http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 64

இதழ் 64
[ அக்டோபர் 15 - நவம்பர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

விழிப்புடன் கொண்டாடுவோமா?
மதுரகவி நந்தவனம் - காவிரிக்கரையில் களர் நிலமா?
மதுரகவி நந்தவனம் - திருக்கோயில் நிர்வாகத்தார் விளக்கம்
வரிக்கல்வெட்டு
திருமலை
வரங்கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே!!!
மாடக்கோயில்களும் மேடைக்கோயில்களும் (அ) களப்பிரர் காலம் இருண்டகாலமா?
நாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை
மனமே! தேய்புரி பழங்கயிறே!
இராஜகேசரி - ஒரு விமர்சனம்
இதழ் எண். 64 > சுடச்சுட
மதுரகவி நந்தவனம் - காவிரிக்கரையில் களர் நிலமா?
கோகுல் சேஷாத்ரி
(திருவரங்கம் மதுரகவவி நந்தவனம் தொடர்பாக நாம் சென்ற இதழில் உலகத் தமிழர் விடுத்திருந்த பகிரங்க வேண்டுகோளை மதித்து திருக்கோயில் நிர்வாகத்தார் நமக்கு நீண்டதொரு விளக்கத்தை அனுப்பியுள்ளனர். இந்த விளக்கம் வரலாறு டாட் காமின் இந்த மாதி இதழில் முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்திற்கு நாம் அனுப்பியுள்ள பதில் இங்கே வாசகர்களின் பார்வைக்காக.)


*******************************************************************************


பெறுநர்

இணை ஆணையர்
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
ஸ்ரீரங்கம் - திருச்சிராப்பள்ளி - 6.

நகல்கள்:

ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை - 34.
இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி - 6.

மதிப்பிற்குரிய இணை ஆணையர் அவர்களுக்கு,

பொருள் : ஸ்ரீ மதுரகவி சுவாமி திருநந்தவனத்தில் கட்டுமானங்கள் எழுப்பப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இதற்குக் காரணியாக விளங்கும் திருக்கோயில் நிர்வாகத்தாருக்கு நந்தவன நிலங்கள் உரிமையாக்கப்படுவது குறித்து எதிர்ப்புத் தெரிவித்தும் எழுதப்படும் பகிரங்க வேண்டுகோள்.

பார்வை : இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு அஞ்சல் மூலமாகவும் மின்அஞ்சல் மூலமாகவும் நம்மால் அனுப்பப்பட்ட கடிதம்; நாள் 1.10.2009. இக்கடிதத்திற்குத் தாங்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள பதில் ந.க. 190 - 1416 - சி 3 நாள் 19.10.2009.


*******************************************************************************


உலகத் தமிழர்கள் சார்பில் நாங்கள் வைத்த வேண்டுகோளை மதித்துத் தாங்கள் அனுப்பியுள்ள பதிலுக்கு முதற்கண் மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் கடிதத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்கள் தொடர்பான எதிர்வினையை இக்கடிதத்தில் பதிவு செய்ய முனைகிறோம். இதன் மூலம் தங்களையோ நிர்வாகத்தாரையோ மதுரகவி நந்தவன டிரஸ்டிக்களையோ சங்கடப்படுத்துவது நமது நோக்கமல்ல. மிக உயர்ந்த எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய நந்தவனம் நமது கண்ணெதிரே சிறுகச்சிறுக அழிந்து போய் விடக்கூடாதே என்கிற அக்கறைதான் பற்பல பணிகளுக்குமிடையில் மேலும் மேலும் நம்மை எழுதத் தூண்டுகிறது.

ஐயா, எமது முந்தைய கடிதத்தின் சாராம்சம் திருநந்தவனத் திருப்பணிக்காக நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் விடப்பட நிலத்தில் கட்டுமானங்கள் எழுப்பப்படக்கூடாது என்பதும் கட்டுமானங்கள் எழுப்புவதில் மிக ஆர்வமாக இருக்கும் திருக்கோயில் தேவஸ்தானத்தாருக்கு இந்நிலம் போய்ச் சேர்ந்தால் மேலும் மேலும் கட்டுமானங்கள் எழுப்பப்படுவதற்கு அது வகை செய்யும் என்பதே. இந்த நோக்கங்களைக் கருத்தில் கொண்டு தங்களின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்களை ஆராய்வோம்.

கேள்வி 1: பத்தி எண் 1.3ல் மதுரகவி அவர்கள் குறிப்பிட்டுள்ள கைங்கர்யங்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மிக மிகத் தெளிவாக நந்தவனத்தின் நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இதில் எந்தப் பகுதியிலாவது நந்தவன நிலங்களைக் குறிப்பிட்ட காரணங்களுக்காக விற்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா? அல்லது அவரது உயிலின் வேறு ஏதாவது பகுதியில் நிலங்களைக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் விற்கலாம் என்று கூறப்பட்டுள்ளதா? அப்படி எதுவும் இல்லையெனில் நிதிப்பற்றாக்குறையைத் தீர்க்க நிலத்தை விற்பது எனும் தீர்வுக்கே இடமில்லையே? அப்படிச் செய்வது அவரது நோக்கங்களுக்கு முற்றிலும் முரணானதாயிற்றே? சட்டப்படியும் இது குற்றமாயிற்றே?

கேள்வி 2: நந்தவனத்தின் டிரஸ்டிக்கள் குடும்பஸ்தர்களாக இருப்பதைத் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படிப் பார்த்தால் திருக்கோயில் நிர்வாகத்தாரும் குடும்பத்தார்கள்தானே? தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள திருச்சி சப்கோர்ட் நீதிபதியின் தீர்ப்பில் துறவு மேற்கொண்டவர்களே இந்த நிர்வாகத்தை ஏற்று நடத்தவேண்டுமென்பது தெளிவாக உள்ளதே? தற்போது ஏஹாங்கிகளாகப் பணியாற்றும் ஸ்ரீ வேங்கடாசல இராமானுஜ தாஸரும் இதர ஏஹாங்கிகளும் துறவிகள்தானே? அவர்கள் நந்தவனத்தை ஏற்று நடத்தலாமே? அல்லது வேறு வைணவத் துறவிகளை டிரஸ்டிக்களாகக் கொண்டு நந்தவனப் பணியைத் தொடரலாமே?

கேள்வி 3: நந்தவன நிலத்தில் ஏக். 1.85 சென்ட் காலியிடமாக களர் நிலமாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். காவிரிக்கரையில் களர் நிலமா? சற்று ஆச்சரியம்தான். அப்படியெனில் முதற்கண் மதுரகவி அவர்களால் இந்த நிலம் எதற்கு வாங்கப்பட்டது? வருமானம் எதுவுமற்ற நிலையில் நண்பர்களிடம் சந்தா வசூலித்துத்தான் மதுரகவி நிலங்கள் வாங்கினார். அவர் தனது நந்தவன நிலத்தைத் தேர்வு செய்வதில் எத்தனை எச்சரிக்கையாக இருந்திருப்பார்? அப்படியே ஒரு வேளை நூறு வருட காலத்தில் இந்நிலம் களர் நிலமாகிவிட்டதெனக் கொண்டாலும் இது தொடர்பாகத் தங்களது நிர்வாகமோ நந்தவன டிரஸ்டிக்களோ விவசாய அறிஞர்களுடன் கலந்தாலோசித்தார்களா? எத்தனையோ விதமான நவீன விவசாய விஞ்ஞான முறைகள் வளர்ந்துள்ள இக்காலத்தில் அந்நிலத்தை மீண்டும் பயிர்செய்யக்கூடிய இடமாக ஆக்க முடியுமாவென்று ஆராயப்பட்டதா? அதற்கான சான்றுகள் உண்டா? அப்படி ஆராயாமல் அதனை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது மதுரகவியின் நோக்கத்திற்கு முரண்பட்டதல்லவா?

கேள்வி 4: களர் நிலத்தை நிர்வாகிகள் மதுரகவியவர்களின் நோக்கத்திற்குப் புறம்பாக விற்பனை செய்ய முயல்கையில் தாங்கள் அதனைத் தடுத்திருக்க வேண்டும் அல்லவா? "இது சட்ட விரோதமானது. மதுரகவி அவர்களின் நோக்கத்திற்குப் புறம்பானது" என்று எடுத்துச் சொல்லியிருக்க வேண்டுமல்லவா? அதனை விடுத்து அந்தத் தவறான விற்பனைக்குத் துணைபோவதைப்போல அல்லவா தங்களது நிர்வாகம் நடந்துகொண்டுள்ளது? (பார்க்க பத்தி 1.7) அது மட்டுமல்லாமல் இந்த நிலத்தில் என்னென்ன கட்டிடங்கள் எழுப்பப்படப்போகின்றன என்பதைக்கூட அல்லவா தங்களது நிர்வாக அலுவலர் ஹிந்து நாளிதழ் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்?

கேள்வி 5: நிதிப்பற்றாக்குறை காரணமாக நிர்வாகிகள் நிலத்தை விற்பனை செய்ய முயன்றிருக்கிறார்கள் (பத்தி 1.8). ஐயா, மதுரகவி அவர்களே தனது நண்பர்களிடம் சந்தா வசூலித்துத்தான் நிலங்கள் வாங்கியிருக்கிறார். அதைப்போல, நிர்வாகிகளும் நந்தவனத்தை மேற்கொண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளைச் சரியாக ஆராய்ந்தார்களா? இப்படிப்பட்ட தர்ம காரியங்கள் நடைபெறுவதற்கு ஏராளமான தமிழன்பர்களும் வைணவ அன்பர்களும் துணை நின்றிருப்பார்களே? அதனை விடுத்து நிலத்தை விற்க முயல்வதா? இத்தனை வருடங்களாக வராத நிதிப்பற்றாக்குறை இப்போது வருவதற்கான காரணங்களென்ன? நந்தவனத்தை நிர்வகிக்க ஆகும் வருடாந்திரச் செலவு எவ்வளவு? குறிப்பிட்ட பகுதி நிலைத்தை மட்டும் விற்றால் அந்த நிதிப்பற்றாக்குறை தீர்ந்துவிடுமா? அப்படியெனில் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் மேலும் மேலும் நிலத்தைத்தான் விற்க வேண்டுமா? ஒருவேளை அவர்களுக்கு நிதிப்பற்றாக்குறை உண்மையாகவே ஏற்பட்டிருந்தால் அதனை முன்னின்று தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை தங்களின் நிர்வாகத்திற்கு இருக்கிறதல்லவா? நூற்று நாற்பது வருடங்களாக அரங்கனுக்கு மாலை கட்டித்தந்த மரியாதைக்குரிய இயக்கமல்லவா அது? அதற்குத் தாங்கள் குறிப்பிட்ட நிதி கொடுத்து உதவியிருக்கலாமே? அரங்கனுக்குச் சூடப்பட்ட மாலைகள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன அல்லவா? அதில் ஒரு பகுதியையாவது தங்களது நிர்வாகம் நந்தவன மேம்பாட்டிற்காக அளித்திருக்கலாமே? இவை அனைத்தையும் விடுத்து "இந்த நந்தவனம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தால்தான் நாங்கள் அதனைக் கண்டு கொள்வோம். இல்லையெனில் அவற்றுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்" எனும்படியாகவல்லவா தங்களின் கோயில் நிர்வாகம் நடந்துகொண்டுள்ளது?

கேள்வி 6: நந்தவனம் நிர்வாகத்திற்கே சொந்தமானது எனும் அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை 31.7.2009ம் அன்றுதான் வெளியிடப்பட்டுள்ளது (பத்தி 1.7). ஆனால் அதற்குள் தங்கும் விடுதிக்கான கட்டிடங்களின் கட்டுமானப்பணி நடைபெற்று முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் (பத்தி 1.13). கட்டுமானப் பணி இரண்டு மூன்று மாதங்களுக்குள் முடிந்து விட்டதா என்ன? பணி உண்மையில் எப்போது துவங்கியது? 31.7.2009ம் முன்னரே துவங்கியிருந்தாலொழியப் பணி தற்போது முடிவடைவதற்கு வாய்ப்பில்லையென்றே கருதுகிறோம். இது உண்மையெனில் இதுவரை கட்டப்பட்டுள்ள கட்டுமானம் அத்துமீறிய கட்டுமானமாகவே முடியும்.

கேள்வி 7: தங்கள் நிர்வாகத்திற்குச் சொந்தமான இடங்கள் வேறு எதுவும் தங்கும் விடுதிக்காகக் கிடைக்கவில்லையா? திருக்கோயிலுக்கு அருகில் நடை தூரத்தில் தங்கும் விடுதி அமைந்தால்தானே யாத்ரீகர்களுக்கு வசதியாக இருக்கும்? கோயிலுக்கருகில் உள்ள பல நிலங்கள் திருக்கோயிலுக்கே சொந்தமானவை அல்லவா? அவற்றில் தற்போது காணப்படும் கட்டிடங்கள் அனைத்தும் தங்களின் பார்வையில் அத்து மீறிய கட்டுமானங்களல்லவா? இதற்காகச் சில காலங்களுக்கு முன் நிர்வாக இணை ஆணையர் திருமதி. கவிதா அவர்கள் எடுத்த முயற்சிகள் மிகத் தெளிவாக நாளிதழ்களில் வெளியானதே?

கேள்வி 8: மதுரகவி அவர்களின் நோக்கங்களுக்குத் தங்களின் நிர்வாகம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கைப்பற்றிய அளவுள்ள அதே மாதிரியான நிலத்தை அதே திருவரங்கத்தில் வேறு ஏதாவது இடத்தில் திருநந்தவனமாக்கத் தாங்கள் முயற்சித்திருக்க வேண்டுமே? அவ்வாறு நடைபெற்றதாகத் தெரியவில்லையே?

கேள்வி 9: "திரு.மதுரகவி ஸ்வாமி அவர்களின் விருப்பம் அவரால் ஏற்பட்ட சொத்துக்கள் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சேரவேண்டும் என்பதே ஆகும்." என்று குறிப்பிட்டுள்ளீர்கள் (பத்தி 1.8). உண்மையில் அவரது ஒரே அக்கறை தாம் பாடுபட்டு உருவாக்கிய நந்தவனம் ஆக்கிரமிப்புக்காரர்களால் அழிக்கப்படாமல் தொடர்ந்து நல்நிலையில் இயங்க வேண்டுமென்பதே. இதற்காக ஒரு சில யோசனைகளை அவர் தமது உயிலில் தெரிவித்துள்ளார். அவரது உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் செயல்படவேண்டும்.

கேள்வி 10: ஹிந்து பேட்டியில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே ஒரு பகுதிக் கட்டிடங்கள் எழுப்பி முடிக்கப்பட்டு விட்டன. மீதமிருக்கும் நந்தவனமும் தற்போது தங்களைச் சேர்ந்தது என்று அரசு ஆணை வெளியிட்டிருக்கும் நிலையில் மேற்கொண்டு தாங்கள் நிலங்களை அழித்துப் பணியாளர் விடுதி கட்ட மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? இதற்கான உறுதிமொழி தங்களின் கடிதத்தில் காணப்படவில்லையே? தற்போது பணியாளர் விடுதி கட்டப்படவில்லை என்பதை மட்டும்தானே குறிப்பிட்டுள்ளீர்கள்? (பத்தி 1.13)

கேள்வி 11: யாத்ரி நிவாஸ் எனப்படும் விருந்தினர் விடுதிகள் மத்திய கலாச்சாரப் பண்பாட்டுத் துறையால் மாநில சுற்றுலாத்துறை மூலம் அமைக்கப்படும் கட்டிடங்களாகும். நமது பண்பாட்டின் முக்கியக் கூறாகத் திகழும் நூற்று நாற்பது வருட நந்தவனத்தை அழித்து யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு அந்த அமைச்சகமே துணை போகலாமா? இந்த முயற்சி உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று மத்திய அமைச்சகத்திடம் எழுத வேண்டாமா? என்று நமது முந்தைய கட்டுரையைப் படித்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மேலும் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆகவே, மேற்கூறிய கேள்விகளின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள வரலாறு மற்றும் கலாச்சாரப் பற்றுதல் கொண்ட தமிழன்பர்களின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

* இதுவரை 1.85 ஏக் நிலத்தில் எழுப்பப்பட்டுள்ள கட்டிடங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும். மேலும் கட்டுமானப்பணி நடைபெறுவது தடுக்கப்பட வேண்டும்.

* ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த நிலப்பகுதி உண்மையில் களர் நிலமா என்பதையும் மீண்டும் அதனைப் பயிர் நிலமாக மாற்ற முடியுமா என்பதையும் உரிய விவசாய அறிஞர்களைக் கொண்டு ஆராய வேண்டும்.

* நந்தவனத்தை அரங்கநாதர் திருக்கோயிலுக்கு உரிமையாக்கும் அரசாணை உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும்.

* நூற்று நாற்பது ஆண்டுகள் கடந்த மதுரகவி நந்தவனம் ஒரு கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டு உரிய துறையினரால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

நன்றி.

அன்புடன்
சே. கோகுல்
வரலாறு டாட் காம்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.