http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 88
இதழ் 88 [ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
மாடக்கோயில்கள்
தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 14 கி. மீ. தொலைவில் உள்ளது பசுபதிகோயில். இவ்வூரில்தான் புகழ்பெற்ற புள்ளமங்கலத்து ஆலந்துறையார் கோயில் பிரம்மபுரீசுவரர் என்ற புதுப் பெயருடன் நெடுஞ்சாலையின் இடப்புறத்திலும் கோச்செங்கட் சோழரின் திருப்பணிகளுள் ஒன்றாகக் கொள்ளத்தக்க கள்ளபசுபதி கோயில் என்றழைக்கப்படும் பசுபதீசுவரர் கோயில் நெடுஞ்சாலையின் வலப்புறத்திலும் அமைந்துள்ளன.1 நெடுங்காலமாகப் பராமரிப்பின்றிப் பழுதடைந்திருந்த பசுபதீசுவரர்கோயில் அண்மைக் காலத்தே திருப்பணிக்காளாகி புதுவடிவம் பெற்றுள்ளது. கோயில் வாயிலை அலங்கரிக்கும் முத்தளக் கோபுரத்தின் கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம் பெற்ற கீழ்த்தளம் மட்டுமே கருங்கல் பணியாக உள்ளது. கொடிக் கருக்குப் பாதமும் நாகபந்தமும் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவரும் வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் அலங்கரிப்பற்ற கூரையுறுப்புகளும் கொண்டுள்ள இத்தளத்தின் சாலைப்பத்தி புறந்தள்ளி இருப்பதுடன், தாங்குதளத்தில் தாமரை ஜகதி, உருள்குமுதம், கண்டம், கபோதம், கண்டம், பட்டிகை என மாறுபட்ட உறுப்புகளும் கொண்டுள்ளது. சாலைப்பத்தியின் அணைவுத்தூண்களும் இந்திரகாந்தமாக மாறியுள்ளன. வாயிலின் இருபுறத்தும் சுவரில், வாயில் நோக்கிய ஒருக்கணிப்பில் சிறிய அளவிலான காவலர் சிற்பங்கள் உள்ளன. மகுடம், குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை, தாள்செறிகள் அணிந்துள்ள இருவருள், தெற்கர் வல முன் கையை அருகில் உள்ள பாம்பு சுற்றிய உருள்பெருந்தடி மேல் இருத்திப் பின்கையால் வியக்க, இடக்கைகள் எச்சரிக்கைக் குறிப்பிலும் போற்றி முத்திரையிலும் உள்ளன. மேலே அமர் சிம்மம். இட முன் கையை உருள்பெருந்தடி மேல் இருத்தியுள்ள வடக்கரின் வலக்கைகள் எச்சரித்துப் போற்றுகின்றன. இடப் பின் கையின் முத்திரையில் தெளிவில்லை. அவர் தடியருகே முகத்தைத் திருப்பியவாறு சிம்மம் ஒன்று நிற்கிறது. வாயில் சிற்பங்கள் கோபுரவாயிலின் சுவர்களில் சிறிய அளவிலான சிற்பங்கள் பல இடம்பெற்றுள்ளன. சிவலிங்கமும் நந்தியும் காட்டப்பட்டுள்ள ஒரு சிற்பத்தில், இரண்டிற்கும் இடையில் துளைக்கைக் குடத்திலுள்ள நீரால் இலிங்கத்தை முழுக்காட்டும் யானை. இலிங்கத்தின் இடப்புறம் வணங்கிய கைகளுடன் சரப்பளியும் நீள்செவிகளுமாய் மகுடம் அணிந்த ஆடவர் ஒருவர் அர்த்த பத்மாசனத்தில் உள்ளார். இரண்டாம் சிற்பம் சடைமகுடம், மீசை, தாடியுடன் கணுக்கால்வரை நீளும் இடையாடை அணிந்தவராய் இறைக்கோயில் நோக்கி வணங்கிய கைகளுடன் நிற்கும் முதியவரைப் படம்பிடிக்கிறது. இலிங்கபாணத்தைத் தன்னுடலால் சுற்றியபடி, இறைவனுக்குக் குடை பிடிக்குமாறு ஐந்து தலைகளையும் விரித்துள்ள பாம்பும் அதன் அரவணைப்பில் மகிழும் இலிங்கத்திருமேனியும் மற்றொரு சிற்பத்தில் இடம்பெற்றுள்ளன. குருதி கசியும் இறைவனின் கண்ணை அடையாளப்படுத்தத் தம் வலக்காலை இலிங்கத்தில் ஊன்றிய