http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 82

இதழ் 82
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்க்கையா? தொழில்நுட்பமா?
சிங்கப்பெருமாள் கோயில் குடைவரை
திருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்
செருவென்ற சோழனின் செப்பேடுகள் - 3
வ.உ.சிதம்பரனாரின் ஆளுமைத்திறன்
புத்தகத் தெருக்களில் - நானும் 'சோழநிலா'வும்
இதழ் எண். 82 > கலையும் ஆய்வும்
திருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்
மு. நளினி

புதிய கல்வெட்டுகள்

ஆகஸ்டு 2011ல் திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் மண்மேட்டிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட மூன்று நெடிய கல்வெட்டுகளைச் சிராப்பள்ளி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள் படித்தறிந்தனர். அம்மூன்று கல்வெட்டுகளுள் இரண்டு, மலைமண்டலத்துக் குளமூக்கைச் சேர்ந்த குதிரைச் செட்டிகள் திருவரங்கம் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருநாமத்துக்காணியாகவும் இறையிலியாகவும் விளங்கிய குணசீலமங்கலத்தில் கோயிலார் ஒப்புதலுடன் அமைத்த அகரங்களைப் பற்றிப் பேச, ஓய்சள அரசர் வீரராமநாதரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி. பி. 1262) எசிபட்டர் கதம்ப தீர்த்தத்தில் திருமுற்றத்துடன் அகரம் வைத்து, முற்றத்தில் எழுந்தருளுவித்த இறைவனுக்கான மலர்களுக்காக நந்தவனம் அமைத்த செய்தியைப் பகிர்ந்துகொள்கிறது.

ஒப்பீடு

திருவரங்கம் திருக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ள ஓய்சள அரசர்கள் காலம் வரையிலான கல்வெட்டுகளில், எட்டுக் கல்வெட்டுகள் மலைமண்டலத்துக் கொடையாளிகளைச் சுட்ட, அவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் கொடையாளிகளின் ஊராகக் குளமூக்கு ஊரைக் காட்டுகின்றன. மூன்று கல்வெட்டுகள் குதிரைச் செட்டிகளை அறிமுகப்படுத்திய போதும் நந்தவனம் அமைத்தவர்களாகவே கல்வெட்டுகளில் அவர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்காலகட்டத்தில் அமைந்த திருவரங்கம் கல்வெட்டுகளில், 41 பதிவுகள் அகரம் பற்றிய தரவுகளைக் கொண்டிருந்தபோதும் அவற்றுள் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு பாண்டிய அரசரான சடையவர்மர் வீரபாண்டியரின் காலத்ததாகவே (கி. பி. 1307) அமைந்துள்ளது. 41 பதிவுகளில் குறிக்கப்படும் ஆறு அகரங்களில் ஐந்து குடியிருப்புகள் அரசர்கள்ின் பெயர்களை ஏற்று அமைந்தன. ஒன்று பத்ரகாரச் சதுர்வேதிமங்கலம் எனப் பொதுப் பெயரில் அமைந்தது.

புதிய பதிவுகள்

தற்போது கண்டறியப்பட்டிருக்கும் புதிய கல்வெட்டுகளுள் மூன்றாம் இராஜராஜ சோழரின் 28ஆம் ஆட்சியாண்டில் (கி. பி. 1244) வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, மலை மண்டலத்துக் குளமூக்கைச் சேர்ந்த குதிரை வணிகரான வண்டநம்பி செட்டியார் தமக்கும் தம் உடன்பிறப்பான குஞ்ச நம்பி செட்டியாருக்கும் நலம் விளங்கக் கதம்ப தீர்த்தத்தின் வடபுறத்தே மூவாயிரம் குழிப் புன்செய் நிலத்தில், 'ஸ்ரீநாவாயன் குஞ்ச நம்பி சதுர்வேதிமங்கலம்' என்ற பெயரில் அகரம் ஒன்றை அமைத்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. இப்புதிய கண்டுபிடிப்பால், திருவரங்கம் சார்ந்து அகரம் அமைக்கப்பட்ட காலம் அறுபத்து மூன்று ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்படுவதுடன், கேரளக் குதிரை வணிகர்கள் திருவரங்கம் சார்ந்து அகரம் அமைத்த புதிய செய்தியும் அவ்வகரங்கள் தனியர் பெயரில் அமைந்த புதுமையும் வரலாற்றில் முதல் முறையாகப் பதிவாவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் இராஜராஜரின் முப்பத்தோராம் ஆட்சியாண்டில் (கி. பி. 1247) வெட்டப் பட்டுள்ள மற்றொரு புதிய கல்வெட்டு, கோவிந்தச்ச மணவாளரின் மகன்களும் கேரளக் குதிரை வணிகர்களுமான நாவாய் மணவாளரும் அவர் தம்பி குஞ்சி நம்பி மணவாளரும் தங்கள் பெற்றோர் நலம் விளங்கக் கோவிந்தப் பெருமாள் திருமுற்றத்தையும் அது சூழ நாவாயன் கோவிந்தச் சதுர்வேதிமங்கலம் எனும் அகரத்தையும் அமைத்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. இக்கல்வெட்டில் வண்ட நம்பி செட்டியார் உருவாக்கிய அகரம் பற்றிய குறிப்பும் உறைந்துள்ளது. இக்கல்வெட்டின் வழி கிடைக்கும் நாவாய் என்ற சொல் ஆய்வுக்குரிய சங்கச் சொல்லாகும்.

விண்ணப்பமும் ஒப்புதலும்

மூன்றாம் இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் அகரம் அமைக்க விரும்பிய வண்டநம்பியும் நாவாய் மணவாளரும் அதற்கான நிலங்களைப் பெறத் திருவரங்கம் கோயில் ந்ிருவாகத்தில் இருந்த பிள்ளைக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் திருப்பணி செய்யும் நம்பிமாருக்கும் விண்ணப்பித்தனர். அவர்கள் அவ்விண்ணப்பத்தை இறைவன் முன் எடுத்துரைத்து அவரது ஆணையைப் பெற்றுக் கோயில் கணக்கர் வழி அதை ஓலையில் பதிவு செய்து ஆவணமாக்கி விண்ணப்பித்தவர்களிடம் அளித்ததுடன், கோய்ிலிலும் அந்த ஆவணத்தைக் கல்வெட்டாக்கினர். இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படும் பிள்ளை, வீரராமநாதரின் கல்வெட்டில், 'ஜீயர்' என்று குற்ிக்கப்படுகிறார். 'நாங்கள்' என்று ஆவணங்களில் சுட்டப்படும் ஸ்ரீவைஷ்ணவர்கள் மூன்று கல்வெட்டுகளிலும் கையெழுத்தாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.

வண்ட நம்பி, நாவாய் மணவாளர் ஆவணங்களை எழுதிய கோயில் கணக்கராகப் புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிசரணாலயப் பிரியனும் எசிபட்டன் ஆவணத்தை எழுதிய கோயில் கணக்கராகப் பல்லவன் விழுப்பரையனும் வெளிப்படுகின்றனர். இராஜராஜர் கால ஆவணங்கள் எழுதப்பட்ட காலத்தில் கோயில் ஸ்ரீவைஷ்ணவர்களாகப் பெரிய பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசன், வீற்றிருந்தான் நம்பி, கருணாகரதாசன், திருமணத்தூண் நம்பி, ஸ்ரீபாகாலதாசன், திருவரங்கப் பெருமாள் தாசன், ஸ்ரீராமநம்பி, நலந்திகழ் நாராயண அமுதினார் ஆகியோர் இருந்தனர். பெரிய கோயில் நம்பி, நாராயணதாசன் ஆகிய இருவரும் வண்டநம்பியின் ஆவணத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். எசிபட்டன் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் முற்றிலும் வேறானவர்கள்.

வண்டநம்பி, எசிபட்டன் ஆகிய இருவர் விண்ணப்பங்களும் ஆவணித் திருக்கொடித் திருநாள், புரட்டாசி சந்திர கிரஹணம் விழாக்களை முன்னிட்டுப் பெருமாள், நலந்திகழ் நாராயணன் மண்டபத்திற்கு வந்து, திருமாலை தந்தான் திருமுத்துப் பந்தல் கீழ், வேதநெறி காட்டினார் சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது அவர் முன் வைக்கப்பட்டன. அத்தகு விழா வாய்ப்பை நாவாய் மணவாளர் விண்ணப்பம் பெறவில்லை.

நில விலைகள்

மூன்று புதிய கல்வெட்டுகளும் இராஜராஜ வளநாட்டுப் பாச்சில் கூற்றத்துக் கீழ்பலாற்று ஊரான குணசீலமங்கலத்திலேயே நிலம் பெறப்பட்டதாகக் கூறுக்ின்றன. வண்டநம்பி விலைக்குப் பெற்ற 5,000 குழிப் புன்செய் நிலத்தின் விலை 10, 000 காசு. நாவாய் மணவாளர் விலைக்குப் பெற்ற 3,400 குழிப் புன்செய் நிலத்தின் விலை 17,000 காசு . எசிபட்டன் பெற்ற நூறு கலம் நெல் விளையும் ஒரு வேலி நன்செய்யும் கால் வேலிப் புன்செய்யும் இறையிலி திருநாமத்துக்காணியாக அளிக்கப்பட்டன. இறையிலி செய்தமைக்கும் விளைச்சலில் நாற்பது கலம் நெல் எசிபட்டன் எடுப்பித்த இறைவன் வழிபாட்டிற்கு அளித்தமைக்கும் உபையமாக 16,000 காசு பெற்றுக்கொள்ளப்பட்டது.

நில எல்லைகள்

நில விற்பனைகளைப் பேசும் கல்வெட்டுகள், விற்கப்பட்ட நிலங்களின் எல்லைகளைக் குறிப்பிடும்போது ஊர்கள், தனியர் - நிலம் - இறைத்திருமுன் சார்ந்த பெயர்கள், பாசன வாய்ப்புகள், வேளாண் சார்ந்த மரபுகள், அளவுகோல்கள் முதலிய அரிய தகவல்களை முன்வைப்பது கண்கூடு. இப்புதிய கல்வெட்டுகள் திருவரங்கம், குணசீலமங்கலம் எனும் ஊர்ப் பெயர்களையும் கோவிந்தன் திருத்து, சிறுமான்செய், பங்கயச் செல்வியார் நந்தவனம், மேட்டு வாய்க்கால் கண்டம், திருவரங்க மயக்கல், குருக்கத்தி, புற்றின்செய், களத்திடல் எனும் நிலப் பெயர்களையும் மேட்டு வாய்க்கால், அரசோடு கால், கள்ளிக்கால் ஆகிய நீர்வழிகளின் பெயர்களையும் தருகின்றன. 'திருத்து' என்ற அழகிய தமிழ்ச் சொல், 'விளாகம்' என்ற மற்றொரு கல்வெட்டு வழக்காறுக்கு இணையான பொருளுடையதாகும் என்றாலும், அரிதாகவே இச்சொல்லைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது.

நில உரிமைகள், வரிகள்

நிலத்தைப் பெற்றவர்கள் அவற்றில் வரம்புகள் எடுக்கவும் பண்படுத்தவும் வேண்டும் பயிர்களை விளைவிக்கவும் விளைவில் வரி, வழிபாட்டுச் செலவினங்கள் தவிர்த்த எஞ்சிய பகுதியைக் கொள்ளவும் உரிமை பெறுகின்றனர். வண்ட நம்பி, நாவாய் மணவாளர் பெற்ற நிலப்பகுதிகளுக்கான புன்செய்க் கடமையாகக் கோயிலுக்குத் திருவரங்க தேவன் எனும் பெயரில் அமைந்த முகத்தலளவையால் ஆண்டுதோறும் 32 நாழி நெய் அளக்குமாறு விதிக்கப்பட்டது. வண்டநம்பி அதற்கான பொலிசை முதலாக நாற்பதினாயிரம் காசும் நாவாய் மணவாளர் 13,000 காசும் பண்டாரத்தில் ஒடுக்கினர். எசிபட்டன் பெற்ற நன்செய் நிலத்துக்கு அழகிய மணவாளன் எனும் பெயரில் அமைந்த முகத்தலளவையால் ஆண்டுதோறும் 60 கலம் நெல்லும் புன்செய்க்குக் கடமையாக ஆண்டுதோறும் விளையும் பயறு கலம் இறுக்கவும் முடிவானது.

அகரங்களும் அமைப்பும்

புதிய கல்வெட்டுகள் குறிப்பிடும் அகரங்கள் திருமுற்றத்துடன் அமைந்தன. வண்ட நம்பி யின் அகரம் 'ஸ்ரீநாவாயன் குஞ்ச நம்பிச் சதுர்வேதிமங்கலம்' எனும் பெயரிலும் நாவாய் மணவாளரின் அகரம் 'நாவாயன் கோவிந்தச் சதுர்வேதிமங்கலம்' எனும் பெயரிலும் அமைந்தன. எசிபட்டன் தாம் அமைத்த அகரத்தின் பெயர் கல்வெட்டில் இடம்பெறவில்லை.

வண்ட நம்பி ஏற்கனவே தாம் அமைத்த அகரத்திற்கான குஞ்ச நம்பி விண்ணகரத் திருமுற்றம், திருமடைவிளாகம், நந்தவனம், ஊரைச் சுற்றிச் சுற்றுக்குலை, குளம், பசுக்களுக்கான மேய்ச்சல் நிலம், பட்டர்களுக்கான கூடுதல் குடியிருப்பு, அதன் வடகீழ் மூலையில் பணிசெய் மக்களுக்கான குடியிருப்பு, மயானத்திற்கும் ஆற்றுக்கும் செல்வதற்கான வழிகள் அமைக்க நிலம் பெற்றார்.

நாவாய் மணவாளர் அத்யயன பட்டர்களுக்கான குடியிருப்பையும் கோவிந்தப் பெருமாள் எனும் பெயரில் அமைந்த திருமுற்றத்தையும் ஏற்படுத்தினார். எசிபட்டன் சேனாபதிப் பெருவிலையில் கொண்ட திருநாமத்துக்காணி நிலத்தில் அகரம் அமைத்து, அதற்கான திருமுற்றத்தில் இலட்சுமி நாராயணருக்கு விமானம் செய்வித்தார். அவ்விறைவனுக்கான வழிபாடு, படையல், நந்தவனம் ஆகியவை அமைக்கவே கோயிலாரிடம் விண்ணப்பித்து நெல்லும் நிலமும் கொண்டார்.

அகரக் குடிகளின் தகுதிகள்

திருவரங்கம் கோயிலில் நிலம் பெற்று அமைக்கப்பட்ட இவ்அகரங்களில் எத்தகையோரைக் குடியேற்றலாம் என்பதற்குக் கோயில் நிருவாகம் சில தகுதிகளை வரையறை செய்திருந்தது.
1. வேதத்துடன் தொடர்புடையவர்கள்
2. வைஷ்ணவர்கள்
3. திருஇலச்சினை உடையவர்கள்,
4. பெருமாளுக்குத் திருவடிப் பணி செய்பவர்கள்
5. சமாசாரவான்கள் ஆகியோரை மட்டுமே அகரக்குடிகளாக அமர்த்தக் கோயில் இசைவளித்திருந்தது.

குடியிருப்பின் உரிமை நிலைகள்

அகரக் குடியிருப்பிற்கான நிலங்களைப் பெற்றவர்கள் அவற்றை விற்பதற்கும் ஒற்றி வைப்பதற்கும் பிற வகையில் கொடுப்பதற்கும் உரிமை பெற்றிருந்தனர். என்றாலும், அகரக் குடிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தகுதி நிலைகளையே அகரம் சார்ந்த குடியிருப்புகளை விலைக்கோ, ஒற்றிக்கோ, வேறு விதங்களில் பெறுவதற்கோ முனைவோரும் கொண்டிருத்தல் வேண்டும் என்ற விதி ஆவணத்தில் இணைக்கப்பட்டதுடன், அதற்குப் புறம்பாக எதுவும் நிகழக்கூடாதென்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

விழாக்களும் எழுந்தருளலும்

இம்மூன்று புதிய கல்வெட்டுகளால் திருவரங்கம் திருக்கோயிலில் கொண்டாடப்பட்ட இரண்டு விழாக்களைப் பற்றித் தரவுகள் கிடைக்கின்றன. பல நாட்கள் கொண்டாடப்பட்ட ஆவணித் திருநாளில் மூன்றாம் நாள் விழா திருக்கொடித் திருநாளாக அமைந்தது. இவ்விழாவின் போதும் புரட்டாசி மாதத்தில் அமைந்த சந்திர கிரஹணத்தன்றும் திருக்கோயில் பெருமாளின் உற்சவர் திருமேனி கருவறையில் இருந்து உலாவாக நலந்திகழ் நாராயணன் மண்டபத்திற்குக் கொணரப்பட்டது. அங்குத் திருமலை தந்தான் திருமுத்துப் பந்தல் கீழ் அமைந்திருந்த வேதநெறிகாட்டினார் எனும் பெயர் கொண்டிருந்த சிம்மாசனத்தில் இறைத் திருமேனி எழுந்தருளுவிக்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகளும் படையல்களும் நிகழ்ந்தன. திருக்கோயில் சார்ந்த செயற்பாடுகள் இறைத் திருமுன் விண்ணப்பிக்கப்பட்டு இறைவன் இசைவைப் பெற்றன.

முடிவுரை

திருவரங்கம் திருக்கோயிலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்களால் படித்தறியப்பட்ட மூன்று புதிய கல்வெட்டுகளும் திருவரங்கம் கோயில் சார்ந்த வரலாற்றில் சில புதிய தரவுகளை இணைத்துள்ளன. வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் கல்வெட்டுகளுக்குள்ள பங்களிப்பு இப்புதிய கல்வெட்டுகளால் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பாடங்களைப் படித்துக் குறிப்புகள் எடுக்க இசைவளித்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கும் பாட ஆய்வில் துணையிருந்த முசிறி அறிஞர் அண்ணா அரசினர் அறிவியல், கலைக் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் அர. அகிலாவுக்கும் என் உளமார்ந்த நன்றி உரியது.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.