http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 7

இதழ் 7
[ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

பொங்கும் பெருங்கடலில் ஒரு கை அள்ளி....
காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி...
வரலாறு காத்திருக்கிறது....
ராஜராஜீசுவரம் கல்வெட்டுகள்
சண்டேஸ்வரர் திருமுன் கலைப்பிடிச்சுவர்
கட்டடக்கலை ஆய்வு - இராஜராஜீசுவரம்
பண்டைய ஓவியங்களின் மீட்டுருவாக்கம் - சிக்கல்களும் தீர்வுகளும்
ராஜராஜீசுவரம் பயணக்கட்டுரை
Raja Rajisvaram - Certain Revelations
The Saanthaaram Icons of Raajarajeeswaram - An Overview
இதழ் எண். 7 > கலையும் ஆய்வும்
பண்டைய ஓவியங்களின் மீட்டுருவாக்கம் - சிக்கல்களும் தீர்வுகளும்
கோகுல் சேஷாத்ரி


(Restoration of ancient art works - Problems and resolutions)

(அமரர் கூ.ரா.சீனிவாசன் நினைவுப் பொழிவு - 2005)

மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் - திருச்சிமுன்னுரை

பண்டைய தமிழகம் கலைகளின் பெட்டகமாகத் திகழ்ந்த தேசம்.

ஒப்புயர்வற்ற கலைஞர்கள் - அக் கலைஞர்களை போற்றி வளர்த்த அரசர்கள் - கலைகளைக் கொண்டாடிய பொதுமக்கள் என்று சமூகத்தின் பல சாராருக்கும் இந்தக் கலை வளர்ச்சியில் பங்குண்டு.

பண்டைய தமிழர் பிரதானமாகக் போற்றி வளர்த்த கலைகளாக கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசை மற்றும் நடனக் கலைகளைக் குறிப்பிடலாம். இந்த அத்தனை கலைகளும் ஒருங்கிணைந்து வளர்ந்த / வளர்த்த வளாகங்களாக நாடெங்கிலுமிருந்த திருக்கோயில்கள் திகழ்ந்தன.

பண்டு தமிழர் வளர்த்த இக் கலைகளின் எச்சங்களாக ஆயிரமாயிரம் வருடங்கள் கழிந்து இன்றைக்கு மிச்சமிருப்பவற்றை காலமும் நம் கவனமின்மையும் படிப்படியாக சீரழித்துக் கொண்டிருக்கின்றன.

கட்டிடக் கலையின் அங்கமாகத் திகழும் பல திருக்கோயில் வளாகங்களில் முட்புதர்களும் செடிகொடிகளும் ஓங்கி உலகளந்தபடி உயர்ந்து கொண்டிருக்கின்றன. சிற்பக்கலை சிமெந்துப் பூச்சு நாகரீகத்திற்கும் சுண்ண / வண்ணக் கலாச்சாரத்திற்கும் ஆளாகி அழிந்துகொண்டிருக்கின்றன. திருப்பணி மற்றும் குடமுழுக்கென்றால் அந்தக் கோயில் கல்வெட்டுக்களுக்கு நேரம் சரியில்லை என்பதுதான் எழுதப்படாத விதி.

ஓவியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நவீன விடலை மஜ்னூன்களின் காதல் அம்புகளிலிருந்து ஆரம்பித்து வயதானவர்களின் வெற்றிலை சுண்ணாம்பு வரை இவற்றின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் கணக்கிலடங்கா.

இந்தக் கலைப்பெட்டகங்களை - மேற்கொண்டு அதிக பாதிப்புக்கள் ஏற்படுத்தாமல் - இன்றைக்கு இருக்கும் நிலையிலாவது பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பது நமது அனைவரின் கடமையுமாகும். இந்தப் பணியில் கணிப்பொறியின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எந்த அளிவிற்கு உதவ முடியும் என்று கோடிட்டுக் காண்பதே இந்தப் பொழிவின் முக்கிய நோக்கமாகும்.

தொல்லோவியங்களின் பதிவாக்கம் மற்றும் மீட்டுருவாக்கம் - ஒரு பின்னணி

பண்டைய தமிழ் ஓவியக்கலையின் சில கூறுகளை கீழ்க்கண்ட இடங்களில் கண்டு களிக்கலாம்.

* பல்லவர் கால ஓவியக்கலை - காஞ்சி கயிலாயநாதர் கோயில், பனைமலை தலகிரீசுவரர் கோயில்

* சோழர் கால ஓவியக்கலை - தஞ்சை இராஜராஜேஸ்வரம்

* விஜயநகர / நாயக்கர்கால ஓவியக்கலை - மதுரை மற்றும் பல்வேறு கோயில்கள்

* மராத்திய ஓவியக்கலை - தஞ்சை இராஜராஜேஸ்வரம் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல கோயில்கள்

இந்த ஓவியங்களைப் பாதுகாப்பது என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்குள் மூன்றுவித பரிமாணங்களை அல்லது கோணங்களைக் காணமுடியும். அவை -

1. இருக்கும் ஓவியங்களை கிறுக்கல்கள் மற்றும் பிற பாதிப்புக்களிலிருந்து காப்பாற்றுதல் (பாதுகாப்பு - Safeguarding)

2. இருக்கும் நிலையில் இந்த ஓவியங்களை முறையாகப் பதிவு செய்தல் (பதிவாக்கம் - Archiving)

3. இதுவரை ஓவியங்கள் அடைந்துள்ள பாதிப்பை நீக்க முடிந்தவரை முயற்சித்தல் (மீட்டுருவாக்கம் - Restoration)

இதில் முதல் பரிமாணம் அரசாங்கத்தின் பணி மட்டுமல்ல - நம் அனைவரின் கடமையும்கூட. இதனைப் பற்றிப் விரிவாகப் பேசுவது இந்தப் பொழிவின் நோக்கமல்ல என்பதால் மேற்கொண்டு இதனை விவரிக்காமல் அடுத்த பரிமாணமான பதிவாக்கத்தை நோக்குவோம்.

தொல்லோவியங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய பதிவுகள் பெரும்பாலும் புகைப்படங்களின் வாயிலாகவே இதுவரை நிகழ்ந்து வந்துள்ளன. மேற்கூறிய பல்வேறு காலகட்டங்களின் ஓவியங்களும் ஓரளவிற்கு சில / பல புத்தகங்களில் பதிவாகியிருக்கின்றன.

இத்தகைய புகைப்படங்களுக்கும் அவை அச்சிடப்படும் புத்தகங்களுக்கும் ஒரு சில எல்லைகள் (Limitations) உண்டு.

உதாரணமாக -

* எல்லா புகைப்படங்களும் அந்தப் படம் எடுக்கப்படும் நேரத்தில் சுற்றியுள்ள ஒளி / நிழல் மற்றும் புகைப்படக்காரரின் திறமை ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன

* ஒரு நீண்ட ஓவியத்தை பகுதி பகுதியாகத்தான் புகைப்படமெடுத்தல் சாத்தியம்

* ஒரு வண்ண ஓவியமானது புகைப்படமெடுக்கப்படும்போதும் அதன் தொடர்ச்சியாக அச்சிடப்படும்போதும் மூல ஓவியத்தின் வண்ணங்களிலும் பாணியிலும் மிதமான அல்லது அதிகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன

* எல்லா ஓவியங்களையும் எல்லாப் புத்தகங்களிலும் வண்ணத்தில் அச்சிடுதல் பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை

* நாள்பட நாள்பட புகைப்படங்களின் வண்ணங்களும் தெளிவும் மங்குவது கண்கூடு

மூன்றாவது பரிமாணமான மீட்டுருவாக்கம் என்பது என்ன என்பதைப் பற்றியும் நமது பொழிவில் இதனை எந்த நோக்கில் காண்கிறோம் என்பதனையும் இந்த இடத்தில் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

மீட்டுருவாக்கத்திற்கு பல முகங்கள் உண்டு.