நிலையில் அம்பால் கண்ணகழும் கண்ணப்பரும் அச்செயலைத் தடுக்குமாறு கைநீட்டியுள்ள சிவபெருமானும் நான்காம் சிற்பமாகியுள்ளனர். ஐந்தாம் சிற்பத்தில் இலிங்கத்திருமேனிக்கு யானை ஒன்று மலர் சூட்டுகிறது. சோழர் காலச் சிற்பமாய்க் காட்சிதரும் இயமனை அழித்த மூர்த்தி சடைமகுடம், முப்புரிநூல், தோள், கை வளைகள், சிற்றாடை, இடைக்கட்டு இவற்றுடன் எட்டுக் கையராய் விளங்குகிறார். வலப்பாதத்தைப் பார்சுவத்தில் திருப்பி, இடக் காலை ஊர்த்வஜாநுவாக்கியுள்ள அவரது வலக்கைகளில் கீழிருந்து மேலாக மழு, முத்தலைஈட்டி, கத்தி இவை காட்சி தருகின்றன. மேற்கைப் பொருளை (?முத்திரை) அடையாளம் காணக்கூடவில்லை. இடக்கைகளில் முன்கை சூசியில் அமைய, பின்கைகளில் பாம்பு, தீயகல், உடுக்கை. சிவபெருமானின் வலப் புறம் இலிங்கத்தை அணைத்தபடி மார்க்கண்டேயரும் இடப்புறம் தரையில் வீழ்ந்து கிடக்கும் இயமனும் காட்டப்பட்டுள்ள னர். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், மரமேறி ஆடை இவற்றுடன் உள்ள இயமன் இடக்கையைத் தளத்தின் மேல் ஊன்றி, வலக்கையால் இறைவனைப் போற்றுகிறார். ஆறாவது சிற்பம் சடைமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், சரப்பளி, வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், நெற்றிக்கண் இவற்றுடன் முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புகள் காட்டி, பின்கைகளில் மழு, மான் ஏந்தி, சுகாசனத்தில் உள்ள சிவபெருமானையும் வலக்கையைக் கடகத்தில் இருத்தி, இடக்கையை நெகிழ்த்தி நிற்கும் இறைவியையும் கொண்டுள்ளது. சுற்று கோபுரவாயிலை அடுத்து விரியும் வெளிச்சுற்றில் இறைவன் திருமுன்னைப் பார்த்தவாறு பலித்தளமும் நந்திமண்டபமும் அமைய, தென்மேற்கில் உள்ள மேடையில் சேட்டைத்தேவி காட்சிதருகிறார். தளம் ஒன்றின் மீது இடக்கையை ஊன்றி அமர்ந்துள்ள சேட்டையின் வலக்கை காக்கும் குறிப்பில் உள்ளது. கரண்டமகுடம், பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, பட்டாடை, இளமார்பகங்கள் என விளங்கும் அம்மையின் வலப்புறம் வலக்கையில் தடியுடன் கரண்டமகுடம், சரப்பளி அணிந்து சுகாசனத்தில் காட்சிதரும் நந்திகேசுவரனின் இடக்கை தொடைமீது உள்ளது. சேட்டையின் இடப்புறம் உத்குடியில் உள்ள அக்னிமாதாவின் இடக்கை தளத்தின்மீது ஊன்ற, வலக்கை காக்கும் குறிப்புக் காட்டுகிறது. சிறுமகுடம், சரப்பளி, குண்டலங்கள் அணிந்துள்ள அவரது மார்பகங்களும் இளமை நலத்துடன் காட்டப்பட்டுள்ளன. மூவருமே நேர்நோக்கி அமர்ந்துள்ளனர். வளாகத்தின் வடமேற்கில் உள்ள மேடை மாடத்தில் யானைத் திருமகளும் வடகிழக்கில் பைரவரும் இடம்பெற்றுள்ளனர். அடுத்து ஒன்பான் கோள்களுக்கான மேடை அமைந்துள்ளது. அம்மன்கோயில் வளாகத்தின் வடமேற்கில் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, பாதமும் நாகபந்தமும் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் இவற்றுடன் இருதள வேசரமாகத் திகழும் அம்மன்கோயிலின் இறைவி, பால்வள நாயகி என அறியப்படுகிறார். விமானக் கீழ்த்தளச் சுவரில் முப்புறத்தும் உள்ள பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. முதல் தள ஆரச்சாலைகளில் தேவியின் நின்ற வடிவமும் கிரீவகோட்டங்களில் தேவியின் சுகாசனக் கோலங்களும் சுதையில் உள்ளன. விமானத்தின் கட்டமைப்பில் கோட்டங்கள் இன்றிக் காணப்படும் முகமண்டபத்தின் முன் தகரக் கொட்டகை ஒன்று அமைந்துள்ளது. முகமண்டப வாயிலின் தென்புறம் இலலிதாசனத்தில் உள்ள தலப் பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம். முன்கைகளில் தந்தம், மோதகம். இடம்புரியாக உள்ள அவரது இரண்டு தந்தங்களுமே உடைந்திருக்க, செவிகளின் மேல் தாமரைப்பூக்கள். வாயிலின் இடப்புறம் அம்மன் திருமேனி ஒன்று இருத்தப்பட்டுள்ளது. கருவறையில் முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டுள்ள பால்வளநாயகியின் பின்கைகளில் மலர்மொட்டுக்கள். சடைமகுடம், மகரகுண்டலங்கள், பட்டாடை இவை தேவியை அணிசெய்கின்றன. வெற்றுத்தளம் முறையான உறுப்புகளற்ற தாங்குதளம், உறுப்பு வேறுபாடு அற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், போதிகைகள் அற்ற நிலையில் தூண்களின் மீது அமர்ந்துள்ள உத்திரம், வாஜனம், வலபி எனக் கருங்கல்லில் அமைந்திருக்கும் 2. 70 மீ. உயரமுள்ள வெற்றுத்தளத்தின் கபோதம் ஆழமற்ற கூடுவளைவுகளுடன் வடிக்கப்பட்டுள்ளது. மேலே பூமிதேசம். மேலுள்ள இருதளக் கோபுரத்திற்கு ஏற்ப, அப்பகுதியில் மட்டும் கிழக்கில் முன்தள்ளியிருக்கும் வெற்றுத்தளம் மேற்கிலும் வடக்கிலும் தெற்கில் தென்திசைக்கடவுள் வீற்றிருக்கும் திண்ணைவரையும் கிழக்குப் போலவே கட்டமைப்புப் பெற்றுள்ளது. வடக்கில் கிழக்குச் சார்ந்த பகுதியில் கூரையுறுப்புகளை இழந்த நிலையில், வெற்றுத்தளத்தின் அப்பகுதியில் மட்டும் செங்கல் கட்டுமானம் இடம்பெற்றுள்ளது. தெற்கில் தென்திசைக்கடவுளை அடுத்துத் தொடரும் வெற்றுத் தளம் சுவர், கூரையுறுப்புகள் சிதைந்த நிலையில் கலப்புக் கட்டுமானமாகக் காட்சியளிக்கிறது. வெற்றுத்தளத்தின் தெற்கு, மேற்குச் சுவர்களில் சிறிய அளவுச் சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், கழைக் கூத்தர்கள், கலைக்குழுவினர், ஊர்த்வதாண்டவர், வீணைக் கலைஞர், ஊரகப்பெண்டிர், ஆடற்கலைஞர்கள், அடியவர்கள் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. அம்மையப்பர் சிற்பம் ஒன்றும் இங்குள்ளது. மேற்குச் சுவர் பலகையொன்றில் குடை, குண்டிகை, செண்டு முதலியன செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலுள்ள பலகையில் வெட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் சிதைந்துள்ளன.2 தென்மேற்குச் சுற்றில் வெற்றுத்தளத்தை ஒட்டிக் காணப்படும் மேடையில் தென்திசைக்கடவுளின் சிற்பம் உள்ளது. வலத்திருவடியை முயலகன் மீது இருத்தி, வீராசனத்தில் உள்ள சிவபெருமானின் பின்கைகளில் பாம்பும் தீயகலும் அமைய, வல முன் கை சின்முத்திரையிலும் இட முன் கை ஏடேந்தியும் உள்ளன. சடைமண்டலம், மகர, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள் பெற்றுள்ள இறைவனின் தலைக்கு மேல் கல்லால மரம் காட்டப்பட்டுள்ளது. முயலகனின் இருபுறத்தும் பக்கத்திற்கிருவராக வணங்கிய முனிவர்கள். வடமேற்குச் சுற்றில் வெற்றுத்தளத்தை ஒட்டிக் காணப்படும் மேடையில் மகிடாசுரமர்த்தனியின் சிற்பம் உள்ளது. பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ள தேவியின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், முத்துமாலை, அரும்புச்சரம், கைவளைகள், பட்டாடை அணிந்துள்ள தேவியின் திருவடிகள் மகிடத்தின் தலைமீது. மேற்றளத் திருமுன்கள் மேற்றளத்தை அடைய வெற்றுத்தளத்தின் தென்கிழக்குப் பகுதியில் இருபுறத்தும் துளைக்கைப் பிடிச்சுவர் பெற்ற பன்னிரண்டு படிகள் அமைந்துள்ளன. படிகள் முடியுமிடத்துள்ள வாயிலை உறுப்பு வேறுபாடற்ற, கொடிக்கருக்குப் பெற்ற இரண்டு நான்முக அரைத்தூண்கள் பக்கத்திற்கொன்றாகத் தழுவியுள்ளன. மேலே கபோதம் உள்ளிட்ட கூரையுறுப்புகளும் மகரதோரணமும் அமைய, கூரையின்மீது மண்டபமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மடியில் பிள்ளையாருடன் சிவபெருமானும் முருகனுடன் உமையும் அமர்ந்திருக்க, இருபுறத்தும் கூரைமீது நிற்பவர்களாய்த் தெற்கில் வீணையுடன் நாரதரும் வடக்கில் மத்தளத்துடன் நந்தியும் உள்ளனர். நடைமண்டபம் வாயிலையடுத்து நீளும் நடைமண்டபம் மேற்கில் ஒரு வாயிலும் வடக்கில் இரண்டு வாயில்களும் ஒரு சாளரமும் பெற்றுள்ளது. முதல் வடவாயில் செவ்வகமாய் அமைந்துள்ள திறந்தவெளிப்பகுதிக்கு வழிவிடுகிறது. சுற்றிலும் பிடிச்சுவர்களால் அணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் கிழக்கில், நடுவில் இருக்குமாறு இருதளக் கோபுரம் ஒன்று செங்கல் கட்டுமானமாய் அமைந்துள்ளது. முச்சதுர, இருகட்டு உடல், பாலி, பலகை கொண்ட தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகை கொண்டு கூரையுறுப்புகள் தாங்கும் நடைமண்டபத்தின் மேற்கில் உச்சிஷ்டகணபதியின் திருமுன், விமானம் - முகமண்டபம் - முன்றில் என அமைந்துள்ளது. நடைமண்டபத்தின் கிழக்கு, தெற்குப் புறச்சுவர்கள் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம், உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்று, கூரைக்கு மேலே சிறிய அளவிலான சுற்றுச்சுவரும் கொண்டுள்ளது. சுவரில் நந்திகள் இருத்தப்பட்டுள்ளன. நடைமண்டபத்தின் மேற்குப்பகுதி இது போல் எவ்வமைப்பும் பெறாது வெற்று நெடுஞ்சுவராகக் காட்டப்பட்டுள்ளது. வடக்குச் சுவரும் மேற்குச் சுவர் போல வெறுஞ் சுவராக இருப்பினும் கீழே உபானம் பெற்றுள்ளது. உச்சிஷ்டகணபதி திருமுன் தாமரை உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, பாதம் - நாகபந்தம் பெற்ற எண்முகத் தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், தாமரையிதழ் வலபி, ஆழமற்ற கூடுவளைவுகளுடனான கபோதம் இவற்றுடன் கிழக்கு மேற்காக 4. 34 மீ. நீளமும் வடக்குத் தெற்காக 4. 23 மீ. அகலமும் கொண்டு எழும் உச்சிஷ்டகணபதியின் இருதள வேசர விமானத்தின் ஆரஉறுப்புகள், மேற்றளம், கிரீவம், சிகரம் இவை செங்கல்லால் அமைந்துள்ளன. பத்ம ஜகதி, உருள்குமுதம், கண்டம், கபோதம், கண்டம், பட்டிகை என உறுப்பு வேறுபாடுள்ள தாங்குதளத்துடன் புறந்தள்ளியுள்ள சாலைப்பத்திகளின் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. ஆரச் சாலையில் தென்புறம் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் உத்குடியில் விஷ்ணுவும் வடக்கில் அர்த்தபத்மாசனத்தில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். கிரீவகோட்டத்தில் நாற்புறத்தும் சுகாசனப் பிள்ளையார் காணப்படுகிறார். விமானத்தின் கட்டமைப்பில் உள்ள முகமண்டபச் சுவர் இந்திரகாந்தத் தூண்களைப் பெற்றுள்ளது. அதன் சாலைப்பத்திக்கு முன்னுள்ள தெற்கு, வடக்குச் சுவர்களில் நடைமண்டபத்தின் மேற்கு, வடக்குச் சுவர்கள் பொருந்தியுள்ளன. இம்மேற்குச் சுவரில் காட்டப்பட்டுள்ள வாயில் உச்சிஷ்ட கணபதி விமானத்தை வலம் வரவும் அதையடுத்துள்ள பசுபதீசுவரர் விமானத்தை வலம் வரவும் வழி தருகிறது. நடைமண்டபத் தரையிலிருந்து முகமண்டபத்திற்கு முன் அமைந்துள்ள முன்றிலை அடைய நீளப்படி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் உட்பகுதி வெறுமையாக அமைய, கருவறையில் மேடைமீது கரண்டமகுடத்துடன் சரப்பளி, உதரபந்தம் அணிந்து, இலலிதாசனத்தில் காட்சிதரும் உச்சிஷ்டகணபதியின் பின்கைகள் அங்குசம், பாசம் ஏந்த, வல முன் கையில் தந்தம். இட முன் கை இடத்தொடையில் அமர்ந்துள்ள தேவியை அணைத்துள்ளது. துளைக்கை தேவியின் வயிற்றருகே உள்ளது. வலத்தந்தம் உடைந்திருக்க, இடத்தந்தம் முழுமையாக உள்ளது. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், அரும்புச் சரம், பட்டாடை அணிந்துள்ள இறைவியின் இடக்கையில் மலர். வலக்கை பிள்ளையாரின் துளைக்கையின் பின் மறைந்துள்ளது. இறைவன் அமர்ந்துள்ள தளத்தின் வலப்பகுதியில் வணங்கிய கைகளுடன் கழுத்தில் ருத்திராக்கம் அணிந்த அடியவர் ஒருவர் நின்றகோலத்தில் காட்சிதர,3 இடப்பகுதியில் பிள்ளையாரின் வாகனம் காட்டப்பட்டுள்ளது. உச்சிஷ்டகணபதி திருமுன் முகமண்டபத்தின் வடசுவரைப் பொருந்துமாறு சாளரம் ஒன்றும் அமைந்துள்ள நடைமண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள பெருவாயில் விமானம், முகமண்டபம், பெருமண்டபம் என அமைந்துள்ள பசுபதீசுவரர் வளாகத்திற்கு வழிவிடுகிறது. பசுபதீசுவரர் திருமுன் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, பாதம்-நாகபந்தம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் உத்திரம், வாஜனம், பூதவரி வலபி, ஆழமற்ற கூடுவளைவுகளுடனான கபோதம் இவற்றுடன் எழும் 4. 85 மீ. பக்கமுடைய விமானக் கீழ்த் தளத்தின் சாலைப்பத்தி சற்றுப் புறந்தள்ளிய நிலையில் உருளைத் தூண்களால் அணைக்கப்பட்டுள்ளது. அதன் தாங்குதளத்தில் உறுப்பு மாறுபாடுகளாக பத்மஜகதியும் உருள்குமுதமும் காணப்படுகின்றன. வேதிகைக்கு மாற்றாகக் கம்பு கொண்டு விளங்கும் இப்பத்திகளின் மகரதோரணத் தலைப்பிட்ட கோட்டங்கள் சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூண்களால் அணைக்கப்பட்டு வெறுமையாக உள்ளன. அதே கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. உறுப்பு வேறுபாடு கொள்ளாத, ஆனால், புறந்தள்ளலாக உள்ள சாலைப்பத்தியை எண்முக அரைத்தூண்களுக்கு மாற்றாக இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைத்துள்ளன. விமானத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கம் வெறுமையாக உள்ளது. இருதள வேசரமாக அமைந்துள்ள இவ்விமானத்தின் ஆரச்சாலையில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் மேற்கில் உத்குடியில் தேவியருடன் பரமபதநாதரும் வடக்கில் அர்த்தபத்மாசனத்தில் தேவியுடன் நான்முகனும் அமர, கிரீவகோட்டங்களில் தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணல், மேற்கில் உத்குடியில் விஷ்ணு, வடக்கில் தாமரையில் அர்த்தபத்மாசனத்தில் நான்முகன், கிழக்கில் அர்த்தபத்மாசனத்தில் முனிவர் ஒருவர் இடம்பெற்றுள்ளனர். பெருமண்டபம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, பாதம்-நாகபந்தம் பெற்ற இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் உத்திரம், வாஜனம், பூதவரி வலபி, கபோதம் பெற்றுள்ள பெருமண்டபச் சுவரில் தெற்கிலும் வடக்கிலும் நான்முக அரைத்தூண்களின் தழுவலில் திசைக்கு இரண்டு பஞ்சரங்களும் அவற்றிற்கு இடைப்பட்டனவாக அதே பஞ்சர அமைப்புடன் பக்கத்திற்கொரு வெறுமையான கோட்டமும் உள்ளன. முகமண்டபத்திற்கும் பெருமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கத்திலும் பஞ்சரம் காட்டப்பட்டுள்ளது. பெருமண்டபத்தின் கிழக்குச் சுவரில் வாயிலின் இருபுறத்தும் அமைந்துள்ள காவலர்களுக்கான கோட்டப் பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. பெருமண்டபத்தை ஒட்டி வடசுற்றில் சண்டேசுவரரின் சிறிய அளவிலான திருமுன் அமைந்துள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், சிற்றாடை அணிந்து சுகாசனத்தில் உள்ள அவரது வலக்கை மழுவேந்தியிருக்க, இடக்கை தொடை மீது உள்ளது. முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகள் கொண்டு தாங்கும் கூரையுறுப்புகள் பெற்ற பெருமண்டபத்தில் நந்தியும் பலித்தளமும் வடபுறம் சிறு மேடையும் உள்ளன. வடபுறம் சிறு மேடையுடன் உள்ள பசுபதீசுவரரின் முகமண்டபம் வெறுமையாக உள்ளது. சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூண்கள் அணைத்துள்ள வாயில் கொண்டு விளங்கும் கருவறையில் வேசர ஆவுடையாரில் உயரமான பாணத்துடன் பசுபதீசுவரர் எழுந்தருளியுள்ளார். கிழக்குச் சுற்றில் உள்ள மேடையில் முருகன், சந்திரன், விசுவநாதர், சூரியன் இடம்பெற்றுள்ளனர்.4 குறிப்புகள் 1. ஆய்வு நாட்கள் 10. 09. 1982, 5. 11. 2000, 22. 1. 2010. இரண்டாம் பருவ ஆய்வின்போது துணையிருந்த திருமதி வாணி செங்குட்டுவன் நன்றிக்குரியவர். 2. சிதைந்துள்ள இக்கல்வெட்டுக் குறித்து நடுவணரசின் கல்வெட்டுத்துறைக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. 3. இவ்வடியவர் உச்சிஷ்டகணபதி சிற்பத்தின் கொடையாளராகலாம். 4. பசுபதீசுவரத்திற்குக் கிழக்கில் சற்றுத் தொலைவில் உள்ள தோப்பொன்றில் சோழர் காலச் சாமுண்டியின் சிற்பம் தனித்த நிலையில் காணப்படுகிறது. தாமரைத் தளத்தில் சுகாசனத்தில் உள்ள அம்மையின் மார்பகங்களைக் கச்செனப் பாம்பு பிணைத்துள்ளது. வல முன் கை சிதைந்திருக்க, இட முன் கை கிடையாக உள்ள இடக்காலின் மீது இருத்தப்பட்டுள்ளது. பின்கைகளில் முத்தலைஈட்டியும் தலையோடும் கொண்டு, பட்டாடை, இடைக்கட்டு, சரப்பளி அணிந்து, சடைப்பாரத்துடன் காட்சிதரும் சாமுண்டியின் செவிகளில் பிணக்குண்டலங்கள். நெற்றிக்கண்ணுடன் விளங்கும் அம்மையின் தலையில் பாம்புகளின் பிணைப்பில் தலையோடு. பால. பத்மநாபனால் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சிற்பம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |