்காரணம் கொண்டும் முதல் வகுப்பைத் தவிர வேறு வகுப்பில் பயணம் செய்வதில்லை' என்று சத்தியம் வாங்கிக் கொண்டதையும், அதே பயணத்தில் லய சம்பந்தமான பல ரகசியங்களைத்தான் அறிந்து கொண்டதையும் அழகாக விவரித்தார். 'First time I realised the difference between laya and tala' என்றதுடன் விஜயவாடாவில் தான் பாடிய முகாரி ராகத்தையும், அதனைத் தொடர்ந்து பழநி கேட்டுக் கொண்டதின் பெயரில் ரூபக தாளத்தில் சங்கீர்ண நடையில் பாடிய 'எந்த நின்னே' பல்லவியையும் நினைவு கூர்ந்து பாடியும் காண்பித்தார்.இன்றிருக்கும் மிருதங்க வித்வான்களுள் சீனியரான டி.கே.மூர்த்தி, தனது பத்தாவது வயதிலிருந்து பழநி சுப்ரமணிய பிள்ளையைத் தெரியுமென்றார். பெரிய கீர்த்தனை, சில்லரை பாட்டு, ஹிந்துஸ்தானி சாயலில் அமைந்த பாடல்கள், தனி ஆவர்த்தனம் என்று ஒவ்வொன்றுக்கும் வாசிக்கும் முறையில் உள்ள நுணுக்கமான வேறுபாட்டைப் பழநியின் வாசிப்பைக் கேட்டால் தெளிவாக உணரலாம் என்று கூறி, இன்றைய கலைஞர்கள் பழநியின் வாசிப்பை அவசியம் கேட்க வேண்டுமென்று அறிவுரையும் வழங்கினார். இத்தனை திறமைசாலியாக இருந்தும், தனது வாழ்நாளில் எந்த ஒரு பட்டமோ, விருதோ பழநிக்குக் கிடைக்காததை எண்ணி மிகவும் வருந்தினார். 'அந்த அவார்டுகளுக்கெல்லாம் இப்படி ஒரு வித்வான் இனி கிடைக்கப்போவதில்லை' என்று அவர் கூறியது சத்தியமான வாக்கு! 'ஆள் பார்க்க அடியாள் மாதிரி இருப்பாரே தவிர, பழக பரம சாது. குழந்தை மாதிரி', என்று கூறியபோது அரங்கில் சிரிப்பலை.புகழ் ஏணியில் எட்டா உயரங்களையும் எட்டிப்பிடித்திருக்கும் மஹா வித்வான் லால்குடி ஜெயராமன் கடைசியாகப்பேச அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர் ஆவார். அவர் உடல்நிலை காரணமாக, அவரது சார்பில் அவரது மகள் லால்குடி விஜயலட்சுமி, அவரின் அனுபவங்களைப் படித்துப் பகிர்ந்துகொண்டார். 6-4-1948 அன்று பழநி உத்சவத்தில் வாசித்ததையும், அன்று தான் வாசித்ததைக் சுப்ரமணியம் பிள்ளை கேட்க முடியாததால், தன்னை அடுத்தநாள் திருமலை ஐயங்கார் பாட்டுக்கு வாசிக்க வைத்ததையும் கூறி அவருக்குப் பழநியுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பை விவரித்தார். லால்குடியின் இசைவாழ்வின் பல முக்கிய தருணங்களில் பழநி உடன் இருந்து பக்கபலமாக விளங்கியதைக் குறிப்பிட்டு, மலைக்கோட்டை நூறுகால் மண்டபக் கச்சேரிகளில் தரையில் அமர்ந்து கேட்கும் ரசிகனாக விளங்கிய தன்னை, மேடையேற்றி வித்வானாக்கிய பெருமையும் பழநியையே சாரும் என்றார்.1961-இல் கிருஷ்ண கான சபையில் முதன் முதலாக ஸ்ரீமதி பிரும்மானந்தத்துடன் தான் வாசித்த இரு வயலின் கச்சேரியிலும் பழநியும், அவரது பிரதான சீடர் திருச்சி சங்கரனும் டபிள் மிருதங்கம் வாசித்ததைப் பற்றி விஜயலட்சுமி படித்தபோது லால்குடி ஜெயராமனின் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. முடிகொண்டான் வெங்கடராம ஐயர் அகாடமியில் கொடுத்த சிம்மநந்தன தாள பல்லவி டெமான்ஸ்ட்ரேஷனிலும் தன்னுடன் பழநி வாசித்ததையும் கூறி, தன்னை எப்படியெல்லாம் பழநி உற்சாகப்படுத்தி, வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை எடுத்துரைத்தார். நடிகர் பாலையாவின் மகள் திருமணத்திற்கு லால்குடியைப் பக்கவாத்தியமாகப் போடும்படி பரிந்துரைத்தது பழநிதான் என்றும், ஏதோ சில காரணங்களால் ஆலத்தூர் சகோதரர்ககள் லால்குடியின் வயலினைத் தவிர்த்து வந்ததை அறிந்து, முன்நின்று பேசி அவர்களுக்கும் லால்குடியின் பக்கவாத்தியம் அமையும் வகையில் பிரச்னையைத் தீர்த்து வைத்தது பழநிதான் என்றும் கூறி நெகிழ்ந்தது லால்குடியின் உரை.பழநியின் சீடரும், பழநி சுப்ரமணிய பிள்ளை ட்ரஸ்டின் நிர்வாகியும் ஆன கே.எஸ்.காளிதாஸ் நன்றியுரை வழங்கி, பழநிமலையின் பிண்ணனியில் சுப்ரமணிய பிள்ளை மிருதங்கம் வாசிப்பது போல அழகாக வரைந்திருக்கும் பழநியின் சீடரான ரகுப்ரசாதையும், palanisubramaniapillai.org வலைத்தளத்தை அமைப்பதில் பெரும்பங்காற்றிய, பழநியின் மற்றொரு சீடரான மயில்சாமி பிள்ளையின் சீடர் ஆனந்த குமாரையும் அரங்கிற்கு அறிமுகப்படுத்தினார்.இனிதே நடந்த விழாவினைத் தொடர்ந்து, சேஷகோபாலன், எம்.சந்திரசேகர், திருச்சூர் நரேந்திரன், பி.எஸ்.புருஷோத்தமன் குழுவினரின் கச்சேரி நடைபெற்றது.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.