உதாரணமாக தஞ்சை இராஜராஜேஸ்வரத்தின் கருவறையைச் சுற்றியமைந்துள்ள சாந்தாரம் எனப்படும் உள்சுற்றில் தீட்டப்படுள்ள நாயக்க ஓவியங்களின் அடியில் ஒளிந்துகொண்டிருந்த சோழர்கால ஓவியங்களை மத்திய அரசின் தொல்லியல்துறை(ASI) மீட்டுருவாக்கம் செய்தது. இன்னும் பல ஓவியங்களை முறையாக மீட்டபாடில்லை என்றாலும் ஒரு சில வேதியியல் மற்றும் அச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாயக்க ஓவியங்களை பாதிக்காமல் எடுத்து கீழே அமைந்திருந்த சோழர் ஓவியங்களை ஓரளவிற்கு வெளிக்கொண்டுவந்தது ஒருவகை மீட்டுருவாக்கத்திற்கான மிகச் சிறந்த உதாரணமாகும்.

இவ்வகையில் சோழர் கால ஓவியங்களை ஒரளவிற்கு மீட்க முடிந்ததே தவிர பாதிப்படைந்த பல இடங்களும் இன்றுவரை பாதிப்படைந்தவையாகவே உள்ளன.

இதுமட்டுமல்ல. தமிழகமெங்கும் அமைந்துள்ள பற்பல கோயில்களிலும் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் அடைந்துள்ள பாதிப்புக்களை நீக்க அல்லது மீட்டுருவாக்கம் செய்ய பெரியதொரு முயற்சி எதுவும் நடந்ததுபோல் தெரியவில்லை. பொருளாதாரச் சிக்கல்கள், தொழில்நுட்பச் சிக்கல்கள் என்று இதற்குப் பல காரணங்கள்.

இத்தகைய பின்னணியில் முறையான தொல்லோவியங்களின் பதிவாக்கத்ததிற்கும் மீட்டுருவாக்கத்ததிற்கும் புதிய கோணங்களையும் அர்த்தங்களையும் செயல்பாடுகளையும் கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் பின்னணியில் காண்பதும் விளக்குவதுமே இப்பொழிவின் முக்கிய நோக்கமாகும்.

மேற்கொண்டு இந்தத் தலைப்பிற்குள் இறங்குவதற்கு முன்னால் நாம் பிரதானமாக முன்வைக்கப்போகும் கணிப்பொறித் தொழில்நுட்பமான கிராபிக்ஸ் மற்றும் மல்டிமீடியா (Graphics and Multimedia) பற்றிய அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். இத் தொழில்நுட்பங்கள் பல வருடங்களுக்கு முன் கணினித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பல்வேறு தொழில்களிலும் பணிகளிலும் இன்றுவரை உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. தொல்லோவியங்களின் மீட்டுருவாக்கத்திற்கு இவை பெரிதும் பயன்படும் சாதனங்களாகும்.

கிராபிக்ஸ் மற்றும் மல்டிமீடியா தொழில்நுட்பம் - ஒரு அறிமுகம்

கிராபிக்ஸ் என்னும் ஒற்றைச் சொல் பல்வேறு கணிப்பொறித் தொழில்நுட்பங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாகப் பயன்படுகிறது. இருபரிமாண (2D) புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் ஓவியங்களில் ஆரம்பித்து முப்பரிமாண 3D கிராபிக்ஸ் வரை விரியும் இந்தத் தொழில்நுட்பமானது இன்றைய தேதியில் மிக முக்கியமாக அச்சுக்கூடங்கள், விளம்பரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், இதர மீடியா நிறுவனங்கள் முதலியவற்றில் இன்றியமையாத அம்சமாக ஆகிவிட்டது.

பரந்து விரிந்த இந்தத் துறையில் நமது ஓவியத் திருப்பணிக்குத் தேவையான சில குறிப்பிட்ட தொழில்நுட்பங்களில் மட்டும் குறிப்பாகக் கவனம் செலுத்துவோம்.

நமக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் அனைத்துமே இரு பரிமாணப் படங்கள் சம்மந்தப்பட்டவை. நீளம் மற்றும் அகலம் (Length and Breadth) என்பனவே நாம் குறிப்பிடும் இரு பரிமாணங்களாம்.

இரண்டு பரிமாணங்களை (Dimensions) மட்டும் உள்ளடக்கிய பொருட்களை நாம் இருபரிமாணப் பொருட்கள் என்று அழைக்கிறோம். உதாரணமாக ஒரு காகிதம் அல்லது புகைப்படம் இரு பரிமாணங்கள் கொண்ட பொருட்களாகும். மூன்றாவது பரிமாணமாகிய கனம் (Depth) இவற்றில் மிகவும் குறைவு.

கீழ்க்கண்ட படம் ஒரு ஒற்றைத்தாளானது இரு பரிமாணங்களைக் கொண்டது என்பதையும் பல காகிதங்கள் சேர்ந்த ஒரு புத்தகம் முப்பரிமாணங்களைக் கொண்டது என்பதையும் தெளிவுபடுத்தும்.

படம்01 - இருபரிமாணங்களுடைய காகிதமும் முப்பரிமாண புத்தகமும் (2D Paper and 3D book)


தொல் ஓவியங்கள் அனைத்தும் சுவரில் தீட்டப்பட்ட சித்திரங்கள் என்பதால் அவை அனைத்துமே இருபரிமாணம் மட்டும் கொண்டவை என்பது இப்போது தெளிவாகிறது அல்லவா ?

இதற்கு அடுத்தபடியாக நாம் புரிந்துகொள்ளவேண்டியது ஒரு கணினியானது இத்தகைய இருபரிமாணப் பதிவுகளை - குறிப்பாகப் புகைப்படங்களையும் ஓவியங்களையும் எவ்வாறு காண்கிறது / பரிசீலிக்கிறது / சேமிக்கிறது என்பதையே.

கணிப்பொறி ஒரு தசம ஜந்து. அதற்கு ஒன்று அல்லது பூஜ்யம் - இரண்டுதான் தெரியும். ஆக அது புகைப்படமோ ஓவியமோ அல்லது வேறுவகையான கோப்புகளோ - உள்ளுக்கும் எல்லாமே 0110001111110000000...........தான் !

டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை கணிப்பொறி இரண்டு வகை கோப்புக்களாக சேமிக்கிறது.

1. ரேஸ்டர் கிராபிக்ஸ் என்று சொல்லப்படும் வகை (Rastor Graphics)

2. வெக்டர் கிராபிக்ஸ் என்று சொல்லப்படும் மற்றொரு வகை (Vector Graphics)

இரண்டிற்கும் பிரதானமாய் ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு. ரேஸ்டர் கிராபிக்ஸ் என்று வந்துவிட்டால் கணிப்பொறி அந்தப் புகைப்படத்தை பல கோடிக்கணக்கான புள்ளிகளாக (Pixels - பிக்ஸல்கள் என்று இவற்றுக்குப் பெயர்) பிரித்துக்கொண்டு ஒவ்வொரு புள்ளியின் வண்ணத்தையும் அது இருக்கும் இடத்தையும்(co-ordinates என்று இதனை குறிப்பிடுவார்கள்) வேலை மெனக்கெட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும். ஒரு புகைப்படம் என்பது என்ன - பலப்பலப்பல வண்ணப் புள்ளிகளின் குறிப்பிட்ட அமைப்புத்தானே ?

சற்றே குழப்பமாக இருந்தால் கீழ்க்கண்ட புகைப்படத்தைக் காணுங்கள்.

படம்02 - பலப்பல வண்ணப் புள்ளிகளே ஒரு புகைப்படம் (Bird and Pixels that make it)


வெக்டர் கிராபிக்ஸ் சமாச்சாரமே வேறு.

ரேஸ்டர் போல் புள்ளி புள்ளியாக ஞாபகத்தில் வைத்துக்கொண்டு மாய்ந்து போகாமல் ஒரு ஓவியத்தை அதன் கோடுகளாக - வண்ணப் பிரிவுகளாக பிரித்துக்கொண்டு "இந்த இடத்திலிருந்து இதுவரை கறுப்பு நேர்க்கோடு - அப்புறம் கொஞ்சம் தள்ளி ஒரு பிரேஸியர் வளைவு ....(பயந்துவிடாதீர்கள் - பிரேஸியர் வளைவு என்பது ஒரு வளைவுச் சமன்பாடு - Curve equation...அவ்வளவுதான்) - ஒரு பாலிகன் என்று கொஞ்சம் சுலபமாகப் பிரித்துக்கொண்டு அவ்வாறே கோப்பில் சேமிப்பதே வெக்டர் !

படம்03 - வெக்டர் உதாரணப் படம் (Vector graphics example)


எந்தப் படத்தை எந்த வழியில் சேமிக்கலாம் என்பதை படத்தின் தன்மையே முடிவு செய்கிறது. உதாரணமாக கீழ்க்கண்ட படத்தை ரேஸ்டராக மட்டும்தான் சேமிக்க முடியும் என்கிறேன் நான் - ஒப்புக்கொள்வீர்களா இல்லையா ?

படம்04 - Vector and rastor graphics example


நல்லவேளை - நமது பொழிவைப் பொறுத்தவரையில் ரேஸ்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பமே அதிகம் பயன்படப்போகிறது என்பதால் வெக்டர் குழப்பங்களிலிருந்து தப்பித்து விட்டோம்.

மேற்கூறியவையெல்லாம் இரு பரிமாண கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் சில அடிப்படை அம்சங்கள். இத்தகைய இரு பரிமாண கணிப்பொறித் தொழில்நுட்பத்திலேயே மேலும் நாம் முக்கியமாகப் பேசப் போகும் சில நுட்பங்களாவன -

1. டிஜிட்டல் புகைப்படக்கலை (Digital Photography)

2. கிராபிக்ஸ் மாற்றுருவாக்கக்கலை (Graphics editing and processing)

3. டிஜிட்டல் அச்சுக்கலை (Digital Printing)

இதில்
1. டிஜிட்டல் புகைப்படக்கலை தொல்லோவியங்களின் பதிவாக்கத்திற்கும்

2. கிராபிக்ஸ் மீட்டுருவாக்கத்திற்கும்

3. டிஜிட்டல் அச்சுக்கலை மீளாய்வு செய்யப்பட்ட ஓவியங்களின் பரவலான பயன்பாட்டிற்கும்

முறையே பயனளிக்கும் தொழில்நுட்பங்களாகும்.

நமது பொழிவானது மூன்று தொழில்நுட்பங்களையுமே தொட்டுப் பேசப் போகிறது என்றாலும் குறிப்பாக மீட்டுருவாக்கத்தில் கிராபிக்ஸ் கலைப் பயன்பாட்டின் பல பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதையே தன் மைய இழையாகக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் புகைப்படக்கலையும் ஓவியப் பதிவாக்கத்தில் அதன் பங்கும்

நமது பதிவாக்கம் மற்றும் மீட்டுருவாக்கப் பணியின் முதல் கட்டமான டிஜிட்டல் புகைப்படக்கலையை பற்றி கொஞ்சம் பேசுவோம்.

சாதாரண கேமராக்களுக்கும் தற்போது சந்தைகளில் பரவலாகத் துவங்கியிருக்கும் டிஜிட்டல் கேமராக்களுக்கும் அடிப்படைத் தொழில்நுட்ப அளவிலேயே பல வேறுபாடுகள் உண்டு. சாதாரண கலர் புகைப்படங்களில் அகப்படாத தெளிவும் வண்ண விளக்கங்களும் டிஜிட்டல் கேமராவில் அகப்பட்டுவிடும்... அதிலும் சற்று பணக்கார கேமராக்களாக இருந்தால் (அதாவது விலை ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட கேமராக்கள்) மிகத் துல்லியமாக தொல் ஓவியங்களின் வண்ணங்களையும் விளக்கங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிடும்.

இந்தத் துல்லியத்திற்கு பல தொழில்நுட்பக் காரணிகள் இருந்தாலும் ஒளிப்படங்களைப் பதிவுசெய்யும் அடிப்படைத் தத்துவத்தில் உள்ள ஒரு வேறுபாட்டை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

ஒரு சாதாரண SLR கேமராவானது புகைப்படத்தை புகைப்படச் சுருளில் ஒளி நிழல் வேறுபாடுகளாகப் பதிவு செய்து கொள்கிறது. இந்தப் பதிவுகள் வேதியியல் மாற்றங்கள் மூலம் காகிதத்தில் பதிவாகி புகைப்படங்களாகின்றன. இந்தப் புகைப்படங்களை மீண்டும் கணிப்பொறிக்குள் கொண்டுவர ஸ்கேனிங் (Scanning) என்று சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியாக வேண்டும்.

இப்படியாக சாதாரண கேமராவில் எடுக்கப்படும் புகைப்படமானது குறைந்தபட்சம் மூன்று விதமான பதிவுகளைத் தாண்டித்தான் கணிப்பொறிக்குள் நுழைய முடியும். இப்படிப் பதிவுகளின் தன்மை மாறும்போது தவிர்க்க முடியாமல் ஓவியங்களின் வண்ணம் மற்றும் தன்மைகளிலும் பல மாற்றங்கள்
நுழைந்துவிடுகின்றன.

படம்05 - SLR வகை கேமரா புகைப்படங்கள் கணிப்பொறிக்குள் நுழைவதற்குமுன் தரத்தில் பல்வேறு இழப்புக்களை சந்திக்கின்றன


டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பம் வேறு வகை.

ஒரு கணிப்பொறியானது புகைப்படங்களை கோடிக்கணக்கான வண்ணப் பொட்டுகளாக - அதாவது பிக்ஸல்களாக பார்ப்பதுபோலவே டிஜிட்டல் கேமராவும் தன்முன் விரியும் காட்சிகளை வண்ண வண்ணப் பொட்டுகளாகவே பதிவுசெய்து கொள்கிறது. இவ்வாறு பதிவுசெய்யப்படும் பிக்ஸல்கள் எந்த தர மாற்றமும் இன்றி கணிப்பொறிக்குள் இறக்கிவைக்கப்படுவதால் (Downloaded) புகைப்படத்தின் தரமும் அதிகமாக உள்ளது.

படம்06 - டிஜிட்டல் வகை கேமரா புகைப்படங்கள் கணிப்பொறிக்குள் நுழைவதற்குமுன் தரத்தில் ஏற்படும் இழப்புக்கள் குறைவு


இப்படியாக டிஜிட்டல் கேமராக்களில் எடுக்கப்படும் படங்கள் கணிப்பொறியில் படக் கோப்புகளாக (Picture files) சேமித்து வைக்கப் படும்போது நூறாண்டுகளானாலும் தரம் குறையாது. அதிலும் சிடி ரோம் (CD ROM) போன்ற தட்டுக்களில் போட்டு வைத்துவிட்டோமானால் நாம் உபயோகிப்பது மட்டுமல்லாமல் பிறருக்குக் கொடுப்பதும் எளிதான காரியமாகிவிடும்.

இத்தகைய ஆதாயங்கள் "தொல்லோவியங்களின் பதிவாக்கம்" என்னும் பணியை மிகச் சுலபமாக்கிவிடும்.

செய்ய வேண்டியதெல்லாம் இதுதான் - சம்மந்தப்பட்ட துறைகளோ ஆர்வக்கோளாறு அதிகமாக உள்ள குழுக்களோ சேர்ந்து ஒரு நல்ல டிஜிட்டல் கேமரா உபயோகித்து தமிழகத்தின் பண்டைய ஓவியங்கள் அனைத்தையும் மூச்சுப் பிடித்துக்கொண்டு ஒரு முயற்சி செய்து புகைப்படமெடுத்து வைத்து விட்டால் தீர்ந்தது ! ஒரு நிரந்தர நூலகப் பதிவாக விளங்கக்கூடித இந்த ஓவியங்களை தேவைப்படுபவர்களுக்கு தேவையான அளவிற்கு கொடுத்து விடலாம்.

Indira Gandhi Centre for Arts என்னும் மைய அரசின் நிறுவனம் இந்தப் பணியில் சற்று தீவிரமாக இத்தகைய பதிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய http://www.ignca.org என்னும் இணையத் தளத்திற்குச் செல்லவும்.

சரி, முன்பு குறிப்பிட்ட SLR வகைக் கேமராக்களின் சில எல்லைகளை டிஜிட்டல் தொழில்நுட்பமானது தாண்ட முடிகிறயா இல்லையா என்று காண்போம்.

* டிஜிட்டல் புகைப்படங்களும் ஓரளவிற்கு புகைப்படமெடுக்கப்படும் சூழ்நிலையாலும் பாதிக்கப்படுபவைதான் - ஆக நல்ல புகைப்பட நிபுணர்கள் இந்தப் பணியில் ஈடுபடுதல் அவசியம். ஆனால் சூழ்நிலைகளின் பாதிப்பை கிராபிக்ஸ் துணைகொண்டு ஓரளவிற்கு சமன்பாடு செய்யலாம்.

* டிஜிட்டல் புகைப்படங்களும் அந்தப் படம் எடுக்கப்படும் நேரத்தில் சுற்றியுள்ள ஒளி / நிழல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன

* டிஜிட்டல் கேமராவிலும் ஒரு நீண்ட ஓவியத்தை பகுதி பகுதியாகத்தான் புகைப்படமெடுத்தல் சாத்தியம் - என்றாலும் பின்னால் கணிப்பொறியை உபயோகித்து ஒரளவிற்கு "வெட்டி - ஒட்டி"(cut and paste) விடும் வசதி உண்டு.

* டிஜிட்டல் கேமராவில் பதிவாகும் ஓவியங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு ஒப்பீட்டில் மிகக் குறைவான பாதிப்புக்களுக்கே உள்ளாகின்றன.

* டிஜிட்டல் ஓவியங்களை அதிக செலவின்றி பலரும் கணிப்பொறி மற்றும் இணையம் வழியாக பயன்படுத்திக் கொள்ளுதல் சாத்தியம்

* நாள்பட்டாலும் டிஜிட்டல் புகைப்படங்களின் வண்ணங்களும் தெளிவும் மங்குவதில்லை

டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பம் பற்றி மேலும் அறிய விரும்புவர்கள் கையடக்கமாக ஒரு கேமராவை வாங்கிவிடுவது சாலச் சிறந்தது. நாம் இப்போது இந்தக் கேமராக்களை சரியான முறையில் உபயோகித்து எவ்வாறு தொல்லோவியங்களை புகைப்படமெடுப்பது என்று காண்போம்.

டிஜிட்டல் கேமராவில் தொல்லோவியங்களை பதிவாக்கல்

புகைப்படமெடுத்தலைப் பொறுத்தவரை சாதாரண கேமராக்களுக்கும் டிஜிட்டல் கேமராக்களுக்கும் அதிகம் வித்தியாசங்களில்லை. வெளிச்சம் (Flash) , கிளிக்குதல் என்று இரண்டிலும் எறக்குறைய ஒரே மாதிரியான பயன்பாட்டுஅம்சங்கள்தான்.

ஆனால் தெல்லோவியங்களின் பதிவைப் பொறுத்தவரை நாம் கவனத்தில் வைக்கவேண்டியது வேறு சில விஷயங்களை.

முதல் கவனம் - ஓவியங்களில் உயரம் மற்றும் அகலம்.

அதிலும் தஞ்சை இராஜராஜேஸ்வரத்தைப்போல் பெரியதொரு சுவற்றில் பல மீட்டர் நீள அகலங்களுக்கு விரியும் சுவற்றில் பண்டைய ஓவியர்கள் தங்களது கலையைக் காட்டியிருந்தார்களானால் புகைப்படமெடுப்பதில் அதிக எச்சரிக்கை தேவை. இந்த அம்சத்தின் முக்கியத்துவம் கருதி சற்று விளக்கமாகவே காண்போம்.

முதலில் ஓவியத்தை பல்வேறு செங்கோணங்களாக(Rectangles) பிரித்துக் கொள்ளுதல் அவசியம். ஒவ்வொரு செங்கோணமும் ஒரு புகைப்படமாகப் பதிவாகும். ஆக கேமராவை இஷ்டப்படி நகர்த்திக் கொண்டுபோய் அங்கும் இங்கும் படம் பிடிக்காமல் முறையாக அளவை வைத்துக்கொண்டு படம் பிடிக்க வேண்டும். செங்கோணத்தின் நீள அகலங்களை - கேமரா எந்த அளவிற்கு சுவற்றிலிருந்து விலகி நின்று படம் எடுக்கப் போகிறது என்பது தீர்மானிக்கும்.

படம்07 - கேமராவிற்கும் சுவற்றிற்கும் எத்தனை நீளம் ?


தொடர்ந்து ஓவியத்தின் பல்வேறு பகுதிகளையும் படம்பிடிக்கையில் இந்த விலகி நிற்கும் தூரத்தை சீராக அமைத்துக்கொள்வது முக்கியம். கணிதத்தில் இதனை Perpendicularity என்று அழைப்பார்கள். இந்த நீளம் கூடும்போதும் குறையும்போதும் கேமராவில் பதிவாகும் செங்கோணத்தின் அளவும் மாறுதலுக்குட்பட்டு நம்மை பின்னால் சிக்கலில் ஆழ்த்திவிடும்.

இதற்கு அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் பொறியியலில் Perspective என்றழைக்கப்படும் ஒரு அம்சமாகும்.

அருகிலுள்ள பொருட்கள் நமது கண்களுக்கு அளவில் சரியாக தெரிவதும் தூரம் செல்லச் செல்ல அதே பொருளின் அளவு குறைவதும் நாம் அன்றாடம் காணும் காட்சிகள் அல்லவா? உதாரணமாக ஒரு கட்டிடத்தின் அடிப்பகுதியைவிட மேல்மாடியின் நீள அகலங்கள் சற்றே குறைவாக கண்களுக்குத் தெரியும் - உண்மையில் இரண்டும் ஒரே நீள அகலம்தான் - ஆனால் கண்கள் நம்மை ஏமாற்றுகின்றன.

படம்08 - உயரே செல்லச் செல்ல நீள அகலங்கள் குறைவாகத் தெரியும்


இந்த பாதிப்பானது சற்று ஏமாந்தால் நமது புகைப்படங்களையும் பாதித்துவிடும். உதாரணமாக மிக உயரே தீட்டப்பட்டுள்ள ஒரு ஓவியத்தை தரையில் நின்று புகைப்படம் பிடிக்கும்போது இந்த பாதிப்பு நம்மையும் அறியாமல் ஓவியத்தில் ஒருவகையான Perspective பாதிப்பை ஏற்படுத்த....மூல ஓவியங்களை உள்ளது உள்ளபடியே பதிவாகாமல் வேறுவிதமாக பதிவாகிவிடும்.

ஒரு உதாரணத்திற்கு கீழ்கண்ட புகைப்படத்தை கவனியுங்கள். பாதிப்பு மிகத் தெளிவாகப் புரிகிறதல்லவா ?

படம்09 - டிஜிட்டல் புகைப்படங்களில் Perspective பாதிப்புக்கள்


இவ்வகை பாதிப்புக்கள் ஏற்படாமல் தடுக்க ஒரே ஒரு வழிதான் உண்டு.

புகைப்படமெடுக்கப்படும் செங்கோணத்தின் நடு மத்தியில் கேமராவை அமைக்க வேண்டும். அப்படி இப்படி சிறிது பிசகினால் பரவாயில்லை - ஆனால் இந்த மத்திமப் புள்ளியிலிருந்து அதிகம் விலக விலக ஆபத்துத்தான்.

படம்10 - படமெடுக்கும்போது Perpendicularity மற்றும் Perspective - இரண்டையும் கவனத்தில் கொள்க


மிகப்பெரிய சுவர் ஓவியங்களில் இந்த நிலைபாட்டை பிசகாமல் எடுக்க வேண்டுமானால்... ஒன்று - நமக்குப் பறக்கத் தெரிந்திருக்க வேண்டும் - அல்லது பெரிய ஏணிகளை (கீழே விழுந்துவிடாமல்) மிகக் கவனமாக அளவு மாறாமல் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக கவனிக்க வேண்டியது - இந்த ஓவியங்களை முடிந்தவரை இயற்கை வெளிச்சத்தில் Flash அதிகம் உபயோகிக்காமல் புகைப்படமெடுப்பது சாலச் சிறந்தது. இப்படி Flash உபயோகிக்கவில்லையென்றால் Shutter speed மிக அதிகமாகி புகைப்படங்கள் shaking என்று சொல்லப்படும் கைகால் நடுக்கங்களினால் பாதிப்படையும்.

இதனைத் தவிர்க்க ஒரே வழி நமது நடுங்கும் நடுவயதுக் கரங்களை கழற்றி தனியே வைத்துவிட்டு கேமராவின் Tripod stand கைகளில் மரியாதையாக கேமராவை ஒப்படைத்துவிடுவதுதான்.

தொல்லோவியங்களைப் புகைப்படமெடுப்பது பற்றி மேலும் அதிகம் பேசலாம் என்றாலும் நமது பொழிவின் முக்கிய அங்கமான அடுத்த பகுதி நம்மை ஆர்வத்துடன் அழைப்பதால் அங்கு செல்வோம்.

டிஜிட்டல் கிராபிக்ஸ் மாற்றுருவாக்கம் மற்றும் மீட்டுருவாக்கம் (Restoration via Graphics editing and processing)

ரேஸ்டர் கிராபிக்ஸ் படங்கள் வண்ண வண்ணப் புள்ளிகளாக கணிப்பொறிக்குள் சேமித்து வைக்கப்படுகின்றன என்பதைக் கண்டோம்.

இவ்வாறு சேமித்துவைக்கப்படும் படங்களை மாற்றுருவாக்கம் செய்ய (Editing and processing graphics) கணிப்பொறி மென்பொருட்கள் உதவுகின்றன. இந்த மென்பொருட்களின் பயன்பாட்டையும் அதன் மூலம் தொல்லோவியங்களின் மீட்டுருவாக்கத்தையும் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை ஒரு தெளிவான உதாரணம் கொண்டு விளக்கப் போகிறோம்.

தஞ்சை இராஜராஜேஸ்வரத்தின் மிகப் பிரபலமான சனகாதி முனிவர் - சனத் குமாரர் ஓவியத்தை நமது உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

மீட்டுருவாக்கத்தை நன்முறையில் செயல்படுத்த நாம் முன்பு கூறியபடி மிக எச்சரிக்கையாக மூல ஓவியங்களை அவற்றின் அத்தனை வண்ணங்களும் தன்மைகளும் பதியும்படி படம்பிடித்தல் அவசியம். துரதிருஷ்டவசமாக பெரிதின் முயன்றும் இத்தகைய தரத்துடன் இராஜராஜேஸ்வரத்தின் சோழர்கால ஓவியப் படப்பிடிப்புக்கள் நமக்குக் கிட்டவில்லை. எனவே கிடைத்த ஓவியத்தை வைத்துக்கொண்டு மீட்டுருவாக்கத்தில் ஈடுபடவேண்டிய நிலை.

நாம் உபயோகிக்கக்போகும் மூல ஓவியத்தின் டிஜிட்டல் ஒளிப்படம் இதுதான்.

படம்11 - தஞ்சை சோழர்கால ஓவியம் - மூலப் புகைப்படம் (சனகாதி முனிவர் - சனத் குமாரர்)


நாம் முன்பு குறிப்பிட்ட சிறந்த முறைகளில் இந்த ஓவியம் படமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறுவதற்கில்லை. என்றாலும் நாம் இதையே மூலப்படமாக உபயோகிக்க சில காரணிகள் உண்டு.

இதனைவிட வண்ணங்கள் சற்றே தெளிந்த புகைப்படங்கள் சில புத்தகங்களில் காணக்கிடைத்தாலும் அவை கீழ்க்கண்ட பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்றன -

1. புகைப்படம் - அதிலிருந்து அச்சு - அச்சிலிருந்து கணினி என்று கைமாறியதில் மூலப் படத்தின் வண்ணங்கள் பெரிதும் மாறுதலடைந்துவிட்டன.

2. பதிப்பிக்கப்பட்ட பல ஓவியங்களில் டச்சப் (Touch-up) என்று சொல்லப்படும் வரைதலை ஏதோ ஒரு ஆர்வலர் சற்றே அதிகமாக செய்யப்போய்
மூலப்படத்தில் இல்லாத பல கறுப்பு எல்லைக் கோடுகளும் இந்தப் படங்களில் இடம்பெற்று விட்டன ! இந்த வகை வேலைகளை செய்வதில் தவறில்லை -நாமே இதில் மிக அதிகமாக ஈடுபடத்தான் போகிறோம். ஆனால் மூலப்படத்தில் இல்லாத - அல்லது இருந்திருக்க முடியாத - ஒன்றை நுழைப்பதில் நமக்கு உடன்பாடில்லை.

ஒரு உதாரணத்தை கீழே காணலாம்.

படம்12 - சனகாதி முனிவர் - சனத் குமாரர் - டச்சப் வேலைகளின் பாதிப்பு


மறுபடியும் மூலப்படத்தைக் காணுங்கள்.

உடனடியாக நம் கண்களுக்குத் தெரிவது முன்பு குறிப்பிட்ட Perspective பாதிப்பே. பெரியதொரு ஓவியத்தை சற்றே அடியிலிருந்து புகைப்படமெடுத்ததால் ஏற்பட்ட கோளாறு இது.
கீழே சற்று பெரிதாகவும் மேலே சற்று குறுகலாகவும் படமானதில் மூல ஓவியமும் ஓரளவிற்கு இதனால் பாதிக்கப்பட்டுவிட்டது.

மேற்கொண்டு நகரும் முன் இதனை முதலில் சரிசெய்தாக வேண்டும். எப்படி ?

கணினி மென்பொருட்கள் கைகொடுக்கின்றன. நாம் பெரிதும் உபயோகிக்கப்போகும் மென்பொருள் அதிகம் அலட்டிக்கொள்ளாத Paint shop pro என்னும் மென்பொருளாம். இணையச் சுட்டி http://www.jasc.com பக்கத்தில் இதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

படம்13 - Paint shop pro கிராபிக்ஸ் மென்பொருள்


இதில் perspective பிரச்சனைகளை சரிசெய்ய வசதி உள்ளது. கீழ்கண்ட படத்தைப் பாருங்கள்.

மென்பொருளின் கைகளில் நமது ஓவிய புகைப்படத்தை முழுமையாக ஒப்படைத்துவிட்டு இவ்வகை கருவிகளை உபயோகித்து மாற்றங்கள் செய்வது கிராபிக்ஸ் மாற்றுருவாக்கக் கலையின் முக்கியக் கூறாகும்.

படம்14 - Perspective correction in Paintshop pro


இந்த நுணுக்கத்தை நமது மூலப்படத்தில் செலுத்தியபின் சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு திருப்திகரமாக இல்லையென்றால்... Undo ! ஓரளவிற்கு சரிசெய்யப்பட்ட மூலப்படம் கீழே காண்பிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சனத்குமாரரின் முக நீளம் சரிசெய்யப்பட்டுவிட்டதையும் ஓவியமே ஒருவித கட்டுக்குள் வந்துவிட்டதையும் கவனிக்கவும்.

படம்15 - Perspective correction செய்யப்பட்ட மூலப்படம்


மேற்கொண்டு நமது வேலைகளில் மூழ்கும்முன் படத்தை இருமடங்கு பெரிது படுத்திக்கொண்டு விடுவோம் - என்ன இருந்தாலும் சோழர்காலக் கலையை நன்கு இரசித்தபடி நமது வேலைகளை கவனிக்கவேண்டுமில்லையா ? இதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம்... அதே மென்பொருளில் படத்தைப் பெரிதாக்கும் ஜீபூம்பா வசதி இருக்கவே செய்கிறது. (இதே விஷயத்தை ஒரு சாதாரண போட்டோவில் செய்யவேண்டுமானால் என்ன செலவாகும் என்று யோசித்துப் பாருங்கள் - நெகடிவ் உபயோகப்படுத்தி... பெரிதாக்கி... மூன்று நான்கு நாட்கள் காத்திருந்து...ஆர்வமே குன்றிப்போய்விடும் !)

பெரிதுபடுத்தப்பட்டபின் படத்தின் மெல்லிய நுணுக்கங்கள்கூட நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். இது முக்கியம். பெரிதாக்கப்பட்ட ஓவியத்தின் ஒரு பகுதி கீழே.

படம்16 - மூலப்படம் ஏறக்குறைய இரு மடங்கு பெரிதாக்கப்பட்டுவிட்டது


இதற்கு அடுத்தபடியாக வரப்போகும் வேலைகளை சிறிதளவு எச்சரிக்கை உணர்வோடு செய்ய வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகள் கழிந்ததினாலும் வேறு விதமான ஓவியங்களின்கீழ் ஒளிந்து கொண்டிருந்ததினாலும் இந்த சோழ ஓவியங்களின் மூல வண்ணங்கள் சற்றே மங்கிவிட்டன என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாதல்லவா ?

இது Mural paintings என்றழைக்கப்படும் எல்லா சுவர் ஓவியங்களுக்குமே பெரும்பாலும் பொருந்தும். சொல்லப்போனால் ஆயிரமாண்டுகாலத் தொழில்நுட்பமும் தாவர வண்ணங்களும் இந்த அளவிற்கு நிறம் மங்காமல் இருப்பதே பெரியதொரு சாதனைதான் !

சரி, எந்த அளவிற்கு வண்ணங்கள் மங்கியிருக்கலாம் ? துல்லியமாகக் கணிக்கக் கருவிகளில்லை. என்றாலும் நமது உள்ளுணர்வின் வழிநடந்து அந்தக் காலத்தின் மகத்தான ஓவியர்கள் தீட்டிய சித்திரம் முடிக்கப்பட்ட காலத்தில் எந்தெந்த வண்ணங்கள் கொண்டு அமைந்திருக்கும் என்று சிறிதளவு ஊகிக்க முயல்வோம்.

இதற்கு நமது மென்பொருள் புரியும் உதவி மகத்தானது என்றால் மிகையில்லை.

ஒரு மூலப் புகைப்படத்தின் வண்ணங்களை மாற்ற பல நுணுக்கங்களை Paintshop pro செய்து தருகிறது. இந்தக் கருவிகளை உபயோகிக்குமுன் இந்தக் கருவிகள் பின்பற்றும் அடிப்படை வண்ண மாற்றத் தத்துவத்தையும் அக்கால ஓவியர்களின் மனோ நிலையையும் ஓரளவிற்கு மனதில் தேக்கி வைத்தல் முக்கியம்.

வண்ண மாற்றத் தத்துவங்களுள் பிரதானமானவை -

1. Brightness - Contrast (ஒரு படத்தில் உள்ள ஒளி நிழல் பகுதிகளை மாற்றுவது)

2. Red Green Blue correction (ஒரு படத்தை சிவப்பு பச்சை மற்றும் நீலப்புள்ளிகளின் கலவையாகப் பார்த்து அவ்வாறே மாற்றங்கள் செய்வது)

3. Hue - saturation - lightness (வண்ணங்களின் அடர்த்தியை கூட்டுதல் குறைத்தல்)

4. Highlight- midtone - shadow

5. Gamma Correction (படத்தின் ஒளியைக் குறைத்தல் கூட்டுதல்)

முதலியன.

இந்தத் தத்துவங்களை விரிவாக இந்தப் பொழிவிற்குள் விளக்க முடியாமைக்கு வருந்துகிறோம். என்றாலும் இவை அனைத்துமே மூலப்படத்தின் வண்ணங்களில் பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டுவரும் தகுதி படைத்தவை.

என்றாலும் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தத்துவமானது நமது மூல ஓவியத்தில் என்னவகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று முன்கூட்டியே கணித்தல் இயலாத காரியம் ! ஒவ்வொரு தத்துவமாக புகைப்படத்தில் பொறுத்தி அளவைகைளை மாற்றியமைத்து பொறுமையுடன் முயன்று பார்ப்பதுதான் ஒரே வழி !

நாம் பலவிதமான வண்ணமாற்ற நுணுக்கங்களையும் நமது மூல ஓவியத்தில் மாற்றி மாற்றி கையாண்டு பார்த்து ஒருவழியாக வண்ணங்களில் மிதமானதொரு தெளிவைக் கொண்டுவந்திருக்கிறோம்.

படம்17 - வண்ணங்கள் சரிசெய்யப்பட்ட மூலப்படம்


இதுதான் மூலப்படத்தின் நிஜ வர்ணம் என்றெல்லாம் நம்மால் சத்தியம் செய்ய முடியாது. என்றாலும் ஒளிப்படத்தில் தெரிந்த நிறங்களை அதிகம் சிதைக்காமல் ஓவியத்தின் வண்ணங்களில் ஒருவித தெளிவை கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று சொல்லலாம்.

இவ்வாறு வண்ணங்களை மேம்படுத்தியதில் நாம் கண்ட மிகப்பெரிய உண்மை ஒன்றுண்டு. ஓவியக்கலையில் shading என்று சொல்வார்கள். அதாவது ஒளி நிழல் பகுதிகளை நீர்த்த அல்லது அடர்த்தியான வண்ணங்களினால் காண்பிப்பது. இந்த நுட்பமெல்லாம் பிற்கால நாயக்க ஓவியங்களில் காண முடியாது - எல்லாமே Flat colours என்று சொல்லப்படும் ஒரே வண்ணங்களின்
பூச்சுதான்.

ஆனால் இந்த ஆயிரம் வருடப் பழமையான சோழ ஓவியத்தை மீண்டும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

குறிப்பாக சனத்குமாரனின் முக எல்லைகள் கழுத்து மற்றும் இடது தோள் பகுதிகளில் ஒரு வித Deep shading நுணுக்கம் தெரிகிறதா இல்லையா ?

படம்18 - சோழர்காலத்தின் கலை மேன்மையை பறைசாற்றும் Shading Effects


இந்த நுணுக்கம் இந்தப் படமானது வெளிவந்துள்ள பல்வேறு புத்தகங்களிலும் கிட்டத்தட்ட முழுவதுமாக இழக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல - நாம் இந்த புகைப்படத்தை மீட்டுருவாக்கம் செய்ய ஆரம்பிக்கும்போதுகூட அத்தனை தெளிவாக இந்த விஷயத்தை கவனிக்க முடியவில்லை. தற்போது வண்ணங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில்தான் இதனை கவனிக்கிறோம்.

இந்த வகை shading நுணுக்கங்களை ஓவியக்கலையில் புகுத்தியவராக மேலை நாட்டவர் மோனாலிசா புகழ் லியோனார்டோ டாவின்சியை அடையாளம் காட்டுவர். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கால ஓவியர்களுக்கும் இந்தத் திறமை கைவந்த கலையாக இருந்தது என்பதை நினைக்கும்போது உள்ளத்தில் பெருமிதம் பொங்குகிறது !

இத்தனைக்கும் அவர்கள் பெரும்பாலும் உபயோகித்தது இயற்கையான தாவர வண்ணங்கள்...இருந்தும் கலையின் மேன்மையைக் கவனியுங்கள் !

மீண்டும் நாம் ஈடுபட்டுள்ள பணிக்குத் திரும்புவோம்.

இந்த வண்ண மாற்றத் தத்துவங்களை ஒற்றைக் கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடியின் எச்சரிக்கையோடு உபயோகிக்கவேண்டும். உற்சாகம் அதிகமாகி கண்டபடி மென்பொருளை உபயோகித்தால் அனர்த்தம்தான் - படம் மூல ஓவியத்தின் வண்ணங்களிலிருந்து பெரிதும் விலகி நமது நோக்கமே பாழாகிவிடும்.

(அவ்வாறு மேற்கண்ட நமது சனகாதி முனிவர் ஓவியமே துரதிருஷ்டவசமாக பலவகைகளிலும் வண்ணச் சிதைவுக்கு ஆட்பட்டு மிகச் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையிலும் வெளிவந்திருந்தது !)

சரி, வண்ணங்களை சரிசெய்தாயிற்று - அடுத்து ?

அடுத்ததாக வரப்போகிறவையெல்லாம் சற்றே சிக்கலான கிராபிக்ஸ் மாயாஜால வேலைகள் ! இவற்றுக்குள் நுழையுமும் ஓவியத்தின் பல்வேறுவகையான பாதிப்புக்களில் சிலவற்றை கணக்கெடுப்போம்.

படம்19 - மூல ஓவியத்தின் சில பாதிப்புக்கள் கோடிகாண்பிக்கப்படுகின்றன


இந்த பாதிப்புக்கள் உண்மையில் மூல ஓவியத்திலேயே ஏற்பட்டுள்ள பாதிப்புக்களா - அல்லது நமது புகைப்படத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயப்படுத்திக்கொள்ளுதல் முக்கியம். நமது உதாரண ஓவியத்தை பல்வேறு புத்தகங்களிலும் வெளிவந்துள்ள நான்கு - ஐந்து புகைப்படங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்தபிறகே நமக்குக் கொஞ்சம் திருப்தி உண்டாயிற்று.

சரி, இந்த பாதிப்புக்களை நீக்குவது மீட்டுருவாக்கப்பணியின் முக்கிய அங்கமல்லவா ? ஆக பணியைத் துவங்குவோம்.

முதலில் நம் கண்களில் படுவது - சனத் குமாரரின் இளமை பொங்கும் அழகிய முகத்தில் வலது கண்களுக்குக்கீழே -
அடடா - கறுப்பாக.. என்ன அது ?
இந்த பாதிப்பு இந்தப்படம் வெளிவந்துள்ள அத்தனை புகைப்படங்களிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளதே ? ஆக மூல ஓவியத்திலேயே ஏற்பட்ட பாதிப்பாக இது இருக்க வேண்டும்.

சரி, இதனை எவ்வாறு நீக்குவது ?

ஒரு வழி உண்டு.

பிளாஸ்டிக் ஸர்ஜரி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா - அதில் நமது உடம்பின் ஒரு பகுதியின் தசையை வெட்டி மற்றொரு பகுதியில் பொருத்துவார்களாமே ? அதைப்போலவே இந்த ஓவியத்தின் வலது கண்களுக்குக் கீழ் அமைந்த பாதிக்கப்படாத கன்னப்பகுதியிலிருந்து ஒரு துண்டை எடுத்து லாவகமாக பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்திவிட வேண்டியது.

படிப்பதற்கு சுலபமாக இருந்தாலும் செய்வது கொஞ்சம் சிரமம்தான். வெட்டி ஒட்டுவதைத் தவிர கொஞ்சம் பெயிண்டிங் வேலைகளும் செய்து இப்படி ஒரு சமாச்சாரமே நடக்காததுபோல் மொத்த இடத்தையும் சரிப்படுத்திவிட்டால்தான் நிம்மதி !

படம்20 - அடடா - கன்னம் இப்போது எத்தனை அழகு ? மூலப்படம் முன்னும் பின்னும்


இதுபோன்ற நுணுக்கமான வேலைகளில் ஈடுபடும்போது படத்தை இருமடங்கல்ல - ஐந்து அல்லது பத்து மடங்கு கூட Zoom வசதியுடன் பெரிதாக்கிக் கொள்ளலாம்.

புருவம், சடைமுடி என்று அங்கம் அங்கமாக மேற்கூறிய முறையில் சரிசெய்துகொண்டு வருகையில் சனத் குமாரர் அணிந்துள்ள கழுத்தணி நமது கண்களில் படுகிறது.

இதனை சரிசெய்ய தொழில் நுணுக்கம் மட்டும் போதாது ! சோழர்கால நகைகளைப் பற்றிய சிறிதளவு பரிச்சயமும் வேண்டும் அல்லவா ?ஆக நாம் மேற்கொண்டுள்ள பணி ஒரு கிராபிக்ஸ் மாய்மாலம் என்பதற்கு மேலேபோய் வரலாற்றாய்வு என்னும் எல்லையைத் தொட்டுவிடுகிறது பாருங்கள் !(இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு சோழர்கால ஓவியங்களை அணுஅணுவாக ஆராய்ந்தால் பல புதிய வரலாற்று உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்பது உறுதி)

இந்த நுணுக்கத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்டுரையின் முதலில் குறிப்பிட்ட டச்சப் ஓவியர் தம் கற்பனைக்கேற்ப ஒரு டிசைனை வரைந்து வைத்ததில் மூல ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள நகை பூரணமாக மாற்றம் பெற்று சற்றே அசிங்கமாக தெரிகிறது. (நமது ஓவியம் வெளிவந்துள்ள பல்வேறு புத்தகங்களிலும் இந்த நகைக்கு இதே கதிதான்)

படம்21 - டச்சப் வேலைகளால் மூலத் தன்மையிழந்து நிற்கும் சோழர்கால கழுத்தணி


நாம் இந்த இடத்தில் அதிகம் கையை வைக்காமல் ஓரளவிற்கு சரிசெய்த திருப்தியுடன் மேலே செல்வோம். புருவங்கள் கன்னம் கழுத்தணி என்று கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்ததில் அந்த சனத்குமாரனின் மோனப் புன்னகை மேலும் எழில்பெற்று முகமே ஒருவித தேவ அமைதியுடன் விளங்குவதை நம்மால் உணர்ந்து பூரிக்க முடிந்தது

இப்படியாக சனத்குமாரரின் முகம் கொடுத்த உற்சாகத்தில் ஆர்வம் அதிகமாக வண்ணங்களை மேலும் ஒரு படி தெளிவுபடுத்திக் கொண்டோம்.

இப்படியாக சில சிறிய மாற்றங்களுடன் நமது முழுத் மீட்டுருவாக்கத் திருப்பணியையும் முடித்துக்கொண்டு விடலாம்தான்.

ஆனால் நமக்குத்தான் ஆசை அதிகமாயிற்றே ?

நமது கண்கள் சனத்குமாரனின் கழுத்துக்குக் கீழும் இடது கைகளிலும் பதிந்தன.

அடடா - சொல்ல முடியாத அளவிற்கு பாதிப்புக்கள். கழுத்து மற்றும் இடது தோள் பகுதி கறுப்பு எச்சங்களால் பாதிக்கப்பட்டுள்ளதென்றால் இடது கரமோ முழுமையாக காணாமல் போய்விட்டது !

இதற்கு ஏதாவது தீர்வு உண்டா ? கால காலத்துக்கும் அந்த தெய்வீக ஓவியத்தின் முழு எழிலையும் நம்மால் பருகவே முடியாதா ?

ஒரு முறை வேண்டுமானால் முயன்று பார்ப்போமே.... பாதையில் கால் வைத்தது வைத்தாயிற்று - எங்குதான் நம்மை இட்டுச் செல்கிறதென்று கண்டு விடுவோம் !

முதலில் கரங்கள் முழுவதும் தென்பட்டால் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் குறிக்க சில எல்லைக் கோடுகளை வரைந்து கொண்டோம். இதிலும் சற்று எச்சரிக்கை தேவை - நமது சோழர்காலத்து நண்பர் எந்த வகையான கோடுகளை (Storokes) கைகளுக்குப் பயன்படுத்தியிருப்பார் என்பது தெரியவேண்டுமே ?

இதனைக் கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி உள்ளது.

அந்தச் சோழ ஓவியர் பக்கத்திலேயே வரைந்துள்ள சனகாதி முனிவரின் கைகளை எவ்விதம் வரைந்துள்ளார் என்று கவனித்துக்கொண்டு ஏறக்குறையே அதே வகையான கோடுகளைப் பயன்படுத்தி நாம் குமாரன் கைகளை வரைந்து கொள்வோம் !

படம்22 - கரங்கள் - கோட்டோவியம்


மார்புகளைப் பொறுத்தவரையில் நாம் முன்பு கையாண்ட வெட்டுதல் ஒட்டுதல் (Cut and paste) வேலையெல்லாம் இந்த இடத்திற்கு உதவாது ! ஏனெனில் கழுத்துப் பகுதியில் வண்ண மாற்றங்கள் அதிகம்... சிக்கலான shading வேறு.

இந்த நிலையில் நமது மீட்டுருவாக்கத்திற்கு ஒரே ஒரு சிரமமான வழிதான் உள்ளது.

அது என்னவெனில் -

மூல ஓவியத்தின் பாதிப்படையாத பகுதிகளில் கையாளப்பட்டுள்ள வண்ணக் கலவைகளை ஏறக்குறைய அதே முறையில் பயன்படுத்தி இந்த இடத்தின்மேல் பூச்சாக பூசியாக வேண்டும். அப்படிப் பூசும்போது - சுண்ணமடித்த இடம்போல் திட்டு திட்டாகத் தெரியாமல் மூல ஓவியத்தின் வண்ணங்களில் இரண்டறக் கலந்து நிற்கும் வகையில் வண்ணங்களை பூசியாக வேண்டும்.

மிகப் பொறுமையாக யோசித்துச் செய்யவேண்டிய வேலை இது.

மென்பொருள் இந்த விஷயத்திலும் கைகொடுத்தது.

ஓவியன் குறிப்பிட்ட இடத்தில் எந்த வண்ணத்தை உபயோகப்படுத்தியுள்ளானோ அதே வண்ணத்தை நாமும் நூல்பிசகாமல் தேரந்தெடுத்துக்கொள்ள Paintshop Pro வகை செய்கிறது. இந்தக் கட்டத்தில் நமக்கு மிக மிக உபயோகமான ஒரு நுட்பம் இது.

குறிப்பிட்ட வண்ணம் புசும் கருவியை மென்பொருளில் தேர்வுசெய்துவிட்டு "இதோ இங்கே தெரிகிறதே - அதே வண்ணத்தினால் தட்டை நிரப்பிக்கொள் !" என்று உத்தரவு போட்டுவிட்டால் போதும். அதே வண்ணத்தை நமது பிரஷில் கொண்டுவந்துவிடும்.

ஆனால் சிக்கல் வண்ணங்களை தீட்டுவதில் உள்ளது. மெதுவாக திட்டு திட்டாகப் பரவாமல் மூல ஓவியத்தின் வண்ணங்களில் கலந்து அந்த இடத்தில் இன்ன வண்ணம்தான் இருந்திருக்கமுடியும் என்று ஆராய்ந்து தேர்ந்து வேலையை முடித்தாக வேண்டும்.

கழுத்தின் சிறு பகுதியை முடிப்பதற்கே நமக்கு பலநாட்கள் பிடித்தன. முடிவுகள் எப்படி ?

படம்23 - சனத் குமாரன் கழுத்துப் பகுதி சீரமைப்பு


சனத்குமாரன் கையில் பிடித்திருந்த மலரைக் காணோமே என்று வருத்தப்படாதீர்கள் - அப்புறம் கசங்காமல் கையில் கொடுத்துவிடுவோம் !

இப்போது ஒரு வேடிக்கையான வேதனை.

அதாவது நாம் புதிதாக வண்ணங்கள் தீட்டிய பகுதி மூல ஓவியத்தோடு ஓரளவிற்கு ஒன்றி இருந்தாலும் மற்ற பகுதிகளைவிட மிகுந்த தெளிவுடன் காணப்படுவது சற்றே செயற்கையாகத் தோன்றுகிறது..... கிட்டத்தட்ட பாதிப்புக்களே இல்லாத பகுதியல்லவா ? அதனால்தான் ! இப்போதைக்கு இதனை சகித்துக் கொள்வோம்.

அடுத்து முகத்தை மீண்டும் ஒரு க்ளேஸப் ஷாட் போட்டுப் பார்த்ததில் முகத்தில் கரும்புள்ளிகளை சிலவற்றை கவனித்து "இது மூலஓவியத்தில் நிச்சயம் காட்டப்பட்டிருக்காது" என்கிற துணிவுடன் இதனைக் களைந்தோம். இந்தக் களைதலுக்கு நாம் உபயோகப்படுத்திய கருவிக்கு Spray brush என்று பெயர்.

படம்24 - சனத் குமாரன் முகத்தில் கரும்புள்ளிகள் நீக்கம்


சனத் குமாரனை மிக நீண்ட நேரம் கவனித்து விட்டோம். பெரியவருக்கு கோபம் வந்துவிடப் போகிறது - அவரை சற்று கவனிப்போம்.

நமது மூலப்படம் முனிவரைப் பொறுத்தவரையில் Flash பாதிப்பிற்கு முழுவதுமாக ஆளாகியுள்ளது. என்றாலும் முனிவரின் மொத்த உடலும் ஒருவித பச்சை வண்ணம் பூசப்பட்டிருப்பதால் சிறிதளவு முயற்சியில் இடுப்புக்கு மேற்பட்ட பகுதிகளை மீட்டு விட்டோம்.

இங்கும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதாவது குமாரனுக்கு பின்பற்றப்பட்ட சிக்கலான shading முறைகள் முனிவருக்கு காட்டப்படவில்லை.

இதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம் என்றாலும் நமக்கு ஒன்று தோன்றுகிறது.

இளஞ் சிவப்பு நிற மேனி ஒளி பட்டால் சில இடங்கள் மேலும் சிவந்து போகும். ஆனால் இளம்பச்சை நிறம் கொண்ட உடல் அவ்வாறு ஒளிக்குத் தக்கபடி அதிகம் நிறம் மாறாது - அதனால் இருக்கலாம். அல்லது இப்படியாக அமைந்தது ஓவியனின் கற்பனையாகக்கூட இருக்கலாம்.

படம்25 - சனகாதி முனிவர் மீட்டுருவாக்கம் - ஆரம்ப கட்டங்கள்


இந்தக் கட்டத்தில் ஓவியத்தின் பின்புலமாக அமைந்துள்ள கரும் பச்சை நிறத்தையும் விரிவாக்கி சமன்செய்து விட்டோம்.

இவ்வாறாக ஓவியத்தின் ஒவ்வொரு பகுதியையும் மீட்டுருவாக்கம் செய்ததில் மூல ஓவியத்தின் முழு அழகும் சிறிது சிறிதாக அறிமுகமாயிற்று. பல நாட்களுக்கு விரிந்த இந்தப் பணியின் அத்தனை செயல்பாடுகளையும் 1 மணி நேரப் பொழிவில் விரிவாக விளக்க முடியாமைக்கு வருந்துகிறோம்.

முக்கியமான சில நுட்பங்கள் மட்டுமே இங்கு கோடிகாட்டப்பட்டன.

அத்தனை மாறுதல்களுக்கும் உட்படுத்தி முழுமைபெற்ற ஓவியம் இதுதான் -

படம்26 - மூலப் படமும் முழுமை பெற்ற மீட்டுருவாக்கமும்
(முழுமையான படம் பொழிவில் காட்டப்பெறும் - இது மாதிரி மட்டுமே)


மேற்கூறிய அதேவகையான நுட்பங்களை தஞ்சையின் வேறுசில ஓவியங்களிலும் பிரயோகித்து முடிந்தவரை மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்.

நமது முயற்சியின் முடிவுகள் கீழே.

படம்27 - சீரமைக்கப்பட்ட சோழ ஓவியங்கள்


படம்28 - சீரமைக்கப்பட்ட சோழ ஓவியங்கள்


படம்29 - சீரமைக்கப்பட்ட சோழ ஓவியங்கள்


மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட படங்களை பதிப்பித்தல்

இவ்வாறு கணினியின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட படங்களை மீண்டும் அதே அளவில் காகிதத்தில் பதிப்பிக்க Large Format Printers என்று சொல்லப்படும் ஒரு வகை இயந்திரங்கள் பயன்படுகின்றன. இவற்றின் பரவலால பயன்பாட்டை நாம் விளம்பரத்துறையில் காண முடியும்.

முடிவுரை

நாம் நமது பொழிவின் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம். மேற்காட்டிய உதாரணங்கள் தொல்லோவியங்களின் பதிவாக்கத்திலும் மீளாக்கத்திலும் கணினி தொழில்நுட்பம் ஆற்கக்கூடிய உதவிகளை ஒரளவிற்கு தெளிவாகவே கோடிட்டுக் காட்டுகிறதல்லவா ?

ஓவியங்கள் மட்டுமல்லாது சிற்பங்களின் பாதிப்புக்களையும் மேற்கூறிய வழிமுறைகளில் களைந்து விடலாம்.

மாமல்லபுரம் அத்யந்த காமத்தின் சிற்பங்கள் பலவும் உப்பங்காற்றில் தத்தம் மூக்கை இழந்துவிட்டன. தொல்லியல்துறை முடிந்தவரை ஒட்டுவேலை செய்து வைத்துள்ள இந்த அற்புதச் சிற்பங்களுக்கு மீண்டும் மூக்கு வழங்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்தது.

படம்30 - சரிசெய்யப்பட்ட அத்யந்த காமச் சிற்பம்


மேற்கூறிய கட்டுரையின் மூலம் நாம் முன்வைக்கும் முக்கியச் செய்திகளாவன -

* தொல்லோவியங்களின் பதிவாக்கத்திற்கும் மீட்டுருவாக்கத்திற்கும் கணினி பயன்பாடு பலவகைகளிலும் பயனளிக்கும்

* மூல ஓவியங்களைப் படமெடுப்பதில் பலவித எச்சரிக்கைகள் தேவை - அவற்றில் சில இங்கு ஈண்டு விளக்கப்பட்டன

* மீட்டுருவாக்கத்தில் வரலாற்று வல்லுனர்களின் பங்களிப்பு மிக மிக அவசியம்

* மீட்டுருவாக்கத்தில் கற்பனையை அளவோடு செலுத்தி பண்டைய ஓவியர்களின் மனோதர்மத்தை நன்கு புரிந்துகொண்டு செயலாற்றுதல் அவசியம்.

* ஒரு ஓவியத்தின் மீட்டுருவாக்கத்தின்போது பல்வேறு இதர ஓவியங்களின் பாணி மற்றும் நுட்பங்களை கவனித்து அதனை மீட்டுருவாக்கத்தில் பயன்படுத்திக்கொள்ளுதல் அவசியம்.

தொல்லோவியங்களை காலமும் நம் கவனக்குறைவும் முற்றிலுமாகச் சிதைக்குமுன் மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நமது கலைச் செல்வங்களைக் காப்பாற்றுவோம்.

நன்றி - வணக்கம்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.