http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 77
இதழ் 77 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
குடைவரைகள்
சிற்பங்கள் முகமண்டபத்தின் வட, தென்சுவர்களில் பக்கத்திற்கொரு காவலரும் மேற்குச் சுவரில் தென்புறத்தே பிள்ளையாரும் குடை வரைச் சிற்பங்களாக இடம்பெற்றுள்ளனர். பிள்ளையார் வலம்புரியாய், இலலிதாசனத்தில் உள்ள பிள்ளையாரின் தலையைக் கரண்டமகுடம் அணிசெய்கிறது. வலமுழங்காலின் மேலுள்ள வல முன் கையில் மோதகம். இட முன் கை தொடை மீது இருத்தப்பட்டுள்ளது. பின்கைகளில் வலப்புறம் உடைந்த தந்தம்; இடப்புறம் மலர்மொட்டு.17 உதரபந்தமும் முப்புரிநூலும் தோள், கை வளைகளும் அணிந்துள்ள பிள்ளையாரின் வலத் தந்தம் உடைந்துள்ளது. கோட்டத்தின் கீழே கோட்டுருவமாக இருக்கை காட்டப்பட்டுள்ளது. பிள்ளையாரின் தோற்ற அமைதி அவரைக் குடைவரைக் காலத்தவராகக் கொள்ள ஏற்புடையதாக இல்லை. ஆனால், அவரின் இருபுறத்தும் தொடரும் கல்வெட்டுகளின் அமைப்பு அவரை முற்சோழர் காலத்தவராகச் சுட்டுகின்றன. காவலர்கள் காவலர்கள் இருவருமே நெடிய திருமேனியர். இலேசாக ஒருக்கணித்த, ஆனால், பக்கத்தில் நிறுத்திய உருள்பெருந்தடியின்மீது கைகளைத் தாங்கலாக நிறுத்தியதால்18 சற்றே சரிந்த தோற்றத்தினர். நெற்றிக்கண்19 கொண்ட நேர்ப்பார்வையர். முகப்புகளோடமைந்த நெற்றிப்பட்டமும் தலைச்சக்கரமும்20 அணைத்த சடைமகுடத்தர்.21 வடக்கர் மகுடமுகப்பில் மண்டையோடு உள்ளது. மகுடம் மீறிய சடைப்புரிகள் அவர்தம் தோள்களில் படர்ந்துள்ளன. இருவருமே உதரபந்தம் அணிந்துள்ளபோதும், அடுத்தடுத்துத் தைக்கப்பெற்ற வட்ட மணிக்கற்களால் தெற்கரின் உதரபந்தம் கூடுதல் சிறப்புப் பெறுகிறது. அவர் முப்புரிநூலும் அணிந்துள்ளார். இருவருமே கீழ்ப்பகுதியில் சலங்கைகள் சேர்க்கப்பட்ட பூட்டுக்குண்டலங்கள்,22 கண்டிகை, சரப்பளி,23 தோள், கை வளைகள்,24 மோதிரம் அணிந்துள்ளனர். தெற்கர் வலக்கையை இடுப்பிலிருத்தி, இடக்கையை உருள்பெருந்தடியின்மீது தாங்கலாக நிறுத்தியுள்ளார். வடக்கர் இடக்கையைத் தொடைமீது வைத்து, வலக்கையை உருள்பெருந்தடியின்மீது இருத்தியுள்ளார். இருவர் தடிகளையும் படமெடுத்த பாம்பு சுற்றியுள்ளது. தெற்கரின் வலப்பாதம் சமத்திலும் இடப்பாதம் பார்சுவத்திலும் இருக்க, வடக்கரின் வலப்பாதம் பார்சுவமாகவும் இடப்பாதம் சமமாகவும் வைக்கப்பட்டுள்ளன. இருவர் இடையிலும் அரைக்கச்சை இருத்தும் கோவண ஆடையும் தோலாடையும் உள்ளன. இரண்டின் முடிச்சுத் தொங்கல்களும் தொடைகள்மீது தவழ்கின்றன. தெற்கரின் இடுப்பில் கூடுதலாக மேகலை ஒன்றும் உள்ளது. அதன் முகப்புப் பதக்கம் அழகிய வேலைப்பாடமைந்த கற்களால் அலங்கரிக்கப் பெற்றுள்ளது. கல்வெட்டுகள் குடுமியான்மலைக் குடைவரையிலிருந்து நாற்பத்தைந்து கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.25 அவற்றுள், முகப்புத் தூண்களில் இருபத்தாறும் முகமண்டபச் சுவர்களில் பதினெட்டும் அமைய, எஞ்சிய ஒன்று கருவறை வாயிலை அணைத்துள்ள வடக்கு அரைத்தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக் குடைவரைகளிலேயே குடைவரைப் பகுதிக்குள் எண்ணிக்கையில் மிகுதியான கல்வெட்டுகளைப் பெற்றிருக்கும் ஒரே குடைவரை குடுமியான்மலைக் குடைவரைதான். இந்நாற்பத்தைந்து கல்வெட்டுகளுள் நாற்பத்து நான்கின் பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள், மன்னர் பெயரற்ற பரகேசரிக் கல்வெட்டுகள் இருபத்திரண்டின் பாடங்கள் தொகுதி பத்தொன்பதிலும் மன்னர் பெயரற்ற இராஜகேசரிக் கல்வெட்டுகள் ஏழின் பாடங்கள் தொகுதி பதின்மூன்றிலும் பதிவாகியுள்ளன. இங்குள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டதாகக் கொள்ளத்தக்க பாண்டியர் கல்வெட்டுகள் இரண்டும் தொகுதி பதினான்கில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்றிற்கான அடிக்குறிப்புப் பகுதியில் மேலும் மூன்று கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. மதுரை கொண்ட பரகேசரிவர்மரான முதல் பராந்தகரின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டின் பாடம் தொகுதி மூன்றில் பதிவாகியுள்ளது. எட்டுக் கல்வெட்டுகளின் பாடங்கள் தொகுதி பதினேழில் வெளியிடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதியில் குடுமியான்மலைக் குடைவரை வளாகத்துள்ள முப்பத்தெட்டுக் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. அதிலுள்ள பரகேசரிவர்மரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளில் பதிவாகவில்லை. கல்வெட்டுப் பாடங்களில் புதுக்கோட்டைத் தொகுதிப் பதிவிற்கும் தென்னிந்தியத் தொகுதிப் பதிவிற்கும் இடையே குறிப்பிடத்தக்க பாடவேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் சரியானவற்றை அறியக் கருதிக் குடைவரை வளாகத்திலுள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும் முழுமையாகப் படித்துப் படியெடுத்த நிலையில், இரண்டு பதிவுகளிலுமே பரவலாகப் பாடப் பிழைகளும் விடுபட்ட வரிகளும் இருப்பதை அறியமுடிந்தது. கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருக்கும் இடங்களைச் சுட்டுவதிலும் இரண்டு பதிவுகளும் தடம் மாறியுள்ளன. குடைவரை வளாகத்துள்ள கல்வெட்டுகளுள் இருபத்து மூன்று கல்வெட்டுகள் முகப்பு முழுத்தூண்களின் நான்கு முகங்களிலுமாய் வெட்டப்பட்டுள்ளன. தெற்குத்தூண் பன்னிரண்டு கல்வெட்டுகளைக் கொண்டிருக்க, வடக்குத்தூண் பதினொரு கல்வெட்டுகளைப் பெற்றுள்ளது. அவற்றுள் மூன்று தவிர ஏனைய இருபது கல்வெட்டுகளும் சோழர்களுடையவை. முகப்பு அரைத்தூண்களுள் தெற்கு அரைத்தூண் இரண்டு கல்வெட்டுகளும் வடக்கு அரைத்தூண் ஒரு கல்வெட்டும் பெற்றுள்ளன. முகமண்டப மேற்குச் சுவரில் கருவறை வாயிலின் வலப்புறம் ஏழு கல்வெட்டுகளும் இடப்புறம் ஒன்பது கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அவற்றுள், ஒன்று பல்லவ கிரந்தத்தில் அமைந்துள்ளது. ஏனைய பதினைந்தும் சோழர் கல்வெட்டுகள். முகமண்டபத்தின் வட, தென்சுவர்களில் பக்கத்திற்கொன்றாய் இரண்டு கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. கருவறை வாயிலை ஒட்டியுள்ள வடபுற அரைத்தூண் பரகேசரிவர்மரின் கல்வெட்டைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக் குடைவரைகளிலேயே முகப்புத்தூண்களில் இருபத்தாறு கல்வெட்டுகளைப் பெற்றிருக்கும் ஒரே குடைவரை குடுமியான்மலைக் குடைவரைதான். பல்லவர், பாண்டியர், சோழர் காலக் கல்வெட்டுகள் இடம்பெற்றிருக்கும் மிகச் சில தமிழ்நாட்டுக் குடைவரைகளுள் இதுவும் ஒன்று. எண்ணிக்கையில் அதிகமான முற்சோழர் கல்வெட்டுகளைக் கொண்டிலங்கும் ஒரே தமிழ்நாட்டுக் குடைவரை என்ற பெருமையையும் குடுமியான்மலைக் குடைவரையே பெறுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில், முப்பத்து மூன்று பதிவுகள் விளக்கறம் பேசுவதால், அந்த வகையிலும், அதிக அளவிலான விளக்கறக் கல்வெட்டுகள் கொண்டொளிரும் ஒரே தமிழ் நாட்டுக் குடைவரையாய்க் குடுமியான்மலைக் குடைவரை பொலிகிறது. மலைநாட்டுப் பெருமக்களின் கொடைகளைப் பதிவுசெய்துள்ள மிகச் சில தமிழ்நாட்டுக் குடைவரைகளுள் ஒன்றென்ற பெருமையும் இதற்கு வாய்த்துள்ளது. இங்கு நாற்பத்தைந்து கல்வெட்டுகள் இருந்தபோதும் குடைவரை இறைவனைக் குறித்துப் பேசுவன ஐந்தே.26 எஞ்சியவை அனைத்தும் தற்போது குடுமிநாதர் என்றழைக்கப்படும் திருநலக்குன்றத்துப் பெருமானடிகளுக்கு அளிக்கப்பட்ட கொடைகளையே சுட்டுகின்றன.27 அவ்வகையிலும் இக்குடைவரை முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் பெறுவது கண்கூடு. பரிவாதினி தவிர்த்த பிற குடைவரைக் கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டவையான முற்பாண்டியர் கல்வெட்டுகள் திருநலக்குன்றத்துப் பெருமானடிகளுக்கு வழங்கப்பட்ட கொடைகளைக் குறித்துப் பேசுவதால், அவர்தம் காலத்திருந்தே கட்டுமானக் கோயிலும் இங்கு இருந்ததாகக் கொள்ளலாம். கோயில் செங்கல் தளியாக இருந்தமையால் அதற்குரிய கல்வெட்டுகளைக் குடைவரையில் பொறித்தனர் போலும். குடைவரைக்கு முன்னுள்ள மண்டபத்தின் வெளிச்சுவர்கள், குடைவரையின் இருபுறத்துமுள்ள பாறைச்சரிவுகள், சவுந்தர நாயகி, குடுமிநாதர், அகிலாண்டேசுவரி வளாகங்கள், சுற்றுச் சுவர், மடைப்பள்ளி, கோபுரக் கீழ்ப்பகுதிகள் எனக் கோயில் வளாகத்தில் கல்வெட்டுகள் இல்லாத இடமே இல்லை எனலாம். குடைவரை அமைந்துள்ள குன்றிலும் கல்வெட்டுகள் வெட்டப் பட்டுள்ளன. படுக்கைகளும் பிராமி கல்வெட்டும் குடுமியான்மலைக் குன்றின் தென்மேற்குப் பகுதியிலுள்ள இயற்கையான குகைத்தளத்தில் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. ஆழமாகவும் நீளக்குறைவாகவும் உள்ள இப்படுக்கைகளுக்குத் தலையணை அமைப்பும் உள்ளது. ஏறத்தாழ ஒரே அளவிலான மூன்று படுக்கைகள் தென்வடலாக அடுத்தடுத்த நிலையிலும் சற்றுப் பெரிய அளவினதான படுக்கை கிழக்கு மேற்காகவும் காணப்படுகின்றன. அகலமாக உள்ள பெரிய படுக்கையின் தலையணைப் பகுதியில் பழந்தமிழ்க் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. 'நாழன் கொற்றந்தய் பளிய்' என்று படிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு, நாழலைச் சேர்ந்த கொற்றந்தை செய்வித்த படுக்கை எனும் பொருளைத் தரும். இக்கல்வெட்டைக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டினதாக ஐராவதம் மகாதேவனும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டினதாக தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையினரும் அடையாளப்படுத்தியுள்ளனர்.28 மலை உச்சியில் முருகன் கோயிலும் பாறையில் பிள்ளையார் சிற்பமும் உள்ளன. குடைவரை தவிர்த்த குடுமியான்மலைக் கோயில் வளாகத்திருந்தும் குன்றின் பிற பகுதிகளிலிருந்தும் படியெடுக்கப்பட்டனவாக எண்பத்தொரு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் இடம்பெறாத சில கல்வெட்டுகளைத் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் பெற்றுள்ளன. களஆய்வின்போது இதுநாள்வரை படியெடுக்கப்படாத பல கல்வெட்டுகளைக் கண்டறியமுடிந்தது. அவற்றுள் பெரும்பான்மையன தொடர்ந்து படிக்கமுடியாத அளவிற்கு உயரமான இடங்களில் உள்ளன.29 குடுமியான்மலைக் குன்று, கோயில் வளாகம் இவற்றில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் பழைமையானது குகைத்தளத்திலுள்ள பிராமி கல்வெட்டாகும். குடைவரைக்குத் தென்புறமுள்ள பாறையில் காணப்படும் இசைக்கல்வெட்டுகளும் குடைவரைக்குள் உள்ள பரிவாதினிக் கல்வெட்டும் கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவற்றைப் பற்றிப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளபோதும் இன்றுவரை அவற்றுக்குரிய அரசரைச் சரியான சான்றுகளுடன் அடையாளப்படுத்தக் கூடவில்லை. குடுமியான்மலைக் கல்வெட்டுகள் தரும் தரவுகளைப் பல்வேறு தலைப்புகளின் கீழ்த் தொகுத்தபோது அப்பகுதியின் வரலாற்றை ஓரளவிற்கு அறியமுடிந்தது. திருநலக்குன்றம் குடுமியான்மலை என்று இப்போது அறியப்படும் இவ்வூர் தொடக்கக் காலத்தில் குன்றியூர் நாட்டில் அமைந்திருந்த திருநலக்குன்றமென்றும் திருநிலக்குன்றமென்றும் அழைக்கப்பட்டது. இரண்டு பெயர்களுமே ஏறத்தாழச் சமஅளவில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளமையால், எப்பெயர் சரியானது என்பதை அறியக்கூடவில்லை. குன்றியூர் நாட்டை உள்ளடக்கியிருந்த கோனாடு பிற்சோழர் கல்வெட்டுகளில் தொடக்கத்தில் இரட்டபாடி கொண்ட சோழ வளநாடாகவும் பின்னர் கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாடாகவும் அறியப்பட்டது. சதாசிவராயர் (கி. பி. 1551) கல்வெட்டில் உறத்தூர்க் கூற்றத்துக் குன்றுசூழ் நாட்டுத் திருநலக்குன்றம் என்று இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது.30 இவ்உறத்தூர்க் கூற்றமும் கோனாட்டின் கீழிருந்த நாடாகும். இரண்டாம் இராஜராஜர் காலத்தில் சிகாநல்லூர் என்ற பெயரில் குன்றியூர் நாட்டு ஊர் ஒன்று விளங்கியமையைக் கல்வெட்டுகள் வழி அறிகிறோம். அம்மன்னரின் பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, 'இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு குன்றியூர் நாட்டு திருநலக்குன்றம் உடையாருக்கு இந்நாட்டு சிகாநல்லூர் முனையில் ஆதித்தன்' என்று குறிப்பதன் வழித் திருநலக்குன்றம், சிகாநல்லூர் எனும் இரண்டு ஊர்களும் இருவேறு ஊர்களே என்பதைத் தெளிவுபடுத்துகிறது.31 ஆனால், சொ. சாந்தலிங்கம் இரண்டாம் இராஜராஜன் காலத்தில் திருநலக்குன்றமே சிகாநல்லூர் என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.32 வீரபாண்டியரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளிலும் (கி. பி. 1266) சிகாநல்லூர், திருநலக்குன்றம் எனும் இரண்டு பெயர்களும் இருவேறு ஊர்களைக் குறிப்பனவாய் இடம்பெற்றுள்ளமை எண்ணத்தக்கது.33 குடுமியான்மலை என்ற பெயர் ஏறத்தாழக் கி. பி. 1616ல் வழக்கில் வரத் தொடங்கியதாகக் கொள்ளலாம்.34 இறைவன் குடுமிநாதசாமி, குடுமியார் நயினார் என அழைக்கப்பட்டார். வளநாடு-நாடு கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாடு, இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு, பாண்டி குலாசனி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு, சத்திரிய சிகா மணி வளநாடு, அருமொழிதேவ வளநாடு, சோழ பாண்டிய வளநாடு எனும் வளநாடுகளின் பெயர்களையும் மலை மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் எனும் மண்டலப் பிரிவுகளையும் தரும் குடுமியான்மலைக் கல்வெட்டுகளால் வெளிச்சத்திற்கு வரும் இருபது நாட்டுப் பிரிவுகளுள் திருநலக்குன்றம் இருந்த குன்றியூர் நாடும் ஒன்றாகும். அது குன்று சூழ் நாடு என்றும் அறியப்பட்டது. பன்றியூர் நாடு, கூடலூர் நாடு, நல்லூர் நாடு, முனைப்பாடி நாடு, இடையள நாடு, பெருவாயில் நாடு, நென்மலி நாடு, கான நாடு, வல்லநாடு, தையூர்நாடு, எயில்நாடு, திருவழுந்தூர் நாடு, குறுமறைநாடு, உறத்தூர்க் கூற்றம், உறையூர்க் கூற்றம், பட்டணக் கூற்றம், அண்ணல்வாயில் கூற்றம், ஒல்லையூர்க் கூற்றம் என்பன பிற நாட்டுப் பிரிவுகளாகும். மலை மண்டலம், மலைநாடு எனக் கேரளம் அழைக்கப்பட்டது. ஊர்கள் திருநலக்குன்றத்தோடு சேர்த்து எழுபத்தேழு ஊர்ப்பெயர்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் குடியெனும் பின்னொட்டோடு முடியும் ஊர்ப்பெயர்கள் பதினொன்று. அவற்றுள் கூத்தக்குடி, பெருங்கூற்றக்குடி, முனைநரியார் மருதங்குடி இம்மூன்றும் குன்றியூர் நாட்டிலும் புதுக்குடி, வேரியன்குடி இவை உறத்தூர்க் கூற்றத்திலும் இருந்தன. நெரிஞ்சிக்குடி ஒல்லையூர்க் கூற்றத்தில் இணைந்திருந்தது. இலுப்பைக்குடி, புள்ளங்குடி, மண்ணைக்குடி, அந்தன்குடி இவை எந்த நாட்டுப் பிரிவின் கீழ் இணைந்திருந்தன என்பதை அறியக்கூடவில்லை. காப்புக்குடி பிரமதேயமாகத் திகழ்ந்தது.35 ஊர் எனும் பின்னொட்டுக் கொண்டு முடியும் ஊர்ப் பெயர்கள் இருபத்தைந்து. அவற்றுள் நான்கெழுத்துப் பெயர்கள் பதினொன்று. ஐந்தெழுத்துப் பெயர்கள் எட்டு. கொடும்பாளூர், சிறுசுனையூர், பரம்பையூர், கொடுங்கோளூர், இடையாற்றூர் எனும் ஐந்தும் ஆறெழுத்துப் பெயர்களாக அமைய, பெரும் பற்றப்புலியூர் பதினொரு எழுத்துக்கள் பெற்ற ஒரே ஊராகக் காட்சிதருகிறது. நல்லூர் எனும் பின்னொட்டுடன் ஏழு ஊர்ப்பெயர்கள் அமைய, மங்கலம் எனும் பின்னொட்டுடன் ஆறு ஊர்ப்பெயர்கள் உள்ளன. அவற்றுள் அதியரையமங்கலம் முனைப்பாடி நாட்டில் இணைந்திருந்தது. புரம் என்ற பின்னொட்டுடன் இராஜராஜபுரமும் வேதைக்கோமபுரமும் அமைந்தன. பல்வேறு பின்னொட்டுகளோடு முடியும் இருபத்தாறு ஊர்ப்பெயர்களுள் இஞ்சல் இடையள நாட்டிலும் புலிவலம் உறையூர்க் கூற்றத்திலும் நீர்ப்பழனி உறத்தூர்க் கூற்றத்திலும் நாகன்குடிக்காடு நென்மலி நாட்டிலும் ஆலஞ்சேரி மலைநாட்டிலும் சேந்தனேரி குறுமறை நாட்டிலும் அமைந்திருந்தன. அரச மரபுகள் முற்பாண்டியர் காலச் சிற்றரசராகக் கொள்ளத்தக்க அதளையூர் நாடாள்வார் கடம்பன் எட்டி, பெரும்பிடுகு முத்தரையரின் மனைவி நங்கையார் நங்கை தயாநிதியார், முத்தரையர் மகளார் செம்பியன் இருக்குவேள் தேவியார் வரகுணனாட்டிப் பெருமாள், செம்பியன் இருக்குவேளின் மற்றொரு தேவியார் நங்கை நளதேவியார், மதுராந்தக இருக்குவேளான ஆதித்தன் விக்கிரமகேசரி, சோழப் பேரரசர் முதற் பராந்தகரின் மகனான இராஜாதித்தர் இவர்கள் நலக்குன்ற இறைவனுக்குப் படையலிடவும் அவர் திருமுன் விளக்கேற்றவும் கொடையளித்துள்ளனர். மகிமாலைய இருக்குவேள் அலுவலர் ஒருவரும் இக்கோயிலின்பால் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். முத்தரையருக்கும் இருக்குவேளிருக்கும் இடையே மணவினை உறவுகள் இருந்தமையை இங்குள்ள கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆதித்தர், முதலாம் பராந்தகர், முதலாம் இராஜேந்திரர்,36 முதலாம் குலோத்துங்கர், இரண்டாம் இராஜராஜர், மூன்றாம் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகள் இங்குள்ளன. இரண்டாம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த முதலாம் மாறவர்மர் சுந்தர பாண்டியர், இரண்டாம் சடையவர்மர் வீரபாண்டியர், முதலாம் மாறவர்மர் குலசேகரர், சடையவர்மர் சுந்தபாண்டியர் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் பலவாக உள்ளன. இரண்டு கல்வெட்டுகள் ஈழமும் கொங்கும் சோழ மண்டலமும் கொண்டு வல்லானை வென்று பெரும்பற்றப்புலியூரில் வீராபிஷேகம், விஜயாபிஷேகம் செய்துகொண்டவராக வீரபாண்டியரைப் பெருமைப்படுத்துகின்றன. கிருஷ்ணதேவராயர், சதாசிவராயர், நாயக்கர்கள், பல்லவராயர்கள், தொண்டைமான்கள் காலக் கல்வெட்டுகளோடு மன்னர் பெயரற்ற கல்வெட்டுகளும் இங்குள்ளன. அரசு அலுவலர்கள் முதலாம் இராஜேந்திரர் கல்வெட்டால் அவர் காலத் திருமந்திர ஓலைநாயகம், உடன்கூட்டத்தார், புரவுவரி அலுவலர்கள் பெயர்களை அறியமுடிகிறது. இரண்டாம் இராஜராஜரின் கல்வெட்டு, புரவுவரி ஸ்ரீகரணநாயகங்களாகப் பழையனூர் உடையான், தொண்டைமான் பெயர்களையும் புரவுவரி ஸ்ரீகரணத்து முகவெட்டிகளாக நெற்குன்றம் உடையான், பகடமங்கலம் உடையான் பெயர்களையும் தருகிறது. மூன்றாம் குலோத்துங்கரின் கல்வெட்டு ஒன்றால் இராஜேந்திர சோழ மூவேந்த வேளார் திருமந்திர ஓலைநாயகமாகவும் வில்லவராயன், சித்தராயன், வாணாதராயன், தொண்டைமான் ஆகியோர் திருவாய்க்கேள்விகளாகவும் வெளிப்படுகின்றனர். முதலாம் மாறவர்மர் சுந்தரபாண்டியர் காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த பெருமைக்குரிய சிற்றரசராக ஆற்றூருடையார் பொன்னன் காங்கேயராயரைச் சில கல்வெட்டுகள் அறிமுகப்படுத்துகின்றன. அவர் காலத்தில் குடுமியான்மலைக் கோயில் பல சீரமைப்புகளுக்கு ஆளானது. அப்பெருமகனாரின் பெயரில் இங்கு மண்டபமொன்று அமைந்தது. சுந்தரபாண்டியர் கால நாட்டுக் கணக்காகத் துக்கினான் நக்கனும் இலுப்பைக்குடி ஊர்க் கணக்காகச் சேந்தன் வனப் பெருமாளும் நலக்குன்றம் ஊர்க் கணக்காக ஈசான தேவனான பெரியநாட்டு வேளானும் சிகாநல்லூர் ஊர்க் கணக்காகச் சிராப்பள்ளி உடையானும் அறிமுகமாகின்றனர். வரிகள் திருநலக்குன்றம் முற்பாண்டியர் காலத்திருந்தே தேவதான ஊராக இருந்தது. மதுராந்தக இருக்குவேளான ஆதித்தன் விக்கிரமகேசரி இக்கோயிலுக்களித்த முனைநரியார் மருதங் குடியும் தேவதானமாக அமைந்தது. தட்டார்ப்பாட்டம், தறி, தரகு, கடமை, கற்பூரவிலை, காரியஆராய்ச்சி, பஞ்சுபீலி, சந்தி விக்ரகப்பேறு, இனவரி, ஈழம் புஞ்சை, செக்கிறை, பொன்வரி, இலாஞ்சினைப்பேறு, அந்தராயம், அதரவினியோகம், அச்சுவரி, வெட்டிப்பாட்டம், இடைவரி, மருவாதி, நத்தரேகை, ஏர்க்கடமை, காணிக்கை, ஆள்அமைஞ்சி, உபையம், நெல்முதல், பொன்முதல் எனும் வரிகள் ஊர்களில் தண்டப்பட்டன. மக்கட்பிரிவுகள் - பெயர்கள் திருநலக்குன்றம் ஊராரின் ஆட்சியில் செழித்திருந்தது. மக்கட் பிரிவுகளுள் அந்தணர், வேளாளர், செட்டியார், வேட்கோவர், இடையர், மன்றாடியர் ஆகியோர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளனர். மக்கள் பெயர்களுள் வடமொழி கலவாத் தமிழ்ப் பெயர்கள் குறைவாகவே இருந்தன. காடுகாள், புகழன், சேந்தன், எச்சில் மண்டை, துணைவன், நண்பன், கடம்பன், மாணிக்கம், தாழி ஆரூரன், புல்லி, கண்ணங்காடன், நங்கை, தழுவக் குழைந்தான் முறையடிப் பாடுவான், அறம் காத்தான், சிறுத்தொண்டன், சிலம்பன், அம்மைச்சி, திருமன்று பொலிய நின்றான் இவை குறிப்பிடத்தக்கன. வேளாண்மை நீர்நிலம், நன்செய், புன்செய், வயக்கல் என நிலங்கள் அவற்றின் பாசனவசதி, விளைதிறன் இவற்றிற்கேற்பப் பெயரிடப்பட்டிருந்தன. விளைந்தறியாத நிலத்துண்டுகள் மனித உழைப் பால் விளைநிலமாக்கப்பட்டபோது வயக்கல் என்று அழைக்கப்பட்டன. தென்வயக்கல், மூவரைய வயக்கல், திருஉடையான் வயக்கல், மருதங்குடி வயக்கல், கோதை வயக்கல், உடையான் வயக்கல், காவன் வயக்கல், திருவேகம்பம் உடையான் வயக்கல், சேந்தி வயக்கல், தேவடி வயக்கல், நாச்சி வயக்கல், பிராந்தன் வயக்கல், உத்தமன் வயக்கல், ஆதித்தன் வயக்கல், கோதண்ட வயக்கல், நல்கால்நிலை வயக்கல், காவாநிலை வயக்கல் என்பன அவற்றுள் சில. விளைநிலங்களும் பெயரேற்றிருந்தன. முக்குளத்து வயல், கோடனேரி வயல் என நீர்நிலை சார்ந்தும் அரையர் தோட்டம், துலுக்கராயன் குழி, எரியான் செய், கைக்கொட்டேரியான் குடிக்காடு எனத் தனியர் சார்ந்தும் சிவன் புன்செய், செந்தாமரைக் கண்ணன் வயல், கருவூர்த்தேவர் திருமெழுக்குப் பற்று என்று இறை, அடியார் சார்ந்தும் தாமரைச் செய், வன்னிச்செய் என விளைந்தன சார்ந்தும் காவிதி வயல், நாவிசன் பற்று, அம்பனவர் நிலம், கொல்லன் இறையிலி எனத் தொழிலர் சார்ந்தும் பெயர்கள் அமைந்திருந்தன. மணித்தோட்டம், அலைவயல், அகவயல், பிராணோபகாரி செய், நெடும்பாட்டுச் செய், களிக்குண்டு, பொன்மதி வேங்கை, தான்றி நெடுங்கண் எனப் பொதுப் பெயர்களிலும் நிலங்கள் இருந்தன. வளமற்ற நிலம் களர் என்றழைக்கப்பட்டது. 'தாளம் பெற்றான் குடிகாடு' என்ற நிலப்பெயர், ஞானசம்பந்தர் கோலக் காவில் இறைவனிடமிருந்து பொற்றாளங்கள் பெற்றமையை நினைவூட்டுமாறு அமைந்துள்ளது. நீர்ப்பாசனம் ஏரிகளும் குளங்களுமே பெரும்பான்மையான நிலத் துண்டுகளுக்குப் பாசனமளித்தபோதும் கிணற்றுப் பாசனமும் பயன்பாட்டில் இருந்தது. அதியரையமங்கலத்துக் குளம், குறிச்சிக் குளம், மேனிலக் குளம், மங்கலத்துக் குளம், சுந்தரசோழன் குளம், புதுக்குளம், சுடுகாட்டுக் குளம், உவச்சர் குளம், சூற்றிக்குளம், பெரியகுளம், முக்குளம், தட்டான்குளம், மூவரையர் குளம், ஊறல்குளம், தேவனார் குளம், கச்சாக்குளம் எனும் குளங்களும் கோடனேரி, சேந்தனேரி, பெற்றான்ஏரி, பிடாரன் ஏரி, வேளான் ஏரி எனும் ஏரிகளும் வெள்ளாற்றுப் போக்கும் இப்பகுதி நிலங்களுக்குப் பாசனம் அளித்ததாகக் கூறலாம். இவை தவிர, ஆங்காங்கிருந்த ஓடைகளும் ஒழுக்குகளும் பாசனத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. அவந்தியகோவப் பல்லவரையருக்கு ஊரார் விற்ற நிலத்துண்டு, குமிழியால் நீர்ப் பாய்ந்து நெல் விளையும் ஊர் வயக்கலாகக் குறிக்கப்படுகிறது.37 வாய்த்தலை, ஆரியன் மடைப்போக்கு, நடுவின்மடை வாய்க்கால் எனும் சொல்லாட்சிகளும் பெரியகுளத்தில் பெருங் குமிழி முறை விழுக்காட்டில் நான்கு நாழிகை நீர் விற்பனை செய்யப்பட்ட நிலையும் இப்பகுதி மக்களின் நீர் மேலாண்மைத் திறம் கூறுகின்றன. குளங்கள் கரை உடைந்து நீர் வற்றிய காலங்களிலும் பாசனமின்றி நிலங்கள் பாழ்பட்ட சூழல்களிலும் அவை அருளாளர்களால் விலைக்குப் பெறப்பட்டுச் சீர்செய்யப்பட்டமையைச் சில கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. திருநலக்குன்றத்து இறைவனின் திருநாமத்துக்காணியாக நலக்குன்றத்து ஊராரிடமிருந்த தட்டான்குளமும் அது சார்ந்த வயலும் குளம் கரையழிந்து, வயல் வரம்பழிந்து, காடாகி நெடுங் காலம் பாழாய் இருந்தன. இந்நிலை கண்டு வருந்திய கோயில் சைவாச்சாரியார்களான திருவர்த்தசாமம் உடையார் சுப்பிரமணியபட்டரும் திருவர்த்தசாமம் சிகாஅழகியானான நம்பு செய்வார்பட்டரும் அன்றாடு நற்காசு முப்பதிற்கு அவற்றைக் குடிநீங்காத் தேவதானமாக விலைக்கு வாங்கிச் சீர்செய்தனர். விளைவில் கோயில் பயன்பெற்றது.38 அது போலவே, நலக்குன்றத்து ஊராரின் சாமை வயலும் அது சார்ந்த குளமும் பழுதுற்றன. குளம் உடைகுளமாக, நீர்நிலம் பருமரக்காடானது. நெடுநாள் பயிர் ஏறாது போன நிலமான அதை இருபத்தைந்து வராகன் விலைக்குப் பெற்ற கூத்தன் சொக்கன் குளத்தைச் சரிசெய்து நிலத்தை உழுது விளைச்சல் காட்டினார்.39 இறைவனுக்குரிய கடமை, கீழிறை தரஇயலாத அளவிற்கு விசலூர் நிலங்கள் பாசனமின்றிப் பாழ்பட்டுப் பெருமரக் காடாயின. இந்நிலை மாற்றக் கருதிய இரண்டு கரை நாட்டார் நிலத்திற்குப் பாசனவசதி செய்து தந்து, ஊராரை உழுது இறைவனுக்குரிய வரியினங்களைச் செலுத்த அறிவுறுத்தினர். ஊரவர் முயன்றும் முடியாது போக, நிலம் அறுபத்து நான்காயிரம் காசுக்கு உழவு முற்றூட்டாக விற்கப்பட்டது. அத்தொகையில் ஐம்பதாயிரம் காசு திருக்கற்றளி செய்ய ஒதுக்கப்பட்டது. நான்காயிரம் காசு விசலூர் ஊராருக்கான பரிசட்ட முதலாகவும் பத்தாயிரம் காசு நாட்டாருக்கான பரிசட்ட முதலாகவும் கொள்ளப்பட்டன.40 பயிர்கள் ஐப்பசி, ஆடிக் குறுவைகள், கோடைப் போகம் எனப் பல பருவ விளைவுகள் மேற்கொள்ளப்பட்டு, நெல், கரும்பு, இஞ்சி, மஞ்சள், வெற்றிலை, வரகு, எள், தினை பயிரிடப்பட்டன. விளைதிறன், பாசனவசதி கொண்டு நிலங்கள் தரம் பிரிக்கப்பட்டு வரி நிர்ணயிக்கப்பட்டது. நிலமளக்கப் பதினாறடிக் கோல் பயன்பட்டது. அதனால், அளக்கப்பட்ட 256 குழி நிலம் ஒரு மாவாக அமைந்தது. நாட்டுக்கால், நிலக்கடக்கால், சூலக்கால், கேரளாந்தகன் மரக்கால் என்பன நெல்லளக்கப் பயன்பட்டன. நிலவிற்பனை குடுமியான்மலைக் கல்வெட்டுகளில் சில, நிலவிற்பனைப் பதிவேடுகளாக உள்ளன. சிகாநல்லூரைச் சேர்ந்த எழுவர் இரண்டரைப் பழங்காசுகளுக்குப் புன்செய் நிலத்துண்டு ஒன்றை நம்பி பொன்னம்பலக் கூத்தனுக்கு விற்றனர்.41 வயலக நாட்டு அரசு கண்ட தேவன் அரசகள் அஞ்சப் பிறந்தானான அயிலையராயர் மூன்று கிணறுகள் உட்பட்ட கரந்தூர் வயலைக் கோயிலுக்கு விற்பனை செய்தார்.42 மேல்மணநல்லூர் ஊரார் திருநலக்குன்றத்துத் தேவரடியார்கள் பெரியநாச்சி துக்கைக்கும் உமையாழ்வி பெரியநாச்சிக்கும் விக்கிரம சோழீசுவரமுடையாரின் தேவதான நிலத்தில் ஆளுக்கு ஐந்து மா நிலம் விற்றனர். துக்கைக்கு விற்கப்பட்ட நிலத்தின் விலை புதுக்காசு 3,200. உமையாழ்வி நிலத்தின் விலை பழங்காசு 20.43 அதே ஊரார் குடிக்காடு ஒன்றை 25 அன்றாடு நற்காசுகளுக்கு வேளான் கோதண்டனுக்கு விற்றனர். அந்நிலம் விக்கிரம சோழீசுவரத்து இறைவனுக்கு அளிப்பதற்காக வாங்கப்பட்டது.44 வீரபாண்டியரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் நலக்குன்ற இறைவனின் திருக்கற்றளி சீர்குலைந்தமையாலும் அக்குலைவை நேர் செய்யப் பொருள் இல்லாமையாலும் கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு நாட்டாரும் கோயில் தானத்தாரும் இணைந்து இறைவன் திருநாமத்துக் காணியாக விளங்கிய இலுப்பைக்குடிக் குளம், வயல் இவற்றுள் ஒருபகுதியை நலக்குன்றத்துத் தேவரடியார் துக்கையாண்டாள் மகள் நாச்சிக்கு 73, 300 அன்றாடு நற்புதுக்காசுகளுக்கு விற்றனர். இந்நிலத்திற்கான திருவாசலால் போந்த கடமை, கீழிறை இவற்றைக் கோயிலுக்கு இறுக்கும் பொறுப்பு நாச்சியைச் சேர்ந்தது. ஒரு மா நிலத்துக்குக் கடமை பத்துக் கலம் நெல்லாகவும் கீழிறை பதினைந்து காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டன. அதற்கான ஆவணத்தில் நாட்டார் சிலரும் கோயில் தானத்தாரும் கையெழுத்திட்டுள்ளனர்.45 நாச்சியாரிடமிருந்து தொகையைப் பெற்றுக் கோயில் பண்டாரத்தில் சேர்த்தமைக்குச் சான்றாக நாட்டாரும் தானத்தாரும் கையெழுத்திட்டு நாச்சியாரிடம் அளித்த ஓலை, 'கையீடு' என்ற அழகிய தமிழ்ச் சொல்லால் மற்றொரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 'கிழிப்புணைத் தீட்டு' என்றும் குறிக்கப்படும் இவ்ஆவணம் நாட்டாரையும் தானத்தாரையும் கிழிப்புணையாக (பணமுடிப்பிற்குப் பொறுப்பாளர்கள்) நின்றவர்களாக அடையாளப்படுத்துகிறது.46 கஞ்சமலைத் தேவன் பெரிய உடையானான தென்னவ தரையன் புள்ளங்குடி ஊராரிடம் சூற்றிக்குளம், வயல், பெரிய குளத்தில் பெருங்குமிழி முறை விழுக்காட்டில் நான்கு நாழிகை நீர் இவற்றைச் செண்பகக் குளிகைப் பணம் 150க்குப் பெற்றார். அந்நிலம் குடிநீங்காத் திருநந்தாவிளக்குப்புறமாக இறைவனுக்கு அளிக்கப்பட்டது.47 நலக்குன்ற இறைவனின் ஒன்றாயிரவன் திருத்தோப்பு, ஊரிலிருந்த அம்பலப்புறம் ஆகியன இக்கல்வெட்டால் வெளிச்சத்திற்கு வருகின்றன. கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு நாட்டா ரும் நலக்குன்றத்து ஊராரும் இணைந்து இறைவன் திருநாமத்துக்காணியாக காவிதிக்குறிச்சியிலிருந்த கோனேரி வயல், குளம் இவற்றை 150 பணத்திற்குக் கைக்கோளர் பொன்னம்பலவன் உய்யவந்த பெருமாளான காங்கேயனுக்கும் கூத்தி குன்றுடைய பெருமாளான திருஅர்த்தசாம அழகியாளுக்கும் விற்றனர்.48 கி. பி. 1510ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் நிலவிலையாவணம் வழுத்தூர்அரசர் தீராவினை தீர்த்தாரான வீரநரசிங்கராய நாயக்கப் பல்லவராயர் நலக்குன்றம் கோயிலில் மாகேசுவர கண்காணி செய்வாருக்கு முப்பது பொன்னுக்குப் புதுவூரைக் குடிநீங்காத் தேவதானமாக விற்பனை செய்த தகவலைத் தருகிறது. பல்லவராயரின் செயலராக இருந்து விற்பனையை முடித்தவர் கவி குஞ்சிரம் மண்டலம் உடையார்.49 குன்று சூழ் நாட்டாரும் பிள்ளை பல்லவராயரின் செயலரும் கோயில் தானத்தாரும் இணைந்து அறந்தாங்கிப் பற்றைச் சேர்ந்த சேற்றூர்ச் செட்டியார் மீட்டார் அடியார்க்கு நல்லாருக்கு இறைவனின் திருநாமத்துக்காணியான மூவரையர் குளம், நிலம் இவற்றை அன்றாடு வழங்கும் சக்கரம் 20க்கு விற்றனர். இந்நிலம் கோயிலில் இருந்த திருநாவுக்கரசர் திருமேனிக்கான படையல், பூசை, திருவிழா இவற்றிற்கான செலவினங்களுக்காகக் கோயிலுக்கே அளிக்கப்பட்டது.50 பெரும்பாலான விற்பனை ஆவணங்கள் கோயில் நிலம் தனியாருக்கு விற்கப்பட்டு, மீண்டும் அந்நிலம் தனியாரால் இது போல் கோயிலுக்கே தரப்பட்ட நிலையைப் படம்பிடிக்கின்றன. பொதுவாகக் கோயிலுக்குத் தரப்படும் நிலங்கள் கோயில் சார்ந்த படையல், வழிபாடு, விழாக்கள், விளக்கேற்றல், உணவிடல், திருப்பணி இவற்றிற்காகவே தரப்படுகின்றன. அப்படித் தரப்படும் அறக்கட்டளை நிலங்களைக் கோயிலார் மீண்டும் வேறு அறக்கட்டளைகளுக்காக விற்றுப் பொருள், நிலம் இரண்டையும் பெற்றுள்ள பாங்கு ஆராயத்தக்கதாகும். குறிப்புகள் 17. உழுபடைக்கருவி என்கிறார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 23. 18. சு. இராசவேலு, அ. கி. சேஷாத்திரி இவர்கள், இவ்விருவரும் கதையைக் கையில் பிடித்திருப்பதாகக் கூறுகின்றனர். மு. கு. நூல், ப. 171. 19. வட்டமான வீரத்திலகமாகக் காண்கிறார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 22. 20. ஒளிவட்டமாகக் கொண்டுள்ளார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 22. 21. சடைப்பாரம் என்கிறார் கே. வி. செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 83. 22 முரட்டு ருத்ராட்சக் குண்டலங்கள் என்கிறார் சொ. சாந்த லிங்கம். மு. கு. நூல், ப. 22. 23. 'மணிகளால் கோர்த்த கண்டி' அணிந்தி ருப்பதாகக் கூறுகின்ற னர் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும். மு. கு. நூல், ப. 171. இது எவ்வகை அணிகலன் என்பதை அறியக்கூடவில்லை. 24. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, கே. வி. செளந்ததரராஜன் இவர்கள் சர்ப்ப வளையங்களாகக் கொள்கின்றனர். மு. கு. நூல்கள், பக். 171, 83. 25. நாற்பது கல்வெட்டுகள் என்று கூறும் சொ. சாந்தலிங்கம் குடைவரை வளாகத்திற்கு வெளியிலுள்ள இசைக் கல்வெட்டுகளையும் முன்மண்டப வெளிச்சுவரிலுள்ள பிற்சோழர் கல்வெட்டுகளையும் இந்த எண்ணிக்கையில் சேர்த்திருக்கிறார். மு. கு. நூல், பக். 27-28. ஆனால், அவற்றைச் சேர்க்காமலேயே குடைவரை வளாகத்தில் நாற்பத்தைந்து கல்வெட்டுகள் உள்ளன. 26. IPS : 34, 57, 77, 78, 79. 27. தி. இராசமாணிக்கம், சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் குடைவரை இறைவனையே திருநலக்குன்றத்துப் பெருமானடிகளாகவும் திருமூலட்டானத்துப் பெருமானடி களாகவும் காண்கின்றனர். தமிழகக் குடைவரைக் கோயில் கள், ப. 116; மு. கு. நூல், ப. 171. சொ. சாந்தலிங்கம் திருமூலட்டானத்துப் பெருமானடிகள் திருமூலட்டானத்து மகாதேவர், திருமூலட்டானத்து பரமேசுவரர் எனும் பெயர்கள் குடைவரை இறைவனைக் குறிப்பதாகக் கொள்கிறார். ஆனால், குடைவரையிலுள்ள மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டு (IPS : 78, 79) திருநலக் குன்றத்துத் திருமூலட்டானத்துப் பெருமானடிகளையும் திருமேற்றளிப் பெருமானடிகளையும் இருவேறு தெய்வங் களாகத் தெளிவாகப் படம்பிடித்துள்ளது. 28. I. Mahadevan, Early Tamil Epigraphy, p. 429. தமிழ்பிராமிக் கல்வெட்டுகள், ப. 81. 29. புதிய கல்வெட்டுகள் அனைத்தையும் படியெடுக்கக்கூட வில்லை. அகிலாண்டேசுவரி திருமுன்னில் உள்ள சிலவும் நிலவறையில் உள்ள துண்டுக் கல்வெட்டுகளும் சுற்றுச் சுவர்களில் உள்ள பழங் கல்வெட்டுகளுமே களஆய்வின் போது படியெடுக்கப்பட்டன. 30. IPS : 756. 31. IPS : 136. 32. மு. கு. நூல், ப. 3. 33. IPS : 367, 375. 34. IPS : 867. 35. IPS : 125. 36. இராஜேந்திரர் காலச் சான்றுகள் கிடைக்கவில்லை என்கிறார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 12. 37. SII 19 : 362. 38. IPS : 383. 39. IPS : 406. 40. IPS : 375. 41. SII 22 : 362. 42. SII 22 : 365; IPS : 603. 43. IPS : 319, 529. 44. IPS : 190. 45. IPS : 367. 46. IPS : 368. 47. IPS : 384. 48. IPS : 486. 49. IPS : 726. 50. IPS : 903. (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |