http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 49
இதழ் 49 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
சிதையும் சிங்காரக் கோயில்கள்
1. நிலை குலையும் ஒரு கலைக்கோயில் - III
(சென்ற இதழின் தொடர்ச்சி...) உதிரிச்சிற்பங்கள் 1. சேத்திரபாலர் முகமண்டபத்தின் கிழக்கில் உள்ள வாயிலின் வலப்புறத்தே அழகுடன் காட்சியளிக்கும் சேத்திரபாலரின் வலது முன்கரத்தில் சூலம். வலது பின்கரங்களில் மேலிருந்து கீழாக டமருகம், அம்பு, ஓங்கிய வாள் உள்ளன. இடது முன்கரத்தில் மண்டையோடு, பின்கரங்களில் மேலிருந்து கீழாக பாம்பு, வில், பாசம் உள்ளன. சுடர்முடியைத் தலையலங்காரமாய்ப் பெற்று நெற்றிக்கண் கொண்டு விளங்கும் சேத்திரபாலரின் செவிகளில் பத்ரகுண்டலம். உதரபந்தம் அணிந்தும் மண்டை ஓட்டு மாலையை முப்புரிநூலாகக் கொண்டும் இடையில் பாம்பை இடைக்கட்டாய்ப் பெற்றும் நிர்வாணியாய்க் காட்சியளிக்கும் சேத்திரபாலர் உர்ஸ் சூத்திரமும் பெற்றிருக்கிறார். இவரின் இடது முன்கரம் இடைக்கட்டாக உள்ள பாம்பின் தலைமீது தாங்குதலாய் அமைக்கப்பெற்றுள்ளது. கைவளை, தோள்வளை, கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்துள்ள சேத்திரபாலரின் முகத்தில் கோரைப்பற்களை மீறி வெளிப்படும் புன்னகை இச்சிற்பத்தைப் படைத்த சோழர்காலச் சிற்பியின் கைவண்ணத்தை வெளிக்காட்டுமாறு அமைந்துள்ளது. 2. சூரியன் முகமண்டபத்திற்குள் உள்ள சூரியனின் சிற்பம் சுமார் நான்கு அடி உயரம் உள்ளது. இரு கரங்களிலும் தாமரை மலர்களை ஏந்தியுள்ள இவர் கரண்ட மகுடம் அணிந்து செவிகளில் மகர குண்டலங்களைப் பெற்றிருக்கிறார். கைவளை, தோள்வளை, கழுத்தில் சரப்பளி, கால்களில் தாள்செறி அணிந்துள்ள இவரின் முப்புரிநூல் உபவீதமாய் மார்பில் இறங்குகிறது. இச்சிலை சோழர் காலத்திய படைப்பாகும். 3. பெருமாள் நெற்றிப்பட்டம் சூடி கிரீட மகுடத்தைத் தலையலங்காரமாய்க் கொண்டு விளங்கும் பெருமாள் கருவறையை ஒட்டிய முகமண்டபத்தின் தென்புறம் காட்சியளிக்கிறார். கைவளை, தோள்வளை, ஸ்கந்தமாலை அணிந்துள்ள இவரின் செவிகளில் மகர குண்டலங்கள். பின்கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கும் இவரின் வலது முன்கரம் காக்கும் முத்திரையிலும் இடது முன்கரம் கடி ஹஸ்தத்திலும் உள்ளன. பட்டாடை அணிந்துள்ள இவரின் முப்புரிநூல் உபவீதமாய் மார்பிலிருந்து கீழே இறங்குகிறது. 4. இறைவி இறைவனின் திருமுன்னின் முன்பு வடக்குப்புறத்தில் தெற்கு முகமாய் சௌந்திரநாயகி அம்மன் என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கும் இறைவியின் தலையலங்காரம் சடைமகுடம் ஆகும். நெற்றியில் நெற்றிப்பட்டம் சூடி, கைவளை, தோள்வளை, ஸ்கந்தமாலை அணிந்துள்ள இவர் கழுத்தில் செவிகளில் மகரமும் அணிந்து காட்சியளிக்கிறார். இறைவியின் முன்கரங்கள் அபயமும் வரதமும் காட்ட பின்கரங்கள் அக்கமாலையுடன் கூடிய மலர்ந்த மலரும், தாமரை மொட்டும் ஏந்தியுள்ளன. பட்டாடை அணிந்த இவரின் இடைக்கட்டு முடிச்சுகள் பக்கவாட்டில் இருபக்கமும் காட்டப்பட்டுள்ளன. மார்பில் கச்சு இல்லை. இச்சிலையைப் பிற்காலத்தியதாகக் கருதலாம். மகரதோரணச் சிற்பங்கள் மகரதோரணச் சிற்பங்களில் பிட்சாடனார் கோட்டத்தின்மேல் அமைந்துள்ள மகரதோரணத்தில் காணப்படும் யோக தட்சிணாமூர்த்தியின் மீது அம்பு எய்யும் மன்மதன், அம்மையப்பர் கோட்டத்தின்மேல் காணப்படும் கண்ணப்ப நாயனாரின் புராணம் கொற்றவை கோட்டத்தின்மேல் காணப்படும் சண்டீசுவரபதம் மற்றும் கங்காதரர் கோட்டத்தின்மேல் உள்ள கோச்செங்கணான் புராணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவாறு அமைந்த மகரதோரணச் சிற்பங்களாகும். 1. யோக தட்சிணாமூர்த்தி நெற்றிப்பட்டம் சூடி, வலக்காலை மடக்கி இடக்காலை இடுப்புடன் யோகப்பட்டை கொண்டு சேர்த்து உத்குடி ஆசனத்தில் அமர்ந்து சடைமகுடதாரியாய்க் காட்சியளிக்கும் யோக தட்சிணாமூர்த்தியின் பின்கரங்களில் அக்கமாலை மற்றும் சூலம் உள்ளன. வலது முன்கரத்தைக் காக்கும் முத்திரையிலும் இடது முன்கரத்தை முழங்கால் மீதும் வைத்திருக்கும் இவ்யோக தட்சிணாமூர்த்தியின் வலப்புறம் இச்சிவனை நோக்கி அம்பு எய்யும் நிலையில் மன்மதன் சித்திரிக்கப்பட்டு இருக்கிறார். இக்காட்சி மன்மத எரிப்பின் ஆரம்பநிலையாகும். 2. கண்ணப்பரின் கருணை மலர்மாலை சூட்டப்பட்டுள்ள சிவலிங்கத்தின் முன்னால் வலதுகாலை முழங்கால் அளவில் மடக்கி இடதுகாலைக் குத்திட்டு அமர்ந்து இருக்கும் கண்ணப்பரின் வலதுகரம், அம்பு ஒன்று கொண்டு அவரது வலக்கண்ணை நோண்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்பொழுது சிவலிங்கத்திலிருந்து கைவளை அணிந்த கரம் ஒன்று வெளிப்போந்து, நிறுத்து! வேண்டாம் கண்ணப்பா! என்று கூறி கண்ணப்பரின் செயலைத் தடுப்பதுபோல் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளையெல்லாம் சிவலிங்கம் பின்னால் மறைந்து நின்று இக்கோயில் பூஜை செய்பவரான சிவாச்சாரியார் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணப்பரின் பக்கத்தே உடும்பு ஒன்றும் பின்னால் நாய் ஒன்று பின்னங்காலில் உட்கார்ந்து கொண்டு இவற்றை எல்லாம் கவனிப்பது போலவும் இதற்கு பின்னால் மற்றொரு நாய் பார்த்துக் கொண்டிருக்கவும் கண்ணப்பருக்குக் கடவுள் காட்சி கொடுக்கும் படலம் ஆரம்பமாகிறது. இச்சிற்பத்தில் காணப்படும் காட்சி சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து சற்றே வித்தியாசப்படுகின்றது. சேக்கிழார் கூற்றுப்படி, இரத்தம் வழியும் சிவலிங்கக்கண் மீது கண்ணப்பர் தன் கண்ணை அம்பினால் நோண்டி எடுத்துப் பொருத்துகிறார். அப்பொழுது மற்றொரு சிவலிங்கக் கண்ணிலிருந்து இரத்தம் வருகிறது. அதைத் தடுக்கும் பொருட்டு தன் மற்றொரு கண்ணையும் பிடுங்கி அவ்விடத்தில் பொருத்த நினைப்பவர், இரண்டாம் கண்களையும் அகற்றிவிட்டால் பார்வை போய்விடுமே, இரத்தம் வரும் சிவலிங்கக் கண் இருக்கும் இடத்தை அடையாளம் காணமுடியாதே என்று எண்ணி தனது செருப்பு அணிந்த காலைச் சிவலிங்கத்தின்மீது வைத்து அடையாளப் படுத்திக்கொண்டு தனது மற்றொரு கண்ணைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் இறங்கியபோதுதான் சிவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். ஆனால் கண்ணப்பர் இங்குச் சிவலிங்கத்தின்மீது கால் வைக்காமலே தனது மற்றொரு கண்ணைப் பிடுங்க முயற்சிப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். இக்கோயில் எடுப்பித்ததாகக் கருதப்படும் முதலாம் இராஜேந்திர சோழனின் தந்தை முதலாம் இராஜராஜன் படைத்திட்ட தஞ்சை பெரிய கோயிலில் இக்கோயிலில் காணப்படும் சிற்பம் போல் காணப்படுகிறது. பெரியபுராணம் தோன்றிய இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலத்திற்கு முன் படைக்கப்பட்ட கோயில்கள் அனைத்திலும் இம்மாதிரி சிற்பங்கள் உள்ளன எனலாம். கண்ணப்பரின் உண்மையான பக்திக்கு ஒரு சிறப்புச் சேர்க்கவேண்டும் எனக்கருதிய சேக்கிழார் சிவலிங்கத்தின்மீது கண்ணப்பர் கால் வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதலாம். 3. சண்டீசுவரபதம் கொற்றவை அமைந்துள்ள கோட்டத்தின்மேல் உள்ள மகரதோரணத்தில் இச்சிற்பம் உள்ளது. சிவன் பின்கைகளில் மான், மழு கொண்டு சுகாசனத்தில் அமர்ந்து உள்ளார். அவருக்கு அருகில் இறைவி உத்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவர்களுக்குக் கீழே, வலதுகாலை மடக்கி இடதுகால் குத்திட்டு உட்கார்ந்து கைகளை வணங்கும் முத்திரையில் கொண்டு காட்சியளிக்கும் சண்டீசுவரரின் தலையில் கொன்றை மாலையைச் சூட்டித் தனது கணங்களுக்குத் தலைவனாக்கும் நிகழ்வு காட்டப்பட்டுள்ளது. முதலாம் இராஜேந்திரரால் எடுக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள இம்மாதிரி சிற்பம் உலகப்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 4. கோச்செங்கணான் புராணம் கோச்செங்கணான் வரலாற்றில் குறிப்பிடப்படும் யானையும் சிலந்தியும் செய்யும் சிவவழிபாடு ஒரு மகரதோரணச் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. வெண்ணாவல் மரத்தின்கீழ் உள்ள சிவலிங்கத்தின்மீது யானை ஒன்று துளைக்கை கொண்டு மலர் சொரிந்து வழிபாடு செய்கின்றது. இவ்வெண்ணாவல் மரத்திலிருந்து கீழேவிழும் சருகுகள் சிவலிங்கத்தின்மீது விழுந்துவிடாமல் இருக்கும் பொருட்டு சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மேலே வலைபின்னித் தன் அன்பை வெளிப்படுத்துகின்றது. சிலந்தியின் தூய அன்பைத் தவறாகப் பொருள் கொண்டு யானை சிலந்தியின் அன்புக்கு இடையூறு செய்து வலையை அறுக்க, சிலந்தி யானையின் துளைக்கையில் புகுந்து கடித்துத் துன்புறுத்த, யானை கோபமுற்றுத் துளைக்கையைத் தரையில் வேகமாய் அடிக்க, சிலந்தியும் யானையும் இறந்து போயின. இச்சிலந்திதான் மறுஜென்மத்தில் கோச்செங்கட்சோழனாகப் பிறந்து மாடக்கோயில்கள் பல கட்டினான். இது கோச்செங்கணான் புராணம் கூறும் கதை. இங்கு யானையும் சிலந்தியும் செய்யும் சிவவழிபாடு அழகுறக் காட்டப்பட்டுள்ளது. இவ்வெண்ணாவல் மரத்தின் பின்னே சாமரம் ஏந்திய பெண் ஒருவர் காட்டப்பட்டுள்ளார். பிற மகரதோரணச் சிற்பங்கள் நடராஜர் அமைந்துள்ள கோட்டத்தின்மேல் காணப்படும் மகர தோரணத்தில் உமாசகிதர் பூத கணங்களுடன் உள்ளார். சிவன் முன்பு நான்கு அடியவர்கள் நிற்கும் நிலையில் உள்ளனர். கணபதியின்மேல் உள்ள மகரதோரணத்தில் இரு பெண் அடியவர்கள் உட்பட நான்கு அடியவர்கள் சிவவழிபாடு செய்தல் சித்திரிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் மேல் உள்ள மகரதோரணத்தில் சிவனின் ஊர்த்துவஜானு நடனக்கோலம் காட்டப்பட்டுள்ளது. லிங்கோத்பவர் கோட்டத்தின்மேல் உமாசகிதர் காட்டப்பட்டுள்ளார். பிரம்மா அமைந்துள்ள கோட்டத்தின்மேல் சிவவழிபாடு காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் சிதைக்கப்பட்டுள்ளது. பஞ்சரச் சிற்பங்கள் கருவறைச் சுவர்களில் கர்ண பத்திகளுக்கும் சாலைப்பத்திக்கும் இடையில் உள்ள ஒடுக்கங்களில் காட்டப்பட்டுள்ள பஞ்சரங்களின் மேல்வளைவுகளில் அடியவர்கள் உள்ளனர். ஒருவர் சுகாசனத்தில் அமர்ந்து உள்ளார். சடை மகுடத்தாராய்க் காணும் இவர் வலது கரத்தில் அக்கமாலை கொண்டு கடகமுத்திரை காட்டி இடது கரத்தைத் தொடையின்மீது வைத்துள்ளார். தாடியுடன் காணும் இவரின் கழுத்திலும் அக்கமாலை காணப்படுகிறது. உட்புறக் கருவறைச் சுவரில் உள்ள பஞ்சரங்களில் காணும் அடியவர்கள் சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. கருவறையும் முகமண்டபமும் இணையும் சுவர்ப்பகுதியில் காணப்படும் பஞ்சரங்களில் தென்புறம் அமைந்துள்ள பஞ்சரத்தின் கீழ்ப் பகுதியில் ஓர் அடியவர் சிவவழிபாடு செய்வது போலவும் மேல்வளைவில் அர்த்த பத்மாசனத்தில் ஓர் அடியவரும் காட்டப்பட்டுள்ளனர். சில பஞ்சரங்களில் செதுக்கப்பட்டுள்ள அடியவர்களின் சிற்பங்கள் பணி முடிவடையாமல் முழுமையின்றி காணப்படுகின்றன. வேதிக்கண்டச் சிற்பங்கள் கருவறை தெற்கு, மேற்கு, வடக்குப்புறச் சுவர்களில் உள்ள வேதிக்கண்டப் பகுதிகளில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் சிவபுராணம் ஆகியவற்றிலிருந்து சில காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் எல்லாம் மாசு படர்ந்த காற்று, மழை, வெயில் போன்ற இயற்கைச் சீற்றங்களினாலும், திருப்பணி மற்றும் மனிதனின் அலட்சியம் போன்றவற்றினாலும் பாதி அழிந்த நிலையிலும், பல முழுவதும் அழிந்த நிலையிலும் உள்ளன. தென்புறக் கருவறை வேதிக்கண்டத்தில் ராமர், சிவனின் ஆனந்த தாண்டவம், உமாசகிதர், சிவனின் திருமணக்கோலம், மன்மத தகனம், பிட்சாடனார் மற்றும் காலசம்ஹாரமூர்த்தி உட்பட 15 சிற்றுருவச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப்புறக் கருவறை வேதிக்கண்டத்தில் இராவணன் கைலாய மலையைப் பெயர்த்தல், கஜசம்ஹாரமூர்த்தி உட்பட 10 வேதிக்கண்டச் சிற்பங்கள் உள்ளன. வடக்குப்புறக் கருவறை வேதிக்கண்டத்தில் ஒரு சிற்பம் மட்டும் செதுக்கப்பட்டுப் பணி நிறைவேறாத நிலையில் உள்ளது. பொதுவாகச் சிற்றுருவச் சிற்பங்கள் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், குடந்தை நாகேஸ்வரர் கோயில், பொன்செய் நல்துணை ஈசுவரர் கோயில் ஆகிய கோயில்களில் உள்ளதுபோல் மிகச் சிறப்பாக அமைக்கப்படவில்லை. (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |