http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 64

இதழ் 64
[ அக்டோபர் 15 - நவம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

விழிப்புடன் கொண்டாடுவோமா?
மதுரகவி நந்தவனம் - காவிரிக்கரையில் களர் நிலமா?
மதுரகவி நந்தவனம் - திருக்கோயில் நிர்வாகத்தார் விளக்கம்
வரிக்கல்வெட்டு
திருமலை
வரங்கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே!!!
மாடக்கோயில்களும் மேடைக்கோயில்களும் (அ) களப்பிரர் காலம் இருண்டகாலமா?
நாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை
மனமே! தேய்புரி பழங்கயிறே!
இராஜகேசரி - ஒரு விமர்சனம்
இதழ் எண். 64 > பயணப்பட்டோம்
மாடக்கோயில்களும் மேடைக்கோயில்களும் (அ) களப்பிரர் காலம் இருண்டகாலமா?
ச. கமலக்கண்ணன்
பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையில் கிடைத்த ஒருமாதகால விடுப்பை வீணாக்காமல் கற்றுக்கொள்ள நாங்கள் தேர்ந்தெடுத்த பொருள் களப்பிரர்காலச் சோழவேந்தன் கோச்செங்கணான் எழுப்பிய மாடக்கோயில்கள். தஞ்சை, மயிலாடுதுறை, நாகை என்று பரந்து விரிந்த பரப்பில் குடிகொண்டிருக்கும் மாடக்கோயில்களை டாக்டரின் உதவியுடன் கண்டு வரலாம் என்று புறப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் நான், லலிதாராம், முனைவர் இரா.கலைக்கோவன், முனைவர் மு.நளினி மற்றும் குடந்தை சகோதரர்கள் சீதாராமன் மற்றும் பத்மநாபன். கோகுல், இலாவண்யா, க்ருபா மற்றும் சுமிதா ஆகியோர் பணிச்சூழல் காரணமாகக் கலந்துகொள்ள இயலவில்லை. ரிஷியாவும் திரு.வேலாயுதமும் கடைசிநாள் இராஜராஜேசுவரத்தில் இணைந்து கொண்டனர். வழக்கம்போலவே திருச்சிராப்பள்ளியிலிருந்து கிளம்பிய அந்த டவேரா, சாரதி பழனிச்சாமியின் விரட்டலில் காவிரி வடகரை வழியாக சுவாமிமலையை அடைந்தது. அங்குக் குடந்தை சகோதரர்கள் இருவரும் காத்திருந்தனர். திரு. பால.பத்மநாபன் அவர்களின் இல்லத்தில் சுவையான சிற்றுண்டியை ஒரு பிடி பிடித்துவிட்டு, தலைஞாயிறை நோக்கிப் பயணப்பட்டோம். தலைஞாயிறை அடைந்ததும், மாடக்கோயில்கள் பற்றிய பாடங்கள் ஆரம்பமாயின.

முதலில் இந்த மாடக்கோயில்களைக் கட்டியதாக அறியப்படும் கோச்செங்கணானையும் களப்பிரர் காலத்தையும் பற்றிய தகவல்கள். களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று எந்த மகான் கூறினாரோ தெரியாது. ஆனால் கி.பி 4 முதல் 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தின் வரலாற்றுக்குச் சான்றாக ஏராளமான தகவல்கள் இருப்பதை அண்மையில் பல ஆய்வாளர்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றனர். திருமுறைகள் ஒரு பெரும் வரலாற்றுப் புதையலாக இருப்பது அடிக்கடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. போதாக்குறைக்குப் பெரியபுராணமும் இந்தக் காலகட்டத்தின் கதைகளை அள்ளி விட்டுக்கொண்டே இருக்கிறது. ஆழ்வார் பாசுரங்கள் காலத்தால் பிற்பட்டவையாயினும், திருமங்கையாழ்வாரின் திருநறையூர்ப்பதிகம் கோச்செங்கட்சோழனைக் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி முனைவர் மா. இராசமாணிக்கனார் தனது கோச்செங்கணான் காலம் என்னும் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

கோச்செங்கணான் 70 சிவன் கோயில்கள் கட்டினான் என்று திருமங்கையாழ்வார் குறித்துள்ளார் (திருநறையூர்ப் பதிகம், செய்யுள் 8). சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோயிலோ திருமால் கோயிலோ கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோயில்கள் பலவாக ஒரே அரசனால் கட்டப்பெற்ற காலம் சைவ உணர்ச்சி வேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்ககாலத்தில் அத்தகைய உணர்ச்சி வேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்க காலத் தமிழ் உலகில் பிறசமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக்கிடக்கிறது. அவ்வமைதியான நிலையில் ஓர் அரசன் 70 கோயில்கள் கட்டினான் என்றல் நம்பத்தக்கதன்று. ஆயின், சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர்க்கு முன்னும் களப்பிரர், பல்லவர் போன்ற வேற்றரசர் இடையீட்டால் பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் மிகுதியாகப் பரவலாயின. சங்ககாலப் பாண்டியன் அளித்த பிரம்மதேய உரிமையையே அழிக்கக்கூடிய நிலையில் களப்பிரர் சமயக்கொடுமை இருந்தது என்பது வேள்விக்குடிப் பட்டயத்தால் தெரிகிறது. அக்களப்பிரர் காலத்திற்றான் மதுரையில் மூர்த்தி நாயனார் துன்பப்பட்டார். சோழநாட்டில் தண்டியடிகள், நமிநந்தி அடிகள் போன்ற சிவனடியார்க்கும் சமணர்க்கும் வாதங்களும் பூசல்களும் நடந்தன. இத்தகைய சமயக்கொடுமைகள் நடந்து, சைவ சமயவுணர்ச்சி மிக்குத்தோன்றிய பிற்காலத்தேதான் கோச்செங்கணான் போன்ற அரசர் பல கோயில்கள் கட்டிச் சைவத்தை வளர்க்க முற்பட்டிருத்தல் வேண்டும்.

கோச்செங்கணானைப் பற்றித் திருமங்கையாழ்வார் வெளியிடும் கருத்துக்கள் இவையாகும். (திருநறையூர்ப் பதிகம் செய்யுள் 6,5,3,4,9)

- உலகமாண்ட தென்னாடன் ('தென்னவனாய் உலகாண்ட செங்கணான்' என்ற சுந்தரர் தொடர், இதனுடன் ஒப்பு நோக்கத் தக்கது)
- குடகொங்கன் சோழன்
- தென்தமிழன் வடபுலக்கோன்
- கழல் மன்னர் மணிமுடிமேல் காகமேறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்
- விறல் மன்னர் திறல் அழிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச்சோழன்
- படை மன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன் கோச்சோழன்

இக்குறிப்புக்களால் இவன், வலிபொருந்திய அரசர் பலரைப் போரில் கொன்றவன் - வென்றவன் என்பதும், கொங்கு நாடு வென்றவன் என்பதும், சோணாட்டுக்கு வடக்கிருந்த நிலப்பகுதியை (தொண்டை நாட்டை) வென்றவன் என்பதும், சிறந்த யானைப் படை குதிரைப் படைகளை உடையவன் என்பதும் தெரிகின்றன.

'கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர்' என்றதால் சோழனை எதிர்த்தவர் மிக்க வலிமையுடைய பகையரசர் என்பது பெறப்படும். அவர்களைச் செங்கணான் 'தெய்வ வாள்' கொண்டு வென்றான் என்பதாலும் பகையரசரது பெருவலிமை உய்த்துணரப்படும். சங்க காலத்தில் இத்தகைய மன்னர் பலருடன் செங்கணான் போரிட்டது உண்மையாயின், இப்போரைப்பற்றிச் சில செய்யுட்களேனும் அக்கால நூல்களில் இருந்திருக்கும் அல்லவா? சங்க காலத்தில் தொண்டை நாடும் சோழர் ஆட்சியில் இருந்தமை மணிமேகலையால் அறியலாம். அதற்கும் அப்பாற்பட்ட வடபுலத்தை இவன் வென்றான் எனக் கொள்ளின், அப்பகையரசர் யாவர் எனக் கூறுவது? சுருங்கக் கூறின்,

1. இப்போர்களைப் பற்றிய பாக்கள் சங்க நூல்களில் இல்லை
2. இவன் அரசர் பலரை வென்றவனாகக் காண்கிறான்
3. சங்க இறுதிக் காலத்தில் இங்ஙனம் ஒரு சோழன் பேரரசனாக இருந்தான் என்று கூறத்தக்க சான்றுகள் இல்லை
4. இவன் சிவன் கோயில்கள் பல கட்டினவன்

இந்நான்கு காரணங்களையும் நடுவுநிலைமையினின்று ஆராயின், கோச்செங்கணான் சங்க காலத்திற்குப் பிற்பட்டவனாக இருத்தக் கூடும் என்ற எண்ணமே பலப்படும்.


மாடக்கோயில்கள் சிவபெருமானுக்கு மட்டுமின்றி, திருமாலுக்கும் எடுக்கப்பட்டிருந்தன. அனல்வாதம், புனல்வாதம் போன்ற மாயங்கள் நிகழ்ந்த சைவசமய மறுமலர்ச்சிக் காலத்தில் ஓர் அரசன் சைவம், வைணவம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது அரிது. எனவே, சைவம், வைணவம் இரண்டையுமே தமது இரு கண்களாகப் போற்றிய கோச்செங்கணான், சைவசமயம் மறுமலர்ச்சியடைவதற்கு முந்தைய காலமான களப்பிரர் காலத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இது மட்டுமின்றி, பெரியபுராணம் இன்னொரு கோணத்தில் கோச்செங்கணானை அணுகுகிறது. இதைப்பற்றியும் முனைவர் மா. இராசமாணிக்கனார் அதே கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

கோச்செங்கணானுடைய தந்தை பெயர் சுபதேவன்; தாயின் பெயர் கமலவதி என்பன என்று சேக்கிழார் கூறியுள்ளார் (கோச்செங்கட் சோழர் புராணம் செய்யுள் 7). இப்பெயர்களைச் சோழப் பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார் தக்க சான்றுகொண்டே கூறினாராதல் வேண்டும். இப்பெயர்கள் தூய வடமொழிப் பெயர்கள். இங்ஙனம் சங்க காலத்து அரச குடும்பத்தினர் வடமொழிப் பெயர்களை வைத்துக் கொண்டனர் என்பதற்குப் போதிய சான்றில்லை. சம்பந்தர் காலத்திற்கு முற்பட்ட சுமார் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டினர் என்று கருதத்தக்க காரைக்கால் அம்மையார்க்குப் புனிதவதி என்பது பெயர். அப்பெயருடன் மேற்சொன்ன கமலவதி என்ற பெயர் ஒப்புநோக்கத்தக்கது.

இத்தகைய பல காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்தவன் ஆகான் எனக் கொள்ளலாம். ஆயின், அவன் அப்பர், சம்பந்தராற் பாடப்பட்டவன். ஆதலின், அவன் காலம் மேற்சொன்ன சங்ககாலத்திற்குப் பிறகும், அப்பர் சம்பந்தர் காலத்திற்கு முன்னும் ஆதல் வேண்டும். அஃதாவது, அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 400-600க்கு உட்பட்டது எனக் கூறலாம்.


கடுங்கோன் என்ற பாண்டியமன்னன், அச்சுத விக்கந்தர், கூற்றுவ நாயனார் போன்ற களப்பிர அரசர்கள், புத்தவர்மன், குமாரவிஷ்ணு, சிம்மவிஷ்ணு, நந்திவர்மன் போன்ற பல்லவ அரசர்கள், வேள்விக்குடி, வேலூர்ப்பாளையம், காஞ்சிபுரம், காசாக்குடிப் பட்டயங்கள் மற்றும் செப்பேடுகள், சோழ பல்லவப் போர்கள் போன்றவற்றை ஆதாரமாக வைத்து, கோச்செங்கணானின் காலம் சுமார் கி.பி 450லிருந்து 500க்குள் இருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார் முனைவர் மா. இராசமாணிக்கனார். மேற்கண்ட கூற்றுகளிலிருந்து, களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற பொய்யின் முகத்திரை கிழிகிறது.

வரலாற்றிலிருந்து மீண்டு நிகழ்காலத்துக்கு வருவோம். தலைஞாயிறு கோயிலை அடைந்ததும் நாங்கள் அறிய முற்பட்டது, மாடக்கோயில் என்றால் என்ன? எந்த அமைப்புடன் இருந்தால் அதை மாடக்கோயில் என்று அழைக்கலாம் என்பதுதான். அதாவது, ஒரு வெற்றுத்தளத்தின்மீது கருவறை அமைந்திருந்தால், அதை மாடக்கோயில் எனக் கொள்ளலாம். வெற்றுத்தளம் என்பது, கருவறையோ, அர்த்தமண்டபமோ, முகமண்டபமோ அற்ற ஒரு தளத்தின்மீது அமைந்திருக்கும் விமானம்தான் மாடக்கோயில் எனப்படுவது. இந்த வெற்றுத்தளம் என்ற பதம், வரலாற்றறிஞர்களை வெகுவாகக் குழப்பியுள்ளது. தஞ்சைப் பெரியகோயில் ஒரு மாடக்கோயில் என்று சோழர் வரலாற்றின் முன்னோடி நீலகண்ட சாஸ்திரி அவர்களை எழுதவைத்தது இந்தக் குழப்பம்தான். ஆனால், தஞ்சைப் பெரியகோயிலில் இருப்பது வெற்றுத்தளமல்ல. உயரம் அதிகமாக்கப்பட்ட உபபீடம் மட்டுமே. உபபீடம் என்றால் என்னென்ன உறுப்புகள் இருக்கவேண்டும், தளம் என்றால் என்னென்ன உறுப்புகள் இருக்கவேண்டும் என்ற வரையறைகள் எந்த நூலிலும் தெளிவாக்கப்படாமல் இருப்பதே இந்தக் குழப்பத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு விமானம் என்றால், அதற்கு ஆறு உறுப்புகள் மிக அவசியம். தாங்குதளம், சுவர், கூரை, கிரீவம், சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகியன தேவை. தாங்குதளம் தரைத்தளத்திற்கு மட்டுமே இருக்கும். சுவர் மற்றும் கூரை சேர்ந்தது ஒரு தளம் எனப்படுகிறது. ஒரு விமானத்தில் எத்தனைமுறை சுவரும் கூரையும் திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றனவோ, அத்தனை தளங்களை அந்த விமானம் கொண்டுள்ளதாக அறியப்படும். தளங்களுக்கு மேல், கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகியவை உச்சியில் ஒரே ஒருமுறை மட்டுமே இடம்பெறும். இந்த மாடக்கோயில்களை அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று பார்த்தால், காவிரி வெள்ளம் என்ற ஒரே காரணம்தான் தென்படுகிறது.









இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த அனைத்து மாடக்கோயில்களுமே மேற்கண்ட வரையறைக்குப் பொருந்தி வந்தன. இறுதியாக வந்த இராஜராஜீசுவரத்தையும் சோதனை செய்தோம். அதில் இருப்பது வெற்றுத்தளமல்ல; ஓர் உபபீடம் மட்டுமே என்ற கருத்தும் வலுப்பெற்றது. தலைஞாயிறைப் பார்த்துவிட்டு, திருநாங்கூர் செல்லும் வழியில் வைத்தீஸ்வரன் கோயில் சதாபிஷேகம் விடுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டோம். பிறகு திருநாங்கூரை அடைந்து, ஏற்கனவே முனைவர். இரா. கலைக்கோவன் அவர்கள் எழுதி வைத்திருந்த ஆய்வுக்கட்டுரையினைச் சரிபார்த்துக்கொண்டு, திருநகரிக்குக் கிளம்பியபோது, மணி நான்கரையைத் தாண்டியிருந்தது. திருநகரியில் மேளதாளத்துடன் கூடிய பலத்த வரவேற்பு காத்திருந்தது. ஆனால் மேளதாளம் எங்களுக்கல்ல. திருமாலுக்குச் சேவை செய்யும் இசைஞர்கள் இசைத்த இசை நாங்கள் சென்று சேர்ந்த நேரத்தில் ஒலித்தது. அங்கு குடிகொண்டிருந்த யோகநரசிம்மர் எங்கள் குழுவை வெகுவாக ஈர்த்தார். ஏணியேறி மேலே சென்று அவரைப் புகைப்படமெடுத்துக்கொண்டும், கட்டுரையைச் சரிபார்த்துக்கொண்டும் கீழிறங்கிய எங்கள் குழு, கோயில் வளாகத்தின் சுற்றுப்பாதையில் அமர்ந்து விமானத்தையும், அதன்பின் தெரியும் வானத்தையும், அதிலுள்ள நட்சத்திரங்களையும் இரசித்துக்கொண்டே முதல்நாள் பயணத்தின் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தது. இருட்டிய பிறகு, காவலர் விரட்டும் முன்பே விரைந்து கிளம்பி, மயிலாடுதுறையில் PAMS விடுதியில் துயில்கொண்டோம்.















அடுத்தநாள் காலை முதல்வேலையாக ஆக்கூர் மாடக்கோயிலைப் பார்ப்பதாக முடிவு செய்துகொண்டோம். நாங்கள் ஆக்கூரை அடைந்தவேளை முற்பகல் ஆயினும், நண்பகல் வெயில்போலக் கொதித்துக்கொண்டிருந்தது. கருவறைக்கு அருகிலிருந்த மண்டபத்தின் கூரைமேல் ஏற எத்தனித்த எங்களுக்கு அருகில் அந்தப் பப்பாளி மரம் மட்டும் இல்லையென்றால், தேவையான அளவு புகைப்படங்களை எடுத்திருக்கவே முடியாது.











பின்னர் ஆக்கூரிலிருந்து கிளம்பி, தலைச்சங்காடு செல்லும் வழியிலுள்ள தட்சிணபுரீசுவரர், நான்மதியப்பெருமாள் கோயில் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, தலைச்சங்காட்டில் கோயில் குருக்களின் இல்லத்தில் தயாராக இருந்த மதிய உணவை முடித்துக்கொண்டு, கோயிலுக்குள் நுழைந்து கட்டுரையைச் சரிபார்த்துக் கொண்டோம். இந்தச் சரிபார்க்கும் செயலைப் பற்றி இங்கே கட்டாயம் குறிப்பிட்டாகவேண்டும். பொதுவாகக் கோயில் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைப் பலபேர் பலமாதிரியாக எழுதுவார்கள். சிலர் கோயிலுக்கு ஒருமுறை சென்றுபார்த்து எழுதுவார்கள். அல்லது இரண்டு மூன்று முறை செல்வார்கள். பின்னர் கட்டுரைகளை எழுதிக் கருத்தரங்குக்கோ இதழுக்கோ அனுப்புவார்கள். இவ்வளவு ஏன்? ஒரு கோயிலுக்கே செல்லாமல் அல்லது குறைந்தபட்சம் அது எங்கே இருக்கிறது என்றே தெரியாமல்கூட "ஞானக்கண்ணால் பார்த்து" அக்கோயிலைப் பற்றிய கட்டுரைகளை எழுதுபவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், ஏற்கனவே ஒரு கோயிலைச் சென்று பார்த்து, கட்டுரையை எழுதியபின், மீண்டும் சென்று கட்டுரையில் எழுதியவை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பவர்கள் மிகவும் அரிது. இதுவரை நாங்கள் பார்த்த ஆய்வாளர்களில் முனைவர் இரா. கலைக்கோவன் மட்டுமே அப்படிச் செய்பவர். ஏற்கனவே நான் பார்த்து எழுதியதுதானே; இன்னொருமுறை எதற்காகப் பார்க்கவேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இதுபற்றிக் கலைக்கோவன் அவர்களிடம் பலமுறை கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம், "ஏற்கனவே பார்த்ததுதான். இருந்தாலும், பிழை வர வாய்ப்புள்ளதல்லவா? ஒரு பயணத்தில் ஒரே நாளில் இரண்டு மூன்று கோயில்களைப் பார்த்துவிட்டு, ஊருக்குச் சென்று கட்டுரை எழுதும்போது, தரவுகள் இடம் மாறிவிட வாய்ப்புண்டு. சரியாகக் குறிப்பு எடுக்காத நிலையில், தரவுகள் விடுபட்டுப்போகலாம். எனவே, கட்டுரையை அக்கோயிலுக்கே எடுத்துவந்து சரிபார்த்துவிட்டால், தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். பிழை மலிந்த கட்டுரைகளை எழுதினால், அதனால் பாதிக்கப்படுவது அவற்றைப் படித்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விழைபவர்கள்தான். எனவேதான், பிற ஆய்வாளர்களின் கட்டுரைகளில் பிழை இருந்தாலும், அவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்தவைப்பதுதான் அக்கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு நாம் செய்யும் உதவி" என்பார்.

தலைச்சங்காட்டிலிருந்து நேராக நாகப்பட்டினம் சென்றுவிட்டோம். அங்கே நமக்காக திரு. இராமச்சந்திரன் என்ற நண்பரொருவர் காத்திருந்தார். ஏற்கனவே அவரைப்பற்றி டாக்டர் மற்றும் பத்மநாபன் வழியாகக் கேள்விப்பட்டிருக்கிறோம் என்றாலும், இதுவரை சந்தித்ததில்லை. நாகை மாவட்டம் திருக்குவளையில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். வருவாய்த்துறையில் இருந்தாலும், பத்மநாபனைப் போலவே எளிமையானவர். பிறந்த ஊர் சேலம் அருகில் இருந்தாலும், வரலாற்றுக்காகவே நாகை மாவட்டத்திலிருந்து இன்னும் மாறுதல் வாங்காமல் இருக்கிறார். தாவரவியல் படித்த இவர், அதியமான் அவ்வைக்கு அளித்த கருநெல்லிக்கனியைப் பற்றிப் பல குறிப்புகளைச் சேகரித்து வைத்திருக்கிறார். நாகையின் சிற்றூர்களில் பள்ளி செல்லும் சிறுவர்களுக்குள் குழு அமைத்து, அவர்களுக்கு வரலாற்றின்மீது ஆர்வம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இவரைப்பற்றி இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இன்னும் ஒரு கட்டுரையே எழுதவேண்டும். அதற்குள் வண்டி வலிவலத்தை அடைந்துவிடவே, இருட்டுவதற்குள் கட்டுரைகளைச் சரிபார்த்துக்கொண்டு, தேவையான புகைப்படங்களை எடுத்துவிடவேண்டும் என்று விரைந்து கோயிலுக்குள் நுழைந்தோம்.















அன்றுடன் அந்நாளின் பயணத்தை முடித்துக்கொண்டு, Sea Horse விடுதியில் தங்கிக்கொண்டு, அடுத்தநாள் முதலில் தேவூர் சென்றுவிட்டு, சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு (ஜெமினிகணேசன் சாவித்திரியின் இசையென்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த அதே இடம்தான்) சென்றோம். ஏற்கனவே சிறுவயதில் ஒருமுறை சிக்கல் சென்றிருந்தாலும், அது மாடக்கோயில் என்பது இப்பயணத்தின்போதுதான் தெரிந்தது. அங்கிருந்து நேராகக் கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் சென்றடைந்தோம். இவ்வூரைப் பற்றி முன்பே ஏதோ கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்துக்கொண்டே திருச்சுற்று வரும்போதுதான் தெரிந்தது. முனைவர் மு.நளினி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு சுடச்சுடவில் ஆரத்தழுவ நீயிருந்தால் அமைதியாய்ப் பெற்றிடுவேன் என்ற கட்டுரையில் எழுதியிருந்த யானை ஒன்று குட்டி ஈனும் அற்புதச் சிற்பம் இங்குதான் உள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு சுவாரசியமான நாயக்கர்காலச் சுவர்ச் செதுக்கல்களும் பாலியல் சிற்பங்களும் இருந்தன. அக்கோயிலில் எங்களை வெகுவாக ஈர்த்தது தாங்குதளத்தில் இருந்த வர்க்க பேதங்கள்தான். பொதுவாக வர்க்கபேதம் என்றால், கர்ணபத்தியையும் பஞ்சரப்பத்தி அல்லது சாலைப்பத்தியையும் வேறுபடுத்திக் காட்டியிருப்பார்கள். ஆனால் இங்கு, வேறுபடுத்தப்பட்டிருக்கும் சாலைப்பத்தியிலேயே, கோட்டம் அமைந்திருக்கும் பகுதிக்கு வேறுவிதமான தாங்குதளத்தை அமைத்து அசத்தியிருந்தார்கள். வெகுவான அழகூட்டல்களோடு அமைந்திருந்த தாங்குதள உறுப்புகள், கட்டடக்கலை பயில விரும்புவோர்க்கு ஒரு பல்கலைக்கழகமாக அமையும். கோயிலில் பணிபுரிபவர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு வயிற்றை நிறைவு செய்தபோது, அவரது கனிவான உபசரிப்பு மனதை நிறைத்துக் குளிரவைத்தது. எவ்வளவுதான் முன்அனுமதி மற்றும் முன்னேற்பாடுகளுடன் சென்றிருந்தாலும், நீ 'யாராயிருந்தால் எனக்கென்ன' என்ற மனோபாவம் கொண்டிருக்கும் கோயில் ஊழியர்களைக் கண்ட எங்களுக்கு, இப்படியும் சில கோயிலார்கள் இருக்கிறார்களே என்று வியப்படைந்தவாறே, திருவாரூர் வழியாகத் தஞ்சையை வந்தடைந்தோம்.







தண்ணியடிக்கும் கலைக்கு முன்பும் பின்பும்





அன்று பெரியகோயிலில் நவராத்திரிக் கலைவிழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாலும், பூஜை விடுமுறையாதலாலும், கூட்டம் நிரம்பி வழிந்தது. அக்கோயிலில் அவ்வளவு கூட்டத்தை நான் பார்த்தது அதுதான் முதல்முறை. கோயிலில் ஒளியமைப்பு மிக நன்றாகச் செய்திருந்தார்கள். நாலாபுறத்திலிருந்தும் மஞ்சள் விளக்கொளி விமானத்தைத் தாக்கிக்கொண்டிருந்தது. முதன்முதலாக இரவு நேரத்தில் பெரியகோயிலை யாராவது பார்த்தால், இராஜராஜசோழர் காலத்தில் முழுவிமானமும் பொன்னால் வேயப்பட்டிருந்தது என்ற கதையை நிச்சயம் நம்பியிருப்பார்கள். அல்லது பொன்விமானம் என்று கதை சொல்பவர்களே முதன்முதலில் இத்தகைய ஒளிவெள்ளத்தில்தான் பார்த்தார்களோ என்னவோ? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.