http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 82

இதழ் 82
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்க்கையா? தொழில்நுட்பமா?
சிங்கப்பெருமாள் கோயில் குடைவரை
திருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்
செருவென்ற சோழனின் செப்பேடுகள் - 3
வ.உ.சிதம்பரனாரின் ஆளுமைத்திறன்
புத்தகத் தெருக்களில் - நானும் 'சோழநிலா'வும்
இதழ் எண். 82 > தலையங்கம்
வாழ்க்கையா? தொழில்நுட்பமா?
ஆசிரியர் குழு

வாசகர்களுக்கு வணக்கம்.

சில நாட்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் 'நீயா? நானா?' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வரலாறு, இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புகளை மேற்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இன்றைய தொழில்நுட்பப்புரட்சிக் காலத்தில் இவை தேவையில்லை என்று ஒரு குழுவும் இன்றும் இவை மனிதநேயத்தையும் சகமனிதர்களையும் சமுதாயத்தையும் புரிந்துகொள்வதற்காக அவசியம் தேவை என்று ஒரு குழுவும் விவாதித்தனர். வழக்கம்போலவே இறுதியில் தெளிவாக ஒருபக்கம் சாயாமல் இரண்டுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்றாலும் அதில் சிலர் முன்வைத்த கருத்துக்கள் சிந்திக்கத்தக்கவை. இவற்றில் பலவற்றை ஏற்கனவே நம் மின்னிதழில் பல்வேறு நேரங்களில் கூறியிருக்கிறோம். வரலாறு படிப்பதால் பயனேதுமில்லை என்றவர்களின் வாதத்தைப் பார்த்தபோது, உண்மையிலேயே வரலாறு என்றால் என்ன என்று தெரிந்துதான் பேசுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆண்டுகளையும் ஆண்ட மன்னர்களையும் வரிசைக்கிரமமாக நினைவு வைத்துக்கொள்வதற்குப் பெயர்தான் வரலாறு படிப்பது என்ற அளவில்தான் இவர்களது புரிதல் இருந்தது. பொருளாதார முன்னேற்றத்துக்காகத் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் வரலாற்றையும் இலக்கியத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளவே ஏன் மறுக்க வேண்டும் என்பதைத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது அவரது மனைவி கேட்டாராம். 'எப்பொழுதும் சதா புத்தகங்களையே வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே, இதனால் பத்துப் பைசா சம்பாதிக்க முடியுமா?' அதற்கு லிங்கன் அளித்த பதில் வியப்பானது. 'பத்துப் பைசாவைச் சம்பாதிப்பது எப்படி என்று எனக்கே தெரியும். ஆனால் அதைச் சம்பாதித்தபிறகு உருப்படியாக எப்படிச் செலவு செய்யவேண்டும் என்பதை இந்தப் புத்தகங்கள்தான் எனக்குக் கற்றுத்தரும்' என்றாராம். அதுபோலத்தான் பொருள் சேர்க்கத் தொழில்நுட்பப் படிப்புகள் உதவலாம். ஆனால் அந்தப் பொருளை எல்லோருக்கும் பயன்படும் விதமாக எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்பதைக் கற்கத் தொழில்நுட்பவியலாளர்கள் வரலாற்றையும் இலக்கியத்தையும் பொருளாதாரத்தையும் படிக்க வேண்டியது அவசியம். இங்கே செலவு செய்வது என்றால் சட்டைப்பையிலிருக்கும் பணத்தை எடுத்துச் செலவழிப்பது மட்டும்தான் என்று கருதிவிடக்கூடாது. வாழ்க்கையைப் பிறருக்குப் பயன்படும் வகையில் எப்படிச் செலவிடுவது, வாழ்வது என்பதைப் புரிந்துகொள்ளத்தான் இலக்கியங்கள் நமக்கு உதவுகின்றன.

'பானிப்பட் போர் எந்த ஆண்டு நடந்தது என்று படிப்பதால் எனக்கு என்ன பயன்?' என்று ஒரு நண்பர் கேட்டார். ஒரு விவாதத்துக்காகப் பின்வருமாறு கேட்கலாம். மேல்நிலைப் பள்ளிகளில் கணிதத்தில் Differential calculus மற்றும் Integral calculus பற்றிப் படிப்பதால் என்ன பயன்? கடையில் சென்று மளிகைச் சாமான் வாங்கும்போது அரைக்கிலோ புளியை Differentiate செய்து கால் கிலோ உளுத்தம்பருப்பை Integrate செய்து கொடுங்கள் என்றா கேட்கிறீர்கள்? இவற்றைப் பயிலும் மாணவர்களில் 99 விழுக்காட்டினர் பணிக்குச் சென்றபிறகு கூட இவற்றைப் பயன்படுத்துவதே இல்லையே? அப்படியிருக்கையில் இவைபோன்று ஆண்டு இறுதித் தேர்வு எழுதி முடித்த பிறகு பயன்படுத்தவே செய்யாத எத்தனையோ விஷயங்களை ஆண்டு முழுவதையும் செலவழித்து ஏன் மனப்பாடம் செய்கிறோம்? பின்னர் கல்லூரிக்குச் சென்று கணிதம் மற்றும் இயற்பியலில் ஆழமான பாடங்களைப் படிக்கையில் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்ற நோக்கத்திற்காகத்தான் இவற்றைப் படிக்கிறோம் என்று எத்தனைபேர் நம்மில் உணர்ந்து படித்தோம்/படிக்கிறோம்? இதையெல்லாம் கேள்வி கேட்காமல் சிரமேற்கொள்ளும் நாம், வாழ்க்கையையும் சக மனிதர்களையும் புரிந்து கொள்ள உதவுவனவற்றை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள மறுக்கிறோம்?

தொழில்நுட்பம் பயிலும் ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதையும் தொழில்நுட்பத்துடன் மட்டுமே செலவிடுவதில்லை. பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு குடும்ப வாழ்க்கை காத்திருக்கும். குழந்தை வளர்ப்பு என்றொரு முக்கியமான கட்டத்தைத் தாண்ட வேண்டியிருக்கும். சமுதாயக் காரணங்களுக்காக நண்பர்கள், உறவினர்கள், அண்டை அயலார்களிடம் பழக வேண்டியிருக்கும். வீட்டிற்கு வேலைசெய்ய வரும் கொத்தனார்கள் முதல் ஓட்டுனர்கள் வரை அனைவரையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டியிருக்கும். இவ்விஷயங்களில் வெற்றிபெறத் தொழில்நுட்பக் கல்வி உதவாது. பல்கலைக்கழகத்தில் Thermodynamicsம் Roboticsம் படித்திருப்பதால் அரசு அலுவலகங்களில் நமது கோப்புகள் வேகமாக நகர்ந்து விடாது. மருத்துவர் அல்லது பொறியாளர் என்பதற்காக நாம் மட்டுமே நடக்கத் தனிச்சாலை கிடைத்துவிடாது. சமுதாயம் என்று வரும்போது எல்லாத்தட்டு மக்களுடனும் பழக வேண்டியிருக்கும்; ஒருவருக்கொருவர் அனுசரித்து நடக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் தேவையான மனிதநேயத்தைக் கற்றுக்கொள்வதை விடுத்து, எல்லாவற்றையும் பணம் என்ற அளவுகோலால் மட்டும் அளந்து கொண்டிருந்தால், உலகம் நம்மை மட்டும் விட்டுவிட்டுச் சுற்றிக் கொண்டிருக்கும்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.