http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 7

இதழ் 7
[ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

பொங்கும் பெருங்கடலில் ஒரு கை அள்ளி....
காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி...
வரலாறு காத்திருக்கிறது....
ராஜராஜீசுவரம் கல்வெட்டுகள்
சண்டேஸ்வரர் திருமுன் கலைப்பிடிச்சுவர்
கட்டடக்கலை ஆய்வு - இராஜராஜீசுவரம்
பண்டைய ஓவியங்களின் மீட்டுருவாக்கம் - சிக்கல்களும் தீர்வுகளும்
ராஜராஜீசுவரம் பயணக்கட்டுரை
Raja Rajisvaram - Certain Revelations
The Saanthaaram Icons of Raajarajeeswaram - An Overview
இதழ் எண். 7 > கலையும் ஆய்வும்
வரலாறு காத்திருக்கிறது....
மு. நளினி
தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தும் கோயில். தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவு உச்சத்தை உலகுக்கெல்லாம் உணர்த்தி நிற்கும் அந்த இணையற்ற கற்றளியைச் சூழவிருக்கும் தனிச் சிறப்புகள் ஒன்றிரண்டல்ல. அது போலவே அந்தத் திருக்கோயிலைக் காலந்தோறும் தொடர்ந்துவரும் பொய்களுக்கும் கணக்கில்லை. 'ஜனநாதன்' என்று மக்கள் தலைவராய் விருதேற்ற தமிழ்நாட்டின் ஒரே வேந்தரான முதலாம் இராஜராஜரால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் கட்டுமான உன்னதத்தின் கலைச்சிறப்புகளைக் கண்முன் காட்சிகளாகக் காட்டுவதுதான் எவ்வளவு மகிழ்வளிக்கிறது!

கலைச் சிறப்புகள்

தமிழ்நாட்டில் இரண்டு திருவாயில்களைக் கொண்டெழுந்த முதற் கோயில் இராஜராஜீசுவரம்தான். கட்டப்பட்ட காலத்துக் கோபுரங்களோடு திகழும் முதற் சோழர் கோயிலும் இதுதான். திருவாயில்கள், கட்டியவர் பெயரேற்றுக் களிப்புற்றிருக்கும் முதல் கட்டுமானமும் இராஜராஜீசுவரம்தான். முதல் வாயில் கேரளாந்தகன் திருவாயில். இரண்டாம் வாயில் இராஜராஜன் திருவாயில்.

கோபுரச் சுவர்களில் இலக்கியப் பக்கங்களைச் சிற்பப் பதிவுகளாகப் பெற்ற ஒரே தமிழ்நாட்டுத் திருக்கோயில் இதுதான். இராஜராஜன் திருவாயிலின் வடபுறம் நக்கீரதேவரின் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பதிவாகியுள்ளது. மேற்கில் சேரமான் பெருமாளின் கயிலாய உலா காட்சிக்குக் கிடைக்கிறது.

இரண்டடுக்குத் திருச்சுற்று மாளிகை பெற்ற முதல் தமிழ்நாட்டுக் கோயில் இதுதான். இரண்டடுக்குகளின் மேல் மூன்றாம் அடுக்காய் நடைப்பரப்பும், பிடிச்சுவரும் கொண்ட ஒரே கோயிலும் இதுதான்.

சுற்று மாளிகையில் நான்கு வாயில்களும் கோபுரவாயிலாய் ஐந்தாவது நுழைவிடமும் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் கோயில் இதுதான்.

வளாகத்தின் எட்டுத் திசைகளிலும் அவ்வத் திசைக்காவலருக்கென இருதளத் திருமுன்கள் பெற்ற ஒரே கோயில்.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய திசைக்காவலர் சிற்பங்களைப் பெற்ற முதற் கோயில்; ஒரே கோயில்.

நெருக்குதல் இல்லாத பரந்தவெளியில் விமானமும் இடைநாழிகையும் மண்டபங்களுமாய் அமைந்த முதற்கோயில்.

215 அடி உயரக் கல் விமானம் தமிழ்நாட்டின் முதற் சாதனை. இன்றளவும் யாரும் தொடமுடியாமற் போன உயர் சாதனை.

இராஜசிம்மரின் சாந்தார அறிவை அகலப்படுத்தி, தொழில்நுட்ப நேர்த்தியுடன் ஈரடுக்குச் சாந்தாரம் பெற்ற முதல் விமானம்.

விமானத்திற்கு நாற்புறமும் வாயில் அமைத்து அதைச் சர்வதோபத்ரமாக்கிய சோழச் சாதனையாளர்களின் முதற் பதிவு. ஒரே பதிவு.

கருவறைச் சுவர்களின் இடைச் சுற்றில் முதல் தளத்தில் ஓவியங்களும் இரண்டாம் தளத்தில் கரணச் சிற்பங்களூம் பெற்ற ஒரே கோயில்.

விமான ஆர அலங்கரிப்பில் அதுநாள்வரையும் காட்டப்படாத அமைவுகள் பெற்ற முதற் கோயில்.

மிக உயரமான குடம்; கட்டியவர் அளித்ததாய்க் கல்வெட்டில் இடம்பெற்றது தமிழ்நாட்டிலேயே இது ஒன்றுதான்.

தமிழ்நாட்டின் பொள்ளல் வகை விமானங்களில் மிக உயரமானது.

கொடிக்கம்பமாய்ப் பூதமொன்றின் சிற்பத்தைக் கழுத்துப் பகுதியில் பெற்ற முதல் விமானம்.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய சண்டேசுவரர் திருமுன் இங்குதான் உள்ளது.

படிப்பதற்கும் பயில்வதற்கும் என்றே செதுக்கினாற் போல் கல்வெட்டுகள் கொண்ட ஒரே கோயில்.

50 மீட்டருக்கும் மேலான நீளத்திலமைந்த பல கல்வெட்டுகளைக் கொண்ட ஒரே கோயில்.

கட்டுமானப் பணியில் பங்களிப்புச் செய்தவர்களையெல்லாம் கல்வெட்டுகள் பெருமைப்படுத்தியிருக்கும் ஒரே கோயில்.

400க்கும் மேற்பட்ட ஆடற்பெண்களும் 216 தொழிலறிஞர்களும் பணியாற்றிய ஒரே தமிழ்நாட்டுக் கோயில்.

நாடெங்கிலும் இருந்து வந்த மெய்க்காவலர்களைப் பெற்றிருந்த முதற் பெருங்கோயில்.

தமிழ்நாட்டிலேயே மிகுதியான அளவில் செப்புத்திருமேனிகள் பெற்றிருந்த திருக்கோயில்.

தமிழ்நாட்டிலேயே மிகுதியான அளவில் விலைமதிப்பற்ற மணிகளையும் நகைகளையும் கவன்களையும் கொண்டிருந்த ஒரே கோயில்.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் பெருமைகள் வளர்ந்து கொண்டே வருவன. சொல்லச்சொல்லத் தொடர்ந்து உயர்வன. அங்கு எல்லாமே பெருமைதான், முதனிமைதான், புதியனதான்.

இனி, பொய்களைக் கற்பனைகளை, வெற்று ஊகங்களைப் பார்ப்போம்.


  • இராஜராஜீசுவரம் விமானத்தின் நிழல் கோயில் வளாகத்திற்குள் விழாது
    • தவறு. நாள்தோறும் விழுகிறது

  • இராஜராஜீசுவரம் விமானத்தின் உச்சித்தளம் ஒரே கல்லால் ஆனது. அதன் எடை 80 டன்.
    • தவறு. பல கற்களால் ஆனது.

  • இராஜராஜீசுவரம் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது. அதன் எடை 80 டன்.
    • தவறு. சிகரம் பல கற்களால் ஆனது

  • தனக்கிருந்த கருங்குஷ்டம் நோய் சரியாவதற்காகவே இராஜராஜர் கோயில் கட்டினார்.
    • தவறு. இராஜராஜருக்கு எந்த நோயும் இருந்ததாக வரலாறு கூறவில்லை

  • இராஜராஜரின் குரு கருவூர்த்தேவர் துபிய வெற்றிலை எச்சிலால் இக்கோயில் இலிங்கம் நிலைநின்றது.
    • தவறு. கருவூர்த் தேவருக்கும் இராஜராஜருக்கும் தொடர்பிருந்ததாக வரலாறு கூறவில்லை.

  • ஓவியக் காட்சியில் இராஜராஜரும் அவர் குரு கருவூர்த்தேவரும் உள்ளனர்.
    • தவறு. அக்காட்சியில் இருப்பவர்கள் அவர்கள் அல்லர். இராஜராஜருக்கும் கருவூர்த்தேவருக்குமோ, இராஜராஜருக்கும் கருவூராருக்குமோ தொடர்பிருந்ததாக எந்தத் தகுதியான சான்றும் யாராலும் இதுநாள்வரையிலும் முன்வைக்கப்படவில்லை

  • இராஜராஜீசுவரம் விமானம் பொன் தகடுகளால் போர்த்தப்பட்டிருந்தது.
    • தவறு. தகுதிவாய்ந்த சான்றுகள் ஏதும் இல்லை

  • உடையாளூரில் இராஜராஜருக்குப் பள்ளிப்படை உள்ளது.
    • தவறு. அங்கிருப்பது ஒரு கல்வெட்டு. அக்கல்வெட்டு இராஜராஜர் பெயரால் இருந்த கட்டமைப்புப் பற்றீ மட்டுமே கூறுகிறது

  • இராஜராஜீசுவரம் விமானத்திலிருந்து குதித்து இராஜராஜர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தவறு. சான்றுகள் இல்லை



இராஜராஜீசுவரம் கற்பனைகளை வளர்க்கும் கோயில். எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் இந்தக் கோயிலைப் பற்றிக் கதைக்கலாம். ஊக வளத்துடன் விழைவுபோல் கட்டுரைக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள்? அறிவியல் பின்புலத்தோடு, அழுத்தமான சான்றுகளின் மேல் மட்டுமே உண்மைகளை அல்லது உணர்பவைகளை மக்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஆய்வாளர்கள் கதைக்கலாமா? இந்தக் கோயிலின் தன்மை அப்படி. மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகாவிட்டால் ஆயிரமாயிரம் கதைகளை ஆய்வுகள் போலவே எழுத வைத்திடும் ஆற்றல் இந்தக் கோயில் வளாகச் சூழலுக்கு உண்டு. இப்படி வளரும் பொய்களையும் இவை மூடிமறைக்கும் உண்மைகளையும் காலம் இனம்பிரிக்கும் என்ற நம்பிக்கையோடு உரியவர்களை நோக்கி வரலாறு காத்திருக்கிறது.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.