http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 88
இதழ் 88 [ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு தசாவதாரம் என்றொரு திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் வரும் ஆண்டாள் என்னும் கதாபாத்திரம் பெருமாளின் மீது கொண்ட தீராத பற்றின் காரணமாக, விஷக்கிருமிகள் வெளியே வந்துவிடக்கூடாது என்று போராடுகிற கதாநாயகனின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், அதை அவரிடம் தராமலேயே சண்டைபோட்டுக் கொண்டிருப்பார். அது திரைப்படத்தின் கதையாக இருந்தாலும்கூட, இன்றைக்குப் பல்லவர் பூமியில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சுற்றுலாச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில், ஸ்தல சயனப் பெருமாள் கோயில் என்றொரு பழமையான கோயில் இருக்கிறது. இன்று தனியார் வசம் இருக்கும் அக்கோயிலைத் தன்வசம் கொணர்வதற்குத் தொல்லியல்துறை முயற்சி எடுத்தது. உடனே உலக அதிசயம் நிகழ்ந்தாற்போல் மாமல்லபுரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியாகத் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தன. அவ்வெதிர்ப்பு இன்று சாலை மறியல் வரை சென்றுள்ளது. அரசியலில் மதம் கலப்பதும் மதத்தில் அரசியல் கலப்பதும் உலகெங்கும் காணக்கூடிய நிகழ்வுதான் என்றாலும், இந்தியாவில் சற்று அதிகமாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எந்தவொரு முன்னேற்றத்தையும் மதநம்பிக்கைகளின் பெயரால் தடுப்பது தவறு. சென்னையில் இப்போது ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. வீடு கட்டும்போது தனக்குரிய இடத்தையும் தாண்டிச் சாலையையும் சிறிதளவு ஆக்கிரமித்துக்கொண்டு மதில் சுவரை வைத்து விடுகிறார்கள். மாநகராட்சியோ பேரூராட்சியோ சாலையைச் செப்பனிடும்போது வரம்புக்கு மீறிக் கட்டப்பட்ட சுவரை இடிக்க முனையும்போது அதே தெருவில் ஒரு கோயிலைக் கட்டி, மதில் சுவரையும் அதே அளவு நீட்டி வைத்து விடுகிறார்கள். பின்னர் மாநகராட்சி அச்சாலையிலுள்ள எந்தக் கட்டடத்தையும் இடிப்பதில்லை. அதையும் மீறி இடிக்க நினைத்தால், காப்பாற்றிக் கொடுக்க இருக்கவே இருக்கின்றன மத அமைப்புகள். இப்படிக் கோயிலைக் கேடயமாக வைத்துத் தற்காத்துக்கொள்வது தவறென்று எந்த மதமும் மதத்தலைவரும் சொல்வதில்லை. இதே போலத்தான் தனியார் வசம் உள்ள கோயில்களும். ஒருவர் ஒரு கோயிலைக் கட்டிவைத்து, அவரது சந்ததிகள் அக்கோயிலை நிர்வகித்து வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பழம்பெரும் மன்னர்களால் கட்டப்பட்டு நிவந்தங்களும் அளிக்கப்பட்டு வந்த ஒரு கோயிலையும் அதன் சொத்துக்களையும் தற்காலத்தில் தனிநபர் ஒருவர் தன்வசம் எடுத்துக் கொள்வது என்ன நியாயம் என்று புரியவில்லை. தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களின் சொத்துக்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. பல கோயில்களில் திருப்பணி என்ற பெயரால் அழகான சிற்பங்களும் கல்வெட்டுகளும் சிதைக்கப்படுகின்றன. சிற்பங்களும் கல்வெட்டுகளும் சிதையாமல் ஒரு கோயிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்யும் உத்தியும் தொழில்நுட்பமும் தொல்லியல் துறைக்குத் தெரியும். கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஏகப்பட்ட கோயில்கள் இவ்வாறு புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தொல்லியல் துறை