http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 82
இதழ் 82 [ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
குடைவரைகள்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு வட்டத்தைச் சேர்ந்த சிங்கப்பெருமாள் கோயில் சென்னை செங்கற்பட்டுப் பெருவழியில் 48 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.1 ப்ிற்கால மண்டபங்கள், திருமுன்கள் பெற்று வளாகப் பெருக்கம் கண்டுள்ள இக்கோயில், கல்வெட்டுகளில் நரசிங்க விண்ணகரம் என்று அழைக்கப்படுகிறது.2 கோபுரம் ஊர் நடுவே உள்ள பாறையின் கிழக்கு முகத்தில் அகழப் பட்டுள்ள இக்குடைவரை வளாகத்தை அடையக் கிழக்குப் பார்வையாக உள்ள எளிய ஒருதளக் கோபுரம் உதவுக்ிறது. கோபுரக் கூரையின் மீதுள்ள ஆர நடுச் சாலையில் காவலர்களுடன் நரசிம்மர் சுகாசனத்தில் உள்ளார். பக்கச் சாலைகளில் வலப்புறம் காளிங்கநர்த்தனரும் இடப்புறம் கிருஷ்ணரும் இடம்பிடித்துள்ளனர். கர்ணகூடங்களை அடுத்த மூலைகளில் பக்கத்திற்கொரு கருடன். வெளிச்சுற்று கோபுரத்தை அடுத்து விரியும் வெளிச்சுற்று குன்றைத் தழுவி விரிகிறது. சுற்றின் தென்மேற்கில் வெங்கடாசலபதியும் வடகிழக்கில் இலட்சுமி நரச்ிம்மரும் உள்ளனர். தெற்கில் வாயில் பெற்றுள்ள மையக்கோயில் வளாகத்தின் கிழக்குச் சுவரின் வடபகுதியில் சொர்க்கவாயில் சிறு முன்றிலுடன் காட்டப்பட்டுள்ளது. கிழக்குச் சுவர்க் கூரை மீது விஷ்ணுவின் பத்துத் திருத்தோற்றங்கள் காட்டும் சுதைமேனிகள் உள்ளன. பெருமண்டபம் தெற்கு வாயில் பெருமண்டபத்திற்கு வழிவிடுகிறது. மண்டபத்தின் மேற்கில் குடைவரை வளாகத்திற்கான முதல் வாயிலும் அவ்வாயிலைப் பார்த்தவாறு கிழக்கில் கருடனுக் கான இருதள நாகர விமானமும் உள்ளன. மண்டபத்தின் வடபுறம் திருமஞ்சணக் கூடமாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னுள்ள அறைகளில் வலப்புற அறை ஆழ்வார்களின் கருங்கல், செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. இடப்புற அறையில் மூலவராகவும் உற்சவராகவும் உடையவர் இடம் பெற்றுள்ளார். திருமஞ்சண மண்டபத்திற்கு முன்னுள்ள பலகைக் கல்வெட்டு அப்பலகையின் கொடையாளியை அடையாளப்படுத்துகிறது. தாயார், ஆண்டாள் திருமுன்கள் குடைவரை வளாக வாயிலை அடுத்து விரியும் சுற்றில் தென்மேற்கில் அஹோபிலவல்லித் தாயார் திருமுன்னும் வடமேற்கில் ஆண்டாள் திருமுன்னும் இருதள வேசரங்களாக அமைய, நடுவில் குடைவரைக்கான வாயில் உள்ளது. கருவறையும் முகமண்டபமும் பெற்றுள்ள தாயார், ஆண்டாள் திருமுன்கள் பிற்காலக் கட்டுமானங்களாக உள்ளன. பின்கை களில் தாமரை மலர்கள் ஏந்தி அர்த்தபத்மாசனத்தில் உள்ள தாயாரின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை அருட்குற்ிப்பில் உள்ளது. ஆண்டாள் வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். இலட்சுமிநரசிம்மர் இந்த இரண்டு திருமுன்களையும் சுற்றி வருமாறு விரியும் மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் இலட்சுமி நரசிம்மர் இடம்பெற்றுள்ளார். இறைவனின் இடத்தொடையில் அமர்ந் துள்ள இலட்சுமியின் இடக்கையில் தாமரை. வலக்கை நரசிம்மர் இடுப்பின் பின் மறைகிறது. நரசிம்மரின் பின்கைகள் சக்கரம், சங்கு ஏந்த, வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. இடப் பின் கை இறைவியை அணைத்தவாறு இடுப்பருகே படர்ந்துள்ளது. இத்திருமேனியின் அருகில் சுகாசனத்தில் விஷ்வக்சேனர். தாயார், ஆண்டாள் திருமுன்களின் மேற்குச் சுற்றுப்பகுதியில் பாறையின் சரிவைக் காணமுடிகிறது. இச்சரிவை உள்ளடக்கியே சுற்றுவழி உருவாகியுள்ளது. காவலர்கள் நாகபந்தம் பெற்றுள்ள 16 முச்சதுர இருகட்டுத் தூண்கள் இருவரிசைகளில் நின்று வெட்டுத் தரங்கப் போதிகைகளின் உதவியுடன் கூரைதாங்கும் சுற்று மண்டபத்தின் நடுவில் அமைந்துள்ள குடைவரை வளாக உள்வாயிலின் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராகப் பிற்காலக் காவலர்கள் ஜெயன், விஜயன் எனும் பெயர்களுடன் நிற்கின்றனர். இருவர் பின்கைகளும் சங்கு, சக்கரம் ஏந்த, ஒரு கை அச்சுறுத்துகிறது. மற்றொரு கை கதை பற்றியுள்ளது. முப்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ள சுற்றுக் கூரையின் நடுப்பகுதியில் பிற்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. முன்மண்டபம் குடைவரைக்கு முன்னுள்ள மண்டபத்தின் வாயில் தகடு களால் மூடப்பட்டுள்ளது. மண்டபக் கூரையை நாகபந்தம் பெற்ற ஆறு முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகள் கொண்டு தாங்குகின்றன. குடைவரையின் முகப்புடன் இம்மண்டபம் பொருந்த இணைக்கப்பட்டுள்ளதால் முகப்பின் நடு அங்கணம் மட்டுமே பார்வைக்குக் கிடைக்கிறது. தென், வட அங்கணங்களைத் தரை முதல் கூரை வரையெனப் பரவியுள்ள மண்டபப் பின்சுவர் முற்றிலுமாய் அடைத்துள்ளது. முகப்பு குடைவரையின் முகப்பு தென்வடலாக 5. 54 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 65 செ. மீ. அகலமும் 2. 58 மீ. உயரமும் பெற்றுள்ளது. முகப்பின் நடுவில் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் இரண்டு முழுத்தூண்களும் பாறைச்சுவரொட்டி இரண்டு அரைத்தூண்களும் உள்ளமையால் குடைவரை மூன்று அங்கணங்கள் பெற்றுள்ளது. வட, தென்அங்கணங்கள் மண்டபச் சுவரால் முற்றிலுமாய் மறைக்கப்பட்டுள்ள நிலை யில் அரைத்தூண்களின் வடிவமைப்பை அறியக்கூடவில்லை.3 முழுத்தூண் சதுரங்களில் கீழ்ச்சதுரம் மேற்சதுரத்தைவிட உயரமாக உள்ளபோதும் அதன் மேற்பகுதியில் நாற்புறத்தும் ஏறத்தாழ 12 செ. மீ. உயரம், 3 செ. மீ. ஆழத்த்ிற்குச் செதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற கீழ்ச்சதுரச் செதுக்கலைச் சிராப் பள்ளிக் கீழ்க் குடைவரை நடு அங்கணத் தூண்களிலும் பார்க்க முடிவது குறிப்ப்ிடத்தக்கது. தூண்களின் நடுவிலுள்ள கட்டுப்பகுதியும் மேற்சதுரத்தை விட உயரம் பெற்றுள்ளது. தூண்களின் மேலுள்ள போதிகை கள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம். முகப்பின் பக்கச் சுவர்களும் கூரை நீட்சியும் முன்னுள்ள பிற் கால மண்டப அமைப்பில் மறைந்துள்ளபோதும் நடு அங்கணத் தின் மேற்பகுதியில் வடிவமைக்கப்படாத கபோதமாகக் கூரையின் நீட்சியைப் பிளவுபட்ட நிலையில் காணமுடிகிறது. மண்டபம் தென்வடலாக 5. 54 மீ. நீளம், கிழக்கு மேற்காக 2. 14 மீ. அகலம், 2. 28 மீ. உயரம் பெற்றுள்ள மண்டபத்தின் வட, தென்சுவர்கள் வெறுமையாக உள்ளன. சீரமைக்கப்பட்டுள்ள கூரையை நாற்புறத்தும் வாஜனம் தழுவியுள்ளது. மண்டபப் பின்சுவரில் அகழப்பட்டுள்ள கருவறையின் முன் இரண்டு படிகள் உள்ளன. கருவறை அரைத்தூண்களற்ற கருவறை முன்சுவரின் நடுப்பகுதியில் படிகளுக்கு nநர் இருக்குமாறு 1. 88 மீ. உயர, 81 செ. மீ. அகல நிலையமைப்பற்ற வாயில் த்ிறக்கப்பட்டுள்ளது. தென்வடலாக 2. 18 மீ. நீளம், கிழக்கு மேற்காக 1. 14 மீ. அகலம், 1. 81 மீ. உயரம் பெற்றுள்ள கருவறையின் சுவர்களும் கூரையும் தரையும் நன்கு சீர்செய்யப்பட்டுள்ளன. கருவறையின் பின்சுவரொட்டி அமைந் துள்ள இருக்கையில் சுகாசனத்தில் உள்ள சுதைவடிவ நரசிம்மர்4 நான்கு கைகள் பெற்றுள்ளார். வலப் பின் கையில் சக்கரமும் இடப் பின் கையில் சங்கும் அமைய, வல முன் கை காக்கும் குறிப்பிலும் இட முன் கை தொடைமீதும்5 உள்ளன. கீழே நீட்டப்பட்டுள்ள இடக்கால் பாதத்தை இருத்தச் சிறிய அளவிலான தாமரைத்தளம் காட்டப்பட்டுள்ளது. மண்டபத் தரையில் கருவறை வாயிலின் முன் திருமஞ்சணத்திற்காகக் கருவறைத் திருமேனியொத்த சிறிய அளவிலான நரசிம்மர் இடம்பெற்றுள்ளார். வாயிலின் வடக்கில் உற்சவத்திருமேனிகளாகத் திருமகளும் நிலமகளும் பிரகலாதவரதனும் இடம்பெற்றுள்ளனர். வரதரின் பின்கைகள் சங்கு, சக்கரம் ஏந்த, வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. இட முன் கை கதை பற்றியுள்ளது. தேவியர் ஒரு கையை நெகிழ்த்தி, ஒரு கையில் மலர் கொண்டுள்ளனர். கல்வெட்டுகள் இக்குடைவரைக் கோயிலிலிருந்து மூன்று காலகட்டங் களில் ஆறு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், குடைவரை முகப்பின் நடு அங்கணத் தூண்களில் மூன்றும்6 ஆண்டாள் திருமுன்னுக்குப் பின்னுள்ள பாறையில் ஒன்றும்7 அமைய, எஞ்சிய இரண்டும்8 பிற்காலக் கட்டுமானப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. முகப்புத் தூண்களுள் வடக்குத் தூணின் மேற்பகுதியில் உள்ள முதல் இராஜராஜரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, செங்குன்ற ஆழ்வார் நரசிங்க வ்ிண்ணகரத் தேவர் திருமுன் நந்தாவிளக்கொன்று ஏற்ற, வயிரன் மகன் சேந்தகுட்டி இருபத்தாறு ஆடுகள் கொடையளித்த தகவலைத் தருகிறது.9 அதே தூணின் கீழ்ப்பகுதியில் உள்ள சிதைந்த கல்வெட்டு முல்லப்பாடி, சித்தாமன்றூர், . . ங்கச்சாணிமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்த நிலத்துண்டுகளைக் குறிப்பிடுகிறது.10 தெற்குத் தூணின் மேற்பகுதியில் உள்ள முதல் இராஜராஜரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூலிச்சேவகர் ஐயாறன் நக்கன் நரசிங்கவிண்ணகர ஆழ்வாருக்குப் படையலிடவும் அவர் திருமுன் இரண்டு சந்தி விளக்குகள் ஏற்றவும் வாய்ப்பாகச் செங்குன்ற நாட்டாரிடம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலைப் பகிர்ந்து கொள்கிறது.11 ஆண்டாள் திருமுன் பின்னுள்ள பாறைச்சரிவில் காணப் படும் சிதைந்த நிலையிலுள்ள நிறைவடையாத முதலாம் இராஜ ராஜரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கோயில் உள்ள ஊரைச் செங்குன்றம் என்று குறிப்பதுடன், களத்தூர்க் கோட்டத்துச் செங்குன்ற நாட்டின் கீழ் இவ்வூர் இருந்த தகவலையும் கூலிச்சேவகன் ஐயாறன் நக்கன் நரசிங்க ஆழ்வாருக்குரிய படையல்களுக்காகக் கொடையளித்த செய்தியையும் குறிப்பிடுகிறது.12 குடைவரைக்கு முன்னுள்ள மண்டப நுழைவாயில் நிலைக்காலில் காணப்படும் கல்வெட்டு, சர்வதாரி ஆண்டு கார்த்திகை மாதம் முடியடி நாகப்ப நாயக்கரின் மகன் வெங்கப்பா நாயக்கர் அந்நிலையைச் செய்தளித்த தகவலைத் தெரிவிக்கிறது.13 குடைவரைக்கு முன்னுள்ள மண்டபத்தின் கிழக்குச் சுவரில் காவலர் சிற்பத்தை அடுத்துக் காணப்படும் தெலுங்குக் கல்வெட்டு பாலபல நரசப்பரின் மகன் ஆகவநாராயணன் பெயரைத் தருகிறது.14 குடைவரையின் காலம் கூ. ரா. சீனிவாசனும் சு. இராசவேலும் கட்டமைப்புக் கூறு களின் அடிப்படையில் இக்குடைவரையை மாமல்லருக்கும் பரமேசுவரவர்மருக்கும் இடைப்பட்ட காலத்ததாக அடையாளப் படுத்துகின்றனர்.15 மாமல்லரான முதல் நரசிம்மரின் இறுதி ஆட்சியாண்டு கி. பி. 668. முதல் பரமேசுவரவர்மரின் தொடக்க ஆட்சியாண்டு கி. பி. 672. இருவர்தம் ஆட்சிக்கும் இடைப்பட்டு இருந்தவை நான்கே ஆண்டுகள். இந்த நான்காண்டுகளில் கட்டமைப்புக் கூறுகள் எந்த விதத்தில் மாறுபடமுடியும்? அப்படி மாறுபட்ட கட்டமைப்புக் கூறுகளை எதன் அடிப்படையில் அடையாளம் கண்டு உறுதிப்படுத்துவது? நூலின் உள்ளீடு பகுதியில் இரண்டாம் காலகட்ட மகேந்திரர் பாணியில் அமைந்திருக்கும் குடைவரைகளுள் ஒன்றாக இதைக் குறிப்பிடும் கூ. ரா. சீனிவாசன் குடைவரை பற்றிய கட்டுரையின் இறுதியில் நரசிம்மர் காலத்திற்கும் பிற்பட்டு, பரமேசுவரர் காலத்திற்கு முற்பட்டு அமைந்த குடைவரையாக இதைக் குறித்திருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. கூ. ரா. சீனிவாசனின் கால நிறுவல்களை அடியொட்டியே இராசவேல் தம் நூலை அமைத்திருப்பதால் அவர் கருத்தையே பின்பற்றியுள்ளார். குடைவரையின் எளிமை, கருவறையில் தாய்ப்பாறையிலான இறைத்திருமேனி இல்லாமை இவற்றின் அடிப்படையில இக்குடைவரையின் காலத்தைக் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகக் கொள்வது பொருத்தமாகும். குறிப்புகள் 1. ஆய்வு நாட்கள்: . மீளாய்வு நாள் 26. 7. 2011. ஆய்வுசெய்ய அநுமதியளித்த ஆணையர் திரு. தனபால், துணைநின்ற ஓய்வு பெற்ற இணை ஆணையர் திரு. க. இராஜநாயகம், நிருவாக அலுவலர் திருமதி சந்திரசேனா, கோயில் மணியம் திரு. சி. வெங்கடநரசிம்மன், கோயில் பட்டாச்சாரியார்கள் வெ. கோபாலகிருஷ்ணன், கோ. நரசிம்மன், கே. நாகராஜன், பா. நரசிம்மன் ஆகிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. 2. ARE 1956-57: 137. 3. கூ. ரா. சீனிவாசன் நான்முகமாக உள்ளன என்கிறார். மு. கு. நூல், ப. 110. 4. குடமுழுக்கின்போது கருவறை இறைத்திருமேனி சுதை வடிவம் உறுதிசெய்யப்பட்டதாகக் கூறுகிறார் கோயில் மணியம் திரு. சி. வெங்கடநரசிம்மன். 5. கூ. ரா. சீனிவாசன், அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் இடுப்பில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மு. கு. நூல்கள், பக். 112, 58. 6. ARE 1956-57: 137-139.1964இல் பதிப்பிக்கப்பட்டிருக்கும் தமது நூலில், 'இக்கல்வெட்டுகள் படியெடுக்கப்படவோ பதிப்பிக்கப்படவோ இல்லை' என்கிறார் கூ. ரா. சீனிவாசன். மு. கு. நூல், ப. 110, அடிக்குறிப்பு 3. ஆனால், மூன்று கல்வெட்டுகளுமே 1956-57இல் படியெடுக்கப்பட்டுள்ளன. 7. ARE 1920: 481. 8. ARE 1920: 480; 1972-73: 259. 9. ARE 1956-57: 137. 10. ARE 1956-57: 138. 11. ARE 1956-57: 139. 12. ARE 1920: 481. 13. ARE 1920: 480. 14. ARE 1972-73: 259. 15. மு. கு. நூல்கள், பக். 112, 59. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |