http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 7

இதழ் 7
[ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

பொங்கும் பெருங்கடலில் ஒரு கை அள்ளி....
காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி...
வரலாறு காத்திருக்கிறது....
ராஜராஜீசுவரம் கல்வெட்டுகள்
சண்டேஸ்வரர் திருமுன் கலைப்பிடிச்சுவர்
கட்டடக்கலை ஆய்வு - இராஜராஜீசுவரம்
பண்டைய ஓவியங்களின் மீட்டுருவாக்கம் - சிக்கல்களும் தீர்வுகளும்
ராஜராஜீசுவரம் பயணக்கட்டுரை
Raja Rajisvaram - Certain Revelations
The Saanthaaram Icons of Raajarajeeswaram - An Overview
இதழ் எண். 7 > கலையும் ஆய்வும்
ராஜராஜீசுவரம் கல்வெட்டுகள்
மா. இலாவண்யா
ராஜராஜீஸ்வரம் சிறப்பிதழுக்காக கல்வெட்டுக் கட்டுரை எழுதவேண்டுமென்றவுடன் பிரமிப்பே தோன்றியது. ராஜராஜீஸ்வரம் கோயிலின் நுழைவாயில் கோபுரங்கள்; கோயில் விமானத்தில் நான்கு பக்கங்களிலுமுள்ள ஜகதி, குமுதம், சுவர்; திருச்சுற்று மாளிகை; அத்திருச்சுற்று மாளிகைச் சுவரின் வெளிப்புறம் என பார்க்குமிடமெல்லாம் கல்வெட்டுகளே. அக்கல்வெட்டுகளில் எதை எடுப்பது, எதை விடுப்பது? எல்லாக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து எழுதினால், இந்த ஆயுள்காலம் முழுவதும் எழுதிக்கொண்டே இருக்கலாம். அந்தக் கடலளவு கல்வெட்டுகளில் ஒரு துளியை இந்தக் கட்டுரையில் வழங்க முயற்சிக்கிறோம்.

ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் கொடுத்த நிவந்தங்கள்

இச்சிறப்பிதழுக்காக மேற்கொண்ட பயணத்தின் பொழுது ஸ்ர்ராஜராஜத்தேவரின் தமக்கை குந்தவையார் ராஜராஜீஸ்வரம் கோயிலுக்கு வழங்கிய கொடைகளைப் பற்றிய கல்வெட்டொன்றைக் கண்டோம். மிக நீளமான வரிகள் கொண்ட அக்கல்வெட்டில் நாங்கள் படித்தது ஆறு வரிகள் தான். அந்த ஆறு வரிகளிலும் உள்ள செய்திகளை இந்த ஒரு கட்டுரையில் வழங்குவது கடினமென்பதால், அதில் ஓரிரு வரிகளை இங்கே விளக்க முற்படுகிறேன்.

1) ஸ்வஸ்திஸ்ர்: திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந்தனக்கெய் உரிமை பூண்டமை மனக்கொளக்காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடுங்கங்கபாடியுந் தடிகைபாடியும் நுளம்பபாடியுங்குடமலைநாடுங்கொல்லமுங்கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழ[ம]ண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்[க]மும் முன்[னீ]ர்ப்பழந்தீவு பன்னீராயிரமுந்திண்டிறல் வென்றித்தண்டாற்கொண்ட தன்னெழில் வள[ரூழி]யுளெல்லாயாண்டுந்தொழுதக விளங்கும் யாண்டெய் செழி[ய]ரைத்தேசு கொள் கொராஜகேஸரிபம்மரான ஸ்ர்ராஜராஜத்தெவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது வரை உடையார் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார் கொ[யி]லில் உடையார் ஸ்ர்ராஜரா[ஜ¦]தவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மஹாதெவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் எழுந்தருளுவித்த திருமேனிகள் தக்ஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியார்க்கும் தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியார்க்கும் பொன்மாளிகைதுஞ்சினதெவராக எழுந்தருளுவித்த திருமேனிக்கும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனிக்கும் உடையார் ஸ்ர்ராஜராஜதெவர் எழுந்தருளுவித்த திருமேனி தக்ஷிணமேருவிடங்கர்க்கும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் குடுத்த பொன் ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் நிறை எடுத்தும் ரத்நங்கள் சரடு
2) ஞ்சட்டமுஞ்சப்பாணிகளும் அரக்கும் பிஞ்சும் நீக்கி தக்ஷிணமேருவிடங்கர் என்னுங்காசுகல்லால் நிறை எடுத்தும் இவர்களுக்கு வெண்டும் நிவந்தங்களுக்கு ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் பொலிசையூட்டுக்கு வைத்த காசு ஸ்ர்ராஜராஜீஸ்வரத்தினிதெழுந்தருளி இருந்த பரமஸ்வாமிக்கு மூலப்ருத்யநாகிய சண்டேஸ்வரர் பக்கல் பொலிசைக்கு ஊர்களிலார் கொண்ட காசும் கல்லில் வெட்டின 11-


மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு வரிகள் பல செய்திகளை நமக்களிக்கிறது. ராஜராஜரின் இருபத்தொன்பதாவது ஆட்சியாண்டு வரை குந்தவையார் அக்கோயிலுக்கு வழங்கிய கொடைகளை இக்கல்வெட்டு பட்டியலிடுகிறது.

குந்தவையாரை வல்லவரையர் வந்தியத்தேவரின் மஹாதேவியார் என்றும் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் (சுந்தரசோழனின் மகள்) என்றும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முதல் வரி குந்தவையார் இக்கொயிலுக்கு தக்ஷிணமேருவிடங்கரின் தேவியார் உமாபரமேஸ்வரியார் மற்றும் தஞ்சைவிடங்கரின் தேவியார் உமாபரமேஸ்வரியார் என்ற இரண்டு தெய்வச்செப்புத்திருமேனிகளை இக்கோயிலுக்கு வழங்கியுள்ள செய்தியைக் கூறுகிறது. மேலும் பொன்மாளிகை துஞ்சின தேவராக அவரது தந்தை சுந்தர சோழரின் செப்புத்திருமேனியையும், அவரது தாயாரின் (தம்மையார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது) செப்புத்திருமேனியையும் குந்தவையார் இக்கோயிலுக்கு வழங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தக்ஷிணமேருவிடங்கரின் செப்புத்திருமேனியை ஸ்ர்ராஜராஜதேவர் இக்கொயிலுக்கு வழங்கியுள்ளதும் தெரியவருகிறது. தஞ்சைவிடங்கர் செப்புத்திருமேனியை எவர் கொடுத்தது என்று தெரியவில்லை. அந்த செய்தி வேறேதேனும் கல்வெட்டில் இருக்கலாம்.

இப்படி செப்புத்திருமேனிகளை வழங்கியதைக் குறிப்பிட்டுவிட்டு பிறகு அந்த செப்புத்திருமேனிகளுக்கு அவர் வழங்கிய பொன், அந்த செப்புத்திருமேனிகளின் நித்திய பூஜைக்காக பொலிசையாக ஸ்ர்ராஜராஜீஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் சண்டேஸ்வரர் பெயரில் கொடுக்கப்பட்ட காசு இவையும் கல்லிலே பொறிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியைக் கூறுகிறது.

பொன்னை எப்படி நிறை எடுத்தார்கள் என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. கொடுக்கப்பட்ட பொன்னை ஆடவல்லான் என்ற பெயர் கொண்ட அளக்கும் கல்லால் நிறை எடுத்தார்கள். தங்கநகைகளை (ரத்னம்) சரடு - கயறு, சட்டம், சப்பாணி - செப்பு ஆணி, அரக்கு, பிஞ்சு இவற்றை நீக்கிவிட்டு நகையிலிருக்கும் தங்கத்தை மட்டும் தக்ஷிணமேருவிடங்கர் என்ற கல்லால் நிறை எடுத்தார்கள்.

'பொலிசையூட்டுக்கு வைத்த காசு' என்பது இக்காலத்தில் 'Capital Donation' என்று குறிப்பிடப்படும், தானமாக வந்த நிதியினை செலவு செய்யாமல் அந்த நிதியிலிருந்து வரும் வட்டியினை செலவினங்களுக்குப் பயன்படுத்துவது போன்ற முறையாகும். அந்தக்காலத்திலேயே இவ்வகையான ஏற்பாடு இருந்திருக்கிறது. இதிலிருந்து இக்கோயில் ஒரு வங்கிபோல் செயல்பட்டதையும் அறிய முடிகிறது. அந்தக்காசை பெற்று பாதுகாக்க "Custodian" ஒருவர் வேண்டுமல்லவா? அப்படி Custodian ஆக செயல்பட்டவர்களை ஊர்களிலார் என்று கல்வெட்டு கூறுகிறது. ஊர்களிலார் என்பவர்கள் ஸ்ர்ராஜராஜீஸ்வரத்தை சுற்றியிருக்கும் ஊர்களின் சபையினர். அவர்களிடம் கொடுக்கப்பட்ட காசு எவ்வளவு, அந்த காசிற்காக அந்தந்த ஊர்சபையினர் ஓராண்டிற்கு கொடுக்கவேண்டிய நெல் அளவு, அப்படி வரும் நெல்லை எந்தந்த செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்களெல்லாம் இக்கல்வெட்டில் பின்வரும் வரிகளில் மிகவும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக குந்தவையார் கொடுத்த காசில், வடகரை ராஜேந்திரசிங்க வளநாட்டு பொய்கைநாட்டுக் கண்டராதித்த சதிர்வேதிமங்கலத்து சபையார் ஐநூற்று இருபது (520) காசு பெற்றுக்கொண்டனர், அதற்கு ஈடாக ராஜராஜசோழரின் இருபத்தொன்பதாவது ஆட்சியாண்டு முதல் ஆண்டொன்றுக்கு 130 கலம் நெல்லை கோயிலுக்கு வழங்கவேண்டுமென்று கல்வெட்டு கூறுகிறது. அந்த 130 கலம் நெல்லை சுந்தரசோழரின் செப்புத்திருமேனிக்கு திருவமுது செய்வதற்குப் பயன்படுத்த வேண்டுமென்று கூறுகிறது.

சுந்தரசோழரின் திருமேனிக்கு ஒரு நாள் இருபொழுது திருவமுது செய்வதற்கு தேவையான நெல்அளவையும், என்னென்ன அமுது படைக்கவேண்டுமெனவும் இக்கல்வெட்டு பின்வருமாறு பட்டியலிடுகிறது.
அமுதுஅமுது செய்யப்பயன்படும் பொருள்பொருளுக்குத் தேவையான நெல்
திருவமுதுஅரிசி4 நாழி, 1 குறுணி, 2 நாழி
நெய்யமுதுநெய்1 ஆழாக்கு, 4 நாழி
கறியமுதுகாய்6 உரி, 6 நாழி
பருப்பமுதுபருப்பு1 உரி, 1 நாழி, 1 உரி
சர்க்கரைஅமுதுசர்க்கரை1/2 பலம், 1 நாழி, 1 உரி
பொரிக்கறி அமுதுநெய்2 செவிடரை, 2 நாழி
வாழைப்பழ அமுதுபழம்2 செவிடரை 1 நாழி
தயிரமுதுதயிர்1 நாழி, 3 நாழி
அடைக்காயமுதுபாக்கு - 4, வெற்றிலை - 321 நாழி
 கடுகு, உப்பு, மிளகு1 உரி, 1 ஆழாக்கு
 விறகு4 நாழி
இப்படி ஒருநாளைக்குத் தேவையான நெல் பட்டியலிடப்பட்டு, ஓராண்டுக்கு தேவையான நெல் 129 கலம், 2 தூணிப்பதக்கு, 1 நாழி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனுடன் 1 குறுணி, 7 நாழி நெல் சேர்க்கப்பட்டு 130 கலம் நெல் ஓராண்டுத்தேவையெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறாக கண்டராதித்தசதுர்வேதிமங்கலத்துச்சபையார் கொடுக்கும் 130 கலம் நெல் சுந்தரசோழரின் செப்புத்திருமேனிக்கு திருவமுது செய்ய பயன்படுத்தவேண்டுமென கல்வெட்டு கூறுகிறது. இது போலவே மற்ற ஊர் சபையினருக்குக் கொடுத்த காசு, அதற்கு ஈடாக அவ்வூர்ச் சபையினர் ஓராண்டிற்குக் கொடுக்க வேண்டிய நெல் அளவு, அந்த நெல்லை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென இக்கல்வெட்டு தெளிவாக பட்டியலிடுகிறது.

கல்வெட்டில் ஒன்றரை வரியில் உள்ள செய்திகளே இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. இது போல நீளமான வரிகள் கொண்ட பல கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. அக்கல்வெட்டுகளிலிருந்து எவ்வளவு செய்திகள் நமக்குக் கிடைக்கும் என உணரமுடிகிறதா? அந்தச் செய்திகளை அடுத்து வரும் இதழ்களில் சிறிது சிறிதாகக் காண்போம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.