http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 54

இதழ் 54
[ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வல்லறிதல் வேந்தன் தொழில்
பார்க்கவும் படிக்கவும் . . .
ஒரே ஒரு கேள்வி
திரும்பிப்பார்க்கிறோம் - 26
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
Thirumeyyam - 1
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 1
அவர் - ஏழாம் பாகம்
என் துன்பம் நீயும் பெறுவாய்!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 54 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 26
இரா. கலைக்கோவன்


அன்புள்ள வாருணி, 1989 மேத்திங்களில் தொல்காப்பியம் சொல்லதிகாரம் தாளை எழுதி முடித்தேன். அறுபத்தொரு மதிப்பெண் கிடைத்தது. எழுத்ததிகாரம்தாள் மட்டுமே எஞ்சியிருந்தது. அதைப் படிக்க 1989 முழுவதும் வாய்ப்பமையவில்லை. 1990 மேத்திங்களில்தான் அந்தத் தேர்வை எழுதமுடிந்தது. 69 மதிப்பெண் தந்திருந்தார்கள். 1990 மேத்திங்களில் முதுகலைத் தமிழ்ப்பாடத்தை முடித்து முதல் வகுப்பில் தேறினேன். தமிழில் முதுகலை படித்தது பெருவாய்ப்பாக இருந்தது. அந்தப் படிப்பை மேற்கொள்ளாது விட்டிருப்பின் இலக்கணப் புலமை பெறாமல் போயிருப்பேன்.

தமிழிலக்கண நூல்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தை இலக்கிய இளவல் படிப்பும் முதுகலைப் படிப்புமே தந்தன. காரிகை, அலங்காரம், நன்னூல் இவையெல்லாம் தெரிந்திருந்தால் இலக்கியங்களை மேன்மேலும் சுவைக்கமுடியும். தொல்காப்பியம் தமிழிலக்கியங்களின் படிநிலைகளையும் பரிமாணங்களையும் உள்வாங்கிக் கொள்ள உறுதுணையாக இருந்தது. அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல் இவை ஐந்தும் தமிழர் நாகரிகம், பண்பாடு பேசும் அற்புதமான வரலாற்றுக் களஞ்சியங்கள்.

தொல்காப்பியத்தை ஆழ உழுத நூல்களாகச் சிலவே கிடைக்கின்றன. அவற்றுள்ளும் வரலாற்றுப் பார்வையுடன் அமைந்தவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். தொல்காப்பியத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தமிழர் பண்பாட்டு வரலாற்றைச் சங்க இலக்கியப் பின்னணியுடன் தொகுப்பது இன்றைக்கு நம் முன் இருக்கும் மிக இன்றியமையாத பணிகளுள் தலையாயதாகும். வரலாற்றுப் பார்வையும் ஆழமான தமிழ்ப் புலமையும் உடைய அறிஞர்கள் யாரேனும் இம்முயற்சியை மேற்கொண்டால் தமிழினம் பெரும் பயன் அடையும்.

நாங்கள் 1989 மார்ச்சில் தொடங்கிய மூன்றாம் சனிக்கிழமை ஆய்வுப் பொழிவு வரிசையில் 17. 6. 1989 அன்று, 'திரும்பிப்பார்க்கிறோம்' என்ற தலைப்பில் எங்கள் பணிகளைக் கற்றார் அவை முன் பதிவுசெய்தேன். பார்வையற்றோர் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெற்று, வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற செல்வி கி. இராதாபாய் அந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறையில் முதுகலை முடித்த அத்தோழி, பார்வையற்றோர் மறுவாழ்வுப் பணிகள் குறித்தே முனைவர் ஆய்வு செய்து வளம் பெற்றவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் கோபாலன், திரு. மைக்கேல் இவர்கள் வழிகாட்டலில் அவருடைய எதிர்காலம் ஒளிமயமாக அமைந்தது. புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பின்னாளில் அவர் பேராசிரியையாகப் பணியில் சேர்ந்து வளர்ந்தார்.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையினர் ஆண்டுதோறும் தமிழ்நாடு சார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு மாத காலம் கல்வெட்டாய்வுப் பயிற்சி தருவது வழக்கம். குறைந்தது முப்பது ஆசிரியர்கள் ஒவ்வோர் ஆண்டும் இத்தகு பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவுபெறுங் காலத்து அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள சில முக்கியமான வரலாற்றிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். 1989ல் அத்தகு பயிற்சிப் பட்டறை ஒன்று நடந்தது. பயிற்சி பெற்ற ஆசிரியப் பெருமக்கள் சிராப்பள்ளி வரும்போது, அவர்களுக்கு ஒரு வரவேற்பு அளித்தால் நன்றாக இருக்குமென்று நண்பர் மஜீது கருதினார். மேலும், அப்போது நளினி அங்குக் கல்வெட்டியல், தொல்லியல் பட்டய வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். தொல்லியல்துறையின் செயலராக முனைவர் அவ்வை நடராஜனும் இயக்குநர் பொறுப்பில் திரு. நடன. காசிநாதனும் இருந்தனர்.

மஜீதின் விருப்பத்தை நிறைவேற்றக் கருதியதால் என் நண்பரும் சிராப்பள்ளியின் புகழ் பொலிந்த மருத்துவர்களுள் ஒருவருமான மீ. சா. அஷ்ரபை அணுகினேன். சிராப்பள்ளியிலுள்ள பழம் பெருமை வாய்ந்த 'ஓட்டல் அரிஸ்டோவின்' உரிமையாளர் அவர். தங்கும் வசதியும் உணவுச்சாலையும் கொண்ட அந்த இடத்தில்தான் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அமரர் எம். ஜி. இராமச்சந்திரன் தங்குவது வழக்கம். அவ்வளவு வசதிகள் கொண்ட அந்த விடுதியின் தலைவராக இருந்த அஷ்ரப், என் வேண்டுகேளை மிகுந்த அன்புடன் நிறைவேற்றித் தந்தார். செயலூக்கம் நிறைந்த அவர், வரவேற்பின்போது, தேநீர் விருந்தொன்றும் அளிக்க முன்வந்தார். அவருடைய கொடையுள்ளம் என்னையும் மஜீதையும் மகிழ்விற்கு உட்படுத்தியது. 15. 7. 1989 அன்று மாலை 4. 00 மணியளவில் நடந்த அந்த வரவேற்பு நிகழ்விற்கு அஷ்ரப் தலைமையேற்றார். அவ்வை நடராஜனும் நடன. காசிநாதனும் சிறப்பு விருந்தினர்களாகக்கலந்துகொண்டனர். நான் வரவேற்புரை நிகழ்த்த, மஜீது நன்றியுரையாற்றினார். அந்த விடுதியில் இருந்த குளிர்மையரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியால் மஜீது பெரிதும் மகிழ்ந்தார்.

அன்று மாலை 6. 00 மணியளவில் எங்கள் மையத்தின் திங்கட் பொழிவு இருந்தது. அதற்கும் பயிற்சிக் குழுவினர் வந்திருந்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் முனைவர் ச. முத்துக்குமரன் அந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார். பூம்புகாரில் நிகழ்த்திய களஆய்வுப்பணிகள் குறித்து, புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழத்துறைத் தலைவர் பேராசிரியர் க. ப. அறவாணன் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வர இயலவில்லை. அவர் வரமாட்டார் என்று எனக்கு மாலை ஆறுமணிக்குத்தான் தெரியவந்தது. யாரைச் பேசவைப்பது என்று நான் தடுமாறியபோது, தற்செயலாகஅந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த என் அருமை நண்பர் வெ. திருப்புகழ் கண்ணில் பட்டார்.

திருப்புகழ் சேலத்தைச் சேர்ந்தவர். சிராப்பள்ளி வளனார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே எனக்கு அறிமுகமானவர். நாங்கள் நடத்திய சொல்லாற்றல் போட்டிகளில் பங்கேற்றுத் திறம்படப் பேசிப் பரிசுகள் வென்றவர். முதுநிலைப் பட்டம் பெற்றுச் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் அன்றைய நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார். திருப்புகழுக்கு ஓஷோவிடம் நிறைந்த ஈடுபாடு இருந்தது. தத்துவ இயலில் ஆழவும் அகலவும் படித்திருந்த அவர், 'ஜென் புத்தம்' பற்றிப் பேச இசைந்தார். பதினைந்து நிடங்களில் தொடங்கிய கூட்டத்திற்குத் தலைமையேற்ற பேராசிரியர் முத்துக்குமரன் வரலாற்றின் பயன்பாடுகள் குறித்து உரையாற்ற, திருப்புகழ் ஜென் புத்தம் குறித்து அருமையானதொரு பொழிவாற்றினார். கூட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியர் அவ்வை நடராஜன் உட்பட அனைவரும் அவருடைய உரையில் ஒன்றியது கண்டு நான் மகிழ்ந்தேன். அவ்வை நடராஜன் நிறையப் படிப்பவர். அவரே வியந்து பாராட்டும் அளவிற்குத் திருப்புகழின் உரை அமைந்திருந்தது.

திருப்புகழ் தற்போது குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியில் இருக்கிறார். 'பேரிடர் மேலாண்மையில்' நிறைந்த ஆர்வம் கொண்டு உழைத்துச் சிறப்புத் தகுதிகள் பெற்றுள்ளார். குஜராத் அரசு அலுவலர்களாலும் மக்களாலும் அவர் நேசிக்கப்படுவதை அகமதாபாத் பயணத்தின்போது பார்த்து மகிழ்ந்தேன். அவருடைய நூலகம் அற்புதமானது. அவருடன் உரையாடுவது இன்பமானது. எத்தனையோ ஞானிகளை நேர்முகம் கண்டு உரையாடிய அவருடைய அநுபவங்கள் என்னை மெய்சிலிர்க்கவைத்துள்ளன. அவருடைய எழுத்தும் பொருளார்ந்து இருக்கும். குஜராத் அரசு அலுவலகத்திற்குள்ளாகவே அவர் ஓர் இதழ் நடத்திவந்தார். அதில் வெளியாகியுள்ள அவருடைய தலையங்கங்களும் கட்டுரைகளும் செறிவானவை. திருப்புகழின் தம்பி திரு. வெ. இறையன்பு சென்னை மாநில ஆட்சிப்பணியில் சுற்றுலாத்துறையின் செயலாளராக உள்ளார். புகழைப் போலவே அவரும் சிறந்த திறனாளர்.

அன்றைய கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த பேராசிரியர் ச. முத்துக்குமரன் அருமையான அறிஞர். அவருடனான முதல் சந்திப்பு சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் நிகழ்ந்தது. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மாநாடு அப்போது ஜமால் முகமது கல்லூரியில் நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்திருந்தார் வளனார் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரம்போலா மாஸ்கரேனஸ். அங்குச் சென்றபோது அரங்க வாயிலருகே பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் மா. எழில்முதல்வனும் துணைவேந்தர் ச. முத்துக்குமரனும் பேசிக்கொண்டிருந்தனர். என்னைக் கண்டதும் எழில் முதல்வன் அருகழைத்து துணைவேந்தருக்கு, 'செனட் உறுப்பினர்' என்று கூறி என்னை அறிமுகம் செய்வித்தார். முத்துக்குமரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்து பிறகு இங்குத் துணைவேந்தராக வந்திருப்பதாகப் பின்னர் அறிந்தேன்.

சிராப்பள்ளிக்கு அருகிலிருந்த புத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் நிருவாகம் சார்ந்த சிக்கலொன்று தீர்க்கப்படாமல் இருந்தது. துணைவேந்தராகப் பொறுப்பேற்றதும் முத்துக்குமரன் அக்கல்லூரியின் சிக்கலை விசாரித்து ஆய்வறிக்கை வழங்குமாறு மூவர் குழுவொன்றை அமைத்தார். அக்குழுவில் ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் க. செல்லப்பன், ஓய்வுபெற்ற மருத்துவக் கல்வி இயக்குநர் ஞானதேசிகன் இவர்களுடன் நானும் இடம்பெற்றிருந்தேன். துணைவேந்தரே என்னை அக்குழுவில் இணைத்திருந்த தகவல் எனக்கு வியப்பளித்தது. என் மீது அவருக்கிருந்த நம்பிக்கை பெருமிதம் தந்தது.

அந்தக் குழுவில் பணியாற்றியதன் வழிக் கல்விச்சாலைகளில் இருந்த நெருக்கடிகளையும் படித்தவர்களிடம்கூட இருந்த சாதிய உளப்பாங்கையும் அறியமுடிந்தது. கல்லூரி நிருவாகம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சச்சரவிட்டுக் கொண்டிருந்ததால், மாணவர்களும் கற்பிப்பதில் ஈடுபாட்டுடன் இருந்த பேராசிரியர்களும் துன்பத்தில் இருந்தனர். எங்கள் குழு அனைத்துப் பிரிவினரிடமும் பேசி அவரவர் சார்ந்த குற்றச்சாட்டுக்கள், விளக்கங்கள் பெற்று ஆய்வறிக்கை தயார் செய்து துணைவேந்தரிடம் வழங்கியது. ஒரு மாத காலத்திற்குள் ஓராண்டாகப் புகைந்து கொண்டிருந்த அக்கல்லூரிச் சிக்கலைப் பெருமளவிற்குச் சரிசெய்தார் துணைவேந்தர். அவருடைய ஆளுமையும் எதையும் எளிமையாகவும் இயல்பாகவும் எதிர்கொள்ளும் நேர்மைத்துணிவும் அவர் மீது பெருமதிப்பை வளர்த்தன.

எங்கள் மருத்துவ மன்ற உறுப்பினரும் சிறந்த நாடக ஆசிரியரும் தேர்ந்த கலைஞருமான மருத்துவர் சு. தியாகராசனின் மகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தார். மிகச் சிறந்த மாணவியான அவர் நன்கு தேர்வெழுதியிருந்தும் இறுதியாண்டுத் தேர்வில் தோல்வியடைந்திருந்தார். அதற்கான காரணம் அப்போது தேர்வாளராக இருந்த மருத்துவர் ஒருவரின் முறைகேடான செயல்தான் எனத் தெரியவந்தது. மருத்துவர் தியாகராசன் இதுபற்றி எங்களிடம் கூறி வருந்தியபோது உடன் துணைவேந்தரைத் தொடர்புகொள்ளச் செய்தேன். அப்போது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பாரதிதாசன் பல்கலையின் கீழ் இருந்தது.

தகவலறிந்த துணைவேந்தர் உடன் உரிய விசாரணைக்கு ஏற்பாடு செய்தார். சென்னைப் பொதுமருத்துவமனை மருத்துவ வல்லுநர் ஒருவர் கொண்டு தேர்வு முடிவைப் பரிசீலிக்க வைத்தார். எந்தத் தவறும் செய்யாத அந்த மாணவி தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருந்தமையை அறிந்ததும் கல்வி யமைச்சரையே நேர்முகம் கண்டார். மாணவியின் வாழ்க்கையில் அந்த நேர்முகம் ஒளியேற்றி வைத்தது. 'யாரோ ஒருவருடைய மகள்தானே' என்று நினைத்திடாமல், தம் பல்கலையின் ஓரங்கமான மாணவி என்ற கருத்தோடு நியாயம் வழங்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சி என் உள்ளத்தில் அவர்பாலிருந்த மதிப்பையும் மரியாதையையும் பன்மடங்காக்கியது.

எங்கள் ஆய்வுகளைப் பற்றியும் நூல்களைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்த அப்பெருந்தகைக்கு வரலாற்றிலும் தமிழிலும் அளவற்ற ஈடுபாடு உண்டு. அவருடைய ஆட்சிக் காலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரலாறு, தமிழ் சார்ந்த பல பயனுள்ள கருத்தரங்குகளை நடத்தியது. அவற்றுள் முதல் கருத்தரங்கம், 'சுந்ட்ந்எய்nஉந் டிக் ழ்ள்ைவ்டிச்ல் கூடின்ய்ல் ய்ன்ே கூடிஅடிச்ச்டிற்'என்ற தலைப்பில் அமைந்தது. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியால் நிகழ்த்தப்பட்ட அந்த மாநிலக் கருத்தரங்கை வடிவமைத்தவர் துணைவேந்தர்தான். கருத்தரங்க அமைப்புக் குழுவில் என்னையும் ஓர் உறுப்பினனாக அவர் சேர்த்திருந்தமையால் அவருடன் நெருங்கிப் பழகமுடிந்தது. கலைஞர் கருணாநிதி நகரில் இருந்த அவருடைய இல்லத்திற்குச் செல்லவும் வாய்ப்பமைந்தது. அவரது துணைவியார் திருமதி இரத்தினாவதி அன்பும் அருளும் நிறைந்த பெருமாட்டி, எப்போதும் புன்னகை மலர்ந்த முகத்துடன் வரவேற்பார்கள். துணைவேந்தரின் பண்புகளுக்கு ஏற்ப அமைந்த பெருந்தகை அவ்வம்மை.

குந்தவை நாச்சியார் கல்லூரி நிகழ்த்திய கருத்தரங்கில் ஓர் அமர்விற்குத் தலைவனாகவும் பிறிதோர் அமர்வில் கட்டுரையாளனாகவும் பங்கேற்றேன். சிராப்பள்ளி பல அரசமரபுகளின் பண்பாட்டுக் களமாக விளங்குமாற்றை என் கட்டுரை விளக்கியிருந்தது. துணைவேந்தர் இருந்து கேட்ட சில கட்டுரைகளுள் அதுவும் ஒன்றாகும். அக்கட்டுரையின் தரவுகள் குறித்து பின்னொரு நாள் விரிவாக விவாதித்த துணைவேந்தர், அவற்றை பதிவுசெய்து நூலொன்று எழுதுமாறு அறிவுரைத்தார்.

ஆறாண்டுகள் அவர் துணைவேந்தராக இருந்தார். அந்த ஆறு ஆண்டுகளும் பல்கலைக்கழகத்தைச் செழுமைப்படுத்திய ஆண்டுகள் என்றே கூறவேண்டும். அவருடைய உள்ளத்தில் இடம்பெற்ற பேற்றினை என் வாழ்க்கையின் தலையாய விழுமியங்களுள் ஒன்றாகவே கொண்டுள்ளேன். இந்த அறுபதாண்டுக் காலத்தில் நான் சந்தித்த அருமையான மனிதர்களில் அவர் முதன்மையானவர். எங்களோடு ஆறாண்டுகள் இருந்து எங்களை நெறிப்படுத்திய அந்த மாமனிதர் தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும் அன்பிற்கினிய பெருந்தகையாவார்.

திரு. நடராஜன் 1988ல் அறிமுகமானார். 'சஷ்டி' என்ற பெயரில் மாத இதழ் ஒன்று தொடங்கும் ஆர்வத்துடன் இருந்த அவர், அந்த இதழிற்குத் தொடர்ந்து நான் கட்டுரைகள் தரவேண்டுமென அன்புடன் வேண்டிக்கொண்டார். மே 88ல் 'திருமங்கலத்து மறைமுதல்வன்' என்ற தலைப்பில் சாமவேதீசுவரர் கோயில் பற்றிய கட்டுரையை வெளியிட்டார். ஜூன் இதழில், 'ஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை'யும் ஜூலை இதழில், 'திரிவிக்கிரமரும் விஷ்ணு கிராந்தமும்' கட்டுரையும் வெளியாயின. ஆகஸ்டு 88ல் வெளியிட, 'அழிந்துவரும் அழகுக் கோயில்' எனும் தலைப்பிலான கட்டுரையைத் தந்தேன்.

செப்டம்பரில், 'பழுவேட்டரையர்களின் பாண்பாட்டுப் பரிசுகள்' வெளியானது. அக்டோபர் இதழிற்காக, 'கல்வெட்டு காட்டும் கலைக்கோயில்கள்' எனும் கட்டுரை உருவானது. நவம்பர், டிசம்பர் மாத இதழ்களில், 'ஆடல் நாயகனின் அரிய திருக்கோலங்கள்' கட்டுரை வெளியிடப்பட்டது. ஜனவரி 89-மார்ச்சு 89 இதழ்களில், 'ஆலந்துறையார் கோயில் கல்வெட்டுகள்' கட்டுரையும் ஏப்ரல், மே இதழ்களில், 'புதிய பார்வையில் பழுவூர் உண்மைகள்' கட்டுரையும் ஜூன், ஜூலை இகழ்களில் 'காலத்தை வென்று நிற்கும் கலைக்கோயில்கள்' என்ற தலைப்பிலான கட்டுரையும் வெளியாயின. ஆகஸ்டில், 'காவிரிக் கரையில் ஒரு கற்றளி' என்ற தலைப்பில் திருச்செந்துறைப் பெருமானடிகள் கோயில் பற்றிய கட்டுரை வெளியானது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் துறைத்தலைவர் பேராசிரியர் எழில்முதல்வன் ஏற்பாடு செய்திருந்த இசைத்தமிழ்ப் பொழிவினை நிகழ்த்துவதற்காக மதுரையிலிருந்து காஜாமலைப் பல்கலைக்கழகப் பட்டமேற்படிப்பு வளாகத்திற்கு வந்திருந்தார் இசைத்தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் வீ. ப. கா. சுந்தரனார். அவர் உரையைக் கேட்க அன்று அந்த அரங்கில் கூடியிருந்த ஆர்வலர்களுள் நானும் ஒருவன். ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் பேசினார்.

நான் கேட்ட முதல் இசைத்தமிழ் உரை அது. கருவிகள் சில வாசித்துப் பண்களை விளக்கி, எளிமையான தமிழில், ஆனால், உறுதியான சான்றுகளுடன் இசைத்தமிழின் தொன்மையையும் சிறப்பையும் அவர் விளக்கிய பாங்கு எனக்குப் பிடித்திருந்தது. கூட்டம் முடிந்ததும் அவரை அணுகிப் பாராட்டியபோது, என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியர்கள் என் தந்தையாரின் பெயரைக் கூறி, என் பணிகளையும் எடுத்துரைத்தனர். தந்தையாரின் பெயரை க் கேட்டதும்அவர் கண்களில் ஒளி. 'இராசமாணிக்கனார் மகனா நீங்கள்!' என்று மட்டற்ற மகிழ்வுடன் உரையாடினார். இரவு உணவுக்கு வருமாறு அழைத்தேன்.

அவரைச் சிராப்பள்ளி அஜந்தா விடுதியில் தங்கவைத்திருந்தனர். தமக்குக் குடலியக்கக் கோளாறு இப்பதாகவும் வெளியில் உண்பதினும் இல்ல உணவு ஏற்புடையதென்றும் கூறிய அவர் வர இசைந்தார். நலக்குறைவான அவர் நிலையறிந்ததும் விடுதி அறையை விட்டு என் இல்லத்திலேயே வந்து தங்குமாறு அழைத்தேன். மகிழ்வோடு வந்தார். அன்றிரவு எளிய உஙுவுக்குப் பிறகு என் பிள்ளைகளுடன் மிக அன்பாகப் பழகி, அவர்களுக்குப் புல்லாங்குழல் இசைத்துக் காட்டினார். என் மகளுக்குத் தம்மிடமிருந்த புல்லாங்குழல்களுள் ஒன்றை அன்பளிப்பாகத் தந்து மகிழ்ந்தார். என் மகள் அவரைப் 'புல்லாங்குழல் தாத்தா' என்றுதான் அழைப்பார்.

இரவு நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். அவரின் இசைத்தமிழ் அறிவு என்னைக் கவர்ந்தது. பல அய்யங்களை எழுப்பினேன். இயன்றவரையில் பதிலளித்தார். பதிலளிக்க வாய்ப்பில்லாமலிருந்த கேள்விகளுக்குச் சிரித்தபடியே, 'சேர்ந்து கண்டுபிடிப்போம்' என்று முடிவு வைத்தார். அடுத்த நாள் நானே அவரைப் பொழிவிடத்திற்கு அழைத்துச் சென்றேன். நான் சற்றும் எதிர்பாராதவகையில் பொழிவின் முன்னுரையில், என்னில்லம் வந்தது, அங்குத் தங்கியது, பிறகு நாங்கள் உரையாடியவை என அனைத்தும் கூறி, அவை முன் எனக்குப் பெரிதும் நன்றி பாராட்டி என்னை நாணவைத்தார்.

அன்று அவரை மருத்துவர் தே. நாராயணனிடம் அழைத்துச் சென்றேன். மருத்துவர் நாராயணன் இனிய தமிழ்ப் பற்றாளர். சிறந்த மனிதர். அவரைப் பற்றித் தனியே எழுதவேண்டும். அவரும் நானும் உடன்பிறவா சகோதரர்களாய் இந்த நிமிடம் வரை பழகிவருகிறோம். சுந்தரனாரை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். நாராயணன் நல்ல பாடகர்; இசைக்கலைஞர். அதனால் உடன் சுந்தரனாரும் அவரும் ஐக்கியமாகிவிட்டனர். பிறகென்ன, நாராணயன் வெளியில் காத்திருந்த தம் நோயாளிகளைக்கூட மறந்து பண்ணாராய்ச்சியில் சுந்தரனாருடன் இணைந்துவிட்டார்.

துணைவேந்தர் முத்துக்குமரனின் அழைப்பேற்றுச் சிராப்பள்ளி வந்த சுந்தரனார் என் இல்லம் வந்தார். அவரை முத்துக்குமரனின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பேறு எனக்கு வாய்த்தது. போகும் வழியில், முத்துக்குமரன் தம்மை தருமபுரத்தில் சந்தித்தது பற்றியும் பாரதிதாசன் பல்கலையில் இசைத்தமிழாய்வு செய்யத் தமக்கு வாய்ப்பமைந்திருப்பது குறித்தும் கூறி மகிழ்ந்தார். 'இதனை இவர் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவர் கண் விடும்' ஆற்றலாளரான முத்துக்குமரன், இசைத்தமிழ்க் கலைக்களஞ்சியத்தைப் படைக்கும் ஒப்பற்ற பணியில் அறிஞர் சுந்தரனாரை ஆற்றுப்படுத்தினார். அந்தப் பணி ஒப்பந்தம் கையெழுத்தான நாள் இசைத்தமிழ் வரலாற்றில் ஒரு பொன்னாள்.

சுந்தரனார் சிராப்பள்ளிக்குக் குடிபெயர்ந்து தென்றல் நகரில் தனியில்லம் எடுத்துத் தங்கினார். கலைக்களஞ்சிய ஆலோசனைக் குழுவில் நானும் ஓர் உறுப்பினனாக இருந்தமையால் அடிக்கடி அவருடன் கலந்துரையாடும் வாய்ப்புப் பெற்றேன். அவரைப் புரிந்துகொள்ளவும் அவருடன் உறவை வளர்த்துக்கொள்ளவும் அவ்வாய்ப்புகள் பெரிதும் உதவின. அகர வரிசையில் முதல் களஞ்சியத்திற்கான சில கட்டுரைகளைத் தயார் செய்ததும் அவற்றைச் சரிபார்த்துத் தருமாறு என்னிடம் தந்தார். அந்தக் கலைக்களஞ்சியம் தமிழிற்கு அவருடைய கொடையென்பதால் மிகுந்த கவனத்தோடு படித்தேன். அருமையாக எழுதியிருந்தாரெனினும் சில இடங்களில் மிகைப்படலும் வலிந்து கூறலும் இருந்தன. எடுத்தாளல்களில் சில பிழைகளும் இருந்தன. சுட்டிக்காட்டியபோது சிலவற்றை ஏற்றுக்கொண்டார். சிலவற்றை ஒப்புக்கொள்ளவில்லை. நானும் வலியுறுத்தாமல் விட்டுவிட்டேன்.

இரண்டாம் முறை இது நிகழ்ந்தபோது, சிறு பிழைகள் என்றாலும், களஞ்சியம் பிழைகளுடன் வரக்கூடாது என்ற ஆர்வக்கோளாறினால் துணைவேந்தர் முத்துக்குமரனைச் சந்தித்து அனைத்தையும் உரிய சான்றுகளுடன் எடுத்துக்கூறித் தரவுகளை அவர்முன் வைத்தேன். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அப்பெருந்தகை, 'இது ஓர் அரும்பெரும் முயற்சி. பிழைகளும் குறைகளும் கட்டாயம் இருக்கும். அந்தச் சில பிழைகளுக்காகச் சுந்தரனாரை மாற்றியெழுதவோ, திருத்தியெழுதவோ வேண்டினால், அவர் உற்சாகம் குறையக்கூடும். கலைக்களஞ்சியம் காலத்தில் உருவாகாமல் போகக்கூடும். அதனால் இவை பற்றிக் கவலுறாமல் அவரை ஊக்கப்படுத்துங்கள். கலைக்களஞ்சியம் உருவானதும் முதல் பதிப்பை அறிஞர்களுக்கு அனுப்புவோம். அவர்கள் சுட்டும் குறைகளையெல்லாம் அடுத்த பதிப்பில் சரிசெய்வோம்' என்று என்னை ஆற்றுப்படுத்தினார்.

அவர் கூறியது எத்தனை பேருண்மை என்பதை உணர்ந்தேன். மனித மனங்களை மதிப்பீடு செய்வதில் முத்துக்குமரன் வல்லவர். அதனால் அவர் முடிவைப் பொன்னே போல் போற்றி அங்கிருந்து நேரே சுந்தரனார் இல்லம் b சன்றேன். அவரிடம் நடந்தது அனைத்தும் கூறினேன். சுந்தரனார் இரண்டு விஷயங்களுக்காக மகிழ்ந்தார். ஒன்று, துணைவேந்தர் தமக்குத் துணையாக இருக்கிறார் என்பது. மற்றொன்று, என்னுடைய ஒளிவுமறைவின்மை. அதனால் நன்மை விளைந்தது. அவர் ஏற்க மறுத்த அகநானூறு தொடர்பான சில தரவுகளைக்கூட அன்று மாற்றியமைத்துக் கொண்டார். அது அவரது பெருந்தன்மைக்குச் சான்று மட்டுமன்று; முத்துக்குமரனின் மனப் படிப்புக்குக் கிடைத்த வெற்றியும்கூட.

சுந்தரனார் இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடையவர். என்றாலும், சில இடங்களில் வலிந்தும் வரம்பின்றியும் பொருள் வளைப்பார். எங்களுக்குள் ஏற்பட்ட ஊடல்களுக்கெல்லாம் அதுதான் காரணமாக அமைந்தது. தொடக்கக் காலத்தில் இவ்வூடல்கள் பிணக்குகளாகக்கூட வளரத் தலைப்பட்டதுண்டு. ஆனால், எங்களுக்குள் விளைந்திருந்த அன்பு, நல்ல காலமாக அவற்றை முற்றவிட்டதில்லை. ஒன்று, நான் அவர் வீட்டுக்குச் சென்று சரணடைவேன்; அல்லது அப்பெருந்தகை கையில் பிஸ்கட் அல்லது பழத்தோடு வந்து என்னை அரவணைப்பார். ஒருமுறையேனும் அவர் வெறுங்கையினராய் என் இல்லம் வந்ததில்லை. என் பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிவருவார். அவர் வீட்டுக்கு நான் சென்றாலும் அவருக்காக வாங்கி வைத்திருக்கும் பழங்கள், ஆர்லிக்ஸ் என்று ஏதாவது தராமல் அனுப்பமாட்டார். அது அவருடன் பிறந்த விருந்தோம்பல் இயல்பு.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.