இன்று அவ்வளவாகத் திருப்பணிகள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பொருளாதார வசதியின்மை ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள ஏறத்தாழ 33,000 கோயில்களில் உண்டியல் அல்லது வேறு வகையில் வருமானம் வரும் கோயில்கள் அனைத்தையும் இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்து வரவு செலவுக் கணக்குகளைக் கண்காணிக்கிறது. கோயிலுக்கு வரும் வருமானத்தால் வளமான துறையாகவே திகழ்கிறது. மாநிலம் முழுவதும் திருப்பணிகளையும் செய்கிறது. ஆனால், தொல்லியல்துறையைப் போன்று சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் காக்கும் முறையிலன்றி, குடமுழுக்குக்கு அதிகக் காணிக்கை தருபவர்களின் விருப்பப்படி. அவ்வாறு திருப்பணியில் ஈடுபடும் முதன்மையானவர்களுக்குச் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் காக்கும் உணர்வு இருந்தால், அக்கோயில் இறைவன் கொடுத்து வைத்தவர் என்று பொருள். பெரும்பான்மையானோருக்குக் கோயிற்கலைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிடப் பக்தியை வெளிப்படுத்தும் எண்ணமே மேலோங்கி இருக்கிறது. அதனால்தான் மணிமங்கலம் போன்ற ஊர்களில் சிற்பங்களுக்கு எண்ணெய் வண்ணம் (Oil Paint) அடிப்பதும் திருச்செந்துறை போன்ற ஊர்களில் இக்கால மேற்கத்திய ஆடைகள் அணிவிப்பதும் நடக்கின்றன. தொல்லியல் துறையிடம் கோயிலைக் காக்கும் தொழில்நுட்ப அறிவு இருக்கிறது; ஆனால் பொருளாதார வளம் இல்லை. அறநிலையத்துறைக்கு மனித வளமும் பொருள் பலமும் இருக்கிறது; ஆனால் திருப்பணியாளர்களுக்குச் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் காக்கும் முனைப்பு இல்லை. எனவே, Complementing each other என்பதுபோலத் தொழில்நுட்பத்தைத் தொல்லியல் துறையும் பொருளாதாரத்தை அறநிலையத்துறையும் ஏற்று இணைந்து பராமரித்தால், எல்லாக் கோயில்களும் வளம் பெற்றுப் பழமை அழியாமல் நிலைத்து நிற்கும். இந்தத் தீர்வு மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலுக்கும் பொருந்தும். இக்கோயிலைத் தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை ஊர் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுபற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் பரபரப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை மட்டும் வெளியிடுகின்றனவே தவிரப் பிரச்சினையின் காரணத்தையோ அதற்கான தீர்வையோ கூறுவதில்லை. ஒரு கோயிலைத் தொல்லியல் துறை எடுத்துக் கொள்வதால் வழிபாடு பாதிக்கப்படும் என்று சொல்ல முடியாது. தஞ்சைப் பெரியகோயிலைப் போன்று வழிபாடுகள் உச்சத்திலிருக்கும் எத்தனையோ கோயில்கள் தொல்லியல்துறையின் கீழ்தான் இருக்கின்றன. அறநிலையத்துறையும் அக்கோயில்களின் வழிபாடுகளைக் கண்காணித்து வருகின்றது. எனவே, வழிபாடுகள் தொடர்வதை உறுதி செய்ய அறநிலையத்துறையும் பழங்கோயில் அழியாமல் காக்கத் தொல்லியல்துறையும் கரம் கோர்த்து ஸ்தல சயனப் பெருமாளைக் காக்கவேண்டும். ஊர் மக்களும் இதை உணர்ந்து, மக்கள் பிரச்சினைகளில் ஆதாயம் தேட முயற்சிக்கும் அரசியல் கட்சிகளையும் உணர்வுகளைத் தூண்டிவிட்டுப் பலன் பெற நினைக்கும் மத அமைப்புகளையும் புறக்கணித்து உண்மையான பக்தியுடன் கோயிலைக் காக்க முனையவேண்டும். அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |