http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 5

இதழ் 5
[ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

தவறுகளைத் தவிர்ப்போம்
மத்தவிலாசப் பிரகசனம் - 3
இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் - ஒரு அறிவிப்பு
ஸ்ரீபுறக்குடிப்பள்ளி
கல்வெட்டாய்வு - 4
கட்டடக்கலை ஆய்வு - 5
வைஷ்ணவ மாகேசுவரம்
இராஜசிம்மன் இரதம்
Political history of Thirutthavatthurai and it"s neighbourhood
எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு
சங்கச்சாரல் - 5
கோச்செங்கணான் யார் - 3
இதழ் எண். 5 > பயணப்பட்டோம்
இராஜசிம்மன் இரதம்
கோகுல் சேஷாத்ரி
மாமல்லபுரம் பயண அனுபவங்கள் - பகுதி 2


அத்யந்த காமமாகிய இராஜசிம்மன் இரதம் குறுகிக்கொண்டே செல்லும் மேற் தளங்களை கொண்டது என்பது பார்த்தவுடன் விளங்கும். ஆக மூன்றாவது விமான தளத்தின் நீள அகலங்கள் கீழே அமைந்துள்ள தளங்களைவிட மிகக் குறைவு. நான்காவது தளத்திலோ சுற்றுப்புறப்பாதையே இல்லை - நேராக கீரீவம் சிகரம்தான் !

மகரப் படிக்கட்டுகள் - இரண்டாம் தளம்


முதல் தளமான ஆதி தளத்திலிருந்து இரண்டாம் தளத்திற்குப் படிகள் இல்லை. அதனால் ஏணி உபயோகித்து ஏறும்படி ஆகிவிட்டது. ஆனால் இரண்டாம் தளத்திலிருந்து மூன்றாம் தளத்திற்கு அருமையான படிக்கட்டுகள் உண்டு. மகரத்தின் வாயிலிருந்து உமிழப்பட்டவைபோல் இப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முழுமை பெறாத கருவறை - இரண்டாம் தளம்


அத்யந்த காமத்தின் சிற்பிகள் முதல் மூன்று தளங்களிலும் மூன்று கருவறைகள் அமைக்கும் உத்தேசத்துடன் இரதத்தை வடிவமைத்தனர். துரதிருஷ்ட வசமாக முதல் இரண்டு தளங்களிலும் கருவரையை வடித்து முடிக்கவே முடியவில்லை ! ஆனால் மூன்றாவது தளம் அதிருஷ்டவசமாக முழுமையடைந்த கருவரையைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

கருவறை சோமாஸ்கந்தர் - மூன்றாம் தளம்


பொதுவாக பல்லவர் காலக் கோயில்கள் பலவற்றிலும் கருவறையில் லிங்க வடிவத்தின் பின்புறம் சோமாஸ்கந்தர் வடிவத்தை அமைப்பது மரபு. ஈசனுக்கருகில் உமை அமர்ந்திருக்க இருவருக்குமிடையில் குமரக்கடவுள் அருள்புரியும் வடிவம்தான் சோமாஸ்கந்தர். நமது அத்யந்த காமத்தில் இந்த வடிவத்தில் ஒரு புதுமையைப் புகுத்துகிறான் சிற்பி. குமரன் இருவருக்குமிடையில் அமராமல் உமையின் மடியிலேயே சிறு குழந்தையாய் அமர்ந்திருக்கிறான். உமையும் நேராக அமராமல் சற்று ஒருக்களித்தவாறு அமர்ந்து ஒரு பக்கமாக அவனை அணைத்துக் காட்சி தருகிறாள். தெய்வத் தம்பதியரின் இரு பக்கங்களிலும் பிரமனும் திருமாலும் கைகளை உயர்த்தி வாழ்த்துகிறார்கள்.

கடினமான பாறையின் இயல்பையும் தாண்டி ஈசன் முகத்திலிருந்து வெளிப்படும் பூரிப்பை இரசிக்கலாம்.

கருவறை சோமாஸ்கந்தர் தொகுதி ஈசர் - மூன்றாம் தளம்


கருவரையில் முற்காலத்தில் அமைக்கப்பட்ட லிங்கத் திருமேனி தற்போது இல்லை - ஆனால் அதனை வைப்பதற்கு வெட்டப்பட்ட குழியும் அபிஷேக நீர் செல்வதற்கு அமைக்கப்பட்ட பாதையும் தெரிகின்றன.

கருவரைக்கு வெளியே இரு பக்கங்களிலும் வாயிற் காவலர்கள். அவர்களில் ஒருவர் சற்றே முன்சாய்ந்து ஒரு காலை மடித்து தனது கதையின்மேல் வளைந்தவாறு நிற்கும் பாங்கு இருக்கிறதே... அடடா - மிக மிக இயல்பான தோற்றம்.

கருவறை வாயிற்காவலர் - மூன்றாம் தளம்


இந்த வாயில்காவலர் பற்றி டாக்டர் கலைக்கோவனின் "அத்யந்த காமம்" புத்தகம் என்ன சொல்கிறதென்று ஒரு நிமிடம் உற்றுக் கேட்போமா ?

"வாயிலின் வலப்புறம், பாம்பு சுற்றியுள்ள உருள்பெருந்தடியைத் தரையில் நிறுத்தி, அதன்மீது இரு கைகளையும் தாங்கலாய் இருத்திக் கருவறைக்காய் சற்றே ஒருக்களித்த நிலையில் திரும்பியுள்ள வாயில்காவலரின் வலக்கால் சாய்வாகத் தரையில் ஊன்றியிருக்க, இடக்கால் அதன்பின் ஸ்வஸ்திகமாய் அமைந்துள்ளது. பாதங்களுள் வலப்பாதம் திரயச்ரத்திலிருக்க, இடப்பாதம் அக்ரதல சஞ்சாரத்திலுள்ளது. தலையில் கரண்ட மகுடம்.செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். கைகளில் தோள்வளைகள், வளையல்கள்.கழுத்தில் சரப்பளி. உதர பந்தமும் உபவீதமாய் முப்புரி நூலும் அணிந்துள்ள இவரது சிற்றாடையின்மேல் அரைப்பட்டிகை. அதன் முடிச்சுத் தொங்கல்கள் தொடைகளின்மீது, முழங்கால்களுக்குச் சற்று மேல்வரையிலெனத் தொங்குகின்றன. கொசுவம் வலப்புறம் விசிறிமடிப்பாய் விரிந்துள்ளது. இடைக்கட்டின் வலப்பக்க முடிச்சுத் தொங்கல்களுள் ஒன்று தொடைவரையும் மற்றொன்று முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரையென நீண்டுள்ளன....."

கருவறை வாயிற்காவலர் (வேறு கோணம்) - மூன்றாம் தளம்


என்ன ஒரு முழுமையான ஆழமான அழகான படப்பிடிப்பு பார்த்தீர்களா ? புகைப்படம் கூடத் தேவையின்றி கண்முன் இந்த வாயில்காவலரின் தோற்றம் நின்றுவிடுகிறதில்லையா ? திரயச்ரம், அக்ரதல சஞ்சாரம் என்று சில பதங்கள் மிரட்டினாலும் கொஞ்சம் பொறுமையோடு - முடிந்தால் புகைப்படத்தையும் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு - ஊன்றிப் படித்தால் பெரும்பாலான செய்திகளைப் புரிந்துகொண்டு விடலாம்.

அத்யந்த காமத்தின் அத்தனை அழகுகளையும் ஆழமாகப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

மூன்றாவது தளத்தின் அமைப்பு ஒரு திட்டமிடப்பட்ட ஒழுங்கைக் கொண்டுள்ளதை அரமியச் சுவர்களின் அத்தனை சிற்பங்களையும் ஒன்றாய் நிறுத்திப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது ஒவ்வொரு திசைக்கும் ஒரு தெய்வம் - அதனைச் சுற்றி அடியவர்கள். அடியவர்கள் பலர் கைகளிலும் வழிபாட்டிற்கான மலர். கிழக்கு திசையில் சூரிய தேவன் - வடக்கே சந்திரன் - தெற்கே சிவபெருமான். இந்த சிவ வடிவம் மிக அபூர்வமானது - இதனைப் பின்னால் காண்போம்.

அதிகாலை வெய்யில் தலைமேல் தகதகக்க அந்தக் கோயிலின் பல்வேறு பகுதிகளை நிதானமாக விளக்க ஆரம்பித்தார் டாக்டர். அகிலா. நாஸிகா, சாலா, சிகரா, கர்ணகூடா என்று பல்வேறு பகுதிகள் விளக்கப் பெற்றன. சும்மா இருக்கமுடியாத ஓரிரு நண்பர்கள் சிகரம் அமைந்துள்ள நான்காவது தளத்தின் மீது ஏறி இருந்த தம்மாத்துண்டு இடந்தில் வசதியாய் அமர்ந்துவிட்டார்கள்.சற்று தாமதமாய் வந்த நாம் ஒரு ஓரமாய் நிற்கத்தான் முடிந்தது.

சிகரத்தோடு ஒட்டிக்கொண்டு...


அத்தனை உயரத்தில் அமர்ந்துகொண்டு ஒரு நண்பர் பல்லவ சிற்பிகளின் திறனை வியக்க ஆரம்பித்தார். "எங்கேயிருந்து ஆரம்பிச்சு எப்படி முடிச்சிருக்கான் பாத்தீங்களா ? ஒவ்வொரு தளத்திலயும் விளக்குகள் ஏற்றி வைக்க வசதியாய் இடம் வெச்சிருக்கா பாருங்க - இராத்திரிகளில் எல்லா தளத்திலயும் விளக்குகள் எரியும்போது எத்தனை அழகாய் இருந்திருக்கும் ?"

நமது மனக்கண்களில் அந்தக் காட்சி விரிந்தது. ஒவ்வொரு தளத்திலும் பெரிய பெரிய அகல் விளக்குகள் கொளுத்தப்பட்டு - அந்தக் காரிருளில்... மேலிருந்து விரியும் மெல்லிய நிலவின் வெளிச்சத்தில்.... ஆகா - எழில் வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமேதானடி !

அத்தனை உயரத்திலிருந்து பார்க்கும்போது மற்ற இரதங்கள் எல்லாம் வேறு விதமான கோணத்தில் வேறு விதமான அழகுகளோடு விரிந்தன..."சாலாகார விமானம் என்று சொல்கிறார்களே - அதை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் !" என்றார் நண்பர். அட, ஆமாம் ! கிட்டத்தட்ட பெளத்த சைத்தியத்தின் மாதிரியில் செதுக்கப்பட்டிருந்த பீம இரதத்தின் அழகை தருமராஜ இரதத்தின் மேலிருந்து நன்றாகவே தரிசிக்க முடிந்தது.

அத்யந்த காமத்திலிருந்து தெரியும் பீம இரதம்


மேலே தெரிந்த காட்சிகள் அனைத்தையும் - ஆனையானாலும் சரி, பூனையானாலும் சரி - கேமராவில் சுட்டுத் தள்ளிவிட்டு ஓய்ந்துபோய் கீழே இறங்கினோம்.

கருவரை அமைந்த தளத்தை சுற்றிலும் ஒவ்வொரு பக்கத்திலும் விதவிதமான மூர்த்தங்கள். சூரியன், சந்திரன், அடியவர் என்று எத்தனையோ வகைகளில் சிற்பங்கள்... அனைத்தும் நமது கண்ணளவிற்கே அமைந்துள்ளன. ஏதோ ஒரு ஆவேசத்தில் அத்தனை சிற்பங்களையும் படுத்துக்கொண்டு கீழிருந்து நோக்கினால் எப்படியிருக்கும் என்று தோன்றவே - தரையிலுள்ள அழுக்கு பற்றியெல்லாம் யோசிக்காமல் படுத்துவிட்டோம். திடீரென நெடுஞ்சாண் கிடையாக நாம் கீழே சாய்வதைக் கண்ட நண்பரொருவர் நமக்கு பக்திதான் முற்றிவிட்டதோ என்று பயந்துவிட்டார். அப்புறம் விதவிதமான கோணங்களில் படம் எடுப்பதற்காககத்தான் கீழே விழுந்து புரள்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டுதான் மேலே நகர்ந்தார்.

விதவிதமான கோணங்களில்...


இந்த சிற்பங்களை செதுக்கிய சிற்பி இப்படித்தான் நின்றும் இருந்தும் விழுந்தும் கிடந்தும் - இரவுபகலாக வேலை செய்திருப்பான் அல்லவா ?

அதோ ! இரவு கருத்துவிட்டது... மல்லையின் கலங்கரை விளக்கம் காரிருளில் உயிர்பெறுகிறது... உயரே, மிக உயரே.. ஒரு சில தாரகைகள் உச்சிவானில் தெரிகின்றன.. மிக மெல்லிய வெளிச்சம் அந்தப் பகுதிகளில் பரவி நிற்கிறது. சிற்பிகள் எல்லோரும் அவரவர் வேலைகளை முடித்துக்கொண்டு ஓய்விடங்களுக்குத் திரும்பிவிட்டனர்...

நாம் தருமராஜர் இரதத்தை நெருங்குகிறோம் - அட, இதென்ன அதிசயம் ? ஒற்றை உளியின் ஓசை மட்டும் தனியாக இருளைக் கிழித்துக்கொண்டு கேட்கிறதே... ஓசை எங்கிருந்து வருகிறதென்று கூர்மையாக கவனிக்கிறோம். இரதத்தின் உச்சியிலிருந்துதான் வருகிறது ! ஆர்வம் உந்தித் தள்ள மேலே செல்கிறோம்... முதல் தளத்தில், அல்ல, இன்னும் மேலே... இரண்டாவது விமான தளத்திலிருந்து ஓசை வருகிறது...

அடி மேல் அடிவைத்துச் செல்கிறோம்.

ஒரு திருப்பத்தில் நாம் காணும் காட்சி - அதனை வார்த்தைகளில் வர்ணிக்க முடியுமா என்ன ?

தீப்பந்தத்தை ஒரு உதவியாளன் பயபக்தியுடன் பிடித்திருக்க - ஒரு முதிர்ந்த சிற்பி செதுக்கிக்கொண்டிருக்கிறான். உடலில் தெரியும் முதுமையும் தடுமாற்றமும் அவன் கைகளில் தெரியவில்லையே ? எத்தனை ஆச்சரியம் ? வியர்மை உடலெங்கும் ஓட ஓட, ஒருக்களித்துப் படுத்தபடி மிகவும் சிரமமான ஒரு கோணத்தில் விடாமல் செதுக்கிக் கொண்டிருக்கிறான்...

அவனைச் சுற்றியுள்ள மொத்த பூமியும் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டாலும் அவன் தனது வேலையை நிறுத்தமாட்டான் போலும் ! இரத்தமும் சதையுமாய் உருவாகும் சிற்பத்தை கவனிக்கையில் நாம் புரிந்துகொள்கிறோம் -
ஓ, இது பிரசவ நேரம் ! இடையில் நிறுத்தி ஓய்வெடுக்க முடியாது ! உடலுக்கு எத்தனை துன்பமானாலும் சரி, கைகளும் கால்களும் எத்தனை களைத்திருந்தாலும் சரி, அந்தத் தெய்வீக சிற்பம் அவன் மனதிலிருந்து கழன்று வெளியே வந்து விழுந்தால்தான் அவனால் அசையவே முடியும் ! அடடா - எப்படிப்பட்டதொரு தெய்வீகமான தருணத்தில் வந்திருக்கிறோம் ! இவனுடைய கலை பரிபூரணமானது. அண்ட பகிரண்டங்களையும் கட்டுப்படுத்த வல்லது. படைப்பின் மூலத்தில் வேர்பரப்பி ஞான வானத்தில் கிளைபரப்பி நீண்டு செழித்து நிற்பது.

வாழ்க வாழ்க ! இவன் கலை காலமும் தேகமும் கட்டுப்படாத அண்டவெளியில் நின்று நிலைபெற்று வாழ்க ! வானமும் பூமியும் மேகமும் சூரியனும் உள்ளவரை அழியாது வாழ்க !

கண்களில் நீர்வழிய ஓசைப்படாமல் கீழிறங்கி இரண்டாவது தளத்தை அடைகிறோம்.

(மேலும் பயணிப்போம்...)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.