http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 88

இதழ் 88
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

செயத்தக்க செய்யாமையானும் கெடும்
சேரர் கோட்டை - விழா அழைப்பிதழ்
திரும்பிப்பார்க்கிறோம் - 35
பசுபதிகோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 1
வாசிப்பில் வந்த வரலாறு - 3
இதழ் எண். 88 > இலக்கியச் சுவை
வாசிப்பில் வந்த வரலாறு - 3
ச. கமலக்கண்ணன்
சிலம்புச் செல்வரின் பார்வையில் சிலம்புச் செல்வம்


'தமிழன் என்னும் இனவுணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதியை உண்மையான தமிழ்நாடு ஆக மாற்றுவதற்குச் சிலப்பதிகாரம் ஒன்றே சிறந்த கருவி' என்று 'சிலப்பதிகாரத் திறனாய்வு' என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் சிலம்புச் செல்வர் டாக்டர். ம.பொ.சி அவர்கள். அண்மையில் நான் வாசிக்க நேர்ந்த இந்நூலின் சில சுவையான பகுதிகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.



'பதிகம் இளங்கோ பாடியதா?' என்பது தொடங்கி, 'கண்ணகி திருமணத்தில் தாலி' ஈறாக 34 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். டாக்டர். ம.பொ.சி அவர்கள் நடத்தி வந்த 'செங்கோல்' வார இதழில் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இளங்கோ தரும் இலக்கிய இன்பம், இளங்கோவும் கம்பரும், பாரதி கண்ட இளங்கோ போன்ற கட்டுரைகள் ஒப்பிலக்கியம் பயில விரும்புபவர்களுக்கு நல்ல அறுசுவை விருந்து. சிலம்பில் வரும் வழக்குரைகாதையில் மன்னன் முன்பு கண்ணகி நின்று நீதி கேட்பதையும் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதி துரியோதனன் அவையில் நின்று பேசுவதையும் இணைத்து எழுதியிருக்கும் விதம் விருந்துக்குப் பின்னான பால்பாயசம் போன்றது. மகாபாரதப் பாஞ்சாலி தவறிழைத்த துரியோதனனிடம் நீதி கேட்காமல் அவையில் இருந்த பீஷ்மர், துரோணர் போன்றவர்களிடம் நீதி கேட்டிருந்த நிலையில், கண்ணகியைத் தவறிழைத்த பாண்டியனிடமே நேருக்குநேர் நின்று குற்றம் சுமத்திய மறத்தமிழச்சியாகக் குறித்திருப்பதைப் படித்தபோது மெய்சிலிர்த்தது.

ஒரு வழக்கறிஞரின் பார்வையில் வழக்குரைகாதையை அணுகியிருக்கும் விதம் மிக அருமை. கண்ணகி தொடுத்தது அசல் வழக்கன்று; அப்பீல் வழக்கு என்பதில் தொடங்கி, பாண்டியன் தீர்ப்பின் நுட்பம் மற்றும் வழக்கில் வெற்றி கண்ணகிக்கா பாண்டியனுக்கா என்பதை விவாதிப்பதுவரை உள்ள பகுதி சட்டப் பல்கலை மாணாக்கர்களுக்குப் பாடமாக வைக்கும் அளவு தகுதி வாய்ந்தது. இங்கே வாசிப்பவர்களுக்கு ஒரு குழப்பம் வரலாம். வழக்குரைகாதை முடிவில் கண்ணகிதானே வழக்கில் வெற்றிபெற்று மதுரையை எரிக்கிறாள்? பிறகு பாண்டியனின் வெற்றியைப் பற்றி ஏன் பேசவேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால், வெளிப்படையான வெற்றி கண்ணகிக்குத்தான். ஆனால், பாண்டியனும் தார்மீக வெற்றி பெற்றுள்ளான். வழக்குரைக்கக் கண்ணகி பாண்டியன் அவையை அணுகவில்லையானால், 'கொடுங்கோலன்' என்ற பழி அம்மாமன்னன் வரலாற்றோடு கலந்து போயிருக்கும். அது தொலைந்து, பாண்டியன் உயிர் கொடுத்துப் பழிதுடைத்துவிடக் கண்ணகி தொடுத்த வழக்கு காரணமாகி விட்டது என்கிறார் ம.பொ.சி.

தமிழர் அரசியல்/சமுதாயச் சட்டம் (Tamil Penal Code - TPC) ஆன பொருட்பால் குற்றங்களையும் தண்டனைகளையும் பற்றிக் கொண்டுள்ள குறள்களில் சில கீழே உள்ளவை.

'கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்'

'அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்'

'தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு'

'வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்'

'இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக்கெடும்'


கடைசி 2 குறள்களிலுமே 'கொடுங்கோலன் விரைவில் அழிவான்' என்று பொதுவாக இருக்கிறதேயன்றி, 'எப்படி அழிவான், அழிக்கும் உரிமை யாருக்கு?' என்பன போன்றவை தெளிவாகக் கூறப்படவில்லை. 'அந்தணர் நூற்கும்...' குறளில் அறநூல்களை விட மன்னன் மேலானவன் என்றும் தண்டனை அளிக்கும் அதிகாரம் மன்னனுக்கே என்றும் வலியுறுத்தும் குறட்பாக்கள், அம்மன்னன் தவறிழைக்கும்போது தண்டனைக்குள்ளாவான் என்றும் அத்தண்டனையைத் தரத்தக்கவர்கள் இவர்கள்தான் என்ற வரையறையும் இல்லாததால், மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளியாகக் கருதப்படமாட்டாள் என்று விளக்குகிறார் ம.பொ.சி. ஆனால் கண்ணகி தனக்கே தீர்ப்பளித்துக்கொள்கிறாள் என்று அழற்படு காதையை விவரிக்கும்போது குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம், வள்ளுவர் வகுத்த TPC வழக்குரைகாதைக்குத்தான் பொருந்தும். அழற்படுகாதை சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்படாமல், சமயங் கற்பித்த விதிகளுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. 'மதுரை எரிந்தது, அது முன் பெற்ற சாபத்தால்! எரித்தவளும் கண்ணகியல்லள்; அழல் தெய்வம்!' என்று கூறுகிறார்.

வழக்குரைகாதையைப் பற்றிப் பல்வேறு விதமாக வியந்து கூறியபின் இன்றைய தமிழ்மக்கள் எதிர்கொண்டிருக்கும் இன்னொரு பிரச்சினையையும் பின்வருமாறு நம்முன் வைக்கிறார் ம.பொ.சி.

'அன்று தமிழகத்தைத் தமிழரே ஆண்டனர். தமிழே ஆட்சிமொழியாக இருந்தது. அதனால், தன் தாய்மொழியிலே மதுரை மன்னனிடம் வழக்குரைத்தாள் கண்ணகி. மதுரையில் அகதியாகி விட்ட கண்ணகி அன்னிய மொழியில் வழக்குரைத்திருக்க முடியுமா?

இன்றைய நீதிமன்றங்கள் மக்கள் மொழியிலே நடைபெறவில்லை. அதனால் அல்லல்படும் மக்கள் தங்கள் வழக்கைத் தாங்களே எடுத்துக்கூற வாய்ப்பில்லை. வக்கீல் ஒருவர் தேவைப்படுகிறார். அவரும் தமக்குப் பணம் கொடுக்கும் கட்சிக்காரனுக்குப் புரியாத மொழியிலே பேசி வழக்கை நடத்துகிறார். சட்டத்தை மீறும் சாதாரண மக்களில் பெரும்பாலோர் அப்படி ஒரு சட்டம் இருப்பதனைத் தெரிந்து கொள்ளாமலே குற்றவாளிகளாகிறார்கள். நீதிமன்றங்களிலே "சட்டத்தைப்பற்றி குற்றவாளிக்குள்ள அறியாமை அவரை மன்னிப்பதற்குக் காரணமாகாது" என்ற ஒரு சித்தாந்தம் கடைப்பிடிக்கப்படுகிறது. சட்டத்தைப் பற்றிய அறியாமையை மன்னிக்க வேண்டாம். ஆனால், மொழியைப் பற்றிய அறியாமையை மன்னிக்க மறுப்பது அநீதி, ஆதிக்கம்!

என் மொழியிலே சட்டத்தை எழுதி வைத்து, அதனைப் புரிந்துகொள்ள எனக்குச் சந்தர்ப்பம் கொடுத்து, அதன் பின்னரும் நான் புரிந்து கொள்ளாமலிருந்தால், குறை என்னுடையது; சட்டத்தினுடையதோ, சர்க்காருடையதோ அல்ல. ஆனால், எனக்குப் புரியாத - என்னுடைய நாட்டு மொழியல்லாத அன்னியமொழி ஒன்றிலே சட்டத்தை எழுதி வைத்துக்கொண்டு, "சட்டத்தைப் பற்றிய அறியாமை மன்னிப்பதற்குக் காரணமாகாது" என்று சித்தாந்தம் பேசுவதா?'


கண்ணகிக்கும் அன்று பணம் கொடுத்து ஒரு வழக்கறிஞர் வைத்து வாதாட வேண்டிய தேவை இருந்திருப்பின், வழக்குரைகாதையின் முடிவே மாறியிருக்கும். பல மாநிலங்களை இணைத்து ஒரு நாடாகக் கட்டமைக்கப்பட்ட இன்றைய இந்தியாவில் பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் வழக்குகள் நடைபெறும் சூழலை இன்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை தமிழ்நாடும் இந்தித்திணிப்பை ஏற்றுக்கொண்டிருந்தால், எல்லா மாநிலங்களும் இந்தியை ஏற்றுக்கொண்டன என்று கூறி, இந்தியில் வழக்கு நடத்த வேண்டிய கொடுமை தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருபகுதி இந்தியர்களுக்கு ஒரு நீதி, இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்றொரு பகுதி இந்தியர்களுக்கு ஒரு நீதி என்ற நிலையைவிட அனைவருக்கும் பொதுமொழியாக உள்ள ஆங்கிலத்தில் வழக்குகள் நடத்துவது இரு தரப்பு இந்தியர்களும் சமமாக ஆடும் மைதானமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோதும் விருப்பப்பட்டவர்கள் இந்தியைப் பயின்று கொண்டுதான் இருந்தார்கள். அவர்களை யாரும் தடுக்கவும் இல்லை; இந்திப் பயிற்சி மையங்களைத் தீயிட்டுக் கொளுத்தவும் இல்லை. அவர்கள் வால்மீகி இராமாயணத்தையும் வியாசர் மகாபாரதத்தையும் விதந்து தமிழரிடையே பரப்பிய அளவு தமிழிலக்கியங்களான சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் அவர்கள் பழக நேர்ந்த வடநாட்டவருக்கு அவ்வளவாக எடுத்துச் சொல்லவில்லை. இத்தகையோருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார் ம.பொ.சி.

'வான்மீகியின் இராம கதையைத் தென்னாட்டவருக்கு அறிவிக்க ஒரு கம்பன் தோன்றியதுபோல, இளங்கோவின் சிலப்பதிகாரத்தை வடநாட்டினருக்கு அறிவிக்க வடக்கில் ஒரு கவிஞன் தோன்றியிருந்தால், தமிழ் மொழியை - தமிழர் தம் கலாசாரத்தை வடவரும் மதிக்க வழி பிறந்திருக்கும். தமிழகத்தில் ஊர்தோறும், வீதிதோறும், வீடுதோறும் இராமாயணப் பாத்திரங்கள் உலவுகின்றன - உலவ உரிமை வழங்கினார் கம்பர். இதுபோன்று வட இந்தியாவின் ஊர்தோறும் வீதிதோறும் வீடுதோறும் சிலப்பதிகாரப் பாத்திரங்கள் உலவ வழிசெய்வாரில்லை.

தமிழரிலே சிலர் - குறிப்பாக, இந்தி அல்லது சமஸ்கிருதம் பயின்றோர், வடக்கே சென்று இந்தக் குறையைப் போக்கத் தொண்டு செய்யவேண்டும்.'


வடமொழி இலக்கியங்கள் தமிழகத்தில் வேகமாகப் பரவியதற்குக் காரணம் அவை பக்தி இலக்கியங்கள் என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் சிலப்பதிகாரம் பக்தி இலக்கியமன்று. அரசர்களைக் கதைநாயகர்களாகக் கொண்டதும் அன்று. சாதாரணக் குடிமக்களைப் பாத்திரங்களாகக் கொண்ட குடிமக்கள் காப்பியம். அதுவும் வடமொழிப் புராணங்கள் தமிழகத்தில் வேரூன்றாத காலத்தில் தோன்றிய தமிழிலக்கியம். ஆனால் பின்னர் வந்த உரையாசிரியர்கள் புராணப்பாங்கான உரைகளை எழுதியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் ம.பொ.சி.

கானல்வரியில் கோவலனுக்கு மாதவியின்பால் வெறுப்புத் தோன்றுகிறது. அதை வினைவசத்தால் ஏற்பட்ட வெறுப்பு என்கிறார் சேரமாமுனி. கடலும் காவிரியும் கலக்கும் இடத்திலே பல்லாண்டுகள் தன்னோடு கலந்து வாழ்ந்த மாதவியைப் பிரிந்து மறுகணமே கண்ணகியின் இல்லத்தை நோக்கி நடந்து பல்லாண்டுகள் பிரிந்திருந்த தன் பத்தினியை அடைந்தான் மனமாற்றமடைந்த கோவலன். பல்லாண்டுகள் கண்ணகியைப் பிரிந்த கோவலன் மீண்டும் வந்ததும் நேரே பள்ளியறைப் புகுகிறான். 'காம உணர்வு' காரணமாகப் பள்ளியறைப் புகுந்தான் எனச்சிலர் உரையெழுதியிருக்கிறார்கள் இதற்கு. ஆனால் ம.பொ.சி அதை மறுக்கிறார். கோவலன் தன்மானி. கண்ணகி வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் வழியிலேயே மறுநாள் காலை புகாரைவிட்டு வெளியேற அவன் முடிவு செய்துகொண்டான். ஆதலால், புகாரில் தான் தங்கியிருக்கும் இரவு நேரத்தில் பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க விரும்பினான்.

மறுநாள் காலையில் கதிரவன் உதிக்கும் முன்பே புகாரைவிட்டு நீங்குகிறான். மதுரைக்குச் செல்லும் வழியிலும் கவுந்தியடிகளிடம் 'பொருள் தேடும் பொருட்டு மதுரை மூதூர் செல்கிறேன்' என்றானேயன்றித் தன் மனைவியின் சிலம்பை விற்றுப் பொருள் தேடப்போகிறேன் என்று சொல்லாத அளவுக்குத் தன்மானி. இந்த அளவுக்குத் தன்மானியாக இருந்த கோவலனின் தன்மானத்தை இன்னும் உயர்வு நவிற்சியாகச் சொல்கிறார்கள் இளங்கோவும் ம.பொ.சியும். கொலைக்களக் காதையில் 'இவன்தான் கள்வன்' என்று பொற்கொல்லன் கூற, மானமுடைய கோவலன் மாண்டுபோய் விட்டான். அதனால்தான் 'கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது' என்று கூறுகிறார் இளங்கோ. தான் கள்வன் என்று சொல்லக் கேட்டபோதே கோவலன் மாண்டுவிட்டதால் காவலன் வீசிய வாள் கோவலனின் உடலை மட்டும் குறுக்காக வெட்டியதாம்.

இக்காட்சிகளை விவரிக்கும்போது தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றையும் இங்கு நினைவுகூர்ந்து ஒப்பிடுகிறார். சிலம்பை விற்று மூலதனம் தேடி வாணிபம் செய்து பிழைக்கக் கோவலன் மதுரை சென்றபோது கண்ணகியையும் உடன் அழைத்துச் செல்கிறான். இது வணிகர் வழக்கத்துக்கு முரணானது. 'நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு' என்று சீதை பிடிவாதம் பிடித்த பின்னர் வேறு வழியின்றி அவளை அழைத்துச் சென்றான் இராமன். ஆனால் கண்ணகியோ, 'கோவலன் இருக்குமிடந்தான் கண்ணகிக்குப் புகார்' என்று சொல்லாவிட்டாலும், கோவலன் அழைத்ததற்கிணங்க உடன் வருகிறாள். 'மரபுக்கு மாறாக உடன் வருமாறு நான் உன்னை அழைத்தபோது நீயேனும் மரபின் மாண்பை நினைவூட்டி உடன்வர மறுத்திருக்கலாகாதோ?' என்று மாதரியின் இல்லத்தில் தங்கியிருக்கும்போது கூறுகிறான் கோவலன். ஆனால் கண்ணகி மதுரைக்கு வந்திருக்காவிட்டால், கணவன் கொலையுண்டபின் நடந்திருக்கும் வழக்குரைகாதை இவ்வளவு சீற்றம் மிக்கதாக இருந்திருக்காது என்பது இளங்கோ இங்கு வைக்கும் இலைமறை காயான செய்தி.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் அகத்திணையியலில் 'முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை' என்று பொருள்வயிற் பிரிவுக்குச் சூத்திரம் வகுக்கிறார் தொல்காப்பியர். இதற்கு இருவிதமாக உரைகண்டிருக்கின்றனர் உரையாசிரியர்கள். பிரிவு என்பது 'காலிற் பிரிவு', 'கலத்திற் பிரிவு' என இருவகைப்படும் என்பதில் ஒற்றுமை காட்டிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், இவற்றில் எந்தப் பிரிவின்போது தலைவியைத் தலைவன் உடன் அழைத்துச் செல்லலாம் என்பதில் வேறுபடுகிறார்கள். காலால் நடந்து நிலவழியாகப் பொருள்தேடப் பயணப்படும் தலைவன் தலைவியை உடன் அழைத்துச் சென்றதுண்டு. ஆனால், கலத்தின் மூலமாகக் கடற்பயணம் மேற்கொள்ளும்போதுதான் தலைவி உடன் வரும் வழக்கம் இருந்ததில்லை என்பது இளம்பூரணரின் கருத்து. ஆனால் இரண்டு பயணங்களிலுமே தலைவி உடன்வருவது மரபன்று என்பது நச்சினார்க்கினியரின் உரை. பிற்காலத்தில் சிலம்புக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரையே வழிமொழிந்துள்ளார்.

காலிற்பிரிவு வகைப்பட்ட மதுரைப்பயணத்தில் கண்ணகி உடன்வந்தது மரபை மீறியதன்று என்கிறார் ம.பொ.சி. ஏனெனில், ஏசாச்சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசத்துவாணிகன் மகனான கோவலன், தான் சீரும் சிறப்புமாக வாழ்ந்த புகாரில் பரத்தையின்பால் பொருட்களைத் தொலைத்துவிட்டு 'வறியவன்' என்ற பெயரெடுக்க அவனது தன்மானம் இடந்தரவில்லை. நிரந்தரமாக மதுரைக்கு இடம்பெயர முடிவு செய்துவிடுகிறான். எனவே, இது 'பொருள்வயிற் பிரிவு' ஆகாது. தொல்காப்பியர் கண்ட தலைவன், மாதவியைப் பிரிந்த கோவலனின் நிலையில் இல்லாதவன். பொருள் தேடிய பின்னர் நாடு திரும்பும் நோக்குடையவன். அதனால் தலைவியை உடன் அழைத்துச் செல்லாத மரபினைக் கடைப்பிடித்தான். சிலப்பதிகாரக் கோவலனுக்கு அந்த மரபு பொருந்தாது. எனவேதான், 'நலங்கேழ் முறுவல், நகைமுகம் காட்டிச் சிலம்புள கொண்ம்...' என்று கூறிய கண்ணகியும் மதுரைவரச் சம்மதிக்கிறாள்.

'சிலப்பதிகாரம் இன்றைக்குச் சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்பு இயற்றப்பட்ட காப்பியமாதலால், உரையின் உதவியின்றி அதனைக் கற்பது எளிதன்று' என்று சிலம்பின் பெருமையை உணர உரையாசிரியர்கள் தேவைப்படுவதைக் குறிப்பிட்டிருக்கும் ம.பொ.சி அவர்கள் அவ்வுரையாசிரியர்கள் சில இடங்களில் பொருந்தாப்பொருள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

'காவலன் போலும் கடைத்தலையான் நம்கோவலன்' என்று தோழியின் முன்னறிவிப்பைத் தொடர்ந்து இல்லம் நுழைந்த கோவலன் அவனது பத்தினியின் வாடிய மேனி கண்டு வருந்தி, 'சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலந்தரு வான்பொருள் குன்றந் தொலைந்த இலம்பாடு நாணுத் தரும் எனக்கு' என்று கூறுகின்றான். உள்ளமும் உதடும் பொருந்தாமல் வாழும் பரத்தையினால் பெற்றோர் தந்தவை அனைத்தையும் தொலைத்த எனது செயல் நாணத்தைத் தருகிறது என்கிறான். அவனது மனமாற்றத்தை அறிந்த கண்ணகி, 'சிலம்புள கொள்ளுங்கள்' என்று கூறுகின்றாள். அதுவும் நலங்கேழ் முறுவலுடனும் நகைமுகத்துடனும். இதற்கு அடியார்க்கு நல்லார் பின்வருமாறு உரையெழுதியிருக்கிறார்.

'இவ்வாறு அவன் தன்னைப் போற்றி, இலம்பாடு நாணுத்தரும் என்றதனை, மாதவிக்குக் கொடுக்கும் பொருட்குறைபாட்டால் தளர்ந்து கூறினானெனக் கருதி, ஒளி பொருந்திய முகத்தே நலம்பொருந்திய சிறிய முறுவலை விளைத்து, இன்னும் சிலம்பு ஓரிணையுள; அவற்றைக் கொண்மின் என்றாள்'.

அதாவது, கோவலனது உண்மையான மனமாற்றத்தை, பொருள் குறைந்ததால் மாதவியைப் பிரிந்து மீண்டும் அவளுடன் சேருவதற்காக நடிக்கிறான் எனுமாறு புரிந்துகொள்கிறாளாம். இதைச் சங்க இலக்கியங்களுடன் ஒப்பிடுகிறார் ம.பொ.சி. கணவனுடைய ஒழுக்கக் கேட்டுக்கு உதவி புரியும் பெண்ணொருத்தியை எந்தச் சங்க இலக்கியமும் நமக்குக் காட்டவில்லை. அகநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களில், ஓர் இரவைப் பரத்தையின் இல்லத்தில் கழித்துவிட்டு வந்த தலைவனை வெறுத்துப் பேசும் தலைவியர் ஏராளமாக உள்ளனர். பரத்தையாக இருந்தும் மாதவிகூடப் பொருளின்மை என்பதாலன்றி, வேறொருத்தியை விரும்பிப் பாடினான் என்ற காரணத்தால்தான் கோவலனுடன் ஊடல் கொண்டாள். வஞ்சின மாலையில், கண்ணகி உரைக்கும் பூம்புகாரில் தோன்றிய பத்தினிப் பெண்டிர் எழுவருடைய வரலாற்றில்கூட ஒருவரும் அவர்களின் கணவன் பரத்தையோடு கூடி வாழ்வதற்கு உதவி புரிந்த பத்தினியில்லை. கொலைக்களக் காதையில் 'போற்றா வொழுக்கம் புரிந்தீர்; யாவதும் மாற்றா வுள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்று எழுந்தனன் யான்' என்று கோவலனின் ஒழுக்கங்கெட்ட செய்கையை இடித்துரைக்கிறாள் கண்ணகி. கணவன் பரத்தையோடு கூடி வாழ்வதற்குப் பொருள் கொடுத்து உதவி புரியும் 'பத்தினித்தனம்' சங்ககாலத் தமிழகம் காணாதது.

ஆனால், புராண காலத்தில் கணவன் பரத்தையோடு கூடி வாழ்வதற்கு மனைவி மனமுவந்து உதவி புரிவதும் கற்புக்குரிய சிறப்புக்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. நளாயினி கதை இதற்குச் சான்றாகும். அத்தகைய கதைகளைக் கருத்தில் கொண்டே, மாதவியோடு கூடி வாழ்வதற்காகத் தன் காற்சிலம்பைக் கோவலனுக்குக் கொடுக்க விரும்பினாள் கண்ணகி என்று அடியார்க்கு நல்லார் எழுதினார் போலும் என்கிறார் ம.பொ.சி. கனாத்திறமுரைத்த காதையில், கணவன் மீண்டும் தன்னை அடைந்ததாகவும், அவனோடு தான் வேற்றூர் சென்றதாகவும் தேவந்தியிடம் கூறுகிறாள் கண்ணகி. அவ்வாறு கூறி முடிக்கும் நேரத்தில் கோவலன் கண்ணகி இல்லத்தை அடைந்தானென்றால், கனவு பலிக்கத் தொடங்கிவிட்டதென்றும் திரும்பவும் கோவலன் மாதவியை நாடிச் செல்லாமல், தாங்களிருவரும் வேற்றூர் செல்லப் போகிறோம் என்ற எண்ணத்துடன்தானே இருந்திருப்பாள் கண்ணகி? ஆனால், தீய கனவினைக் கண்டவள், அக்கனவு நிறைவேறுமாறு செயல்பட எண்ணியது எவ்வாறு என்பதற்கு, ஊழ்வினை என்று சுட்டுகிறார் இளங்கோ.

'பல ஆண்டுகள் கணவனைப் பிரிந்து துன்புற்றாள் கண்ணகி. அந்தத் துன்பந்தீரக் காதலன் தன் கண்ணெதிரே வந்து நிற்கக் கண்டாள். வந்தவன் தன் வாடிய மேனிகண்டு வருந்தியதோடு, மாதவியைப் பழித்துப் பேசக் கேட்டாள். இந்நிலையில் அவனைத் திரும்பவும் மாதவி இல்லத்திற்கு விரட்டும் வகையில் காற்சிலம்புகளைக் கொடுப்பாளா? அந்த அறியாமையையும் நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச் செய்வாளா?' என்பதும் இதற்கு முன்பும், 'வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்து' மாதவிக்குப் பொருள்பெறக் கோவலன் கண்ணகியை நாடியதே இல்லை என்பதும் கண்ணகி கோவலனைத் தவறாக எண்ணியிருக்க வாய்ப்பில்லை என்று நிறுவ ம.பொ.சி அவர்கள் முன்வைக்கும் வாதம். எனவே, இந்நிகழ்வுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை பொருந்தாமல் போகக் காரணம் என்னவென்று கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

'அரும்பதவுரையிலுள்ள சில குறிப்புகளால் அவ்வுரைக்கு முன்பும் இந்நூலுக்கு வேறு பழையவுரை ஒன்றிருக்கலாமென்று தோன்றுகிறது. அவ்வுரை இக்காலத்து அகப்படவில்லை என்று சிலப்பதிகாரப் பதிப்பிற்குத் தாம் எழுதிய முன்னுரையில் பதிப்பாசிரியர் டாக்டர். உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதனால், அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் தோன்றுவதற்கு முன்பே வேறு பழைய உரை ஒன்று இருந்ததும் புலனாகும். ஆனால், நமக்குக் கிடைத்துள்ள உரைகளில் அரும்பதவுரையே காலத்தால் முற்பட்டதாகும்.

இளங்கோவடிகள் காலத்திற்கும் உரையாசிரியர்கள் காலத்திற்கும் நடுவே உள்ள இடைவெளி மிக நீண்டதாகும். சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்துக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகட்குப் பிறகே அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் தோன்றியிருக்க வேண்டும். மற்றும், சிலப்பதிகாரம், கடைச்சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய காப்பியமாகும். உரையாசிரியர்களோ, வைதிக சமயம் எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்றிருந்த புராணகாலத்தில் வாழ்ந்தவர்களாவர். சங்க காலத்திற்கும் புராண காலத்திற்குமிடையே தமிழ் மக்களுடைய பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன.

இவற்றால் சிலப்பதிகாரச் செய்யுளுக்கு உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைகளில் பல இடங்களில் குறைகள் நேர்ந்திருக்கக் காண்கின்றோம். அவர்கள் புராண காலத்தின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் மனத்துள்கொண்டே உரை எழுதியிருக்கின்றனர். அதனால், இளங்கோ படைத்த மூலத்தின் பொருளை நாம் சரிவரத் தெரிந்து கொள்ள முடியாமல் உரையாசிரியரின் கருத்துக்கள் சில இடங்களில் திரையாக நின்று மறைக்கின்றன'
.

இருப்பினும், சிலப்பதிகாரத்தைத் துய்த்துணர உதவிசெய்யும் உரையாசிரியர்கள் மீதான நன்றியைப் பின்வருமாறு வெளிப்படுத்துவதற்கும் தவறவில்லை.

'சிலப்பதிகாரக் காப்பியம் இற்றை நாள்வரை தமிழரிடையே நின்று நிலவுவதற்கும், பலர் அந்நூலைப் பயின்று இலக்கிய ஞானம் பெறுவதற்கும் பழைய உரைகள் பெரிதும் பயன்பட்டு வந்துள்ளன. அதற்காக அந்த உரையாசிரியர்களுக்கு நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆயினும், தமிழர் பண்புக்கு மாறுபட்ட கருத்துக்கள் பழைய உரைகளில் கலந்திருத்தலை நாம் மறப்பதற்கில்லை. கண்ணகி, 'சிலம்புள கொண்ம்' என்று கோவலனிடம் கூறியதற்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள ஊரையும் தமிழர் பண்பாட்டிற்கு ஏற்றதன்றாகையால், அதனை நாம் ஏற்பதற்கில்லை'.

திறனாய்வு என்ற பெயரில் ஓர் இலக்கியத்தை உயர்த்திக் காட்டுவது மட்டுமின்றி, 'ஆனைக்கும் அடிசறுக்கும்' என்ற மொழிக்கேற்ப இளங்கோவடிகளும் மதுரைக்காண்டத்தின் காலநிரலில் தவறு செய்திருப்பதை நயமாக எடுத்துரைக்கிறார். கோவலனும் கண்ணகியும் மதுரை புகுந்தபின்னர் நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் காலவரிசைப் படுத்தினால் கீழ்க்கண்டவாறு அமையும்.

'1. ஒரு செவ்வாய்க்கிழமையன்று மாலையில் கதிரவன் மறையும் நேரத்தில் கண்ணகியும் கோவலனும் மதுரை புகுந்தனர்.
2. மறுநாள் புதன்கிழமையன்று காலையில் கண்ணகி மாதரியின் இல்லத்தில் சமைத்துப் படைத்த உணவினையுண்டு, கோவலன் சிலம்பு விற்கச் சென்று, அன்றே கொலையுண்டான்.
3. அடுத்துள்ள வியாழனன்று காலையில் கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து, கண்ணகி கொலைக்களம் சென்று அன்றிரவை அங்கேயே கழித்தாள்.
4. பின்னர், வெள்ளிக்கிழமையன்று முற்பகலில் மன்னனிடம் வழக்குரைத்து, அவன் உயிர் நீத்த பின்னர், அன்றே மதுரை நகரை எரித்தாள்'.


எனவே, 'காலையில் கோவலனை வழியனுப்பிய கண்ணகி, அன்று மாலையே கொலைக்களத்தில் அவனுடைய உடலைக் கண்டாள்' என்ற பொருளில் இளங்கோ பாடியிருப்பது பிழை என்று நிறுவுகிறார். இவர் இவ்வாறு இளங்கோவை விமர்சித்தது குறித்து ம.பொ.சியின் சமகால இலக்கியவாதிகள் சிலர், 'சிலப்பதிகாரத்தின் மூலப்பாடலில் குறைகாண்பது இலக்கியத் திறனாய்வுக்குப் புறம்பான செயல்' என்று கண்டனம் தெரிவித்ததாகத் தெரிகிறது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பின்வருமாறு எழுதுகிறார்.

'இலக்கியத் திறனாய்வு அளவிலா இன்பந்தருவதாகும். இந்தப் பணியில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லாதது போல, கண்மூடித்தனமான பக்திக்கும் இடமில்லை. அருளோடு அல்லது அன்போடு கலந்த பக்தி வேறு; அறிவோடு கூடிய ஆராய்ச்சி வேறு. அறிவோடு கூடிய ஆராய்ச்சியின் முடிவை மறுக்க அறிவைத்தான் பயன்படுத்த வேண்டும். மாறாக, பக்தியிடம் அடைக்கலம் புகுந்து கொள்ளக்கூடாது.

நமது பக்திக்குரிய காப்பியமேயாயினும், திறனாய்வு நடத்துங்கால், பக்தியினின்று விலகி, அறிவுக் கண்கொண்டு மட்டுமே ஆராயவேண்டும். காப்பியத்திற்கு மட்டுமேயன்றி அதனை யாத்துக் கொடுத்த கவிஞரைப் பற்றிய திறனாய்வுக்கும் இதுவே இலக்கணமாகும். பழைய காப்பியத்தையோ, காப்பியக் கவிஞரையோ பக்தியுடன் போற்ற வேண்டுமென்றால், அதிலே எனக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால், அந்தப் பக்தியானது இலக்கியத் திறனாய்வுக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. இருந்துவிட்டால், தமிழ் இலக்கியம் வளர்ச்சிபெற முடியாது.

எனது கட்டுரையில் நான் எடுத்துக்காட்டிய பிழை இளங்கோவின் காப்பியத்தில் இருக்கிறதென்று ஒப்புக்கொள்வதால், அந்த மகாகவியின் மதிப்போ, சிலப்பதிகாரக் காப்பியத்தின் மாண்போ கொஞ்சங்கூடக் குறைந்துவிடப் போவதில்லை. ஆகவே, என் கருத்தை மறுப்போர் இளங்கோ 'பக்தி'யில் அடைக்கலம் புகாமல், எனது புலமையை எடைபோட்டுப் பார்க்க நேரத்தைச் செலவிடாமல், யான் எடுத்துக் காட்டிய குறையைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து பதிலளிப்பதுதான் தங்கள் புலமைக்கு மதிப்புத் தேடும் செயலாகும்'
என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

இதுபோல் எண்ணற்ற முத்துக்கள் இந்நூலுள் சிதறிக் கிடக்கின்றன. அனைத்தையும் விவரிக்க ஒரு கட்டுரை போதாது. சங்க இலக்கியங்களையும் ஐம்பெருங்காப்பியங்களையும் கண்டு பயந்து அணுகாமல் வெளியிலேயே நிற்பவர்களுக்கு ஊக்கமூட்டி, தயக்கத்தைக் களைய இத்தகைய திறனாய்வு நூல்கள் உதவுகின்றன. தமிழ்மொழி அகராதிகளின் உதவியுடன் மூலத்தை நாமே நேரடியாகப் படித்துணரும்போது, முன்பே திறனாய்வு செய்தவர்களும் காணாத பல செய்திகள் நமக்குப் புலப்படும் வாய்ப்பிருக்கிறது. அத்தகைய இன்பத்தை நோக்கி நடைபோட நம்மைத் தூண்டுவதன்மூலம் இத்தகைய திறனாய்வாளர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்களாகிறோம்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.